மந்திரத்திற்கு காக்கும் சக்தி உண்டா?
எப்படி உண்டு?
என்ற சந்தேகம் வருவது இயற்கை அதை போக்க வேண்டுமானால் சற்று நாம் கடினமான விஷயத்தை பற்றி சிந்திக்கும் ஆர்வத்தை நமக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் உண்மைகளை உண்மைகளாக உணர முடியும்.
நம்ம உடம்புக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறதே உயிர், அந்த உயிர் திடப்பொருளா? திரவபொருளா? வாயு பொருளா? எதனால் ஆனது உயிர் மேலே சொன்ன எதுவாளையும் உயிர் ஆகவில்லை, எதுவாகவும் உயிர் இல்லை, உயிர் என்பது நாதம் அதாவது சத்தம் என்று சித்தர்கள் ஆராய்ந்து அனுபவித்து கூறுகிறார்கள்.
சத்தத்திற்கு பொருட்களை அதிர வைக்க கூடிய சக்தி உண்டு, இயங்க வைக்கும் ஆற்றலும் உண்டு, நமது உடம்பிற்குள் உயிர் என்ற நாதம் அதாவது சத்தம் மூலாதாரத்தில் உடலில் நடுப்பகுதியில் அமர்ந்து கொண்டு உடல் முழுவதும் அதிர்வலைகளாக துடிப்புகளாக பரவி இருக்கிறது. இதனால் தான் நமது உடம்பு சூடாக இருக்கிறது.
உடம்பில் இருக்கின்ற இந்த நாதம் உடம்போடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது. உயிர் சக்தியானது அண்டம் முழுவதும் பரவி இருப்பதனால் தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று சித்தர் வாக்கியம் கூறுகிறது.
பிரபஞ்சம் முழுவதும் நாத அலை பரவி உள்ளது ஐம்பூதங்களும் நாத அலைகளாலேயே இயங்குகிறது. இந்த நாத அலைகளை பீஜ மந்திரங்கள் என்கிறோம். ஒவ்வொரு பூதத்திற்கும் தனித்தனியான பீஜங்கள் உண்டு.
உதாரணமாக ஹம் என்ற பீஜம் ஆகாயத்திற்கு சொந்தமானது, யம் என்ற பீஜம் காற்றுக்கு உரியது, ரம் என்பது நெருப்புக்கு சொந்தமானது, வம் என்பது நீருக்கு சொந்தமானது, லம் என்பது நிலத்திற்கு உரிய பீஜமாகும்.
பரிசோதனை செய்வதற்காக இந்த பீஜ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை சிறிது காலத்திற்கு ஜபம் செய்து பாருங்கள். உங்களது உடம்பில் அந்த பூதத்தின் சக்தி அதிகரிப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம். அப்போது தெரியும் உங்களுக்கு அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்ற வாசகத்தின் உண்மை பொருள்.
இந்த பீஜ எழுத்துகளுக்கு தெய்வத்தை ஈர்க்க கூடிய ஆற்றல் உள்ளதா? என்று நினைப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், தெய்வ சக்தி இறைவனின் அருள் என்பவைகள் மனிதனை அடையவேண்டுமென்றால் இயற்கை பொருட்களையே ஊடகமாக பயன்படுத்த வேண்டும், அதற்கு இந்த மந்திர பீஜங்களே சரியான ஊடகங்களாகும்.
ஹ்ரீம் என்ற பீஜ மந்திரத்தில் உள்ள ஹ என்ற எழுத்தும், ர என்ற எழுத்தும், ஈ என்ற எழுத்தும், ம என்ற எழுத்தும் தனித்தனியாக உச்சரிக்கப்படும் போது ஆகாயத்திற்கான பீஜமும் நெருப்பிற்கான பீஜமும் வருகிறது. இந்த இரண்டு பீஜங்களையும் ஒருங்கிணைத்தால் அர்த்தநாதீஸ்வர தெய்வத்தின் நாத விந்து கிடைக்கிறது. அதாவது ஹ்ரீம் என்ற மூல மந்திரம் அர்த்தநாதீஸ்வரரை சூட்சகமாக அடையாளப் படுதுவதால் அந்த தெய்வத்தின் அருளை சுலபமாக மனிதன் பெற்றுவிட முடிகிறது.
எப்படி ஒவ்வொரு இயற்கை பூதத்திற்கும் தனித்தனியான பீஜ மந்திரங்கள் உண்டோ? அதே போன்றே தெய்வங்களுக்கான பீஜ மந்திரங்களும் இருக்கிறது, ''ஆச்சரியமான ஒரு விஷயம்'' ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுகென்றே பீஜ மந்திரங்கள் உண்டு, யாருக்கு என்ன மந்திரம் பொருந்தும் என்பதை வேதங்கள் குறிப்பிடும் மனசாஸ்திர அடிப்படையில் பிரித்து விடலாம்.
குறிப்பாக ஸ்ரீம் என்ற மூல மந்திரம் எனக்கு சொந்தமானது என்று வைத்துகொள்வோம், இந்த மந்திரத்தை நான் மீண்டும் மீண்டும் சொல்ல சொல்ல எனக்குள் மறைந்து கிடக்கின்ற பிரபஞ்ச ஆற்றல், ஆகாசத்தில் பரவியுள்ள பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்பு கொண்டு இறை சக்திக்கு என்னை மிகவும் நெருங்கியவனாக மாற்றி விடுகிறது. இறை சக்தியானது என் அருகில் இருக்கும் போது எவையெல்லாம் என் வாழ்க்கைக்கு தேவையோ அவையெல்லாவற்றையும் நான் சுலபமாக பெற்றுவிட முடியும் அல்லவா.
அடுத்த பதிவில் பீஜ மந்திரத்தை இன்னும் விளக்கமாக பார்க்கலாம்.
நன்றி குருமுனி.