“பேராற்றின் ஊற்று”
இந்த உலகத்தில் உண்மையிலேயே விசித்திரமான ஒன்று இருக்கிறதா?
அப்படி இருந்தால்…
அது கருந்துளை அல்ல.
காலப்பயணமும் அல்ல.
வேற்றுக்கோள்வாசி என்னும் ஏலியம் அல்ல.
அது...
"குவாண்டம் (Quantum)".
தமிழில் அதை "மீநுண்மம்" எனலாம்.
இன்று 'குவாண்டம்' (Quantum) என்னும் சொல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கணினி, குவாண்டம் தகவல் தொடர்பு, குவாண்டம் குறியாக்கம் என்று அறிவியலின் பல துறைகளிலும் அது தனது தடத்தைப் பதித்திருக்கிறது. ஆனால் இன்று பரந்து விரிந்திருக்கும் இந்தக் குவாண்டம் பேரரசு ஒரே நாளில் உருவாகிய ‘மயன்’ நகரமில்லை. ஒரு மாபெரும் ஆறு, மலையின் உச்சியில் இருக்கும் சிறிய ஊற்றிலிருந்து பிறப்பதைப் போல, குவாண்டத்தின் பயணமும் ஒரு சிறிய அறிவியல் கேள்வியிலிருந்தே தொடங்கியது.
அந்தப் பயணம் தொடங்கிய ஆண்டு 1900.
ஆரம்பித்த இடம், ஜெர்மனியின் பெர்ளின் நகரம்.
இயற்பியலாளரான 'மாக்ஸ் பிளாங்க்' (Max Planck) ஒரு சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக்கொண்டிருந்தார். 'கருவுடல் கதிர்வீச்சு' (Black Body Radiation) என்னும் ஆய்வின்போது உருவான சிக்கல் அது.
அக்கால இயற்பியலாளர்கள் ஒரு விசயத்தை இயல்பாக நம்பிக்கொண்டிருந்தார்கள். "ஆற்றல் (Energy) என்பது தொடர்ச்சியாகப் பாய்கிறது". ஆனால் மாக்ஸ் பிளாங்கின் கணிதக் கணிப்புகள் வேறொரு முடிவைச் காட்டின. "ஆற்றல் தொடர்ச்சியாக வெளிப்படும் ஒன்றல்ல. மாறாக, மிகச்சிறிய தனித்தனிப் பொதிகளாக அது உமிழப்படுகிறது அல்லது உறிஞ்சப்படுகிறது". அவரது கணிப்புகள் சுட்டிக் காட்டிய அம்மீச்சிறு ஆற்றல் பொதிகளுக்குத்தான் பின்னாட்களில் ‘குவாண்டா’ (Quanta) என்னும் பெயர் இடப்பட்டது.
பிளாங்கின் அந்தக் கருத்து, அப்போது ஒரு சிறிய கணிதத் தீர்வு மட்டுமே. ஆனால் அது, இயற்பியலின் வரலாற்றையே மாற்றப்போகிறது என்பதை அப்போது பிளாங்க் அறிந்திருக்கவில்லை. அதற்கான நோபல் பரிசும் பின்னர்தான் வழங்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளின் பின், 1905இல், ஒரு இளம் இயற்பியலாளர் அந்த விதையை மேலும் வலிமையாக்கினார். அவர் வேறு யாருமில்லை, மாமேதை ‘அல்பேர்ட் ஐன்ஸ்டைன்’ (Albert Einstein). 'ஒளிமின் விளைவு' (Photoelectric Effect) என்னும் தனது ஆய்வில், 'ஒளி, தனித்தனிப் பொதிகளாகப் செயல்படுகிறது' என்ற கருதுகோளை அவர் முன்வைத்தார். ஒளி அலையாகவே பயணிக்கிறது என்ற கருத்து நிலவிவந்த காலம் அது.
நுண்ணிய ஆற்றல் பொதிகளாக ஒளி செயல்படுகிறது என்னும் புரட்சிகரமான சிந்தனை, பிளாங்க் விதைத்த விதைக்கு உரமாக இருந்தது. பின்னர் அந்த ஆற்றல் பொதிகளுக்கு 'ஃபோட்டான்கள்' (Photons) என்னும் பெயர் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் அறிவியல் உலகம் அதுவரை சந்தித்திராத மிகப்பெரிய கேள்விகளை எதிர்கொண்டது.
ஒளி என்றால் என்ன?
அது அலையா?
இல்லை துகளா?
இல்லை இரண்டுமா?
அல்லது…
மனிதன் இதுவரை நினைத்துப் பார்க்காத வேறொன்றா?
இந்தக் கேள்விகள், உலகின் தலைசிறந்த இளம் இயற்பியலாளர்களை ஒரே சிந்தனை மேடைக்கு அழைத்து வந்தன. கேள்விகளுக்கான பதிலைத் தேடி, அந்த அடுத்த தலைமுறை இயற்பியலாளர்கள், ஆர்வத்துடன் களத்தில் குதித்தார்கள்.
அவர்களின் முயற்சி வீண்போகவில்லை. மாக்ஸ் பிளாங்க் விதைத்து, ஐன்ஸ்டைன் உயிர்ப்புடன் வைத்திருந்த விதை, 'குவாண்டம் இயங்கியல்' என்னும் மரமாக முளைக்கத் தொடங்கியது.
அதன் கிளைகள் அனைத்துத் திசைகளிலும் பரவத் தொடங்கின.
இன்று குவாண்டம் என்னும் பெருமரத்தின் பூக்கள், உலகெங்கும் வாசனையைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இன்று மனித நாகரிகத்தை வழிநடத்தும் கணினிகளுக்குக் கூட, நாளை குவாண்டமே அடித்தளமாக மாறக்கூடும்.
இவை அனைத்தும் இலகுவில் நடந்தவையல்ல. பல கணிதவியலாளர்கள் மற்றும் இயற்பியலாளர்களின் உழைப்பில் உருவான பெருமரம் அது. அந்தப் பெருமரத்தின் முதல் கிளையில் இருப்பவர் ஒரு இளம் இயற்பியலாளர்.
அவர் பெயர் 'வேர்னர் ஹைசன்பேர்க்’ (Werner Heisenberg).
அவரைப் பார்ப்பதற்கு நாம் அடுத்த கதவைத் திறக்கப் போகிறோம்.
ராஜ்சிவா(ங்க்)
#குவாண்டத்தின்_கதை
#ராஜ்சிவாங்க்
#ராஜ்சிவா