முருகா என்றால்:
உடம்பும் உயிரும் சேர்ந்து தோன்றுவதற்குக் காரணம் ஆண்பாலில் உள்ள சுக்கிலமும் பெண்பாலிலுள்ள சுரோணிதமும் என்பதை அறிந்தும் இதில் உடம்பிலுள்ள களிம்பு உள்ள வரை உடம்பினுள் உயிர் தங்குமே தவிர ஒரு கால பரியந்தத்தில் உடம்பின் தகுதியின்மையால் உடம்பை விட்டு உயிர் பிரிந்துவிடும்.
ஆனால் ஆதி ஞானத்தலைவன் அருள் பெருங்கருணையும் அருளும் கிடைக்கப் பெற்றால் உடலில் உயிர் சேரவொட்டாமல் தடுக்கின்ற களிம்பினை நீக்கி உடம்பையும், உயிரையும் சேர்க்கும் உபாயம்தனை அறியலாம். உடல் பிணியால் உயிருக்குப் பிணி உண்டாகும். உடல் பிணி நீங்கினால் உயிர்பிணி நீங்கும். உயிர்பிணி நீங்கினால் சிறப்பறிவு உண்டாகும்.
அந்த சிறப்பறிவின் துணை கொண்டுதான், இனி பிறவா மார்க்கத்தை அடையலாம். இதை முற்றிலும் அறிந்தவனும் அதற்கு முயற்சிப்போர் தமக்கு அருளி, வழி நடத்துபவனும் தலைவனாய் உள்ளவன் ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான்.
முருகனது திருவடியை பூசிக்கப் பூசிக்க உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
ஒரு மனிதன் கடைத்தேறுவதற்கு முக்கியக் காரணமாய் உள்ளவை பக்தியும், தயை சிந்தையுமே ஆகும். தயை சிந்தையையும், பக்தியின் தயவும் கொண்டுதான் எல்லா ஞானிகளும் அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டார்கள். தயை சிந்தையே பக்தியாகவும், பக்தியே தயை சிந்தையாகவும் மாறி இரண்டற கலக்கும். இவை இரண்டிற்கும் தலைவன் முருகனே என்பதை அறிந்து கொள்ளும் வரையிலும் மனப்போராட்டம் ஒருவனுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.
தயவே முருகன் என்றும், பக்தியே முருகன் என்றும் அறிந்துவிட்டால் அந்த முருகப்பெருமானே அவனுக்குக் குருநாதனாகி அவனை வழிநடத்தி கடைத்தேற்றுவான்.
ஒருவனுக்கு ஆதி ஞானத்தலைவன் அருள் செய்ய முற்பட்டாலும், அவன் அந்த அருளைப் பெற இயலாதவனாகி வெகுபேர் சிறப்பறிவு பெறமுடியாமல் தவிக்கின்றனர்.
ஏனெனில் அவர்களுக்குக் காமம், கோபம், வஞ்சனை, லோபித்தனம், பொறாமை எனப்படும் தீய குணங்களாக மாறி அவன் முன்செய்த கர்மவினைகள் அவனைத் தடுக்கிறது.
முன்செய்த பாவங்களே காமமாகவும், லோபித்தனமாகவும், கோபமாகவும், பொறாமையாகவும், வஞ்சனையாகவும் மாறுகிறது என்பதை அறிந்து குணமே வடிவான அருள் தடாகமான அருள்நிறை தெய்வம், தயவே வடிவான முருகன் மீது பக்தி செலுத்தி செலுத்தி தயவினை பெருக்கி முருகனாகிய தயவுத் தடாகத்தில் மூழ்கி நமது பாவமெல்லாம் நீங்கி தூய்மை பெற்றிட்டால் முருகன் அருள் கூடி நாமும் சிறப்பறிவை பெறலாம்.
முருகன் என்று சொல்லப்பட்ட தயவுக் குளத்தில் மூழ்கினாலன்றி ஒருவன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment