Tuesday, 22 May 2018

27 யோகங்களின் பொதுவான பலன்

வானமண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:
1. விஷ்கம்பம் (விஷ்):-
இது அசுப யோகமாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றி கொள்வார்கள். உடல் உறவு சுகத்தில் அதிகமான விருப்பம் உடையவர்களாகவும், எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ள துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே உணரும் தீர்க்க தரிசனம் இருக்கும். மாந்திரீக விஷயங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப் பிரியர்கள், சுற்றங்களை மதிப்பார்கள். எவரிடமும் ஏமாறாதவராக இருப்பார்.
2. ப்ரீதி (ப்ரீ):-
இது சுபமான யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல செயல்களையும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோர்கள், ஞானிகள், மகான்கள், குரு ஆகியோர்களை மதிப்பவராகவும் அவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல்பாட்டுத் திறமையும் இருக்கும். கடவுள் பக்தி அதிகமுள்ளவர். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் தான். காம இச்சை சற்று அதிகம் இருக்கும் நற்குணமுடைய இவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.
3. ஆயுஷ்மான் (ஆயு):-
இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி - யோகிகள் "ஆயுஷ்மான் பவ" என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. "ஆயுஷ்மான் பவ" என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று பொருளாகும். அதற்கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதியாக வாழ்வார்கள். அனைவரையும் மதிப்பவர்கள், பக்திமான்களாக தெய்வ காரியங்கள் செய்வார்கள். கால்நடைச் செல்வங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.
4. செளபாக்யம் (செள):-
பெயரே செளபாக்யம் எனும் போது இவர்களின் சுக செளக்யம் நன்றாகவே இருக்கும். இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடையவர்களாகவும், உறுதியான மனம் உடைய செயல்திறன் மிக்கவர்களாகவும், நல்ல பக்திமான்களாகவும், ஈவு இரக்கம் உடைய தர்மவான்களாக இருப்பார்கள். பெரியோர்களை மதிப்பவர்கள் என்பதுடன், சேவை செய்யும் மனப்பான்மையும் இருக்கும். உடல் உறவு சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். அழகை ரசிப்பவர்கள்.
5. சோபனம் (சோ):-
சுப யோகமான இதன் பொருள் இனிமையான சுகம் என்பதாகும். திருமணமாகி முதல் இரவுக்கு "சோபனம்" என்று குறிப்பிடுவதுண்டு இதில் பிறந்தவர்கள் சுகமான இனிமையான வாழ்க்கையை விரும்புவதுடன் "சோபனம்" எனும் உடல் உறவுக் கல்வியில் தனியாத விருப்பத்துடன், நிபுணர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் குறிக்கோளே மகிழ்ச்சியான வாழ்க்கை தான். கஷ்டத்தை வெறுப்பவர்கள். சுற்றம் நட்பை அதிகம் விரும்புவார்கள். செல்வாக்குடையவர்கள் எனலாம்.
6. அதிகண்டம் (அதி):-
பெயரே கண்டம் என்று பயமுறுத்துகின்றது. அதிலும் அதி கண்டம். எனவே அடிக்கடி விபத்து கண்டங்கள் ஏற்படும். துன்பம் தொல்லை கஷ்டம் தாக்கும். மற்றவர்களுக்கு தொல்லைகளையும், பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள். யான் பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மையுடையவர்களாக இருப்பதுண்டு. பேராசையும், முன்கோபமும், முரட்டுத் தனமும், அலட்சியமும், சோம்பலும் இருக்கும். எதிலும் அழுத்தமான நம்பிக்கை இல்லாத மேம்போக்கானவர்களாக இருப்பார்கள்.
7. சுகர்மம் (சுக):-
இது நல்லயோகம். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக் கூடியவர்கள். பற்று, பாசம், ஈகை உடையவர்கள். நல்ல பக்திமான்களாகவும், தெய்வகாரியங்கள் செய்வதில், தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் விருப்பம் இருக்கும். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார்கள்.
8. திருதி (திரு):-
இது அசுப யோகம் தான் என்றாலும் சிலர் சுபயோகம் என்று கூறுகின்றார்கள். இதில் பிறந்தவர்கள் வைராக்யமும், தன்னம்பிக்கை உடையவர்கள். எடுத்த காரியத்தை விடாப்பிடியாக முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். கொடுத்தவாக்கை காப்பாற்றக் கூடியவர்கள். நல்ல தைரியமும் உடையவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடு இருப்பதுண்டு.
9. சூலம் (சூல):-
இது அசுபமான யோகம். முன்கோபம், முரட்டுத்தனம், அலட்சியம், சோம்பல், எடுத்தெரிந்து பேசும் குணம் இருக்கும். எவரையும் மதிக்க மாட்டார்கள். எவருடனும் ஒத்து போகாமல் முரண்டு பிடிப்பவர்கள். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதுடன் வீண் வம்பு, சண்டை பிடிக்கவும் செய்வதுண்டு. உடல் உறவு சுகத்தில் மிக அதிகமான ஆசை இருக்கும். கண்டபடி அளவற்ற காம சுகம் அனுபவித்து அதனால் அவஸ்தைப் படுவதுண்டு.
10. கண்டம் (கண்):-
இதுவும் அசுபமான யோகம் தான். கண்டம் என்ற பெயரைப் போல இதில் பிறந்தவர்கள் அடிக்கடி கண்டங்களையும், துன்பங்களையும், உடல் நோய்த் துன்பங்களையும் சந்திக்க வேண்டி வரும். நல்ல எண்ணங்களும் இருக்காது. செயல்பாடுகளும் சிறப்பாக இருக்காது. மற்றவர்களுக்கு தீமைகள் செய்வார்கள். வஞ்சக எண்ணம் இருக்கும். எவரையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவார்கள். கர்வம் அலட்சியம் இருக்கும்.
11. விருத்தி (விரு):-
செல்வாக்குடையவர்கள். நல்ல அளவில் வசதியான வாழ்க்கை அமைப்பவர்கள். சாஸ்திர நாட்டமும், புலமையும் உடையவர்களாக இருப்பதுடன், தெய்வ பக்தியும், நற்பண்புகளும் உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடையவர்களாகவும், தெய்வ காரியங்கள் திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள். நல்ல எண்ணம் செயல்பாடுடையவர்கள் எனலாம். இது சுபமான யோகமாகும்.
12. துருவம் (துரு):-
இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பதுடன் எதிலும் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர் போல பட்டும், படாமலும் இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். சமயம் கிடைக்கும் போது பழிதீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல எண்ணம் இருக்காது. இது அசுபமான யோகமாகும். சிலர் இதையும் சுபயோகம் கூறுவதுண்டு. எனினும் சுபகாரியங்களுக்கு விலக்களிக்க வேண்டிய யோகம் தான்.
13. வ்யாகதம் (வ்யா):-
இதுவும் அசுபமான யோகம் தான். முன்கோபமும், முரட்டுத் தனமும் உடைய இவர்கள் சமுகத்தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாக செயல்படக் கூடியவர்கள். நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூதுவாது, கபடம் உள்ளவர்களே எனலாம். மனஉறுதி இல்லாத இவர்கள் எண்ணங்களையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள் கெடுதல் செய்வார்கள்.
14. ஹர்ஷணம் (ஹர்):-
இது சுபமான யோகமாகும். செல்வாக்கும் - சொல்வாக்கும் உடையவர்கள். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். பின்னால் வருவதை முன்கூட்டியே யூகிக்கும் தீர்க்கத் தரிசிகளாக இருப்பதுண்டு. சுகமான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். உடல் உறவு சுகத்தில் சற்று கூடுதலான அதிகமான ஈடுபாடுடையவர்கள். தெய்வ பக்தியும், உதவும் மனப்பான்மையும் உள்ளவர்களே எனலாம்.
15. வஜ்ரம் (வஜ்):-
இது சுபமான யோகமாகும். இதை சிலர் அசுபமான யோகம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்களுக்கு அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனிவும் இருக்கும். உதவும் மனப்பான்மையும் உண்டு. நல்ல தெய்வபக்தியும், பிறர் மேல் மதிப்பு மரியாதையும் உள்ளவர்கள் தான் என்றாலும் தனக்கு தீங்கு செய்தவர்களை மறக்காமல் பழி தீர்த்து கொள்வார்கள்.
16. சித்தி (சித்):-
சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாசனா சக்தியுடையவர்கள். தியானம் - யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள். தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதில் விருப்பம் அதிகம். இமாலய யாத்திரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற்கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும் மனப்பான்மையுடையவர்கள் எனலாம்.
17. வியதீபாதம் (விய):-
இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும், கஷ்டங்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன்யோசனையுடன் செயல்படாமல் அவசர முடிவால் பிரச்சினைகள் சந்திப்பார்கள். பிடிவாத குணம் உடையவர்கள் என்பதால் பல நல்ல வாய்ப்புகளை இழந்துவிடுவார்கள். செயல்பாட்டு உறுதியும், திறனும் இருப்பதில்லை.
18. வரீயான் (வரீ):-
இது சுபயோகமாகும். இதில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். நல்ல தைரியமும் காரிய வெற்றியும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையுடையவர். தரும காரியங்கள் திருப்பணிகள் செய்வதில் நாட்டமிருக்கும் புகழ் பெறக்கூடிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். நல்லெண்ணம் நல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள.
19. பரிகம் (பரி):-
இது சுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் தனக்கென தனியான கொள்கையும், குறிக்கோளும் உடையவர்கள். அநேகமாக அதிலிருந்து மாற மாட்டார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். பிறர் வாக்கு தவறினால் கோபம் கொண்டு அவர்களின் தொடர்பை வெட்டிக் கொள்வார்கள். கடும் முயற்சியுடையவர்கள். வெற்றி காணும் வரை ஓயமாட்டார்கள். விளையாட்டுகளில், பொழுதுபோக்குகளில் ஆர்வமுள்ளவர்கள். சுற்றுப் பயணத்தை விரும்புவார்கள்.
20. சிவம் (சிவ):-
இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் சிவனை வழிபடுபவர்களாகவும், தியானம், யோகம், பக்தி, ஞான மார்க்கத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். ஞானிகள், மகான்கள், யோகிகள், பெரியோர்களை சந்திப்பதில் அதிக ஆர்வமுடையவர்கள். அவர்களின் ஆசியும் வழிகாட்டுதலும் இவர்களுக்கு கிடைக்கும் தெய்வ காரியங்கள், திருப்பணிகள், தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றில் அதிக நாட்டமிருக்கும் நல்ல எண்ணமும், நல்ல செயல்பாடும் உடையவர்கள் எனலாம்.
21. சித்தம் (சித்):-
இது சுபமானயோகமாகும். இதில் பிறந்தவர்கள். அசாத்தியமான மன உறுதியுடையவர்கள். எதற்குமே அஞ்சமாட்டார்கள். உறுதியான சித்தமுடையவர்கள். எடுக்கும் முடிவுகளை சட்டென்று மாற்றிக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திர புலமை, பரிச்சியமுடையவர்கள். நல்ல பக்தியும் இருக்கும். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். பிறருக்குத் தகுந்த ஆலோசனைகளைச் சொல்ல கூடியவர்களாக இருப்பார்கள்.
22. சாத்தியம் (சாத்):-
இது சுபமான யோகமாகும். பெயரே சாத்தியம் என்று உள்ளதால், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையுமே சாத்தியமாக்கி விடுவார்கள். பிற பெண்களை வசியம் செய்து கொள்ளும் சாத்தியம் கூட இவர்களுக்கு உண்டு. சற்று கூடுதலான காம இச்சை உடையவர்கள் என்பதில் காமக்கலையில் வல்லவராகவும் கூட இருப்பதுண்டு. வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் பேசுவதில் கெட்டிகாரர்கள். இந்த பேச்சினாலேயே மற்றவர்களைக் கவர்ந்துவிடுவார்கள். சங்கீத ஞானமு இருப்பதுண்டு.
23. சுபம் (சுப):-
பெயரே சுபம் என்பதால் சுபமான யோகம் தான். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். மகான்கள், யோகிகள், ஞானிகள், பெரியோர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். தெய்வ காரியங்கள், திருப்பணிகள், பொது சேவையிலும் நல்ல நாட்டமிருக்கும். அனைத்து தரப்பினரிடமும், சுமுகமான உறவு வைத்துக் கொள்பவர்கள். அமைதியை நாடும் சாத்வீகமானவர்கள் எனலாம்.
24. சுப்பிரம் (சுப்):-
இது சுபமான யோகமாகும். நல்ல தெய்வபக்தியும், தெய்வ நம்பிக்கையும் உடையவர்கள். எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கூறுவார்கள். அனைத்துக்குமே இவர்களுக்கு கடவுள் தான். தான் எந்த சாதனை செய்தாலும் தன்னைப் பற்றி பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். அதையும் கடவுளுக்கே சமர்ப்பணம் செய்வார்கள். மன உறுதியும், வைராக்கியமும் உடைய சாதனையாளர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். நல்ல தோற்றம். இனிமையான சுபாவம் உள்ளவர்கள்.
25. பிராம்மியம் (பிரா):-
இதுவும் சுபமான யோகம் தான். தியானம், யோகம் ஆகியவற்றில் நல்ல அளவில் ஈடுபாடுடையவர்கள். பிரம்ம ஞானம் அறியும் முயற்சியுடையவர்கள். ஞானிகள், யோகிகள், மகான்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் நல்ல அளவில் பயன் பெறுவார்கள். விவேகத்துடன் செயல்படுவதுடன் தியாக உணர்வும், தரும சிந்தனையும் இருக்கும். சிலர் உபாசனை மேற்கொள்வதுமுண்டு. உடல் ஷேமத்தை விரும்புபவர்களாக இருப்பதால் ஹோமம், யாகம், சமாராதனை, அன்னதானம் போன்றவைகளை செய்யக் கூடியவர்கள் எனலாம்.
26. ஐந்திரம் (ஐந்):-
இதுவும் சுபமான யோகம் தான். இதை சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றியுடையவர்கள். தீர்க்கதரிசிகள் எனலாம். ஆழ்ந்து சிந்தனை செய்பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர் அருள்வாக்கு, ஜோதிடம் போன்றவையும் கூட இவர்களுக்கு வருவதுண்டு. நல்ல நுணுக்கமான அறிவுள்ளவர்கள். புகழ்ச்சியை விரும்புவார்கள். முன் கோபம் இருக்கும். கற்றறிந்த பண்டிதர்களையும், வேத ஞானிகளையும் மதிப்பவர்கள். நல்ல தெய்வபக்தியுடையவர்கள். தெய்வ காரியங்களை செய்வார்கள்.
27. வைதிருதி (வை):-
இது அசுபமான யோகமாகும்.இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். தற்பெருமையும் உடையவர்கள். கலகப் பிரியர்கள். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கொடுப்பவர்கள். நல்லவர்கள் போல் நடித்து ஆதாயம் பெறுவார்கள். கபடம் உள்ளதுடன், கெடுக்கும் புத்தி இருக்கும். மன உறுதி இல்லாதவர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார்கள். நேர்மை இருக்காது. கடவுள் பக்தியைக் கூட வியாபாரமாக்கி காசு பண்ணிவிடுவார்கள். ஆதாயம் இல்லாமல் எதையுமே செய்யமாட்டார்கள்.கஞ்சத்தனமும் இருக்கும். காம உணர்வு அதிகமுடையவர்கள், தீய பழக்கங்கள் இருக்கும்.
குறிப்பு: 27 யோகங்களின் பொதுவான பலன் தான் ஜாதக அமைப்புப்படி கிரகங்களின் நிலைகளின்படி குணாதிசியங்கள் மாறக்கூடும் என்ற போதிலும் இதில் உள்ள அடிப்படை ஒன்றிரண்டு அவர்களிடம் இருக்கவே செய்யும். நட்சத்திரங்களின், திதிகளின், குணாதிசயங்களோடு, யோகங்களில் பிறந்த பலனும் இணைந்து காணக்கூடும்.
Image may contain: one or more people, people standing and outdoor

No comments:

Post a Comment