Tuesday, 8 January 2019

சிவாச்சாரியாருக்கான ஆகம விதிகள் மற்றும் முத்திரைகளின் விளக்கம்

சிவாச்சாரியாருக்கான ஆகம விதிகள் 🌲
சிவாலயங்களில் பூஜைகள் செய்யும் போது ஆச்சாரியர்கள் உபயோகிக்கும் முத்திரைகள் பற்றி பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சி............
மந்திரங்கள் உச்சரிப்புக்கு தகுந்த நல்ல செயல்முறைகளுக்குத் தந்த்ரங்கள் என்று பெயர். மந்திரங்களை உபயோகித்து பூஜை செய்யும் விதி முறைகளும் தந்த்ரங்களே. அந்த தந்திரங்கள் எழுதப்பட்டுள்ள நூல்களையும் தந்த்ரங்கள் என்றே அழைப்பர். ஆகமங்கள் அனைத்தும் அத்தகு தந்திர நூல்களே.
🍀மந்திர பிரயோகம் 🍀
வேதங்களில் ஓம் என்ற ப்ரணவமும், ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வெளஷட், வேட், வாத் முதலிய மந்திரங்களும், பூ; புவ; ஸுவ; என்னும் வ்யாஹ்ருதிகளும் முதல் முதலாகக் கூறப்படுகின்றன. பிற்காலத்துத் தந்த்ர சாஸ்திரங்களில் ஹம், ஹாம், ஹும், ஹூம், ஹ்ரீம், ஹ்ராம், ஹ்ரோம், ஸ்ரீம், ஐம், ஏம், க்லீம், பட் முதலிய ஒலிச் சேர்க்கைகள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் மந்திர சக்தி வாயந்தவை. இவற்றை ஆகம நூல்கள் பீஜாக்ஷரங்கள் என்று பெயரிட்டு திருக்கோவில் கிரியைகளுக்குப் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன. பூஜா மந்திரங்களை முறைப்படி குருவிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது, பீஜாக்ஷர மந்திரங்களின் ப்ரயோகமும் கற்றுத் தரப்படும்.
🌺🌸யந்திர உபயோகம் 🌸🌺
யந்த்ரம் என்ற சொல்லுக்கு ஒரு பொருளையோ சக்தியையோ தேக்கி வைத்திருக்கும் கருவி, ஒரு செயல் புரிகையில் அதற்குப் பயன்படுத்தப்படும் கருவி, சாதாரண அறிவுக்கெட்ட சக்தியைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சாதனம் என்றெல்லாம் பொருள் காணப்படுகிறது. எனவே மந்திரங்களின் மூலம் பூஜா விதிகளைக் கூறும் தந்த்ர நூல்கள், யந்த்ரங்களின் விவரங்களையும், அவற்றை உபயோகிக்க வேண்டிய முறைகளையும் கூட வெளியிடுகின்றன.
மந்திரங்களை ப்ரயோகித்துப் பலனடைய உதவும் தந்திரங்களாம் சிவாலயங்களில் ஆச்சாரியர்கள் உபயோகிக்கும் முத்திரைகளைச் சரியாக உபயோகிப்பதால், அம்மந்திரங்களுக்குரிய தெய்வங்கள் மகிழ்கின்றனர் என்பதும், முத்திரைகள் காட்டும்போது அவை யந்த்ரங்களோடு சம்மபந்தப்பட்டிருந்தால், அந்த யந்திரங்கள் தங்கியுள்ள ஆகர்ஷண சக்திகள் தாங்க வேண்டிய, சக்திக்கான தேவதைகளும் திருப்தி அடைவது உறுதி.
முத்திரைகளுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. பெரும்பாலான முத்திரைகள் அப்போது ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் மந்திரச் சொற்களின் பொருளையும், வழிபாட்டு உபாங்கத்தையும் அனுசரித்தே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. சிவாலயங்களில் நடைபெறும் சிவ பூஜா கிரியைகளை, மந்திரங்களின் வாயிலாக அறிய முடியாதவர்களும்கூட, முத்திரைகளைக் கண்ணுற்று, அவற்றை ஊகித்து உணரலாம்.
இனி சிவாலயங்களில் பயன்படுத்தப்பெறும் பல்வகையான முத்திரைகளில் சில, தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. முத்திரைகளின் சித்திரத்தைக் வைத்துக்கொண்டு, அவற்றில் பயிற்சியற்றோர் தேர்ச்சி பெற முடியாது.
முத்திரைகளை பூஜா விதிகளோடு சேர்த்து, குரு மூலமாகத்தான் கற்றறிய வேண்டும்; அச்சிலேறி வருவதைப் பார்த்துக் கற்றுக் கொண்டு முத்திரைகளை ப்ரயோகிக்க இயலாது; ப்ரயோகித்தாலும் அவை பலன் தராது., அவ்வழி பெரும் தவறுங்கூட.
இந்த பதிவில் காணப்படும் முத்திரைகளின் படங்களும் விளக்கமும், ஆலய வழிபாட்டிற்குச் செல்வோர், சிவாச்சாரியார் செய்யும் கிரியைகளின் பொருளை, முக்கியத்துவத்தை, உணர்ந்து கொள்ள உதவுவதற்காகவே அச்சேறி வருகின்றன.
🌺முத்திரைகளின் விளக்கம்🌺
1. குரு வந்தன முத்திரை : ஸுமுகம் : விரித்து, பக்க வாட்டில் சேர்ந்த இரு கைகளையும் உள்ளங்கைகள் நம் முகத்தைப் பார்க்குமாறு உயர்த்திப் பிடித்தல்.
2. குரு வந்தன முத்திரை : ஸுவ்ருத்தம் : ஸுமுக (1) முத்திரையில் விரல்களை மடக்குதல். கட்டைவிரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
3. குரு வந்தன முத்திரை : சதுரச்ரம் : மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் கைகளை விரித்து (இடது கை கீழே) மணிக்கட்டு அருகே சேர்த்தல்.
4. குரு வந்தன முத்திரை : முத்கரம் : கட்டைவிரல்கள் தன்னை நோக்க, இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.
5. குரு வந்தன முத்திரை : யோனி : இரு மோதி விரல்களையும், நடுவிரல்களின் பின்பக்கமாக வளைத்துக் கொண்டுவந்து, ஆட்காட்டி விரல்களால் பிடித்துக் கொள்ளவும்; இடது சுண்டுவிரலை வலது சுண்டுவிரலால் பிடித்துக் கொள்ளவும்; கட்டைவிரல் நுனிகளால் நடுவிரல்களின் நடுப்பகுதியைத் தொடவும்.
6. குரு வந்தன முத்திரை : ம்ருகீ : இரு கைகளின் கட்டை விரல், நடு விரல். மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.
7. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : மத்ஸ்யம் : வலது உள்ளங்கை கீழ் நோக்க, இடது உள்ளங்கை அதனைத் தாங்க, கட்டை விரல்களை மட்டும் மீனின் செதில்களைப் போல் அசைத்துக் காட்டுதல்.
8. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.
9. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அவகுண்டனம் : கைமுட்டிகளைக் கீழே காட்டி, வலது ஆட்காட்டி விரலால் ப்ரதக்ஷிணமாகவும், இடது ஆட்காட்டி விரலால் அப்ரதக்ஷிணமாகவும் இலக்கைச் சுற்றிக் காண்பித்தல்.
10. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : தேனு - அம்ருதீகரணம் : ஒரு கையின் சுட்டு விரல் மற்றதின் மோதிர விரலைத் தொடவும், ஒன்றின் நடுவிரல் மற்றதின் ஆள்காட்டி விரலைத் தொடவும் செய்வது. (பால் இறங்கி நிற்கும் பசுவின்மடி போல் காணப்படும்.)
11. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : காலினீ : இடது கை மேல் நோக்க, வலது கையைக் கவிழ்த்து, விரல்களை வளைத்துப் பிடித்தல். இடது கட்டை விரலும் வலது சுண்டுவிரலும் சேர்ந்து காணும் இடைவெறி மூலம் விசேஷார்க்யத்தப் பார்க்க உதவும் முத்திரை.
12. ஆவாஹனாதி முத்திரை : ஆவாஹனீ : ஸுமுக (1) முத்திரையில் கட்டை விரல்களால் மோதிர விரல்களின் அடிப்பாகத்தை தொட்டு அசைத்தல்.
13. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஸ்தாபனீ (ஸ்தபனீ) : ஆவாஹனீ (12) போலவே கீழ் நோக்கிச் செய்தல்.
14. ஆவாஹனாதி முத்திரை : ஸந்திதாபனீ : கைமுட்டிகளை விரல்களின் நடுப்பகுதியில் சேர்த்து, கட்டை விரல்களை மேல் நோக்கிப் பிடித்தல்.
15. ஆவாஹனாதி முத்திரை : ஸந்நிரோதினீ : கட்டைவிரல்கள் உள்ளே மறைய, மற்ற நான்கு விரல்களின் நகங்கள் ஒன்றுக்கொன்று உரச, முட்டிகளைச் சேர்த்துப் பிடித்தல்.
16. ஆவாஹனாதி முத்திரை : ஸம்முகீகரணீ : விரல்கள் மடங்கிய நிலையில், கைமுட்டிகளை பக்க வாட்டில் சேர்த்து, நிமிர்த்திப் பிடித்தல்.
17. ஆவாஹனாதி முத்திரை : வந்தனீ : கைகூப்பி, விரல்கள் வளையாது, மார்புக்கு நேரே வந்தனம் செய்தல்.
18. ஆவாஹனாதி முத்திரை : தத்வம் : மற்ற விரல்கள் நிமிர்ந்திருக்க, இடது கை மோதிர விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.
19. ஆவாஹனாதி முத்திரை : சின் முத்திரை (அ) ஜ்ஞாந முத்திரை : வலது உள்ளங்கை வெளியே நோக்க, மூன்று விரல்கள் நிமிர்ந்திருக்க, ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.
20. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஹாரம் (நிர்யாணம்) : இடக்கை கீழ் நோக்க, அதன் மேலே வலக்கையினை மேலே நோக்குமாறு வைத்து விரல்களைப் பிடித்துக்கொண்டு அசைத்துக் காட்டுதல்.
21. நியாஸ முத்திரை : முகம் : நான்கு வலக்கை விரல்களால் உதடுகளைத் தொடுதல்.
22. நியாஸ முத்திரை : கரசம்புடம் : ஸம்புடம் போல், கைகளை எதிர்முகமாகக் குவித்துப் பிடித்தல்.
23. நியாஸ முத்திரை : அஞ்ஜலி (நமஸ்காரம்) : இரண்டு கைகளையும் சேர்த்து, விரல்களை இணைத்து, பெருவிரல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னியுற வைப்பது.
24. நியாஸ முத்திரை : ஹ்ருதயம் : வலக்கையில் நடுவிலுள்ள மூன்று விரல்களால் இதயப் பகுதியைத் தொடுதல்.
25. நியாஸ முத்திரை : சிரஸ்: வலக்கையில் நடு மற்றும் மோதிர விரல் நுனிகளால் தலை உச்சியைத் தொடுதல்.
26. நியாஸ முத்திரை : சிகை : வலக்கை கட்டை விரல் நுனியால் சிகை (குடுமி) இருக்க வேண்டிய இடத்தைத் தொடுதல்.
27. நியாஸ முத்திரை : கவசம் : கைகளை மாற்றி, அனைத்து விரல்களாலும் தோள்களைத் தொடுதல்.
28. நியாஸ முத்திரை : நேத்ரம் : வலக்கையின் நடுவிலுள்ள மூன்று விரல்களால், இரு கண்கள், அவற்றின் நடுப்பகுதி ஆகியவற்றைத் தொடுதல்.
29. நியாஸ முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.
30. நியாஸ முத்திரை : ந்யாஸம் : வலது கை கட்டை விரலால் மடங்கிய மூன்று விரல்களைச் சேர்த்தபின், ஆட்காட்டி விரலால் அங்கங்களைத் தொடுவது.
31. நிவேதன முத்திரை : க்ராஸம் : மேல் நோக்கும் இடது கையால், கிண்ணத்தில் அன்னம் இருப்பது போல் பாவனையாகக் காட்டுவது.
32. நிவேதன முத்திரை : ப்ராணன் : வலது கை நடுவிரலையிம் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
33. நிவேதன முத்திரை : அபானன் : வலது கை மோதிர விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதன் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
34. நிவேதன முத்திரை : வ்யானன் : வலது கை சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
35. நிவேதன முத்திரை : உதானன் : வலது கை மோதிர விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
36. நிவேதன முத்திரை : ஸமானன்; வலது கையின் அனைத்து விரல்களையும் சேர்த்துப் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
37. கணேச வந்தன முத்திரை : தந்தம் : வலக்கையின் நடுவிரலை மட்டும் மேலே நீட்டி, மற்றவற்றை மடக்கிப்பிடித்தல்.
38. கணேச வந்தன முத்திரை : பாசம் : இரு கை முட்டிகளையும் ஆள்காட்டி விரல்களின் நுனிகள் தொடுமாறு சேர்த்து, கட்டை விரல் நுனிகளும் அவற்றைச் சந்திக்கச் செய்தல்.
No photo description available.

No comments:

Post a Comment