Monday, 11 June 2018

கசடற கற்க – 89

பாசமலர் இதழுக்காக எழுதியது...
கசடற கற்க – 89
எப்போதெல்லாம் வாசிப்பைப் பற்றி ஆசிரியப் பயிற்சியில் கலந்துரையாடுகிறோமோ அப்போதெல்லாம் இந்தப் பிரச்சனையைப் பற்றி ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.
எங்கள் வகுப்புக் குழந்தைகளுக்கு எல்லா எழுத்துகளும் தெரியும் ஆனால் வாசிப்பதில் ஆர்வம் இல்லை. இதைப் பற்றி நாங்கள் ஆழமாகக் கலந்துரையாடுவோம்.
முதலில் ஆர்வம் எப்போது தோன்றும். அப்படி ஆர்வம் தோன்ற வேண்டிய காரணம் என்ன, ஆர்வம் இல்லாவிட்டால் என்னாகும், கட்டாயப்படுத்தி ஒரு வேலையைச் செய்ய வைத்தால் என்ன பிரச்சனை என்னும் வினாக்களைக் கேட்போம்.
ஆர்வம் தோன்ற எத்தனையோ காரணங்களுண்டு. அவற்றில் வகுப்பறையில் ஆசிரியர்கள் பின்பற்றுவதற்கான ஒரு காரணத்தைப் பற்றி விவாதிப்போம். முதலில் அதைப் பார்ப்போம்.
நீங்கள் எதையாவது ஒன்றை மறைத்து வையுங்கள். குழந்தைகள் அது என்னவென்று தெரிந்துகொள்ள முன்வருவார்கள். ஒரு பொட்டலத்தோடு நீங்கள் வீட்டுக்குள் நுழைகிறீர்கள். குழந்தை அதைப்பார்த்தும் செய்யும் வேலையை நிறுத்திவைத்துவிட்டு ஓடி வரும் அல்லவா... அதுதான் ஆர்வம். மறைத்து வைப்பது, சற்றே காட்டி மறைப்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கதையை நிறுத்துவது என்பதெல்லாம் குழந்தையின் ஆர்வத்தைத் தூண்டும். ஆனால்...
எப்போதும் பொட்டலத்தோடு வீட்டுக்குள் நுழைபவரா நீங்கள். அந்த ஆர்வம் இருக்காது. கதை சொல்லும்போது அடிக்கடி கேள்விக் கேட்டு புரிந்ததா புரிந்ததா என்ற முறையில் கதை சொல்பவரா நீங்கள் குழந்தைக்கு அவ்வளவு ஆர்வம் இருக்காது. ஒரு நாள் கதை சொல்லிவிட்டு அடுத்தநாள் அந்தக் கதையை நினைவுபடுத்தச் சொல்லி, பரிசோதித்து... என்ற அதிகப்படியான நம்பிக்கையற்றவரா நீங்கள். குழந்தை உங்கள் பக்கத்திற்கே வராது.
அப்படியானால் என்ன செய்வது.?
அது ஒரு சுகமான அனுபவமாக இருக்க வேண்டும். ஒருமுறை பொட்டலத்தோடு வந்தபோது குழந்தைக்கு விளையாட்டுப் பொருள் கிடைத்தது. வேறொருமுறை தின்பண்டம் கிடைத்தது... என்று பொட்டலம் சுகமான அனுபவத்தை நினைவுபடுத்தினால் ஆர்வம் கொப்பளிக்கும்.
இது குழந்தைகளின் இயல்பு. அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் இயல்பு பிறவியிலேயே குழந்தைகளுக்குக் கிடைத்துள்ளது. தான் அழும் ஒவ்வொருமுறையும் அம்மாவின் அரவணைப்பு கிடைக்கிறது. பசி அடங்குகிறது. அதனால் அது அழுகிறது.
இப்போது வாசிப்புக்கு வருவோம்.
குழந்தை எழுத்துகளை அறிந்து கொண்ட அனுபவத்தை நினைத்துப் பாருங்கள்.
நன்றாகப் பேசத் தெரிந்த, ஒருநாள் முழுக்க நடந்த நிகழ்வுகளை, தன்னிடம் இருக்கும் சொற்பமான சொல்வளத்தை வைத்து மாலையில் வீடு திரும்பும் பெற்றோருக்குச் சொல்கிற குழந்தைதான் எல், கெ. ஜி வகுப்பில் இருக்கும் மூன்றரை வயதுக் குழந்தை. அந்தக் குழந்தையிடம் ப ப என்று கத்தச் சொல்கிறோம். கையைப் பிடித்து எழுத வைக்கிறோம். நான் எதற்காக இதை எழுதுகிறேன். எனக்கும் இந்த ப வுக்கும் என்ன தொடர்பு என்று எதுவும் தெரியாமல் ஆசிரியர் சொல்கிறார் என்பதற்காக எழுதுகிறது.
எழுதுவது என்பது எவ்வளவு சிரம்மான செயல் என்பதை உணர வேண்டுமா? உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். கடந்த ஆறுமாதமாக நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள்? புத்தகம் வாசித்திருப்பீர்கள், செய்திகள் கேட்டிருப்பீர்கள். நண்பர்களுடன் அரட்டை அடித்திருப்பீர்கள். ஆனால் எழுதியிருக்கிறீர்களா?
ஆம்... எழுத்து அனைத்து உறுப்புகளும், மனமும் இதயமும் ஒருங்கிணையும் ஒரு செயல்பாடு. ஆனால் நாம் இதையெல்லாம் யோசிக்காமல் பத்துக்குப் பத்து கட்டம் போட்ட குறிப்பேட்டில் எழுத வைக்கிறோம். கையைப் பிடித்து, அழுத்தி எழுத வைக்கிறோம். அந்த அனுபவம் குழந்தையின் மனத்தில் ஆழப்பதிகிறது. எழுதுவது எத்தனை கொடுமையானது என்று... அன்றிலிருந்து படிப்பை, பள்ளிக்கூடத்தை வெறுக்கத் தொடங்குகிறது.
இதையெல்லாம் யோசிக்காத பெற்றோர்களாகிய நாமோ ஆசிரியர்களிடம் பக்கத்துவீட்டுக் குழந்தை அ எழுதி விட்டது. ஏன் நீங்கள் எழுதச் சொல்லிக்கொடுக்கவில்லை? நிறைய எழுத்து வேலை கொடுங்க டீச்சர், எழுதினால்தான் மனத்தில் பதியும் (பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆயிரக்கணக்கான குறிப்பேட்டுப் பக்கங்களை எழுதிக்குவித்தீர்களே அதெல்லாம் உங்கள் நினைவில் இருக்கிறதா?) மூன்றுமுறை எழுதச் சொன்னால் போதாது, குறைந்தது ஐந்துமுறை எழுதச் சொல்லுங்கள்.... என்றெல்லாம் ஆசிரியர்களிடம் சொல்கிறோம். ஆசிரியர்களும் எங்கே குழந்தையைப் பள்ளியை விட்டு நீக்கிவிடுவார்களோ என்று பயந்து நாம் சொல்வது போல் செயல்படுகிறார்கள். இருவருக்கும் இடையே பாவம் குழந்தை.
அப்படியானால் எழுத வேண்டாமா?
கீழ்வரும் பரிசோதனையைச் செய்து பாருங்கள். முன்னரே திட்டமிட்டு இச்செயல்பாட்டை நடத்துங்கள். மூன்று மூன்றரை வயதுள்ள குழந்தையின் பெற்றோர்களாக இருப்பின் மிகவும் நல்லது.
கணவனும் மனைவியும் குழந்தை இருக்கும் நேரம் பார்த்து ஒரு கதை சொல்லுங்கள். ஆனால் குழந்தையைப் பார்த்துச் சொல்லாதீர்கள். கணவனிடம் சொல்லுங்கள், நல்ல சுவையான திருப்பத்தில் ஐயோ... அடுப்பில் பால் வைத்திருக்கிறேனே என்றோ, நண்பரை அழைக்க மறந்துவிட்டேன் என்றோ சொல்லியபடி கதையை நிறுத்துங்கள். குழந்தை உங்களைத் தொடர்ந்து வந்து கதை சொல்லும்படி வற்புறுத்துகிறதா என்று கவனியுங்கள்.
நிறைய வெற்றுத்தாள்களும் பேனாவும் பென்சிலும் வண்ணப் பென்சிலும் எல்லாம் குழந்தையின் பார்வைபடும் இடத்தில் வையுங்கள். நீங்களும் எதையோ எழுதுங்கள். நீங்கள் வற்புறுத்தாமலே, அதுவாக வந்து தாளையும் பென்சிலையும் எடுக்கிறதா பாருங்கள். அப்படி வரும்போது உனக்காக நான் என்ன எழுதட்டும் என்று கேளுங்கள். குழந்தை எழுதச் சொல்லும் சொல்லை எழுதிக்காட்டுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
குழந்தைகள்... அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் மிகப்பெரிய புத்திசாலிகள். நல்ல அனுபவங்களை அவர்களுக்குக் கொடுப்போம். மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தையால் மட்டுமே முழுத்திறமையோடு கற்றுக்கொள்ள முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
G. Rajendran
Director, Academics
Qrius Learning Initiatives, Coimbatore.

No comments:

Post a Comment