Monday 18 July 2016

முருகா என்றால் என்ன

முருகா என்றால் என்ன

ஆகமங்கள், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஞானநூல்கள், யோகநூல்கள், சாஸ்திரங்கள், ஸ்தோத்திரங்கள், உபநிஷத்துக்கள், பிரபந்தங்கள் என்றே அனைத்தையும் கற்று தேர்ந்து கடைப்பிடித்து பெறுகின்ற பலன்களையெல்லாம் முதுபெரும் ஞானத்தலைவனாம் முருகனின் நாமத்தை ஜெபித்தாலே வேதநாயகன் தன் அருளாலே அதனினும் மேலாக பெற்று சித்தி முத்தியையும் அடையலாம் என்று அறிந்து அவனருளாலே அவன்தாள் வணங்கி ஆறுமுகனார் திருஅருளிற்கு பாத்திரமாகி ஞானமும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றி சித்திமுக்தியையும் அடையலாம்.

இயற்கையன்னை அனைத்து உயிர்களையும் படைத்தனள். அவ்வுயிர்களையெல்லாம் தோற்றி காத்து அழித்தனள். ஆயினும் இந்த சுழற்சிதனிலே ஒரேயொரு உயிரினத்திற்கு மட்டும் தம்மை வெல்லும்  தகைமைதனை அவளே அதனுள் அமைத்தனள். ஆதலின் தோற்றல், காத்தல், அழித்தல் என்றதொரு முச்சத்களுடன் தம்மை வெல்லும் தகைமை பெற்ற உயிர் தமக்கு மறைத்தல், அருளல் என்ற தன்னினும் மீறிய சக்திகளை அந்த உயிர் தானே சம்பாதித்து கொள்ளுமாறு அற்புத ஞானம் அளிக்கவல்லதொரு கருவியாய் அவளே பெருங்கருணையினால்
இந்த மானுட தேகம் தனையும் அமைத்தனள்.

உலகம் தோற்றியது முதல் இம்மானுட தேகத்தினை எண்ணிலா கோடி கோடி உயிர்கள் பெற்றும், வாழ்ந்தும், இறந்தும் போவதுமாய் அதிபிரபஞ்ச தோற்றம் முதலே நடந்து வந்ததினில், ஒரு தனி ஆன்மா மட்டும் இயற்கையின் அருட்கொடையால்  என்னவிதமான சக்தி பெற்றதோ  தெரியவில்லை. அதனின்று விடுபட்டதாயினும் இயற்கையின் செயலால் மற்ற உயிர்களெல்லாம் இயற்கை லயகதிக்கு உட்பட்டு இயங்கி அந்த இயக்கத்தின் காரணமாக வினைக்கு உள்ளாகி உள்ளாகி நல்வினை தீவினைகளாக மாறி அதனதன் இயற்கை இயக்கத்தினின்று மீளமுடியாமல்
வினை சூழ சூழ தம்மை மறந்து தன் தோற்றம் மறந்து தம் முன் உள்ள அதீத சக்தியின் வாய்ப்பை மறந்து அதன் செயலாக்க கருவி இருந்தும் செயல்படுத்த இயலாது, வினையெனும் காரிருளினுள் அகப்பட்டு தொடர்பிறவிகளிலே ஆழ்ந்து ஆழ்ந்து அனைத்தும் தன்னை மறந்து விட்டன.

விடுபட்ட ஆன்மாவோ இயக்கம்தனை சீரான லயகதிக்கு உள்ளாகி எந்த இயற்கை தம்மை தோற்றுவித்ததோ அந்த இயற்கையின் மற்றைய படைப்புகளான உயிர்களுக்கு யாதொரு தீங்கும் செய்யாது பிற உயிர்களிடத்து அன்பு செலுத்திட துவங்கிற்று. மற்றைய உயிர்கள் அனைத்தும் உயிர்வதை செய்து செய்து தன்னியக்கம் தனை தாறுமாறாக்கிக் கொண்டு இயற்கையின் கோபத்திற்கு ஆளாயின. ஆசி பெற்றிட்ட அந்த ஆன்மா நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக பிரகாசமடைந்திட பிரகாசமடைந்திட அது, தான் பெற்ற மானுடதேகம்தான் இந்த இயற்கை தோற்றுவித்ததிலேயே மிக உயர்ந்த சிக்கலான அதிநுட்பமடங்கிய அற்புத சாதன
கருவி என்றும், அதனுள்ளேயே தான் தம்மை தோற்றுவித்தவளை நம் முயற்சியால் அவள் துணை கொண்டு வெல்லும் மார்க்கம் உள்ளது என்பதையும் தனது புண்ணிய புனித பலனால் உணர்ந்திட்டது.

இது சாதாரணமன்று. எவ்விதம் இக்கருவியை உபயோகித்து வெல்வது என்றே தன்முயற்சியால் தாயாம் இயற்கையின் துணைதனை நாடி நாடி சிந்தித்து ஞானம்தனை அடைய முற்பட்டது. அதன் விளைவினாலேயே உலக உயிர்களிடத்து அன்பு செலுத்த செலுத்த எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ, அந்த இயற்கை நமக்கு சாதகமாகி அதுவே அதனை
வெல்லும் வல்லமையை நமக்கு அளிக்கிறது என்பதை உணர்ந்தது.

பிற உயிர்களுக்கு நாம் நமது சிந்தை, சொல்,  செயல்களால் மகிழ்ச்சியை உண்டு பண்ண பண்ண அந்த உயிர்கள் படுகின்ற இன்பமானது நம்முள் ஜீவதயவை தோற்றுவிக்கின்றது. பிற உயிர்கள் நம்மை வாழ்த்த வாழ்த்த அந்த உயிர்கள் படுகின்ற இன்பமே நமக்குள் இன்பமான ஒளியாய் கருணையாய் உண்டான ஜீவ ஒளியாய் தோன்றி நம்முள் அறிவாய் மாறி
பிரகாசிக்கிறது. பிற உயிர்களுக்கு நமது சிந்தை, சொல், செயலால் துன்பப்படுத்தினால் அந்த உயிர்கள் படுகின்ற துன்பமே நம்மை தாக்கி நம்முள் இருளை தோற்றுவித்து நமது அறிவின் ஒளியை மங்கச் செய்து அறியாமையை உண்டுபண்ணிவிடும் என்பதை உணர்ந்து பிறஉயிர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகள்  செய்துசெய்து உலக உயிர்கள் அனைத்திடமும் அளவிலாத கருணை மழையாய் பொழிந்தனன் ஆதிதலைவன் முருகப்பெருமான்.

அவ்விதமே உலக உயிர்களிடத்து அளவிலா கருணை செலுத்த செலுத்த இயற்கையன்னை அவர்தம்முள்ளே தம்மை வெல்லுதற்கு வைத்திருந்த பொறியமைப்பினை அவர் அறிவினுள்ளே உணர்த்தலாயிற்று. அந்த பொறியமைப்பாம் மானுடதேகமும் மானுடதேகத்தின்
கண் உள்ள சூட்சுமங்களையும் அறிந்தனன் ஆதிதலைவன்.

அறிந்து பிற உயிர்களின் தேகத்தின்கண் காணப்படாத ஒரு சிறப்பு பாதையாம் புருவமத்தியையும் அதன் உடனான இடகலை, பின்கலை என்ற இருநாடிகளையும் அதன் நடுவே மெல்லிய மயிர்ப்பாலம் போன்ற  சுழிமுனை நாடியையும் கண்டு கொண்டார்.

உயிர்களுக்கு காட்டும் ஜீவதயவே அறிவாக மாறும், ஜீவதயவு உயர உயர அந்த அறிவே சிறப்பறிவாக மாறும். அந்த சிறப்பறிவின் துணை கொண்டே தன்னைப் பற்றியும் தனது ஆன்மாவைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்று உணர்ந்து ஜீவதயவினை விடாது அளவிலாது உயிர்கள் அனைத்திற்கும் செய்து செய்து தயவினை பெருக்கிக் கொண்டார்.

ஜீவதயவின் அளவு அதிகமாகிட ஆன்மாவைப் பற்றியும் அறிகின்ற அறிவு தெளிவு  கிடைத்தது. அந்த ஆன்மா ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலக் குற்றமாகிய வலிமைப் பெற்ற சிறையில் அடைப்பட்டுள்ளதையும் அறிந்தார்.

இயக்கத்தின் காரணமாக வினைக் குற்றங்களுக்கு ஆளாகி மும்மல சிறையினுள் அகப்பட்ட ஆன்மாவை ஜீவதயவின் துணைகொண்டுதான் அதன் கசடை நீக்கிட முடியும் என்றும் உணர்ந்தார்.

ஜீவதயவு பெருக பெருக பெருக அந்த ஜீவதயவின் ஆற்றலினால் அந்த தயவே செம்பொருள் அறிவாய் மாறிடக் கண்டு அந்த அறிவே அருளொளியாய் மாறி மாசுபட்ட ஆன்மாவை தூய்மைப் படுத்திடவும் கண்டு தெளிந்தார்.

எல்லா உயிர்களிடத்தும் பலப்பல ஜென்மங்களிலே தொடர்ந்து உலக உயிர்களிடத்து அன்பு செலுத்த செலுத்த அந்த உயிர்களெல்லாம் வாழ்த்த வாழ்த்த ஒரு காலத்தில் அவர் கண்முன்னே இயற்கை அற்புதமாய் ஒரு காட்சியை காண்பித்தது. தன்முன்னே சென்று கொண்டிருந்த மாடு
ஒன்று பாம்பு கடித்தவுடன் மூச்சு முட்டி இறக்கக் கண்டார். பிற உயிர்களும் இறக்கும்போது சுவாசம் நிற்க கண்டார்.

ஆக மூச்சுக்காற்றின் இயக்கமே ஆன்ம இயக்கமாக இருக்கிறது என்ற ஒரு மகோன்னத உண்மையை எந்த இயற்கை தோற்றுவித்ததோ அந்த இயற்கையே அறிவாய் மாறி அவர் தம்முள்ளே அறிவுக் கண்ணை விழிப்பித்து உணர்த்திட அதன்பின்னே சுவாசக் காற்றின் இயக்கங்களையும் அதை ஒடுக்கும் முறைகளையும் உடம்பினுள்ளே, உள்ளே ஓடுகின்ற ஜீவான்மாவையும் புறத்தேயுள்ள பரமான்மாவையும் ஒன்று சேர்த்திட்டால் மரணத்தை வெல்லலாம் என்றும் அதற்கு சாதனமான இந்த உடம்பினை தன்வயப்படுத்தினாலன்றி ஆகாதெனவும் தெளிந்தார்.

எந்த இயற்கை ஞானம் பெறுதற்காக அற்புதமான மனிததேகம்தனை தோற்றுவித்ததோ அதே இயற்கை அன்னை தாயாக மாறி கருணைமிகக் கொண்டு ஞானபண்டிதன் அறிவைச் சார்ந்து அவளே அவளின் இயற்கை சுழற்சியை மீறிட அளவிலாத ஜீவதயவினை கொண்ட முருகப்பெருமானார் தமக்கு தேக சூட்சுமங்களை படிப்படியாக குருவாய் நின்று அறிவில் சார்ந்து அற்புத தேகத்தின் அற்புதங்களை உணர்த்திட உணர்ந்த பெரும் சிரமங்களுக்கு இடையே பல்லாயிரமாண்டுகள் இடைவிடாது முயற்சிகள் செய்து இறுதியில் உடல் அசுத்தம் நீங்கிட, உயிர்மாசு நீங்கிட இரண்டையும் சுவாசப்பயிற்சியாம்  வாசிப்பழக்கத்தினாலே பெருக்கி மூலக்கனல் உதவி கொண்டு தேகம் தனை சுட்டெரித்து ஊன்கரைத்து உள்ளொளி பெருக்கி உடலையும் உயிரையும் ஒன்றிணைத்து ஜீவான்மாவையும் பரமான்மாவையும் ஒன்றிணைத்து என்றும் அழியாத ஒளிதேகத்தை பெற்று சொல்லொண்ணா பேரொளியாய் ஜீவதயவே  வடிவினனாய் அளவிலா ஆற்றல் மிகமிக கொண்டுமே அது, நீ, நான் என்ற வேற்றுமையின்றி நாமே அதுவாய், அதுவே நாமாய் உலகின் அனைத்து உயிர்களிலும் இரண்டற கலந்து நின்றுமே அற்புத ஞானத்தலைவனாகி நின்றனன் கந்தவேலன் கருணை மிகக்கொண்ட கருணாமூர்த்தி.

ஆதலின் ஜீவர்களுக்கு செய்கின்ற உபகாரமே ஜீவதயவாய் மாறி ஞானம்தனை பெறுதற்கு அன்று முதல் இன்றுவரை இனி என்றும் இருப்பதினாலே ஜீவதயவே ஞானவீட்டை திறக்கின்ற திறவுகோல் ஆதலாலே ஜீவதயவே அறிவாய் மாறுவதாலே ஜீவதயவே கனலாய் மாறி தேகக்கசடை நீக்குவதாலே ஜீவதயவே ஆன்ம ஒளியாய் தோன்றி ஆன்மகசடை நீக்குவதாலே ஜீவதயவே இயற்கையின் கருணையைப் பெற காரணமாய் இருப்பதாலே ஜீவர்கள்பால் கொண்ட
ஜீவதயவே ஜீவர்களின் ஆசியைப் பெறச்செய்து அருளாய் அருளொளியாய், சோதி சுடராய் நம்முள்ளே தோன்றுவதாலே இப்படி எந்த வகையிலும் எந்த முறையிலும் நின்று பார்க்கினும் ஜீவதயவில்லையேல் ஞானம்தனிலே ஒரு அணுவினையும் அசைத்திடலாகாது என்பதை உணர்ந்து இன்று முதலேனும் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து புண்ணியங்கள் செய்து
பிறஉயிர்கள் பால் அன்பு செலுத்தி சொல்லால், செயலால், உடலால் என்றே பாவியாகாமல் இருந்து முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கி அவர்தம் அருளைப் பெறுங்கள்.

ஆதிமூல நாயகனாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானார் தம் திருவடிகளை மனதாரப் போற்றி உளம் உருகி பூசித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள்.

ஜீவதயவின் உருவம் ஆறுமுகனார் தயவில்லையேல் அறிவில்லை, தெளிவில்லை, புண்ணியங்கள் இல்லை, யோகம் இல்லை, ஞானம் இல்லை, ஏன் ஞானவர்க்கமே இல்லை.

பற்றுவோம் முருகன் திருவடியை பெறுவோம் பேரின்ப வாழ்வை.

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

No comments:

Post a Comment