'கக்கா' வெச்சே புற்றுநோய் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம் தெரியுமா?
யாருக்குமே மலம் குறித்துப் பேச விருப்பம் இருக்காது. ஆனால் ஒருவரது ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ள மலம் உதவி புரியும் என்பது தெரியுமா?
செரிமானத்தின் அத்தியாவசியமான பகுதி தான் குடலியக்கம். பெருங்குடலில் உருவாகும் கழிவுகளானது உடலில் இருந்து இயற்கையாக வெளியேற்றப்படும். ஒருவரது குடலியக்கம் சிறப்பாக இருக்கிறது என்றால், எவ்வித சிரமமும் இல்லாமல், அதே சமயம் அவசரமாக வருவது போன்ற உணர்வு எழாமலும் இருக்கும்.
மிகவும் இறுக்கமான மலம்
நீங்கள் கழிவறையில் நிறைய நேரத்தை செலவழிக்கிறீர்களா? உங்கள் மலம் மிகவும் இறுக்கமாகவும், வெளியே வர முடியாத அளவு கெட்டியாகவும் இருந்தால், உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது அல்லது மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். மலச்சிக்கல் என்பது பல நாட்கள் மலம் கழிக்காமல் இருந்தால் தான் என்பதில்லை. தினமும் மலம் கழித்தும், நீங்கள் வெளியேற்றும் மலம் கடினமாக இருந்தால், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இப்படியே பல நாட்கள் நீங்கள் மலம் கழிக்காமல் இருந்தால், நாளடைவில் மூலம் வந்துவிடும்.
இதிலிருந்து விடுபட நீரை அதிகம் குடியுங்கள் மற்றும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். அதேப் போல் மக்னீசியம் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ளுங்கள்.
கருப்பு நிற மலம்
பிறந்த குழந்தைகள், பிறந்த சில நாட்கள் கருப்பு நிறத்தில் தான் மலம் வெளியேறும். ஆனால் விரைவில் அது சாதாரண நிறத்திற்கு மாறிவிடும். அதுவே பெரியவர்களுக்கு இப்படி கருப்பு நிறத்தில் மலம் வெளியேறினால், அதற்கு நீங்கள் ஏதேனும் அடர் நிற பழங்கள் அல்லது உணவுப் பொருட்கள், இரும்புச்சத்து மருந்து மாத்திரைகளை போன்றவற்றை சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் உங்களுக்கு அடிக்கடி கருப்பு நிறத்தில் மலம் வெளியேறினால், உங்கள் செரிமான மண்டலத்தில் மேல் பாகத்தில் அல்சர், உணவுக்குழாயில் இரத்தக்கசிவுடன் கூடிய புண், கட்டிகள் மற்றும் புற்றுநோய் போன்றவை கூட காரணங்களாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகிடுங்கள்.
சிவப்பு நிற மலம்
கருப்பு நிறத்தைப் போன்றே சிவப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது என்பது சாதாரணம் அல்ல. இப்படி சிவப்பு நிறத்தில் ஒருவருக்கு மலம் வெளியேறுவதற்கு செரிமான பாதையான பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் புற்றுநோய் அல்லாத கட்டிகள், புற்றுநோய், குடல் அழற்சி, மூலம் போன்றவற்றாலும் சிவப்பு நிறத்தில் மலம் வெளியேறலாம்.
இன்னும் சில சதயங்களில் சிவப்பு நிற உணவுகளான பீட்ரூட், கிரான்பெர்ரி, தக்காளி ஜூஸ் அல்லது சூப், சிவப்பு நிற ஜெலாட்டின் போன்றவைகள் கூட காரணமாக இருக்கலாம்.
பச்சை நிற மலம்
பச்சை நிறத்தில் மலம் வெளியேறினால், நீங்கள் கீரைகளை அதிகமாக சாப்பிட்டிருக்கலாம் அல்லது பச்சை நிறம் கலந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டிருக்கலாம். இன்னும் சில சமயங்களில் இரும்புச்சத்து அல்லது இதர சப்ளிமெண்ட்டுகளை எடுத்தது கூட காரணமாக இருக்கலாம். உங்களுக்கு பச்சை நிறத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், நீங்கள் சாப்பிட்ட உணவுகள் மிகவும் வேகமாக குடல் வழியே செல்வது கூட காரணமாக இருக்கலாம்.
இரத்தம் கலந்த மலம்
நீங்கள் கழிக்கும் மலம் அடர் சிவப்பு நிறத்தில், அதாவது இரத்தம் கலந்து வெளிவந்தால், அதை சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் ஒருவரது மலத்தில் இரத்தம் கலந்து வெளிவந்தால், மலக்குடலில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் மலப்புழையில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது மூல நோயால் உண்டான கட்டிகள் உடைந்திருக்கலாம்.
இன்னும் சில நேரங்களில் வயிற்று அல்சர், கோலிடிஸ், அசாதாரண இரத்த நாளங்கள், இரைப்பை சுவற்றில் உள்ள அழற்சி, புற்றுநோய், அழற்சியுள்ள குடல் நோய் அல்லது குடல் தொற்றுக்களாலும் கழிக்கும் மலத்தில் இரத்தம் கலந்து வெளிவரும்.
மிதக்கும் மலம்
உங்கள் மலம் நீரில் மூழ்காமல் மிதந்தவாறு இருந்தால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும், மலம் நீரில் மிதப்பதற்கு நீங்கள் உட்கொண்ட உணவுகள் தான் காரணம். டயட்டில் ஏற்பட்ட மாற்றத்தினால் வாய்வு உடலில் அதிகரித்து, நீரில் மலத்தை மிதக்கச் செய்கின்றன. மற்றொரு காரணம், ஊட்டச்சத்து குறைபாடு.
இருப்பினும், சில நேரங்களில் மலம் நீரில் மிதப்பதற்கு, கணையத்தில் உள்ள அழற்சியினால், போதுமான செரிமான நொதிகளை உற்பத்தி செய்யாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம்.
கடுமையான துர்நாற்றமிக்க மலம்
உங்கள் மலம் வழக்கத்திற்கு மாறாக கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால், ஊட்டச்சத்து குறைபாடு கோளாறுகள், செலியாக் நோய், கிரோன் நோய், நாள்பட்ட கணைய அழற்சி போன்றவைகள் காரணங்களாக இருக்கும். அதிலும் உங்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, இப்படி கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால், வயிற்றில் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணி தொற்றுகள் இருக்க வாய்ப்புள்ளது.
நீர் போன்ற மலம்
உங்கள் மலம் தண்ணீர் போன்று வெளிவந்தால், அதுவும் வயிற்றுப் போக்கின் போது வெளிவருவது போன்று மிகவும் நீர் போன்று இல்லாமல் வெளி வந்தால், உங்களுக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை அல்லது சீலியாக் நோய் இருக்க வாய்ப்புள்ளது. சீலியாக் நோய் இருந்தால், அவர்களால் க்ளுட்டனை சகித்துக் கொள்ள முடியாது. க்ளுட்டன் என்பது கோதுமை, பார்லியில் தென்படும் ஒருவகையான புரோட்டீன். இந்த புரோட்டீன் ஒருவருக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கு மலம் நீர் போன்று போகும்.
No comments:
Post a Comment