Tuesday, 5 March 2019

மனிதருக்கு விளங்காத மர்மங்கள் ராஜ்சிவா

*Author=Rajsiva*



*பகிர்வு =தசரதன்*

*அந்த விமானநிலையத்தில் 'அவன்'* வந்திறங்கியபோது, வழக்கம்போல அது பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது. கோடைகாலப் பின்மாலைப் பொழுது ஏற்படுத்தியிருந்த உற்சாகம், அங்கிருந்த மக்கள் அனைவரிடமும் தொற்றியிருந்தது. ஐரோப்பிய நாடொன்றின் விமானத்தில் அவன் வந்திறங்கியிருக்க வேண்டும். அவன் தோற்றமும் கலப்பற்ற ஐரோப்பியனென்றே சொல்லியது. வர்த்தகப் பயணியொருவன்போல, மடிப்புக்கலையாத கோர்ட், தொப்பியுடன் நேர்த்தியாகக் காணப்பட்டான். 'யப்பான் உங்களை வரவேற்கிறது' என்னும் வாசகத்துடனான மிகப்பெரிய வாசலினூடாக டோக்கியோவினுள் நுழைவதற்காகச் சென்றுகொண்டிருந்தான். சுற்றியிருக்கும் பயணிகளிடம் ஒருவித படபடப்புக் காணப்பட்டது. விமானநிலையத்தின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்குமிடத்தில் பயணிகளிடையே படபடப்புக் காணப்படுவது சகஜம்தான். ஆனால், அவனிடம் எந்தவிதமான படபடப்போ, தடுமாற்றமோ காணப்படவில்லை. இதுபோன்ற நடைமுறைகளைத் தினமும் காண்பவனென்ற அலட்சியம் அவனில் தெரிந்தது. விமானப் பயணச்சீட்டையும், கடவுச்சீட்டையும் வலதுகையிலும், ஆவணங்கள் வைக்கும் மெல்லிய கைப்பையை இடதுதுகையிலும் வைத்திருந்தான். வெளியே செல்லவேண்டும் என்னும் ஆர்வத்தில் வரிசைகளில் முதலில் நிற்பதற்கு பயணிகள் அவசரப்பட, நிதானமாகக் கடைசி மனிதனாக அவன் நின்றுகொண்டான்.



யப்பான், உலகில் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டிருந்த காலமது. தொழிற்புரட்சியின்மூலம் தானொரு ஜாம்பவனாகிவிட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்த காலம். அதனால், உலகம் முழுவதிலிருந்தும் வர்த்தக ஒப்பந்தங்களுக்காகப் பலர், டோக்கியோ நோக்கித் தினமும் வந்திறங்கியபடியே இருப்பார்கள். அப்படியொரு வியாபாரத் தோரணையுடன்தான் அவனும் காட்சியளித்தான். கடவுச்சீட்டுகளைப் பரிசோதித்து உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரிகள் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து பயணிகளை அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். வரிசைகளும் இரண்டாக மெல்ல நகர்ந்தது. இருபது நிமிடங்களின் பின்னர் அவன் முறை வந்தது. யப்பான் நாட்டுக்கேயுரிய விருந்தினரை உபசரிக்கும் சிரிப்புடன் கடவுச்சீட்டைப் பரிசோதிப்பவர் அவனைப் பார்த்தார். அவனும் சிநேகிதமான சிரிப்புடன் கைகளில் இருந்தவற்றை அவரிடம் ஒப்படைத்தான். கடவுச்சீட்டை வாங்கிப் பரிசோதித்த அதிகாரியின் முகத்திலிருந்த சிரிப்பு மெல்லமெல்ல மறையத் தொடங்கியது. 








அந்த அதிகாரிக்கு இருபத்தியைந்து வயதிருக்கலாம். முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அவரது சிரிப்புக் காணாமல் போனது அவருக்கே தெரிந்திருக்கவில்லை. கடவுச்சீட்டை மேலும் கீழும், பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்தார். முகத்தில் வியப்பும், ஏதோவொன்றைக் கண்டுவிட்டதுபோன்ற உணர்வும் கலந்து காணப்பட்டது. மேசைக்குக் கீழேயிருந்த பட்டனை அழுத்தினார். எங்கிருந்து வந்தார்களென்றே தெரியாமல், திடீரெனத் தோன்றிய இரு காவலர்கள் அவனுக்கு இரண்டு பக்கத்திலும் வந்து நின்றனர். விரும்பாத விசயமொன்று நடக்கிறது என்று அவனுக்குப் புரியத் தொடங்கியது. அமைதியாகச் சிரித்தபடியேதான் அப்போதும் நின்றான். அருகே நின்ற காவலர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. கடவுச்சீட்டைச் சரிபார்த்த இளம் அதிகாரி, அடுத்த வரிசையிலிருந்த அதிகாரியிடம் சென்றான். ஐம்பது வயது மதிக்கக்கூடிய அந்த அதிகாரி மிகவும் அனுபவசாலியாகத் தெரிந்தார். கையிலிருந்த கடவுச்சீட்டை அந்த அதிகாரியிடம் காட்டினான். அவரும் கடவுச்சீட்டைப் பலமுறை புரட்டிப்பார்த்தார். அவரின் முகமும் இறுக்கமடைந்தது. இரு அதிகாரிகளும் மெல்ல அவனை நோக்கி வந்தனர்.



அவனருகே வந்த அதிகாரிகள், அவனைத் தங்களுடன் வருமாறு ஆங்கிலத்தில் அழைத்தனர். ஏதோ தப்பு நடந்திருக்கிறதென்பதை அவன் புரிந்துகொண்டான். விமானநிலையத்தின் விசேச வழிகளுக்கூடாக அறையொன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டான். அறைக்குள் நுழையும்போது, அடுத்தடுத்த அறைகளில் காவலர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்ததை அவன் கவனித்தான். அறை மிகவும் விசாலமாக இருந்தது. நடுவே ஒரு மேசை போடப்பட்டிருந்தது. அங்கிருக்கும் நாற்காலியில் அவனை அமரச் சொன்னார்கள். 



"இதுவெல்லாம் எதற்கு என்று நான் அறிந்து கொள்ளலாமா?"



சுத்தமான யப்பான்மொழியில் அவன் கேட்டான். காவலர்கள் அதிர்ந்தே போனார்கள். ஐரோப்பியனொருவன் இந்தளவுக்குத் துல்லியமாக யப்பான்மொழி பேசியதை இதுவரை அவர்கள் பார்த்திருக்கவில்லை. 



"எங்கள் சீஃப் வருவார், அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்"



காவலர்களும் யப்பான்மொழியில் அவனுக்குப் பதில் கொடுத்தனர். பெரிய அதிகாரி வந்து சேர்ந்தார். மிகவும் ஆதரவான முகபாவனையுடன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, அவன் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். மெல்ல அவனை ஊடுருவதுபோலப் பார்த்தார். சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. நாகரீகமான கோர்ட், சூட். அதிநவீனமான மின்னும் காலணி. பணக்கார ஐரோப்பியனொருவன் தன்முன் அமர்ந்திருப்பதைக் கண்களால் கணித்துக்கொண்டார். மெல்ல ஒரு புன்னகையை தன் முகத்தில் தோன்றவிட்டு, அவர் கேட்டார்..



"சரி… சொல்லுங்கள். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?"



கேள்வி ஆங்கிலத்தில் இருந்தது. அந்தக் கேள்வி அவனை ஆச்சரியப்பட வைத்தது. பதிலை அவன் யப்பான்மொழியிலேயே சொன்னான்.



"ஏன் என் பாஸ்போர்ட்டில் அது தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கிறதே!" 



மேசை மேல் காவலர்கள் வைத்திருந்த தன் கடவுச்சீட்டை விரல்களால் சுட்டிக்காட்டியபடி சொன்னான். அவன் யப்பான்மொழியை இவ்வளவு இலாவகமாகப் பேசுவானென்று அவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டார். 



"அது இருக்கட்டும். நீங்க உங்க வாயால் சொல்லுங்கள். உங்கள் நாடு எது?"



"டௌரெட் (Taured)"



"என்ன? டௌரெட்டா?"



அதிகாரி நாற்காலியின் முன்னுக்கு வந்தார்.



"என் நாடு டௌரெட்"



அவன் பதில் இயல்பாகவேயிருந்தது.



"உங்கள் டௌரெட் நாடு எங்கிருக்கிறதென்று சொல்வீர்களா?"



அதிகாரியின் முகத்தில் புன்னகை மறைந்து, சந்தேகக் குரலில் கேள்வி வந்தது.



'இது என்ன முட்டாள்தனமான கேள்வி' என்பதுபோல அதிகாரியைப் பார்த்தான். 'இதுக்கு என்ன பதில் சொல்வது?' என்றும் யோசித்தான். அவனது அந்தச் சில நொடிகள் தாமதம் அதிகாரியின் சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்தது. அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பின்னேயிருந்த மிகப்பெரிய உலகப் படத்தைச் சுட்டிக்காட்டி.



"அந்தப் படத்தில் உங்கள் நாடு எங்கிருக்கிறதென்று காட்டுங்கள்" 



அப்போதுதான் அவன் அந்தப் பிரமாண்டமான உலக வரைபடத்தைப் பார்த்தான். அதனருகே சென்று ஒவ்வொரு நாடாகக் கண்களைச் செலுத்தியவனுக்கு, வரைபடத்தில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக உள்ளுணர்வு சொன்னது. அந்த வரைபடத்தில் மெதுவாகத் தன் விரல்களை நகர்த்தியபடி, ஃபிரான்ஸ் நாட்டுக்கும், ஸ்பெயின் நாட்டுக்குமிடையேயுள்ள எல்லை நகரமொன்றில் நிறுத்தினான். ஆனால் அந்த இடத்தின் பெயர் 'டௌரெட்' என்று வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கவில்லை. 'அண்டோரா' (Andorra) என்று குறிக்கப்பட்டிருந்தது. இது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. 'ஓ… யப்பான் மொழியில் டௌரெட்டுக்கு அண்டோரா என்பதுதான் பெயரா?' என்று நினைத்தான். ஆனால் சடாரென அந்த நினைப்பு அவனுக்கு எவ்வளவு முட்டாள்தனமென்று புரிந்தது. அவனுக்குத்தான் யப்பான் மொழி நன்றாகத் தெரியுமே! இதுவரை எத்தனையோ தடவைகள் யப்பானுக்கு அவன் வந்திருக்கிறானே! அண்டோரா என்னும் பெயரை இதுவரை கேட்டதில்லையே!



"டௌரெட் என்னும் பெயரை நாங்கள் என்றும் கேள்விப்பட்டதில்லையே!



அவனின் சந்தேகத்தையே தலைகீழாக்கி அதிகாரி கேட்டபடி, தொடர்ந்தார்.



"நீங்கள் சுட்டிக்காட்டும் இடம் அண்டோரா அல்லவா? அதை ஏன் டௌரெட் என்கிறீர்கள்?"



"இல்லை, அது அண்டோரா இல்லை. டௌரெட்தான்"









இவர்களுக்கு நான் எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்தான் அவன்.



"என் கைப்பையைத் தாருங்கள். அதிலிருக்கும் என் டாக்குமெண்டுகளைப் பாருங்கள். நான் சொல்வது உண்மையென்று தெரியும்"



அதிகாரி, காவலர்களைப் பார்த்தார். அவர்கள் அவனிடம் வாங்கி வைத்திருந்த பெட்டியைக் கொண்டுவந்தனர். அதைத் திறக்கும்படி அவனிடமே கொடுத்தனர். திறந்தவுடன் அவனிடமிருந்து அதைப் பறித்து, உள்ளே என்ன இருக்கிறதென்று ஆராய்ந்தனர். துப்பாக்கியோ, ஆயுதங்களோ அதிலிருக்கவில்லை. இருந்தவை டாக்குமெண்டுகள்தான். பெட்டியை அவனிடமே திருப்பிக் கொடுத்தனர். அதனுள்ளிருந்து ஒவ்வொரு காகிதத்தையும் எடுத்து அதிகாரியிடம் காட்டினான்.



அவன் பெட்டிகளில் வியாபாரத்துக்குரிய ஆவணங்கள் இருந்தன. அவையனைத்துமே முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. பதிவு செய்யப்பட்டிருந்த இடம் 'டௌரெட்'. அவனது கடவுச்சீட்டும் டௌரெட்டிலேயே வினயோகிக்கப்பட்டிருந்தது. அதன் முன்னட்டையில் தங்க எழுத்தில் 'டௌரெட்' என்று எழுதியுமிருந்தது. கைப்பையின் மேல்பகுதியிலிருந்து தனது 'சாரதி அனுமதி' (Driving Licence) அட்டையையும் எடுத்துக் கொடுத்தான். அதுவும் டௌரெட்டிலேயே வினயோகிக்கப்பட்டிருந்தது. டௌரெட்டிலிருக்கும் ஒரு வங்கியில் வியாபாரத்துக்கென அவன் வாங்கிய கடன் பத்திரமும் அங்கிருந்தது. எல்லாமே அசலாகத் தயார் செய்யப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் ஆவனங்கள்போல் இருந்தன. அவன் கடைசியாகக் காட்டியதுதான் அதிகாரியை ரொம்பவும் அசைத்தது. டௌரெட்டிலிருக்கும் அவனது கம்பெனிக்கும், டோக்கியோவிலிருக்கும் கம்பெனிக்குமிடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப் பத்திரமது. அதிகாரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் பொய் சொல்பவனாகத் தெரியவில்லை. அனைத்து டாக்குமெண்ட்களையும் டௌரெட்டிலிருந்து பெற்றுக்கொண்டதாக வைத்திருக்கிறான். அவனது கடவுச் சீட்டின்படி, உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாடுகளுக்கும் பயணித்திருப்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. யப்பானுக்கு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் வந்து போயிருக்கிறான். யப்ப்பான் மொழியையும் அச்சரம் பிழைக்காமல் தெளிவாகப் பேசுகிறான்.



'இவன் யார்? எங்கிருந்து வந்திருக்கிறான்?'. 



பெரிய அதிகாரி நாற்காலியிலிருந்து எழுந்தார். இரு அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்தார். அவனுக்கருகில் இரு காவலர்கள் நின்றுகொண்டனர். அடுத்த அறைக்குச் சென்றார். அங்கு மேலும் சில அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்து, அவனைப்பற்றிப் பேச ஆரம்பித்தனர். நடந்தவை அனைத்தையும் பெரிய அதிகாரி அனைவருக்கும் விளக்கிக் கூறினார். அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தனர். அதிகாரி கூறினார்.



"நான் இந்தப் பணியில் பலகாலம் இருக்கிறேன். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன். பிரான்ஸுக்கும், ஸ்பெயினுக்குமிடையில் 'டௌரெட்' என்னும் நாடு இருப்பதாகக் கேள்விப்பட்டதேயில்லை. அங்கிருப்பது அண்டோராதான். அண்டோரா என்பது ஸ்பெயினுக்குச் சொந்தமான ஃபிரான்ஸ் எல்லையிலமைந்த ஒரு சிறிய நகரம். அவன் சொல்வதோ, கடவுச்சீட்டுக் வழங்கக்கூடிய 'டௌரெட்' என்னுமொரு நாட்டைப்பற்றி. ஐரோப்பாவில் 'டௌரெட்' என்னும் நாடு, குறிப்பாக அவன் சுட்டிக்காட்டும் இடத்தில் இல்லவேயில்லை. அவனைப் பார்த்தால் பொய் சொல்பவன் போலவும் தெரியவில்லை. அவனுக்கு ஆங்கிலம், யப்பான் மொழிகள் சரளமாகப் பேசவருகிறது. இன்னும் என்னென்ன மொழிகள் பேசுவானோ தெரியவில்லை. அவன் கொடுக்கும் தகவல்களிலும், டாக்குமெண்டுகளிலும் எந்தத் தடுமாற்றமும், சந்தேகங்களும் இல்லை. அனைத்தும் ஒரிஜினலாகவே இருக்கின்றன. டௌரெட்டிலிருக்கும் வங்கியொன்றில் கடனெடுத்ததற்கான ஆவனமொன்றையும் அவன் வைத்திருக்கிறான். 'டௌரெட்' என்ற நாடு எங்களுக்குத் தெரியாமல் எப்படி மறைந்திருக்க முடியும்? அல்லது இவன் அனைவரையும் ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரனா?



மூச்சு விடாமல் பேசி முடித்தார் அதிகாரி. அப்போது அங்கிருந்த இன்னுமொரு அதிகாரி ஒரு ஆலோசனையைக் கூறினார்.



"நாம் ஏன் ஸ்பெயினுக்கும், ஃபிரான்ஸுக்கும் போன்செய்து இதை விசாரிக்கக்கூடாது?"



உடன் ஸ்பெயினுக்கும், ஃபிரான்ஸுக்கும் தொலைபேசி அழைப்புகள் பறந்தன. அவர்கள் சிரிக்காத குறைதான். ஒரு ஊர் இருக்கிறதா? என்று கேட்டிருந்தால், அந்தச் சிரிப்பு வந்திருக்காது. நாடொன்று இருக்கிறதா? என்று கேட்டதுதான் தப்பு. 'டௌரெட்' என்றொரு நாடே இல்லையெனத் தெளிவாகத் தெரிந்துபோனது. அப்போது இன்னுமொரு இளம் அதிகாரி சொன்னார்.



"அவன் யப்பான் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்திருந்தானல்லவா? அந்தக் கம்பெனியில் விசாரித்தாலென்ன?"



இது சரியான வழியென்று அனைவருக்கும் பட்டது. அவனிருக்கும் அறையை நோக்கி அதிகாரிகள் சென்றனர். அவ்வளவு பேரை அவன் எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்துப் பெரிய அதிகாரி சொன்னார்.



"நீங்கள் சொன்ன உங்கள் நாடான டௌரெட், இந்த உலகத்தில் எங்குமில்லை. வரைபடத்தில் நீங்கள் காட்டிய இடத்தில் பிரான்ஸும், ஸ்பெயினும் மட்டுமே இருக்கின்றன. நீங்கள் எங்களுக்கு எதையோ மறைக்கிறீர்கள். பொய் சொல்கிறீர்கள். இப்போது உண்மையைச் சொல்லும் பட்சத்தில், உங்கள் உண்மையான நாட்டின் தூதுவராலயத்தில் உங்களை ஒப்படைத்து விடுகிறோம். ஐரோப்பாவுடன் யப்பான் எப்போதும் நல்ல உறவையே கடைப்பிடிக்க விரும்புகிறது. அதனால், நீங்கள் பொய் சொல்வதில் அர்த்தமில்லை. நீங்கள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற உண்மையைச் சொல்லுங்கள்?"



அவர் பேசப்பேச அங்கு தன்னையொரு முழுமையான அந்நியனாகவே அவன் உணர்ந்தான். இதுபோல் அவன் எந்த நாட்டிலும் இதுவரை உணர்ந்ததில்லை. அப்போதுதான் அவனுக்கு, 'தான் ஒப்பந்தம் செய்த கம்பெனியிடமே இவர்கள் பேசினால் உண்மை தெரிந்து விடுமே!' என்று தோன்றியது.



"நான் டோக்கியோவிக்கு யாரிடம் வந்தேனோ, அந்தக் கம்பெனிக்கே நீங்கள் போன் செய்து கேட்டுப் பார்க்கலாமே!"



இதை அதிகாரிகள் எவரும் எதிர்பார்கவில்லை. தாங்கள் எதைச் சரிபார்க்க வேண்டுமென்று நினைத்து வந்தார்களோ, அதையே அவனும் சொன்னது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவன் பேச்சில் உண்மைத்தன்மை பளிச்சிட்டதைக் கண்டார்கள். தன்னிடமிருந்த காகிதங்களிலிருந்து கம்பெனியின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை அவன் கொடுத்தான். அவனுக்கு முன்னாலேயே போன் செய்யப்பட்டது. ஆனால், அப்படியொரு விலாசமோ, கம்பெனியோ டோக்கியோவில் இல்லையெனத் தெரியவந்தது. அந்தத் தொலைபேசி இலக்கங்களும் தவறாக இருந்தது.



இதை அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவன் பொய் சொல்பவனல்ல. தன் நாட்டில் மிகவும் மதிக்கத்தக்க பிரஜை அவன். இப்படியொரு அவமரியாதை அவனுக்கு இதுவரை ஏற்பட்டதேயில்லை. நாடுகள்தோறும் வியாபாரம் செய்து, கோடிகோடியாகப் பணத்தைப் பெருக்கி, வளர்ந்துவரும் கோடீஸ்வரர்களில் அவனும் ஒருவன். 'என்னை எப்படி இவர்கள் இப்படி நடத்தலாம்? ஒரு அதிகாரிதான் தப்பாகச் சிந்திப்பாரென்றால், அனைத்து அதிகாரிகளும் எப்படித் தப்பாகச் சிந்திக்க முடியும்? இல்லையென்றால், நான்தான் இங்கே தப்பா? எங்கோ தவறு நடந்து வேறொரு இடத்துக்கு நான் மாறிவந்துவிட்டேனா?' மேலே அவனால் நினைக்க முடியவில்லை. 'அட! நான் இதை மறந்து போனேனே! டௌரெட்டிலிருக்கும் என் மனைவியுடன் போனில் பேசினால், அவள் இவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்வாளல்லவா?' அதை உடன் அதிகாரிகளுக்குச் சொன்னான். அதிகாரிகளில் பலர் அதை ஒத்துக்கொள்ளவில்லை. இவனொரு ஏமாற்றுக்காரன் அல்லது பைத்தியக்காரன் என்ற முடிவுக்கே அவர்கள் வந்திருந்தார்கள். தன் மனைவிக்கு தொலைபேச அனுமதிக்கும்படி அவன் கெஞ்சினான். பெரிய அதிகாரிக்கு மட்டும் அவன் பொய் சொல்லவில்லையென்ற எண்ணம் தோன்றிக்கொண்டேயிருந்தது. அவரது அனுபவத்தில் பொய் சொல்லும் எத்தனையோ குற்றவாளிகளைக் கண்டிருக்கிறார். அவர்களின் கண்களை அல்லது விரலசைவுகளை வைத்தே பொய் சொல்வதை அவரால் கண்டுபிடித்துவிட முடியும். பொய் சொல்பவனை அவரது உள்ளுணர்வு உடன் காட்டிக்கொடுத்துவிடும். இவனிடம் அப்படி எதுவுமே தெரியவில்லை. இறுதிச் சந்தர்ப்பமாக அவனுக்கு மனைவியிடம் தொலைபேச அனுமதித்தார். அவன் கையில் தொலைபேசி கொடுக்கப்பட்டது.



அவன் டயல் செய்தான். ஆனால் அவன் டயல் செய்யும் இலக்கம் தவறென்பதுபோல தொலைபேசியிலிருந்து சத்தம் வந்தது. பலதடவைகள் முயற்சி செய்தான். அப்படியொரு இலக்கமே இல்லையென்று தொலைபேசிக் காரியாலத்திலிருந்தும் சொல்லப்பட்டது. அவனுக்கு அப்போதுதான், தான் நினைத்தது சரியென்று தோன்றியது. உண்மையாகவே தப்பு நடந்துவிட்டது தெரிந்தது. 'சுவரிலிருந்த வரைபடத்தைத் தவிர்ந்து வேறு வரைபடம் இருகிறதா?' எனக்கேட்டான். அவனுக்கு ஒரு வரைபடப் புத்தகமே கொடுக்கப்பட்டது. அதிலுள்ள அநேகமான நாடுகள் அவனுக்குத் தெரியாத நாடுகளாகவே இருந்தன. வரைபடமும் வேறு வடிவத்தில் அமைந்ததுபோலத் தெரிந்தது. தப்பான ஒரு இடத்துக்குத் தான் மாறி வந்துவிட்டதை அவன் அறிந்துகொண்டான். கடைசியாக 'டௌரெட்' விமானநிலையத்தில் யப்பான் செல்வதற்காக ஏறியது ஞாபகமிருந்தது. மனைவியும், மகளும் வழியனுப்பக்கூட வந்திருந்தனர். அப்புறம் விமானத்தில் நெடுநேரம் நித்திரைசெய்தது, பின்னர் விமானம் இறங்கும்போது விழித்தெழுந்தது ஞாபகம் வந்தது. இப்போது யோசிக்கும்போது, நித்திரையால் எழுந்த பின்னர் விமானத்தில் ஒரு மாற்றம் இருப்பதாகத்தான் தோன்றியது. ஆனால், நித்திரைக் கலக்கத்தில் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. தன் தலையைப் பிடித்தபடி, குனிந்துகொண்டு அழுதான். அழுது எழுந்தவனுக்கு என்ன நடந்திருக்குமெனத் தெரிந்துபோனது. அவன் அமைதியானான். அதன் பின்னர் அதிகாரிகள் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் அவன் பதிலளிக்க மறுத்துவிட்டான். அவனொரு ஐரோப்பியனாக இருந்ததால் வன்முறைகள்மூலம் உண்மையைக் கேட்டறிய முடியவில்லை. டோக்கியோ நகர இரகசியப் போலீஸிடம் அவனைக் கையளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களைத் தயார்செய்ய நேரம் தேவைப்பட்டதால், அன்றிரவு விமானநிலையத்துக்கு அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றில் காவலில் வைத்திருப்பதற்குத் தீர்மானித்தனர்.



எட்டடுக்கு மாடிகளைக்கொண்ட அந்த ஹோட்டலின் ஐந்தாவது மாடியில், ஒரு அறையில் அவன் தங்கவைக்கப்பட்டான். அந்த ஹோட்டர் அறை பாதுகாப்புடன் விசேசமாகத் தயார் செய்யப்பட்டது. எப்படி முயன்றாலும் திறக்க முடியாத ஜன்னல்களுடன், பால்கனியேயில்லாத அறையது. அந்த அறையிலிருந்து தப்ப வேண்டுமாயின் வாசல் வழியாக மட்டுமே தப்பமுடியும். அறை வாசலில் இரண்டு காவலர்களும், சற்றுத் தள்ளி இரண்டு காவலர்களும் பாதுகாப்புக்கென நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அறையில் இருந்த கட்டிலில் நிம்மதியாக அவன் படுத்துறங்கினான்.



அடுத்தநாள் காலையுணவிற்காக அவனை எழுப்புவதற்குக் காவலர்கள் அறையைத் திறந்தபோது, அறை வெறுமையாகக் காட்சியளித்தது. அங்கு யாருமே காணப்படவில்லை. காற்றில் கரைந்து மாயமாகியிருந்தான் அவன். வாசல் வழியாகவோ அல்லது வேறெந்த வழியாகவோ அவன் தப்பிப் போயிருக்க முடியாது. ஆனால் எப்படி அவன் மறைந்து போனான்? அதிகாரிகளுக்கு விபரம் அறிவிக்கப்பட்டது. அலறியடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு ஓடிவந்தனர். எங்கு தேடியும் அவனில்லை. ஹோட்டலில் தேடிக்கொண்டிருந்த அதிகாரிகளுக்கு விமானநிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. காவலரொருவர் பதட்டத்துடன் பேசினார்.



"அந்த மனிதனின் கைப்பெட்டி, அவனது ஆவனங்கள், கடவுச்சீட்டு அனைத்தும் இருந்த இடத்திலிருந்து மாயமாகிவிட்டன"



இதுவரை இந்தக் கதையைப் படித்தபோது, 'ராஜ்சிவா புனைகதை எழுத ஆரம்பித்துவிட்டாரா?' என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், இது புனைகதையில்லை. நிஜமாகவே நடந்த கதை. 'The man from Taured' என்று அவனைப்பற்றி உலகமே பேசுகிறது. டோக்கியோவிலிருக்கும் 'ஹனேடா' (Haneda) விமானநிலையத்தில், 1954ம் ஆண்டு யூலை மாதம் அந்த மனிதன் வந்திறங்கியதாகச் சொல்லப்படுகிறது. அழகாக வெட்டப்பட்ட தாடியுடன், நாகரீகமாகக் காட்சியளித்திருக்கிறான். பின்னர் மறைந்து போய்விட்டான். அவன் கூறும்போது, "டௌரெட் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நாடு" என்று சொல்லியிருக்கிறான். அத்துடன் அவனது கடவுச்சீட்டும் போலியான கடவுச்சீட்டென்று சொல்ல முடியாததுபோல் இருந்தது.



'அவன் யார்? டோக்கியோவுக்கு எப்படி வந்தான்? உண்மையில் அப்படியொருவன் வந்தானா? அல்லது அவன் போலியாக உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பாத்திரமா? இல்லை, காலப் பிரயாணத்தில் வந்துபோன ஒரு மனிதனா? அல்லது, பூமியின் இன்னுமொரு பரிமாணத்தில் (Dimension) இருந்து மாறி வந்துவிட்டவனா?'



அல்லது ஏலியனா?



விடை தெரியாத பல கேள்விகள் நம்மிடையே இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, 'ஏலியன் என்று சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா?' என்னும் கேள்விதான். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இனிவரும் ஒவ்வொரு இதழிலும் நாம் விளக்கமாகப் பார்ப்போமா? 



*அடுத்து ஏலியன்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.*



*மர்மங்கள் தொடரும்*



*ராஜ்சிவா-*

No comments:

Post a Comment