Thursday 4 June 2020

கண் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் கருவிகள்

#கண் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் கருவிகள்...

#கண்ணாயுதங்கள்

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கண் மருத்துவ சிகிச்சை முறைகள் அனைத்தும் மருத்துவ முறைகளுக்கும் முன்னோடி ஆகும். சித்தர் அகத்தியர் மற்றும் நாக முனி ஆகியோர் 96 வகை கண்நோய்களை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவற்றின் உட்பிரிவுகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் மொத்தம் 125 கண்நோய்கள் தமிழ் மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வடநாட்டு மருத்துவ நூல்கள் தங்கள் மருத்துவத்தில் தொகையில் கிடைக்காத கூடுதல் 21 நோய்களின் விபரங்களை தமிழ்மருத்துவ நூல்களில் இருந்து பெற்றதாக குறிப்பிடுகிறது. 

#கண்நோய்களுக்கு பயன்படுத்துவதற்காக இருபதிற்கும் மேற்பட்ட நுண்ணிய கருவிகள் சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. கண்ணில் வளர்ந்த சதையை உரித்து எடுப்பதற்கு சரவண பத்திரம் என்ற சொரசொரப்பான கூர்மையான விளிம்புகளை உடைய இலைகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமன்றி கண்களில் எண்ணை ஊறவைக்கும் புறவளையம் என்ற தர்ப்பணம், பற்று போடுதல் என்ற தப்பளம், சொட்டு சொட்டாக கண்களுக்கு மருந்துவிடும் ஒழுக்கு மருத்துவம் மற்றும் வேகமாக மருந்துகளை தாரைதாரையாக ஊற்றும் தாரை மருத்துவம் என சித்த மருத்துவம் தொடாத மருத்துவ எல்லையே இல்லை எனலாம். 

#பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கண் பரிசோதனை கருவிகள் மூலமாக பல கண்நோய்களை நவீன மருத்துவம் அறிவதற்கு முன்பாகவே 96 வகையான கண் நோய்களை பெயரிட்டு அதற்கான கருவிகளையும் பெயரிட்ட சித்த மருத்துவத்தின் அறிவியலை நவீன மருத்துவம் முழுவதுமாக எடுத்துக் கொண்டது. 

#அதுமட்டுமன்றி பலகணி பார்த்தல் என்ற அகத்தியரின் கண் மருத்துவ பயிற்சியானது Pinhole refraction என்ற நவீன கண் மருத்துவ பயிற்சி கருவியாக மாறிவிட்டது. பிரித்து அழித்தல் என்ற பெயரில் விழித்திரை பாதிப்புக்கு வழங்கப்படும் இரட்சை என்ற சூடு போடும் சிகிச்சை முறை விழித்திரை கிழிதலுக்கு லேசர் சிகிச்சை முறையாக தற்சமயம் மாற்றம் எடுத்துள்ளது. நவீன மருத்துவமுறை மற்றும் பல்வேறு இந்திய முறை மருத்துவ முறைகளுக்கும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன கண் நோய் மருத்துவம் மற்றும் அதற்கான கருவிகள்தான் முன்னோடி. சித்த மருத்துவத்தில் அறிவியல் இல்லை என்று ஏளனம் செய்யும் அனைத்து முறை மருத்துவர்களும் அகத்தியரின் கண் நோய்கள் பற்றிய பாடல்களையும் அவை தொகுக்கப்பட்ட சரபோஜி மன்னரின் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நவீன மருத்துவ அறிவியலுக்கு வித்திட்டது சித்த மருத்துவம்தான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

#சித்தமருத்துவத்தில் 
 #அறுவைகருவிகள்

        அகத்தியர் நனய விதியில் 26 வகையான அறுவை சிகிச்சை கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு உதவும் ஆயுதங்களின் பெயர்களும், அவற்றின் பயன்பாடும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் கண்ணோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்பட்டன.

        உதாரணமாக வட்ட வடிவ, பிறை வடிவ கருவிகள் எல்லாம் கண்ணின் லென்ஸ் என்னும் கண்புரையை நீக்க பயன்படுத்திய ஆதாரங்கள் என நாகமுனிவர் மற்றும் அகத்தியரின் நனய விதி மூலம் அறியப்படுகிறது.
 
“கத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும்
முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்
ஆழிக் கோலு மடுத்த பிறையுடன்
கத்தரிக் கையுடன் பரகரை வாங்கியும்
முச்சலா கையோடு முனிமொழி யோட்டும்
மட்டக் கோலும் மாறும் ஊசியும்
செப்புக் கிழையுஞ் சீரிய சலாகையும்
வட்டகை தன்னுடன் வளர்பஞ் சமுகமும்
செப்புச் சலாகையுங் கொம்புங் குடோரியும்
வெங்கலக் குழலும் ஈயச் சலாகையுங்
காயக் கோலுங் கண்கத்தி தண்டும்
இவையிவை யாயுத மிருபத் தாறுஞ்
சிவனவ னருளால் திகழ்சத்ரா யுதமே” - #அகத்தியர் நயன விதி
 
1.#கத்தி
 
“அறைதருங் கத்தியா றங்குல நீளம்
அகலமோ ரங்குலம் ஆம்முனை வட்டம்
மயிர்கத்தி போன்று வழற்கு மென்ப”
        6 அங்குலம் நீளம், அகலம் 1 அங்குலம், முனைவட்டமானது ரோக்கத்தியைப் போன்றது.
 
2. #சத்திரம்
 
“சத்திர நீளஞ் சாற்றினா றங்குலம்
வேப்பிலை போலும் விளங்கும்பல் பல்லாய்
நிறைகலுஞ் சாறு நெடியதோர் பிளவை
மெத்தவும் பயமான் மேதினி மிசையே”
        6 அங்கலம் நீளம், வேப்பிலையைப் போல் பல் பல்லாக இருக்கும். நிறை 6 கழஞ்சு, பிளவை, கட்டி ஆகியவற்றை கண்டமாய் அறுக்க உபயோகப்படுகிறது.
 
3. #குரும்பிவாங்கி
 
“குரும்பி வாங்கியின் கூறே ழங்குலம்
நிறையரைக் கழஞ்சு நெடுங்கைப் பிடியோ
ஐந்தே அங்குலம் ஆமெனப் பகர்வார்”
        நீளம் 7 அங்குலம், நிறை அரைக்கழஞ்சு, கைப்பிடி மட்டும் 5 அங்குலம்.
 
4. #முகவாதனன்
“முகவர் தனனோ முந்தான் கங்குலம்
முக்காற் கழஞ்சு நிறையென மொழிவார்”
        நீளம் 12 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு.
 
5. #முள்வாங்கி
 
“முள்வாங்கி நீறம் மூவிரண் டங்குலம்
அகலமோ ரங்குலம் அணிநிறை கழஞ்சொன
றறுக்கவும் கீறவும் அவிர்நகம் வாங்கவும்
பயனாம் என்று பணித்தனர் மேலோர்”
 6 அங்குலம் நீறம், 1 அங்குலம் அகலம், 1 கழஞ்சு நிறையுள்ளது.
 
6. #ஆழிக்கோல்
 
:ஆழிக்கோல் பத்தே அங்குலம் நிறையோ
அரைப்பலம் ஆகுமென் றறைந்தன ரறிஞர்”
         நீளம் 10 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு.
 
7. #பிறைக்கோல்
 
“பிறைக்கோ லென்பது பேசின்மூ வங்குலம்
நிறைமூன்று கழஞ்சு நிகழெழுத் தாணிபோல்
நீண்ட பிறைக்கோல் மத்தியில் நிலவுறும்”
        நீளம் 3 அங்குலம், நிறை 3 கழஞ்சு, எழுத்தாணி போல் நீண்ட பிறைக்கோல் மத்தியில் விளங்கும்.
 
8. #கத்தரிக்கோல்
 
“கத்தி கைச்சீர் கழறெட் டோடரை
அங்குலம் நிறைகாற் பலமே யாகும்”
நீளம் 8 ½ அங்குலம், நிறை கால் பலம்.
 
9. #பரகரைவாங்கி
 
“பரகரை வாங்கியோ பதினாறங்குலம்
நிறையரைப் பலமென நிகழ்த்துவ ருணர்ந்தோர்”
        நீளம் 16 அங்குலம், நிறை அரைப்பலம்.
 
10. #முச்சிலாகை
 
“முச்சிலா கைச்சீர் மொழியினே ழங்குலம்
நிறைநான்கு கழஞ்சே நிலவதன் வடிவோ
ஒரு மூன்ற தகட்டுவா யுள்ளது பாரே”
        நீளம் 7 அங்குலம், நிறை 4 கழஞ்சு, மூன்று தகடாகவுள்ளது.
 
11. #முனிமொழி
 
“முனிமொழி யென்பதோர் முக்கிய கருவியே”
இது ஒரு முனை மழுங்கிய முக்கிய கருவியாகும்.
 
12. #ஒட்டுக்கோல்
 
“ஒட்டுக்கோ லங்குலம் ஒன்றொடு பத்தே
தலையொரு கழஞ்சரைப் பலமுடல்ம நிறையே”
        நீளம் 11 அங்குலம், தலை மட்டும் 1 கழஞ்சு எடை, தலையை தவிர பிற பாகம் அரைப்பலம் நிறை உடையது.
 
13. #அட்டக்கோல்
 
“அட்டக்கோ லிரொன் பானங் குலமே
காசிடை யெட்டனைக் கழறுவ ருரியோர்”
        நீளம் 18 அங்குலம், நிறை 8 காசெடை
 
14. #ஊசி
 
“ஊசிமு வங்குலம் உரைநிநை யரைமா”
        நீளம் 3 அங்குலம், நிறை அரைமா.
 
15. #செப்புக்_குழை
 
“செப்புக் குழைதான் திரட்சியாங் குழலே
ஓருசா ணளவின துயர்நிறை யரைப்பலம்
தகடோ லைக்கனம் சார்புண்ணிர் விடுவது”
        ஒரு சாண் நீளம், நிறை அரைப்பலம், தகடு ஒலைக்கனம், திரட்சியான குழல், புண்ணில் விடுவது.
 
16. #சலாகை
 
“சலாகை யங்குலந் தானொரு நான்கே
அன்றியைந் ததன்நிறை யாறிரு கழஞ்சே”
        4 அல்லது 5 அங்குலம், நிறை 12 கழஞ்சு, புரையோடிய புண்களின் நிலை அறிவதற்கு உபயோகப்படுவது.
 
17. #வட்டகை
 
“வட்டகை யென்பதோர் வகையா யுதமே”
        முனையில் வட்ட வடிவமான தகடைக் கொண்ட ஒரு ஆயுதம்.
 
18. #பஞ்சமுகம்
 
“பஞ்ச முகமுகப் பரிசின தாமே”
        ஐந்து முகங்களைக் கொண்ட ஒரு ஆயுதம்.
 
19. #செப்புச்சலாகை
 
“செப்புச் சிலாகை சிறந்ததோர் கருவியே”
        செம்பால் செய்யப்பட்ட நீளமான குச்சி போன்ற ஒரு ஆயுதம்.
 
20. #கொம்பு
 
“கொம்பீ ரைந்தங் குலமாம் வாழையின்
குருத்தொப் பதுபூண் குலவிரண் டங்குலம்
மேனிவீக் கத்தை வீட்ட வல்லதே
கீறிக் கட்டியைக் கெட்டசெந் நீரை
வெளியிடத் தக்க மிருபய னாயதே”
        10 அங்குலம் நீளம், காளை மாட்டுக் கொம்பிற்கு அடிப்பாகத்தில் பித்தளையினால் ஆன, பூண் போன்ற சுற்றுப்பூண் இரண்டங்குலம். குருதி கட்டிய சரீர வீக்கம், கட்டி இவைகளைக் கீறி, இரத்தத்தைக் கொம்பு வைத்து வாயினால் உறிஞ்சி உமிழ உதவுகிறது.
 
21. #குடோரி
 
“குடோரியே ழரையங் குலம்நிறை காற்பலம்”
        நீளம் 7½ அங்குலம், நிறை கால் பலம்.
 
22. #வெண்கலக்குழல்
 
“வெண்கலக் குழல்தான் மேவுமெட் டங்குலம்
நிறைபலம் மூன்றோ மறையென நிகழ்த்துவர்”
        நீளம் 8 அங்குலம், நிறை 3½ பலம்.
 
23. #ஈயச்சலாகை
 
“ஈயச் சலாகை மியன்பின்மூ வங்குலம்
நிறையோ நான்கு கழஞ்சென நிலவிடும்”
        நீளம் 3 அங்குலம், நிறை 4 கழஞ்சு, கட்டி, பிளவை, கிருமி இவற்றைக் குணப்படுத்துவது.
 
24. #காயக்கோல்
 
“காயக் கோல் நீளம் களறினே ழங்குலம்
நிறையிரு கழஞ்சு நெடிய பருமனோ
இரண்டங் குலமென விசைத்தனர்
பெரியோர்”
        நீளம் 7 அங்குலம், பருமன் 2 அங்குலம், நிறை 2 கழஞ்சு.
 
25. #தண்டுச்சலாகை
 
நீளம் 9 அங்குலம், நிறை ½ கழஞ்சு, ஈர்க்குக் கனம்.
 
26. #நயனக்கத்தி
 
        நீளம் 3 அங்குலம், நிறை இரு பண வெடை, ஊசி போன்ற முனையுள்ளது. முனையில் புளியிலை கனம் விட்டு மற்ற பாகங்களெல்லாம் நூலால் சுற்றப்பட்டுள்ளது.
       
இவ்வாறு 26 வகை கருவிகளை அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் நாக முனிவரும் பல்வேறு கருவிகளை தனது நூலில் விளக்கியுள்ளார். இந்த கருவிகளை பல்வேறு அசுர சிகிச்சையில் அதாவது காரம், அறுவை, அக்கினி ஆகிய சிகிச்சை முறைகளில் சித்த மருத்துவர்கள் பெரிதும் பயன்படுத்தினர்.
 
        பாண்டிய மன்னனின் #கூன்முதுகை நிமிர்த்தியது, மன்னனின் தலைக்குள் நுழைந்த #தேரையை, தலையை உடைத்து வெளியேற்றியது, போரில் காயம் பட்ட வீரர்களின் #அழுகிய தோலை நீக்கி, வேறிடத்தில் நல்ல தோலை வெட்டி எடுத்து, வைத்து தைத்தது, உடைந்த, வளைந்த #எலும்புகளை சீராக கட்டியது, மீண்டும் உடைத்து #நேராக மாற்றியது போன்ற பல்வேறு குறிப்புகள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சித்தர் வரலாறு மற்றும் பல்வேறு இலக்கிய நூல்களில் காணப்படுகின்றன.

#தகவல் தொகுப்பு மற்றும் படங்கள்:
சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

No comments:

Post a Comment