Wednesday 22 August 2018

ருத்ரம் என்னும் யஜுர் வேத துதி

#ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், #சமகம் என இரண்டு பகுதிகளை உடையது.

இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது.

இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும்.

மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும்.

பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர்.

சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும்.

சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.

ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன.

ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன.

ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர்.

11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பெரிய புதிர்:-
*************

உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள் தான். சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் பார்க்கிறோம்.

சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன.

இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது.

உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை.

ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன.

வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது பார்த்தீர்களேயானால் வேதம் கற்கும் ஆவல் அவர்களிடம் கூடுதலாக உள்ளது. மேலும் மேல் நாட்டு பள்ளிகளில் ருத்திரம், சமகம்,சில சுக்தங்களை தினசரி பாடமாகவே மாற்றியுள்ளனர்.

வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள்.

சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.

இந்தப்பதிவில் குற்றம் பிழை இருப்பின் அதற்கு சொந்தகாரன். நிறை இருப்பின் என்னை இயக்கும்
அந்த பரமேஸ்வரணையே சாரும். எனக்கு ஒன்றும் தெரியாது. பெரியவர்கள் தவறை திருத்தவும்.
shiva shangar

No comments:

Post a Comment