Saturday, 22 September 2018

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருப்பதிகம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருப்பதிகம் !எனதுகுடி காப்பாய் நீயே அனுமானே !
உள்ளம் உருக, விழிசெருக, உடலம் எங்கும் களிபரவ,
வள்ளல் நாம ஜெபத்தாலே வழியும் கண்ணீர்த் துளிபெருக
மெல்ல இருந்த பெருமானே! வேண்டித் தினமும் தொழுவேனே!
அள்ளி வழங்கி எனதுகுறை அனைத்தும் தீர்ப்பாய் அனுமானே!
பொறியும் புலனும் போனபடிப் போகும் விலங்குச் சாதியிலே
தறியா தலையும் காற்றினுக்கே தனயன் ஆனாய் மேருவிலே!
நெறியும் நிலையும் தவறாமல் நின்றாய்! யார்பால் அதுகற்றாய்?
அறியேன் உன்போல் ஒருவனையே அருள்வாய் ஐயா அனுமானே!
படிகம் போலும் பால்போலும் பரமா, உனது நிறம் விளங்கும்!
வெடிபோல், கோடை இடிபோல் விம்மி உனது குரல் முழங்கும்!
அடி-பா தாளம் அதன்கீழே! அணிமா முடியோ விண்மேலே!
வடிவாய்க் காட்சி தருவானே! வணக்கம் வணக்கம் அனுமானே!
ஆயுள் வளரும் உன்னாலே ! அழகும் வலிவும் உன்னாலே !
பாயும், நோயும், பல்பகையும் பறந்து போகும் உன்னாலே !
கோயில் எனது நெஞ்சகமாம் ! கூறும் கவிதை மந்திரமாம் !
தேயம் தழுவும் புகழோனே ! சித்தம் இரங்காய் அனுமானே !
அன்னை அருளால் இவ்வுலகில் அழியா திருக்கும் பொற்பதம் !
மன்னன் அருளால் அவ்வுலகில் மலரோன் நிகராய்ப் பிரம்மபதம் !
தன்னை நம்பும் அடியார்க்குத் தலைமை தருதல் உனது குணம் !
என்னை ஆளும் பகவானே ! இன்றே அருள்வாய் அனுமானே !
ஜென்மச் சனியால், அட்டமத்தில் சீறும் சனியால், கண்டகனாம்
வன்மச் சனியால் நீச்சமுடன் வக்ரச் சனியால் உனையடைந்தோம் !
கன்மச் சனியின் பகைவிலுக்கு கலங்கும் குடியை நிலைநிறுத்து !
பொன்னைப் பொழியும் கையோனே ! போற்றி போற்றி அனுமானே !
இழந்த பொருளை மறுபடியும் எய்த வைப்பாய்; பாவாலே
உழர்ந்த காதல் தம்பதிகள் ஒன்று சேர உதவிடுவாய் !
அழிந்த எதையும் புதிதாக ஆக்கித் தருவாய் நல்வாழ்க்கை !
விழைந்து நாளும் பணிவேனே ! வெல்க வெல்க அனுமானே !
இணையா திருந்த இதயங்கள் இணையும் வண்ணம் அணைகட்டி
துணையாய் வந்த தோள் தொட்டு ! சுமையை வாங்கக் கைநீட்டு !
மணிவால் கொண்டு பகைகட்டு ! வருத்தம் போக்க நலமாக்கு !
கணமும் பிரியா(து) எனதுகுடி காப்பாய் நீயே அனுமானே !
ஸ்ரீ ராமஜெயம் !
No automatic alt text available.

No comments:

Post a Comment