Thursday, 28 January 2016

காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம் !!!



நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும். இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும். இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும். நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதற்கு பொருள் செலவு அதிகம். செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும். வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும். அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று. அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!

No comments:

Post a Comment