Wednesday 13 April 2022

கடக ரேகை மற்றும் மகர ரேகை பற்றி பார்ப்போம்

கடக ரேகை மற்றும் மகர ரேகை பற்றி விரிவாக காண்பதற்கு முன்பு, அட்ச ரேகைகள் மற்றும் தீர்க்க ரேகைகள் பற்றி முதலில் காண்போம்.


கணிதத்தில், ஒரு வரைபடத்தில் (2D Graph) ஒரு புள்ளியின் இடத்தைக் குறிப்பிட்டு காட்டுவதற்கு அந்த புள்ளி X அச்சில் இருந்து இவ்வளவு தூரம், Y அச்சில் இருந்து இவ்வளவு தூரம் எனக் கூறுவோம். அதை (X, Y) எனக் குறிப்பிடுவோம்.
அதைப்போல, நமது புவியில் உள்ள ஒரு ஊரின் அல்லது ஒரு பகுதியின் சரியான இடத்தைக் குறிப்பிட அட்ச ரேகைகளையும் தீர்க்க ரேகைகளையும் பயன்படுத்துகின்றோம். இவை புவியின் மீது கற்பனையாக வரையப்பட்ட கோடுகள் ஆகும்.
புவிக்கோளத்தில் மேலிருந்து கீழாக அல்லது வடக்கில் இருந்து தெற்காக கற்பனையாக வரையப்பட்டுள்ள கோடுகள் தீர்க்க ரேகைகள் (Longitude) எனவும், இடமிருந்து வலமாக அல்லது கிழக்கில் இருந்து மேற்காக கற்பனையாக வரையப்பட்டுள்ள கோடுகள் அட்ச ரேகைகள் (Latitude) எனவும் அழைக்கப்படுகிறது

படம்: தீர்க்க (Longitude) ரேகைகள் மற்றும் அட்ச (Latitude) ரேகைகள்
புவி ஒரே சமதளமாக இல்லாமல், கோள வடிவத்தை பெற்றிருப்பதால், வரைபடத்தில் (2D Graph) முழு எண்களுக்கு பதிலாக பாகைகளும் (Degree), அவற்றின் +, - களுக்கு பதிலாக 0 பாகை கோட்டில் இருந்து அவற்றின் திசையும் பயன்படுத்தப்படுகிறது.
0 பாகை தீர்க்க ரேகை (Prime Meridian) புவியை கிழக்கு அரைக்கோளம், மேற்கு அரைக்கோளம் என இரண்டாக பிரிக்கிறது. அவை ஒவ்வொன்றும் 180 பாகைகள் என மொத்தம் 360 பாகைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 0 பாகை அட்ச ரேகை புவியை வடக்கு அரைக்கோளம், தெற்கு அரைக்கோளம் என இரண்டாக பிரிக்கிறது. அவை ஒவ்வொன்றும் 90 பாகைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
ஒரு இடத்தின் தீர்க்க, அட்ச ரேகைகளின் பாகை மதிப்பு மற்றும் திசையை வைத்து, புவிக்கோளத்தில் அதன் சரியான இருப்பிடத்தை கணிக்கலாம்.
எடுத்துக்காட்டாக, சென்னை நகரம் 13.09 பாகை வடக்கு அட்ச ரேகையும் 80.27 பாகை கிழக்கு தீர்க்க ரேகையும் இணையும் இடத்தில் உள்ளது.
அடுத்ததாக, முக்கியமான அட்ச ரேகைகள் பற்றி பார்ப்போம்.

90 பாகை வடக்கு அட்ச ரேகை வட துருவம் எனவும், 90 பாகை தெற்கு அட்ச ரேகை தென் துருவம் எனவும் அழைக்கப்படுகிறது. இவற்றை தவிர மற்ற அனைத்து அட்ச ரேகைகளும் வட்ட வடிவம் கொண்டவை.
0 பாகை அட்ச ரேகை நிலநடுக்கோடு (Equator) என அழைக்கப்படுகிறது.
66.5 பாகை வடக்கு அட்ச ரேகை ஆர்க்டிக் வட்டம் எனவும், 66.5 பாகை தெற்கு அட்ச ரேகை அண்டார்க்டிக் வட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இவை முறையே வட மற்றும் தென் துருவத்தில் இருந்து 23.5 பாகை தொலைவில் உள்ளன.
23.5 பாகை வடக்கு அட்ச ரேகை கடக ரேகை (Tropic of Cancer) எனவும், 23.5 பாகை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை (Tropic of Capricorn) எனவும் அழைக்கப்படுகிறது.
நமது புவி 23.5 பாகை சாய்ந்தவாறே தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்பது நாம் அறிந்ததே.
ஒருவேளை புவிக்கோளம் 23.5 பாகை சாயாமல் சரியாக சுற்றிவந்துக்கொண்டிருந்தால் புவியின் மேற்பரப்பில் நிலநடுக்கோடு கடந்து செல்லும் பகுதியில் மட்டுமே வருடம் முழுவதும் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக (Perpendicular) விழுந்திருக்கும்.


நிலநடுக்கோடு பகுதியில் இருந்து வடக்கு அல்லது தெற்கு திசை நோக்கி செல்லச் செல்ல மேற்பரப்புக்கும் சூரிய கதிர்களுக்கும் இடையேயான சாய்வுக்கோணம் குறைந்து கொண்டே செல்லும். புவியில் பருவகால (Season) மாற்றங்களும் நிகழ்ந்திருக்காது.
நிலநடுக்கோட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதிகள் வருடம் முழுவதும் கோடை காலத்தையும், மற்ற பகுதிகள் வருடம் முழுவதும் குளிர் காலத்தையும் பெற்றிருக்கும்.
இவ்வாறு இல்லாமல் புவி 23.5 பாகை சாய்ந்தவாறே சூரியனை சுற்றி வருவதால் புவியின் மேற்பரப்பில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக (Perpendicular) விழும் இடம் வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சீராக மாறிக்கொண்டே இருக்கிறது.
புவியின் சுற்றுப்பாதையின் தொடக்கத்தில், பொதுவாக மார்ச் 21 இல், சூரியக் கதிர்கள் நிலநடுக்கோடு கடந்து செல்லும் பகுதியில் செங்குத்தாக விழும். பின்னர் புவியின் சுழற்ச்சியினால் (Revolution) தினமும் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடம் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்கு திசை நோக்கி நகர்கிறது. மூன்று மாதங்களுக்கு பின்னர், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பின் மீன்டும் தெற்கு திசை நோக்கி திரும்புகிறது. இவ்வாறு சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடம் நகர்ந்துகொண்டிருக்கும் திசை மாறுவதை கதிர்திருப்பம் (Solstice) என்கிறோம். புவிக்கோளத்தில் இந்த கதிர்திருப்பம் நடைபெறும் இடத்தைத்தான் கடக ரேகை (Tropic of Cancer) என்கிறோம்.

பொதுவாக, ஜூன் 21 ஆம் தேதி இந்த கதிர்திருப்பம் நடைபெறும். இதனை கோடைகாலக் கதிர்திருப்பம் (Summer Solstice) என அழைக்கின்றோம். அன்று பகல் பொழுதில், புவியில் கடக ரேகை கடந்து செல்லும் பகுதிகளில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும். அந்த நாளில், வட அரைக்கோளம் நீண்ட பகல்பொழுதையும், தென் அரைக்கோளம் நீண்ட இரவுபொழுதையும் கொண்டிருக்கும்.


படம்: கோடைகாலக் கதிர்திருப்பம் (ஜூன் 21)
கோடைகால கதிர்திருப்பம் நடந்தபின் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடம் தெற்கு நோக்கி நகர்கிறது. மூன்று மாதத்திற்கு பின்னர், பொதுவாக செப்டம்பர் 23 இல், மீன்டும் சூரியக்கதிர்கள் நிலநடுக்கோடு கடந்து செல்லும் பகுதியில் செங்குத்தாக விழும்.
பின்னர் மீன்டும் தெற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு அரைக்கோளத்திருக்குள் நுழையும். மூன்று மாதங்களுக்கு பின்னர், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்றபின்னர் மீன்டும் வடக்கு திசை நோக்கி திரும்பும். இவ்வாறு கதிர்திருப்பம் நடைபெறும் இடத்தைத்தான் மகர ரேகை (Tropic of Capricorn) என்கிறோம்.
இந்த கதிர் திருப்பத்தை குளிர்காலக் கதிர்திருப்பம் (Winter Solstice) என அழைக்கின்றோம். பொதுவாக, டிசம்பர் 22 ஆம் தேதி இந்த கதிர்திருப்பம் நடைபெறும். அன்று மகர ரேகை கடந்து செல்லும் பகுதிகளில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும். இச்சமயத்தில் தென் அரைக்கோளம் நீண்ட பகல்பொழுதையும், வட அரைக்கோளம் நீண்ட இரவுபொழுதையும் கொண்டிருக்கும்.

படம்: குளிர்காலக் கதிர்திருப்பம் (டிசம்பர் 22)
குளிர்கால கதிர் திருப்பத்திற்கு பின் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடம் வடக்கு நோக்கி நகர்ந்து, மூன்று மாததிற்கு பின்னர் திரும்பவும் மார்ச் 21 இல், மீன்டும் நிலநடுக்கோடு பகுதிக்கு செல்லும். இந்த சுழற்சி ஒவ்வொரு வருடமும் மீன்டும் மீன்டும் நடைபெறும்.


படம்: புவியின் சுற்றுப் பாதை
ஒவ்வொரு வருடமும், பொதுவாக மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 இல் சூரியக் கதிர்கள் நிலநடுக்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழுவதால், அந்த நாட்களில் புவியின் அனைத்து பகுதிகளிலும் பகல் மற்றும் இரவு பொழுதுகள் சமமாக இருக்கும். இந்த நாட்கள், சமப் பகலிரவு நாட்கள் (Equinox) என அழைக்கப்படுகின்றன.

படம்: சமப் பகலிரவு நாட்கள் (மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23)
புவிக்கோளத்தில் கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகள் மட்டுமே சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் வாய்ப்பை பெற்றிருக்கின்றது. அந்த இடங்களில் வருடத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும். இப்பகுதி சூரியனிடமிருந்து அதிக வெப்பத்தை பெறுவதால், வெப்பமண்டலப் பகுதி (Torrid zone) என அழைக்கப்படுகிறது.

படம்: வெப்பமண்டலப் பகுதி
அடுத்ததாக, புவியில் நாம் தற்போது வசிக்கும் பகுதியில் ஏதாவது ஒரு நாளில், சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.


படம்: சூரியனின் செங்குத்தான மற்றும் சாய்வான கதிர்கள்
தினமும் காலை சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று கூறினாலும் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் மிகச்சரியாக கிழக்கு திசையில் உதிக்காது. சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடத்தில், அந்த நாளின் காலையில் சூரியன் மிகச்சரியாக கிழக்கு திசையில் உதிக்கும். அன்று நன்பகல் சூரியன் நமக்கு துல்லியமாக செங்குத்துத்தாக கடந்து செல்லும். இந்த நாளைத்தான் நிழலில்லா நாள் (Zero Shadow Day) என்கிறோம்.
மகர ரேகைக்கும் கடக ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் மட்டுமே நிழலில்லா நாளை காணமுடியும். நமது சென்னையில் ஒவ்வொரு வருடமும் பொதுவாக ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட் 18 இல் சூரியக் கதிர்கள் செங்குத்தாக கடந்து செல்வதால் நிழலில்லா நாளைக் காண முடியும். மேலும், நமது புதுடெல்லி நகரம் கடக ரேகைக்கு வடக்கே உள்ளதால் அங்கு சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழ வாய்ப்பே இல்லை. மேலும் அங்கு நிழலில்லா நாளை காண வாய்ப்பே இல்லை.
இப்பொழுது, 22.5 பாகை வடக்கு அட்ச ரேகை, கடக ரேகை எனவும் 22.5 பாகை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை எனவும் ஏன் அழைக்கப்படுகிறது எனப் பார்ப்போம்.


வானியலாளர்கள் புவியின் இரவுவானில் தோன்றும் விண்மீன்களை பல தொகுதிகளாக பிரித்து அவற்றின் உருவத்திற்கு ஏற்ற பெயர்களை சூட்டியுள்ளனர்.
கடக விண்மீன் தொகுதி, மகர விண்மீன் தொகுதி, தனுசு விண்மீன் தொகுதி என, இதுவரை மொத்தம் 88 விண்மீன் தொகுதிகள் (Constellation) பெயரிடப்பட்டுள்ளன.
நம் புவியில் இருந்து பார்க்கையில் நமது சூரியனும் ஒரு விண்மீன் தொகுதியில் ஒரு அங்கமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும். பூமியின் சுழ்ற்ச்சியினால் சூரியன் வருடம் முழுவதும் வேறு வேறு விண்மீன்கள் தொகுதிக்கு மாறிக்கொண்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். இவ்வாறு சூரியன் ஒவ்வொரு வருடமும் 13 விண்மீன் தொகுதிகளை கடந்து செல்வது போல தோன்றும்.

படம்: சூரியன் கடந்து செல்லும் விண்மீன் தொகுதிகள்
2000 ஆண்டுகளுக்கு முன்பே, அப்போதிருந்த வானியலாளர்கள், சூரியக் கதிர்களின் திசைகளையும், விண்மீன் தொகுதிகளில் சூரியனின் இருப்பிடத்தையும் கணித்து, 22.5 பாகை வடக்கு அட்ச ரேகை மற்றும் 22.5 பாகை தெற்கு அட்ச ரேகை ஆகியவற்றிற்கு முறையே கடக ரேகை மற்றும் மகர ரேகை என பெயரிட்டனர்.
கோடைகாலக் கதிர்திருப்பம் நடைபெறும்போது, சூரியன் கடக (Cancer) விண்மீன் கூட்டத்தின் அருகில் இருப்பதுபோல் தோன்றியதால், அந்த சமயத்தில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுந்த பகுதியை, கடக ரேகை எனப் பெயரிட்டனர்.
அதைப்போல குளிர்கால கதிர்திருப்பம் நடைபெறும்போது, சூரியன் மகர (Capricorn) விண்மீன் கூட்டத்தின் அருகில் இருப்பதுபோல் தோன்றியதால், அந்த சமயத்தில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுந்த பகுதியை, மகர ரேகை எனப் பெயரிட்டனர்.
ஆனால், தற்போது கோடைகாலக் கதிர் திருப்பம் மற்றும் குளிர்காலக் கதிர் திருப்பம் நடைபெறும்போது சூரியன் முறையே கடக விண்மீன் கூட்டம் மற்றும் மகர விண்மீன் கூட்டத்தில் இருப்பதுபோல் தோன்றுவதில்லை

கடந்த 2000 ஆண்டுகளாக புவியின் சுற்றுவட்ட பாதையில் ஏற்பட்ட சிறு மாற்றங்கள் காரணமாக, தற்போது கோடைகாலக் கதிர்திருப்பம் நடைபெறும்போது சூரியன் இடபம் அல்லது ரிஷப (Taurus) விண்மீன் கூட்டத்திலும், குளிர்காலக் கதிர்திருப்பம் நடைபெறும்போது சூரியன் தனுசு (Sagittarius) விண்மீன் கூட்டத்திலும் இருப்பதுபோல் தோன்றும். ஆனாலும், கடக மற்றும் மகர ரேகைகளின் பெயர்கள் மாற்றப்படவில்லை.
அடுத்து, கடக மற்றும் மகர ரேகைகள் கடந்து செல்லும் பகுதிகள் பற்றிப் பார்ப்போம்.
கடக ரேகை இந்தியா, அல்சீரியா, நைகர், லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், வங்காள தேசம், மியான்மர், சீனா, தைவான், மெக்சிகோ, பகாமாசு என பல நாடுகளை கடந்து செல்கிறது.
குறிப்பாக, இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்து செல்கிறது.


படம்: இந்தியாவில் ஒரு சாலைக்கு குறுக்காக கடந்து செல்லும் கடக ரேகையை குறிப்பிடும் வழிகாட்டி பலகை.
மகர ரேகை நமீபியா, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜெண்டினா, பராகுவே, பிரேசில் ஆகிய நாடுகள் வழியாக கடந்து செல்கிறது.
படம் உதவி: விக்கிபீடியா மற்றும் கூகிள் படங்கள்
நன்றி!

No comments:

Post a Comment