Thursday 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-11)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-11)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழும் அகத்தியரும்
**********

அகத்தியர் பெருமான் குடத்தில் இருந்து அவதரித்தவர். இவரை உருவாக்கியவர் சிவபெருமான் என்கிறார்கள்.அதாவது பனிக்குடத்தில் இருந்து என்றும், இந்த பனிக்குடம் இருள் நிறைந்த இடத்தில் வைக்கபட்டது என்றும், அது கடல் ஆழம் என்றும் அது குளத்தில் வைக்கபட்டது என்றும் பல தகவல்கள் கூறுகிறார்கள்.இவர் பிறந்த நாட்சத்திரம் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் என்கிறார்கள்.

"நற்றவ சிவனார் பெற்ற நற்றவ முனிவனே அகத்தியன்"
புஜண்டர் நாடி

"கரியமாலோ அலைகடலில் துயின்றோன்
அலைகடலோ குருமுனியின் கையில் அடக்கம்
குருமுனியோ கலசத்தில் பிறந்தோன்"
அவ்வையார்

இப்படி அகத்தியர் பிறப்பு பற்றிய குறிப்புகள் உண்டு எனலாம்.அகத்தியர் நிறைய அகத்தியர் இருந்தார்கள் என சொல்வது ஏற்க முடிவதில்லை ஏனெனில் கற்ப மருந்து சாப்பிட்டு அவர் பல யுகங்கள் வாழ்ந்தார் என சித்தர்நூல்கள் குறிப்புகள் உள்ளது.
குறிப்புகள் = கருவூரார் வாதகாவியம் பாடல் 8முதல் 11 வரை

மேலும் அவர் தமிழ் நூல்களை வடமொழிக்கு தருவதற்க்கு சென்றார் எனவும் பின் பிரளய காலத்தை நிறுத்த வடநாட்டில் இருந்து தென்பகுதிக்கு வந்தார் என குறிப்புகள் உள்ளது.(சில குறிப்புகள் பெருநூல்காவியம் 1000த்தில் உள்ளது)

மேலும், அவர் மூன்று தமிழ் சங்கத்திலும் இருந்தார் எனவும், பின் அதுவல்லாமல் சித்தர்கள் தமிழ் சங்கமான பொதிகைமலையில் தனது பெருநூல் காவியத்தை அரங்கேற்றினார் எனவும் கூறபடுகிறது.

தென்மதுரை தமிழ்சங்கத்தில் எப்படி ஒரு நூல் அரங்கேற்றபடுமோ அதுபோலவே சித்தர்கள் தமிழ் சங்கமான பொதிகையிலும்,சதுரகிரியிலும் நூல் அரங்கேற்றபடும்.

அகத்தியனார் அகத்தியம் என்ற நூலில் மூன்று தமிழையும் கூறினார்,ஆனால் அது கடல்கோளால் அழிக்கபட்டது இருப்பின் பின் பெருநூல்காவியம் என்ற நூலை இயற்றி பொதிகை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றினார்.

அதுவும் பின்னால் ஆழிபேரலையால் கடல்கொண்டு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது இது ஆறு காண்டங்கள் மட்டுமே இப்போது நம்மிடம் உள்ளது.

அகத்தியம்➡பன்னீராயிர காவியம் 12000➡போகர் சப்தகாண்டம்7000
இப்படி வந்த நூல் கடைசியாக முழுமையாக உள்ள நூல் போகர் 7000

அகத்தியர் தென்பகுதிக்கு செல்லுவதை அறிவியல் பூர்வமாக கீழே காணலாம்

இதில் குறிக்கபடும் காலமும் தென்மதுரை கடல் கொண்ட காலமும் தோராயமாக ஒன்றாக வருகிறது காண்க

வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது.

 அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.

சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.

கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 22 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது.

பின்பு மீண்டும் கிமு.4600 ல் தென் துருவ நட்சதிரம் 24 டிகிரி ஆனது. இது பொதிகையில் இருந்து காண முடிந்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.

இதில் தென்மதுரை கடலில் மூழ்கியது தோராயமாக கி.மு 4500 என ஆய்வாலர்கள் கூறுகிறார்கள்.

 கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று.

இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.

எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை! இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.

நல்லது பதிவின் நீளம் கருதி சில சித்தர்கள் பாடல்களை காண்போம் அன்பர்களே

"குறுமுனி அல்ல அது குரு முனி
தானான குருமுனியா ரென்றுசொல்லி
தன்மையுள்ள சங்கத்தா ரெல்லாருந்தான்
கோனான குருவணக்கம் மிகவுங்கூறி
குவலயத்தி லின்னூல்போல் யார்தான் செய்வார்"
பெருநூல் 12000 முதல் காண்டத்தில் எண்700

பொதிகைமலை சங்கத்தில் கமலமுனி நூல் அரங்கேற்றல் தடுக்கபட்டு பின் சதுரகிரி சங்கத்தில் அரங்கேற்றம் செய்யபட்ட்து.

"கேட்டாரெ கமலமுனி தாள்பணிந்து
கிருபையுடன் தென்பொதிகை சபையோர் முன்னே
கூட்டமுடன் அரங்கேற்றல் செய்யவென்று"
பாடல் 12000த்தில்3240

"இட்டாரே சித்துமுனி கமலர்தாமும்
யெழிலாக சதுரகிரி மலையோரந்தான்
பட்டயம்போல் வரங்கேற்றல் செய்வதற்கு
பாங்குடனே சம்மதங் கொண்டருளினாரே"
பாடல் 12000த்தில்3246

 இதன் பாடல்கள் பெருநூல்12000 மூன்றான் காண்ட்த்தில் எண் 240லிருந்து 247வரை சங்கத்தில் அரங்கேற்றம் செய்வதை கூறுகிறது

"சிறப்புடனே பொதிகைமலை சங்கமப்பா
தீரப்பா நவகோடி சித்துநாதர்
திறமுடனே யெழுதிவைத்த பலகைதானே
பலகையாம் சங்கமென்ற பலகையப்பா"
பெருநூல் 12000த்தில்பாடல்4024,25

_இதன் பாடல்கள்
 பெருநூல்12000 நான்காம் காண்ட்த்தில் எண் 24லிருந்து 30வரை சங்கத்தில் பலகை மூலம் செய்வதை கூறுகிறது._

அகத்தியத்தின் வழி நூல் தொல்காப்பியம் என்பது போல் பெருநூல் 12000த்தின் வழி நூல் போகர் சப்தகாண்டம் 7000 என்பதை போகர் கீழே கூறுகிறார்.

"வருநூலம் அடியேனும் சொன்ன மார்க்கம்
விருப்பமுடன் அகத்தியரும் ஒருநூல் செய்தார்
குருநூல் காவியம் பன்னீர் ஆயிரம் தான்"
போகர் 7000 பாடல் 4124

இனி அடுத்து மந்திரம் பற்றிய பதிவுகள் வரும் இதில் தமிழ் மொழியே மந்திரமாக செயல்பட்டதையும். புலவர்கள், சித்தர்கள் பயன்படுத்திய முறைகள்,மற்றும் சாபம் கொடுக்கும் முறைகள் என அனைத்தையும் காண்போம்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்


தொடரும்......

         - shiva shangar

No comments:

Post a Comment