Thursday 25 June 2020

ஞாபக மறதியும் உளவியல் உண்மையும்

#ஞாபக_மறதியும்_உளவியலும்...🤔🤔🤔

நாம் மறக்கிறோம். நாம் மறந்து போகிறோம். நாம் பல நேரங்களில் மறந்து போகிறோம். அவசர வேலையாக வேகமாக தயாராகி சென்று கொண்டு இருப்போம் பாதிவழியில் தான் நினைவிற்கு வரும் அடடா நான் எனது சாவியை, அலைபேசியை, பணத்தை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவிற்கு வரும் சரி அவசரத்தில் வேகமாக வந்ததால்தான் மறந்து விட்டோம் என்று சில நேரங்களில் நம் மனதிற்கு நாமே சமாதானம் கூறுவோம்.

ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கும். நாம் மெதுவாக ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கும் பொழுது அது திரும்பவும் நடக்கும் உதாரணமாக வீட்டிற்குள் சென்று தண்ணீர் குடித்துவிட்டு மின்விசிறியை அணைக்கவேண்டும் என்று சிரித்துக்கொண்டே செல்வோம் ஆனால் மின்விசிறியை மட்டும் அணைத்துவிட்டு தண்ணீர் குடிக்காமலேயே திரும்ப வந்து விடுவோம். சிறிது நேரத்திற்குப் பிறகுதான் நாம் மறந்தது புரியும் அடடா தண்ணீர் குடிக்கலாம் என்று சென்றோம் மறந்து விட்டோமே என்று வருந்துவோம்.

இந்த நிகழ்வுகளை கவனித்த நம் மனம் நமக்குள் பேசும். நாம் இப்போது நாம் அதிகமாக மறந்துவிடுகிறோம், ஞாபக மறதி அதிகமாகிக் கொண்டே செல்கிறது, வயதாக வயதாக ஞாபக மறதியும் அதிகமாகிறது, இப்படியே சென்றால் என்ன நடக்குமோ? என்று திரும்பத் திரும்ப நமக்குள் பேசிப் பேசி நம் மனதிற்குள் பதிய வைத்து அதை ஒரு நோயகவே மாற்றி விடுகிறது. அந்த நோய்க்கு ஞாபக மறதி நோய் என்று பெயரையும் வைத்து வாழ்கிறோம். 

ஒருவேளை உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக இருந்தால் உங்களுக்கு பாதி வழியில் மட்டும் ஏன் ஞாபகம் வருகிறது? சிறிது நேரத்திற்குப் பிறகு ஏன் ஞாபகம் வருகிறது? 

உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக இருந்தால் சுத்தமாக ஞாபகமே வந்திருக்கக் கூடாது அல்லவா? அப்படி என்றால் உங்களுக்கு ஞாபக மறதி நோய் இல்லை என்பது தானே உண்மை? வேறு என்ன காரணம்? ஏன் பாதி தூரம் மட்டுமே மறக்கிறோம்? ஏன் கொஞ்ச நேரம் மட்டும் மறக்கிறோம் அது ஏன்? 

ஏனென்றால் அது ஞாபக மறதி இல்லை என்பதனால் தான். அப்படியெனில் நாம் அந்த நேரத்தில் மறந்து போவதற்கான காரணம் என்ன?

நாம் நம்மோடு இல்லை என்பது தான் காரணம். நம் உடல் மட்டும் தான் அங்கே உள்ளது ஆனால் நம் மனம் நம்மோடு இல்லை. நம் மனம் அங்கே இல்லை. நாம் வேறு எதையாவது எண்ணியபடியே ஒவ்வொரு நொடியும் செயல்படுகிறோம். உண்மையில் அங்கே அணிச்சையாக நம் உடல் மட்டுமே வேலை செய்கிறது. நாம் நம்மோடு இல்லை சிதறிக் கிடக்கிறோம். 

நாம் முழுமையாக இல்லை. நாம் நமக்குள்ளேயே தனித்தனி கூறுகளாக பிரித்து கிடக்கிறோம். நம் கண்கள் ஒன்றைப் பார்த்துக் கொண்டு உள்ளது ஆனால் நம் கால்கள் வேறு எங்கோ நடந்து செல்கிறது. நம் எண்ணங்களே நொடிக்கு ஒரு இடம் பயணம் செய்துகொண்டு உள்ளது. நாம் முழுமையாக அங்கே இல்லை. 

அந்த கணத்தில் நாம் முழுமையாக இல்லை. அந்த இடத்தில் நாம் முழுமையாக இல்லை. நாம் அங்கே தான் இருக்கிறோம் என்கிற உணர்வு கூட நம்மிடம் இல்லை. நாம் நமக்கே தெரியாத ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் ஆனால் அங்கேயும் முழுமையாக இல்லை. நம் உடல் நமது பழக்கங்களின் விளைவாக இங்கே ஒரு அணிச்சை செயலாக செயல்பட்டு வருகிறது. ஆனால் நமது மனமோ வேறு எங்கெங்கோ பயணம் செய்துகொண்டு உள்ளது.

நமது கற்பனை உலகத்தில் இருந்து நமது மனம் அவ்வப்போது நம் உடலோடு வந்து போகும்‌ அந்த கணத்தில் தான் நாம் சுய நினைவிற்கு வருவோம்‌. அந்த சில நிமிடங்களில் தான் நாம் நாமாக இருப்போம் கொஞ்சம் முழுமையாக இருப்போம் அந்த கணத்தில் தான் நாம் மறந்ததாக நினைவு வருகிறது. உண்மையில் நாம் அதை மறந்துவிடவில்லை மாறாக நாம் சிதறிக் கிடப்பதால் ஏற்படும் விளைவுகள் தான் என்பதை நாம் உணர வேண்டும். 

நமது மனம் கற்பனை உலகத்திற்குள் சுற்றிக்கொண்டு இருந்ததால் இங்கே நடந்த எதுவும் அறியாத நிலை தான் ஏற்படுகிறது அதைத் தான் நாம் ஞாபக மறதி நோய் என்று தவறாக புரிந்துகொண்டு பயப்படுகிறோம் அந்த பயத்தினால் அதற்கு வைத்தியம் தேடுகிறோம். மாத்திரைகள், மருந்துகள் என பல வழிகளில் அதற்கான தீர்வைத் தேடுகிறோம். அவை யாவும் தீர்வு கொடுக்காததால் நம் வாழ்க்கை இனி இப்படித்தான் இருக்கும் என்று நொந்து கொள்கிறோம். 

இது நோய் இல்லை. இது உடலுக்கும் மனதுக்கும் இடையிலான பிரிவு. இதற்கான தீர்வு இந்த கணத்தில் நீங்கள் வாழ்வதால் மட்டுமே கிடைக்கும் மாறாக மாத்திரை, மருந்துகளால் அதிகமாக்க மட்டுமே முடியும். ஏனென்றால் இது நோய் இல்லை நாம் நமக்குள் இல்லாமல் சிதறிக் கிடப்பதால் ஏற்படும் விளைவுகள் தான் இது. 

இதற்கான ஒரே தீர்வு #விழிப்புணர்வு மட்டுமே. நீங்கள் இந்த கணத்தில் விழிப்புடன், உணர்வுடன் வாழ்வது மட்டுமே ஒரே தீர்வு. ஏனென்றால் இது நோய் இல்லை. உங்கள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே தான் இருக்கும் அதுதான் அதனுடைய இயல்பு ஆனால் அதன் பின்னால் நீங்களும் ஓடிக்கொண்டே இருந்தால் அது தான் இந்த நோய் காரணம். 

* உங்கள் எண்ண ஓட்டங்களை முதலில் வேடிக்கை மட்டும் பாருங்கள். ஒரு பார்வையாளராக, மூன்றாவது நபராக வேடிக்கை மட்டும் பாருங்கள். 

* உங்கள் செயல்கள் ஒவ்வொன்றையும் கவனியுங்கள். கவனுத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள். 

* உங்கள் செயல்களில் உங்கள் உடலுடன் உங்கள் எண்ணங்களும் சேர்த்து தான் செயல்படுகிறதா? என்பதை கவனித்துப் பாருங்கள். 

* இந்த கணம் தான் உண்மை. இந்த கணத்தில் நீங்கள் நீங்களாக, உங்களுக்குள் முழுமையாக இருந்தாலே போதும் அதுதான் விழிப்புணர்வு, அதுதான் விழிப்பு நிலை.

* அந்த நிலையில் நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு ஞாபக மறதி என்பதே நம் கற்பனை தான் என்பதை உணர்வீர்கள்.

வாழ்க வளமுடன்...💐💐💐

பேரன்புடன்...❤️❤️❤️

த.கார்த்திக் தமிழ்
BRAIN VS MIND...

No comments:

Post a Comment