Wednesday 19 September 2018

சிவமகா புராணம்

சிவமகா புராணம் பகுதி-1
ஞான சம்ஹிதை பகுதி-1
காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம், நக்வைத த்வர்ண யாம் யஹம் - உலகங்கள் அனைத்திற்கும் பரமபிதாவான சிவபெருமானையும் அவ்வுலகங்கள் அனைத்திற்கும் அருள் அன்னையானஉமா மகேஸ்வரியையும் அவர்களின் பிள்ளையான கணேசப் பெருமானையும் நமஸ்காரஞ்செய்து. இந்தச் சிவதத்துவ புராணத்தை வர்ணிக்கிறேன்.
1. புராண வரலாறுமுன் ஒரு காலத்தில், நைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிப்பவர்களான தவ முனிவர்கள் அனைவரும் அதிவிநயபக்தியோடு, வியாஸ மகரிஷியின் சிஷ்யரும் நற்குணங்களையுடைய வருமான சூதமா முனிவரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்கள்.
மகாபாக்கியசாலியான சூத முனிவரே!நீங்கள் நீண்ட நெடுங்காலம் சிரஞ்சீவியாகச் சுகத்தோடு வாழ்வீர்களாக! தாங்கள் தங்களிடம் சிலவற்றைக் கேட்க விரும்புகிறோம். நீங்கள் வியாஸ பகவானது திருவருளால் கிருத கிருத்தியர் என்ற தன்மையை அடைந்தவர். கடந்த காலத்தில் நடந்தவைகளையும் நிகழ்காலத்தில்நடப்பவைகளையும் இனிவரும் காலத்தில் நடக்கப் போகும் விருத்தாந்தங்களையும் அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்த திரிகால ஞானியாதலால் தங்களுக்குத் தெரியாத விஷயம் துளியுமிராது!
குருவான வியாஸ பகவானின் கருணையால் அனைத்தும் சுலபமாகச் செய்யப்பட்டன. நீங்கள் தயவு செய்து சர்வோத்கர்ஷமான சிவபெருமானின் தத்துவத்தையும். அவருக்குரிய சிறந்த பூஜை முறையையும் பரமசிவனாரின் பற்பலவிதமான சரித்திரங்களையும் எங்களுக்குக் கூறியருள வேண்டும். நிர்க்குணனான மகேஸ்வரன் எப்படிச் சகுணனாகிறார்? நாங்கள் சிவதத்துவத்தை நன்றாக விசாரித்து அறிந்தவர்களால் மகாதேவரும் உலகத்திற்கு சுகம் நல்குபவருமான சங்கரன் என்னும் திருப்பெயரையுடைய பகவான் இந்த உலகப் படைப்புக்கு முன்பும் படைப்பின் மத்திய காலத்திலும் முடிவான பிரளய காலத்திலும் எவ்விதமாக இருக்கிறாய்? அவர் எப்படித் தோற்றமளிக்கிறார்? எப்படிப் பிரசன்னமாகி இவ்வுலகங்களை முன்னிட்டு அவர் எத்தகைய பயன்களைக் கொடுக்கிறார்? எந்த உபாயத்தினால் சர்வேஸ்வரன் விரைவாகப் பிரசன்னமாவார்?
இவற்றையும் இன்னும் நாங்கள் கேட்காத விஷயங்களையும் உத்தம் விரத சீலரான தாங்கள் சொல்ல வேண்டும்? என்று சவுனகர் முதலானமுனிவர்கள் விருப்போடு கேட்கவே சூதமாமுனிவர் மிகவும் உற்சாகத்தோடு கூறலானார்.
2. ஜோதிலிங்கம் தோன்றிய கதை
முனிவர்களில் சிறந்தவர்களே! நீங்கள் இப்பொழுது என்னிடம் கேட்ட விஷயங்களைப் போலவே முன்பொரு சமயம் நாரத முனிவர் பிரம்ம ஞானத்தை அறிவதற்காக அவரது பிதாவான நான் முகப்பிரும்மாவைக் கேட்டார். அதன் விவரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். அந்தணோத்தமர்களே திரிலோக சஞ்சாரியான நாரத முனிவர் எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து வரும்போது பரமாத்மாவான சிவபெருமானின் தத்துவத்தை அறிவதற்காக அவரது திருப்பெயரைச் சிந்தித்துக் கொண்டே தம் தந்தையான பிரும்ம தேவரிடம் சென்றார் பிரம்மாவை அவர் வணங்கி விட்டுப் பின் வருமாறு கேட்டார். பிதாவே! பிரமஞானிகளில் சிறந்தவரே இவ்வுலகங்களையும் உயிரினங்களையும் படைத்து பிதா மகனாக விளங்கும் சிருஷ்டி கர்த்தாவே தங்கள் தயவினால் உத்தமமான விஷ்ணுவின் மகத்துவம் முழுவதையும் பக்தி மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் செயற்கரிய தவமார்க்கத்தையும் தானமார்க்கத்தையும் அறிந்தேன்.
ஆனால் சிவபெருமானது தத்துவத்தையும், விதிப்படிக் கிரமமாகச் செய்யவேண்டிய அவருடைய பூஜையையும் அவரது சரிதங்களையும் நான் அறிந்து கொள்ளவில்லை. நிர்க்குணமான சிவதத்துவத்தைப்பற்றி, சர்வஞானியான தங்களைத் தவிர வேறுயாரை நான் கேட்கப்போகிறேன்? ஆகையால் சிவபெருமானது மகிமையையும் உலகுய்ய அவரால் அருளப்பட்ட விரதங்களையும் அவற்றால் அவர் மகிழ்ந்து உலகங்களுக்கு எந்தெந்தப் பயன்களைக் கொடுக்கிறாரோ அவற்றையும். சிவலிங்க உற்பத்தியையும் அவர் பார்வதியை மணந்த திருக்கல்யாண மகோத்சவத்தையும் நான் கேட்காத பிறவற்றையும் சொல்ல வேண்டும். இந்த விஷயங்களைப் பற்றி முன்பு நான் பலரிடம் பலவிதமாகக் கேட்டிருந்துங் கூட எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. என்றார், நாரதர். தம் கேத சம்பூதரான நாரதர் அவ்வாறு கேட்டதும் பிதா மகனான நான்முகப் பிருமதேவர் சொல்லத் தொடங்கினார்.
நாரதா! எதைக் கேட்பதனால் எல்லா உலகங்கட்கும் எல்லாவிதப் பாவங்களும் ஒழிந்து போகுமோ அத்தகைய சிவபெருமானது மிகச்சிறந்த தத்துவத்தையும் அவருடைய அற்புதமான திருவுருவத்தையும் என்னாலும் மகாவிஷ்ணுவினாலுங்கூட சரியாக அறிய முடியவில்லை. ஆயினும் எனக்குத் தெரிந்தவரையில் சொல்லுகிறேன் கேள் நாரதா! அஸதாத்மகாமகவும்ஸதாத் மகமாயும்இருக்கிற இந்த உலகம் எப்பொழுது கண்ணுக்குப் புலப்படாததாக ஆகிவிடுகிறதோ, அப்பொழுது வியாபதி ரூபமான (ஒப்பு நிறைவுருவான) பிரமமாக ஆகவிடுகிறது. அப்பொழுது அந்தப் பிரம்மஸ்தூலமும் (பருமையும்) அல்ல சூக்ஷ்மமும்(நுண்மையும்) அல்ல; உற்பத்தியுடையதும் அல்ல; நாசம் அடைவதும் அல்ல; அது உயர்ந்த சக்தியத்தையும் மிகச் சிறந்த அறிவையும் உடையதாகிறது. அத்தகைய பிரமத்தை யோகியர்கள் எப்பொழுதுமே ஞானக் கண்ணால் பார்க்கிறார்கள். யாவுமாகியும் சிறந்ததாகவும் விளங்கிய அந்தப்பிரமம் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் வழங்கியது சிலகாலம். கழித்த பிறகு, அந்தப் பிரம்மத்திற்கு இச்சை உண்டாயிற்று. அதைப் பிரகிருதி என்றும் மூலகாரணம் என்றும் சொல்வார்கள்.
அந்தப் பிரகிருதி என்பவள் எட்டுக் கைகளையும் விசித்திரமான ஆடையையும் ஆயிரம் பூரணச் சந்திரர்களுக்குச் சமமான முகத்தையும் உடையவள். அநேகவிதமான ஆபரணங்களை அணிந்தவள், அனைத்திற்கும் காரணமானவள், அழகு முதலியவற்றால்அத்விதீயையாகவும் புருஷக் கலப்பால் ஸ்தலதீயையாயும் இருக்கிற அந்த மாயாதேவியானவள், எந்தப் பிரமத்தினடமிருந்து எந்தக் காலத்தில் தோன்றினாளோ, அந்தப் பிரமத்தினிடமிருந்தே அதே காலத்தில் புருஷனும் உண்டானான். அவ்விருவரும் ஒன்று சேர்ந்து யோசனை செய்வதில் ஆவல் கொண்டவர்களாய். நாம் இருவரும் யாது செய்ய வேண்டும்? என்று ஒருவரோடொருவர் யோசித்தார்கள், இவ்வாறு அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது மங்களகரமான ஒரு வானொலி வாக்கு, உங்களுக்குத் தோன்றிய சந்தேகத்தைப் போக்க, நாங்கள் இருவரும் தவஞ் செய்ய வேண்டும் என்று கூறியது. அந்த வாக்கைக் கேட்க பிரகிருதி, புருஷன் ஆகிய இருவரும் மிகக் கடினமான தவம் புரிந்தார்கள்.
நாரதா! கவனமாகக் கேள்! யோக மார்க்கத்தை முக்கியமாகக் கருதிய அந்தப் பிரகிருதியும், புருஷனும் எவ்வளவு காலம் கழித்து தவ நிலையிலிருந்து கண் விழித்து, ஆஹா நம்மால் எவ்வளவு காலம் தவம் செய்யப்பட்டது? என்று வியந்தார்கள், அப்போது அவ்விருவருடைய தேகங்களிலிருந்து பலவிதமான நீர்ப் பெருக்குகள் உண்டாகி, சகல உலகங்களிலும் வியாபித்தது எல்லையற்றதாகவும் தொட்டவுடனே பாபத்தை போக்குவதுமான அந்தத் தண்ணீரானது பிரமரூபமாக ஆயிற்று.
அப்போது புருஷன் மிகவும் களைப்படைந்து பிரகிருதியுடன் சேர்ந்து, அந்த ஜலத்தில் பற்பலகாலம் பிரியத்தோடு துயில்கொண்டான். அந்த மஹாத்மாவான புருஷனுக்கு, அந்த ஜலசயன காரணத்தால், நாராயணன் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்தக் காலத்தில் அவர் களிருவரையும் தவிர வேறொன்றும் உண்டாகவில்லை. பிறகு பரமாத்மா சம்பந்தமான தத்துவங்கள் உண்டாயின
பிரகிருதியினிடத்தில்மஹத்தும் அந்த மஹத்தினிடத்தில் ஸத்வம், இராஜஸம் தாமஸம் என்ற முக்குணங்களும் அம்முக்குணத்திலிருந்து ஸப்தம்; ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம்(ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) என்ற பஞ்ச தன் மாத்திரைகளிலிருந்து, ஆகாயம் வாயு, தேயு, அப்பு பிருத்வி என்ற பஞ்ச பூதங்களும் (வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம், என்ற ஐம்பெரும் பருப்பொருட்களும்) அப்பஞ்ச பூதங்களிடமிருந்து, வாக்கு, பாதம், பாணி பாயுரு உபஸ்தம் என்ற கண்மேந்திரியங்களும் (வாய், கால், கை, மலவாய், கண், மூக்கு, செவி என்ற ஞான இந்திரியங்களும்) (ஐம்பொறிகளும்) மனம், புத்தி, சித்தம் என்ற அந்தக் கரணங்களும், (உட்கருவிகளும்) தோன்றின.
இத்தத்துவங்களுக்கு இவ்வாறு எண்ணிக்கைப்பட்டது. பிரகருதி புருஷனைத் தவிர அத்தத்துவங்கள் ஜலமாயமாகும். இருபத்து நான்கு தத்துவங்களுடன் சேர்ந்துள்ள அத்தத்துவங்கள் பிரகிருதி புருஷர்களால் ஒன்றாகச் சேர்க்கப்படுகிறது.
அத்தகைய தத்துவத்தைத் தன் சுவாதீனப் படுத்திக் கொண்டு பிரமஸ்வரூபமான ஜலத்தில் நித்திரை செய்யும் தேவனான நாராயணனது நாபியிலிருந்து எண்ணிறந்த இதழ்களுடன் கூடியதாகவும் தாதுக்களால் பரவியதாகவும், பலயோசனை அகல உயரமும், பல கோடி சூரிய காந்தியும் கொண்டதாகவும் பேரழகுள்ள அதி உன்னதத் தாமரை மலர் ஒன்று தோன்றியது அந்தத்தாமரை மலரிலிருந்து ஹிரண்யகர்ப்பனான நான் புத்திரனாக உதித்தேன். நாராயணனுடைய மோகமாயையால் நான் யார்? எங்கிருந்து தோன்றினேன்? நான் யாது செய்ய வேண்டும்? நான் யாருக்கு புத்திரன்? என்னை உண்டு பண்ணியவர்கள் யார்? இவ்வாறான யோசனைகளிலும் சந்தேகங்களிலும் ஆழ்ந்திருந்த எனக்கு ஒன்றும் நிச்சயமாகத் தோன்றவில்லை மறுபடியும் நான் வந்த காரணத்தால் மோகமடைந்தேன், பிறகு இந்தத் தாமரையின் அடிப்பகுதி எங்கு இருக்கிறதோ அங்கு நம்மை சிருஷ்டி செய்தவனும் இருப்பான் அதற்குச் சந்தேகமே இல்லை என்று மனோதிடம் செய்து கொண்டு தாமரை மலரிலிருந்து கீழே இறங்கி அநேக ஆண்டுகள் ஒவ்வொரு நாளத்திலுஞ் சுற்றியும் மோகிதனான நான் உத்தமமான அந்தத் தாமரையின் அடிப்பகுதியைக் காணவில்லை.
பிறகு சந்தேகத்தோடு அதன் மலரையடைய விரும்பினேன். அதன் காம்பு விழியாகவே மேல் நோக்கி ஏறினேன். அப்போதும் மலரின் மொக்கை நான் அடையவில்லை. இவ்விதமாக அக்காம்பின் வழியிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன் ஆண்டுகள் பலவாயின க்ஷணநேரம் நான் களைப்படைந்து மூர்ச்சையானேன், அப்போது ஒரு வாக்கு தவஞ் செய்! என்று மங்களகரமாக ஒலித்தது அந்தவானொலியைக் கேட்ட நான், பன்னிரண்டு ஆண்டுகள் தவஞ் செய்தேன். அப்போது, சங்கு, சக்கரம், கதை, ஏந்திய திருக்கரங்களோடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி எனக்கு அருள் புரிவதற்காக காட்சியளித்தார். பிரகிருதியோடு உண்டு செய்யப்பட்ட விஷ்ணுவின் அழகிய ரூபத்தைப் பார்த்த நான் ஆனந்தமடைந்தேன்.
சிவமகா புராணம் பகுதி-2
ஞான சம்ஹிதை பகுதி-2
தங்கமயமான காந்தியோடு வெளிக்கு ஸத்வகுணப்பிரதனாகத் தோன்றியபோதிலும் துஷ்டர்களை நாசஞ் செய்யும் பொருட்டு உள்ளத்தில் தபோகுணப்பிரதனாகவும் நாராயணனாகவும் யார் ஒருவர் என் கண்களுக்குப் புலப்பட்டாரோ, அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவின் மாயை வயப்பட்ட நான், அவரை நீ யார்? என்று சொல் என்று கேட்டேன்.அவ்வாறு கேட்டதும் விஷ்ணு என்னைப் பார்த்து, நல்ல விரதமுடையவனே! அடா குழந்தாய்! ஸத்வ குணத்தால் வியாபதனாக உன்னைநிர்மாணஞ் செய்தவனும் விஷ்ணுவும் நான்தான் என்பதை அறிந்துகொள்! இவ்விஷயம் உண்மை! என்று புன்னகை செய்தார் அவரது வார்த்தையைக் கேட்டதும் அவரது மாயை வசப்பட்டு, எப்படி குருவானவன் தன் சீடனை எளிதாகப் பேசுவானோ. அவ்வாறு படைப்புத் தொழில் புரியும் என்னைப் பார்த்து அடா, குழந்தாய் என்று சொல்கிறாய். உன்னை மட்டும் இவ்வுலகங்களை உற்பத்தி செய்கிறவன் என்றும் மாயையை வியாபிக்கச் செய்யும் விஷ்ணு வென்றும் உலகங்கள் யாவற்றையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டு இருப்பவன் என்றும் இரட்சிப்பவன் என்றும் நீயும் என் மோகத்தால் இப்படிப் பேசுகிறாய் அதற்காரணம் வேண்டாமா அதைச் சொல் என்று கேட்டேன், அதற்கு அந்த விஷ்ணு நானே உலக காரணன் என்னுடைய சரீரத்திலிருந்து தான் நீயே உண்டானாய் இவ்வுலகங்களை உண்டு செய்வதற்குண்டான என்னை நீ மறந்து விட்டாய். இந்த விஷயத்தில் தவறு உன்னுடையதல்ல. இது எனது மாயையின் செயல் பிரம்மாவோ: உண்மையாகச் சொல்லுகிறேன். முன்பு என்னால் உற்பத்தி செய்யப்பட்ட இருபத்து நான்கு தத்துவங்களும் என்னிடத்திலேயே இருக்கின்றன என்று கூறினார்
ஸ்ரீமந்நாராயணனுடைய அந்த வார்த்தையைக் கேட்டு கோபங் கொண்ட நான் நீ யார்? இவ்வளவு பேசும் உன்னையும் உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும்! என்றுகூறி அவருடன் தீவிரமாக வாக்கு யுத்தஞ் செய்தேன், இவ்விதம் நாங்கள் இருவரும் வாதப் போர் புரிந்து வன்முறைச் செயலில் ஈடுபட்டபோது எங்கள் இருவருடைய விவாதத்தைத் தீர்ப்பதற்காகவும் எங்களுக்கு ஞானம் தோன்றச் செய்யவும் எங்களிருவருக்கும் நடுவே அதியற்புதமானதொரு ஜோதிலிங்கம் உண்டாயிற்று.
நாரதா! பல்லாயிரங்கோடி ஜ்வாலைகளால் பூரணமாகவும் காலாக்கினிக்கு இணையாகவும் நாசவிருத்திகள் இல்லாததாகவும் ஒப்பற்றதாகவும் வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாததாகவும் பிரகாசம் இல்லாததாகவும் உலகங்களை உண்டு பண்ணத்தக்கதாகவும் விளங்கிய அந்த சோதிலிங்கத்தின் சுடர்களால் மயக்க நிலையடைந்த விஷ்ணு என்னைப் பார்த்து பிரம்மாவே! நீ ஏன் யுத்தஞ் செய்கிறாய்? நான் ஏன் உன்னுடன் யுத்தம் செய்ய வேண்டும்? நம் இருவருக்கும் மத்தியில் தோன்றிய இந்த லிங்கம் எப்படித் தோன்றியது? யாரால் தோன்றியது? ஆகவே இந்த இடத்தில் மூன்றாவது நபர் ஒருவர் இருக்கிறார்.
நம் இருவரின் போராட்டத்தையும் நிறுத்திக் கொள்வோம். அக்கினி மயமாக இங்கே தோன்றியுள்ள இந்த ஜோதிலிங்கம் எங்கிருந்து உண்டாயிற்று? அதை முதலில் கண்டறிவோம். நான்கு திசைகளிலும், விண்ணிலும், மண்ணிலும் இதற்குரிய ஆதாரம் எங்கிருக்கிறது என்று தேடிக் காண்போம் அதற்காக நீ அன்னப் பறவையின் உருவத்தை எடுத்துக் கொண்டு காற்றின் வேகத்தை விட விரைந்து சென்று அதி வேகமாக ஆகாயத்தில் புகுந்து ஆராய வேண்டும், நானும் வராக வடிவம் (பன்றியுருவம்) எடுத்த இந்த லிங்கத்தின் அஸ்திவாரத்தையே கெல்லிட்பார்த்து விடுகிறேன்! என்று சொல்லிவிட்டு பன்றி வடிவமெடுத்து பூமியைத் தோண்டித் துளைத்துக் கொண்டு சென்றார் நாரதா! நான் அன்னப் பறவையின் வடிவமெடுத்து வானவெளியில் பறந்து சென்றேன், அழகான சிறகுடன் கூடிய நான் அன்று முதல் ஹம்ஸம் என்றும் ஹம்ஸராஜன் என்றும் வழங்கப்படலானேன். ஹம்ஸ ஹம்ஸ என்று எவனொருவன் ஜெபம் செய்கிறானோ நான் அவனாகி விடுவேன். அன்னவிடிவம் ஏற்ற நான் ஆகாயத்தில் காற்றையும் மனத்தையும் விட வெகு வேகமாக பறந்து சென்றேன்.
ஸ்ரீ மந் நாராயணனோ. பத்து யோசனை நீளமும் பத்து யோசனை அகலமும்மேருமலை போன்ற உடலும் நாகங்களும் கூர்மையான கோரைப் பற்களும் ஊழிக் காலச் சூரியனுக்குச் சமமான காந்தியும் நீண்ட மூக்கும், பெருங்குரலும், சிறு கால்களும் மனோவேகமும் கொண்ட ஸ்வேத வராக (வெண்பன்றி) வடிவம் பெற்று பூமியைத் தோண்டிக் கொண்டே பாதாளலோகத்திற்குச் சென்றார். அவ்வாறு சென்ற திருமால் ஆயிரம் ஆண்டுகள் வரை அந்த ஜோதிலிங்கத்தின் அடியைக் கண்டறிய முடியாமல் பாதாளலோகத்தில் தேடிக் கொண்டிருந்தார் அன்று முதல் எல்லா உலகங்களிலும் ஸ்வேதவராக கற்பம் தோன்றியது.
3. ஹரி அயனுக்கு வரமளித்தல்
முனிவர்களே! பிரும்மாவும் விஷ்ணுவும் முறையே ஹம்ஸ வடிவையும் வராக வடிவையும் எடுத்துக் கொண்டு ஆகாயத்திலும் பூமியிலும் சஞ்சாரம் செய்யச் சென்ற பிறகு நடந்தவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள்! என்று சூத முனிவர் சொல்லத் தொடங்கினார். பிறகு பிரும்மதேவர் நாரதரைப் பார்த்துச் சொல்கிறார். வராக அவதாரமெடுத்த மகாவிஷ்ணு வெகுகாலம் சுற்றியும் அந்த லிங்கத்தின் அடிவாரத்தின் தடத்தைக்கூட காண முடியவில்லை அந்த ஜோதிலிங்கத்தின் முடியைக் காண்பதற்காக ஆகாயத்திற்கு அன்னமாகப் பறந்து சென்ற நான் விடாமுயற்சியோடு முயன்றேன் அதன் விளைவாக நான் இளைத்துக் களைத்து அந்த லிங்கம் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தேன். அது போலவே ஸ்ரீ மந்நாராயணரும் மிகவும் இளைத்தும் களைத்தும் என்னைப் போலவே புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து சேர்ந்தார். அன்னமாகவும் வராகமாகவும் இருந்த நாங்கள் இருவரும் அந்த லிங்கஸ்வரூபியான சிவபகவானை நமஸ்கரித்தோம். அந்த நிலையில் நாங்கள் இருவருமே அவ்வாறு ஏன் செய்தோம் என்று சிந்தித்தோம் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட நாங்கள் இருவருமே ஒன்றாகச் சேர்ந்து ஒன்றை வணங்கும் நிலை ஏன் ஏற்பட்டது என்று எண்ணினோம். மாயையில் வல்ல மகா விஷ்ணுவும் வித்தையில் வல்லநானும் அந்த லிங்கத்தை வணங்க வேண்டுமானால் அத்தகைய மாயை அந்தலிங்கத்திற்குரிய பகவானின் மாயை என்பதை அறிந்தோம்.
இத்தன்மையானது தான் என்று எண்ணக் கூடாததாகவும் பெயரும் செயலும் இல்லாததாகவும் லிங்கம் இல்லாததாகவும் பக்தர்களுக்கு அருள் செய்யும்படி லிங்கத்தின் தன்மையை அடைந்ததாகவும், பரமயோகிகளுக்கும் புலப்படாததாகவும் விளங்கிய அந்த ஜோதிலிங்க உருவத்தை மன உறுதியுடன் வணங்கிய நாங்கள் இருவரும் ஆண்டவனே! அனைத்திற்கும் மூலக்காரணனே! உம்சுயவடிவை நாங்களறியோம்! நீர் யாரோ? அறியவொண்ணாத உம்மை நாங்கள் நமஸ்கரிக்கிறோம்! என்றுதோத்திரம் செய்து கொண்டே ஆயிரம்வருடங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்! எங்கள் இருவருக்கும் மகாபிரகாசமாகவும்ஆனந்தமாகவும் மூன்று மாத்திரை லட்சணத்துடன்கூடிய (ப்லுத மாத்திரை) ஓம் என்ற நாதவடிவம் உண்டாயிற்று.
ஓ! நாரதரே! மகா சப்தத்துடன் சேர்ந்த இது என்ன? என்று நாராயணர் யோசித்துவிட்டு எதனிடத்திலிருந்து இந்தச் சப்த முண்டாயிற்றோ அந்தப் பொருளுக்கு நமஸ்காரம் என்று கும்பிட்டு அந்த லிங்கத்தினது தென்பாகத்தில் அழிவில்லாததும் முதலாவதுமான அகாரத்தையும் அதன் வடபாகத்தில் உகாரத்தையும் இவ்விரண்டிற்கும் நடுவில் மகாரத்தையும் உயரத்தில் ஓம் என்னும் சப்த விசேஷத்தையும் பார்த்தார். அவற்றுள் தெற்கிலிருந்த முதலெழுத்தாகிய அகாரம் சூரிய மண்டலம் போலவும், வடக்கிலிருந்த இரண்டாவது எழுத்தாகிய உகாரம் அக்கினியின் காந்தியைப் போலவும் நடுவிலிருந்த மூன்றாவது எழுத்தாகிய மகாரம் சந்திரமண்டலம் போலவும் விளங்க அதன் பேரில் ஸ்படிக கல் போன்ற காந்தியையுடைய தான பரம்பொருளைத் தரிசித்தார்.
லிங்கஸ்ய தக்ஷிணே பாஹே ததாபஸ்யத் ஸனாதனம்ஆத்யம்வர்ண மஹாரம்து உகாரம் ச்சோத்ரே ததமகாரம்மத்யத ஸ்சைவ நாதாந்தம் தஸ்பசோமிதி
ஜாக்கிரம் (நனவு). ஸவப்னம்(கனவு), சுக்ஷúக்தி(உறக்கம்) துரியம்(பேருறக்கம்) என்னும் நான்கு அவஸ்தைகளுக்குப் மேம்பட்ட துரிய அதீதமாயும் (உயிர்ப்படக்கமாயும்) நிர்க்குணமாயும், மாயாசம்பந்த விகாரமில்லா ததாயும். ஸஜாதீயம் விஜாதீயம் என்னும் சொந்தமற்றதாயும் இரண்டாவது இல்லாததாயும், உள்வெளி அற்றதாயும் இரண்டாவது இல்லாததாயும், உள்வெளி அற்றதாயும், அதிமத்திய அந்தரகிதமாயும், ஆனந்தத்திற்கு காரணமான பரமானந்தமாயும், சதயமாயும், அழிவில்லாததாயும் முக்கியமாயுமிருக்கிற ஏகாக்ஷரம் என்று சொல்லப்படுகிற பரம் பிரம்மத்தைப் பார்த்தார் அகரமென்னும் பெயரையுடைய பகவான் சிருஷ்டி (படைத்தலை) பண்ணுகிறவர்.
உகாரமென்னும் பெயரையுடைய பர்க்கர் ஸ்திதி(காத்தல்) தொழில் செய்பவர். மகாரமென்னும் பெயரையுடையவர் (அனுக்கிரகிப்பவர்) நானும் அந்த விஷ்ணுவும் ஆச்சரியம் மிகுந்த மனதோடு அச்சமயத்தில் மிகவும் ஆச்சரியகரமானது அழகுள்ளதும், ஐந்து திருமுகங்களுடையதும், பத்து திருக்கரங்களுடையதும், பச்சைக் கற்பூரம் போன்ற நிறமுடையதும் பல விதமான காந்தியையும் பலவித ஆபரணங்களையும் கம்பீரத்தையும் பராக்கிரமத்தையும் மகா புருஷ லக்ஷணத்தையும் சிறந்த உருவத்தையும் உடையதும் எல்லாவற்றையும் உண்டு செய்யத் தக்கதுமாகிய சிவதத்துவத்தையே பார்த்தோம், உடனே, அவர் தான் எல்லா தேவர்களுக்கும் ஈசனென்று தெரிந்து கொண்டு விதிப்படி வேதாந்தமான ஸத்யோ ஜாதாதி மந்திரங்களினால் விஷ்ணுவானவர் அவரைத் துதித்தார். நானும் அவ்வாறே தோத்திரஞ் செய்தேன் எங்கள் இருவருடைய தோத்திரங்களால் சந்தோஷப்பட்ட மாயா சம்பந்தமற்றவரான மகேஸ்வரன் திவ்விய ஸப்தமயமான ரூபம் கொண்டு அந்த ஜோதிலிங்கத்தில் பெருஞ்சிரிப்புடன் விளங்கினார்.
அகார தஸ்ய மூர்த்தாச லலாடம் தீர்க்க உச்சதேமகாரம் தக்ஷிணம் நேத்ர மீகாரம் வாமலோசனம்உகாரம் தக்ஷிணம் க்ரோத்ர மூகாரம் வாமமுச்யதேருகாரம் தக்ஷிணம் தஸ்யம் கபோலம்பரமேஷ்டிநவாமம், கபோலம், ர்ருகாரம் ய ஏந சாயுடே உபேஏகாரமோஷ்ட மூர்த்வம் து ஐகார மதரம் விபோஓகாரம் சத தௌகாரம் தநத பங்க்தி சயம் க்ரமாதுஅம் அஸ்ச தாலு நீ தஸ்ய தேவ தேவஸ்ய தீமதகாதி பஞ்சாக்ஷராண்ய ஸ்ய பஞ்ச ஹஸ்தாஸ்ச தக்ஷிணேசாதி பஞ்சாக்ஷராண்யேவம் பஞ்ச ஹஸ்தாஸ்து வாமததாதி பஞ்சாக்ஷரம்பாத தாதி பஞ்சாக்ஷரம் ததபகாரமுதரம் தஸ்ய பகாரம் பார்ஸ்வமுச்யதேபகாரம் வாம பார்பசுவம் துபகாரம்ஸ்கந்த உச்யதேமகாரம் ஹ்ருதயம் சம்போமகாதேவஸ்ய யோகிநயகாராதி சஹராந்தம் விபோர்வை சப்த தாதவஹகாரம் நாபிரூபம் ஹி ஷகாரம் நாத உச்யதேஏவம் சப்தமயம் ரூப மகுணஸ்ய ஒம். 

சிவமகா புராணம் பகுதி-3
ஞான சம்ஹிதை பகுதி-3
குணசொரூபியாயும், நிர்குணனாயும் சப்தமயமாயும் உள்ள பகவானை என்னோடு திருமாலும்பார்த்து பிரபுவே! எங்கள் சஞ்சலத்தை அகற்ற கிருபை செய்யும்! என்று வேண்டிக் கொண்டோம். எங்கள் பிரார்த்தனைக்கு கருணை புரிந்து உங்கள் மேல் கருணை கொண்டிருக்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார், அதைக்கேட்டு அளவிலா ஆனந்தங்கொண்ட நாங்கள் இருவரும் மகாதேவனே! எங்களுக்கு இஷ்டமான வரங்களைக் கொடுத்தருள்வீர்! என்று வேண்டிக் கொண்டோம்,
உடனே சிவபெருமான் பிரும்மாவான எனக்குச் சிருஷ்டி செய்யும் வரத்தையும் விஷ்ணுவுக்கு சிருஷ்டி செய்யப்பட்டதைக் காப்பாற்றும் வரத்தையும், உருத்திரனுக்கு சங்கரிக்கும் வரத்தையும் அளித்து, இதுதான் தேவ சம்பந்தம் கொண்ட பிரகிருதி என்று கூறியருளினார். மேலும் இந்தப் பிரகிருதியில் பிரமாணி என்னும் பெயருள்ள சக்தி பிரம்மனையும் லக்ஷ்மி என்னும் பெயருள்ள சக்தி விஷ்ணுவையும், காளி என்னும் பெயரில் ஒரு சக்தி உருத்திரனையும் அடையும்.
இப்படிபிரும்ம விஷ்ணு: உருத்திரர் ஆகிய மூன்று சுபகரமான சக்திகள் உண்டாக அம் மூன்றுதேவரும் மூன்று சக்திகளுடன் சேர்ந்து படைத்தல்-காத்தல்-அழித்தல் என்னும் சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வார்கள் என்று கூறினார். மேலும் விஷ்ணு மூர்த்தி சிவபெருமானை நோக்கி, சுவாமி! தேவரீர் சொன்ன கட்டளையை நாங்கள் தட்டமுடியுமோ உமது சித்தத்தின்படியே உமது ஆணையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆயினும் உம்மிடம் நான் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டிய தொன்றும் இருக்கிறது! என்று வேண்டினார். அதற்கு பகவான் ஓ விஷ்ணுவே! உமது விசுவாசத்தைப் பாராட்டி மிகவும் இஷ்டத்தை உண்டு பண்ணுகிற ரக்ஷிப்புத் தொழிலை செய்யும் பதவியை உமக்களிக்கிறேன் என்று கூற, உடனே விஷ்ணு வானவர்
, ஓ; சங்கரா, சர்வ ரக்ஷகா தேவதேவா எனக்குப் பதவி முதலியன வேண்டாம்; தத்துவோபதேசம் செய்தருள வேண்டுகிறேன் என்று கேட்டார். அதாவது தியானித்தல், சேவித்தல் பூஜித்தல் ஆகியவற்றிற்குரிய ஓர் உபதேசத்தைக் கேட்டார். எல்லா வல்லமையும் போதித்தருள சந்தேகம் அறுபடும் சக்தியுள்ள உபதேசத்தைப் போதித்தருள வேண்டுமென்று திருமால் கேட்கவே சிவபெருமானோ பரத்தத்துவமாயும், பிரணவஸ்வரூபமாயுமிருக்கிற மங்களமாயுமிருக்கிற நாதரூபத்தை(ஒலி வடிவை) உபதேசித்தார்.
சிவபிரான் அருளால் நாதரூபத்தை பெற்று விஷ்ணு மூர்த்தி பரதத்துவத்தை நன்றாக அறிந்து நாதரூபத்தையும் தரிசித்து மந்திரத்தின் சுபவழிகளடங்கிய உண்மையையும் அனுஷ்டிக்கும் உபாயங்களையும் அறிந்து கொண்டு, நாதரூபமான பரம் பொருளை மேலே பார்த்தார். ஓம் தத்வமசி என்று சொல்லப்பட்டது ஓங்காரத்தைக் காரணமாகவும் ஐந்து கலைகளோடு கூடியதுமான மந்திரமாகும்
இம்மந்திரம் சிவ சம்பந்ததான மஹாவாக்கியம், அது சுத்த ஸ்படிக நிறமானதும், மிக மேம்பட்டதும், சகல அபீஷ்டங்களையும் அளிக்க வல்லதாயும், ஞானஸ்வரூபமாயும் மந்திரரூபமாயும் உள்ளது. இன்னும் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்டதும் காயத்திரி ரூபமுடையதும் தருமார்த் காம மோக்ஷங்கள்(அறம், பொருள், இன்பம், வீடு) என்றும் நான்கு வித புருஷார்த்தங்களைக் கொடுப்பதாயும்; மிருத்தியுஞ்சயம், பஞ்சாக்ஷரம் சிந்தாமணி, தக்ஷிணாமூர்த்தி மந்திரம் என்றும் சொல்லப்பட்ட இந்த ஐந்து மந்திரங்களையும் அடையப் பெற்ற ஸ்ரீவிஷ்ணு பகவான்அந்த மந்திரங்களை ஜபித்தார்.
4. சிவலிங்கத்தின் மகிமைபிரமதேவர் சொல்லுகிறார்-இப்படி தோத்திர ஜெபம் செய்து கொண்டு இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் முன்னால் சிவபெருமான் காட்சியளித்து அவருக்கு சுவாசமார்க்கமாக அமையும்படி அநேக மந்திரங்களும் அனுஷ்டானங்களும் அடங்கிய வேதத்தைக் கொடுத்தார். சகல வித்யைகளுக்கும் நிலைக்களமாகவும் தலைமையாகவுமுள்ள சிவபிரான், சொன்ன அந்த வேதத்தை மகாவிஷ்ணு பெற்றுக் கொண்டு அந்த வேதத்தையேஎனக்கும் சுவாஸமார்க்கமாகக் கொடுத்தார். உன்னதரான சிவபெருமானிடமிருந்து சிவதத்துவ ஞானத்தையும் பெற்றுக் கொண்டு ஸ்ரீமந் நாராயணன். அந்த சிவதத்துவஞானத்தை எனக்கும் கொடுத்தார். இப்படிச் சிவபெருமான் அருளிய வேதத்தைச் சாங்கோ பாங்கமான அறிந்து கொண்டுசிவபெருமானை நோக்கி ஸமஸ்த வித்தைகளுக்கும் ஆதிமூலரானவரே! ஜோதி மயமான சுடரொளியே! தேவரீர் எப்படிச் சந்தோஷம் அடைபவர்? எப்படி உம்மை நான் தியானிக்க வேண்டும்? அடியேன் செய்ய வேண்டிய தியானம் எது? சங்கரராகிய தங்களை மனிதன் எப்படி அடைவான்? பாபங்களை யெல்லாம் பரிகரிக்கக்கூடிய இந்தச் சிவ தத்துவ ஞானத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் உடனே கருணை கடாட்ச மூர்த்தியான சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி நம்மீது தணியாத விசுவாசங்கொண்ட விஷ்ணுவே! இப்போது உன் முன்னால் நாம் எப்படிப் பிரத்தியக்ஷமாக காட்சியளிக்கிறோமோ, அப்படியே பிரத்தியக்ஷமாக இருப்பதாகக் கருதி கொண்டு சகல பலன்களையும் சகலமான மனோ பீஷ்டங்களையும் தந்தருள்வோம்.எவர் மனத்தில் எப்பொழுது துக்கம் உண்டாகிறதோ அப்போது அவர் இந்த லிங்கமூர்த்தியைப் பூஜித்தால் அந்த துக்கம் ஒழிந்து போகும் பிரம்மன் சதா சிருஷ்டித் தொழிலைச் செய்யவும்,நீ ஜீவன்களை ரக்ஷித்துக் காக்கவும், சதா எம்மிடத்தில் மிகுந்த பக்தியும் கொண்டு பூஜை செய்வதால் எல்லா விருப்பங்களையும் கொடுப்பதோ, ஸகல பாபங்களும் நிவர்த்தியாகுமோ அப்படிப்பட்ட பூஜா விதியைப் போதிக்கிறேன்! என்று கூறினார்.
அவரிடம் விஷ்ணு பகவான் மேலும் வேண்டலானார். சேதனா சேதனமாயும், லோக ரூபமாயும், தேவ தேவர்களுக்குப் பிரபுவாயும் ருக்வேத சாமவேத யசுர்வேத சொரூபமாயும் சிருஷ்டி ஸ்திதி சங்கார கர்த்தாவாயும், ஸர்வாமீஷ்டங்களையுங் கொடுக்க வல்லவராகவும் இருக்கும் பிரபுவே! உம்மை நமஸ்கரிக்கிறேன். ஏகாக்ஷர ரூபமாகி(ஓரெழுத்து வடிவாகி)யும்நாதராகியும் அகாரரூபமாகியும் ஞான ரூபமாகியும், அறிவுருவாகியும் உகார ரூபமாகியும், ஆதி தேவனாகியும், வித்யாஸ்வரூபம் உடையவராகியும் இருக்கும் உமக்கு நமஸ்காரம் மூன்றாவதான மகாரூபமாகியும் சிவமூர்த்தியாகவும் சிரேஷ்டரூபத்தையுடையவராகியும்,நீர் உருவாகியும் நீர் வாழ் பிராணிகளைக் காப்பவராகியும், ஜலத்தில் நித்திரை செய்பவராகியும், இருக்கிற உமக்கு நமஸ்காரம்! சித்ரூபமாயும்(அறிவுருவமாகியும்) பிராணி ரூபமாகியும், ஸ்மிருதிரூபமாகியும், உள்ள உமக்கு நமஸ்காரம்!
ஞான ரூபமாகியும், ஞானத்தினால் அடையத் தக்கவராகியும் உயர்ந்தரூபமான உமக்கு நமஸ்காரம்! பொன்மயமான கைகளையுடைய வரும், பொன்மயமான இந்திரியத்தை உடையவருமான உமக்கு வந்தனம் விரிசடை தரித்தவரும், யானைத்தோல் போர்த்தியவருமான உமக்கு வந்தனம் மங்கள ஸ்வரூபியாகவும், மங்களத்தையுண்டு பண்ணுபவராயும், பரமாகாய சரீரியாயும் மகாபத்மம் முதலான நிதிகளுக்கெல்லாம் பதியாயும், லிங்காரமாகியும் லிங்க ஸ்வரூபத்தை யுடையவராயுமிருக்கும் உமக்கு வந்தனம். தேஜோரூபியாயும் தேஜஸுக்களுக்கு பதியாகவும்; ஸகலஸ்வரூபியாயுமிருக்கும் உமக்கு வந்தனம்! அனந்தரும் அனைத்திற்கும் உன்னதரும் நீரை உள்ளே உடையவரும் தவத்தில் ஆசக்தரும், பிரும்ம விஷ்ணுவான எங்களுக்குச் சாமவேத கீதத்தினாலே பாடம் தரத் தக்கவராயும், பரப்பிரம்ம ஸ்வரூபியாகவும், பரமாத்மாவ யும், ரிஷிஸ்வரூபியாயும் சகலத்திலும் வியாபித்தவராயும் பிரபுவாயுமிருக்கிற உமக்கு வந்தனம் அனைத்துமுணர்ந்த ஐயனே; வந்தனம்; வந்தனம்! இவ்வாறு விஷ்ணுபகவான் என்னுடன் சேர்ந்து சிவபெருமானை துதித்துக் கொண்டு நின்றார்(மகாபுண்ணிய உருவாகவும் உன்னதமாகவும் விளங்கும். இந்தத் துதியை எவன் படிக்கிறானோ, கேட்கிறானோ பிராமணசிரேஷ்டர்களைக் கேட்கச் செய்கிறானோ அவன் மகா பாபியாயிருந்தாலும் பிரம பதவியை அடைவான்.
நாராயணனாகிய விஷ்ணு பகவானால் செய்யப்பட்ட இச்சவ ஸ்தோத்திரத்தைச் சொல்லித் துதிப்பவனுக்கு வளர்பிறை சந்திரன் போல் மங்களம்வளரும்) திருமால் இந்த சிவ ஸ்தோத்திரத்தைச் செய்த பிறகு சிவபெருமான் எங்களைப் பார்த்துச் சொன்னார். உன்னத தேவர்களே! நீங்கள் எமக்குச் செய்த இந்த தோத்திரத்தால், யாம் மனம் மகிழ்ந்தோம், பயத்தைவிட்டு; சிவமூர்த்தியாகிய என்னைப் பிரார்த்தியுங்கள் உங்களை நாம் விரும்பியபடியே மாபெரும் ஆற்றல் வாயந்தவர்களாக உண்டாகியிருக்கிறோம் அதாவது நாமே உங்கள் மூலவராக மாறியுள்ளோம் எமது விருப்பத்தைப் போலவே எமது உருவம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
உலகங்களுக்குப் பதிலாக ஸ்வரூபியான பிரம்மன் எமது வலது பக்கத்திலும் விஷ்ணு எமது இடது பக்கத்திலும் விசுவாத்மனான உருத்திரன் என் இதயத்திலும், இப்படி மூன்று அவதாரமாக இருக்கிறீர்கள், உங்கள் மீது எமக்கு அதிக அன்பு இருப்பதால் நீங்கள் எதைச் சிந்தித்தாலும் அதைக் கொடுப்போம் என்று கூறி கருணை நிறைந்த கடாட்சகரான சிவபெருமான் எங்களிருவரையும் அவருடைய திருக்கரத்தில் தொட்டு ஸ்பரிசித்தார் இதனால் எங்கள் உள்ளங்களில் பொங்கிய ஆனந்தத்தை எவ்வாறு விவரிப்பதென்றே இப்போதுங்கூடத் தெரியவில்லை மகா விஷ்ணுவோ சிவபெருமானுடன் ஐக்கியமாகும் ஆகையால் உந்தப்பட்டு ஆண்டவரே! எங்களுடையபக்தி உம்மிடம் நிலைத்திருக்க அருள் புரிவதோடு , எங்களுக்குள் எழுந்த வாதத்தை அறிவீரானபடியால் அதையும் நிறைவு படுத்த வேண்டும் என்று கைகுவித்து நின்றார். சிவபெருமான் அவருடைய வேண்டுதலுக்கிறங்கி நெடுமாலே நீரும் பிரம்மனும் எம்மிடம் எப்பொழுதும் நீங்காத பக்தித் தியானத்தில் மூழ்கியிருப்பீர்களாக நீங்கள் பார்த்த சிவலிங்க மூர்த்தியைப் பூஜை செய்ய வேண்டும்.
நீங்கள் விதிமுறைப்படி செய்யும் பூஜையால் எம்மை நமஸ்கரித்து வரும்போது சுகத்தையடைவீர்கள் என்று திருவாய் மலர்ந்து பூஜை முறைகளை உபதேசம் செய்து எங்கள் இருவருக்கும் விருப்பமான பல வரங்களையும் தந்தருளினார். பிறகு அவர் என்னைப் பார்த்து பிரமனே! நீ நம்முடைய ஆக்ஞையால் சிருஷ்டிகாரனாக இருந்து படைப்புத் தொழிலை செய்து வா என்று நாராயணனைப் பார்த்து, ஓ விஷ்ணுவே!
 சிவமகா புராணம் பகுதி-4
ஞான சம்ஹிதை பகுதி-4
நாராயணனைப் பார்த்து, ஓ விஷ்ணுவே! நீ அசையும் பொருள் அசையாப் பொருட்களையும் அண்டத்திலுள்ள சகலஜீ வராசிகளையும் காத்துரட்சிப்பாயாக நிஷ்களமாகிய நாம் சிருஷ்டி, ஸ்திதி சங்காரமென்னும் முத்தொழிலையும் நடத்த வேண்டி பிரம்மன், விஷ்ணு. ருத்திரனென்னும் மூன்றாகப் பிரித்தோம் ஆதலின் அந்த உருத்திர மூர்த்தி எம்முடைய அம்சத்தைக் காட்டிலும் குறைவுப்பட்டதொன்றும் இல்லையாதலால் நீங்கள் செய்யும் தோத்திர பூஜா கிரியைகள் யாவும் எனக்கும் உருத்திரனுக்கும் ஒன்றேயாகும். ஏனெனில் உருத்திர ரூபமும் சிவரூபமும் ஒன்றேயாகும். ஏனெனில் தங்கத்திற்கு வேறொரு தங்கம் என்கிற பெயர் எப்படிப் பொருந்தாதோ ஒரு மண் கட்டியைப் பாத்திரமாகச் செய்தால் மண்கட்டி வேறு பாத்திரம் வேறு என்கிற பொருட்பேதம் எப்படி வரவேமாட்டாதோ, அது போல் உணர்ந்து கொண்டு நீங்கள் உருத்திரனையும் எம்மையும் வேறு படுத்தி எண்ணக்கூடாது. மேலும் நமது ஸ்வரூபம் எல்லோராலும் பார்க்கத்தக்கது விஷ்ணுவே, பிரம்மனே நீயும் உருத்திரனும் என்னுடைய வடிவமேதான் சத்தியமாயும் ஞான ஸ்வரூபியாயும் நாசமற்றதாயும் அநாதியாயுமிருக்கிற எம்முடைய சிவரூபமே இதற்கெல்லாம் மூலமானதும் முதலானதுமாகும். நீங்கள் சிவ ரூபத்திலிருந்து உற்பத்தியானவர்கள் உருத்திரனாகஉருத்திர மூர்த்தி உண்டாவதற்கு நமது ஆக்ஞையே காரணம். நாமே உருத்திரனாக அவதரிக்கப் போகிறோம் பிரம்மனே! விஷ்ணுவே இச்சிவ ரூபத்திலிருந்து சிவாம்சமாக இலக்குமியும் சரஸ்வதியும் அவதரிப்பார்கள். இச் சிவரூபமே காரிய நிமித்தமாகச் சிறந்த வேறு ரூபத்தையடைந்து காளியென்னும் பெயரால் அவதரிக்கப் போகிறாள். ஆகையால் விஷ்ணுவே நீ லக்ஷ்மியைத் துணைவியாகக் கொண்டு காத்தல் தொழிலை செய்து வா! பிரம்மாவே! நீ சரஸ்வதியைத் துணைவியாக கொண்டு எப்பொழுதும் சிருஷ்டித் தொழிலை செய்து வா! உருத்திரன் மகாகாளியை இணைத்துக் கொண்டும் சங்கார(அழித்தல்) தொழிலைச் செய்வான் மிகுந்த அறிவுடன் கூடியிருக்கிற நீங்கள் உலகங்களுக்கு இஷ்டங்களை உண்டு பண்ணுகிறவர்களாய் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர். சூத்திரர் என்னும் நான்கு வருணங்களாகவும், பிரமசரியம் கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், ஸந்நியாசமென்னும் நான்கு ஆசிரமங்களாகவும் கூடியிருக்கவும் இன்னும் பல காரியங்களுடன் கூடியிருக்கவுஞ்செய்து சுகத்தை அடையுங்கள்.
நீங்கள் இருவரும் வெள்ளி, இரத்தினம் தங்கம் மண் இவைகளில் ஏதாவதொன்றில் விளங்கும் லிங்கரூபத்தை உலகங்களுக்குச் சுகத்தை உண்டு செய்யவும் உம்மைப்போல உலகத்தோர் பூஜிக்கவும் எக்காலத்திலும் இடைவிடாத அன்புடன் பூஜை செய்யுங்கள். இச்சிவ பூஜைக்கு எவன் அந்நியாமாயிருக்கிறானோ அவனை நாம் அடைய மாட்டோம் என்று கூறி மறைந்தோர். அது முதற் கொண்டு நாராயணனும் பிரமதேவனும் சிவபூஜை செய்து கொண்டு சிவபக்தியுடையவராக இருந்தார்கள் லிங்கமே சரஸ்வதி, லிங்கமே மகாலக்ஷ்மி, லிங்கமே மகாகாளி, லிங்கமே பிரம்மாதி தேவர்கள் லிங்கமே சிவபெருமான் எவன் ஒருவன் சிவலிங்கத்தின் பிரபாவத்தை சிவ சன்னிதியில் வாசிக்கிறானோ அவனடையும் பலன்களை அளவெடுத்துச் சொல்ல முடியாது இவ்வாறு சூதமாமுனிவர் நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.
5.
 சிருஷ்டி தொடங்குதல்சூதமாமுனிவரே! சிவலிங்க மூர்த்தத்தின் வரலாற்றை நீங்கள் சொல்லக் கேட்டு மகிழ்ந்தோம் இனிமேல் சிவ பெருமான் ஜோதிவடிவமாக இருந்து அர்தர்த்தானமான பிறகு என்னவாயிற்று என்பதையும் சிவபெருமானது பெருமையையும் அவர் உலக சிருஷ்டி செய்த வகையையும் எங்களுக்கு விளக்கமாகக் கூறவேண்டும் என்று சவுனகாதி முனிவர்கள் கேட்டார்கள். உடனே சூதமாமுனிவர், தவஞானிகளே! மஹாப் பிரபுவான சிவ பெருமான் அந்தர்த்தானமான பிறகு, அன்னவடிவில் இருந்த பிரமனும் வராக வடிவில் இருந்த விஷ்ணுவும்செய்த செயல்களைச் சொல்லுகிறேன் என்றார். அப்போது நைமிசாரண்ய வாசிகள் அவரை நோக்கி, சூத புராணிகரே! எங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அதைத் தாங்கள் தான் தயவு செய்து நீக்க வேண்டும். அதாவது பிரம்மாவும், விஷ்ணுவும் முறையே அன்னவடிவத்தையும் வராக வடிவத்தையும் ஏன் எடுத்துக் கொண்டார்கள்? என்று கேட்டார்கள். அதற்குச் சூதமாமுனிவர் சொல்லலானார். அன்னப் பறவையோ ஆகாயத்தில் நெடுந்தூரம் பறந்து செல்லும் ஆற்றலுடையது மேலும் பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் அது தண்ணீரைப் பிரித்து பாலை மட்டும் பருகும் அறிவாற்றல் வாய்ந்தது ஆகையால் பிரும தேவர் ஞானம் அஞ்ஞானம் என்ற இரண்டையும்தனித்தனியாக உணர்ந்து கொள்வதற்காக அன்னப் பறவையின் வடிவை எடுத்துக் கொண்டார் ஆயினும் அவர் ஞானத்தால் விவேகத்தையடையாமல் இளைப்படைந்து திரும்பினார் வராக வடிவமோ வராககல்பம் என்ற கல்பகால நிர்ணயத்திற்காக உதித்தது மகாவிஷ்ணு எந்த தினத்தில் வராகவுருவத்தை ஏற்றாரோ, அந்தத்தினம் முதல் அந்தக் கல்பம் வராக கல்பம் என்று வழங்கலாயிற்று. அன்ன உருவத்தையும் வராகவுருவத்தையும் அடைந்த பிரம்ம விஷ்ணுவின் விஷயத்தில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் சிவ சித்தப்படியே அவர்கள் இருவரும் அவ்வடிவங்களை ஏற்றார்கள். நாசரஹிதமாகவும் நிஷ்களமாகவும் குணவிகிதமாயுமிருக்கும் சிவபெருமான் எதைச் செய்கிறாரோ, அதன்படியே அனைவரும் விளங்குவார்கள்.
முனிவர்களே! இனிமேலே நடந்தவற்றைக் கேளுங்கள் சிவபெருமான், விஷ்ணுவுக்கு அநேகவரங்களைக் கொடுத்து விட்டு பரந்தாமா! யார் உன்னை எந்த இடத்தில் பார்க்கிறார்களோ அந்த இடத்திலுள்ள அனைவருமே மோகத்திற்கு வயப்படுவார்களாக! அப்படி மோகிக்கப்படுவதாலேயே உன்னை மதிக்கவும் துதிக்கவும் செய்வார்கள். பிரமன் படைக்கும் உலகத்தில் எப்போது துக்கங்கள் உண்டாகிறதோ, அப்போது நீ அந்த துக்கத்தை நீக்கி உலகங்களைக் காப்பாய்! நாமோ ருத்திர மூர்த்தியாகி உலகங்கள் அனைத்தையும் அழிக்கும் சங்காரத் தொழிலைச் செய்வோம். இதில் சந்தேகம் வேண்டாம். விஷ்ணுவே! நீயே எம்மை தியானிக்கத் தக்கவன். நான் பற்பல வடிவங்களோடு விளங்குவதால் உனக்கும் எனக்கும் சிறிதளவும் பேதமுள்ளதாக நினைக்கக்கூடாது என்று கூறிவிட்டு பிரும தேவரையும் மகா விஷ்ணுவையும் தம்திருக்கரங்களில் பற்றிக் கொண்டு உங்கள் இருவரையும் எமக்குச் சமமாகவே உலகத்தார் தியானிப்பார்களாக நீங்கள் இருவரும் சகல மக்களுக்கும் பிராணரூபமாக இருப்பீர்களாக! பிரமனே, நாலாயிரம் சதுர் யுகங்களை ஒரு தினமாகக் கொண்ட நூறு ஆண்டுகளாகிய உன் ஆயுள்வரை, ஸத்வம், முதலிய முக்குணங்களுடன்கூடிய பிராணிகளைப் படைக்கும் தொழிலைச் செய்து வா! என்றார்.
அப்போது விஷ்ணுமூர்த்தி, மிக்க மகிழ்ச்சியுடன் சிவபெருமானை வணங்கி, கருணைக்கடலாகவும் உலகனைத்திற்கும் நாதனாகவும் இருக்கும் சிவபெருமானே, உம் கட்டளையை ஏற்றுச் செய்ய சித்தமாக இருக்கிறேன். ஆயினும் எனக்கு ஒரு விண்ணப்பம் உண்டு அதையுந் திருச்செவி சாற்றியருள வேண்டும் ஐயனே! எப்போதும் என்னால் தியானிக்கத் தக்கவராக இருக்கிறீர். உம்மைத் துதிப்பதிலிருந்து என் மனமானது க்ஷணகாலங்களும் பிரியாமல் இருக்கவேண்டும் என்னிடம் பக்தியுள்ளவனாக இருந்தும் எவன் ஒருவன் உம்மை நிந்திக்கிறானோ அவனுக்கு நீங்காத நரகஸ்தானத்தையே வாசஸ்தலமாகக் கொடுப்பேன். இது நிச்சயம், எவன் உம் பக்தனோ, அவன் என்னையும் பக்தி செய்கிறேன் என்று நான் மகிழ்ச்சியடைவேன் உம்மால் என் மகிமை வளர்ந்தோங்கியுள்ளது! என்று கூறினார். சிவபெருமானும் பெருமகிழ்ச்சியுடன் அங்கிருந்து மறைந்தார்.
பிறகு உலகங்களுக்கெல்லாம் பிதாமகனான பிரும தேவர் தாம் பெற்ற கட்டளைப்படிச் சிவத் தியானபரராய் விஷ்ணுவையும் பணிந்து அவரால் ஞானம் பெற்று படைப்புத் தொழிலைச் செய்ய இச்சைக் கொண்டார். உடனே மகாவிஷ்ணுவும் அங்கிருந்து மறைந்து போய் விட்டார். பூர்வத்தில் எந்த ஜலம் சிருஷ்டிக்கப் பட்டதோ அந்த ஜலத்தில் பிருமதேவர் அஞ்சலி ரூபமாகத் தமது வீர்யத்தை வெளியிட்டார். உடனே அந்த ஜலத்தில் இருபத்து நான்கு தத்துவங்களோடு கூடிய அண்டம் உண்டாயிற்று முனிவர்களே! அநேக வகையான ஆதாரங்களால் பிரகாசமாக இருந்த அந்த அண்டம் ஜடரூபமாக இருந்தது அதைக் கண்டதும் பிருமன் சந்தேகங் கொண்டு, விஷ்ணுவைத் தியானித்த வண்ணம் பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் செய்தார் அதைக் கண்டு மகிழ்ந்த மகா விஷ்ணு அவர் முன்னால் தோன்றி நான் முகப் பிரமனே! நீ விரும்பும் வரத்தைக்கேள் கொடுக்கிறேன். என்னால் கொடுக்கக் கூடியவற்றைத் தடுப்பதற்கு எதுவுமில்லை தடையுமில்லை! என்றார்.
அதற்கு பிரமன் அவரை நோக்கி ஸ்ரீஹரியே சிவபெருமான் உமக்கு
என்னைக் கொடுத்து விட்டபடியால்; நீர் பிரத்தியட்சமானது யுக்தந்தான் எந்தப்படைப்பை செய் என்று சிவபெருமான் எனக்குக் கட்டளையிட்டாரோ அந்தப் படைப்பை என்னால் செய்ய முடியாமல் அந்தப்படைப்பும் ஜடமாய்ப் போய்விட்டது. ஆகையால் நீர் பிராணவாயு ரூபமாய் அதற்குப் பிராணனை உண்டு பண்ணவேண்டும் என்று கூறினார்; அதைக் கேட்டதும் விஷ்ணுமூர்த்தி சிவாக்ஞையின் படியே செய்ய விருப்பங் கொண்டவராய். ஆயிரந் தலையும் ஆயிரங்காலும் கொண்ட அநந்தரூபம் வகித்தத அண்டத்தை வியாபித்தார். இவ்வாறுசூதமாமுனிவர் நைமிசாரண்ய வாசிகளுக்குக் கூறினார்.
6. பிரும சிருஷ்டிதவமுனிவர்களே! சகல பாபங்களையும்நீக்கவல்ல சரித்திரத்தைச் சொல்லுகிறேன். கேளுங்கள் என்று சூதமாமுனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார். பிருமதேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாவிஷ்ணு அந்த அண்டத்தில் பிரவேசித்ததும், இருபத்து நான்கு தத்துவங்களையுடைய அந்த அண்டம் பாதாளலோகம் முதல் சத்தியலோகம் வரையிலும் பிராணனுடையதாயிற்று. அந்த அண்டத்தினுள் மகாவிஷ்ணு பிரகாசமாக இருந்தார். தவத்தையே தனமாகக் கொண்ட பிருமதேவரோ சிலகாலம் தவலோகத்திலும் மற்றக் காலங்களில் இதர உலகங்களிலும் இருந்தார். பிறகு பிருமா தமது மனத்தால் சில பிள்ளைகளை முதலில்உற்பத்தி செய்தார் அப்பிள்ளைகளோ ஊர்த்துவ ரேதஸாக (சுக்கிலத்தை இறக்காதவர்களாக) இருந்தார்கள். நான்முக பிரமன் மீண்டும் சிலரைப் படைத்தார் அவர்கள் மிகவும் விரக்தர்களாக இருந்தார்கள் அதைக் கண்டதும் பிரம்மா கோபமும் வருத்தமும் கொண்டு அழுதார் அப்பொழுது அஞ்சாதே! என்று சிவாம்சமான உருத்திரர் தோன்றினார். அவர் பிருமாவை நோக்கி அயனே உனக்கு துக்கம் உண்டானால் அதை நான் நாசஞ் செய்வேன்.

என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி, 9840848127, 

No comments:

Post a Comment