Wednesday 6 December 2023

நீள் கதை பாடம் தமிழ்ச்செல்வியின் பயணம்

புதிய தொடர் ஆரம்பம். 

உங்கள் வகுப்பில் நடத்தி்ப் பார்க்கச் சில சுவையான மொழிச்செயல்பாடுகளை அறிமுகப்படுத்த இருக்கிறேன். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 1

அன்று திங்கள்கிழமை. வழக்கம்போல் தாமதமாக எழுந்து, கொட்டாவி விட்டு, வீட்டினரின் கட்டாயத்தால் குளித்து முடித்து, உணவின் சுவையை உணராமல் வாய்வழி வயிற்றுக்குள் தள்ளி, வெள்ளிக்கிழமை வைத்த பையை அப்படியே தூக்கித் தோளிலிட்டு, பள்ளிப் பேருந்துக்குள் நுழைந்து, பள்ளிக்கு வந்து மெல்ல வகுப்புக்குள் நுழைந்தார்கள். 

ஆறாம் வகுப்பு அ பிரிவுக்குள் நுழைந்த குழந்தைகளுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அங்கே ஒரு பெண்குழந்தை உட்கார்ந்திருந்தாள். புதியதாகச் சேர்ந்திருந்தாள். அவள் அந்த வகுப்பிலுள்ள புதிய குழந்தைகளைப் பார்த்து மெல்லச் சிரித்தாள். 
எல்லோரும் அவரவர்களின் இடத்தில் பள்ளிப்பைகளை வைத்துவிட்டு அவளைச் சுற்றி உட்கார்ந்தார்கள். 

புதுசா சேர்ந்திருக்கியா?
உன் பெயர் என்ன? 
இதற்கு முன்னாடி எங்கே படிச்சே? 
எங்கே தங்கியிருக்கே? 

என ஆளாளாளுக்கு கேள்விக்கணைகளைத் தொடுத்தார்கள். அத்தனை கேள்விகளையும் கேட்ட அவள் ஹ ஹ் ஹா... என்று சிரித்தாள். 
இருங்க இருங்க... உங்கள் எல்லா வினாக்களுக்கும் விடை சொல்கிறேன் என்றபடி தன் பள்ளிப் பையைத் திறந்தாள். குறிப்பேட்டை எடுத்தாள். பேனாவைத் திறந்தாள். 

நான் முதன் முதலாக என் பெயரைச் சொல்கிறேன் என்றபடி குறிப்பேட்டில் கீழ்வரும் வாக்கியத்தை அமைதியாக எழுதினாள். எல்லோரும் வியப்போடு அவள் என்ன எழுதுகிறாள் என்பதையே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

பெயரைச் சொல்கிறேன் என்பவள் ஒரு வாக்கியத்தை அல்லவா எழுதுகிறாள். ஒரு வாக்கியமே பெயராக இருக்குமா? இவளுக்கு என்ன ஆயிற்று என்று நினைத்தனர். 

தங்கம் உமியில் அமிழ்ந்தது 

இந்த வாக்கியத்தில் என் பெயர் மறைந்து இருக்கிறது. முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று அவர்களை நோக்கி அழகான புன்சிரிப்பொன்றை உதிர்த்தாள். அவள் சிரித்தபோது கன்னத்தில் விழுந்த குழி அவளின் அழகை மேலும் கூட்டியது. 
ஆகா இவள் ஒரு குறும்புக்காரி. அதுவும் புத்திசாலியான குறும்புக்காரி என்று எல்லோரும் மனத்துக்குள் நினைத்தார்கள். 
கைகளில் முகத்தைத் தாங்கியபடி சிலபேர். தலையைச் சொறிந்தபடி சிலபேர். கண்களை மூடியபடி சிலபேர், ஒரு விரலால் கன்னத்தைத் தட்டியபடி சிலபேர்... என எல்லோரும் அந்த வாக்கியத்தையே பார்த்தார்கள். பலமுறை படித்தார்கள். முணுமுணுத்தார்கள். 
தங்கம் உமியில் அமிழ்ந்தது என்ற வாக்கியத்தில் மறைந்திருக்கும் ஒரு பெயர். பெண் குழந்தையின் பெயர். அது என்ன?

ஜி. ராஜேந்திரன்.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 2

“தங்கம் உமியில் அமிழ்ந்தது” என்ற வாக்கியத்தில் மறைந்திருக்கும் ஒரு பெயர். பெண் குழந்தையின் பெயர். அது என்ன?

“ஓ... உன் பெயர் தமிழ். சரியா...?” கலைச்செல்விதான் முதலில் கேட்டாள். தமிழ்ச்செல்வி சரியென்பது போல் தலையாட்டியபடி சிரித்தாள்.

“எப்படிக் கண்டுபிடித்தாய் கலை?” சில குழந்தைகள் கேட்டார்கள்.

கலை ஏதோ பேசப்போனாள். “கலை கலை... இப்போது நீ அதைச் சொல்லாதே. நம் நண்பர்களே கண்டுபிடிக்கட்டும். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்றாள் தமிழ்ச்செல்வி. பிறகு நண்பர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள்.   

“நான் ஐந்து வாக்கியங்கள் சொல்கிறேன். அவற்றுள் ஐந்து பெயர்கள் மறைந்துள்ளன. எல்லாம் நம் வகுப்பிலுள்ளவர்கள் பெயர்கள்தாம். கண்டுபிடியுங்கள். அப்போது புரியும்” என்றபடி தமிழ்ச்செல்வி வாக்கியங்களைக் கூறத் தொடங்கினாள். 

“இரு இரு... நீ இப்போதுதான் புதியதாய் வந்திருக்கிறாய். உனக்கெப்படி நம் வகுப்பிலுள்ள நண்பர்களின் பெயர்கள் தெரியும்?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் கலைச்செல்வி. 

தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே சுவர் பக்கம் கைகாட்டினாள். அங்கே மாணவர்கள் எழுதிய கதை, கவிதை. துணுக்குகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு படைப்பின்கீழ் அவர்களுடைய பெயர்களும் இடம்பெற்றிருந்தன. 
“தமிழ்ச்செல்வி, நீ சரியான ஆள்தான்” என்று பாராட்டினாள் கலை. 

தமிழ்ச்செல்வி கீழ்வரும் வாக்கியங்களைக் கூறினாள். 

1. வாசலில் பசு நிற்கிறது. 
2. பிணியைப் பரப்புவது தப்பு 
3. மலையில் கொஞ்சம் பஞ்சு
4. பூ வரவில்லை அண்ணி
5. பழத்தைப் புவியில் புசித்திட வருவாரா

தமிழ்ச்செல்வி புதுப்புது வாக்கியங்களை, அதுவும் சிரமமான வாக்கியங்களை எளிதில் உருவாக்குவதைக் கண்கொட்டாமல் பார்த்தாள் கலைச்செல்வி. தமிழ்ச்செல்வி தன் தோழியாகப்போவதை நினைத்துப் பெருமைப்பட்டாள்.

எல்லோரும் அந்த வாக்கியங்களில் மறைந்திருக்கும் பெயரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். 

“முதல் சொல்லில் முதல் எழுத்து, இரண்டாவது சொல்லில் இரண்டாவது எழுத்து... மூன்றாவது சொல்லில் மூன்றாவது எழுத்து... எனத் தேர்ந்தெடுத்தால் பெயர்கள் கிடைக்கும் இல்லையா... முதல் வாக்கியத்தில் இருப்பது என் பெயர்..” வாசுகி மகிழ்சியோடு முகம் மலரச் சொன்னாள். 

“வாசுகியின் மகிழ்ச்சியைப் பார்த்தாயா கலை... நீ சொல்லிக்கொடுத்திருந்தால் இந்த மகிழ்ச்சி கிடைத்திருக்காதல்லவா. அவர்களாகக் கண்டுபிடிக்க வாய்ப்புக்கொடுப்பதுதான் எப்போதும் நல்லது.” 
“புரிகிறது... புரிகிறது...” கலைச்செல்வி யோசித்தபடியே மெதுவாகச் சொன்னாள். 

அகில், கார்த்தி, நவ்யா, சுகந்தி... என எல்லோரும் தங்கள் பெயருக்கேற்ற வாக்கியங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். 

எங்கே நீங்களும் சில பெயர்களை மறைத்து வைத்து வாக்கியங்கள் உருவாக்குங்கள். நண்பர்களிடம் காட்டுங்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 3

“நல்ல ஆந்தைகள் மத்தியில்.... ஐயோ என் பெயருக்கேற்ற வாக்கியம் வரமாட்டேன் என்கிறதே... னி என்ற எழுத்து நான்காவதாக வரக்கூடிய ஒரு சொல்வேண்டுமே...”
நந்தினி தனக்குத்தானே பேசிக்கொண்டே யோசித்தாள். அதைப் பார்த்த கலைச்செல்வி “நல்ல ஆந்தைகள் மத்தியில் இன்கனி” என்றாள். அதைக் கேட்ட நந்தினி “ஆகா… பொருத்தமான சொல். என் பெயருக்கேற்ற வாக்கியம் கிடைத்துவிட்டது. நான் நண்பர்களிடமும் வீட்டினரிடமும் இந்த வாக்கியத்தைச் சொல்லி இதில் மறைந்திருக்கும் பெயரைக் கண்டுபிடிக்கும்படி சவால் விடப்போகிறேன்” என்று முகம் மலரக் கூறினாள். 

கலைச்செல்விக்கும் தமிழ்மொழி மீது ஆர்வம் இருப்பதைத் தமிழ்ச்செல்வி கண்டுகொண்டாள். அவள் முகத்தில் புன்சிரிப்பொன்று மின்னி மறைந்தது. 
“தமிழ்ச்செல்வி, நீங்கள் எல்லோரும் இந்த விளையாட்டில் ஆர்வமாகப் பங்கெடுத்தீர்கள். ஆனால் நாங்கள் சிலர் இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் என்ன விளையாட்டு விளையாடுகிறீர்கள்? எங்களுக்கும் சொல்லுங்கள்” என்று கேட்டான் சிவா. 

தமிழ்ச்செல்வி ஒரு நிமிடம் யோசித்தாள். 
“சிறுவனே வா... சிறுவனே வா” என்று சிரித்தபடி சிவாவை அழைத்தாள். 

“சிவா... உன் பெயருக்கேற்ற வாக்கியம்தான் சிறுவனே வா என்பது” என்று கலகலவெனச் சிரித்தாள் கலைச்செல்வி. 

“ஆகா... இது புதுவித உத்தியாக இருக்கிறதே. சொல்லிலுள்ள முதல் எழுத்துகளை இணைத்தால் போதும். இல்லையா?” சிவா கேட்டான்.  

“ஆம். இப்போது நான் ஐந்து வாக்கியங்கள் கூறுகிறேன். ஆனால் ஒருமுறைதான் கூறுவேன். சட்டென பெயரைக் கண்டுபிடித்து எழுத வேண்டும். எத்தனை பேர் சரியாக எழுதுகிறீர்கள் என்று பார்ப்போம்” என்றபடி கீழ்வரும் வாக்கியங்களைக் கடகடவெனக் கூறினாள் தமிழ்ச்செல்வி. 

பாடம் புதியது 
வாழைப்பழம் சுவையானது கிடைத்தது 
விடியலில் ஜன்னலில் யார் 
திடீரென லட்டைக் காணவில்லை 
அதோ பின்னால் நடப்பது யார் 

தமிழ்ச்செல்வி வாக்கியங்களைக் கூறிமுடிக்கவும் சிவா “பாபு, வாசுகி, விஜயா, திலகா, அபிநயா” என்று பெயர்களை உரக்கச் சொல்லவும் சரியாக இருந்தது. எல்லோரும் கரவொலி எழுப்பிச் சிவாவைப் பாராட்டினார்கள். 

“ஆனால் இந்த உத்தியைப் பயன்படுத்தி செல்வி, தமிழ், மஞ்சு போன்று மெய்யெழுத்துகள் வரும் பெயர்களுக்கான வாக்கியங்களை உருவாக்க முடியாது. இல்லையா?” கலைச்செல்வி யோசனையோடு கூறினாள். 

“ஆமாம். அதுமட்டுமல்ல மீனா, பானுமதி,, அழகிரி போன்ற பெயர்களில் வரும் னா, னு, ழ போன்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா. அத்தகைய எழுத்துகள் வரும் பெயர்களுக்கும் இந்த உத்தியைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைக்க முடியாது என்றாள் தமிழ்ச்செல்வி. 

நண்பர்களே, இப்போது உங்களுக்கு இரண்டு வேலை. 
தமிழ் எழுத்துகளுள் எவையெல்லாம் சொல்லின் முதலில் வரும், எவையெல்லாம் வாரா என்று உங்களுக்குத் தெரிந்த முறையில் பிரிக்க முடியுமா? 

கவிதா, பபிதா, மமதா, சவிதா போன்ற பெயர்களுக்கேற்ற வாக்கியங்கள் எழுதுங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 4

தமிழ்ச்செல்வி அந்தப் பள்ளிக்கூடத்தில் அன்றுதான் சேர்ந்திருந்தாள். அவளுக்கு அது முதல் நாள். ஆனால் வகுப்பிலுள்ள அனைவரும் அவளைத் தங்கள் நெடுநாள் தோழிபோல் உணர்ந்தார்கள்.

தயக்கமின்றி அனைவரிடமும் நெருங்கிச் சென்று, திறந்த கை நீட்டி, “நான் தமிழ் உன் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டதுமே அவர்களுக்குள் நெருக்கம் வந்துவிடுகிறது. கள்ளம் கபடமற்ற அவளுடைய வெள்ளைச் சிரிப்பு நெருங்கச் சற்று தயங்கி நிற்பவரையும் அவளை நோக்கி இழுத்துவிடும். 

ஆனால் கலைச்செல்வி அவளுடைய வேறொரு சிறப்பைக் கவனித்தாள். அவள் பேசும் வாக்கியங்களில் பொருத்தமான சொற்கள் பொருத்தமான இடத்தில் வந்து அமர்ந்துகொள்கின்றன. அச்சொற்கள் எல்லாம் தனக்கும் தெரிந்தவைதாம். இருந்தபோதும் நான் பேசினால் அச்சொற்கள் வருவதில்லையே என்று சிந்தித்தாள். தமிழ்ச்செல்வி பேசும்போது எந்தக் குழப்பமும் யாருக்கும் வருவதில்லை என்பதையும் கவனித்தாள்.

இச்செல்வளம் தமிழ்ச்செல்விக்கு எப்படி வந்திருக்கும்? அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் கலைச்செல்வி. அவள் தன்னுடைய பள்ளிப் பையைத் திறந்து முதல் பிரிவேளைக்கான குறிப்பேட்டை எடுத்தாள். பேனாவையும் பென்சிலையும் எடுத்து வைத்தாள். ஆசிரியர் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. குறிப்பேட்டை விரித்தாள். ஒரு நிமிடம் யோசித்தாள். ஒரு படம் வரைந்தாள். அது கேள்விக்குறியின் படம். அதுவும் தலைகீழாக நிற்கும் கேள்விக்குறி. பிறகு அதன் கீழே “எப்படி? எப்படி? எப்படி?” என்று எழுதினாள். 

ஆசிரியர்கள் வந்தார்கள். பாடம் நடத்தினார்கள். உணவு இடைவேளையும் வந்தது. எல்லோரும் அவரவர் உணவுப் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு பள்ளி மைதானத்திலிருந்த வேப்பமர நிழலில் அமர்ந்தார்கள். உணவு உண்டார்கள். பொரியல் கூட்டு வகைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள். தமிச்செல்வி பேச்சைத் தொடங்கி வைத்தாள். “ஏய் கலை, ஆசிரியர் வருவதற்கு முன்பாக நீ குறிப்பேட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாயே. என்ன எழுதினாய்?” எனக் கேட்டாள். 

“ஓ... கலைச்செல்வி உண்மையில் ஒரு கலைஞர் என்பது உனக்குத் தெரிய நியாயமில்லைதான். அவள் நன்றாகப் பாடுவாள். ஓவியம் வரைவாள். வீண்பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் செய்வாள்” என்றான் மகிழ். 
அதைக்கேட்ட கலைச்செல்வி, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தமிழ். நீ ஏதோ பெரியதாக எண்ணிவிடாதே. அது போகட்டும். உனக்கு யார் தமிழ்ச்செல்வி என்று பெயர் வைத்தது? யார் பெயர் சூட்டியிருந்தாலும் உனக்குப் பொருத்தமான பெயர்தான். உன் தமிழார்வத்தைப் பார்த்து உனக்குத் தமிழ்ச்செல்வி என்று பெயர் சூட்டினார்களா இல்லை தமிழ்ச்செல்வி என்று பெயர் சூட்டியதால் தமிழில் ஆர்வம் வந்ததா?” என்று கேட்டாள். 

கலைச்செல்வியின் கேள்வியைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். பிறகு தமிழ்ச்செல்வியின் முகத்தைப் பார்த்து அவள் என்ன பதில் சொல்லப்போகிறாள் என்பதற்காக செவிகூர்த்து நின்றார்கள். 

“என்னுடைய பதில் ஒரு பக்கம் இருக்கட்டும். கலைச்செல்வியின் பேச்சைக் கேட்டபோது எனக்குள் வேறு இரண்டு கேள்விகள் எழுந்தன. கலைச்செல்வியின் கலையார்வத்தைப் பார்த்து கலைச்செல்வி என்று பெயர் சூட்டினார்களா இல்லை கலைச்செல்வி என்று பெயர் சூட்டியதால் கலையார்வம் வந்ததா?” என்று சிரித்தபடி கேட்டாள். 

மீண்டும் எல்லோரும் சிரித்தார்கள். “சபாஷ், சரியான போட்டி. ஆமாம் இரண்டாவது கேள்வி என்ன?” மகிழ் சிரித்துக்கொண்டே கேட்டான். 

“அது உன்னைப் பற்றித்தான்” தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே கூற “என்னைப் பற்றியா? என்னிடம் என்ன கேட்கப் போகிறாய்?” என்று வியப்போடு கேட்டான். 

“நீ எப்போதும் சிரித்து மிகழ்ந்திருப்பதால் உனக்கு மகிழ் என்று பெயர் சூட்டினார்களா? இல்லை மகிழ் என்று பெயர் சூட்டியதால் நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாயா?” என்று கேட்டாள். 

அவ்வளவுதான் எல்லோரும் ஹோவெனச் சிரிக்க அங்கங்கே அமர்ந்து 

உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் இவர்களை நோக்கித் தலையைத் திருப்பினார்கள். இப்படி வெடிச்சிரிப்பு சிரிப்பதற்கு இங்கே என்ன நடந்தது என்று நினைத்து வியந்தார்கள். 

(நண்பர்களே, கலைச்செல்வியும் தமிழ்ச்செல்வியும் கேட்டது போன்று வேறு வினாக்களை உங்களால் உருவாக்க முடியுமா? குறைந்தது ஐந்து வினாக்களாவது உருவாக்குங்கள். உங்கள் நண்பர்களுக்கு வாசித்துக் காட்டுங்கள்.)


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 5

கலைச்செல்வி காத்திருந்தாள். தமிழ்ச்செல்விக்காகக் காத்திருந்தாள். இருவரும் பள்ளி நேரத்திற்குச் சற்று முன்னரே வருவார்கள். எதைப் பற்றியாவது பேசுவார்கள். 

பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள். 

தமிழும் கலையும் இணைபிரியா தோழிகளாகிவிட்டனர். பிற மாணவ மாணவியரும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து இருக்கவே விரும்பினார்கள். காரணம் எப்போது வேண்டுமானாலும் அவர்களின் பேச்சில் கலகலப்பு தொற்றிக்கொள்ளும். புதுமையான, சவாலான செயல்பாடுகள் உருவாகும். அந்தச் செயல்பாட்டை வீட்டினரிடமும் பிற நண்பர்களிடம் சொல்லிச் சொல்லிப் பெருமைபட்டுக்கொள்ளலாம் அல்லவா. 
எதிர்பாராத நேரத்தில், தமிழ்ச்செல்வி ஒரு செயல்பாட்டை எப்படி உருவாக்குகிறாள் என்பதற்கு கீழ்வரும் நிகழ்ச்சி நல்ல எடுத்துக்காட்டு.  

தமிழ்ச்செல்வி பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தாள். அவளைப் பார்த்ததும் கலைச்செல்வி அவளை நோக்கி எழுந்து சென்றாள். “என்ன தமிழ்? என்னாச்சு? ஏன் தாமதம்?” என்று கேட்டாள். தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே “இரண்டு பிரச்சனைகள்” என்றபடி இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டினாள். 
“என்ன? இரண்டு பிரச்சனைகளா? என்னென்ன பிரச்சனைகள்? சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்” என்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி நிமிர்ந்து நின்றாள். 

“ஹ் ஹ்ஹா... உன்னால் முடியாது கலை. இவை அப்படிப்பட்ட பிரச்சனைகள்” தமிழ்ச்செல்வி கலைச்செல்வியின் ஆர்வத்தைத் தூண்டினாள். 

“எனக்குத் தெரிந்தேயாக வேண்டும். தெரியாவிட்டால் தலை வெடித்துவிடு” என்று உரக்கச் சொன்னாள் கலைச்செல்வி. அவள் அப்படி உரக்கக் கத்தியதைக் கேட்டு அங்கங்கு அமர்ந்திருந்த மாணவ மாணவியர் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். 

தமிழ்ச்செல்வி எதிர்பார்த்ததும் அதைத்தானே. “இதோ அந்தப் பிரச்சனை. உங்களால் முடிந்தால் தீர்த்து வையுங்கள்” என்றபடி கீழ்வரும் வாக்கியங்களை நிறுத்தாமல், ஒரே மூச்சில் சொன்னாள். 

“அங்கிருந்தும் இங்கிருந்தும் மேகம் வந்தபோது இரண்டு பிரச்சனை உருவாயின. மழை வருமா வராதாவென்று 
மழை வராவிட்டால் பிரச்சனை இல்லை. மழை வந்தால் இரண்டு பிரச்சன நனைவோமா நனையமாட்டோமாவென்று 
நனையாவிட்டால் பிரச்சனையில்லை, நனைந்தால் இரண்டு பிரச்சனை சளிப்பிடிக்குமா பிடிக்காதாவென்று 
சளி பிடிக்காவிட்டால் பிரச்சனை இல்லைய பிடித்தால் இரண்டு பிரச்சனை மருத்துவரிடம் போகலாமா வேண்டாமாவென்று 
போகாவிட்டால் பிரச்சனை இல்லை. போனால் இரண்டு பிரச்சனை. மருந்து தருவாரா தரமாட்டாரா என்று
மருந்து தராவிட்டால் பிரச்சனை இல்லை. தந்தால் இரண்டு பிரச்சனை சாப்பிட வேண்டுமா வேண்டாமென்று... 
சாப்பிடாவிட்டால் பிரச்சனை இல்லை. சாப்பிட்டால் இரண்டு பிரச்சனை...” 

“ஐயோ ஐயோ போதும் போதும் தாங்க முடியவில்லை” என்று சுற்றிலும் சூழ்ந்து நின்றவர்கள் சிரித்துக்கொண்டே கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டனர்.  

“தமிழ், எப்படி உன்னால் இப்படி யோசிக்க முடிகிறது. அருமையான செயல்பாடு. அதுவும் நீ மூச்சுவிடால் பேசினாயே அதுதான் உச்சகட்டம். எங்களுக்கே மூச்சு முட்டியது.” கலைச்செல்வி தமிழ்ச்செல்வியைக் கட்டிக்கொண்டாள். 

அப்போது வகுப்பு துவங்குவதற்கான மணியடித்தது. அதைக்கேட்டதும் “மணியடிக்காவிட்டால் பிரச்சனை இல்லை. மணியடித்தால் இரண்டு பிரச்சனை ஆசிரியர் வருவாரா வரமாட்டாரா என்று. ஆசிரியர் வராவிட்டால் பிரச்சனை இல்லை, வந்தால் இரண்டு பிரச்சனை…” என்று கலைச்செல்வி சொல்ல எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். 

(கலைச்செல்வி கூறிய வாக்கியத்தைத் தொடர்ந்து உங்களால் எத்தனை வாக்கியங்கள் சொல்ல முடியும் என்று யோசியுங்கள்.)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 6

தமிழும் கலையும் பள்ளிப்பேருந்தை விட்டு இறங்கினார்கள். வகுப்பை நோக்கி நடந்தார்கள். 

“கூடாது... கூடாது... கவலைப்படக் கூடாது. 
மாட்டேன்... மாட்டேன்... நான் கவலைப்பட மாட்டேன். 
ம்ஹூம்... ம்ஹூம்... கவலைப்படக் கூடாது. கவலைப்படக் கூடாது. கவலைப்படவே கூடாது...”
தமிழ்ச்செல்வி தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.

“என்ன தமிழ்... என்ன முணுமுணுக்கிறாய்? என்னிடம் சொல்லக்கூடாதா?” கலைச்செல்வி கேட்டாள். 
“உன்னிடம் சொல்லாமலென்ன? இன்றைக்கு எல்லா ஆசிரியர்களிடமும் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப்போகிறேன். ஒரு வீட்டுப்பாடமும் செய்யவில்லை.... அதுதான் கவலைப்படாதே கவலைப்படாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்” 

“நீ ஒருநாள்கூட வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததில்லையே... ஏன் வீட்டில் ஏதாவது பிரச்சனையா?”

“ஆமாம். பிரச்சனைதான். ஆனால் அந்தப் பிரச்சனை என் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னால் கட்டுப்படுத்த முடியாததை நினைத்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” 

“அது சரிதான். நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று நம் விருப்பம்போல் நடக்காவிட்டால் நாம் கவலைப்படக் கூடாததுதான். ஆமாம்... உன் கட்டுப்பாட்டில் இல்லாத எந்த ஒன்று வீட்டுப்பாடம் செய்யாமல் உன்னைத் தடுத்தது. அதையறிய ஆர்வமாக இருக்கிறது” 

“அது கொல்லத்தில் இருக்கிறது. வெல்லத்தில் இல்லை. பசுமையில் இருக்கிறது. பதுமையில் இல்லை” 

“என்னது… என்னது... இது புதுப்பிரச்சனையாக இருக்கிறதே. ஒருமுறை திருப்பிச் சொல்லு” என்றாள் ஆர்வமாக.

தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே அதைத் திருப்பிச் சொல்ல கலைச்செல்வி எதுவும் புரியவில்லையென்பதுபோல் தலையையாட்ட அவர்கள் வகுப்பறையை அடைந்தார்கள். ஒரு பத்து நிமிடத்திற்குள் வகுப்பறையிலுள்ள நிறையப் பேர் “கொல்லத்தில் இருக்கிறது வெல்லத்தில் இல்லை. பசுமையில் இருக்கிறது பதுமையில் இல்லை. அது என்னவென்று தெரியுமா?” என்று மெல்லிய குரலில் கேட்கத் துவங்கினார்கள். 

இரண்டாம் பிரிவேளை முடிந்தது. இடைவேளைக்கான மணியடித்ததும் எல்லோரும் தமிழ்ச்செல்வி மற்றும் கலைச்செல்வியை நோக்கி ஓடி வந்து சுற்றும் கூடிநின்றார்கள். 

“வீட்டுப்பாடம் செய்யவிடாமல் உன்னைத் தடுத்த அந்தப் பிரச்சனை எது? அதைவிட கொல்லத்தில் இருப்பதும் வெல்லத்தில் இல்லாததும் எது? முதலில் அதைச் சொல்லு” என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். 

“சரி சரி சொல்கிறேன். அதற்கு முன்பு 
கிழவனிடம் இருக்கிறது. உழவனிடம் இல்லை. அவளிடம் இருக்கிறது அவனிடம் இல்லை என்பதற்கான விடையைக் கண்டுபிடித்து வாருங்கள். வீட்டுப்பாடம் செய்யவிடாமல் என்னைத் தடுத்த அந்தப் பிரச்சனயைப் பற்றி நான் சொல்கிறேன் என்று புன்னகைத்தபடியே கழிப்பறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். 

கூட்டம் மறுபடியும் கிழவனிடம் இருக்கிறது உழவனிடம் இல்லை. அவளிடம் இருக்கிறது. அவனிடம் இல்லை என்னும் வாக்கியங்களை முணுமுணுக்கத் தொடங்கியது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 7

கிழவனிடம் இருக்கிறது. உழவனிடம் இல்லை 
அவளிடம் இருக்கிறது. அவனிடம் இல்லை
அது என்ன? 

பலர் முணுமுணுத்துப் பார்த்தார்கள். பலர் குறிப்பேட்டில் வாக்கியங்களை எழுதி உற்றுப் பார்த்தார்கள். கிழவனிடம் கைத்தடி இருக்கும் அது உழவனிடம் இருக்காது. அவளிடம் பின்னல் இருக்கும். அது அவனிடம் இருக்காது. ஆனால் பின்னலுக்கும் கைத்தடிக்கும் என்ன தொடர்பு? அவை எப்படி வீட்டுப்பாடம் செய்யவிடாமல் தடுக்கும்? என்று பலவாறு ஊகித்தார்கள். யோசித்தார்கள். 

இரண்டாவது பிரிவேளை முடிந்ததும் எல்லோரும் தமிழ்ச்செல்வியை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள். 
“கைத்தடியா? பின்னலா? விடை என்ன?” என்று ஆர்வத்தோடு கேட்டார்கள். 

தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே கரும்பலகையின் அருகே போனாள். நான் சொன்ன ஒவ்வொரு வாக்கியத்திலும் இந்தத் தொடரையும் சேர்த்து விரிவுபடுத்துங்கள். விடை கண்டுபிடிக்க முடியும் என்றபடி “என்ற சொல்லில்” என்ற தொடரைக் கரும்பலகையில் எழுதினாள். எல்லோரும் மூச்சுவிட மறந்து நின்றார்கள். 

கிழவனிடம் இருக்கிறது என்ற வாக்கியத்தோடு “என்ற சொல்லில்” என்பதை சேர்த்தால் “கிழவனிடம் என்ற சொல்லில் இருக்கிறது. உழவனிடம் என்ற சொல்லில் இல்லை… ஓ... அதுவா... என்று குதித்தாள் நவ்யா. எல்லோரும் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள். 
நவ்யா நேராகக் கரும்பலகைக்கு அருகே சென்றாள். கீழ்வரும்படி எழுதினாள். 

கிழவனிடம் 
உழவனிடம் 

பாருங்கள். கிழவனிடம் என்ற சொல்லில் இருக்கிறது. ஆனால் உழவனிடம் என்ற சொல்லில் இல்லை. அப்படியானால் உ, ழ, வ, னி, ட, ம் ஆகிய எழுத்துகள் அல்ல. பிறகு கிழவனிடம் என்ற சொல்லில் இருப்பது கி என்ற எழுத்து மட்டுந்தானே. கி என்பதுதான் விடை. கூடவே அடுத்த சோடி சொற்களையும் எழுதினாள். 

அவளிடம்
அவனிடம் 

அவளிடம் இருக்கிறது. அவனிடம் இல்லை. அப்படியானால் அது ளி என்ற எழுத்து. இரண்டையும் சேர்த்தால் கிளி என்று கிடைக்கும். அதுதான் விடை. 
பாராட்டுகள் நவ்யா... அப்படியானால் என்னை வீட்டுப்பாடம் செய்யவிடாமல் தடுத்தவர் யார் என்று கண்டுபிடிக்க முடியுமே... தமிழ்ச்செல்வி சொல்ல 

கொல்லத்தில் 
வெல்லத்தில் கொ என்ற எழுத்து 
பதுமையில் 
பசுமையில் சு என்ற எழுத்து 
விடை கொசு 

குறிப்பேட்டைப் பார்த்துக்கொண்டே கூறினாள் கலைச்செல்வி. 

ம் நல்லது. அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று தமிழ்ச்செல்வி கேட்டாள். 

அதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது. புதுப் புதிர்கள் உருவாக்கப்போகிறோம். ஆடு, மாடு, நாய், கோழி, காகம்... போன்ற சொற்களுக்கான புதிரை உருவாக்குங்கள் பார்ப்போம் என்று 
சொல்லப்போகிறாய் அவ்வளவுதானே என்று சிரித்தாள் கலைச்செல்வி. கூடவே எல்லோரும் சிரித்தார்கள். 

(கலைச்செல்வி கூறிய சொற்களுக்கான புதிரை நீங்களும் உருவாக்குங்கள். உங்கள் நண்பர்களிடம் புதிர் போடுங்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 8

அடுத்தநாள். 
கலைச்செல்வி தமிழ்ச்செல்வியைப் பார்த்து கண்களால் சிரித்தாள். “நான் சொன்ன பொருள் உன் பையில் இருக்கிறதல்லவா?” என்று தமிழ்ச்செல்வி கேட்டாள். “மறப்பேனா...?” என்றபடி பையைத் தொட்டுக்காட்டினாள். “அதை வைத்து என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டாள். “நீயே பார்...” என்றாள் ஒரு குறும்புச் சிரிப்போடு. 

எல்லோரும் வகுப்புக்குள் நுழைந்தார்கள். ஆனால் கலைச்செல்வியும் தமிழ்ச்செல்வியும் நுழையவில்லை. அப்படியே சுவரின் ஓர் ஓரமாக ஒதுங்கினார்கள். கலைச்செல்வி தன் பையைத் திறந்தாள். அந்தப் பொருளை எடுத்தாள். தமிழ்ச்செல்வியும் பையைத் திறந்தாள். கறுத்த மேலாடையை எடுத்தாள். அதை அணிந்துகொண்டாள். வண்ணக் காகிதத்தால் சுற்றப்பட்ட ஒரு தடியை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டாள். கலைச்செல்வி தந்ததைத் தலையில் அணிந்தாள். வகுப்புக்குள் சட்டென நுழைந்தாள். 

“ஆகா… யார் இந்த மந்திரவாதி” என்று எல்லோரும் ஒரு நொடி வியந்தாலும் அது தமிழ்ச்செல்விதான் என்று அடுத்த நிமிடமே கண்டுகொண்டார்கள். ஏதோ ஒரு சுவையான செயல்பாட்டை அறிமுகப்படுத்தப் போகிறாள் என்பது புரிந்தது. எல்லோரும் ஆவலாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

தமிழ்ச்செல்வி கரும்பலகையின் அருகே சென்றாள். தலையில் அணிந்த தொப்பியை எடுத்தாள். தலையைக் குனிந்தாள். “எல்லோருக்கும் வணக்கம்” என்றாள். பிறகு பேசத் தொடங்கினாள். 

“வீட்டுப்பாடம் செய்யவிடாமல் என்னைத் தடுத்த கொசுவுக்கு நான் தண்டனை கொடுக்க நினைத்தேன். இறைவனை வணங்கினேன். வரம் பெற்றேன். கொசுவுக்குத் தண்டனை கொடுத்தேன். என்ன தண்டனை தெரியுமா? கொசுவை யானையாக மாற்றிவிட்டேன். அதைக் கேட்க வந்த நாயை நரியாக மாற்றினேன். நாயின் நண்பனான பூனையைப் புழுவாக மாற்றினேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். இதோ இப்போதே உங்கள் முன்னே மாற்றிக் காட்டுகிறேன்” என்றபடி சுண்ணக்கட்டியை எடுத்துக்கொண்டு கருபலகையில் எழுதத் தொடங்கினாள். 

கொசு பசு பனை யானை 

எழுதி முடித்தவள் “பார்த்தீர்களா… கொசுவை யானையாக மாற்றிவிட்டேன்” என்று சிரித்தாள். 

கலைச்செல்வியால் இந்தச் செயல்பாட்டின் விதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மொழிவிளையாட்டுக்கு ஒரு விதி இருக்குமே. அவள் யோசிக்கத் தொடங்கினாள். 
“என்ன கலை, விதியைக் கண்டுபிடிக்க முடியவில்லையல்லவா. ஓர் எடுத்துக்காட்டை மட்டும் வைத்து விதி உருவாக்குவது கடினம். அதனால் மேலும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருகிறேன். அதிலிருந்து உங்களால் இந்த விளையாட்டின் விதியைக் கண்டுபிடிக்க முடியும்” என்றபடி மீண்டும் எழுதத் தொடங்கினாள். 

“இதோ நான் நாயை நரியாக்கப் போகிறேன்” என்று கூறியவள் கீழ்வரும்படி எழுதினாள். 

நாய் காய் காரி நரி 

“இதோ பூனையைப் புழுவாக மாற்றப்போகிறேன்.” 

பூனை பனை பல் புல் புழு

“ஓ... ஒவ்வொரு முறையும் ஒரேயொரு எழுத்தை மட்டும் மாற்றுகிறாய். சரியா?” என்று உற்சாகமாகக் கேட்டாள் கலைச்செல்வி. 

“ஆம். ஒரு சொல்லின் ஓர் எழுத்தை மட்டும் மாற்றி அடுத்த சொல் உருவாக்க வேண்டும். பிறகு இரண்டாவது சொல்லின் ஓர் எழுத்தை மட்டும் மாற்றி மூன்றாவது சொல் உருவாக்க வேண்டும். எல்லா சொற்களும் பொருளுள்ள சொற்களாகவும் இருக்க வேண்டும். இவைதாம் இந்த மொழி விளையாட்டின் விதிகள். இப்போது நான் கூறும்படி சொற்களை மாற்ற முயற்சி செய்யுங்கள்.” என்றபடி கீழ்வரும் வாக்கியங்களைக் கரும்பலகையில் எழுதினாள்.  

1. கோழியைக் கிளியாக மாற்றுங்கள். 
2. கல்லைக் கூடையாக மாற்றுங்கள். 
3. காயைக் கனியாக மாற்றுங்கள். 

எங்கே முயற்சி செய்யுங்கள். பார்க்கலாம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 9

எல்லோரும் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். கைககள் பாத்திரத்திற்குப் பாத்திரம் தாவிக்கொண்டிருந்தன. மாங்காய்ப் பச்சடி ஆகா... ஆகா.. அடுத்தமுறை அம்மாவிடம் சொல்லி தனிப்பாத்திரத்தில் கொண்டு வா கலை என்ற வாசுகி பாத்திரத்திலுள்ள பச்சடியை வழித்துச் சாப்பிட்டாள். 

புரியுது புரியுது அப்படியானால் அடுத்தமுறை எல்லோரிடமும் இரண்டு பாத்திரங்கள் இருக்க வேண்டும் இல்லையா... கலைச்செல்வி சிரித்துக்கொண்டாள். 

என்னிடம் இரண்டு பாத்திரங்கள் இருக்கின்றனவா என்று கேட்டால் இருக்காது. ஆனால் உண்மையில் இரண்டு பாத்திரங்கள் இருக்கும் என்று புதிர் போட்டாள் தமிழ்ச்செல்வி. 

இதென்ன விளையாட்டு தமிழ்? இருக்கும் என்கிறாய் ஆனால் இருக்காது என்கிறாய்? வாசுகி உண்மையான சந்தேகத்தோடு கேட்டாள். 

ஆமாம். நான் சொன்னது அத்தனையும் உண்மை. இரண்டு பாத்திரங்கள் இருக்கும். ஆனால் இருக்காது. தமிழ்ச்செல்வி விடாமல் குழப்பினாள். 

ம்ம் புரிந்துவிட்டது, புரிந்துவிட்டது... கலைச்செல்வி இருந்த இடத்திலிருந்து எழுந்தாள். ஒரு பத்திரத்திற்குள் இன்னொரு பாத்திரம் இருந்தால்... பார்ப்பதற்கு ஒரு பாத்திரம் போல் இருக்கும் ஆனால் திறந்தால் இரண்டு பாத்திரங்கள் இருக்குமே. இல்லையா தமிழ்.... 
அதேதான் என் அறிவுக்கொழுந்தே... ஆனால் "இருக்கும் ஆனால் இருக்காது" என்பது ஒரு தமிழ்ச்செயல்பாடு. தண்ணீரை வீணாக்காமல் சீக்கிரமாகப் பாத்திரங்களைக் கழுவிவிட்டு வகுப்புக்கு வந்தால் அந்தச் செயல்பாட்டை அனுபவிக்கலாம். வாங்க... என்றபடி குழாயடியை நோக்கி நடந்தாள். 

அதற்குள் செய்தி பல காதுகளுக்கு மாறியது. தமிழ்ச்செல்வி வகுப்புக்குள் நுழைந்தபோது பிற வகுப்பு மாணவர்களும் உள்ளே வந்து ஆர்வத்தோடு அமர்ந்திருந்தார்கள்.

தமிழ்ச்செல்வி கையில் சுண்ணக்கட்டியோடு கரும்பலகைக்கு அருகே நின்றிருந்தாள். எல்லோரையும் ஒருமுறை பார்த்தாள். 

"உங்கள் கையில் குறிப்பேடும் பேனாவும் இருக்கின்றன அல்லவா. இந்த முறை அடுத்த வகுப்பிலிருந்து வந்தவர்களுக்கு முதல் வாய்ப்பு. நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரைச் சொல்லுங்கள்" என்றாள். அவர்கள் சொல்லச் சொல்ல தமிழ்ச்செல்வி ஒன்றுக்குக் கீழ் மற்றொன்று என எழுதிக்கொண்டே வந்தாள். அப்பெயர்கள் இதோ 

முகம்மது இப்ராஹிம் 
சகாய மேரி 
கலைவாணி 
ரூபேஷ் குமார் 
சந்திரசேகர் 
பாத்திமா பீகம் 
அந்தோணிச்சாமி 
அபிநயா 
ஆனந்தராணி 
செல்வராஜ் 

இதில் என்ன இருக்கும், என்ன இருக்காது எதுவும் புரியவில்லையே, கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 
"அட இருங்க இருங்க... நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பெயர்களாவது எழுத வேண்டும். ஆனால் அப்பெயர்களிலுள்ள சொற்கள் இங்கு எழுதப்பட்ட பெயர்களிலுள்ள சொற்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இதே பெயர்களாக இருக்கவும் கூடாது. அதாவது நீங்கள் எழுதும் பெயர்கள் இதில் இருக்கும். ஆனால் நேரடியாகப் பார்த்தால் இருக்காது. தேடினால்தான் கிடைக்கும். எங்கே எழுதுங்கள் பார்ப்போம்" என்றபடி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தாள் தமிழ்ச்செல்வி. 

எல்லோரும் கரும்பலகையில் எழுதிய பெயர்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களையறியாமலே அப்பெயர்களை அவர்கள் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தார்கள். 

(நண்பர்களே, உங்களால் இச்சொற்களைப் பயன்படுத்தி ஐந்து புதிய பெயர்கள் எழுத முடியுமா? முயற்சி செய்யுங்கள்.)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 10

“இருக்காது; ஆனால் இருக்கும்” என்று தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே சொன்னாள். அப்போதே கலைச்செல்விக்கு விளங்கிவிட்டது. இருந்தாலும் அவள் வெளிக்காட்டவில்லை. பிறர் என்ன செய்கிறார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவர்கள் எல்லோரும் அப்பெயர்களைப் பலமுறை வாசிப்பதைப் பார்த்தாள். உதடுகள் பெயர்களை முணுமுணுக்கின்றன. கருவிழிகள் உயர்ந்து தாழ்கின்றன. சட்டென “ஆஹா... கிடைத்துவிட்டது” என உற்சாகமாக குரல் எழுப்பினாள் வாசுகி.
“ஐயோ வாசுகி... விடையைச் சொல்லாதே... விடையைச் சொல்லாதே… எல்லோரும் எழுதட்டும்” என்று தமிழ்ச்செல்வி அவசர அவசரமாகக் கூறினாள். 

ஒருவர் விடையைக் கண்டுபிடிக்கிறார். அவர் உரக்கக் கூறினால் அது அடுத்தவர்களுக்கு கண்டுபிடிப்பதின் மகிழ்ச்சியை கிடைக்காமல் செய்துவிடும் என்பது தமிழ்ச்செல்வியின் கருத்து. 

இந்த இடத்தில் மட்டும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் தங்கள் திறமைக்கேற்ப, வேகத்திற்கேற்ப மட்டுமே தீர்வுகளைக் கண்டுபிடிக்க முடியும் அல்லவா. அதனால் அவர்களுக்கும் அம்மகிழ்ச்சி கிடைக்கவேண்டுமானால் முதலில் கண்டுபிடித்தவர்கள் சொல்லாமல் இருக்க வேண்டும். தமிழ்ச்செல்வி அப்படி அவசரப்பட்டது அதனால்தான். 

மெல்ல மெல்ல எல்லோரும் குறிப்பேடுகளில் ஒரு புன்சிரிப்போடு சொற்களை எழுதத் தொடங்கினார்கள். 

“ஓஹோ... இதுதானா அந்த இரகசியம், ஆகா இது நல்ல செயல்பாடாக இருக்கிறதே, பரவாயில்லையே நாம் நினைக்காதே பெயர்கள் வருகின்றனவே...” என்றெல்லாம் முணுமுணுப்பது அடுத்தவர்கள் காதுகளுக்குக் கேட்டது. 

சகாய ராணி 
ஆனந்த குமார் 
பாத்திமா சேகர் 
செல்வா வாணி
ரூபேஷ் மேரி
அந்தோணிராஜ் 

என கரும்பலகையில் இல்லாத பெயர்களை அவர்கள் எழுதத் தொடங்கினார்கள். குறைந்தது ஐந்து பெயர்களை எழுதினால் போதும் என்று சொன்னாலும் பலரும் பத்து பெயர்களுக்கு மேல் எழுதிக்கொண்டிருந்தார்கள். இதுதான் நல்ல செயல்பாட்டின் பண்பு என்று நினைத்துக்கொண்டாள் தமிழ்ச்செல்வி. 

சிலருக்கு அவர்கள் எழுதிய பெயர்களை வாசிக்க வாய்ப்பளித்தாள். அவர்கள் வாசிக்க வாசிக்க குழுமியிருந்தவர்கள் “இந்தப் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறது. நான் இதுவரை கேட்டதேயில்லை” என்று சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் இதழோரம் புன்னகை தவழ்ந்தது. 

அடுத்து தமிழ்ச்செல்வி தோழிகளிடமும் தோழர்களிடமும் பத்து ஊர்ப்பெயர்களைச் சொல்லச் சொன்னாள். அவர்கள் கூறிய ஊர்ப்பெயர்கள் இதோ

கன்னியாகுமரி
திருநெல்வேலி 
தருமபுரி 
காஞ்சிபுரம் 
கோயம்புத்தூர் 
நாகர்கோவில்
ஏற்காடு 
ஆனைகட்டி 
கிருஷ்ணகிரி
திருச்சிராப்பள்ளி

“நண்பர்களே, இப்பெயர்களிலுள்ள சொற்களைப் பயன்படுத்தி பத்து ஊர்ப்பெயர்கள் எழுதுங்கள். ஆனால் அப்பெயர்கள் இப்பட்டியலில் இருக்கவும் கூடாது. ஆம். இருக்காது; ஆனால் இருக்கும்” என்றாள் தமிழ்ச்செல்வி. 

எல்லோரும் உற்சாகமாக எழுதத் தொடங்கினார்கள். 
நண்பர்களே நீங்களும் எழுதுங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 11

வழக்கம்போல் மதிய உணவு இடைவேளையில் தோழிகள் தமிழ்ச்செல்வியைத் தேடி வந்தார்கள். இன்று என்ன செயல்பாடு செய்யப்போகிறாள் என்பதையறிய ஆவலாக இருந்தார்கள். வந்தவர்களிடம் குறிப்பேடும் பேனாவும் இருந்தது. அதைக் கவனித்த தமிழ்ச்செல்வியின் இதழோரம் ஒரு புன்னகை விரிந்து மறைந்தது.  

நாம் சொல்லாமலே, நம் செயல்கள் செய்தியைக் கடத்துகின்றன. அது செயல்களின் வெற்றியைக் குறிக்கும் அறிகுறி என்று நினைத்துக்கொண்டாள். 

தமிழ்ச்செல்வி எழுந்தாள். தோழிகள் முன் நின்றாள். கலைச்செல்வி எழுந்தாள். கரும்பலகைக்கு அருகே சென்று நின்றாள். அவள் கையில் சுண்ணக்கட்டி இருந்தது. தொண்டையைச் சரிசெய்துகொண்டு தமிழ்ச்செல்வி பேசத்தொடங்கினாள். 

“நான் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். நேரம் மாலை நான்கு மணியிருக்கும். நல்ல வெயில். ஆனால் சட்டென அங்கிருந்தும் இங்கிருந்தும் மேகம் வந்தது. வானம் கறுத்தது. மின்னல் மின்னியது. இடி இடித்தது. சட்டென சோவென மழை கொட்டத்தொடங்கியது. நான் அருகில் கண்ட கடைத்திண்ணையில் ஒதுங்கினேன். 

மழை எப்போது விடும் என்று காத்திருந்தேன். கனமழை, ஒவ்வொரு துள்ளியும் உடம்பில் பட்டால் கல் வந்து விழுவது போலிருந்தது. அதனால் மழை ஓய்வதற்காக காத்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் ஆனது. பத்து நிமிடங்கள் ஆனது. அரை மணிநேரமும் ஆனது. மெல்ல மழை ஓய்ந்தது. வானம் தெளிந்தது. சட்டென வெயிலும் அடிக்கத் தொடங்கியது. நான் மெல்ல வெளியே வந்தேன். மீண்டும் மழை வருமா என்று தெரிந்துகொள்ள வானத்தைப் பார்த்தேன். அப்போதுதான் அந்த அதிசயத்தைக் கண்டேன். என்னைப் போலவே எல்லோரும் அந்த அதிசயத்தைப் பார்த்தார்கள். அது என்னவென்று தெரிந்துகொள்ள ஆசையா நீங்களே கண்டுபிடியுங்கள்.” என்றபடி கலைச்செல்வியைப் பார்த்தாள். அவள் கீழ்வரும் வாக்கியத்தை அமைதியாக எழுதினாள்.

தனம் வெயிலில் வாடி விழுந்தாள் 

தோழிகள் எல்லோரும் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒருவரைப் பார்த்துக்கொண்டார்கள். நேரம் மெல்ல நகர்ந்தது. யாரும் குறிப்பேட்டைத் திறக்கவில்லை.

அதைக் கவனித்த தமிழ்ச்செல்வி “சரி, உங்களுக்கு நான் வேறோர் எடுத்துக்காட்டு சொல்கிறேன். அதிலிருந்து உங்களுக்கு இந்தச் செயல்பாட்டின் விதியை உருவாக்க முயற்சி செய்யுங்கள்” என்றபடி கீழ்வரும் நிகழ்ச்சியைக் கூறினாள். 

“நேரம் மாலை ஆறு மணி இருக்கும். நான் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். தெருவின் ஒரு பக்கம் மட்டும் வீடுகள் இருந்தன. மறுபக்கம் புதர் மண்டிக் கிடந்தது. நான் எதையோ நினைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தேன். அப்போது காய்ந்த சருகுகளை யாரோ மிதிப்பதுபோல் சத்தம் கேட்டது. நடப்பதை நிறுத்திவிட்டு நான் திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. நான் மீண்டும் நடக்கத் தொடங்கினேன். மீண்டும் காய்ந்த சருகுகள் சலசலக்கும் ஓசை கேட்டது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரையும் காணவில்லை. மெல்ல மெல்ல எனக்குள் ஒரு பயம் உருவானது. நான் அசையாமல் நின்றேன். நான் பயந்ததுபோலவே நடந்தது. நான் ஏன் பயந்தேன் என்று தெரியுமா? நீங்களே கண்டுபிடியுங்கள்” என்றபடி கலைச்செல்வியைத் திரும்பிப் பார்த்தாள்.

கலைச்செல்வி கீழ்வரும் வாக்கியத்தை எழுதினாள். அவளுடைய முகத்திலும் ஒரு புன்சிரிப்பு விரிந்தது. 

பார்வதி படிக்கும் புத்தகம்

 மெல்ல குழந்தைகளுக்கு இந்த விளையாட்டின் விதி புரிந்தது. அவர்கள் குறிப்பேட்டைத் திறந்து விடையை எழுதிவிட்டு எழுந்து நின்றார்கள். தமிழ்ச்செல்வி அவர்களின் குறிப்பேட்டைப் பார்த்தாள். சிலரிடம் “பாராட்டுகள் நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்” என்றாள். சிலரிடம் “இல்லை. இது தவறு. மீண்டும் முயற்சி செய்யுங்கள்” என்றாள். 

நண்பர்களே, நீங்களும் விடைகளைக் கண்டுபிடியுங்கள். விதியை உருவாக்குங்கள். நீங்கள் உருவாக்கிய விதி சரியா என்றறிய அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 12

தனம் வெயிலில் வாடி விழுந்தாள் – வானவில் 
பார்வதி படிக்கும் புத்தகம் – பாம்பு  

என்றெழுதிய தோழியின் அருகே சென்றாள் தமிழ்ச்செல்வி. “நீங்கள் எழுதிய விடைகள் சரி. இருப்பினும் கண்டுபிடித்த முறையை எங்களுக்கு விளக்கிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டாள். 
“ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒவ்வொரு எழுத்தை எடுக்க வேண்டும். பிறகு அவற்றைப் பலவிதங்களில் அடுக்கிப் பார்க்க வேண்டும். அப்போது விடை கிடைக்கும்” என்றார் அவர்.

“எனக்கும் இதே விடைகள் கிடைத்திருக்கின்றன...” என்ற குரல் அங்கும் இங்கும் கேட்டன. “நல்லது. மேலும் சில எடுத்துக்காட்டுகள் தேவையா? இல்லை அடுத்த நிலைக்குப் போவதா?” என்று கேட்டாள். 

“மேலும் ஓர் எடுத்துக்காட்டு வேண்டும். விடை கிடைக்கும் வழியையும் விளக்கிச் சொல்ல வேண்டும்” என்றாள் சிறுமி ஒருவர். அதைக் கவனித்த தமிழ்ச்செல்வி “நிச்சயமாகச் சொல்கிறேன்” என்றபடி கீழ்வரும் நிகழ்ச்சியைக் கூறினாள். 

“நான் சென்னை மெரீனா கடற்கரையோரமாக நடந்துகொண்டிருந்தேன். மாலைநேரத் தென்றால் காற்று என் முகத்தை தழுவிச் சென்றது. கடல் நீரின் உப்புச்சுவையை என் நா உணர்ந்தது. கால் பாதங்களை நனைத்துச் சென்ற கடல்நீரின் குளர்ச்சி என் உடலெங்கும் பரவியது. கைகளை மார்போடு கட்டியபடி நான் நடந்துகொண்டிருந்தேன். சட்டென என் முன்னால் ஓர் உருவம் தோன்றியது. அதன் இடுப்புக்குக் கீழே மீனின் உருவம். இடுப்புக்கு மேல் அழகிய பெண்ணின் உருவம். ஆகா அழகான கடற்கன்னி. நான் அதன் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென எங்கிருந்தோ வந்த காற்று பலமாக சுழன்று வீசியது. அவ்வளவுதான் அந்த உருவம் அப்படியே கரைந்து காணாமல் போனது. அப்படியானால் அந்த உருவம் எந்தப் பொருளால் செய்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான வாக்கியம் இதோ” என்று கீழ்வரும் வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினாள். 

குணம் மனிதனுக்கு நல்லது

உடனே சிலர் விடை தெரியும் என்பதன் அடையாளமாக கையை உயர்த்தினர். “இருங்கள் இருங்கள். அந்தச் சிறுமிக்கு வாய்ப்புக்கொடுப்போம்” என்று கூறிய தமிழ்ச்செல்வி சிறுமியை நோக்கி நடந்தாள். 

“உங்களுக்கு விடை கிடைத்ததா?” என்று கேட்டாள். 
“உறுதியாகத் தெரியவில்லை. நீங்கள் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தீர்கள் என்று கூறியதால் அக்கடற்கன்னியின் சிலையை மணலால் செய்திருப்பார்கள். பலமாக காற்று வீசியதால் சிலை உடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்” அச்சிறுமி தயக்கத்தோடு கூறினார்.  

“ஆகா… அருமை அருமை. பாராட்டுகள். அப்புறம் என்ன சந்தேகம்?” 

“மணல் என்ற விடையை இந்த வாக்கியத்திலிருந்து எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான் புரியவில்லை.” 
“ஓ... ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒவ்வோர் எழுத்தை எடுத்து மணல் உருவாக்க முடிந்தால் நீங்கள் நினைத்த விடை சரியென்று எடுத்துக்கொள்ளலாம். குணம் என்ற சொல்லிலிருந்து “ண” என்ற எழுத்து. மனிதனுக்கு என்பதிலிருந்து “ம”, நல்லது என்ற சொல்லிலிருந்து “ல்.” இம்மூன்று எழுத்துகளையும் அடுக்கி சொல்லுருவாக்க முயற்சித்தால் நமக்கு மணல் கிடைக்கிறதே. அப்படியானால் அதுதானே விடை” என்றபடி கரும்பலகை நோக்கிச் சென்றாள். 

“நான் இப்போது குறிப்புக்கான நிகழ்வுகளைச் சொல்லப்போவதில்லை. ஆனால் வாக்கியம் மட்டும் எழுதுவேன். ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒவ்வோர் எழுத்தை எடுத்து, அடுக்கி சொற்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய சொல்லும் உங்கள் நண்பர்கள் உருவாக்கிய சொல்லும் ஒன்று தானா என்று பரிசோதியுங்கள். இதோ அந்த வாக்கியம்” என்றபடி கீழ்வரும் வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினாள். 

குரங்கின் கையில் குல்லா

நீங்களும் சொல்லுருவாக்குங்கள். உங்கள் நண்பர் உருவாக்கிய சொல்லுடன் ஒப்பிடுங்கள்.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 13

“நான் இப்போது குறிப்புக்கான நிகழ்வுகளைச் சொல்லப்போவதில்லை. ஆனால் வாக்கியம் மட்டும் எழுதுவேன். ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒவ்வோர் எழுத்தை எடுத்து, அடுக்கி சொற்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய சொல்லும் உங்கள் நண்பர்கள் உருவாக்கிய சொல்லும் ஒன்று தானா என்று பரிசோதியுங்கள். இதோ அந்த வாக்கியம்” என்றபடி கீழ்வரும் வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினாள்.
 
குரங்கின் கையில் குல்லா

நீங்களும் சொல்லுருவாக்குங்கள். உங்கள் நண்பர் உருவாக்கிய சொல்லுடன் ஒப்பிடுங்கள் என்று தமிழ்ச்செல்வி சொன்னதுமே சில நண்பர்கள் இதில் மறைந்திருக்கும் சொல்லைக் கண்டுபிடித்துவிட்டதின் அடையாளமாக கைகளை உயர்த்தினர். 

கலைச்செல்வியோ முன்பு சந்தேகம் கேட்ட அந்தச் சிறுமியைக் கவனித்துக்கொண்டிருந்தாள். சிறுமி இம்முறை குயில் என்று சரியாக எழுதியிருந்ததைப் பார்த்தாள். கலைச்செல்வி தமிழ்ச்செல்வியைப் பார்த்துப் புன்னகைத்தாள். தமிழ்ச்செல்வியும் பதிலுக்குப் புன்னகைத்தாள். 

ஒரு சிறுமி சந்தேகம் கேட்டபோது, கண்டுபிடிக்கும் வழியை விளக்கிச் சொன்னபோது, அடுத்துக் கொடுக்கும் புதிர் வாக்கியம் எளிமையாக இருக்க வேண்டும் என்று தமிழ்ச்செல்வி நினைத்திருக்கிறாள். அது அச்சிறுமிக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்று முடிவு செய்து இவ்வெளிய வாக்கியத்தை உருவாக்கியிருக்கிறாள் என்பதைக் கலைச்செல்வி புரிந்துகொண்டாள். அப்படி நான் புரிந்துகொண்டேன் என்பதைக் காட்டவே அவள் தமிழ்ச்செல்வியைப் பார்த்துப் புன்னகைத்தது. 

தமிழ்ச்செல்வி பதில் சொல்வதற்கான வாய்ப்பை அந்தச் சிறுமிக்கு வழங்கினாள். குயில் என்று அச்சிறுமி கூறியதும் தமிழ்ச்செல்வியும், கலைச்செல்வியும் கரவொலி எழுப்பிப் பாராட்டைத் தெரிவித்தார்கள். உடனே பிற தோழிகளும் கரவொலி எழுப்பினார்கள். 
“மணல் என்ற விடையைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு நிகழ்ச்சியைக் கூறியது நினைவிருக்கிறதா?” தமிழ்ச்செல்வி கேட்டாள். 

“ஆம்... கடற்கரையில் நடந்ததும், கடற்கன்னியின் சிலையைப் பார்த்ததும் எல்லாம் சொன்னாய்.” சிலர் கூறினார்கள். 

“ஆம். அதுபோல் குயில் என்பதை ஊகிப்பதற்கான ஒரு நிகழ்ச்சியை உங்களால் சொல்ல முடியுமா? அதுதான் உங்களுக்கான சவால். பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சிரித்தபடி கூறினாள் தமிழ்ச்செல்வி. 

பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளைக் கேட்க ஆவலாக இருந்தாள் கலைச்செல்வி.

வகுப்பில் இருந்தவர்கள் குயில் என்ற விடையை ஊகிப்பதற்கேற்ற ஒரு நிகழ்ச்சியை எப்படி உருவாக்குவது என்று யோசிக்கத் தொடங்கியிருந்தனர். வகுப்பு அமைதியானது. சிலர் தலையை உயர்த்தி விட்டத்தைப் பார்த்தார்கள். சிலர் பேனாவால் கன்னத்தைத் தட்டத் தொடங்கினார்கள். சிலர் இரண்டு கைகளிலும் முகத்தை வைத்துக்கொண்டு கீழே பார்த்தார்கள். 

நேரம் மெல்ல கரைந்தது. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் என் மெல்ல நகர்ந்தது. அங்கங்கு ஓரிருவர் குறிப்பேட்டில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அப்படி எழுதிக்கொண்டிருக்கும்போதே சிலரின் முகங்களில் புன்சிரிப்பு மலர்வதையும் கண்டாள். அப்படிச் சிரித்தவர்களிடம் நிகழ்ச்சியை வாசிக்கச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள் தமிழ்ச்செல்வி. 

அவர்கள் கூறிய நிகழ்ச்சி என்ன? 
அடுத்த பதிவில் பார்ப்போம்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 14

குயில் என்பது சொல். இது மூன்று எழுத்துச் சொல். எனவே மூன்று சொற்கள் கொண்ட வாக்கியம் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லில் இருந்தும் ஒவ்வோர் எழுத்தை எடுத்து இணைத்தால் குயில் என்பது கிடைக்க வேண்டும் என்று தமிழ்ச்செல்வி கூறியதும் தோழிகள் வாக்கியங்கள் எழுதினார்கள்.
 
“குரங்கு கையில் குல்லா” என்பது ஓர் எடுத்துக்காட்டு.
 
தோழிகளுள் சிலர் வாக்கியங்களை வாசிக்க அனைவரும் ஆர்வத்தோடு அவற்றைக் கவனித்தார்கள். 
“சரி. இனி குயில் என்பதை ஊகிப்பதற்கான நிகழ்ச்சியை எழுத வேண்டும். மணல் என்ற சொல்லை ஊகிக்க கூறிய நிகழ்ச்சி நினைவிருக்கறதா?
மாலை வேளையில் கடற்கரையில் நடந்ததும். கண்முன்னே ஓர் அழகிய கடற்கன்னியின் உருவம் தெரிந்ததும் காற்றடித்ததும் அது கலைந்து போனதும் உங்கள் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். நான் அந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு காற்றடித்தும் அந்த உருவம் கலைந்துபோனால் அந்த உருவத்தை எந்தப் பொருளால் செய்திருப்பார்கள் என்ற கேள்வியையும் நான் கேட்டேன். அதுபோல் நீங்களும் குயில் விடையாக வரும் ஒரு நிகழ்ச்சியை ஊகிக்க வேண்டும். அதை விளக்கமாக எழுத வேண்டும். இறுதியில் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும்” என்றாள் தமிழ்ச்செல்வி. 

உடனே கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. தோழிகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக தமிழ்ச்செல்வி அவர்களின் அருகே சென்றாள். எல்லோரும் நிகழ்ச்சியை விரிவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். 

ஓ... நீங்கள் மிகச் சுருக்கமாக எழுதியிருந்தீர்களா... நான் விளக்கமாகக் கூறினேன். என்றதும் நிகழ்ச்சியை விரிவாக்கி எழுதுகிறீர்கள். நல்லது நல்லது மேலும் உங்களுக்குச் சற்று நேரம் தேவைப்படலாம். எடுத்துக்கொள்ளுங்கள் என்றாள் சிரித்தபடி.  

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். அங்கங்கு சிலர் தலையை உயர்த்தித் தமிழ்ச்செல்வியைப் பார்த்தார்கள். ஆகா எழுதி முடித்துவிட்டீர்களா எங்கே நீங்கள் கற்பனை செய்த நிகழ்ச்சியை வாசியுங்கள். கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று உற்சாகமூட்டினாள். ஒரு தோழி வாசித்த நிகழ்ச்சி இதோ:

“கோழி கூவியது. கதிரவன் உறக்கம் கலைந்து கண்விழித்தான். கிழக்கு வெளுத்தது. காலை நேரம் ஆனது. பச்சைமலைக் காடும் உறக்கத்திலிருந்து விழித்தது. காகம் கரைந்தது. மயில் ஆடியது. முயல் தாவியது. குரங்கு ஊஞ்சல் ஆடியது. கோழிகள் இரைதேடப்புறப்பட்டன. தவளைக் குளத்தில் குதித்தது. எங்கும் மகிழ்ச்சி. 
அப்போது ஒருவர் கூவினார். வருத்தத்தோடு கூவினார். அவர் குரலில் அப்படியொரு சோகம். அவர் கூவியதைக் கேட்டால் நமக்கும் கவலை வரும். அப்படி கவலையோடு கூவியது யார்? அதற்கான விடை குரங்கு கையில் குல்லா என்ற வாக்கியத்தில் இருக்கிறது” என்று வாசித்து முடித்தாள். 

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் தங்களையறியாமல் கரவொலி எழுப்பினார்கள். 

நண்பர்களே, உங்களுக்கு ஒரு வேலை. 
குரங்கு என்ற சொல்லைக் கண்டுபிடிப்பதற்கேற்ற ஒரு வாக்கியத்தை உருவாக்குங்கள். கூடவே ஒரு நிகழ்ச்சியையும் கற்பனை செய்து எழுதுங்கள். உங்கள் நண்பர்களுக்குக் காட்டுங்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பரிசோதியுங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 15

கலைவாணி எல்லோரையும் பார்த்தாள். தொண்டையைச் செருமினாள். பிறகு பேசத் தொடங்கினாள். தமிழ்ச்செல்வி ஒரு குறிப்பேட்டுடன் வகுப்பின் பின்னால் அமர்ந்திருந்தாள். 

"செந்தில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவன். அவன் நாளும் பள்ளிக்கூடத்திற்குப் பேருந்தில் வந்து போவது வழக்கம். பள்ளி விட்ட பின் சற்று நேரம் கழிந்துதான் பேருந்து வரும். அந்த இடைவெளியில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். 
செந்திலுக்கு எப்போதும் தமிழ்ப்பாடத்தில்தான் அதிக மதிப்பெண் கிடைக்கும். மொழிப்பாட வகுப்பு என்றால் அவனுக்குக் கொள்ளை இன்பம் தேன் குடிப்பது போல. 
தமிழ் மொழியின் பழமையும் வளமையும் நினைத்து வியந்து போவான். தமிழ் மொழியிலுள்ள சில சொற்களைப் போல அழகான சொற்கள் வேறு எந்த மொழியிலும் இருக்கவே இருக்காது என்பான்.

நண்பர்களுடன் ஓடியாடி விளையாடுவதை விட சொல் விளையாட்டுகள், அந்தாதி விளையாட்டுகள், விடுகதைகள் உருவாக்கி் விளையாடுதல் போன்றவைதான் அவனுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகள். 

நிறைய புத்தகங்கள் வாசிப்பதாலும் வாராவாரம் வரும் சிறுவர் இதழ்களைத் தொடர்ந்து வாசிப்பதாலும் செந்திலின் சொல்லாற்றல் வளர்ந்திருந்தது. வகுப்பில் நண்பர்கள் ன, ண வரும் சொற்களைத் தவறான உச்சரிப்புடன் வாசித்தால் அவர்களின் உச்சரிப்பைத் திருத்துவதற்காக அவனே அழகான வாக்கியங்கள் உருவாக்குவான். அவ்வாக்கியத்தை நண்பர்களிடம் கூறும்படி சொல்லுவான். 

"பனியில் பணி செய்யும் மனிதன்தான் மணி" என்ற வாக்கியம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதுபோல் சொற்களைப் புதுமையான முறையில் பயன்படுத்தி நண்பர்களுடன் பேசுவதும் அவனுக்குப் பிடித்தமான பொழுது போக்கும். "நான் கடலை தின்றபடி கடலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்" என்ற வாக்கியம் ஓர் எடுத்துக்காட்டு. 

ஒரு நாள் நண்பர்களின் கட்டாயத்திற்கு வழங்கி ஓடியாடி விளையாட ஒப்புக்கொண்டான். தொட்டு விளையாட்டு. ஓடிச்செல்லும் ஒருவரை விரட்டித் தொட வேண்டும். செந்தில் ஓடினான். வேகமாக ஓடினான். சட்டென்று கால்விரல் வலித்தது. "ஆ அம்மா" என்று அலறியபடி ஓட்டத்தை நிறுத்திய செந்தில் காலைப் பார்த்தான். ஒரு விரலிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

நண்பர்கள் அவனை அழைத்துக்கொண்டு பக்கத்திலுள்ள மருத்துவமனைக்குக் சென்றார்கள். மருத்துவரும் கால் விரலில் பட்ட காயத்தைத் துடைத்துக் கட்டியபடியே செந்திலிடம் பேச்சுக் கொடுத்தார். 

"காலில் எப்படி காயம் ஆனது? உன் ஊர் எங்கே?" என்னும் இரண்டு கேள்விகளைக் கேட்டார். 

கால் வலிக்கும்போது செந்திலின் திமிழார்வம் குறையவில்லை. அவ்விரண்டு கேள்விகளுக்கும் செந்தில் பதில் சொன்னான். அதுவும் ஒரேயொரு சொல். அந்த சொல்லில் இரண்டு கேள்விகளுக்குமான பதில் இருந்தது. 

செந்தில் சொன்ன பதில் என்ன? 

என்றபடி கலைச்செல்வி பேச்சை நிறுத்தினாள். அவள் முன்நெற்றியில் வேர்வை முத்துகள் தோன்றியிருந்தன. அவள் தமிழ்ச்செல்வியைப் பார்த்தாள். எப்படி நான் பேசியது என்று கண்ணால் கேட்டாள். தமிழ்ச்செல்வி கட்டை விரலை உயர்த்தி நன்றாகப் பேசியிருப்பதாகச் சொன்னாள். அப்போதுதான் கலைச்செல்வியின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது. 

காலில் காயம் பட்டது எப்படி? உன் ஊர் எங்கே? என்னும் இரண்டும் கேள்விக்கும் செந்தில் ஒரே சொல்லில் பதில் சொன்னான். அந்தச் சொல் என்னவாக இருக்கும்? 
யோசியுங்கள். அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 16

காலில் காயம் பட்டது எப்படி? 
உன் ஊர் எங்கே? 

ஆகிய இரண்டு கேள்விக்கும் செந்தில் ஒரே சொல்லில் பதில் சொன்னான். அந்தப் பதில் என்னவாக இருக்கும் என்று கலைச்செல்வி கேட்டதும் வகுப்பு ஒரு நிமிடம் அமைதியானது. 

எல்லோரும் ஆழ்ந்து யோசிப்பது தெரிந்தது. ஒருமுறை கூட கேள்வியை விளக்கிச் சொல்ல வேண்டும் என்று நினைத்தவள் எல்லோரும் யோசிப்பதைப் பார்த்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். 

இரண்டு நிமிடத்திற்குள் கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் "செங்கல்பட்டு" என்று உரக்கக் கூவினார். 
அவர் பதில் கூறியதும் எல்லோரும் தலையைத் திருப்பி அவரைப் பார்த்தார்கள். ஒரு நொடிக்குள் எல்லோரும் கரவொலி எழுப்பிப் பாராட்டினார்கள். 

எல்லோரும் கரவொலி எழுப்பியதைப் பார்த்த கலைச்செல்வி மாணவர் கூறிய பதிலின் பொருள் எல்லோருக்கும் புரிந்துவிட்டது. இனி அதன் விளக்கம் கேட்கத் தேவையி்ல்லை என்று முடிவு செய்தாள். கலைச்செல்வியும் கரவொலி எழுப்பிப் பாராட்டினாள். 
"நல்லது. சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள். இது போன்ற வேறொரு நிகழ்வைச் சொல்லட்டுமா?" என்று கேட்டாள். எல்லோரும் மகிழ்ச்சியோடு கண்கள் விரிய "சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்று குரலெழுப்பினார்கள்.  

தன்னால் ஒரு செயல்பாட்டை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்று முதலில் சந்தேகப்பட்டது பறந்தே விட்டது. அவள் உற்சாகத்தோடு பேசத் தொடங்கினாள். அவளுடைய உற்சாகத்தைப் பார்த்த தமிழ்ச்செல்வி தன் குறிப்பேட்டில் "ஓர் ஆசிரியர் உதயமாகிறார்" என்று எழுதி ஒரு சரியடையாளம் இட்டாள். குறிப்பேட்டை மூடி வைத்துவிட்டு கலைச்செல்வியைப் பார்க்கத் தொடங்கினாள். 

கலைச்செல்வி பேசத்தொடங்கினாள். 

"மஞ்சு கடைவீதிக்கு வந்திருந்தாள். அவள் ஒரேயொரு பொருளை வாங்குவதற்காகத்தான் வந்திருந்தாள். கடைவீதிகளைப் பார்த்துக்கொண்டே வந்தவள் ஒரு குறிப்பிட்ட கடையில் ஏறினாள். தேவையான பொருளை வாங்கினாள். கடையைவிட்டு வெளியே வந்தவளின் கையை யாரோ ஒருவர் பிடித்து இழுத்து நிறுத்தினார். மஞ்சு ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தாள். "ஹாய் லிவ்யா... நீயா? எப்படி இருக்கிறாய்? உன்னைப் பார்த்து எத்தனை நாட்களாயிற்று" என்று கேள்விகளை அடுக்கினாள். அப்புறம் என்ன? பேசினார்கள் பேசினார்கள். பேசிக்கொண்டே இருந்தார்கள். கடை வாசலின் ஓர் ஓரத்தில் நின்றபடி பேசினார்கள். வருவோர் போவோர் எல்லாம் அவர்களைப் பார்த்தார்கள். ஆனால் தோழிகள் இருவரும் ஒருவரையும் பார்க்கவில்லை. 

"சரி மஞ்சு அடுத்தவாரம் இதே நாளில் இதே நேரத்தில் இதே கடைக்கு வா. நானும் வருகிறேன். பேசுவோம்" என்றபடி லிவ்யா கைகளை அசைத்து மஞ்சுவிடமிருந்து விடைபெற்றாள். 

"ஐயோ, அம்மா தேடுவார்களே" என்று நினைத்த மஞ்சு ஓட்டமும் நடையுமாக வீட்டை வந்தடைந்தாள். அம்மா வாசலில் மஞ்சுவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். 

கையில் என்ன? நேரம் எத்தனை? என்னும் இரண்டு கேள்விகளைக் கேட்டாள். மஞ்சு அந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் சொன்னாள். அந்த பதில் என்னவாக இருக்கும்? யோசியுங்கள். உங்கள் பதில் சரியாவென்றறிய காத்திருங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹