Monday 10 September 2018

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ யோக ரகசியங்கள்(பகுதி-8)

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ யோக ரகசியங்கள்(பகுதி-8)*
*********************************************
**********************
*(நன்றி அண்ணாமலை சுகுமாரன் ஐயா...)*
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை
**************************************
27) உள்ளுடம்பின் வாழ்வன ஒன்பதும் ஏழைக்
கள்ள உடம்பு ஆகிவிடும்
வாழ்வன = (தூல தேகத்தில் இருப்பு கொண்டு )
செயல்பட்டுக்கொண்டிருக்கும் ,
ஒன்பதும் = நவத்துவாரங்கள் எனப்படும் ஒன்பது
ஓட்டைகளும் ,
உள்ளுடம்பின் = உள்ளுடம்பின் தொடர்பு இல்லாதபோது ,
ஏழை = வறியவரைப்போல் செயலற்று ,
கள்ள உடம்பு = மறைந்து நிற்கும் உடம்பாக ,
ஆகிவிடும் = மாறிவிடும் .
அன்னமய கோசம் எனும் இந்த தூல உடம்பில் ஒன்பது வாசல் உண்டு .அவைகள் நவத்துவாரங்கள் எனப்படும் .
அவையாவன கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித் துவாரங்கள் இரண்டு, கருவாய் ஒன்று,உணவு செல்லும் வாய் ,கழிக்கும்கழிவுக்கு எருவாய் ஆக ஒன்பது வாசல் .
கண்டத்துக்கு மேலே ஏழு வாயில் ,
இடுப்பிலே இரண்டு வாயில் .அமைந்துள்ளது
ஒன்பது வாயில் உடம்பில் முன்பே இருந்தாலும்
பத்தாவது ஒரு வாயிலைத்திறப்பதுதான் முக்திக்கு வழி என ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த துவாரங்கள் தூல உடம்பில் இருந்தாலும் அவைகளை இயக்கும் விசை உள்ளுடம்பில் இருக்கிறது .
உள்ளுடம்பின் தொடர்பு இல்லாதபோது இந்த துவாரங்கள்
வறியவரைப்போல் செயலற்று இருக்கும் .
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது காட்சி யிலைபல வாமே.-- என்கிறது திருமந்திரம் .
அது தூல உடம்பின் ஒன்பது வாயிலைமட்டும் கூறாமல் அவைகளின் வழியே புகும் ஏனைய ஒன்பது காற்றையும் ,யோகம் கற்றோர் அந்த ஒன்பது துவாரம் மூலம் பெறும் அக உணர்வுகளைக் கூறுகிறது .
இப்படிப் பட்ட வினோத ஒன்பது ஓட்டையுள்ள இந்த உடலை ஆளும் ஆன்மாவும்வின் அளப்பரிய ஆற்றலை அடுத்து காண்போம்....
28 )
பொய்க்கெல்லாம் பாசனமாயுள்ள அதற்க்கு ஓர் வித்தாகும்
மெய்க்குஉள்ளாம் மாயஉடம்பு
பொய்க்கெல்லாம் = எல்லாவித பொய்களுக்கு ,
பாசனமாயுள்ள = விளை நிலமாக உள்ள ,
அதற்க்கு = இந்த தூல தேகத்திற்கு ,
மெய்க்குஉள்ளாம் = அந்த தூல தேகத்திற்கு உள்ளே இருக்கின்ற ,
மாயஉடம்பு = சூக்ஷும தேகமானது ,
ஓர் வித்தாகும் = ஒரு விதை போல ஆகிறது
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”
– திருவாசகம்
என மாணிக்க வாசகர் நமது சார்பில் அவர் அழுவதுபோல்
மாற்றிக் கூறுகிறார் .
யானே பொய் என ஏன் சொல்லுகிறார் ?
யான் என்று பெருமைக்கொள்ளும் , மெய் என்று கூறப்படும் இந்த தூல உடம்பு பொய்யானது .
என்றாவது ஒரு நாள் மறையக்கூடியது .ஒருநாள் மண்ணோடு மண்ணாக போகவேண்டியது
ஒரு நாள் இந்த தூல உடல் தீக்கு இரையாகும்
இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாம், ஞானம் பெற முயலவேண்டும்
பல்வேறுவிதமான பிறப்புக்களில், பல்வேறு வடிவுடன் கிடைக்கும் இவ் உடம்பு அனைத்துமே தோல், சதை, எலும்பு, மஜ்ஜை முதலான கலந்த ஒன்றாகும். அமீபா தொடங்கி,
ஆறறிவு மனிதன்வரை எல்லா உடல்களுக்கும்,
"வேற்று, விகார, விடக்கு " அமைந்திருந்தல் எனும் உண்மை உணர்ந்து " ஆற்றேன், எம் ஐயா, அரனே'" என்று கதறுகிறார்.
மாணிக்கவாசகர் தனது சிவபுராணத்தில் .
மேலும் " போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே கள்ளப்
புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே" என உருகுகிறார் .
சிவபுராணம் ஒரு ஞான பிரவாகம் .
உடம்பில் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும்
கை, கால், வாய், எருவாய், கருவாய் ஆகிய கர்மேந்திரி யங்கள் ஐந்தும் உள்ளன
ஞானேந்திரியங்கள் , கர்மேந்திரி யங்கள் தூல உடம்பில் இருந்தாலும் , அவைகளை இயக்கம் அறிவு உள்ளுடம்பில் தான் அமைந்துள்ளது .அத்தகைய இயக்கம் அறிவுக்கெல்லாம் பெயர்கள் கூட உள்ளது .
ஸ்ரோத்திரம் என்பது காது கேட்க செய்யும் அறிவு .
ரஸ்னா நாக்கின் சுவை !
ஏன் ரஸ்னாவுக்கு இந்த பெயர் புரிகிறதா ?
ஷாசுகு கண் பார்வை
இவ்வாறு அனைத்து ஞானேந்திரியங்கள் , கர்மேந்திரி யங்கள்ஆகியவற்றிற்கு உள்ளுடம்பில் தனித்தனியே கண்ணுக்குத்தெரியாத அறிவு மொட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது
இவ்வாறு தூல உடம்பிற்கு அதன் உள்ளே இருக்கும் ,உள்ளுடம்பு ஆதாரமாக ,ஒரு வித்தைப்போல் இருப்பதாக இந்தக் குறளில் கூறுகிறார் .
29 ) வாயுவினால் ஆய உடம்பின் பயனே
ஆயுளின் எல்லை அது
-- வாயுவினால் ஆய உடம்பின் பயனே என்பதின் பொருள் நாம் முன்பே கண்டபடி , உள்ளுடம்பு மனோ மய கோசம் பிராண மய கோசத்தால் ஆகியவற்றால் ஆகியது .
இதில் பிராண மய கோசம் பிராணனுடன் ,பிராண வாயு
ஆகிய தச வாயுவைக் கொண்டது .
இந்த பிராண வாயு உடலைவிட்டு நீங்கும் போது ,
உயிரும் தூல உடலைவிட்டு நீங்கிவிடும் .
உயிர் நீங்குவதை 'ஆயுளின் எல்லை அது ' என்கிறார் .
உள்ளுடம்பு இருக்கும் வரையே தூல உடம்பு வாழும் .
மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு .
இவை தச வாயுக்கள் எனப்படும்.
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், தனஞ்செயன், கிரிகரன், தேவதத்தன்
பிராணன் அபானன், உதானன் , சமானன் , வியானன் முதலிய இவையே மனிதனின் அனைத்து இயக்கத்தையும் நிர்வகிக்கின்றன
உயிர் வெளியே புறப்படும் நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செயல்களும் ஒவ்வொன்றாக முடக்கப்படும் , எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.
பிறகு .சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .
இவ்வாறு உள்ளுடம்பில் இடம்பெற்ற வாயு வெளியேறியவுடன் ,தூல உடம்பும் வாழ்வும் முடிந்துவிடும்
என்பதை இந்தக் குறளில் கூறுகிறார் .
அடுத்து வரப்போகும் குறள் மிக அரிய உண்மைகளைக் கூறப்போகிறது .அதை ஆடுத்துக் காணலாம் ....
30 ) ஒன்பது வாசலும் ஓக்க அடைத்தாக்கால்
அன்பதிலொன்றாம் அரன்
உள்ளுடம்புப் பற்றிய அதிகாரத்தின் கடைசிப் பாடல் இது .
அடுத்து நாடி தாரணை என்று நம் உடலில் உள்ள நாடிகளை பற்றி நமக்கு கூறப்போகிறார் ஔவைப்பிராட்டி
இந்தக்குறளில் உள்ளுடம்பின் முக்கிய பபண்பைக் கூறுகிறார்
ஒன்பது வாசலும் = உள்ளுடம்பில் இடம்பெற்ற ஒன்பது வாசல் எனும் ,நவதுவாரங்களையும் ,
ஓக்க = ஒருமிக்க
அடைத்தாக்கால் = மனத்தால் எண்ணி தியானித்தால் ,
அன்பதிலொன்றாம் = 50 ரகசிய அட்ஷரங்களையும் ,மற்றும் முக்கிய பிரணவத்தின் மூலமாக ஒன்றும் ஆக 51.,
அரன் = சிவத்தை உணரலாம்
ஒன்பது வாசல் என்பது தூல உடம்பில் இருக்கும் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித் துவாரங்கள் இரண்டு, கருவாய் ஒன்று,உணவு செல்லும் வாய் ,கழிக்கும்கழிவுக்கு எருவாய் ஆக ஒன்பது வாசல்களின் மேல் மனத்தை குவிப்பதின் மூலம் உள்ளுடம்பில் இடம்பெற்றிருக்கும்
இவைகளுக்கு ஆதாரமான இடங்களைத் தியானிப்பதால் , ,
உடம்பில் இடம்பெற்றிருக்கும் ரகசிய 50 எழுத்துக்களையும் ,அத்துடன் சேர்ந்த பிரணவத்தின் தன்மையையும் சேர்த்து 51 அட்சரம் மூலமாக சிவத்தை உணரலாம் என்கிறார் ,
இந்த அண்டத்தின் சப்தம் நம் பிண்டத்தில்இடம்பெற்ற சக்கரங்களின் ஒவ்வொரு இதழ்களிலும் ஒலிப்பதை ஞானத்தால் கண்டு, அவை 51 அட்சரங்கள் என்பதையும் கண்டு அதில் இருந்து மொழியை வடிவமைத்தார்கள் நம் சித்தர்கள்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன் றாகத் தமிழ்செய்யு மாறே என்று பாடிய திருமூலர் கூட தமிழில் 51 எழுத்துக்கள் என்கிறார் .அவர் காலத்தில் 51 இருந்திருக்கலாம் ஆனால் இப்போது 31 தான் உள்ளன . தற்போது உள்ள எழுத்துக்களின் மாறுதல்குறித்துபின்பு விரிவாக தனியேவேறு பதிவில் பேசலாம் .
இப்போது ஔவையும் 51 எழுத்துக்களைபற்றிக்கூறுகிறார்
எனவே 51 எழுத்துக்களைப்பற்றி சிறிது அறிவது அவசியமாகிறது .
சுருக்கமாக சில செய்திகளைமட்டும் இப்போது பார்க்கலாம்
எழுத்துக்கள் உருவாகும் முறைப்பற்றி தொல்காப்பியர் பிறப்பியலின் முதல் நூற்பாவில் எழுத்துகளின் பொதுப் பிறப்பு முறையை விளக்குகிறார்.
உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சிலும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு இயல
திறம்படத் தெரியும் காட்சியான
(தொல். எழுத்து. பிறப்பு. 1)எழுத்துக்கள் பொதுவாக எவ்வாறு பிறக்கின்றன என விளக்குவது பிறப்பியல் இலக்கணம். தொல்காப்பியர் பிறப்பியலின் முதல் நூற்பாவில் எழுத்துகளின் பொதுப் பிறப்பு முறையை விளக்குகிறார்.
1. கொப்பூழ் அடியாகத் தோன்றி மேலே எழுகின்ற உதானன் எனும் காற்று தலையிலும், கழுத்திலும், நெஞ்சிலும் தங்குகிறது.
2. பின்னர்த் தலை, கழுத்து, நெஞ்சு எனும் அம்மூன்றுடன் பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் உட்பட எட்டு இடங்களிலும் ஓர் உறுப்போடு ஓர் உறுப்பு பொருந்தி அமைய ஒலிகள் உருவாகின்றன.
3. இவ்வாறு காற்று எழுந்து வெவ்வேறு உறுப்புகளின் வெவ்வேறு முயற்சிகளால் எழுத்துகள் பிறப்பதால் அவ்வெழுத்துகள் வெவ்வேறாகத் தோன்றுகின்றன என்கிறார் .
நமது சித்தர்களோஉடலின் இயக்கங்களுக்கு ஆதாரமான சக்கரங்களையும் அதில் இடம்பெற்றுள்ள இதழ்கள் எனும் 4,6,10,12,16,2 மொட்டுக்களை காரணமாக் கூறுகின்றனர் .
1. மூலாதாரம் 4
2. சுவாதிட்டானம் 6
3. மணிபூரகம் 10
4. அநாகதம் 12
5. விசுத்தி 16
6. ஆக்ஞை 2
இந்த ஆறு ஆதாரங்களில் மூச்சு பொருந்தும் போது அந்தந்த ஆதாரங்களைச் சுற்றியுள்ள இதழ்களில் 4,6,10,12,16,2 என அதிர்வின் விளைவாக ஒலி தோன்றும். இவ்வொலியைக் குறிக்கும் வகையில் வரி வடிவங்களைக் குறித்து வருகின்றனர். 50 இதழ்களுக்கு 50 எழுத்துக்கள் விளங்குகின்றன. பிரணவம் எனப்படும் ‘ஓம்’ எனும் ஒலியே அனைத்து ஒலிகளுக்கும் காரணமாகின்றது. ஆக, 50+1 = 51 எழுத்துக்கள். சித்தர்களின் பாடல்களில் 51 அட்சரம் எனக் குறிப்பிடப்படுபவைஇவையேயாகும். ஆறு ஆதாரங்களில் ஏற்படும் அதிர்வுகளே 51 ஒலிகள். அவற்றின் வடிவங்களே 51 அட்சரங்கள்.
இதையே இந்தக்குறளில் ஔவை கூறுகிறார் .
"ஔவையார்" என்பதே ஒரு மந்திரச்சொல் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள் .
உடலில் இடம்பெற்றிருக்கும் இந்த சக்கரங்கள் கண்ணுக்குத்தெரியாதவை . அவை உள்ளுடம்பின் பகுதிகள் ஆகும் .
இன்னமும் 51 அட்சரங்களைப்பற்றி நிறைய செய்திகள்
மற்றும் உண்மைகள் சொல்வதற்கு நிறைய உள்ளன .
அத்தனையும் இங்கே இப்போது கூற இடமில்லை .
ஒளவையின் குறளில் அடுத்ததற்கு போவதற்குமுன் நான் சில செய்திகளை .பகிர எண்ணுகிறேன் .
3 ஆம் பகுதியில் உள்ளுடம்பு பற்றி 10 குறள்களில் விளக்கம் கூறியுள்ளார் .அடுத்தப் பகுதி நாடி தாரணை பற்றியது .
அண்மையில் வந்த விநாயகர் சதுர்த்தியின் போது ஒளவை எழுதிய விநாயகர் அகவல் படித்தேன்
அப்போது அதில் வந்த சிறப்பான ஒரு வரி என்னை ஈர்த்தது .
- புரியட காயம் புலப்பட எனக்கு
தெரியெட்டு நிலையும் தெரிசனபடுத்தி----என்கிறார்
புரியட காயம் என்பது உள்ளுடம்பு .
அதைப்பற்றி உள்ளுடம்பு பற்றி எழுதியசமயத்தில் குறிப்பிடமறந்தோமே என்ற எண்ணம் வந்தது .இதைப்பற்றியும் எழுதி பின் அடுத்த பகுதி போவதே உசிதம்
என்ற எண்ணம் வந்தது .
புரி - முடிச்சு
அட்டம் - எட்டு
காயம் - உடம்பு
அதாவது உள்ளுடம்பு எட்டு முடிச்சி கொண்டது இவை அனைத்தும் முடிச்சு போன்று பரு உடலில் ஓர் இடத்தில் கட்டப்பட்டு இருக்கின்றது
இதை சித்தர்கள் எட்டு ( அ ) என்பர்
அசபை, எண்குணம் என்றெல்லாம் கூறியுள்ளார்கள்.
இட பிங்களா நாடிகள் மூன்று இடத்தில் மார்டி மாறி சென்று கிரந்தி மூலம் மூன்று மண்டலங்களை ஏற்படுத்துகிறது .
அது வேறு இந்த எட்டு முடிச்சு வேறு .
எனவே உள்ளுடம்பு என்பது புரியட்ட காயம் எனப்படுகிறது இந்த உடலானது மறைவாக இருந்து இந்த பரு உடலை நடத்தி வருகின்றது.
இந்த புரியட்ட காயத்தை குரு நாதர் மூலம் தெரிந்து கொள்ளுதலே தீட்சை எனப்படுகிறது. இதை சித்தர்கள் மாற்றி பிறத்தல் என்கிறார்கள் .
அழுகண்ணி சித்தரும்
ஊத்தை சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுதில்லை
மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊத்தை சடலம் விட்டு உன் பாதம் சேரேனோ என்கிறார் .
எனவே உள்ளுடம்பினைஉணர்வதின் வழியே மாற்றி பிறக்க மருந்து எனலாம் .
இனி நாடிகளைப்பற்றி பார்க்கலாம்
அடுத்து வரும் குறள்களில் சிறுக சிறுகக் காணலாம் .
தொடரும்........
- *சித்தர்களின் குரல் 

No comments:

Post a Comment