Saturday 13 July 2019

பரம ரகசியம் . ஆசிரியர் மு செ 1-15

பரம ரகசியம் . ஆசிரியர் ;மு. செந்தில்குமார் .

#பரம_ரகசியம்.. 1 
அந்த மலையுச்சிக்கு நேர் மேலே கழுகுகள் செக்குமாடைப் போல வட்டமடித்துக்கொண்டே இருக்க, முடியாது என தெரிந்தும் காகங்கள், கழுகுகளை துரத்துவதும், கீழிறங்குவதும் மீண்டும் துரத்துவதும் என இம்போசிசன் நடந்துகொண்டே இருந்தது. மலையுச்சியில் மனித தலைகளும் தட்டுப்பட்டன, சற்று பரபரப்பாகவும் காணப்பட்டன இடையில் காக்கி உடைகளும் தென்பட்டன. ஆட்களை பொறுத்த வரையில் கிராமவாசிகளாகவும் சற்றே கலவரத்துடனும், கவலையுடனும் காக்கிகளை பார்க்க, சற்று தள்ளி கீழே பார்க்க என தொடர்ந்தது. காக்கிகளும் அதிகார தோரணையுடனும், கூட்டத்தை தள்ளி இருக்க உத்தரவிட்டும் கூற அங்கிருந்த காக்கிகளிலேயே உயரதிகாரியான இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் "யோவ் யாருய்யா முதல்ல பாத்தது.?" என்று கேட்க, கூட்டத்திலிருந்த ஒருவன் முன் வர, "உம் பேரென்னய்யா.? என்று மீணடும் கார்த்திக்கேயன் கேட்டார்.
"வீரபாண்டிங்கய்யா" என்றான் அந்த கிராம வாசி..
"என்னய்ய செய்ற.?" கார்த்திக்கேயன்
"ஆடு மேய்க்கிறேங்கய்யா " வீரபாண்டி
"இத எப்ப பாத்த.?" கார்த்திக்கேயன்
"ஐயா நா காலைல ஆறு மணி வாக்குல ஆடுகளை பத்திக்கிட்டு மேச்சலுக்காக இந்த பெருமா மலைக்கு வந்தேங்க, ஆடுகளை மல ஓரமா மேச்சலுக்கு விட்டுப்புட்டு ஒரு பாறை மேல ஒக்காந்திருந்தப்ப மல மேல கழுகுங்களும், காக்காக்களும் சுத்திட்டே திரிஞ்சிசிங்க, நா என்னடா இது எதும் ஆடு, மாடு செத்துப்போச்சோன்னு நெனச்சி மேல வந்து பாத்தப்பதாங்க இந்த கொடுமைய பாத்தேன், அப்பறம் போனப்போட்டு ஊர் பெரியதனத்திட்ட சொன்னேங்க.." வீரபாண்டி
வீரபாண்டி முடித்தவுடன் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் அந்த கொடுமையை மீண்டுமொருமுறை பார்த்தார்.. மனதிற்குள் நினைத்தார் " 35 வயது இருக்கலாம், பேன்ட் + சர்ட் அணிந்திருக்கும் இவன் பார்க்க நன்றாக படித்தவன் போலவும் இருக்கின்றான், இவனை யார் கொலை செய்து இந்த மலைஉச்சியில் கொண்டு வந்து போட்டது.?" என்று.! இது சாதாரணமான கேஸ் இல்லை என்பதும் அவருக்குள் எழுந்தது..
இதை முன்னோட்டமாக வைத்து அடியேனும் ஓர் கிராமத்து புதிர் எழுத தீர்மானித்துள்ளேன்.. திரு.ரா.பிரபுவை அவரது முயற்சியை பாராட்டி, அதையே ஊக்கமாக எடுத்து நெடுநாட்களாக என் மனதில் இருந்த இந்த கிராமத்து புதிர் கான்செப்டை எனது முதல் தொடராக எழுத மேற்கொண்ட முயற்சியே இது.!
சராசரியாக துவங்கும் இந்த புதிர் நிச்சயமாக உங்களை யூகிக்க விடாதவாறு கொண்டு செல்ல முயல்வேன் என்றும், க்ளைமேக்ஸ் நிச்சயமாக யூகிக்க முடியாதவாறு அமைக்க பெரும் முயற்சியை எடுப்பேன் என்றும் கூறி தொடரை விரைவில் துவக்குவேன்.. தொடராய் வரும் ஆனால், சற்று இடைவெளியுடன் வரும்..


அந்த பல்கலைக்கழக பேருந்து கல்யாணிப்பட்டி போகும் சாலையில் மெல்ல பயணப்பட்டுக் கொண்டிருந்தது, வேகமாக செல்ல முயன்றாலும் முடியாது. பேருந்திற்குள் மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்று பிரிவு M.Phil ஆய்வு இருபால் மாணவர்கள் சலசலவென்று பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தனர். துறை பேராசிரியர்கள் இருவர் பேருந்தின் முன்னிருக்கையில் மாணவர்கள் பேசிக்கொண்டு வருவதை நாம் பேசாததா என்று கண்டும் காணாமல் அமர்ந்திருந்தனர். மதுரை காமராசர் பல்கலையிலிலிருந்து கல்யாணிப்பட்டி ஏறத்தாழ 48 கி.மீ தொலைவில் இருந்தது, அதை நோக்கிய பயணத்தில் இடையில் உசிலம்பட்டியில் காலை டிஃபனை முடித்துக்கொண்டு மதிய உணவையும் பார்சலாக கட்டிக்கொண்டு கல்யாணிப்பட்டிக்கு செல்லும் சுமாரான பாதையில்தான் அந்த பயணம் தொடர்ந்தது.!
இதோ கல்யாணிப்பட்டியும் வந்தது, மிகச்சிறிய கிராமம் என்று பார்த்தவுடனே தெரிந்தது. மேல்சட்டை அணியாத பெரியவர்களும், ஃபேன்ட் சர்ட், லோயர் அணிந்த இளைஞர்கள் சிலர் பைக்குகளின் மேலமர்ந்து பேருந்தையும், ஏனைய பிறரையும் பார்த்துக்கொண்டிருந்தனர். பெண்களில் சிலர் தலையில் சும்மாடு வைத்து குடங்களில் தண்ணீர் சுமந்து சென்றனர் மறக்கமால் பேருந்தை பார்த்துக்கொண்டே. பேருந்தும் அதற்கு மேல் செல்ல வழியின்றி நிற்க, பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்தவாறே ஊர் பெரியவர் ஒருவரிடம், "ஐயா இந்த #கல்யாணி_மலைக்கு எப்டி போகணும்.?" என்று கேட்க துவங்கினார்.
"இப்பிடியே பஸ்ஸ நிறுத்திப்பிட்டு, இங்கயிருந்து ஒரு பர்லாங்கு நடந்து போனாக்க மலை அடிவாரத்துல கருப்புக்கோயில் ஒன்னு இருக்கும், அங்க இருந்து மலைக்கு மேல போக வழி இருக்கு.." - ஊர்ப்பெரிசு..
"பஸ்ஸூ போகாதாங்கய்யா.?" - ஓட்டுநர்
"பஸ்ஸூ போகாதுப்பா, நடதான்.." - ஊர்ப்பெரிசு
"சரிங்கய்யா தேங்க்ஸூ.." என்ற ஓட்டுநர் பேருந்தை வாகான ஓரிடத்தில் பார்க் செய்ய முடிவெடுத்து பேராசிரியர்களிடம் ஊர் பெரியவர் கூறியதை ஒப்பித்தார், பேராசியரில் ஒருவர் "ஆமா இதுக்கு மேல பஸ் போகாது.." என்று கூற, அப்படியே பின் பேருந்திலிருந்த மாணவர்களை இறங்க கூறினார். ஆராய்ச்சி மாணவர்கள் 23 பேரும், விரிவுரையாளர்கள் 2 பேரும் பேருந்திலிருந்து கீழிறிங்கினர். அதுவரை ஏதோ ஓர் எதிர்பார்ப்புடன் இருந்த மாணவர்கள் எதிரே தென்பட்ட கல்யாணி மலையை பார்த்தவாறே பரபரப்பாக இறங்கினர். பேராசியர்கள் இருவரும் மாணவர்களிடம் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளும்படி உத்தரவிட்டனர். பேராசிரியர்களில் சிவப்பு கட்டமிட்ட சட்டையும், ஐவரி கலர் பேன்ட்ஸூம் அணிந்திருப்பவர்
டாக்டர் #எஸ்.ஜெயராஜ், லைட் புளு கலர் சட்டையும், ஒய்ட் கலர் பேன்ட்ஸூம் அணிந்திருந்த மற்றொருவர்
டாக்டர் #கணேசபாண்டியன்.
ஜெயராஜ் " எப்பா எல்லாரும் டென்ட் துணி, அவங்கவங்க துணிமணி, சாப்பாடு பொட்டலம், தண்ணிக்கேனு, போர்வை, விரிப்பான், தைல டப்பா, எமர்ஜென்சி லைட்ஸ், ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்.... எல்லாத்தையும் மறக்காம எடுத்துக்கங்கப்பா..", என்றார்.
கணேசபாண்டியன் "நாகராஜூ (டிரைவர் பெயர்) எல்லாரும் மலைக்கு மேல போனப்புறம் நீ வண்டிய எடுத்துட்டு யுனிவர்சிட்டிக்கு போயிரு, கரெக்டா 2 நாள் கழிச்சி வந்துரு, ஜெயராஜ் சார் வேறெதுவும் சொல்லணுமா.?" என்றார்.
"சரிங்க சார், அப்ப ரெண்டு நாள் கழிச்சி வந்தா போதுமில்ல..?" - நாகராஜ்
"ஆமா, எதாவது தேவைனா ஃபோன் செய்றேன், மலைக்கு மேல போன சிக்னல் கெடைக்குமான்னு தெரியல.?" ஜெயராஜ்..
அதற்குள்ளாக மாணவர்களின் கூட்டு முயற்சியால் உடமைகள் அனைத்தும் இறக்கப்பட்டு இருக்க அந்த மாணவர்களில் ஒருவன் "சார் எல்லா சாமானையும் எறக்கியாச்சு சார்.." என்று குரல் கொடுக்க, ஜெயராஜ் தனது கவனத்தை மாணவர்கள் மேல் ஷிஃப்ட் செய்தார்.
"சரி நாகராஜூ நீ கௌம்பு, நாங்க மல ஏர்றோம், ஏற்கனவே ரெண்டு தடவ வந்துபோன மலதான, சமாளிச்சிருவோம்.." கணேசபாண்டியன்.
ஊர்ப்பெரிசுகளும், இளைஞர்களும் மாணவர்கள் கும்பலை பார்த்து அவரவர் இஷ்டத்திற்கு ஏதோ முனகினர், "இவெய்ஙகளுக்கு இதே பொழப்புத்தான்டா, எப்பப்பாரு மலய பாக்குறோம், மண்ணாங்கட்டிய பாக்குறோம்ட்டு வந்திர்றாங்கய்ய..!" என்று சற்று சப்தமாகவே ஒருவன் முனகினான். ஆய்வுக்கும்பல் அதை கேட்டு சிரித்தபடியே கல்யாணி மலையை நோக்கி சுமைகளுடன் நகர்ந்தது.
கும்பலாக ஏறத்தாழ 15 நிமிடங்கள் நடைக்கு பிறகு கருப்புக்கோவிலை அடைந்தது. அங்கே மாணவர்கள் கும்பலை வரவேற்க பெரிய வீச்சரிவாளுடன் காவல் தெய்வமான கருப்பு வெள்ளைக்குதிரையின் மேல் அமர்ந்திருந்தார். சுமாராக 12 அடி உயரமிருப்பார் கருப்பு, கோவிலை சுற்றிலும் பொங்கல் வைத்ததற்கான கற்களின் அணிவகுப்பு, சேவல்களின் இறகுகளும், ரத்தத்திட்டுகளும் ஆங்காங்கே தெரிந்தன.
"தண்ணி குடிக்கிறவங்க குடிச்சிக்கங்க, கொஞ்ச ஆசுவாசமான பின்னாடி நாம #சமணர்களின்_அடையாள_சின்னங்களைதங்கிட்ட வச்சிருக்குற கல்யாணி மலை மேல ஏறப்போறோம், ஒன்றரை கி.மீ ஏற்றம்தான், அதுக்கு தயாராகதான் இந்த 15 நிமிச ரெஸ்ட்.." ஜெயராஜ்..
இரு பேராசிரியரகளில் ஜெயராஜே சீனியர் மற்றும் நல்ல அனுபவசாலியும் கூட. மதுரை காமராசர் பல்கலை கழக வரலாற்று துறை மாணவர்களின் ஆராய்ச்சி கல்விக்காக இந்த ஃபீல்ட் ஸ்டடியை ஏற்பாடு செய்தவரே இவர்தான். எதற்கும் சொந்த அனுபவமே சிறந்தது என்பதே இவரின் எண்ணம் என்பதால் துறை மாணவர்கள் 23 பேர்களையும் அழைத்துக்கொண்டு கள ஆய்விற்காக தேர்வு செய்த இடமே கல்யாணி மலை.! முற்காலத்தில் சமணர்கள், ஆட்சியர்களால் துரத்தப்பட்ட சமயங்களில் மலைகளில் தங்கி வாழ்ந்தனர், அங்கேயே தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு பல்வேறு வரலாற்று குறிப்புகளை விட்டு சென்றதுமுண்டு. எனவே, அவைகளை ஆராய ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த பயணத்தின் நோக்கம்..
15 நிமிடங்கள் கழிய, ஜெயராஜ் குரல் கொடுத்தார் என்றார்..
மாணவர்களும் மீண்டும் கிளம்ப தயாராகினர், ஓய்வில் இருந்த பொருட்களை விசையை கொடுத்து நகர்த்தினர். பயணம் சமணச் சின்னங்களை சுமந்து கொண்டிருக்கும் கல்யாணி மலையை நோக்கி தொடர்ந்தது. சற்று கடினமான வழி என்பதால் ஆங்காங்கே சிறிய ஓய்வு பின் ஏற்றம் என ஏறக்குறைய மலையின் உச்சியை அடைய எடுத்துக்கொண்ட நேரம் 50 நிமிடங்கள்.
மலை உச்சியை அடைந்தவுடன் அனைவரின் எதிர்பார்ப்பையும், மலையை பற்றிய கணிப்பையும் அது பூர்த்தி செய்ததா என்று தெரியவில்லை., ஆனால் அங்கே கோவிலோ அல்லது கட்டிடங்களோ இல்லை மாறாக, குகை போன்ற அமைப்புகளே தென்பட்டது.
" கொண்டு வந்த எல்லா பொருள்களையும் அப்பிடியே எறக்கி வைங்க.." ஜெயராஜ்
மாணவ்களும் சுமைகளை இறக்கினர், பின்பு ஆசுவாசப்பட்டு கொண்டனர் "ஸ் அப்பா.." என்று.. சில மாணவர்கள் கண்களில் அதீத ஆர்வம் தெரிந்தது, உடனே குகைகளை நோக்கி அடியெடுக்க தொடங்கினர், வேறு சிலர் செல்ஃபோன்களில் செல்ஃபீ, க்ரூப்ஃபீ., என ஆரம்பித்திருந்தனர், ஒரே கலகலப்புதான்..
ஜெயராஜூம், கணேசபாண்டியனும் இயற்கை உபாதைக்காக ஒதுங்க, மாணவர்கள் லூட்டியை துவங்கினார்கள்.. "மாப்ள எங்க வந்து தங்கி இருக்காய்ங்கே பார்றா.." "எலேய், வெயில் காலத்துல எப்பிடிறா இங்க தங்க முடியும்.?" "ஏய் இங்க பாருடி, நம்ம வந்த பஸ்ஸூ கௌம்பிருச்சு.."... என பல வசனங்களை கேட்க முடிந்தது..
அதீத ஆர்வம் கொண்ட மாணவர்களில் மூவர் சமணர்கள் தங்கியிருந்த பல குகைகளில் ஒரு குகையை நோக்கி செல்ல துவங்கினர்.
மாணவிகளில் இருவர் குகைக்கு சற்று பின்புறம் சமவெளி போன்று காணப்படுவதைக்கண்டு அங்கு சென்றனர். அங்கே ஓர் நீர் சேமிப்பு கிடங்கு போன்று இருந்தது அதைக்கண்டு "ஏய் இங்க பார்ரி தண்ணி" என்றாள். "ஆமாடி தண்ணி, எப்பிடி சேமிச்சி வச்சிருங்காங்க பாத்தியாடி, மழைக்காலத்துல வடியுற தண்ணிய இப்படி சேமிச்சிருப்பாங்க போல..?" என மற்றொரு மாணவி..
அப்பொழுது குகைக்கும் மேலே அருகாமை அருகாமையாக அமைந்த பாறைகளின் மேல் ஏறி தாவி தாவி கல்யாணி மலையின் உச்சியை அடைய எடுத்து வைத்தான் கடைசி அடியை ஒரு சேட்டைக்காரன்.. அந்த கல்யாணி மலை உச்சியை அடைந்த பெருமை தனது குழுவில் தனக்கே என கத்த எண்ணிய அவன் உடனே பீதியில் "ஐயய்யோ எல்லாரும் ஓடியாங்க.. ஓடியாங்க.."கதற துவங்கினான்..! #அங்கே..

Image may contain: mountain, outdoor and nature


முத்தையா மிகவும் பரபரப்பாக காணப்பட்டார் அதுதான் இந்த "கையும் ஓடலை, காலும் ஓடலை.." அப்படியென்ற நிலையில் இருந்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு அருகாமையில் உள்ள #திடியன்_சோனைமுத்தையா கோவில் பூசாரிதான் இப்பொழுது உங்கள் மனக்கண்ணில் உருவகப்படுத்தப்படும் 55 வயது மனிதர். பரம்பரை பரம்பரையாக சோனைமுத்தையா கோவிலின் பூசாரிகள் அனைவரும் முத்தையாவின் முன்னோர்கள்தான். ஒரு(?) மனைவி, ஒரு மகள் (படிப்புடன் சண்டை செய்து தோல்வியடைந்ததால் give up கொடுத்துவிட்டாள், வீட்டை கவனித்து வருகின்றாள்..) மற்றும் ஒரு மகன்(ஒரு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை மாணவர்..) என தன் குடும்பத்துடன் திடியனில் வசித்து வருகின்றார்.
முத்தையா இப்படி பரபரப்பான மனதுடன் திரிய காரணமே அந்த உசிலம்பட்டி வட்டாரத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான ஃப்ரான்ஸ் ரிட்டர்ன் தங்கராமன், சோனைமுத்தையா கோவிலுக்கு வரப்போவதாக கூறியதுதான் காரணம். பின்னே இருக்காதா, தங்கராமன் யாரு, 200 கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்து மதிப்பு, 200 ஏக்கர் தோப்பு(ஜெயிப்பு என்று பெயர் வைத்திருந்தால் சரியாக இருக்கும்..) துரவு, பிரபலமான ஓர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர், அடுத்து வரும் மதுரை பாராளுமன்ற தேர்தலில் இவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்ற கிசுகிசுக்கள்............. என படு பிரபலமான ஒருவர் அவர், அவரே கோவிலுக்கு வருகின்றார் என்றால் சும்மாவா.? முத்தையா, தங்கராமன் ஏன் கோவிலுக்கு வருகின்றார் "ஏதாவது திருவிழா சம்பந்தமாகவா, டொனேசன் சம்பந்தமாகவா, வேண்டுதலா... ஒன்றுமே புரியவில்லை..!".
"ஏய் இந்தாலா இன்னிக்கி காலம்பரவே கோயிலுக்கு போணும், சோலி இருக்கு.! மத்தியானத்துக்கு சாப்புட என்னாத்தையாவது செய்யி.." முத்தையா
"என்னா சோலியாம்.?" முத்தையாவின் மனைவி -> ஒச்சம்மாள்
"அதாலா நம்ம தங்கராமன் இருக்காப்ல, அவரு கோயிலுக்கு வர்றதா இப்ப கொஞ்ச நேரத்து மின்னாடி போனுல அவுக கணக்குப்பிள்ள சொன்னாரு, அதேன்.." முத்தையா
"தங்கராமனா.? எந்த தங்கராமேன்.?" ஒச்சம்மாள்
"ஊருக்கே தெரியும், ஒனக்கு தெரியாதா கூறு கெட்டவளே.. நம்ம வாலாந்தூர் யோசனைத்தேவர் மகன் இந்த வெளிநாட்டுல இருந்து வந்தாருல்ல, மருதையில இருக்காப்லல்ல அவ்ருதான்..!" முத்தையா
"அவக என்னத்துக்குய்யா இங்குட்டு வாராக.?" ஒச்சம்மாள்
"ஏலா நா என்னா சோசியக்காரனா பூராத்தயும் சொல்ல.? வந்தாத்தாலா தெரியும்.."
"என்னாத்துக்கோ வரட்டும், ஏய்யா நீயி பாத்து நடயா.. பெரிய எடம்.., மத்தியானத்துக்கு கஞ்சியும், தொவையலையும் தூக்குச்சட்டியில ஊத்தி தாரேன், குடிச்சிக்க.. பொழுசாய வந்துருவல.?" ஒச்சம்மாள்
"எந்நேரமாகுமுன்ட்டு எப்டிலா சொல்ல முடியும்.? முடிஞ்சா வெரசா வந்துர்றேன்.. சின்னவனுக்கு காலேசுக்கு போக துட்ட குடுத்துவிட்டுரி.." முத்தையா..
ஆச்சு முத்தையா, கையில் தூக்குச்சட்டியை ஓர் கட்டைப்பையில் அடைத்து, பூஜை சாமான்கள் என திடியன் மலை சோணைமுத்தையா கோவிலுக்கு கிளம்பி ஒரு மணி நேரம். வழியில் டீக்கடையில் ஆரம்பிச்சு "என்னா மாமு இன்னேரம்.? ஏப்பா முத்தையா எங்கய்யா இன்னேரம்.? எலேய் முத்தையா இந்தாடா இந்த மாலைய எஞ்சார்பா நம்ம சோணைக்கு போட்ரு..." இப்படியே பலருடன் உரையாடல் நீண்டு, ஒரு வழியாக திடியன் மலையடிவாரத்தை அடைந்து ஓரளவு செங்குத்தான திடியன் மலையில் ஏறவும் துவங்கியிருந்தார். படிகளும் பல பாதங்களால் மிதிக்கப்பட்டும், வெயில் பட்டு பளபுப்பாகவும் இருந்தது. இம்மலை ஓர் மாெட்டை மலை அதாவது, இம்மலை தன்மேல் செடி கொடிகள், மரங்கள் எதுவும் வளர இடமளிக்கவில்லை.
முத்தையா மனதிற்குள் "பாழாப்போன மலயில ஒத்த புல்லுகூட மொளகை்கலயே.? எல்லா அந்த சோணைக்கே வெளிச்சம்.." என்று நினைத்தவாறே ஏறினார்.
653 படிகளை வேக வேகமாக கடந்து இடையிடையே நின்றடியே இளைப்பாறி மலையுச்சியை அடைந்து ஆசுவாசமானார்.. "ஸ்.. சோ.. யப்பா..". கட்டைப்பையில் இருந்து கோவில் பூட்டை திறப்பதற்கான சாவியை எடுத்தார். சாவியை கையில் எடுத்துக்கொண்டு கோவில் கொடிமரத்தை வணங்கி "எப்பா சோண எல்லாரையும் நல்லா வைப்பா.." என்று பிரார்த்த பின் சாவியைக்கொண்டு அந்த பழங்கால கோவிலான சோணைமுத்தையாவின் வாசற்கதவை காத்து நிற்கும் பூட்டை திறந்தார்.. திறந்தவுடன் கோவிலிற்குள் மங்கலான ஔியில் மதிப்பாக நகர்ந்து மின்விளக்கின் சுவிட்சை போட்டார்., ட்யூப் லைட் எரிய உள்ளே சோணைமுத்தையா "என்ன முத்தையா வந்துட்டியா.." என்று கேட்பது போல நின்றிருந்தார்.
மளமளவென்று முத்தையா பூசைக்குரிய சாமான்களைக்கொண்டு சோணையை அலங்கரிக்க துவங்கி 15 நிமிடங்களுக்குள் முடித்துவிட்டு, திருப்தியாக உள்ளதாக என்று தனக்குத்தானே ஃபீட்பேக் செய்துகொண்டார். எல்லாம் முடிந்தது, இனி பிரச்சனை இல்லை தங்கராமன் வந்தாலும் சமாளிக்கலாம் என்று எண்ணியவாறே, சரி இவ்வளவு நேரம் வேக வேகமாக அனைத்தையும் செய்ததில் அன்றாட பழக்க வழக்கங்களில் சில விஷயங்களை கோட்டைவிட்டதாக நினைத்து, உடன் கோவிலைவிட்டு வெளியேறி கோவிலுக்கு பின்புறம் சென்றார் முத்தையா. ஒற்றை பீடியை கால்சட்டை.பையிலிருந்து எடுத்து பற்றவும் வைத்து, உலகத்திலேயே பீடி புகையை நுரையீரலுக்குள் இழுப்பதையே ரசனையாக செய்தார். மெல்ல மெல்ல ஔியின் ஆதிக்கம் அதிகமாக அதிகமாக மொட்டையான அந்த மலை நன்கு புலப்பட ஆரம்பித்தது. பீடியை ரசித்து புகைத்ததோடு அப்படியே மலையை ஒரு ஃக்ளான்ஸ் விட்டார். திடீரென ஃக்ளான்ஸை நிறுத்திவிட்டு கண்களை இடுக்கி எதையோ கூர்மையாக பார்க்க தொடங்கி பின் பதட்டமாகி விருட்டென எழுந்து சற்று வேகமாகவும், கொஞ்சம் பயத்துடனும் நெருங்கி.. நெருங்கி...
கீழுள்ள படம் உண்மையான திடியன் மலையே..!
Image may contain: sky, mountain, grass, cloud, plant, outdoor and nature


டிஐஜி மாணிக்கம் தன் முன் அமர்ந்திருக்கும் காவல்துறை அதிகாரிகளை கவனித்தவாறே டெலிஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார், "ஆமா சார் சம்பந்தப்பட்ட ஜூரிகள்ல இருந்து வந்திருக்கிற இன்ஸ்பெக்டர்கள் கிட்ட விசாரிட்டுதான் இருக்கேன். அவங்க என்னென்ன தகவல்களோட வந்திருக்காங்கங்கிறத அப்பப்ப அப்டேட் செஞ்சிர்றேன் சார்,... ஓ.கே. சார் அன் டெஃபனட்லி ஐ வில் டெல் யூ வாட் ஐ வில் கெட் ஃப்ரம் தெம்..".
" டிஜிபி தான் பேசினது, பாத்தீங்களா எத்தன ஃபோன் கால்ஸ் வருதுன்னு, கமான் யா என்னய்யா நடக்குது அந்த உசிலம்பட்டி ஏரியாவில.?" மாணிக்கம்
முதலாவதாக திருவாய் மலர்ந்தருளியவர் உசிலம்பட்டி ரூரல் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன்.." சார், பெருமாள் மலையோரமாக ஆடுமேய்க்கிற குமராகோவிலை சேர்ந்த வீரபாண்டிங்கறவன் மலை மேல டெட்பாடி ஒன்னு கெடக்கறதா ஊர் பெரியதனத்துக்கிட்ட சொல்லி, அவர் எனக்கு சொன்னார். அப்புறம் நானும், எஸ்.ஐ ஆனந்தராஜூம், சில கான்ஸ்டபிள்களோட மலைக்கு போயி பாடியை கைப்பத்தினோம். 35ல இருந்து 40 வயசு இருக்க வாய்ப்புள்ள அந்த பாடிய பார்த்தப்ப ப்ளு கலர் ஜீன்ஸ் ம், வொய்ட் கலர் சர்ட் ம் போட்டிருந்தான். சர்ட் பைல எதுவுமில்ல சார், பேன்ட் ல மட்டும் கர்சீப் இருந்தது., வேறெதுவும் கிடைக்கல சார்.! மொகத்து மேல கல்லை தூக்கிப்போட்டதால யாருன்னு சரியா அடையாளம் தெரியல சார். மேற்கொண்டு பாடிய போஸ்ட் மார்ட்டம் செஞ்சதுக்கு பின்னாடிதான் எதுவும் சொல்ல முடியும்., நானும் சுத்து வட்டாரத்துல யாரெல்லாம் மிஸ்ஸிங் னு தகவல் கேட்டிருக்கேன் சார்.." என்று முடித்தார்.
"இது சம்பந்தமா யாரையாவது என்கொயர் செஞ்சீங்களா கார்த்திக்கேயன்.?" மாணிக்கம்
"ஓரளவு விசாரிச்சதுல டெட்பாடி யாருன்னு தெரியலன்னு சொல்லிட்டாங்க சார்.!" கார்த்திகேயன்
"சரி பி.எம் ரிப்போர்ட் வந்தவுடனே எனக்கு அப்டேட் பண்ணுங்க.." மாணிக்கம்
"மிஸ்டர் ராஜா கல்யாணிப்பட்டி விஷயம் என்னாச்சு..?" மாணிக்கம்
நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜா இப்போது வாயை திறப்புவிழா எதுவுமின்றி அவராகவே ஓபன் செய்தார்
"சார், கல்யாணிப்பட்டி மலையில இருக்கிற சமணர்கள் கால கல்வெட்டு, குறிப்புகளை ஆய்வு செய்ய வந்த மதுரை காமராசர் பல்கலை கழக பசங்க குழு அவங்க புரோபசருங்களோட மலைக்கு வந்தப்ப மலை மேல இருக்குற உச்சிக்கு போன சுதாகர்ங்கற பையன் அங்க கெடந்த #மனுஷக்கைய பார்த்து தன்னோட குழுவுக்கு சொல்லி, அவங்க புரோபஸர் ஜெயராஜ் ங்கறவர் ஸ்டேசனுக்கு சொல்ல அப்புறம் கல்யாணிப்பட்டிக்கு போய் அந்த கையை எடுத்துக்கிட்டு மதுரை கவர்மென்ட் ஹாஸ்ப்பிடல்ல ஒப்படைச்சோம் சார். அது ஒரு ஆணோட கை சார் அதிலும் தோள்பட்டையிலிருந்தே தனியா வெட்டி பிரிச்ச கைங்க சார்.! நடந்த அத்தனை சம்பவங்களுக்கு மலை அப்புறம் ஆண்களோட உடலுறுப்புங்க தொடர்புதாங்கறதால, மேல விசாரிக்க பெருமாள் மலை பி.எம். ரிப்போர்ட்டுக்காகதான் சார் வெய்ட்டிங்." ராஜா
"வலது முழுக்கையா இல்லை இடது முழுக்கையா ராஜா.?" மாணிக்கம்
"இடது கை சார்.." ராஜா
"கையில ஏதாச்சும் மோதிரம், மச்சம், தழும்பு இப்பிடி ஏதாவது.?" மாணிக்கம்
"அம்மை தழும்பு மட்டும் இருந்தது சார் மற்றபடி க்ளீன் சார்.." ராஜா
"ஃபர்தரா எந்த தகவல் கிடச்சாலும் உடனடியா பாஸ் செய்ங்க.." மாணிக்கம்
இறுதியாக செக்காணூரனி இன்ஸ்பெக்டர் மாலதி பக்கம் திரும்ப மாலதி " சார், திடியன் மலை சோணைமுத்தையா கோவில் பூசாரி முத்தையாங்கறவர், அன்னிக்கு கோயிலுக்கு மதுரை ..... கட்சிக்காரரான தங்கராமன் வர்றதா சொன்னதால காலங்கார்த்தாலேயே கோயிலுக்கு போயி, சாமிக்கு அலங்காரமெல்லாம் முடிச்சிட்டு அப்படியே கோயிலுக்கு பின்னாடி வந்தவரு அங்க கெடந்த #மனுஷக்காலை பார்த்து பயந்துபோய் ஊர்க்காரங்களுக்கு ஃபோன் செஞ்சு சொல்லி, அப்பறம் நாங்க அங்க போயி அந்த காலை கைப்பற்றி மதுரை ஜி.எச்.ல ஒப்படைச்சோம் சார். அது ஒரு மனுஷனோட வலது கால் சார், அதுவும் இடுப்புக்கு கீழ இருந்து முழுக்காலுமே வெட்டப்பட்டிருந்தது சார்..".மாலதி
"ம்..ம்.. மாலதி இது சம்பந்தமா வேறெந்த தகவலாவது கிடச்சா உடனடியாக எனக்கு சொல்லுங்க.. பத்திரிக்கைக்காரங்கள்ட்ட ரெக்வெஸ்ட்டா சொல்லி இதைப்பத்தி செய்தி ஏதும் வராம பாத்தாச்சி., ஆனாலும் ஓரளவுக்குதான் முடியும் அதுக்குள்ள நாம ஸ்டெப் எடுத்தாகணும்.! டிஜிபி வேற அப்பப்ப என்னாச்சுன்னு கேட்கிறார்.." மாணிக்கம்
"சரி நீங்க எல்லோரும் போகலாம், இந்த மூணு சம்பவங்களுமே மலை, உசிலம்பட்டி பெல்ட்ல நடந்திருக்கிறாதாலதான் உங்க மூணு பேரையும் ஒன்னா வரச்சொன்னேன்.! மூணு பேருமே கான்டக்ட்ல இருங்க, ஒருத்தொருக்கொருத்தர் டச்லயே இருக்கணும்.. ஓ.கே.?" மாணிக்கம்
மூவரும் ஒரே மாதிரியாக "ஓ.கே. சார்.." என்றனர்.
"நவ் யூ மே கோ..!" மாணிக்கம்
இன்ஸ்பெக்டர்கள் மூவரும் சென்றுவிட மாணிக்கம் "இது என்ன எழவு கேசுன்னே தெரியல, கண்ணுல விரல விட்டு ஆட்டப்போகுது..!" என்றவாறே யோசிக்க துவங்க, யோசித்தது போதும் என்று மீண்டும் டெலிஃபோன் அலற எரிச்சலுடன் ஃபோனை காதில் வைத்தார்.
"ஹலோ.." மாணிக்கம்
"வணக்கம் சார் நான் ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் சகாதேவன் பேசறேன் சார்.." சாகாதேவன்
"வணக்கம்.. என்ன சொல்லுங்க.." மாணிக்கம்
"சார் தேனி ரோட்ல உசிலம்பட்டிக்கு அடுத்த ஊரான #மாதரைங்கற ஊர்ல #பொட்டல்_மலைங்கற மலைல ஒரு #மனுஷக்கை கெடக்குது சார்..! எல்லா ஸ்டேசனுக்கும் சர்க்குலர் வந்ததால நான் ஒடனே உங்களுக்கு ஃபோன் செஞ்சேன் சார்.." மகாதேவன்
டிஐஜி மாணிக்கத்திற்கு பிரசர் தலைக்கேறியது..
"பொட்டல் மலை, மனுஷக்கை..! இந்த கேஸ் டிபார்ட்மென்ட்ட சாவடிக்க போகுது..!"
பொட்டல் மலை...


மாதரை என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும், சிறுவர்களும் இணைந்து 100% டீஹைட்ரேட்டட் கண்மாயில் பிட்ச் அமைத்து, பாரம்பரிய விளையாட்டுகளை புறந்தள்ளி வெள்ளைக்காரனின் கிரிக்கெட்டை விளையாடினர். அன்று ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது, ஒரே ஊர் இளைஞர்கள் இரு அணிகளாக பிரிந்து பெட் மேட்ச் விளையாடினர். சிறுவர்கள் தங்களையும் ஆட்டத்தில் சேர்ப்பார்களா என தங்களது திறமையை வெளிக்காட்ட வாய்ப்பமையாதா என காத்திருந்தனர்.
போட்டிதொடர்ந்து நடந்து அதில் ஓர் அணி வென்றுவிட, வெற்றியை தவறவிட்ட இன்னொரு அணியினர் தங்களை தாங்களே வசைபாடினர், "நீ பவ்லிங்காடா போட்ட, ஏன்டா எங்க பக்கம் ஆட்றான்ன அவெங்களோட சேந்து ஆடிருக்க.?", "ஆமா இவ்ரு பெரிய இவ்ரு, டக் அவுட்டாயிட்டு பேச்சப்பாரு......" இப்படி தொடர, அதில் ரோசப்பட்ட ஒருவன் "எலேய், இப்டியே இந்த பொட்ட மல மேல ஏறி உச்சியில இருக்க சிவங்கோயில்ல இருக்க விபூதிய எடுத்துட்டு யார் பஸ்ட்டு வரதுன்னு போட்டி வச்சுக்குவமாடா.?" என்றான்..
பதிலுக்கு இன்னொருத்தன் " எலேய், இதுல செயிக்கவே வக்குல்ல, இதுல மல ஏர்ற போட்டி வேறயா.? என்னடா பந்தயம்.? வாடா பாத்துக்குவோம்.." என சீறினான்..
இப்படியாக மீண்டுமொரு பந்தயம் அரங்கேற, இரு குழுக்களும் கண்மாய் ஓரமாக இருந்த ஜோதிபாசுவின் தென்னந்தோப்பு நிழலில் ஆங்காங்கே அமர்ந்தனர். போட்டிக்கு இரு அணிகளின் சார்பில் போட்டியாளர்கள் தேர்வாயினர்., ஒருவன் அன்பு, மற்றொருவன் கோபி..! பந்தயமும் அறிவிக்கப்பட்டது, "யார் மொதல்ல பொட்ட மலயில இருக்க சிவங்கோயில் தின்னூர எடுத்து, இங்க வாருங்களோ அவன்தானப்பா செயிச்சவன், பந்தயம் என்னான்டா ராம்குமார் புரோட்டா கடையில புரோட்டாவும், சிக்கனும் வாங்கி தந்துரனுமப்பா.." என்றான் அதில் பெரிய ஆளாக மதிக்கப்படுபவன்.!
அன்பும், கோபியும் தயாராக ஒருவன் வாயில் கைவைத்து விசிலடிக்க தயாராக, ஆளாளுக்கு அட்வைஸை பொழிந்தார்கள்.. "அன்பு மொத மெதுவா ஓட்றா, அவன முந்தாம பின்னாடியே ஓடி அவெ அசந்த நேரம் அவனை முந்திப்புட்றா.." எனவும், ஏறத்தாழ இதே யோசனையை கோபிக்கும் வழங்கி கொண்டிருந்தனர். அன்பும், கோபியும் எப்படியாவது இந்த போட்டியில் வென்று "ராம்குமார் புரோட்டா கடையில சிக்கனோட புரோட்டாவையும் அடிக்கணும்டா.." என்று வெறியுடன் காத்திருந்தனர். விசில் அடிக்க போட்டி துவங்கியது, ஏறத்தாழ 2 கி.மீ. அளவு தூரமுடைய பொட்டல் மலையை நோக்கி,.வெறியேற்றப்பட்ட குதிரைகளைப்போல ஓடத்துவங்கினர்.!
ஜோதிபாசு தென்னந்தேதாப்பு நிழலில் அமர்ந்திருந்த குழுக்கள் அவரவர் கோஷ்டியை சேர்ந்தவர்களை சற்று மிகையாக பெருமை பாடினர். "கோபி பின்னிருவான்டா, பாரு..!" "அன்போட நெழலக்கூட தொட முடியாதுடா.." என பேச்சுகள் தொடர, நேரமும் இவர்கள் வரையில் மெதுவாக போனது.! "இந்தா வந்துருவாங்கே, இம்புட்டு நேரமாடா.." என நினைக்க 25 நிமிடங்களை 25 வருடங்களாக கழித்தனர் பொறுமையின்றி, மில்லர் பிளானட்டில் இறங்கிய டீம் சுனாமியில் மாட்டி, மீண்டும் மதர் ஷிப்பை அடைய 23 வருடங்கள் ஆனது போல இவர்களின் நிலை.!
32 வது நிமிடத்தில் அன்பும், கோபியும் வேட்டு சத்தம் கேட்டக் கழுதைகளைப்போல பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிஈஈஈஈஈ வந்துகொண்டிருந்தனர். கூட்டம் எழுந்து "வாடா அன்பு..", "கோபி வந்துர்றா.." என என்கரேஜ் செய்தது., அதிலொருத்தன் "ரெண்டு பேரும் ஒரே வேகத்துல வாரங்கே.." என்றான்.
அன்பும், கோபியும் கூட்டத்தை எட்டிப்பிடிக்க, கூட்டமும் அவர்களை தாங்க, இருவரும் பதிலளிக்காமல் "ஹே..ஹே.." என்று மூச்சிரைத்தனர். "யார்றா விபூதிய பஸ்ட் எடுத்துக்காந்தது.?" என கேட்க பதிலுக்கு "ஹே.. ஹே.. போங்கடா .........களா, எலேய், மல மேல ஒரு கை எரிஞ்சு போயி கெடக்குடா.! அத பாத்துப்புட்டு துண்டக் காணாம், துணியக் காணாம்ட்டு ஓடியாந்துருக்கோம், உங்க .....த்து விபூதி வேணுமாம்.. விபூதி..!" என்றான் கோபி
கூட்டம் ஸ்தம்பித்தது, பின் கிசு
கிசுவென்றும், கலவரமாகவும் பேசத் துவங்கியது. "எலே, என்ங்கடா சொல்றீங்க, எரிஞ்சு போன கையா.? மல மேலயா.? ஏ யாத்தே.!" என்றான் ஒருவன். பின் ஒரு வழியாக ஊரிலேயே வசிக்கும் போலீஸ் ஏட்டான சந்திரனை ஃபோன் மூலம் தொடர்புகொண்டு விஷயத்தை சொல்ல, சந்திரன் எஸ்.ஐ. பரந்தாமனிடம் சொல்லி, எஸ்.ஐ. இன்பெக்டர் மகாதேவனிடம் சொல்லி, மகாதேவன் டி.ஐ.ஜி மாணிக்கத்திடம் தெரிவிக்க, மாணிக்கம் நேரடியாக #மாதரை பொட்டல் மலை உச்சிக்கு வந்து, ஏற்கனவே காத்திருந்த மகாதேவன் அன் போலீஸ் டீமின் வரவற்பை ரசிக்காமல், எரித்து பொசுக்கப்பட்ட அந்த மனிதக்கையை கண்டு, எதையோ யோசிக்க துவங்க... உடனடி போஸ்ட்மார்ட்டம் செய்ய சிறிய மருத்துவக் குழு, ஃபாரன்ஸிக் டிபார்ட்மென்ட், டாக் ஸ்க்வாட் என பொட்டல் மலையே அதகளமானது. சிவனும் பொறுமையாக வேடிக்கை பார்க்க தொடங்கியிருந்தார் என்னவாவது பண்ணிட்டு போங்கடா என்று.!
இரண்டு மணி நேரம் கழித்து டாக்டர் குழவில் சீனியரான ராஜாராமன், டி.ஐ.ஜி மாணிக்கத்தை தனியே அழைத்து ஓரமாக கூட்டிச்சென்று, "சார் எரிஞ்சது ஒரு ஆணோட கை, அதிலும் இது ஒரு #வெள்ளைக்காரனோட_வலது_கை, நாம கண்டுபிடிச்சிறக்கூடாதுன்னு கையை எரிச்சிக்கிறாங்க சார்.!" என்றார்.
மாணிக்கம் திடுக்கென்று நிமிர்ந்து டாக்டர் ராஜாராமனை பார்த்தார்.. கண்கள் தெறித்து வெளிவந்து விழப் பார்த்தது..!

Image may contain: one or more people, people standing, beard, outdoor and nature

பாதுகாக்கப்பட்ட அந்த அறையில் மிகவும் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக திரையில் தமிழ்நாடு காவல்துறை #டிஜிபி திரு.ராஜேஷ்தாஸ் பேசிக்கொண்டிருந்தார், "மதுரையில் இந்த ரெண்டு நாளா என்னன்னமோ நடந்துபோச்சு, அது தலைமை செயலகம் வரை போய், தலைமை செயலாளர் எங்கிட்ட சி.எம். சொன்னதா சொன்னார், அதாவது இதப்பத்தி விசாரிச்சு உடனடியாக ரிப்போர்ட் அனுப்ப சொல்லி.! விஷயம் மேலிடம் வரைக்கும் போயாச்சு, பத்திரிக்கை உள்பட எல்லா மீடியாக்கள் கிட்டயும் ரெக்வெஸ்ட் செஞ்சதால இப்போதைக்கு கொஞ்சம் டைம் கிடைச்சிருக்கதனால பரவால்ல.! சொல்லுங்க மாணிக்கம் சார் ஃபர்தரா என்ன பண்ணிட்டிருக்கீங்க.?" என்ற கேள்வியோடு, பதிலுக்காக காத்திருந்தார்.
"சார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த பெருமாள் மலைல கெடச்ச பாடிய போஸ்ட்மார்ட்டம் செஞ்சதுல ஜி.எச் டாக்டர் குடுத்த ரிப்போர்ட்ப்படி கொலை செய்யப்பட்டவரோட எலும்பு வளர்ச்சியை வச்சு பாத்து 35 வயசிலருந்து 40 வயசுக்குள்ள இருக்கலாம்னும், முகத்துல கல்ல தூக்கிப்போட்டதுனால முகத்தாடை எலும்பு உள்பட முகமே அடையாளந் தெரியாத அளவுக்கு சிதஞ்சு போயிருக்கு, ரத்தக்கறையை ரசாயணத்துறையில குடுத்ததுல "ஏ"+ னு தெரிஞ்சிருக்கு சார்.! ஆனா கொலைக்கு பயன்படுத்திய கல் கெடைக்காததால கல்லை இன்னும் நம் டிபார்ட்மென்ட் தேடிட்டுதான் இருக்குங்க சார்.." மாணிக்கம்..
"மற்ற மலைகள்ல கெடச்ச உடலுறுப்புகள் பத்தி எதாவது க்ளு, தேறிச்சா மிஸ்டர்.மாணிக்கம்..?" ராஜேஸ்தாஸ்
"கல்யாணி மல, திடியன் மல இங்கெல்லாம் கெடச்ச கை, கால்ல எந்தவொரு தடயமும் கெடைக்கல சார்., ஆனால், பொட்டல் மலயில கெடச்ச வலது கை வெள்ளைக்காரனோட கைன்னு உசிலம்பட்டி டாக்டர்.போஸ் தன்னோட ரிப்போர்ட்ல சொல்லிருக்கார் சார்.! அப்புறம் எதிர்பாத்த மாதிரியே கை, கால் எல்லாம் உயிர் போனப்புறம் மெஷின் மூலமா வெட்டி எடுக்கப்பட்டது என்பதும் டாக்டர்ஸ் ரிப்போர்ட் சார்.." மாணிக்கம்
அது எப்படி எரிந்துபோன கையை இது வெள்ளைக்காரனுடைய கைதான் என்று அடித்து ரிப்போர்ட் செய்திருப்பார் டாக்டர்.போஸ்.? (பின்னூட்டங்களில் பதியலாம்.! இலகுவானதுதான்.!))
"ஒரு பாடி,ரெண்டு கை, ஒரு கால் இதுல ஒரு கைங்குறதுல ஒரு கை வெள்ளைக்காரனோடதுங்கறதுதான் இப்ப எனக்கு பெரிய எரிச்சல கிளப்பியிருக்கு.! சும்மாவே மீடியா போலீஸ்னாலே அப்பிடி, இப்பிடி, மாமூல்னு கிழித்தெடுப்பாங்க.! இந்த லட்சணத்துல உசிலம்பட்டியில இத்தனை பிரச்சனைகள்.? மாணிக்கம் நீங்க கொஞ்சம் அதிகப்படியா கேர் எடுத்து இந்த சம்பவங்களுக்கு இடையே ஏதாவது தொடர்பிருக்கான்னு பாருங்க, சம்பந்தப்பட்ட இடத்த நல்லா சல்லடைப்போட்டு அலசி எதாவது க்ளு தேருமான்னு பாருங்க.! எது எப்பிடியோ ஐ வான்ட் டூ சால்வ் திஸ் கேஸ் வித் இன் ஒன் வீக்..! ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட் திஸ், திஸ் இஸ் நாட் அன் ஆர்டினரி கேஸ்.! வெள்ளைக்காரன்ல யாராவது மிஸ்ஸிங் அப்படினு அலசுங்க ஆனா சீக்ரெட்டா., மீடியாவ கொஞ்ச நாள்தான் அடக்க முடியும்.!" ராஜேஸ்தாஸ்
"ஓ.கே. சார் அன் ஐ வில் ட்ரை மை லெவல் பெஸ்ட் அட் எனி டைம் யூ மே கெட் த ரிசல்ட் சார்.." மாணிக்கம்
"விஷயம் எம்பஸிக்கு போறதுக்குள்ள டேக் சம் சீரியஸ் ஆக்சன் அன் டோன்ட் ஃபர்கெட் டூ அப்டேட் மீ..! அப்புறம் பாக்கலாம்.." ராஜேஸ்தாஸ்
வீடியோ கான்ஃபரன்ஸ் முடிய, அப்படியே மாணிக்கம் தனது சகாக்களை பார்த்தார், "என்ன செய்யலாம், யாருக்காவது ஏதாவது ஐடியா.?" என்றார்
"சார் டாக் ஸ்க்வாட், ஃபாரன்ஸிக் டிபார்ட்மென்ட் மூலமா ஏதாவது தகவல்..?" காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்..
"டாக் கொஞ்ச தூரம் போச்சு ஆனால், அதுக்கப்பறம் ட்ரைனர் வரிக்கி போடமாட்டாரான்னு உக்காந்திருச்சு, ஃபாரன்ஸிக் "எல்லாமே கோவில் மலைகள் சார், நூத்து கணக்குல ஜனங்க வந்துபோற எடம்னு ரேகையை காமிச்சுட்டாங்க(கையை விரித்து)..!" மாணிக்கம்
"நமக்கு கெடச்ச ஒரே தடயம் வெள்ளைக்காரனோட கைதான், அதவச்சுதான் எதாவது செய்யணும், 5 தனிப்படை அமைச்சிருக்கேன், ஒவ்வாெரு தனிப்படைக்கும் ஹெட்டா ஒரு இன்ஸ்பெக்டர் இருப்பார், ஒரு படைக்கு 10 போலீஸ் எஸ்.ஐ உட்பட..! சுறுசுறுப்பா களத்துல எறங்கி கூடிய விரைவா குற்றவாளியை, குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்..!" மாணிக்கம் உத்தரவே இட்டார்..
கீழேயுள்ள மலை #புத்தூர்_மலை லாங் ஷாட்

இரண்டு நாட்கள் வேகமாக கடக்க, இந்த இரண்டு நாட்களுக்குள் டிஐஜி மாணிக்கம் உசிலம்பட்டி மலைகள் சம்பந்தப்பட்ட வழக்கின் போக்கை அறிய இவரால் நியமிக்கப்பட்ட காவல்துறை குழுவிற்கு நாளொன்றிற்கு 20 முறையாவது ஃபோன் செய்து விசாரித்து தள்ளியிருப்பார். உயரதிகாரியாயிற்றே என்பதால் பதில் மரியாதையாகவும், பொறுமையாகவும் கிடைத்து வந்தது. அப்படி கிடைத்த தகவல்களில் பெரும்பாலும் உபயோகமற்றவைகளாகவே இருந்தது.
மூன்றாம் நாள் காலை சென்னையிலிருந்து இவ்வழக்கை விசாரிக்கவென்றே டிஜிபியால் அனுப்பப்பட்ட #விஜய் வந்து சேர்ந்தான். 6.1 அடி உயரம்., 80 கி.கி எடை., ஸ்போர்ட்ஸில் ஈடுபாடுடையவன் போல நல்ல பிஸிக்., மாநிறம்., படு சுறுசுறுப்பாக காணப்பட்டான்.! அறிமுகம் முடிந்து போயிருக்க, விஜய் தற்போது டிஐஜி மாணிக்கத்திற்கு எதிரே இருந்த சேரில் உட்காந்திருக்க, மாணிக்கம் ஒரு ஃபைலை தூக்கி மேஜையில் போட்டார்.
"இந்த ஃபைல்ல உசிலம்பட்டிய சுத்தி இருக்கிற மலைகள்ல நடந்த அசாம்பாவிதங்கள் குறித்த விவரங்கள் முழுக்க இருக்குது மிஸ்டர்.விஜய்.." மாணிக்கம்
"ஓ.. தேங்க் யூ சார்.! ஏதோ வெள்ளைக்காரன் கை கெடச்சதுன்னு டிஜிபி சார் சொன்னாரே சார் அதப்பத்தி புதுசா ஏதாவது தகவல்.?" விஜய்
"இந்த ரெண்டு நாள்ல நம்ம ஃபாரீன் மினிஸ்டரி, நம்ம எம்பஸிகள்ல விசாரிச்சதுல நம்ம நாட்டுக்கு வந்த ஃபாரீனர்ஸ் எல்லோரும் ஸேஃப்ங்க்ற தகவல் கெடச்சிருக்கு.! இதுதான் பெரிய குழப்பமா இருக்கு.? ஓவர் ஸ்டேவையும் செக் பண்ணியாச்சு., ஒண்ணும் புடிபடல.." மாணிக்கம்
"ஓ.. ரியலி வெரி சேட்., இருந்தாலும் இன்னும் தீவிரமாக விசாரிக்கணும் சார்.! அப்புறம் எனக்கொரு டவுட் சார்.?" விஜய்
"என்ன டவுட்.?" மாணிக்கம்
"ஏன் சார் வந்த ஃபாரீனர் ஓர் #இல்லீகல்_என்ட்ரீயாகஇருந்தால்.?" விஜய்
மாணிக்கம் நிமிர்ந்து உட்கார்ந்தார் "இருக்க சான்சஸ் இருக்கே, இது நமக்கு தோணலையே.?" என்று மனதிற்குள் தன்னையே நொந்துகொண்டார்.!
புதிதாக உருவான காத்தவராயன் நகரில் ஓர் வீட்டில் பூஞ்சையான உடலமைப்புடைய ஒரு பெண்மணி தனது குழந்தைகளுக்கு காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். (ர் என்று மரியாதையாக குறிக்கவே விருப்பம் ஆனால், அது கதைக்குரிய ரியாலிட்டியை இழக்க நேரிடும் என்பதால் ள்..) இரண்டு குழந்தைகளில் ஒன்று பெண் குழந்தை வயது 5, மற்றொன்று ஆண் குழந்தை வயது 2, மூத்த குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தின் பேரில் அவசர அவசரமாக சிற்றுண்டியை தயார் செய்தபடி இருந்தாள்.
"தாரணி, ஓன் ஸ்கூல் பேக்க எடுத்துக்க, உப்புமா ரெடியா இருக்கு சாப்பிட்டுக்க, மதியத்துக்கு தயிர் சாப்பாடு வச்சிருக்கேன் மறக்காம சாப்பிடு. ஏண்டி ஸ்கூல்ல ஃபீஸ் ஏதும் கட்ட சொல்லி கேட்டாங்களா.?" பெண்மணி
"ஆமாம்மா., சீக்கிரமா கட்ட சொன்னாங்கம்மா..!" தாரணி
"சீககிரம் கட்டிடலாம் என்ன.? ஸ்கூல் வேன் வந்துரும் நீ சீக்கிரமா சாப்பிடு.." பெண்மணி
தாரணியும் உப்புமாவை உண்டு முடிக்க, ஸ்கூல் பேக்கை வலது கையிலும், இடுப்பில் பையனையும் தூக்கிக்கொண்டு பள்ளிக்கான வேன் நிற்கும் இடத்தை அடைய வேக வேகமாக நடையை துவக்கினாள் அந்த பெண்மணி. தாரணியும் இயன்றவரை வேகமாக நடக்க முயன்று ஒரு வழியாக வேன் நிறுத்துமிடத்தை அடைந்தனர். நல்லவேளை வேன் இன்னும் வரவில்லை.! பையனை கீழே இறக்கிவிட்டு, முந்தானையால் வியர்வையை துடைத்தாள் "அப்பா" என்றவாறே.. 5 நிமிடங்களில் வேன் வர தாரணியை பள்ளிக்கு சென்ட் ஆஃப் செய்துவிட்டு, மீண்டும் வீடு திரும்ப எடுத்துக்கொண்ட நிமிடங்கள் 5..
மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த மகனான அஸ்வினுக்கு காலை உணவை ஊட்ட துவங்க, வெளியே ஒரு பைக் வந்து நின்று ஸ்டான்ட் போடும் சப்தம் கேட்டது. அஸ்வினுக்கு உப்புமாவை ஊட்டியவாறே எட்டிப்பார்க்க வெளியே, போலீஸ் ஏட்டு ஒருவர் "ஏம்மா, வீட்ல யாரும்மா.?" என்று கேட்கவும் சரியாக இருந்தது.

"ஏம்மா, வீட்ல யாரும்மா.?" என்ற சப்தம் கேட்டவுடன் அஸ்வினுக்கு உப்புமாவை ஊட்டிய கையுடன் எழுந்த பெண் வீட்டின் வாசலுக்கு வந்து பார்க்க, வாசலில் காக்கி உடையணிந்த போலீஸ்.! இன்ஸ்டன்ட் காஃபி போல உடனடி பரபரப்பு தொற்றிக்கொண்டது.
"என்னாங்க சார்.?" என்றாள் பெண்மணி
"ஏம்மா, இங்க டிராவல் ஏஜென்ஸியில வேலை பாக்குற ரவிங்கறவர் எந்த வீட்ல குடியிருக்காரு.?" என்றார் ஏட்டு
இந்த சப்தம் இந்த வீட்டிற்கானதல்ல, அருகிலிருந்த வீட்டிற்கு என்றவுடன், பரபரப்பு சற்று குறைந்து, "எங்க வீட்டுக்கு அடுத்த போர்சன்லதான் இருக்காங்க.." அந்த பெண்மணி பதிலளித்தவுடன்,
"பாத்தேம்மா, வீடு பூட்டிருந்ததாலதான் கேட்டேன், இங்க ரவிங்கறவர் மட்டும் இருக்காரா இல்லை குடும்பத்தோட தங்கியிருக்காரா.?" ஏட்டு
"அவர் மட்டும்தான் இருக்கற மாதிரி தெரியுது சார், இதுவரைக்கும் வேற யாயைும் பாத்ததில்லை சார்.." பெண்மணி
"அவர எப்பம்மா பாத்தீங்க.?" ஏட்டு
"ரெண்டு, மூணு நாளா வீடே பூட்டியேதான் சார் இருக்குது, எங்க போனாருன்னு எங்களுக்கு தெரியாது சார்.." பெண்மணி
"ஆளு எப்படிம்மா, அதாவது அப்பிடி, இப்பிடின்னு..?" ஏட்டு
"அதெல்லாம் தெரியாது சார், காலயில வெளிய கௌம்புனா ராத்திரிக்குதான் வருவார், மத்தபடி அவ்வளவா பேசுனது கெடயாதுங்க சார்.." பெண்மணி
"சரிம்மா என் நம்பர தர்றேன், ஆளு வந்தா மறக்காம உடனே இந்த நம்பருக்கு ஃபோன் பண்ண சொல்லும்மா..!" ஏட்டு
"சரிங்க சார்.." பெண்மணி
"தேங்கஸ்மா.! நீங்க இந்த வீட்ல எவ்வளவு நாளா குடியிருக்கீங்கம்மா.?" ஏட்டு
"ஒரு வருஷமா இருக்கோம் சார்.." பெண்மணி
"ஒங்க வீட்டுகாரர் என்னம்மா செய்யறாரு.?" ஏட்டு
"கால் டாக்ஸிஓட்டிட்டு இருக்கார் சார்.." பெண்மணி
"சரிம்மா நா வர்றேம்மா., ஆளு வந்தா மறக்காம ஃபோன் செய்ய சொல்லும்மா, ஒரு கேஸ் விஷயமா விசாரிக்கணும்..!" என்ற ஏட்டு பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட, அஸ்வினோடு வீட்டிற்குள் வந்தவள் மனதிற்குள் தனது கணவனை "கால் டாக்ஸி ஓட்றேன், கழுத டாக்ஸி ஓட்றேன்னு சொல்லிக்கிட்டு மனுஷன் ஒழுங்கா வீட்டுக்கே வர்றது இல்ல, எங்கேயாவது போனா ரெண்டு நாள், மூணு நாள்னு டேரா போட்டு தங்கிர்றது.! இந்த தடவை வரட்டும் ஒழுங்கா இங்குட்டே ஓட்டுங்க இல்ல வேற எந்த வேலயாவது பாருங்கன்னு சொல்லிறணும்.." என்று தற்காலிக திட முடிவை எடுத்துக்கொண்டே, அஸ்வினுக்கு ஆறிப்போன உப்புமாவை ஊட்ட, அஸ்வின் உப்புமா வேண்டாம் என தலையசைக்க........
விஜய் வந்த ஒன்றிரண்டு மணிநேரங்களிலேயே உசிலம்பட்டி மலைகள் வழக்கு சூடானது. ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, காவல்துறைக்கு விரும்பி வந்தவன் விஜய்.! தந்தை கல்லூரி முதல்வர், தாயார் வீட்டை நிர்வகிப்பவர், தாத்தா ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, பாட்டி வீட்டு நிர்வாக தலைமை, படித்தது சைனிக் ஸ்கூல்.... கண்களி்ல் சதா சுறுசுறுப்பு, கேள்விகளில் கூர்மை என விரைவாக செயல்பட்டான். மதுரைதான் சொந்த ஊர் என்பதால் இந்த கேசை ஸ்பெசலாக கவனிக்க டிஜிபியால் அனுப்பப்பட்டிருந்தான்.
டிஐஜி மாணிக்கத்திடம் கூறியபடி இல்லீகல் என்ட்ரீயை விசாரிக்க தனிப்படையினரை பணித்திருந்தான் கூடியவரையில் எவ்வளவு விரைவாக தகவல்களை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய உத்தரவு பிறப்பித்தான். பொதுவாக தமிழகத்தை பொறுத்தவரை இல்லீகல் என்ட்ரீ என்றால் கோடியக்கரை, ராமேஸ்வரம்., கீழக்கரை போன்ற இடங்களிலேதான், கடல் வழியில் நடைபெற வாய்ப்புண்டு. சென்னையில் இதற்கு வாய்ப்பு குறைவென்பதால், சௌத் தமிழ்நாடு.! இந்த சாத்தியக்கூறை கணக்கில் எடுத்துக்கொண்டு, காசிற்காக இல்லீகல் என்ட்ரீக்களை போட்டுகள் மூலம் செய்யும் நபர்களை பிடிக்க வேண்டும்., பிடித்து காவல்துறை பாணியில் விசாரித்தால் பலன் கிடைக்கும் என்று இல்லீகல் என்ட்ரீயை காசிற்காக செய்யும் நபர்களை லபக்கி வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனிப்படையும் விரைந்தது.!
காலை 10 மணி, டிஐஜி அலுவலகத்தில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் விஜய் பி.எம் ரிப்போர்ட்களை கண்களால் மேய்ந்துகொண்டிருந்தான், பிறர் கண்களில் படாத விஷயம் தன் கண்களில் படாதா என்று. அரைமணி நேரம் சென்றிருக்க விஜயின் செல்ஃபோன் "தாய்மண்ணே வணக்கம்.! வந்தே மாதரம்......" என மெலிதாக இசைத்தது.
"ஹலோ திஸ் இஸ் விஜய்.." விஜய்
"குட் மார்னிங் சார்.. நா இன்ஸ்பெக்டர் ரசாக் பேசறேன் சார்.." ரசாக் (தனிப்படை இன்ஸ்பெக்டர்)
"குட் மார்னிங்.. சொல்லுங்க சார் எனித்திங் ஸ்பெசல் நியூஸ்..?" விஜய்
"நீங்க சொன்ன மாதிரியே விசாரிச்சதுல 10 நாளைக்கு முன்னாடி இங்க கீழக்கரையில இருக்கற சுலைமான்ங்கறவன் போட்ல ஒரு வெள்ளைக்காரன கூட்டிட்டு வந்ததா, இங்க ஒருத்தன்ட்ட இருந்து தகவல் கெடச்சிருக்கு சார்..!" ரசாக்
"எக்ஸலன்ட் சார்.! அப்புறம் என்ன சொல்லுங்க சார்..?" என்றான் விஜய் சற்று பரபரப்பாக..
"இப்ப சுலைமான் மீன் புடிக்கறதுக்காக கடலுக்குள்ள போயிருக்கானாம் சார், போயி 6 நாளாச்சாம் சார்., எப்ப வேணும்னாலும் கரைக்கு திரும்பலாமாம் சார்! அவனுக்காகதான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் சார்..!" ரசாக்
"எத்தனை பேர் இருக்கீங்க சார், ஃபோர்ஸ் தேவைனா உடனே லோக்கல் ஸ்டேனுக்கு போகாம இங்க சொல்லுங்க சார், லோக்கல்ல நியூஸ் லீக்காகாம பாத்துக்கங்க.. அட் எனி காஸ்ட் எனக்கு சுலைமான் வேணும்..!" விஜய்
"ஓ.கே சார்.." ரசாக்
"ஓ.கே சார் அன் யூ டிட் அ வொண்டர்ஃபுல் ஜாப்.." விஜய்
"தேங்க்யூ சார்.." ரசாக்
"தேங்க்யூ.." என்று விஜய் ஃபோனை கட் செய்தான். மனதில் சுலைமான் அட்வான்ஸ், வாடகை தராமலே குடியேறினான்..!
சுலைமான்..
Image may contain: 1 person, hat

சுலைமான் முகம் பீதியில் வெளிறிய குதிரை மாதிரி இருந்தது. வறண்ட தலைக்கேசம், சராசரியான உடை, கண்கள் இடுங்கிப்போய் நிற்க.. எதிரில் விஜய் கையில் லாட்டியை திரும்ப திரும்ப அளவெடுத்தவாறே அமர்ந்திருக்க, மேஜை மேல் அமெரிக்க டாலர்கள்..
"சுலைமான்.. சில்வானு சிங்களன் ஒருத்தன் அந்த வெள்ளக்காரன இலங்கையிலிருந்து இந்திய எல்லை வரைக்கும், அப்புறம் நீ அவனை கீழக்கரைக்கும் கூட்டிட்டு வந்த எல்லாம் சரி., எறக்கிவிட்டப்புறம் என்ன நடந்துச்சு.? அந்த வெள்ளக்காரன் எங்க போனான், என்ன நடந்ததுன்னு கொஞ்சம் ஞாபகம் வச்சு சொல்லு.." விஜய்
"சார், 2000 டாலருக்கு ஆசப்பட்டு அந்த வெள்ளக்காரன போட்ல திருட்டுத்தனமா கூட்டிட்டு வந்தது உண்மைதான் சார், அதுகூட என் வறுமைக்காகத்தான் சார், வேறெதுவும் தெரியாது,.." சுலைமான்
"செய்யுற தப்புக்கு வறுமைமேல பழிபோடாத சுலைமான், நம்ம செய்யற தப்பை நியாயமாக்க நமக்குநாமே செய்யற சால்ஜாப்புதான் காரணம்.! சோ பொய் பேச நினைக்காத..! சொந்த போட்டா.?" விஜய்
"ஆமாங்க சார், சத்தியமா நான் பொய் சொல்லல சார், என் வறுமைனாலதான் இந்த பணத்துக்கு ஆசப்பட்டு இத செஞ்சேன் சார், வேறெந்த தப்பும் இதுவரைக்கும் செஞ்சதே இல்ல.." சுலைமான்
சுலைமானை பார்த்தால் வறுமைதான் அவனை அப்படி செய்ய வைத்தது என்பது புரிந்தாலும் போலீஸில் கடைசிவரை எதையும் நம்பக்கூடாது என்ற பாலப்பாடம் அதனை அனுமதிக்காது. இருந்தாலும் உண்மையை வெளிக்கொண்டு வர பயமூட்டலே சரியான வழி என்பதை நினைவில் கொண்டான் விஜய்.
கொஞ்சம் சீரியஸாக, "ம்.. சரி, வெள்ளக்காரன கூட்டிட்டு வரச்சொல்லி உங்கிட்ட சொன்னது யாரு.?" விஜய்
"சார்.. அது.. அது.." எதிர்பாரா கேள்வியால் துவண்ட சுலைமான் தயக்கத்தை பகிரங்கமாக வெளிக்காட்டினான்..
"ம்.. சொல்லு சுலைமான்..!" விஜய்
"சார், அது..." என சுலைமான் தொடங்க...
இரவு மணி 11..
"ஹலோ.." என்றார் செல்ஃபோனை எடுத்தார் ஏட்டு பழனிச்சாமி, சென்ற அத்தியாயத்தில் காத்தவராயன் நகரில் ஒரு பெண்மணியை விசாரித்தாரே அவரேதான்..
"ஹலோ, சார் நான் காத்தவராயன் நகர்ல இருந்து பேசறேன் சார், எம்பேரு சேகர் சார். கால் டாக்ஸி ஓட்றேன், நேத்து நீங்க வந்து ரவிங்க்றவர பத்தி விசாரிட்டு போனதா எம் மிஸ்ஸஸ் சொன்னாங்க சார்.." சேகர்
"ம்.. ஞாபகம் இருக்கு, என்ன விஷயம் சொல்லுங்க.?" பழனிச்சாமி
"நான் இப்பதான் 8 மணிக்கு சவாரியை முடிச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்தேன் சார், சாப்பிட்டுட்டு கரண்டு இல்லாததால வெளியில உட்கார்ந்திருந்தேன் சார். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பக்கத்து வீட்டுல குடியிருக்க ரவி வந்தாரு சார். உடனே எம் மிஸ்ஸஸ் "ஏங்க இவரு வந்தா உடனே ஃபோன் செய்ய சொல்லி போலீஸ்காரர் ஒருத்தரு நம்பர் குடுத்தாருங்க"னு சொன்னா சார். நானும் அந்த ஆளுட்ட போயி இதச்சொல்ல, உடனே பலமா யோசிச்சிக்கிட்டு "தேங்க்ஸ்ங்க, நான் ஃபோன் செஞ்சிக்கிறேன்"னு சொல்லிட்டே ஃபோன எடுத்து காதுல வச்சிக்கிட்டு பேசற மாதிரியே கதவ தெறந்து வீட்டுக்குள்ள போனாருங்க சார். ஒரு அஞ்சு நிமிசங் கழிச்சு எதையோ எடுத்துக்கிட்டு வேக வேகமா கௌம்பிட்டாருங்க சார்.! எனக்கு சரியாப்படாததால ஒங்களுக்கு உடனே ஃபோன் செஞ்சேன் சார்.." சேகர்
"ஆளு கௌம்பி எவ்வளவு நேரமாச்சி..?" என்றார் பழனிச்சாமி பதட்டத்துடன்
"இப்ப அஞ்சு நிமிசங்கூட இல்ல சார்.." சேகர்
"எதுல போனார், எந்த பக்கம் போனார்னு தெரியுமா.?" பழனிச்சாமி
"பைக்லதான் சார், போனத பாத்தா பைபாஸ் ரோட்டு பக்கம் மாதிரிதான் இருந்தது சார்..!" சேகர்

"ரொம்ப தேங்க்ஸ்பா.." பதில் தேங்க்ஸிற்கு காத்திராமல், உடனடியாக யாருக்கோ ஃபோன் செய்தார் படு சுறுசுறுப்பாக..
Image may contain: one or more people

வீடியோ கான்ஃபரன்ஸில் உயரதிகாரிகள் மற்றும் டிஜிபி மட்டுமே கலந்துகொண்ட ஹைலி_கான்ஃபிடன்ஷியல் உரையாடல்.!
"சொல்லு.. எப்படி இத செஞ்ச.?, எதுனால இத செஞ்ச.? நீ சொல்லாமலே, எல்லாத்தையுமே தெரிஞ்சு உன்ன தூக்க முடிஞ்ச எங்களுக்கு உன்ன பேசவைக்கறது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை.!" விஜய்
சொல்லு என கட்டளையிடப்பட்டவன் ஒரு சேரில் அமர்ந்திருந்தான். 95 கிலோ எடை இருக்கலாம்., உயரம் 5.3 அடி., பொருந்தாத பேன்ட்ஸ் சர்ட் அணிந்திருந்தான். அவனை ஓர் அவுட் லைனாக அப்படியே வரைந்தால் காட்டெருமை போன்று இருப்பான். கண்களில் பயம் தெரிந்தது, நிறைய களைத்திருந்தான், ஆங்காங்கே அடிவாங்கிய இடங்கள் தங்களை "இங்க பாருங்க சார், இந்த போலீஸ்காரங்க அடிச்சதுனால பெறந்துருக்கோம்.." என்று புலம்பியதுபோல புடைப்புகள் பூத்திருந்தன., உதடுகளும் ரத்தத்தால் நனைந்திருந்தன.
சிறிது நேரம் அமைதி காத்தான் அவன். எச்சிலை விழுங்க சிரமப்பட்டான், தண்ணீர் குவளையை கண்களால் பார்க்க, தண்ணீர் குவளை நகர்த்தப்பட்டது. கஷ்டப்பட்டு தண்ணீரை பருகி முடிக்க, பரிதாபமாக ஒரு பார்வையை வெளிப்படுத்தினான் அவன்.
"சரி.. சொல்லு.." என்றான் விஜய் இம்முறை டெஸிபலை கூட்டி..
சில வினாடிகளுக்கு பின் டெட் ஸ்லோவாக வாயானது திறக்க அதில் தமிழ் வார்த்தைகள் ஓடி வந்து விழ ஆரம்பித்தன.. "சார், நான்... நான்.. இத காசுக்காக மட்டும் செய்யல சார் என் உயிர காப்பாத்திக்கவும்தான் செஞ்சேன்.! வேணும்னே பண்ணல சார், என்ன காப்பாத்திக்கத்தான் இப்படி செய்ய வேண்டியதா போச்சுங்க சார்." காட்டெருமை
"ம்.. அது அப்புறம் முடிவு செஞ்சிக்கலாம்., நீ மேல சொல்லு எதாவது பொய் சொன்னன்னு தெரிஞ்சிச்சு உறிச்சிருவேன்..!" விஜய்
"இல்ல சார் நா எல்லாத்தையுமே சொல்லிர்றேன் சார். ஒரு வருசமா பக்கத்து வீட்ல குடியிருந்தாலும் அவ்வளவாக பேசிக்கிற மாட்டம், ஆனா ஒருநாள் நைட் சோ சினிமா பாக்க போனப்ப ரெண்டு பேரும் பாத்து பேசிக்கிட்டோம் சார். அதுக்கப்புறம் எதாவது லீவ்னா அப்டியே ஜாலியா காரை எடுத்துக்கிட்டு தேவையானத வாங்கிக்கிட்டு எங்கயாவது போவோம் சார், அதனால எங்களுக்குள்ள ஒரு ஃப்ரண்ட்ஷிப் உருவாச்சு ஆனா வீட்லதெரியாம பாத்துக்கிட்டோம் சார். இப்படியே போக ஒருநாளு அவன் ஃப்ரண்ட் ஒருத்தனுக்காக மதுர வரைக்கும் போகணும்னு சொல்லி நானு, அவன் அப்புறம் அவனோட ஃப்ரண்ட்னு மூணு பேரும் கார்ல போனோம் சார். சரி ஜாலியா போய்ட்டு வரலாமேனு போனே சார், மதுரைக்கு முன்னாடி மேலூர்ங்க்ற ஊருக்கு கொஞ்ச தள்ளியிருக்க பிரான்மலைங்கற மலப்பக்கம் கார்ல போனோம்., மலய ஒட்டியிருந்த ஒரு எடத்துல கார நிப்பாட்டிட்டு என்னை மட்டும் கார்லயே இருக்க சொல்லிட்டு ரெண்டு பேருமே மலப்பக்கம் போனாங்க சார்., சரி நானும் கார்லயே உக்காந்துட்டே தூங்கிட்டேன் சார். அப்ப திடீர்னு கார் கதவ திறக்கற சத்தங்கேட்டு முழிச்சிக்கிட்டேன் சார். அவன் மட்டுந்தான் சார் வந்தான் அவங்கூட வந்த அவன் ஃப்ரண்ட காணாம் சார்., நா எங்கங்க அவருன்னு கேக்க பதுலுக்கு அவன் "அவரு வரல, நாம போலாம்னு.." சொன்னாஞ்சார். என்னாச்சுங்க., ஏன் வரலன்னு மறுபடியுங் கேட்டதுக்கு அவன் "அவரு மல மேல இருக்க சாமியாரு யாரையோ பாக்கணும்னு போய்ருக்காரு, சாமியார பாக்காம வரமாட்டேன் சொன்னதால, சரி நாம போலாம்னு வந்துட்டேன்னு சொன்னாஞ்சார்.." என்று காட்டெருமையானவன் நிறுத்த, மீண்டும் தண்ணீரை பருகிவிட்டு தொடர்ந்தான்.
டிஜிபி, விஜய் உட்பட அனைத்து அதிகாரிகளும் கூர்மையாக கவனித்தவாறே இருக்க, காட்டெருமையானவன் தொடர்ந்தான்..
"போலாம்னு அவஞ் சொன்னப்பறம் நானும் கௌம்பலாம்னு முடிவெடுத்து கௌம்பினோம் சார். இந்த தடவ வண்டி உசிலம்பட்டி பக்கம் போச்சு சார் இங்க எதுக்குங்கனு கேட்டா, "ஒரு சின்ன வேல இருக்கு அத முடிச்சிக்கிட்டு போலாம்னான்" சார். சரினு போனேன் சார்., உசிலம்பட்டி தாண்டி பக்கத்துல பெருமாள் மலன்னு ஒரு மலய ஒட்டி நிறுத்த சொல்லிட்டு "வந்தது வந்தோம், அப்டியே இந்த மல மேல இருக்க சாமிய வேண்டிக்கிட்டா வேண்டுனது நடக்கும்னு" அவன் சொல்ல மல மேல போணோம் சார். மல மேல போயி சாமிய கும்பிட்டு ஒக்காந்தோம் சார். கொஞ்ச நேரம் அப்டி, இப்டினு எதஎதையோ பேசினான் சார் அப்பறம் கடசியா "நம்ம கூட வந்தவரு என்ன ஆனருன்னு தெரியுமான்னு" கேட்டான் சார். நானும் என்ன ஆனாருன்னு கேட்டேன் சார், அதுக்கு அவன் "அவன் இந்நேரம் சொர்கத்துல இருப்பான்னு.." சொன்ன உடனே எனக்கு பயமா போச்சுங்க சார். என்ன செஞ்சனு கேட்டதுக்கு "அவன் என்ன ஏமாத்த பாத்தான் பதுலுக்கு நா அவன ஏமாத்தி பரலோகத்துக்கு அனுப்புச்சிட்டேன்னு" சொன்னாான். நான் பயத்தல எதுக்குங்கனு கேட்க அவன் "கார்ல இருக்கே பெட்டி அதுல 15 லட்ச ரூவா பணம் இருக்கு, அத நானே வச்சுக்கதான்னு.." சொன்னான் சார். எனக்கு பயமாப் போச்சு சார், யாராவது கண்டு பிடிச்சிட்டா மாட்டிக்குவயில்லனு சொன்னேன் மறுபடியும் அவன் "வந்தவன் வடக்க இருந்து வந்தவன், இங்க அவன் வரது யாருக்குமே தெரியாது, அதுனால யாரும் கண்டுபிடிக்க முடியாதுனு" சொல்லிட்டு "நீ சொன்னாதான் கண்டுபிடிக்க முடியும்னு.." சொன்னான் சார். நான்ல காட்டி குடுக்க மாட்டேன்னு சொன்னதுக்கு, காட்டிக் குடுத்தா நீயுந்தான் மாட்டுவன்னு.." பயமுறுத்தி "காட்டிக் குடுக்காம இருக்க ஒனக்கும் கொஞ்சம் பங்கு தர்றேன்னு.." சொன்னான் சார்..!" காட்டெருமை
"ம்.. மேல சொல்லு.." விஜய்
"எனக்கு பணமெல்லாம் வேணாம் நா ஒன்ன காட்டிக் குடுக்க மாட்டேன் சொல்ல, அவன் சிரிச்சிக்கிட்டே "ஒன்னு பணத்த வாங்கிக்க இல்ல அவெ போன எடத்துக்கே ஒன்னயும் அனுப்பிருவேன்னு.." சொன்னான். எனக்கு பயமாப்போச்சி, என்ன பண்றதுன்னே தெரியல.! அப்ப அவன் "இல்ல ஒன்ன விட்டா நா மாட்டிக்குவேன், அதுனால ஒன்னய முடிச்சிட்டா பிரச்சனை இல்லைனு.." சொல்லிட்டே இடுப்புல இருந்து கத்திய உருவுனான் சார்.! நா பயத்துல ஓட ஆரம்பிக்க அவனும் விடாம தொரத்த ஒரு எடத்துல அவனோட கால் எடறி கீழ விழ, நா அவன அமுக்கி சண்ட போட ஆரம்பிச்சதுல அவன் என் பலத்துக்கு ஈடு குடுக்க முடியாம பின்னந்தலைலல அடிபட்டு மயக்கமாய்ட்டான் சார்.! நா என்ன பண்றதுன்னு தெரியாம இவன விட்டா நம்மள கொல்லாம விடமாட்டான் தெரிஞ்சு, அங்க இருந்த சின்ன பாறைக்கல்ல தூக்கி அவந் தலமேல மூணு தடவ போட்டேன் சார்.! அவஞ் செத்துட்டான்னதும் அவன் பர்ஸ், செய்னு, கர்சீப்னு ஒன்னு விடாம எடுத்துட்டு கல்ல தூக்கி மலயிலிருந்து கீழ எறிஞ்சுட்டேன் சார்.! அப்புறம் உங்க கிட்ட மாட்டிக்கிட்டேன் சார்.." என்றான் காட்டெருமை
"இதுல எதுவும் பொய் கலப்பில்லயே.?" விஜய்
"சத்தியமா இல்ல சார்..!" காட்டெருமை
"அந்த பணம்.?" விஜய்
"என் வீட்ல தண்ணி சம்ப்புக்குள்ள இருக்கு சார்..!" காட்டெருமை
"சரி.. நீ எப்புடி மாட்னன்னு தெரியுமா #சேகர்.?" விஜய்
கால் டாக்ஸி டிரைவரான சேகர் தெரியாது என்பது போல முழிக்க..
மேற்கொண்டு விஜய் வீடியோ கான்ஃபரன்ஸில் டிஜிபியிடம் விளக்கத்தை தர தொடங்கினான்.. "சார் பெருமாள் மலை கொலை வழக்கில எனக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த கொலை மற்ற மலைகளான கல்யாணி மலை, திடியன் மலை, பொட்டல் மலை கேஸ்கள்ல இருந்து மாறுபட்டதுன்னு நெனச்சேன். காரணம் இந்த ரெண்டு வழக்குலயும் இருக்க முக்கியமான விஷயம் இருக்கு.! சோ, பெருமாள் மலை கொலைக்கான காரணத்தை முதல்ல முடிக்கணும்னு தனிப்படையில ஒரு படையை வேலூர்க்கு அனுப்பினேன், ரிசல்ட்டும் கெடச்சது.!" விஜய்
"சேகர்தான் கொலைகாரன்னு எப்டி கண்டுபுடிச்சீங்க விஜய்.? அது மத்த மலைகள் விஷயத்துல இருந்து எப்படி மாறுச்சு.?" டிஜிபி
விஜய் விளக்க துவங்க..

Image may contain: 1 person

விஜய் தனது விளக்கத்தை கூறத் தொடங்கினான். "சார், இந்த பெருமாள் மலை கேஸ்ல எனக்கு துவக்கத்துல வந்த சந்தேகம் என்னன்னா, பெருமாள் மலையில் ரவியோட பாடியை போஸ்ட் மார்ட்டம் செஞ்ச பின்னாடி ரவி இறந்த நேரம் தோராயமா நைட் பத்துல இருந்து பதினோறு மணியாக இருக்க வாய்ப்புண்டுங்கற தகவலும், ஆனா மத்த மலைகள்ல கெடச்ச கைகளும், காலும் இறந்த போன உடல்ல இருந்து கூர்மையான ஆக்ஸா பிளேடால வெட்டி உடல்ல இருந்து பிரிச்சிருக்காங்க.! அநேகமாக மெஷினா இருக்கணும், அப்புறம் அந்த கைகளும், காலும் டிகம்போஸ் ஆகாம இருக்க எம்பாமிங் செஞ்சிருக்காங்க, எம்பாமிங் செஞ்ச உறுப்புகளை பயாப்ஸி செஞ்சதுல அந்த உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியிருக்கலாம்ங்கறதுதான் ரிப்போர்ட்.!" என்றான் விஜய்.
உயரதிகாரிகள் அனைவரும் கூர்மையாக கவனிக்க, விஜய் அவர்களின் ஐயங்களை எதிர்பார்த்ததுதான் என்பதுபோல தலையை லைட்டாக ஆட்டிக்கொண்டே, "ரவியோட பாடிய இறந்த 9 மணி நேரத்துக்குள்ள கண்டுபிடிச்சதுனாலயும், கொலை செஞ்ச மெத்தெட வச்சு பாத்தப்ப இது ஓர் அமெச்சர் கொலைங்கறத தெரிஞ்சுகிட்டேன். கொல்லப்பட்டவர் யாருன்னு தெரியக்கூடாதுங்கறதுக்காகவே முகத்துல கல்ல தூக்கிப்போட்டு அடயாளத்த அழிச்சிருக்கான் கொலைகாரன்னும், பர்ஸ், கர்சீஃப் இவைகளையும் எடுத்துட்டு போனான் சேகர்.! சேகர், இத பெர்ஃபெக்டா செய்றவனாயிருந்தா ரவியை முகத்தை நசுக்கிட்டு மலையிலயிருந்து பாடிய வீசி எறிஞ்சி இத தற்கொலை மாதிரி காட்டியிருக்கணும்.! ஆனா சேகர் இதை செய்யாததால இந்த கொலை அமெச்சூராலதான்ங்கற முடிவை ஸ்ட்ராங்கா எடுக்க காரணமாச்சு.." இடையில் சற்று நிறுத்தினான் விஜய்.
"இறந்தது ரவின்னும், கொலை செஞ்சது சேகர்னும் எப்படி ஐடன்டிஃபை செஞ்சீங்க விஜய்.?" என்றார் டிஜிபி ராஜேஸ்தாஸ்.
"இங்கதான் நமக்கு நம்ம போலீஸ் சைலன்ட் விட்னஸ் சொல்ற ஒரு லீட் கெடச்சது. போஸ்ட்மார்ட்டத்துல ரவியோட இரைப்பைல ஒரு சின்ன #பித்தளை_பட்டன் கெடச்சதுங்கற விஷயத்த போஸ்ட்மார்ட்டம் செஞ்ச டாக்டர் எங்கிட்ட தனியா சொன்னார். எங்கிட்ட டாக்டர் தனியா சொல்ல காரணம் டிஜிபியான உங்க உத்தரவுதான்ங்கறது இங்க யாருக்கும் தெரியாது.!" என்றான் விஜய்.
டிஜிபி சிறிய புன்னகையுடன் அதை ஆமோதிக்க, விஜய் மீண்டும் தொடர்ந்தான். "இந்த கேஸ்ல டிஜிபி சார் ஏன் இவ்வளவு ஈடுபாடு காட்டுறார்ங்கற காரணத்தை இப்ப சொல்றதவிட கடைசியா சொன்னா சரியா இருக்கும்.! போஸ்ட்மார்ட்டம் செஞ்சதுல கெடச்ச பித்தளை பட்டன்ல JTTனு ஒரு சிம்பல் இருந்தது. இந்த பட்டன் ரவிக்கும், சேகருக்கும் இடையில நடந்த சண்டைல தன்னால சேகர ஜெயிக்க முடியாதுங்கற விசயத்த புரிஞ்சிக்கிட்ட ரவி காரணம் சேகர், ரவியவிட பலசாலிங்கறதால எப்டியாவது சேகர காட்டிக்கொடுக்க மேற்கொண்ட முயற்சிதான் இந்த பித்தளை பட்டனை முழுங்குனது.! இதெல்லாம் யூகம்தான் ஆனால், சாத்தியம் அதிகமான யூகம், சேகரோட ஸ்டேட்மென்ட்ட கம்பேர் பண்ணா இத ஈசியா புரிஞ்சிக்கலாம்.!" என்று நிறுத்தினான் விஜய்.
"அந்த பட்டன வச்சு எப்டி சேகர டிரேஸ் பண்ணுனீங்க விஜய்.?" என்றார் டிஐஜி மாணிக்கம்.
"JTTனு சிம்பல முதல்ல பாத்தப்ப ஒன்னும் புரியலதான் ஆனால், இது நிச்சயம் கம்பெனியாகவோ, நிறுவனமாகவோ இல்லை ஹோட்டலாகவோ இருக்க வாய்ப்பிருந்ததா நெனச்சு, நெட்ல சர்ச் செஞ்சோம். அது பல விசயங்களை காமிச்சதுல ங்கற இது மூணு நிறுவனங்கள #JAIN_TEA_TRADERS#JAYAM_TOURS_#TRAVELS#JOHN_TURMERIC_TRADE னு காட்டியதுல ரொம்ப சாத்தியமான ஒன்னான ஜெயம் டூர்ஸ் அன் டிராவல்ஸ்ங்கற தகவல் மேட்சாச்சு., ஏன்னா இதுதான் தமிழ்நாட்ல இருந்துச்சு.! இந்த டிராவல்ஸ் கம்பெனி செல்வம்ங்கறவரால வேலூர்ல ரன்னாயிட்டு வருது., அவருகிட்ட இந்த பட்டன படத்த வாட்ஸ்அப்ல அனுப்பி கேட்துக்கு, அது அவரோட கம்பெனி டிரைவர்களுக்கு யூனிஃபார்மா கொடுத்ததுனு சொன்னார்.! சரி அந்த பட்டன் எந்த டிரைவருக்கு சொந்தமான யூனிஃபார்ம்க்கு சம்பந்தமானதுன்னு கண்டுபிடிக்க, எந்த டிரைவராவது கார் மதுரை பக்கம் வாடகைக்கு போகுதுன்னு கம்பெனிக்கு தகவல் சொன்னாங்களானு பாக்க சொன்னதுல, சேகர் முன்னாடி வந்து நிக்கிறான்.!" என்று நீண்ட சொற்பொழிவை நிறுத்தினான் விஜய்.
ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் பிரமிக்க, விஜய் அதை கண்டுகொள்ளாமல் மீ்ண்டும் தொடர எத்தனித்தான். "கார மதுரை வாடகைன்னு உண்மைய சொல்லிட்டு எடுத்துட்டு வந்ததுல, சேகர் இந்த கொலைய எதிர்பாக்கலங்கறது ஊர்ஜிதமும் ஆச்சு. கார எடுத்துக்கிட்டு வழியில ரவியாேட இன்னொரு நார்த் இண்டியனையும் பிக்கப் செஞ்சுக்கிட்டு வழியில டோல்கேட்கள், பெட்ரோல் பங்க் இங்கயெல்லாம் நிற்க வேண்டிய சூழ்நிலையில அங்க இருந்த சிசிடிவிகள்ல சேகரோட முகமும், ரவியோட முகமும் நல்லாவே பதிஞ்சிருக்கு.! இப்பெல்லாம் கேஸ்கள்ல சிசிடிவி ஹெல்ப் அவசியமான ஒன்னா போச்சு..! அப்புறம் இதெல்லாம் நம்ம தனிப்படைல ஒன்னான முரளி சாரும், அவரோட டீமும் செஞ்ச பெர்ஃபெக்டான வேலை. கன்கிராட்ஸ் உங்களுக்கும், உங்க டீமுக்கும் முரளி சார் அன் யூ டிட் கிரேட்.! தேங்க்யூ.!" விஜய்.
மேற்கொண்டு விஜய் தொடர முயல, அதே சமயம் #ஜம்போமியா_நாடு ஐரோப்பாவில் உக்ரைனிற்கு அருகாமையான நாடு.!
மிகவும் உயதிகாரிகளை போல காணப்படும் பத்துபேர்களும், நடுவாக தலைவரைப் போன்று காணப்பட்ட ஒருவர், (நம் வசதிக்காக தமிழில் தவிர எனக்கும் ஜம்போமியா லாங்வேஜ் தெரியாததால்..) "இந்தியாவில் நடக்குற விஷயங்கள் நமக்கு சாதகமாக இல்லைங்கறதவிட, நமக்கு பாதகமாகவே போகுது.! இது இப்படியே போகக்கூடாதுன்னு நாம அனுப்புன #ரோட்ரிக்ஸ்என்ன ஆனான்னும் தெரியல., இப்ப என்ன செய்யலாம்.?" என்று தனது குழுவிடம் சொல்ல, குழவினரும் வாயை திறக்க...
Image may contain: 1 person, smiling


அந்த உயரதிகாரிகளை போன்ற நபர்களின் சந்திப்பு என்னவோ மிகவும் ரகசியமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. பத்து பேர் வரையான அந்த குழுவில் நடுவில் அமர்ந்திருந்தவர் பேசத் துவங்க, குழு அமைதியாக ஆனால், கூர்மையாக கவனிக்க துவங்கியது.
"ரோட்ரிக்ஸ இந்தியாவுக்கு அனுப்பிச்சு 10 நாளாச்சு, ரோட்ரிக்ஸ இல்லீகலாதான் இந்தியாவில நுழைய சொன்னோம், ஏன்னா, நம்ம வேலை அப்படி.! நாம மேற்கொண்ட இந்த வேலை வெளிய வந்தா, இதுவரைக்கும் நம்ம நம்பிக்கிட்டு இருந்த அத்தனை நாடுகளும் நம்ம விரோதியாகதான் பார்க்கும், பார்த்தாகணும்.! என்ன பிரச்சனன்னு ஒங்க எல்லாருக்குமே தெரியும்., இந்த பிரச்சனைகளை தீர்க்கதான் ரோட்ரிக்ஸ இந்தியாவுக்கு இல்லீகலா அனுப்பிச்சோம், அவனும் இலங்கை வழியா, இந்தியாவில, தமிழ்நாடுங்கற ஸ்டேட்க்குள்ள கடல் வழியா போட்ல கீ்ழக்கரைங்க ஊர்ல ஊடுருவி நுழைஞ்சதாக சேட்டிலைட் ஃபோன் மூலமா நமக்கு தகவல் அனுப்பிச்சான், அதுக்கப்புறம் மூணு மணிநேரத்துக்கு பின்னால அவனோட நமக்கிருந்த தொடர்பு அறுந்தும்போச்சி.!" என்றார்.
"ஏதாவது பிரச்சனையாக இருக்கலாமோ.?" என்றார் மற்றொருவர்.
"பிரச்சனையா, இல்லையாங்கறது கூட நமக்கு தெரியலயே.? இந்தியாவில நடக்கிற நியூஸ்களை உன்னிப்பா பாத்துட்டுதானே இருக்கேன்., அதுல இருந்து இதுவரைக்கும் ரோட்ரிக்ஸ பத்தியோ இல்லை நம்மோட விஷயத்த பத்தியோ எந்த விஷயமும் வரலங்கறதுதான் உண்மை, இதத்தவிர வேறொன்னும் புடிபடல.! ரோட்ரிக்ஸ பத்தி தெரிஞ்சிக்க, நாம எம்பஸி மூலமா முயற்சி செஞ்சா, ரோட்ரிக்ஸ் யாரு, அவன் எப்படி இந்தியாவுக்குள்ள நுழைஞ்சான் அப்டின்னு, எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கற பழமொழிக்கு உதாரணமாக போய்ருவோம். இப்ப இந்தியாவில என்ன நடக்குதுன்னு எப்டி தெரிஞ்சிக்கலாம்.? ரோட்ரிக்ஸ் மாதிரியே இன்னொருத்தன அனுப்புனா, ரோட்ரிக்ஸ் மாதிரியே அவனுக்கும் ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றதுங்கறதுதான் இப்ப பிரச்சனையே..!" என்றார்.
"அப்ப இந்த தடவ ஒரு குழுவை, இந்தியாவுக்கு அனுப்பி பாக்கலாமா.?" என்றார் இன்னொருவர்.
"அது ரிஸ்க்,! காரணம் ரோட்ரிக்ஸ மோப்பம் புடிச்சிருந்தாங்கன்னா அடுத்து என்னா நடக்குங்கறத கெஸ் பண்ணி நம்ம வரவுக்காக காத்திருந்தாங்கன்னா.? இந்த 15 மாதங்களா நம்ம திட்டத்துல 6 திட்டங்கள்ல, 6 ஃபெய்லியர்.! இதுதான் நாம முழிச்சிக்க காரணம்.! இந்த ஃபெய்லியர்கள் எதேச்சையானதா இல்ல திட்டமிட்டான்னு தெரியல., நாம முழிச்சிக்கிட்டமா இல்ல இந்தியா முழிச்சிக்கிச்சான்னு தெரியல.?" என்றார் தலைவரைப் போன்றவர்.
"இந்தியா முழிச்சிக்கிட்டா நம்ம நிலைமை என்னாகும் தெரியுமா.?" என்றார் இன்னொருவர்.
"முழிச்சிக்கிட்டான்னு டவுட் இல்லாம, இந்தியா முழிச்சிருந்து, நமக்காக காத்திருந்தான்னும் யோசிக்கலாமில்ல.? ஏன்னா இந்தியாவ கொறச்சி எட போடக்கூடாது.! நான் சொல்றது சரிதான மிஸ்டர்.ஜொனாத்தன்.?" என்றார் வேறொருவர்.
"அதுக்குதான் ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.!" என்றார் கவலையுடன் ஜொனாத்தன் என்ற பெயருடைய தலைவர்.
விஜய் மதுரை சரக டிஐஜி அலுவலகத்தில், தனது விளக்கத்தை தொடர்ந்தான்.. "முதல்ல சேகர எப்டி கார்னர் செஞ்சேன்னு சொல்ல வேண்டியது கட்டாயம். பிரச்சனை வரப்போகுதுன்னு தெரியாம சேகர், யாருக்கு சவாரின்னு சொல்லாம பொதுவா வாடகைன்னு சொல்லிட்டு கார வாடகைக்கு எடுத்துட்டு வரச்சொன்னதே ரவிதான்.! ரவி சொன்னதால சேகரும் கார மதுரை வாடகைன்னு பொதுவா சொல்லிட்டு காரோட கௌம்பியிருக்க, வேலூர் பைபாஸ்ல நின்ன ரவிய பிக்கப் செஞ்சிட்டு மதுர ரோட்ல போயிருக்காங்க.! இடையில திருச்சில ஒரு ஃப்ரண்டுன ஒரு வடநாட்டுக்காரனயும் கார்ல ஏத்திக்கிட்டான் ரவி. கார்ல ரெண்டு பேரும் பேசிட்டே வர இடையில மேலூர்ல இருக்க பிரான்மலை கிட்ட வண்டிய நிறுத்திட்டு ரவியும், வடஇந்தியனும் இறங்கி மலைப்பக்கம் போயி, ரெண்டு, மூனு மணிநேரம் கழிச்சு ரவி மட்டும் வர, சேகர் வடஇந்தியன் எங்கன்னு கேட்க ரவி அவன் மலைல இருக்க சித்தர பாக்க போனதா சொல்லி வர லேட்டாகும்னு சொல்லிட்டு கார உசிலம்பட்டி பக்கம் இருக்க பெருமாள் மலைக்கு ஓட்ட சொல்லி அதுக்கப்புறம் பெருமாள் மலைல என்ன நடந்ததுதான் எல்லோருக்கும் தெரியுமே.!" என்றான் விஜய்.
"அந்த வடஇந்தியன் யாரு., அவன் என்ன ஆனான்.?" டிஎஸ்பி ஒருவர்.
"மேலூர், பிரான்மலைக்கு அடிவாரத்துல ஆள் நடமாட்டமில்லாத ஒரு பாழுங்கெணத்துல, உடல்ல கத்தியால குத்தப்பட்ட காயங்களோட பொணமா மீட்டோம் சார்.! இத செஞ்சதும் நம்ம இன்ஸ்பெக்டர் முரளி சார் டீம்தான்.." என்றான் விஜய்.
"அவன ரவி ஏன் கொல செஞ்சான்.?" டிஐஜி மாணிக்கம்..
விஜய் மீண்டும் விளக்கமாக கூற துவங்கினான்..
Image may contain: 2 people, text

டிஐஜி மாணிக்கத்தின் கேள்விக்கு விஜய் பதிலளிக்க துவங்கினான். "ரவி வேலூர்ல, ரவி டிராவல் ஏஜென்சினு ஒன்ன நடத்திட்டு வர்றது நம்ம எல்லாருக்கும் தெரியும்தான.?" விஜய் பதிலுக்காக புருவங்களை உயர்த்த, குழு மௌனமாக ஆமோதிக்க, விஜய் மீண்டும், "ரவி நடத்திட்டு வந்த ஏஜென்சி மூலம் ஆரம்பத்துல நல்லா போன ஏஜென்சி போட்டிகளால வருமானப் பற்றாக்குறை ஏற்பட, அதனால வரவுக்கும், செலவுக்கும் சரியாகப்போக ஏஜென்சிய தொத்தான்.. தொத்தான்னு ஓட்டிட்டு வந்திருக்கான். இந்த சமயத்துல வடநாட்ல ரன்னாகுற ஹவாலா கோஷ்டிகள்ல ஒன்னான முன்னாங்கறவன்கிட்ட குருவியா வேல பாக்குற ஓம்பிரகாஷ்கறவன் ரவிய சந்திச்சிருக்கான். ரவிக்கிட்ட பண ஆசையைக் காட்டி தன்னோட குருவி வேலைக்கு சின்னக்குருவியா ரவிய யூஸ் பண்ண ஆரம்பிச்சான்.! ரவியும் வேற வழியில்லாம கமிஷன் பணத்துக்காக ஓம்பிரகாஷோட ஹவாலா வேலைகள்ல ஈடுபட ஆரம்பிச்சான்.! வெளிநாட்டுல இருந்து வர்ற உத்தரவுகளுக்கு ஏற்ப இங்க இந்திய பணத்த கைமாத்தி விடற வேலய முன்னா நெறய பேரு வச்சு மும்பைல செஞ்சுட்டு வந்துருக்கான்., இவனோட குரூப்ல ஒருத்தனான ஓம்பிரகாஷ், முதல்ல முன்னாகிட்ட விசுவாசமாத்தான் இருந்தான், ஆனா ஒரு தடவ ஹவாலா மூலமா வந்த 20 லட்ச ரூபா பணத்த, குருவியா போயி வேலூர்ல சேர்க்க வேண்டிய இடத்தில சேர்க்காம, அந்த பணத்த தானே வச்சிக்க ஆசைப்பட்டிருக்கான்.!" என்ற விஜய் சற்று வேகத்தை குறைத்தான்.
குழு "இவன் வேற இடைஇடையே நிறுத்திக்கிட்டு, வேகமாக சொல்றானா பாரு.." என மனதில் நினைக்கவே துவங்கியிருக்கும்..
"20 லட்ச ரூபாய் பணத்தோட தமிழ்நாட்டுல வேலூர்க்கு வந்த ஓம்பிரகாஷ் ரவிக்கிட்ட பணத்த குடுத்து வச்சிட்டு, ஹோட்டல்ல தங்கியிருக்கான். அப்பத்தான் வேலூர்ல திடீர்னு நிறுத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தல், உடனடியாக நடத்தப்பட இருப்பதா தேதிய அறிவிச்சது தேர்தல் கமிஷன். இந்த சமயத்துல தேர்தல் பறக்கும்படை செயல்பட பணத்த உரியவர்ட்ட ஒப்படைக்க ரொம்ப கஷ்டமாப்போச்சு ஓம்பிரகாஷ்க்கு. பறக்கும்படை அங்க பணம், இங்க பணம்னு பிடிக்க ஆரம்பிக்க, ஒருநாள் நைட் பறக்கும்படை வேறொரு குரூப்பின் 20 லட்சம் ரூபாயை காருடன் கைப்பற்றியதாகவும், ஆசாமிகள் தப்பிவிட்டதாகவும் செய்திகள் வர இந்த சமயத்துலதான் ஓம்பிரகாஷ் க்ரிமினலா யோசிச்சிருக்கான்., பணத்த அமுக்கிட்டு பழியை பறக்கும்படை மேல போட்டா என்னான்னு.! ரவிக்கிட்ட சொல்லாம பணம் பறக்கும்படை பிடிச்சிருச்சுன்னு முன்னாக்கிட்ட அடிச்சிவிட்டான். முன்னா அத நம்பற மாதிரி வேலூர்ல காரோட 20 லட்ச ரூப் பணத்தவிட்டுட்டு ஓடிப்போன வேறொரு கும்பல் பணத்த ஓம்பிரகாஷ் அது தான் வந்த கார்தான் என்று கூற, பேப்பரில் வந்த செய்தியை பார்க்க, ஒருவாறா அமைதியானானன் முன்னா.! பொதுவா ஹவாலா பணம் மட்டிக்கிச்சுன்னா அந்த கும்பல் அமைதியாயிரும்., தேவையில்லாம புகார் கொடுத்து ஒட்டுமொத்த கும்பலும் மாட்டாம தப்பிக்க, இந்த பணம் போனா போகட்டும்னு விட்டுருவாங்க.! இதுதான் முன்னாக்கிட்ட தப்பிக்க ஓம்பிரகாஷ்க்கு மிகச்சரியான காரணமா அமைய, ரவிக்கிட்ட பெட்டியோட இருந்த பணத்தப்பத்தி மூச்சுவிடாம அமைதியாய்ட்டான்.!".
"அப்ப வேலூர்ல கைப்பத்துன 20 லட்ச ரூபா பணம் உண்மையிலேயே யாருது.?" அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்.
"அது ஒரு அரசியல்வாதியோட பணம்னு நாம உறுதி செஞ்சாச்சு, அப்புறம் அது வேற ட்ராக் நமக்கு சம்பந்தமில்லாதது. மும்பையில முன்னா அமைதியாக, பணத்த எடுக்க சரியான வாய்ப்புக்காக காத்துட்டு இருந்த ஓம்பிரகாஷ், கொஞ்ச நாளுக்கு முன்னாடி ரவிய பணம் இருக்குற பெட்டிய எடுத்துக்கிட்டு வாடகைக்கார் ஒன்ன பிடிச்சிக்கிட்டு மதுரைக்கு போகலாம்னு சொல்ல, ரவியும், சேகரோட வாடகைக்கார எடுத்துக்கிட்டு மூனு பேரும் மதுரைக்கு கௌம்புனாங்க. வழியில மேலூர், பிரான்மலைக்கிட்ட கார நிறுத்திட்டு, ரவியும், ஓம்பிரகாஷ்ம் பிரான்மலை மேல போக, சேகர் காரோட தூங்கிட்டான். கொஞ்ச நேரங்கழிச்சு ரவி மட்டும் வர, சேகர் வந்த ஓம்பிரகாஷ் எங்கன்னு கேக்க, அவன் மலைல இருக்க சித்தர பாக்க போய்ட்டதா சொல்லி, காரை பணம் இருக்குற பெட்டியோட எடுத்துக்கிட்டு, உசிலம்பட்டி பெருமாள் மலை பக்கம் போக, பெருமாள் மலை மேல ரவியும், சேகரும் பேசும்போது, ரவி தன்னோட வந்த ஓம்பிரகாஷை 20 லட்ச ஹவாலா பணத்துக்காக கொன்னுட்டதா சொல்லி, எங்க சேகரும் தன்ன காட்டிக்கொடுப்பானோன்னு பயந்து சேகர கொல்ல முயற்சி செய்ய, ரெண்டு பேரும் சண்ட போட்டதுல ரவிய, சேகர் கொன்னுட்டான்.!" என்றான் விஜய்.
"எல்லாம் சரி, ரவி ஏன் ஓம்பிரகாஷை கொல்லணும், பணத்த பார்ட்னர்ஷிப்பா பிரிச்சிருக்கலாமே.?" மாணிக்கம்.
"ரவியும், ஓம்பிரகாஷ்ம் பிரான்மலை பக்கம் போனப்புறம் அங்க இருந்த பாழடஞ்ச கெணத்துக்கிட்ட இருந்த மரத்துக்கடியில உட்காந்து ஓம்பிரகாஷ் நடந்த விஷயத்த பத்தி பேச, ரவி அப்டியே சந்தோசமாகி 20 லட்ச ரூபாய்ல பாதிப்பங்க கேக்க, ஓம்பிரகாஷ் மறுக்க சண்டை பெரிசாகி ரவி, ஓம்பிரகாஷை தான் வச்சிருந்த கத்தியால குத்தி கொண்ணுட்டு பாழடஞ்ச கெணத்துல ஓம்பிரகாஷோட பாடிய தூக்கிப்போட்டுட்டு வந்துட்டான். ஹவாலா ஆள்னால யாரும் தேடமாட்டங்கனு பாடிய கெணத்துல போாட்டிருக்கான் ரவி. இதெல்லாம் பெருமாள் மலைல ரவி, சேகர்கிட்ட சொன்னது.! மேற்கொண்டு பெருமாள் மலைல சேகருக்கும், ரவிக்கும் நடந்த சண்டைல சேகர் ரவிய தள்ள, ரவி பின்னந்தலைல அடிபட்டு சாக, என்ன செய்யறதுன்னு தெரியாத சேகர், ரவியோட முகத்த சிதச்சுட்டு கல்லை தூக்கி மலமேலருந்து தூக்கி எறிஞ்சிட்டு, கார எடுத்துக்கிட்டு திண்டுக்கல்ல ரெண்டு நாள் தங்கிட்டு அப்புறம் வேலூர் போயிருக்கான், நம்மக்கிட்ட மாட்டிக்கிட்டான்.! இது எனக்கு எப்படி தெரியும்னா, சேகர் நம்ம க்ரைம் டீமோட அன்பான விசாரனையில கொட்னது.!" என்றான் விஜய்.
"அந்த பணம்.?" மாணிக்கம்.
"சேகர் அத தன்னோட வீட்டு சம்ப்ல போட்டிருக்கான், நனையக்கூடாதுன்னு பிளாஸ்டிக் கேரிபைல கட்டி.!" விஜய்.
"சேகர், ரவிய கொன்னது தன்ன காப்பாத்திக்கதான்னு சொன்னீங்களே., அது.?" மற்றொரு அதிகாரி.
"தன்னைத்தாக்க முயற்சித்ததால்தான் ரவியை கொன்றதாக சொன்னான் சேகர். மேலும், காரை பொய்கூறாமல் மதுரை வாடகை என்றும் ஓனரிடம் கூறியே காரை மதுரைக்கு ஓட்டிவந்துள்ளான். ரவியுடன் வேறெந்த தகராறும் சேகருக்கு இல்லை., கொலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை., கொலையில் எந்தவொரு திட்டமிடலும் இல்லை ஏனென்றால், இக்கொலை ஓர் அமெச்சூர் கொலையே.! தவிர சேகர் மேல் எந்தவொரு பிளாக் மார்க்கும் இல்லை.." விஜய்.
"காரில் வந்தது, பெட்ரோல் பம்ப், டோல்கேட் சிசிடிவி தவிர இக்கொலையை சேகர்தான் செஞ்சிருப்பான்ங்கற முடிவுக்கு ஏன் வந்தீங்க.? அதே டிராவல்ஸ்ல வேல பாக்குற யாரோட பட்டனாக இருந்து அதாவது, இந்த கொலையை வேற யாராவது செய்ய சான்சஸ் நிறய இருந்தாலும், சேகர் தானே ரவியை கொன்றதாக ஒப்புக்கொண்டதால் வேறெந்த விசாரணையும் தேவைப்படாமல் போனது. இருந்தாலும் எப்படி சேகர டிரேஸ் செஞ்சீங்க மிஸ்டர் விஜய்.?" மாணிக்கம்.
"சிசிடிவி காட்சிகளை வெச்சு பாத்ததுல ரவி, ஓம்பிரகாஷ், சேகர் மூனு பேரும் மதுரை போனது உண்மைன்னு தெரிஞ்சதும், பட்டன் இருந்த சிம்பல வச்சு நம்ம தனிப்படை டீம்கள்ல ஒன்னான முரளி சார் டீமை வேலூர்க்கு அனுப்பினேன்., அவங்களும் அந்த வேலைய சிறப்பா செஞ்சாங்க.! நீங்க சொன்ன மாதிரி இது எம் பட்டன் இல்ல, எங் கம்பெனில வேற யாராவது செஞ்சிருக்கலாம்லன்னு சொல்ல முடியும். அந்த சான்ஸ யோசிச்ச உடனே, நம்ம வேலூர் ஏட்டு பழனிச்சாமிய அனுப்பி ரவிய விசாரிக்கற மாதிரி விசாரிச்சு, சேகர் வீட்டுல இருக்கானா இல்ல வெளிய தங்கிட்டானான்னு கண்டுபிடிச்சோம். சேகரோட பொண்டாட்டிக்கிட்ட பழனிச்சாமி சார் தன்னோட ஃபோன் நம்பர குடுத்துட்டு வந்ததே நாங்க விரிச்ச வலைதான்.! எதிர்பாத்த மாதிரியே சேகர் ரெண்டு நாள் கழிச்சு வந்தான், உடனே சேகர் பொண்டாட்டி ஏட்டு சொன்ன விஷயத்த சேகர்ட்ட சொல்ல பயந்துபோயிருந்த சேகர், தன்னை காப்பாத்திக்க சொன்ன பொய்தான் "ரவி பெட்டியோட வேலூர் பைபாஸ் ரோட்டு பக்கம் போறான்னு சொன்னது..". இல்லாத ரவி எப்படி பைபாஸ் போவான்.? சோ சேகர்தான் பொய் சொல்றாங்கற முடிவை ஈசியா எடுத்தோம்.! சேகர பிடிச்சு விசாரிச்சதுல ரவி, ஓம்பிரகாஷ் விஷயங்கள் வெளிவந்தது, என் சந்தேகமும் தீர்ந்தது.! இந்த பெருமாள் மலை கொலை மத்த மலை கேஸ்களோட சம்பந்தமில்லாததுன்னு.!" விஜய்.
"வெரி பிரிலியன்ட் ஒர்க் மிஸ்டர் விஜய்.! அப்ப மத்த மலைகள்ல கெடச்ச கால், கைகள் மேட்டர்.?" மாணிக்கம்.
சிரித்தபடியே, "இது நம்ம நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்டது சார்.! இந்த கேஸூம் முடிஞ்சிபோச்சு.!" விஜய்.
"என்ன முடிஞ்சிப்போச்சா.?" என்று கத்தியேவிட்டார் அதிர்ச்சியடைந்த மாணிக்கம் ஒட்டுமொத்த குழுவினரின் ரெப்பாக.!
ஜொனாதன் தனது அறையில் தன்னுடைய பி.ஏ வுடன் ஹஸ்கி வாய்ஸில் பேசிக்கொண்டிருந்தார்.. "15 மாசத்துல நம்ம செயல்படுத்த நெனச்ச 6 முக்கிய திட்டங்களுமே ஃபெய்லியர்ங்கறது எதேச்சையான விஷயமில்லை. இது நம்ம வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தற விஷயம்.! இத கண்டுபிடிக்க அனுப்புன ரோட்ரிக்ஸ் என்ன ஆனான்னு தெரியல, தெரியணும்னா இந்தியாவுக்காக வேல பாத்துட்டே நமக்கு விஸ்வாசமா இருக்க டபுள் ஏஜென்ட்களை உடனே நம்ம சீக்ரெட் இடத்துக்கு வரச் சொல்லுங்க.!" என்றார் ஜொனாத்தன்.
Image may contain: 1 person, text that says "KEEP CALM AND THINK"

ஜொனாத்தன் தனது பி.ஏ விற்கு உத்தரவிட, பி.ஏ வேகவேகமாக கிளம்பினார். அறையில் குளிர்க்காற்றும், பொருட்களும் துணையிருக்க தனது சீட்டில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தார். உடல் ஓய்வை ரசிக்க மூளையும், மனதும் பரபரப்பாக இயங்க துவங்கின. இதில் மனதானது பீதியில் இருந்தது., மேலிடம் நம்மை குண்டில்லாமல் கேள்விகளால் துளைக்க போகின்றனர்.! "ஓ.. என்ன நடந்தது, இதுவரை பிசிறில்லாமல் சென்ற திட்டங்கள் தற்போது சொதப்புகின்றனவே.? எங்கே கோட்டைவிட்டோம், இந்தியா முழித்துவிட்டதா இல்லை இந்த ப்ராஜக்ட் ஹெட்டான நாம்தான் சரியாக திட்டமிடவில்லையா.?" என்ற பட்டிமன்றத்தை மனதிற்குள் நடத்தியவாறே இருந்தார் ஜொனாத்தன். பட்டிமன்றத்தை மழைவந்து கெடுப்பதுபோல, ஜொனாத்தனின் யோசனைகளை கலைக்க அவரது பிரைவேட் எண்ணிற்கான அழைப்பு வந்தது.
"யெஸ் சர்.. ஜொனாத்தன் ஸ்பீக்கிங்.." என்றார் ஜொனாத்தன்..
மறுமுனையிலிருந்து ஏதோ சொல்ல..
"ஆமாம் சர், இது நிச்சயமாக நமக்கு நல்ல தகவல் இல்லைதான்.!" ஜொனாத்தன்..
"........." எதிர்முனை
"சர், ரோட்ரிக்ஸ இந்தியாவுக்கு அனுப்புனுதுல இதுவரைக்கும் 0% பிரயோஜனம்தான். இது சம்பந்தமா வேற யாரையாவது இந்தியா அனுப்பவும் தயக்கமா இருக்கு.." ஜொனாத்தன்..
".........." எதிர்முனை
"சர், அதுதான் எனக்கு ரொம்ப கலக்கமா இருக்கு, விஷயம் வெளிய தெரிஞ்சதுன்னா நம்ம நாட்டோட பொருளாதாரம், நம்பிக்கை, மரியாதை..... எல்லாமே போய்ரும். இந்த ப்ராஜக்ட இத்தனை வருடங்களா சக்சஸ் பண்ணுன நம்ம நிலைமை ரொம்ப கவலைக்குரியதா போய்ரும் சர்.!" ஜொனாத்தன்
".............." எதிர்முனை
"அதுக்குதான் இந்தியரா இருந்து இந்தியாக்கிட்டயே சம்பளமும் வாங்கிட்டு இருக்குற இந்தியர்கள்ல சிலரை நமக்காக வேலை பாக்க வெச்சிருக்கோம். இந்தியாவுக்கு எதிரா டபுள் ஏஜென்ட்டா செயல்பட்டும் வர்றாங்க., காரணம் உயிர்பயம், குடும்பத்தை கார்னர் பண்ணிருக்கோம்ங்கறதுனால அவங்களுக்கு வேற வழியுமில்லாததால இத செய்ய ஒத்துக்கிட்டாங்க.! இப்ப அந்த டபுள் ஏஜென்ட்களைதான் வரச்சொல்லிருக்கேன் சர், ஏதாவது தகவல் கிடைக்குமானு பாக்க.." ஜொனாத்தன்
"..............." எதிர்முனை
"சர், எந்த தகவல் கெடச்சாலும் உடனே உங்களுக்கு சொல்றேன் சர்.." ஃபோனை கட் செய்த ஜொனாத்தன் மனதிற்குள் "இவன் வேற, செய்யறதே க்ரிமினல் வேலை இதுல ஏன் இப்டியாச்சி, அப்டியாச்சின்ட்டு உயிரை வாங்குறான்கள்.!" என்று புலம்பினார். அடுத்து வரப்போகும் டபுள் ஏஜென்ட்களை கேள்விகளுடன் சந்திக்க தயாரானார்.
"என்னது கேஸ் முடிஞ்சுபோச்சா.?" என்ற டிஐஜி மாணிக்கத்தின் கத்தல் அந்த அறையின் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளின் குழுவின் குரலாகவே இருந்தது.
விஜய் இப்போது புன்னகையுடன் "ஆமா, இந்த கேஸ் முடிஞ்சுபோச்சு.!" என்றான்.
"எப்டி, எப்டி விஜய்.? அந்த கைகள், கால் யாரோடது.? அது யார் செஞ்ச வேலை.? குற்றவாளி யாரு..?" அதிர்ச்சியும், அடக்க முடியாத ஆவலுடனும் மாணிக்கம் கேட்டார்.
"சார், இந்த கேஸ் இன்னைக்கு, நேத்துனு நடந்ததில்லை, பல வருடங்களா நம்ம நாட்டுக்கு எதிரா பண்ண சதியை நம்ம இந்தியா 15 மாசங்களா முறியடிச்சிட்டு வந்திருக்கு.! இந்த விஷயம் நம்ம ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி, இராணுவ அமைச்சர், முப்படை தளபதிகள் அப்புறம் நம்ம சி.எம், கடைசியா நம்ம தமிழ்நாடு டிஜிபி ராஜேஷ்தாஸ், எனக்கும், இன்னொருத்தருக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம் இது.!" என்றான் விஜய் புன்னகையுடன்..
"நாட்டோட பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுங்கறதுல எந்தவொரு காம்ப்ரமைஸூம் இருக்கக்கூடாதுங்கறது சரிதான்., ஆனா அதுக்காக எங்களுக்கே தெரியாம அப்டி என்ன ரகசியம் இருக்கலாம்ங்கறதுதான் இப்ப எனக்கு மட்டுமல்ல இங்க உட்காந்திருக்கற அத்தனை பேரோட கேள்வியும்.! அப்புறம் யாரோ இன்னொருத்தருக்கு தெரியும்னு சொன்னீங்களே அது யாரு.?" என்றார் மாணிக்கம் சற்று வருத்தத்துடனும் தங்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லையே என்று..
"சாரி சார் இட்ஸ் அன் ஆர்டர் ஃப்ரம் த இன்டியா'ஸ் சுப்பீரியர், தெட்ஸ் வொய் வீ ஹைட் இட்.! இது நம்ம டிபார்ட்மென்ட்ட பொறுத்த வரையில் அஃபீஷியலான, அன்அஃபீஷியல்தானே.? நம்மளே எவ்வளவு தடவ சீக்ரெட் ஆப்ரேசன்னு மறைமுக முடிச்சிருக்கோம்., இது நம்ம நாட்டோட பாதுகாப்புக்காக இந்தியன் ஆர்மி சார்பா இன்டெலிஜென்ட்ஸ் பிரிவால நடத்தப்பட்ட ஒரு சீக்ரெட் மிஷன்.! அதுனால இதை மறைக்கிறது சட்டப்படி 100% சரிதான்.. ஏம் ஐ ரைட்.?" என்றான் விஜய்.
"......." அதிகாரிகள் குழு ஆம் என்று ஒப்புக்கொண்டதை அமைதியே சான்றானது. "யெஸ்., நீங்க சொல்றதுதான் சரி, இதுல மாற்று கருத்தே இல்லை.! ஆனா இன்னும் நீங்க அந்த மற்றொருத்தர் யாருன்னு சொல்லவே இல்லையே.?" கேட்டார் மாணிக்கம்.
"அவர் இங்கதான் இதே மதுரை மாவட்டமான உசிலம்பட்டியிலதான்
இருக்கார்.! " என்று புன்னகையுடன் கூறினான் விஜய்.. (க்ளைமேக்ஸ் என்றால் ஹீரோ புன்னகையை விடமாட்டான் போல..)
"உசிலம்பட்டியிலா.? யாரு அது.?" என்றார் உசிலம்பட்டி டிஎஸ்பியான ஜான் மேத்யூ..
"அவர் உசிலம்பட்டியில் இருக்க ஒரு தனியார் ஹைஸ்கூல்ல ஃபிஸிக்ஸ் வாத்தியாரா வேல பாத்திட்டிருக்கார்.! பேரு #பரமசிவம்.! அவர் இப்ப இங்கதான் டிஐஜி ஆஃபீஸ்ல ஒரு பெஞ்ச்ல உக்காந்திருக்காரு, என்னோட ஃபோன் கால்க்காக வெய்ட்டிங்.!" என்றான் விஜய்.
ஒட்டுமொத்த காவல்துறை குழுவும் அதிர்ந்தது.! கோரஸாக குரலும் எழுப்பியது "யாரது, அவர கூப்பிடுங்க, கூப்பிடுங்க.." என்று..
"இதோ.." என்று தனது செல்லை எடுத்து டயல் செய்தான், எதிர்முனையில் முதல் ரிங்கிலேயே பதில் வந்தது "என்ன விஜய் வரவா.?" என்று. "வாடா.." என்றான் விஜய்.!
மொத்த போலீஸ்களும் கதவை நோக்கி தங்களது பார்வையை திருப்ப, கதவும் திறக்க 6.2 அங்குல உயரத்தில் நல்ல திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலமைப்புடன், காவலர் போல சிகைவெட்டுடன் கூடிய அவன் #பரமசிவன் உள்ளே நுழைந்தான்.! கூட்டம் ஸ்தம்பித்தது "இவன்... இவன்... என்ன விஜயைப் போலவே இருக்கான் என்று திகைத்தது.!".
பரமசிவன் நடந்து சென்று விஜயுடன் கையை குலுக்கி ஆரத்தழுவினான், நீண்டநாள் பிரிந்த சகோதரர்கள் அல்லவா.? பின்னர், பரமசிவன் மேஜைக்கருகில் வந்து நின்று, அனைவருக்கும் பொதுவாக "குட்ஆஃப்டர்நூன் ஆஃபிஸர்ஸ்.." என்றான்.
குழு ஸ்தம்பித்தது..!
Image may contain: one or more people, text that says "HOW LOOK MYSTERIOUS 1. HAVE CHEEKBONES 2. TURN UP YOUR COAT COLLAR"

"குட்ஆஃப்டர்நூன் ஆஃபீஸர்ஸ்.." என்று சிரித்துக்கொண்டே சொன்ன பரமசிவத்தை பார்த்து காவல்துறையின் அதிகாரிகள் ஸ்தம்பித்தனர்.
"நீங்க.. நீங்க.. விஜயோட..?" என்று ஆச்சர்யத்தை தனது வினாவில் நிறுத்தினார் அங்கிருந்த ஓர் அதிகாரி..
"ம்.. ம்.. நான் விஜயோட பிரதரேதான்.! அதாவது அண்ணன்.." என்று புன்னகைத்தான் பரமசிவன்.
"ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களே, நீங்க ரெண்டு பேரும் ட்வின்ஸா.?" உசிலம்பட்டி டிஎஸ்பி ஜான் மேத்யூ.
"ஆமாங்க சார்., நாங்க ரெண்டு பேருமே ட்வின்ஸ்தான்.! பை த பை பிறந்தத வச்சி பாத்தா நான்தான் மூத்தவன்.." என்று மறுபடியும் புன்னகையுடன் பரமசிவன்..(புன்னகை குடும்ப ட்ரேட் மார்க் போல..)
"ஆனா இதுவரைக்கும் விஜய் இதப்பத்தி எதுவுமே சொல்லலையே.?" என்றார் மாணிக்கம்..
"பொறுமை சார்.. பொறுமை.. உங்களோட எல்லா கேள்விகளுக்கும் நாங்க ரெண்டு பேருமே பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கோம்.! அதுனால யார் யாருக்கெல்லாம் என்னென்ன டவுட் இருக்கோ தாராளமா கேட்கலாம். அதுக்கு முன்னாடி என்னப்பத்தி நானே சொல்றதவிட விஜய் சொல்றதே நல்லாருக்கும்னு நான் நினைக்கிறேன்.." என்று விஜயை பார்த்தான் பரமசிவன்..
விஜய் உடனே பரமசிவத்தை பார்க்க, அவன் "கோ அஹெட்.." என்றான்.
இப்போது விஜய், "ரெஸ்பெக்டட் ஆஃபீஸர்ஸ் இந்த வழக்குல நான் அப்புறம் பரமசிவன் ரெண்டுபேருமே இன்வால்வ் ஆக நிறைய காரணங்கள் உண்டு. முதல்ல எங்கப்பா ஒரு எக்ஸ் ஆர்மிக்காரர் ஹவில்தார்ங்கற ரேங்க்ல இருந்தவர், பாகிஸ்தான் கூட 2 வார்கள், சீனாவோட ஒரு வார்னு நம்ம நாட்டுக்காக போர்ல கலந்துகிட்டு, சீனாவோட நடந்த வார்ல அருணாச்சல் பிரதேசத்துல அரெஸ்ட் ஆனவர். நாட்டுப்பற்று அதிகமா இருந்த அவருக்கு பிறந்த ரெட்டை பசங்கதான் நானும், இவனும்..! இயற்கையாவே எங்க உடம்புல மில்ட்ரி பாசம் ஒட்டிக்கிருச்சோ என்னமோ நான் அமராவதி டேம்கிட்ட இருக்க சைனிக் ஸ்கூல்ல படிச்சேன், இவன் உசிலம்பட்டியிலயே படிச்சான். எனக்கு படிப்பு முடிந்தது ஜேசிஓ ன்னு சொல்ற ஜூனியர் கமாண்டிங் ஆஃபீஸராக ஆர்மியில சேர்ந்தேன், இவன் அவனோட ஹையர் ஸ்டடிய மதுரைல முடிச்சிட்டு ஏர்ஃபோர்ஸ்ல ஜாய்ன் பண்ணான்.! நாங்க ரெண்டு பேருமே இந்தியாவை பாதுகாக்குற வேலையில சேர காரணமே எங்க உடம்புல ஓடுற ஆர்மி ரத்தம்தான்னு நெனக்கிறேன். அம்மாவும், அப்பாவும் எங்க ஆசைக்கு குறுக்க வரவே இல்லை.!" என்றான் விஜய் குழு தன்னை கவனிக்கிறதா என்று கவனித்தவாறே..
மீண்டும் விஜய் தொடர, "இதுல பரமசிவன் தன்னோட பிரிலியண்டான செயல்களால தேசிய பாதுகாப்பு பிரிவில் ஒன்னான இன்டெலிஜென்ட்ஸ்ல சேர்ந்தான். நான் ஆர்மியாவும், அவன் ஏர்ஃபோர்ஸாவும் இருந்தவரைக்கும் ஃபோன் கான்டாக்ட்ஸ் இருந்தது, பரமசிவன் இன்டெலிஜென்ட்ஸ் விங் போனப்புறம் கான்டாக்ட் குறைய ஆரம்பிச்சது. சில வருடங்களுக்கு முன்னாடி ஒருநாள் நான் பொழுதப்போக்க இந்திய ராணுவத்தோட ஆர்டிக்கிள்ஸை படிச்சிட்டிருந்தேன், அப்ப அந்த ஆர்ட்டிக்கிள்ல வந்த செய்தி என்னை யோசிக்க வெச்சது. அது நம்மோட ராணுவ விமானம் ஒன்னு விபத்தில் சிக்கியதுன்ற செய்திதான் அது. அந்த செய்தி மட்டும் வந்திருந்தா அது நம்மோட பேட் லக்காதான் இருந்திருக்கும். அது எப்படின்னா வந்த ராணுவ விமான விபத்து செய்தியோட இதுக்கு முன்னாடி நடந்த இன்னொரு ராணுவ விபத்த பத்தியும் செய்தியில குறிச்சிருந்தது. அதாவது முதல் விபத்து
3ம் தேதிலயும், நான் பாத்த தேதியன்னிக்கு நடந்ததா குறிப்பிட்டிருந்த விபத்து 5ம் தேதியாவும் இருந்துச்சு ஆனா ரெண்டும் வெவ்வேறு மாசங்கள்ல.! ஒருவித ஆர்வத்துல மேலும், இந்தியாவில நடந்த போர் விமான விபத்துகள பத்தி தெரிஞ்சிக்க பல ஆர்ட்டிகள்களை படிச்சப்பதான் அந்த பிரமாண்டமான சதி எனக்கு புரிஞ்சது. இந்த சதி என்னான்ன இந்த ரெண்டு விமான விபத்துகளுக்கு முன்னாடி நடந்த விமான விபத்துகள் 2ம்தேதியும், இன்னொன்னு 1ம் தேதியும், அதற்கும் முன்னாடி மறுபடியும் 1ம் தேதியும் நடந்திருந்தது.!" என்று நிறுத்தினான் விஜய்.
இதிலென்ன ஆச்சர்யம் என்பதுபோல அனைவரும் பார்க்க, விஜய் மீண்டும் சற்று கூர்மையாக, "ஃபிபனாக்கி சீரிஸ்.!" என்றான்.
"ஃபிபனாக்கி சீரிஸா.? அப்டின்னா.?" என்றார் ஒரு அதிகாரி.
"ஃபிபனாக்கி சீரிஸ்னா கணக்கு தெரிஞ்சவங்களுக்கு நல்லா தெரியும்.! அதாவது, முதலில் 1லிருந்து துவங்கி பின் அதனுடன் மீண்டும் 1ஐக்கூட்ட விடை 2 வரும், மீண்டும் அந்த 2ஐ அதற்கு முந்தைய எண்ணான 1ஐக்கூட்ட 3 வரும்.! அப்புறம் 3+2=5., 5+3=8, 8+5=13, 13+8=21,.......... என தொடர்ந்து வரும். இதுவே ஃபிபனாக்கி சீரிஸ்.! இந்த வரிசைல விமான விபத்துகள் தொடர்ந்து நடக்க, இது தொடர்ச்சியா நடக்கறதால இது விபத்தில்லை ஒருவேளை சதியாக இருக்குமோ என்ற எண்ணத்தில் யோசிக்க துவங்க, கடைசி விமான விபத்து மூனு மாசங்கழிச்சி 8ம் தேதி நடந்துச்சு.! என் டவுட் க்ளியராச்சு இது விபத்தில்லை #சதி என்று.!" நிறுத்தினான் விஜய்.
காவல்துறையினர் அனைவரும் திகிலடித்து போயிருக்க, அனைவரது முகங்களும் வெளிறி போயின..
"இந்த சமயத்தில நான் என் அண்ணனான பரமசிவன கான்டாக்ட் பண்ணி விஷயத்த சொன்னேன்., பதிலுக்கு அவனும் அதிர்ந்தான்.! உடனடியா இதை வெரிஃபை பண்றேன்னு சொல்லி, ரொம்ப ஃபாஸ்டா ஒர்க் பண்ணி நான் சொன்னது சரிங்கற முடிவுக்கு வந்தான். இவன் இன்டலிஜென்ட் விங்க்ல இருந்ததால இந்த விஷயத்தை, உடனே ஏர் சீஃப் மார்ஷல்கிட்ட கொண்டுபோக முடிஞ்சது, விஷயம் மிகவும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்த விவகாரத்தை ரகசியமாகவும், ட்ரிக்காகவும் கையாளணும்னு ஹையர் அஃபிஷியல்ல இருந்து உத்தரவுகள் வந்தன.! மேலும் இந்த விஷயங்கள்ல இருந்து முதல்ல உறுதி செஞ்ச விஷயம் ஒன்னு விபத்துக்குள்ளான எல்லா வார் ஃப்ளைட்ஸூம் #ஜம்போமியாதயாரிப்புங்கறதுதான்.!" என்று மீண்டும் நிறுத்தினான் விஜய்.
அத்தனை காவலர்களும் அதிர்ந்து போயிருந்தனர் மேலும், மனதிற்குள் "ஜம்போமியா.." என்று கூற துவங்கினர்.
"உடனடியா ஒரு ஆப்ரேசன் துவங்கப்பட்டது, முப்படை தளபதிகளின் தலைமையின் கீழ் நேரடியாக ஓர் குழு பிரதமரால் நியமிக்கப்பட்டது. அக்குழுவில் நானும், பரமசிவனும் இருந்தோம்., இது இன்டர்நேசனல் விவகாரம் என்பதால், காரியத்தை கச்சிதமாக நுணுக்கமாக திட்டமிட்டு நகர்த்தினோம்.! பை த பை என் அண்ணனோட உண்மையான பேரு #அஜய்., இந்த #ஆப்ரேசன்_பெயர் #பரம_ரகசியம் என்று வைக்கப்பட்டது.! இந்த சதி விபத்துகளுக்கான காரணத்தை நாம் ஜம்போமியாவிடமிருந்து வாங்கிய விமானங்களில்தான் இருந்தது, அதனை கண்டறிந்தவன் என் அண்ணன் அஜய் என்பதால் அவனை, பரம ரகசியம் என்ற ஆப்ரேசனை நினைத்தே #பரமசிவன் என்ற கோட் பெயரில் அழைத்தோம்.! எப்படி சிவன் தனது மூன்றாம் கண்ணைக்கொண்டு உலகை அழிப்பானோ, அதுபோல எனது அண்ணன் தனது திறனால் இந்த சதியின் ரிஷிமூலத்தை கண்டறிந்து அதனை அழித்தான்.!" விஜய் நிறுத்தினான்..
அதிகாரிகள் திக்பிரமையுடன் அமர்ந்திருக்க விஜய், "இதற்கு மேல் என் அண்ணன் அஜய் சொல்வார்.!".
அஜய் என்ற பரமசிவன் நிதானமாக துவக்கினான்...
No photo description available.


பார்க்க தரமான அந்தஸ்த்தை பெற்றவரைப் போல காணப்பட்ட அந்த நபர் சற்று குரல் கம்மியாக ஹஸ்கி வாய்ஸில் யாராலும் பக் செய்ய முடியாத ஹாட்லைனில் பேசிக்கொண்டிருந்தார்..
"ஆமா நாந்தான் பேசுறேன்., நீங்க எங்களுக்கு கொடுத்த வாக்கு என்னாச்சு.? போன ஒரு வருஷத்துக்கும் மேல நீங்க செஞ்சு தர்றதா சொன்ன திட்டங்கள் எல்லாமே ஒன்னுமே நடக்க காணோம்.! இது சம்பந்தமா எங்கள் ஹையர் அஃபிஷியல்ஸ் ரொம்ப பதட்டமா இருக்காங்க., இதுக்காக நாங்க எவ்வளவு செலவு பண்ணியிருக்கோம்னு உங்களுக்கு நல்லா தெரியுமில்ல.? எங்கள சப்போட் பண்ற நாடுகள்ல ஒன்னான #கேஸ்ட்ரோவோ சொல்லிதான் உங்கக்கிட்ட வந்தோம்., துவக்கத்துல இந்த விஷயத்துல உங்களோட சக்சஸ் ரேட் பிடிச்சு போனதுனாலதான் ஸ்ட்ராங்கா நம்புனோம்.! ஆனா, சமீபமா உங்களோட செயல்பாடுகள்ல திருப்தி இல்ல, அதனால எங்க ஹைஅஃபிஷியல சந்தோஷப்படுத்தற மாதிரி எங்களுக்கு உடனடியா ரிசல்ட் வேணும்.." என்றது.
"நாங்களும் ஒன்னும் சும்மா இல்ல, இந்த திட்டத்த 5 வருஷத்துக்கும் மேல துல்லியமா செஞ்சிட்டுதான இருந்தோம்.! ஆனா போன 15 மாசமா ஒரு சின்ன சறுக்கல், அதனால நம்ம திட்டத்த செயல்படுத்துறதுல கொஞ்சம் சுணக்கமாயிருச்சு அவ்வளவுதான். அது சம்பந்தமா நான் ஜொனாத்தன்ட்ட கேட்டிருக்கேன், அவரும் இதுல என்ன பிரச்சனைன்னு சீக்கிரம் தோலுரிக்கிறதா சொல்லிருக்காரு. கொஞ்சம் பொறுத்துக்குங்க, நாம செய்யறது எவ்வளவு பெரிய இல்லீகல்னு தெரியுமில்ல.? திட்டத்துல சின்ன மிஸ்டேக்னாலும் இந்த உலகமே நம்மள புறக்கணிக்கிற வாய்ப்பிருகக்கு.! அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க, இங்க ஜம்போமியாவுல இருக்க டபுள் ஏஜென்ட்கள மீட் பண்ணதுக்கப்புறம் மத்தத பேசிக்கலாம்.." என்றார் சற்று மிரட்டலாகவும்.
"இத பாருங்க எது எப்படியோ விஷயத்த வெளிவராம பாத்துக்கங்க, நானும் நீங்க சொன்னத அப்டியே கன்வே பண்ணிர்றேன்.. இன்வெஸ்ட்மென்ட் பெரிசு ஸோ பீ அலெர்ட் அன் கேர்ஃபுல்.." என்றார் நிஸானா நாட்டின் ஓர் அதிகாரி.
"ஓ.கே., நாங்க பாத்துக்குறோம்.. நீங்க கவலப்படாதீங்க., எதாவது டெவலப்மென்ட்னா உடனடியா கான்டக்ட் பண்றேன்.." என் ஜம்போமியா நாட்டு அதிகாரி ஆனால், மனதிற்குள் "செய்யறது க்ரிமினல்தனம், இதுல நொட்டை சொல்றது.! இந்த ஜொனத்தன் என்ன செய்யறான்னு தெரியலயே.?" நினைத்தார். ஃபோனை நகர்த்தினார் இம்முறை ஜொனாத்தனுக்கு செய்ய..
பிரபலமான 5 நட்சத்திர ஹோட்டலில் ரூஃப் டாப்பில் ஓர் மூலையில் இரண்டு நாற்காலிகளில் அமர்ந்திருந்த இருவர் தங்களது வார்த்தைகள் அவர்களை தாண்டவிடாதபடி தீவிரமாக உரையாடி கொண்டிருந்தனர்.
"பிரச்சனைக்கு மேல பிரச்சனையா இருக்கு, என்ன பண்றதுன்னே தெரியல, இப்ப புதுசா ஜம்போமியாவுல இருந்து ஒருத்தன் வரப்போறானாம், அவனுக்கு நாம உதவி செஞ்சாகணுமாம்.!" என்றான் ஒருவன் இவனை 1 என்று சொல்வோம்..
"இதுவரைக்கும் வந்ததே அதிகம், இதுல புதுசா இது வேற.? இப்ப வர்றவன் யாரு என்னன்னு எதாவது தகவல் இருக்கா.?" என்றான் 2..
"எப்பவும் போல நமக்கு ஏதாவது ஒரு வழியில ஒருத்தன் மூலமா தகவல் வரும்தான.? அதுவரைக்கும் வெய்ட் பண்ணுவோம்.." என்றான் 1.
"சரி.. பாக்கலாம்.! இந்த வேலய செய்ய நமக்கு கெடைக்கிற தொகைதான் நம்மள இப்டி செய்ய வைக்குது. இந்தியாவில வேல பாத்துட்டே இந்தியாவுக்கு எதிரா வேல பாக்குற விஷயம் வெளிய கசிஞ்சா நம்ம நெலமை..?" என்றான் கவலையுடன் 2..
"இந்த விஷயத்துல டார்கெட் ஃபுல்ஃபில் ஆச்சுன்னா நம்ம லைஃப் வேற நாட்டுல செட்டில் பண்றதா சொல்லி உறுதி குடுத்திருக்கானுங்கள்ல.? அத நம்பித்தான் இந்த துரோகத்த செய்யறோம்.." என்றான் 1..
"அவன் வர்ற நேரமாச்சு.!" என்ற 2 வாட்ச்சை பார்த்தான்..
இப்படியே ஏதோ பேசிக்கொண்டே போக....
"எக்ஸ்க்யூஸ் மீ கேன் ஐ மீட் மிஸ்டர்.ஃப்ரடெரிக் டிசௌசா.?" என்றவாறே அந்த வீட்டின் முன்னே நின்றிருந்தவன் ஒருவன் கேட்டான்.
"மே ஐ நோ ஹூ ஆர் யூ.?" என்றாள் ஒரு போர்ச்சுகல் பெண்மனி..
"மை நேம் இஸ்....................... ஆல்ரெடி வீ இன்ஃபார்ம்ட் இட் டூ மிஸ்டர் டிசௌசா அன் ஹீ டோல்ட் மீ டூ கம் டூ ஹிஸ் ஹவுஸ் பை ஈவினிங்.." என்றான் அவன்.
"யா.. ஹீ டோல்ட் மீ தட் எ பர்சன் வில் கம் டூ மீட் ஹிம். ப்ளீஸ் டெல் த கோட் வேர்ட் அதர்வைஸ் இட்ஸ் இம்பாஸிபிள் டூ மீட் ஹிம்..!" என்றாள் அப்பெண்மனி..
".........." என்றான் அவன்.
"ஓ.. கரெக்ட் ப்ளீஸ் கம் இன்.." என்றாள் அப்பெண்மனி நகர அப்போதுதான் புலப்பட்டது அவளின் பின் இரண்டு நபர்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் நின்றதே....

நண்பர்களுக்காக மீண்டும் கதையை தொடர்ந்து கொண்டு செல்ல முடிவு செய்தேன். அதற்காகவே இந்த எக்ஸ்டென்டட் வெர்சன்..

Image may contain: 1 person, text that says "KEEP CALM AND THINK"