Wednesday, 22 August 2018

ஆயுர்வேத ஆசார்யர் - சரகர்

ஆயுர்வேத ஆசார்யர் - சரகர்
*******************************
ஆத்ரேயரின் சிஷ்யர் ஆசார்ய சரகர்
பாரத வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் வரலாற்றைக் கொண்டவர் ஆயுர்வேத ஆசார்யர் சரகர்.
இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது. ஏன், 120 அத்தியாயங்கள் என்ற எண்ணிக்கை? ஒரு மனிதனின் பூரண ஆயுள் 120 என்பது சரகரின் தீர்மானமான எண்ணம். ஆகவே தான் 120 அத்தியாயங்களில் 120 வயது வரை எப்படி வாழலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதே போல பேலர், கஸ்யபர் சுஸ்ருதர் ஆகிய ஆயுர்வேத ஆசார்யர்களும் தங்கள் நூல்களை 120 அத்தியாயங்களாகப் பகுத்துள்ளதும் பாரதத்தின் புராதன மஹரிஷிகள் மனிதனுக்கு பூரண ஆயுர்தயா (பூரண ஆயுள்) 120 வருடங்கள் என நிர்ணயித்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.
சரகரின் ‘சரக சம்ஹிதா’ முழு நூலாக இன்று நம்மிடையே கிடைத்துள்ளது. சரகர் ஆயுர்வேதத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமான ஒருவர். அத்ரி மஹரிஷியின் மகனான புனர்வசு ஆத்ரேயரின் சிஷ்யராக சரகர் இருந்தார் என்பதும் ஆத்ரேயர் தனது சிஷ்யர்களான பேலர் அக்னிவேசர் ஜாதுகர்ணர் பராசர்ர், ஹரிதர் காஷிரபாணி ஆகியோருக்கு ஆயுர்வேதத்தைப் பயில்வித்தார் என்பதும் செவி வழிச் செய்திகள். இந்த சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலைப் படைத்தனர். அவற்றுள் அக்னி வேசர் எழுதிய நூலே சிறந்தது என்று ரிஷிகள் சொல்லவே அதுவே பிரசித்தி பெற்ற நூலானது. இதை சரகர் செம்மைப் படுத்தினார். ஆகவே சரக சம்ஹிதை என்ற பெயரைப் பெற்றது.
சரகர் கனிஷ்கர் காலத்தவரா?
சரகரின் காலம் சரியாக நிர்ணயிக்கப்பட முடியவில்லை. ஆனால் புராதன சீன ஏடுகளின் மூலம் சரகர் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
கி கா யீ மற்றும் டான் ஐயவோ ஆகிய இரு புத்த துறவிகள் கி.பி. 472இல் ஒரு சம்ஸ்கிருத நூலை மொழிபெயர்த்தனர்.அதன் பெயர் சம்யுக்த ரத்ன பீடக சூத்ரா. சம்ஸ்கிருத மூலச் சுவடிகள் தொலைந்து போயின. ஆனால் மொழிபெயர்ப்பு நூல் மட்டும் கிடைத்துள்ளது. புத்தமத சரித்திரத்தைச் சொல்லும் இந்த நூலில் உள்ள கதைகளில் 16வது கதையில் ஏழாவது அத்தியாயத்தில் பிரசித்தி பெற்ற அரசனான தேவபுத்ர கனிஷ்கரின் பெயர் இடம் பெறுகிறது.கனிஷ்கரின் மிக நெருங்கிய நண்பர்கள் மூவர். அஸ்வகோஷர் போதிசத்வர்,பிரதம மந்திரி மாதரர் மற்றும் சரகர். இவர்கள் மூவரும் இணைபிரியாமல் மன்னருடனேயே இருப்பார்கள். ஆக கனிஷ்கர் காலத்தில் சரகர் வாழ்ந்தார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த வாதத்தை மறுக்கும் அறிஞர்கள் சரகர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டு காலம் முன்னதாக வாழ்ந்தவர் என்று உறுதி படக் கூறுகிறார்கள். ஆத்ரேய மஹரிஷியின் காலத்தை பல நூற்றாண்டுகாலத்திற்கு முன்பேயே நிர்ணயிக்க வேண்டியிருப்பதால் சரகரின் காலமும் மிக மிக முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
சரகர் என்றால் சுற்றுபவர் என்று பொருள்
சரகர் என்றால் சுற்றிக் கொண்டிருப்பவர் என்று பொருள். ஆகவே இவர் இடம் விட்டு இடம் பயணப்பட்டுக் கொண்டே இருந்து பரந்த அனுபவத்தைப் பெற்றவர் என்றாகிறது.
சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள்
ஆயுர்வேதம் என்றால் என்ன, ஒரு மருத்துவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும், நீடித்த பூரண ஆயுளுக்கு ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும், எது பூரண உணவு, பஞ்ச மஹா பூதங்களும் அதனால் நமக்கு ஏற்படும் பலாபலன்களும் என்னென்ன,மூன்று தோஷங்களான வாத, கப, பித்தம் என்றால் என்ன, மூலிகைகள் யாவை அதனால் ஏற்படும் பயன்கள் யாவை, மருந்தை எப்படி உட்கொள்ள வேண்டும், ஒரு வியாதியை எப்படி குணமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான விஷயங்களையும் மனித உடல் பற்றிய அரிய ரகசியங்களையும் சரக சம்ஹிதை நன்கு விளக்குகிறது.
சரகரின் மூன்று ஆசைகள்
சரகர் மூன்று ஆசைகளை வெளியிடுகிறார் : 1) வாழ்வதற்கான உறுதி, 2) வளம் பெறுவதற்கான ஊக்கம், 3) இந்த உலகை விட மேம்பட்ட ஒன்று ஆகியவற்றை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதே அவரது ஆசை..

No comments:

Post a Comment