Monday 10 September 2018

அசுத்த புண்புலால் உடம்பே மாற்றறியா சுத்த பொன்னுடம்பானதே !

அருட்பெருஞ்ஜோதி 🔥

அருட்பெருஞ்ஜோதி 🔥

தனிப்பெருங்கருணை 🔥

அருட்பெருஞ்ஜோதி 🔥


    🙏🔥 அசுத்த புண்புலால் உடம்பே மாற்றறியா சுத்த பொன்னுடம்பானதே ! 🔥🙏

🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐


     ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர்உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏


பாரொடு விண்ணாய் பரந்ததோர் ஜோதியாய் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியின் அருளொளி அணுக்கூறுகளே  ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் சிற்றொளியாய் இருந்துகொண்டு அவற்றை  இயக்கிவருகின்றது 🔥


ஆன்மாக்களின் அகமாய் விளங்கும் இந்த சிற்றொளியே, அருட்பெருஞ்ஜோதி பேரொளியின் முழுஆற்றலையும் தன்னகத்தே கொண்டதாய் விளங்குகின்றது🔥


அருட்பெருஞ்ஜோதியை உள்ளொளியாய் கொண்டு விளங்கும் ஒவ்வொரு ஆன்மாக்களும் , அருட்பெருஞ்ஜோதியின்" சச்சிதானந்த " வடிவைப் பெற்று விளங்கவேண்டும் என்பதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்நியதியாகவும் உள்ளது 🔥


சச்சிதானந்தம் என்பது,

சத்து +சித்து+ஆனந்தம்  என்று பிரிந்தும்


மெய்யறிவானந்தம் என்ற பொருளுடன் ,

மெய் + அறிவு+ ஆனந்தம் என்று பிரிந்தும்,


அதுவே

இயற்கை உண்மை,

இயற்கை விளக்கம்,

இயற்கை இன்பம் என்று பொருளுடன் விளங்குகின்றது🔥


சத்து 🌺

மெய் 🌺

இயற்கை உண்மை 🌺

**********

சத்து என்பது ,

என்றும் ஓர் நிலையாய் ,

என்றும் ஓர் இயலாய்,

என்றுமே உள்ளதுவாய்,

அனைத்து உலகங்களும் ஆங்காங்கு உணர்ந்திட முயன்றிடினும் ஒரு சிறிதும் அறிய முடியாததுவாய்,

வேதாகம முடிபுகலாலும் 

கண்டிட முடியாததுவாய்,

துரியம் கடந்த நிலையில் பெரியவான்பொருளாய் இருக்கின்றது என்று வேதங்கங்கூறுகின்ற நிலையெல்லாம் கடந்து அப்பாலாய் அதற்கும் பரமாய்  நிறைந்து விளங்குவதாய் உள்ளதுவாகும்🔥


சித்து 🌺

அறிவு 🌺

இயற்கை விளக்கம் 🌺

**********

சித்து என்பது ,

என்றும் உள்ளதுவாய்,

எங்கும் ஓர் நிறைவாய்,

என்றுமே விளங்கிடுவதாய்,

அண்டபிண்டத்தை இயக்கிடும் சத்திகள் பலவாய்,

சத்தர்கள் பலவாய்,

தத்துவம் பலவாய்,

தத்துவி பலவாய்,

படி நிலை பலவாய்,

பதநிலை பலவாய்,

மூர்த்தர்கள் பலவாய்,

மூர்த்திகள் பலவாய்,

உயிர்வகை பலவாய்,

உடல்வகை பலவாய்,

அறிவவை பலவாய்,

அறிவன பலவாய்,

நினைவவை பலவாய்,

நினைவன பலவாய்,

காட்சிகள் பலவாய் காண்பன பலவாய்,

செய்வினை பலவாய் செய்வன பலவாய்,

அண்டசராசரம் அனைத்தையும் மற்றவையும் விளக்கம் செய்வித்துக்கொண்டு ,

எல்லாம் செய்யவல்ல சித்தாகி விளங்குவதாய் உள்ளது 🔥


ஆனந்தம் 🌺

இயற்கை இன்பம் 🌺

*********

 ஆனந்தம் என்பது,

ஒன்றின் இன்பம் ஒன்றில் உள்ளது என்று கூறமுடியாததாய்,

என்றும் மாறுபடாத ஒப்பற்ற பேரின்பமுமாய்,

இது அது என வகைப்படுத்தி சொல்ல இயலாத ஒப்புவமை இல்லாத தனித்த இன்பமுமாய்,

சாக்கிரம்,சொப்பனம்,

சுழுத்தி,துரியம்,துரியாதீதம் என்ற எல்லா அவத்தைகளும் கடந்து அதன்மேல் குறைவற்ற நிறைவான இன்பத்தை கொடுத்து ஆனந்தமயமாய் விளங்குவதாய்,

புலனறிவு,மன அறிவு,ஜீவஅறிவு என்ற எல்லா அறிவுநிலைகளுக்கும் ஆதாரமாய் அதுஅதுவாய் இருந்து பேதமின்றி ஓங்கியிருந்து இன்பத்தை அளிப்பதுவாய்,

விடய இன்பங்களாய் மண் பெண் பொன் என்ற விட இச்சைகளை பொறி புலன்களால் கண்டு அனுபவிக்க உயிர்களுக்கு இன்பம் நல்குவதாய்,

இப்பிறவியிலும்,

மறுபிறவியிலும்,

பிறவிக்கடலை கடந்து முத்திநிலையிலும் ஆன்மாக்களுக்கு இன்பத்தை வழங்கி நிறைந்து விளங்குகின்றதுவாய்,

முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் என்ற அனைவருக்கும் இன்பத்தை அளிக்கவல்ல தனித்த பேரின்பமாய்,

எல்லா உயிர்களும் அவையவை அடைகின்ற நிலைக்கு ஏற்ப தனித்தனி இன்பங்களை வழங்கி வாழ்விக்கின்ற தனித்த பேரின்பமாய் உள்ளதுவாய் இருக்கின்றது🔥


மேற்கண்ட சத்து சித்து ஆனந்த வடிவை அடைந்து , அருட்பெருஞ்ஜோதி மயமாய் இருந்து,

என்றும் பேரின்பத்தை அனுபவித்துக்கொண்டு அருள்மயமாய் வாழவே ஒவ்வொரு ஆன்மாக்களின் ஆன்ம லட்சியம் ஆகும் .

இந்த ஆன்ம லட்சியத்தை அடைவதே ஒவ்வொரு ஜீவர்களின் ஆன்மலாபமும் ஆகும் 🔥


   🙏🔥பிண உடம்பு என்று தொலையுமோ ?🔥🙏

**********

         புதுவை வேலு முதலியாருக்கு 15: 2: 1859 அன்று நமது சுவாமி வள்ளல் பெருமானார் ஒரு கடிதம் எழுதுகின்றார்கள்  .


அக்கடிதம் முழுவதும் பார்க்காமல் நமது தற்போதைய பதிவிற்கு ஏற்ற வாசகத்தை மட்டும் பார்ப்போம்.........


கல்வி கேள்விகளாற் சிறந்து ,சிவ பக்தி, ஜீவகாருண்ய சாந்தம் ,அன்பு முதலிய நற்குணங்களைப் பெற்ற நண்பர்க்கு அனந்தமுறை வந்தனம் வந்தனம் வந்தனம்.


தாங்கள் இரவுபகலாக நமது ஆண்டவனை இடைவிடாமல் சிந்தித்துக்கொண்டு சாக்கிரதையோடு இருக்கவேண்டும் என்று தங்களை பிரார்த்திக்கின்றேன்🔥


"நம்மைப் பெற்ற தாயைப் பார்க்கிலும் அனந்தகோடி பங்கு நம்மிடத்தில் தயவுள்ளவன் நமது ஆண்டவன்".

ஆகலால் நமக்கு ஒரு காலத்திலும் குறைவு நேரிடாது.

இது சத்தியம்.

ஆனால் நாம் நம்பிக்கை தவாறு இருக்கவேண்டும் 🔥


தாங்கள் வரவுக்கு தக்க செலவு செய்துகொண்டிருக்க வேண்டும்.பின்பு இஷ்டப்படி எல்லாம் செய்ய நமது ஆண்டவன் அனுக்கிரகிப்பான்.

இதற்கு சந்தேகமிராது.

இது உண்மை.

இந்த உண்மை தங்களுக்கு மட்டும்தான் தெரியும் .

ஆதலால் தங்களுக்கு மட்டில் இது தெரிவித்தேன்.


"" ஐயா ! நானோ புத்தி தெரிந்த நாள் தொடங்கி இதுபரியந்தம்

"இந்தப் பிண உடம்பும் இதற்குக் கொடுக்கின்ற பிண்ட துண்டங்களும் பெருஞ்சுமையாக இருக்கின்றதே ,


ஐயோ ! இது என்றைக்கு தொலையும் என்று எண்ணி எண்ணி இளைத்துத்துன்பப் படுகின்றவனாக இருக்கின்றேன்.


இப்படிப்பட்ட இந்த நாய்க்கு பணம் என்ன செய்ய ,

என்னைக் குறித்துத் தாங்கள் பண விஷயத்தில் பிரயாசமெடுத்துக் கொள்ள வேண்டாம்.


என்று மேலும் சில செய்திகளை கூறி கடிதத்தை நிறைவுசெய்கின்றார்கள் சுவாமி🌺


இப்படி தனது பிண்டமாகிய உடம்பையும்,

உடம்பிற்கு  கூலியாகக் கொடுக்கின்ற பிண்டமாகிய உணவையும் எண்ணி வருந்தி ,

எப்பொழுது

இந்த உடம்பாகிய பிண்டமும்,

இந்த பிண்டத்திற்கு கொடுக்கவேண்டிய உணவாகிய பிண்டமும் தொலையும் என்றும் வெறுப்புடன் இருந்த பெருமான் ,


சித்தெலாம் வல்ல சுத்தசன்மார்க்க சேர்க்கையினால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தயவால் ,

தனது அசுத்த புன்புலால் உடம்பை, இத்தனை மாற்று என்று சொல்லி அளவிடமுடியாத சுத்த பொன்னுடம்பாய் மாற்றிக்கொண்டார்கள்🌺


"தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே,

ஆக்கமென ஓங்கும் பொன் அம்பலத்தான்− ஏக்கமெல்லாம்

நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் "பொன்வடிவம் தாங்கினேன்" சத்தியமாத் தான்🔥


என்று  தமது உடம்பை சுமையாக வெறுத்து ,

இந்த உடம்பு எப்பொழுது தொலையும் என்று கருதிய நமது பெருமான்,

புன்னாகக்கூடிய அசுத்த புலை உடம்பை சுத்தசன்மார்க்கம் என்ற மலப்பிணி தவிர்த்து இறவா வரம் தரும் அருள்மருந்தின் சேர்க்கையால் ,

மாற்றறியா சுத்த பொன்னுடம்பாய் மாற்றிக்கொண்டேன் ,

என்று சத்தியம்செய்து கூறுகின்றார்கள் நமது பெருமான் 🔥


தாம்பெற்ற இந்த பெரும்பேற்றை இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவர்களும் பெற்று அழியாநிலையில் தம்மைப்போலவே இவ்வுலகில் வாழ்ந்திட வேண்டும் என்ற தனிப்பெருங்கருணையினாலேயே ,

இவ்வுலகவர்கள் அனைவரையும் சுத்தசன்மார்க்கத்தில் சேர்ந்து வாழ்வுபெற பெருமான் கருணையோடு அழைக்கின்றார்கள் 🔥

நாமும்

சன்மார்க்கம் சார்வோம் 🌺

சாகாக் கல்வியைப் பயில்வோம்🌺

...நன்றி🙏

...வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி!🙏

...பெருமான் துணையில் 🙏

....தயவுடன் வள்ளல் அடிமை 🙏

.... வடலூர் இரமேஷ்

No comments:

Post a Comment