Tuesday, 15 September 2015

அரசமரத்தின் சிறப்புகள் பற்றி காணலாம்.


லய வழிபாட்டின் சிறப்புகளையும், அங்கு பின்பற்றப்படும் செயல்களுக்கான அறிவியல் காரணங்களையும் இத்தொடர் கட்டுரையில் இதுவரை கண்டுவந்தோம். இப்போது ஆலயங்களிலுள்ள தலவிருட்ச சிறப்புகள் பற்றி காணலாம்.உலகிலுள்ள உயிர்களை உய்விக்கும் நன்னெறிச் சமயங்களில் நமது இந்து சமயம் தன்னிகரற்றதாக விளங்குகிறது. அவரவர் மனதின் பக்குவ நிலைக்கேற்ப, இறைவழிபாட்டுக் கொள்கையானது உருவநிலை, அருவுருவ நிலை, அருவநிலை என மூன்றாக உள்ளது.இறைவனை உருவற்ற நிலையில்- உண்மை, ஞானம், ஆனந்தம் என பண்புத்திறன் வடிவில்- எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பவராகக் காண்பது அருவநிலை வழிபாடு. இது யோகியர், ஞானியருக்கானது. சாதாரண மக்களுக்கு இது அரிய செயல்.எங்கும் எதிலும் பரம்பொருளே உள்ளார் என்று நாம் உணர முயலவேண்டும். ஒரு இலக்காகத் தெரிகிற உருவத்துள்ளே, தெரியாத நிலையில் வேறொரு உருவாய் இறைவன் உள்ளதாகக் கருதி வழிபடுவார்கள். இது அருவுருவ வழிபாடு. உதாரணமாக சிவலிங்கத் திருமேனியைச் சொல்லலாம்.உருவ வழிபாடென்பது நடராஜர், அம்பாள், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, விநாயகர், முருகர் போன்ற துலங்கித் தெரியும் இஷ்ட தெய்வ வழிபாட்டைச் சொல்லலாம்.இதில் உருவ வழிபாடு முதல்படி. அருவுருவ வழிபாடு அதனினும் மேம்பட்டது. அருவவழிபாடென்பது முதுநிலை. நம் மனோலயத்தை படிப்படியாக இறைவனிடம் மேம்படுத்துவதே நமது வழிபாட்டு நெறியாகும்.இவ்வகைக்குள் தாவரமான மரங்களை ஒரு இலக்காகக்கொண்டு, அருவநிலையிலிருந்து அதனை அசைத்திடும் காற்றை கடவுளாகக் கருதி வழிபடுவது ஒரு முறையாகும். இது மிகச்சிறந்த அருவுருவ வழிபாட்டு நெறி. தெய்வீக மரங்களை இறைவனின் திருமேனியாகக் கண்டு, அவற்றைக் காத்து வணங்குவது பொதுநலத்துடன் கலந்த அறநெறியாகும்.தேவர்களும் மண்ணுலகு வந்து, தெய்வீக மரத்தின்கீழ் இறையுருவங்களை நிறுவி வழிபட்டுப் பேறுபெற்றனர் என்பதை புராணங்களிலும் இதிகாசங்களிலும் காண்கிறோம். காடுகளில் மரத்தடிகளில் இருந்த தெய்வாம்சத் தால் அப்பகுதியில் ஏற்பட்ட அதிசயங்களைக் கண்டுணர்ந்த மன்னர் முதலானோர், அந்த தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைத்துப் போற்றிவந்ததையும் அறிகிறோம். இத்தகைய மரங்களே பழம்பெருங் கோவில்களில் தல மரங்களாக விளங்கிவருகின்றன. எப்பகுதியில் எந்த வகை மரங்கள் அதிகம் இருந்தனவோ, அவற்றின் பெயராலேயே தலங்கள் விளங்கி வருவதையும் காணலாம்.மிகத் தொன்மையான வேதகாலத்தில், பெருவேள்விகள் நிகழ்த்தும்போது யூபஸ்தம்பங்கள் எனப்படும் வேள்வித் தூண்களாக அத்திமரம் போன்றவை நடப்பட்டு வழிபடப் பட்டன. பிற்காலத்தில் காடுகளைத் திருத்தி மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளை அமைத்தபோது, நிலத்தை சீர்படுத்தியவுடன் ஆகம வாஸ்துப்படி எட்டு திசைகளிலும் எட்டு வகையான பெரு மரங்களை நடவேண்டும் என்று விதித்திருந்தார்கள். கிராமத்தின் எண்திசைக்கான சைத்யவிருட்சங்கள் என்று பெயரிட்டு வழிபட்டுவந்தனர்.இறைவனின் உறைவிடமாகவும், உயிர்கள் ஒடுங்கி உய்வுபெற தூண்டுதல் தரும் புனிதத் தலமாகவும் விளங்குபவை ஆலயங்கள். அங்கே ஒரு மரம் அல்லது தாவரத்தை தலவிருட்சம் என்று போற்றிவருவர். அரசு, வில்வம், ஆலம், வன்னி, அத்தி, சரக்கொன்றை, சந்தனம், பாதிரி, நெல்லி, மா, புன்னை, மகிழம், வேம்பு போன்ற மரங்கள் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. கோவில்களுக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றை சிறப்பாகச் சொல்வர். இவற்றில் தலவிருட்சம் மூர்த்தி வகையைச் சேர்ந்தது. அதுபோல மணி, மந்திரம், ஔஷதம் எனும் மூன்றனுள், தலவிருட்சத்தின் இலையானது ஔஷதம் (பச்சிலை) என்பதில் அடங்கும். இதனையே பூஜிக்கவேண்டும் என்பதை திருமூலர், "யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை' என்கிறார்.தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது.இம்மரத்தின் இலைகள் தேவர்களுக்கு இருக்கைகளாகவும் வசிப்பிடமாகவும் உள்ளன. நான்கு வேத ரூபமானதும், மும்மூர்த்திகளின் ஓருருவாக விளங்குவதும் அரசமரமே என்று வேதங்கள் போற்றுகின்றன. இது எங்கும் எந்தச் சூழலிலும் வளரக்கூடிய மரமாகும். அரச மரமானது சமஸ்கிருத மொழியில் அச்வத்தம், பிப்பலம், போதிவிருட்சம், சலதளம், குஞ்சராசனம், பூதாவாசம், அக்னிகர்பம், விருட்சராஜம், சமீபதி, வனஸ்பதி, வைணவம், யக்ஞாங்கம், இந்த்ரானுஜம், விருக்ஷேந்திரம், நிம்பபதி, ஹயாம்சஜம் என்னும் பதினாறு பெயர்களால் போற்றப்படுகிறது.சூரியனின் தேரிலுள்ள ஏழு குதிரைகளின் அம்சமாக அரசமரம் பூமியில் தோன்றியதென்பர். எனவே இம்மரத்தை எப்போதும் ஏழுமுறை வலம்வரவேண்டும். உதயகாலத்தில் பூஜிப்பதும் முக்கியம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரத்தைக் குறிப்பிட்டிருப்பினும், அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமானது அரச மரம் ஒன்றே. இம்மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் நித்திய வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது."மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே/
ஆக்ரத: சிவரூபாய
விருக்ஷராஜாய தே நம//'என்னும் மந்திரம் கூறி அரசமரத்தை வணங்கவேண்டும்.இந்துசமய நெறியில் வாழ்வோருக்கு, அரசமரத்தை வலம்வருதல் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை அல்லது திங்கட்கிழமை அல்லது அமாசோம விரத காலங்களில் அங்கப்பிரதட்சிணம் செய்வதும் நியதி. பாவங்கள், தோஷங்கள், நோய்கள் அகலவும், உடல்நலம் பெறவும், மகப்பேறு அடையவும் அரசமரத்தை வலம் வருதலும், அரசமரத்தடியில் விநாயகர் அல்லது நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுதலும் ஏற்றது.தெய்வப் பிரதிமைகள் செய்யவும்; கோவில், யாகசாலைக்கான பொருட்கள், வாகனங்கள்செய்யவும் அரசமரம் அவசியத் தேவையாகிறது. ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த உபயோகத்

திற்காக வீடு கட்டவோ இதர பொருட்கள் செய்யவோ அரசமரத்தைப் பயன்படுத்தக்கூடாது.அரச மரத்தின் அனைத்துப் பொருட்களும் ஆலய சிறப்புப் பூஜைகளிலும், யாகங்களிலும் பயன்படக்கூடியவை. அரச சமித்தின் யாகாக்னி புகையானது ஆரோக்கியம், ஆயுளைத் தருவது.அரசமரக் காற்றானது நோய் நீக்கும். புனிதப்படுத்தும் சடங்குகளில் அரசமரத்தின் தேவை முதலிடம் வகிக்கிறது. இந்த மரக்கட்டையில் அக்னியை உண்டாக்கும் கருவியாகிய அரணிக்கட்டையைச் செய்து, அதைக் கடைந்து யாகத்தீயைத் தோற்றுவிப்பார்கள். அரசமரமானது யாகத்தில் யூபத்தூண்களாகவும், யாகசாலையில் கிழக்கு அல்லது மேற்கில் தோரணவாயிலாகவும், குச்சிகள் சர்வதேவதா ஹோமங்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது.விநாயகர் அல்லது விஷ்ணுவின் உருவப்பதுமைகளை முறைப்படி அரசமரத்தினால் செய்து ஜெபித்தால் மந்திரசித்தி உண்டாகும். மேலும் பூஜைக்குரிய சிவலிங்கம், திரிசூலம், பிம்பம், பாலாலயம், பாலபிம்பம் முதலியவற்றை இம்மரத்தில் செய்வது உரிய பயனை விரைந்தளிக்கும்.அரசமரத்தடியில் தவமிருத்தலால் யோகசித்தியும், ஞானசித்தியும் கிட்டும். புத்தர் முதலான பல மகான்கள் அரசமரத்தடியில் தவமிருந்தே ஞானம் பெற்றனர். முருகனின் திருக்கையில் விளங்குகிற ஞானவேல் என்பது அரச இலையின் உருவத்திலேயே இருப்பதும், யாகத்தில் சிதக்னிகுண்டம் என்பது அரச இலையின் வடிவமாய் உள்ளதும் இம்மரத்தின் ஆற்றலை உணர்த்தும். இம்மரத்தின் பட்டை, இலை, மொக்கு, அடிமண்ணை எடுக்கும்போது முதலில் மரத்தைப் பூஜித்து, பின்பு அதனிடம் யாசித்து தான் பெறவேண்டும்.

வலம்வரும் விதிமுறைஅரசமரத்தை விடியற்காலையில் வலம் வரவேண்டும். அதிகாலை முதல் 9.00 மணி வரையிலான பொழுதில் அரசமரத்தை ஈரத்துணியுடன் பிரதட்சிணம் செய்வது விரைவில் பலனைத் தரும். இம்மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொடலாம் என்பது சாஸ்திர விதி. அமாவாசை, ஏகாதசி, சப்தமி, பஞ்சமி ஆகிய திதிகளிலும்; சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய கிழமை களிலும் அரசமர வலம்வருவது சிறப்பைத் தரும்.விநாயகருக்கு ஒன்று; சூரியனுக்கு இரண்டு; சிவனுக்கும் பார்வதிக்கும் மூன்று; விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும், மகான்களின் சமாதிகளுக்கும் நான்கு என்ற எண்ணிக்கையில் வலம் வந்தால், அரசமரத்திற்கு மட்டும் ஏழு முறை வலம்வருதல் சாஸ்திர விதிமுறை.இவ்விதம் வலம் வரும்போது நிதானத்துடன் அடிமேல் அடிவைத்து, கைகளைக் கூப்பிக்கொண்டு, ஸ்தோத்ரத்தை உச்சரித்த வண்ணம் அமைதியுடனும் தூயஎண்ணத்துடனும் வலம்வர வேண்டும். ஒருபோதும் வேகமாகச் சுற்றிவரக்கூடாது. அரச மரத்தடியில் தெய்வமூர்த்தம், நாக லிங்கம் போன்றவை இருப்பின் அவற்றை தனியே விலக்கிவிடாமல் மரத்துடன் சேர்த்தே வலம்வர வேண்டும்.திங்கட்கிழமையில் அமாவாசை திதியும், ஞாயிற்றுக்கிழமையில் சப்தமி திதியும், செவ்வாய்க்கிழமையில் சதுர்த்தி திதியும், புதன்கிழமையில் அஷ்டமி திதியும் சேர்ந்து வந்தால் அந்த நாள் அரிய புண்ணிய தினமாகும். அந்த நாட்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முடித்து, புனிதராய் இருந்தவாறு அரச மரத்தைப் பூஜிக்கவேண்டும்.

பூஜைமுறைஅரசமரத்தடியில் அரிசிமாக்கோலங்களால் பூமியை அலங்கரித்து, காலம், தேசம், பயன்,நோக்கம் ஆகியவற்றை முதலில் சங்கல்பம் செய்துகொண்டு, கலசபூஜையைச் செய்யவேண்டும்.அரசமரத்தடியில் ஒரு அந்தணரை அமரச்செய்து பூஜிப்பது நன்மை தரும். தம்பதியராக பூஜித்தால் சிறந்த பயனடையலாம். சனிக்கிழமைகளில் தம்பதியை மரத்தடியில் இருத்தி லட்சுமி நாராயணராகவும், திங்கட் கிழமையில் உமா மகேச்வரராகவும் எண்ணி பூஜிக்கவேண்டும். இவ்வாறு பூஜித்து வலம் வருவோர் பலவகை கொடிய நோய்களிலிருந்தும்; தோஷங்கள், மனத்தளர்ச்சி, மனவருத்தம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெற்று, மக்கள் செல்வத்தையும் பெறுவார்கள் என்பது உறுதி.
சனிக்கிழமையில் அரச இலையில் சனி பகவானை எண்ணி வணங்கி வலம்வந்தால், சனிகிரக தோஷம் அகலும். நீண்ட ஆயுளும், உடல்நலமும் கிட்டுவது திண்ணம்.

"அச்வத்தபர்ணே சரசாபஹஸ்தம்
திஷ்டந்தமீட்யே வரதம் வரேண்யம்/
சநைச்சரம் பூரி வரப்ரதம் தம்
நமாம்யஹம் துக்கவிநாயசனாய//என்று கூறி வணங்குவதால் சனி பகவானின் அருளும், விஷ்ணுவின் அருளும் கிட்டும்.அரசமரத்தில் மின்காந்த சக்தியும், தாமிர சக்தியும் உள்ளது. உடல் நலமில்லாதவர்களும், மனக்குழப்பம் உள்ளவர்களும் சுத்தமான நீரில் தலைமுழுக்காடி, ஈரத்துணியுடன் தினமும் அரசமரத்தை காலையில் சுற்றிவந்தால் நாளுக்குநாள் சிறப்பாகத் தெளிவடைந்து, பரிபூரண நலம் பெறுவர். பொதுவாக மின்சாரமானது ஈரமான பொருட்களில் விரைவில் பரவும் தன்மைகொண்டதாகும். அரசமரத்தில் உள்ள மின்சார காந்த சக்தியானது அரச இலைகளின் நுனிவழியாக, ஈர ஆடையுடன் மரத்தடியில் வலம்வரும் அடியவர்களின் உடலில் சிறிது சிறிதாகப் பரவும். நாளுக்குநாள் இது அதிகரிப்பதால் உடல் உபாதைகள் நீங்கும். உடல் வலிமையடைந்து ஆரோக்கியம் அடைகிறார்கள்.

No comments:

Post a Comment