Monday, 10 September 2018

சித்தர்களின் “காயகற்பம்” சாத்தியமா?

சித்தர்களின் “காயகற்பம்” சாத்தியமா?


அண்ணாமலை சுகுமாரன்
அன்பே சிவம்!
அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜோதிர்கமைய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
என்கிறது பிருகதாரண்யக உபநிஷத்.
[இறைவா!] அஞ்ஞானத்திலிருந்து என்னை மெஞ்ஞானத்திற்கு இட்டுச்செல்!
இருளிலிருந்து என்னை ஒளிக்குச் இட்டுச்செல்!
இறப்பிலிருந்து என்னை  இறப்பின்மைக்கு இட்டுச்செல்!
ஓம், அமைதி, அமைதி, அமைதி!
இவ்வாறு பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியமக்களின் வாழ்க்கையின் உயரிய  லட்சியமாக மரணமில்லாப் பெருவாழ்வையும் அதற்கு வழிவகுக்கும் கலையான “சாகாக் கலை”, அதைத்தரும் அருமருந்தாக காயகற்பம் எனும் அறிவையும் தேடிவந்துள்ளனர்.
காயகற்பம் ஒரு பொருளல்ல அது ஒரு அறிவு.
உயிரையும் உடலையும் கூறுபடுத்துபவன் என்ற பொருளில் கூற்றுவன் எனும் சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது  ஆனால் யோகம் என்பதுவோ உயிரையும் உடலையும் இணைக்கச் செய்திடும் முயற்சி.
பிறப்பாரும் சாவாரும் என்றும் உளர் – நான்மணிக் கடிகை
மடங்க துண்மை மாயமோ வன்றே – புறநானூறு
கடுங்கால் நெடுவெளி இடுஞ்ச்சுடரென்ன
ஒருங்குடனில்லா உடம்பிடை உயிர்கள் -சிலப்பதிகாரம்
பிறந்தார் மூத்தோர் பிணி நோயுற்றார் இறந்தா ரென்கை இயல்பே – மணிமேகலை
சாதலும் பிறத்தல் தானுந் தம்வினைப்பயத்தினாகும் -சிந்தாமணி
இறப்பு எனும் மெய்மையை இம்மை யாவர்க்கும்
மறுப்பு எனும் அதனின் மேல் கேடுமற்று உண்டோ? – கம்பர்
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று எய்த்தி ளைப்பதன் முன்னர் அடைமினோ – நம்மாழ்வார்
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே. “    திருமந்திரம் – 152
பாதுகாப்பு அரணாக இருந்த சுவாசமாகிய பந்தல் பிரிந்து போனது. பண்டங்களைக் கோர்த்துவைத்த கயிறு அறுந்ததுபோல் உடலின் செயல்களைக் கோர்த்த உயிர் அறுந்தது. உடலின் ஒன்பது வாசல்களுலும் ஒரு சமயத்தில் அடைத்துக் கொண்டன.  வேதனைகள்நிறைந்த நேரம் நெருக்கித் தொடர, அன்பு கொண்ட மனிதர்கள் அழுதுவிட்டு விலகிப் போனார்களே. என்கிறார் திருமூலர்
இவ்வாறு மக்கள் பிறந்தனர்; பிறந்து சாலப்பெருகினர் பெருகிப் பின்னை இறந்தனர், இதுவே உலகின் இயல்பு என இலக்கியங்களும், இதிகாசங்களும் ஒன்றுபோல் கூறுகின்றன.  ஆயினும் மரணம் தவிர்க்கும் வழிமுறைகளும் மரணம் தவிர்த்த மனிதர்களின் நாமங்கள் வரலாற்றிலும், வழக்கிலும் பண்டைக்காலம்தொட்டு இருந்தே வந்திருக்கின்றன.
அயராத பக்தியினால் சாகாவரம் பெற்று சிரஞ்சீவியான மார்கண்டேயனைப் பற்றி அத்தனை இதிகாசமும் உரைக்கின்றன.  முதுமையைத் தவிர்த்து இளமையைப் பெற்ற யயாதி, மற்றும் என்றும் சிரஞ்சீவிகள் என புராணங்கள்கூறும் அந்த ஏழு சிரஞ்சீவிகள், அனுமன், விபீஷணன், மகாபலி, மார்க்கண்டேயர், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர்  ஆவார்கள்.
மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதர்களே இல்லை, சாகாதிருக்க ஆசைகொள்ளும் மனிதன், வந்து பிறந்த வேலைமுடியும் மட்டும் தன் விருப்பப்படி வாழவும் வழிவகுத்துத் தரும் சாகாக்கலையை வாழையடி வாழையாக வழிவழியாக வந்திருக்கும் தமிழ்ச் சித்தர்கள் மட்டுமே முழுவதும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
சாகாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க் கல்வி வகுத்தறி நீ கல்மனமே”
– இடைக்காட்டுச்சித்தர்
கல்வி என்பதுவே சாகாகலையை அறிவதுதான் என இடையேவந்த இடைக்காட்டுசித்தர் கூறுகிறார்.
சாகக்கலை தரும் மரணமில்லாப் பெருவாழ்வு என்பது மரணத்திற்குப் பிறகு உலகியல் கடந்த ஒரு பெரிய வாழக்கையைக் குறிக்கிறது.  மரணமில்லாப் பெருவாழ்வு என்பதன் உண்மைப் பொருள் பிறவாமை எனும் பேரானந்த சுகம்தரும் வழியைப் பெறும்வகையில் நமக்குத்தரப்பட்ட இந்த வாழ்வில் வாழ்ந்து இனி பிறவாமல்  இருக்கும் வழியைக் காணவேண்டும்.  பிறவாநிலை அடைதலே ஆன்மப் பயணத்தின் இறுதி நிலை.
“இக்காயம் நீங்கி இனியொரு காயத்தில்
புக்கு பிறவாமல் போம்வழி நாடுமின்”
என்று கூறி தெளிவு படுத்துகிறார் திருமூலர்.
“வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்
அஞ்சி  உன்னையடந்தேன் ஐயா பராபரமே”
எனும் தாயுமானவர், சிவபெருமான் மார்க்கண்டேயனுக்கு என்றும் மாறாத இளமையும்,சாகாத சிரஞ்சிவித்துவத்தையும் அளித்ததை அறிந்தே அவரைச் சரணடைந்ததாக வேறு பாடலில் குறிப்பிடுகிறார்.  இவ்வாறு சாகாவரம் பெறுவதற்காக கூற்றுவனிடம் இருந்து தங்களைக் காக்கவேண்டி சமயப்பெரியோர்கள் அனைவரும் இறைவனை வேண்டுகின்றனர்.
பட்டினத்தார்,
“சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ” என்று புலம்புகிறார்
அப்பர், சம்பந்தர், சுந்தரர், திருமூலர், ஆழ்வார்கள் அத்தனை பேரும் கூற்றுவனிடம் இருந்தும், இறப்பின் அச்சத்தில் இருந்தும் காக்கவேண்டி நூற்றுக்கும் மேட்பட்ட பாடல்கள் பாடி  இறைவனிடம் இறைஞ்சுகின்றனர்.
 ஆரோவில் எனும் சர்வதேச ஆன்மீக நகரம் ஏற்படுத்திய அன்னையின் சாசனத்தில் மூன்று குறிக்கோள்களைக் குறிப்பிடப்படுகின்றன. அவை,
மூப்புறாத இளமை, முடிவுறாத கல்வி, இடையறாத முன்னேற்றம் ஆகும்.
இவ்வாறு மூப்புறாத இளமை ஒரு சர்வதேச வேண்டுகோளாக இருந்து வந்திருக்கிறது.  மகாகவி பாரதியும்,
சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி!” என வேண்டுகிறார்
ஆனால் இந்த கோரிக்கைகள் அத்தனையும் வேண்டுதலேதவிர சாகாக்கலைக்கு வழிகள் ஒன்றும் அல்ல.
சித்தர்கள் ரசவாதக்கலையை வகர வித்தை எனவும், சாகாக்கலையை தகர வித்தை என்றும் கூறுவர்.
விட்டகுறை வந்ததென்றால் தானே எய்தும்
விதியில்லார்க்கு எத்தனை நாள் வருந்தினாலும்
பட்டுமனம் மாய்ந்ததல்லால் வேறொன்றுமில்லை
சாவாதிருந்திடப் பால் கற – சிரம்
தன்னில் இருக்கும் பால் கற
வேவாதிருந்திடப்  பால் கற- வெறு
வெட்டவேளிக்குள்ளே பால் கற – இடைக்காடர்
“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பா றன்று.”
சாகாத மருந்தாகவே இருந்தாலும், விருந்தினராக வந்தவரை வெளியே இருக்கவைத்துவிட்டு, அதனைத் தான்மட்டும் உண்பது விரும்பத்தக்க பண்பாடல்ல. என்கிறது அந்த வள்ளுவரின் குறள்.
விருந்தின் மேன்மையைத் தெரிவிப்பதைவிட இந்தக் குறளில் இன்னும் ஒரு அழுத்தமான செய்தி உண்டு.  சாவா மருந்து எனும் சாக்காட்டைத் தடுக்கும்.  மருந்து என்று ஒன்று இருப்பதாக அந்தக்கால அதாவது சுமார் 2000 வருடம் முந்தைய தமிழ்ர்களுக்கு, ஒரு நம்பிக்கை நிச்சயமாக இருந்திருக்கிற்து…
நம்பிக்கை என்று மட்டும் இல்லாமல் அப்படி ஒரு மருந்தும் வழக்கத்தில் இருந்திருப்பதாகவே வள்ளுவரின் எடுத்துக்காட்டு தெரிவிக்கிறது.  உடலை பிணி, மூப்பு, திரை, நரை ஏற்படாமல் உடலை அழியாத கற்ப தேகமாக மாற்றும் வழிமுறைகளை நம்நாட்டுச் சித்தர்கள் பலர் அறிந்திருந்தார்கள்.
கற்பம் என்றால் ஊழிகாலம்வரை என்றுபொருள்.  உலகின் இறுதிவரை வாழவைக்கும் மருந்துகளே கற்பமருந்துகள், சாவாமருந்துகள் எனப்பட்டன.  அவற்றை கண்டறிந்த சித்தர் பெருமக்கள், தாம்மட்டும் அறிந்ததைத் தனக்காகமட்டும் பயன்படுத்தியதல்லாமல் அவற்றை மற்றவரும் அறிந்துக்கொள்ள கருணையுடன் கூறியும் வைத்தனர்.  ஆயினும் தமது பாடல்களில் அவற்றைச் சற்று மறைபொருளாவே கூறிவைத்தனர்
இவ்வாறு கற்பமாக உடலை மாற்ற இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளையே பெரும்பாலும் உபயோகித்தனர்.  ஒரு வகையில் உலகில் கிடைக்கும் அனைத்துத் தாவரங்களும் எதோ ஒரு மருத்துவ குணம் கொண்டதாகவே இருக்கின்றன.  எந்த ஒரு இலையும், வேரும் உணவாக உட்க்கொள்ளும் கீரை என அழைக்கப்படுகிறது. மருந்துக்காக அதையே தகுந்த பக்குவத்துடன் உட்கொள்ளூம்போது அதுவே மூலிகை என்று அழைக்கப்படுகிறது..
உடலை அழியாத கற்பதேகமாக மாற்றும் வல்லமைகொண்ட மூலிகைகள் கற்ப மூலிகைகள் எனப்பட்டன.   இறப்பு என்பது தன் வசப்படவேண்டும் என நம்நாட்டு சித்தர்கள் உறுதி எடுத்தனர்.
காயம் என்பது உடலைக் குறிக்கும். சித்தி என்பது சாதனை. உடலைச் சிதையாதபடி நரை, திரை, மூப்பினின்றும் — முடிந்தால் இறப்பினின்றும் பாதுகாத்துக்கொள்ளும் சாகாக்கலையுடன் காயசித்தி தொடர்புடையது.   சாவுக்கு ஏதுவான உடலை சாவை வெல்வதற்கு ஏதுவாக்கியது ஒன்றே சித்தர்களின் அருஞ்சாதனை எனலாம்.
திருமூலர்

திருமூலர், இம் மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார் எனப்படுகிறது.  காயசித்தி பெறுவதற்கு ஒருவன் குருவிடமிருந்து 10 விதமான தீட்சைகளைப் பெறவேண்டும் எனக் கூறப்படுகின்றது.  உடலை தூய்மை அடையச் செய்யும் சுத்திமுறைகளே தீட்சைகள் ஆகும்.
மயிர்க்கால் வழியே துர்நீர்களை வழியச் செய்தல்,
வாத பித்த ஜய குற்றங்களை நீக்குதல்,
கெட்ட குருதியை கசியச் செய்தல்,
உடல் சட்டையை கழற்றுதல்,
மயிர் கறுத்தல்,
பஞ்சமுதம் வசமாதல்,
சுழுமுனை திறந்து தூரதிருட்டி வரமாதல்,
உடல் ஒளிவடிவமாதல்’      
என்பனவே அவை.
விந்துதாரணம் செய்வதால் பிராணன் அழியாது பலன் மிகும். சக்தி உண்டாகும். ‘விந்து கெட்டவன் நொந்து சாவான்,’ என சித்தர் பாடல் கூறுகிறது.  உடம்பில் ஒரு துளியாவது விந்து இருக்கும்வரை உயிர் உடலைவிட்டு நீங்காது என்பது சித்தர் கொள்கை.
சாகாக்கலை சாத்தியமென்று சித்தர்கள் அனைவருமே கூறுகின்றனர்.  இவ்வாறு வாழ வழிவகுக்கும் கற்ப மூலிகைகளின் ஒரு பட்டியலை — பல்வேறு சித்தர்கள் பாடல்களில் இடம்பெற்றவைகளின் சிலவற்றை இங்கு காண்போம்.
கேளென்ற கருநெல்லி, கருத்த நொச்சி
கேடியான  கருவீழி, கருத்த வாழை
காளென்ற கரிய கரிசாலையோடு
கருப்பான நீலியொடு  கரியவேலி
கோளென்ற  கரூமத்தைத்  தீபச்சோதி
கொடுதிரணச் சோதி  சாயா விருட்சம்
ஏளென்ற  எருமைகனைச்சான்  ரோம விருட்சம்
ஏற்றமாம்  சுணங்க விருட்சம்  செந்திரா
இதில் போக முனிவர் நாற்பத்தைந்து (45) கல்ப மூலிகைகளைப்பற்றிக் கூறியிருக்கிறார். இவற்றை முறையாக உட்கொண்டால் மனிதனுடைய வயது ஏறினாலும் வாலிபம் குன்றாது, முடி நரைக்காது, தோல் சுருங்காது, உடல் மூப்படையாது.  எனவே சித்தர்கள் தாம் அடைய வேண்டிய நிலையினைப் பெற முடியும்.
அழுகணிச் சித்தர் பாடல்கள் முப்பாத்திரண்டிலும் வாசியோகம், காயசித்தி முறைகளைகப்பற்றிக் கூறப்படுகிறது.  இத்தகு காயகல்ப முறையினால் ஒரு இலட்சம் ஆண்டுகள்வரை வாழலாம் எனவும் நம்பினர்.
தாயுமானவர் பாடலில் இவ்வாறாக காயகல்பம் புசித்து நீண்டகாலம் வாழ்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு மனம் இரங்கிப் பாடிய பாடலாக,
நெடுநாள் இருந்த பேரும்  நிலையாக வேகினும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவார்,   என்கிறார்.
காயகல்பம் உண்டவர்களுக்கு உடம்பில் எதுவித தீங்கும் ஏற்படாது என்பதனையும் காயகல்பம் உண்டாவதை அறிவதுமான பாடலாக,
தித்திக்கும் இலட்சணம் தான் பிரண்டை முற்றி  செய்த பின்பு என்மக்காள் கேளு கேளு….’
எனும் பாடல் அமைகிறது. பாம்பாட்டிச் சித்தரும் தான் கற்பம் உண்டு பெற்ற பயனை, ‘காலனென்னும் கொடிதான கடும் பகையை நாம்கற்பமென்னும் வாளினாலே கடந்து விட்டோம்…’
என்று கூறுகிறார்.
“இத்தனை சாத்திரம் தாம் படித்தோர்
செத்தார் என்றாலுலகத்தோர் தாம் சிரிப்பார்
செத்துப் போய்க் கூடக் கலக்க வேண்டும்
அவன் தேவர்களுடனே சேர வேண்டும்’”
என்று கொங்கண முனிவரும் கூறுகின்றார்.
ஒளவையார் தனது ‘ஒளவைக் குறள்’ என்ற நூலில் சாகாக்கலை தொடர்பாக பல கருத்துக்களைக் கூறியுள்ளார்.
‘அகம் புறம் போராப் பொருளை அறியில்
ஊகம் பல காட்டும் உடம்பு’        
இவ்வாறு சாகாக்கலை தொடர்பாக பலரும் பாடியுள்ளனர்.
இந்த மனித உடம்பும், மனித வாழ்வுமே தெய்வத்தைக் காணுவதற்குரிய ஒப்பற்ற சாதனங்கள் எனத் தெளிய வேண்டும். இந்த உண்மையைத் திருமூலர்,
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.
என்று குறிப்பிடுகிறார்.
நிறைவாகககூறின், மரணத்தை வெல்வது சித்தர்களின் முக்கிய பண்பாடு. ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவதும், உறுமாறுவதும் சித்தர்கள் சாதனையில் முக்கியமானவையாகும். சித்தர்கள் தங்கள் சாதனையை காயசாதனை  என்றனர். அதன் மூலம் காயசித்தி எனும் தேகத்தை பூரணத்துவம் அடையச் செய்வது அவர்கள் நோக்கம்.
மரணமிலாப் பெருவாழ்வு பற்றி பெருமானாரின் சாற்றுக் கவிகள்.
“கற்றவரும் கல்லாடும் அழிந்திடக் காண் கின்றீர்
கலங்க வரும் மரணமும் சம்மதமோ?”
“இற்றினைத் தடுத்திடலாம் என்னோடு சேர்ந்திருமின்
என்மார்க்கம் இறபொழிக்கும் சனமார்க்கந்தானே”
“மரணமிலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கிறேன்
இறந்தாரை எடுத்திடும் போதரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெரும்வரம் நீர் ஏன் அடைய மாட்டீர்?”
“சிறந்திடும் சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடும் காண்.”
“சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில்
சாகா வித்தையை கற்றனள் தோழி”
என்றே கூறுகிறார்,
இத்தனை சான்றுகள் இருந்த போதிலும் — எத்தனையோ சித்தர்கள் – இன்றைய வள்ளலார் வரை கூறியபோதும் — அவை ஏன் சாகாக்கலை எனும் சாதனையாக மாறவில்லை என்பதற்கு — இது ஏன் சாத்தியமாகாமல் இருக்கிறது என்பதற்கு –குறை என்னமோ நம்மிடமேதான் என எண்ணத் தோன்றுகிறது,
ஆழமான ஈடுபாடு இன்மை, தக்க குருவிடம், அவர்கள் தந்த குருநூல்களில் நம்பிக்கையின்மை.
தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன, ஆயினும் கொள்வார் இல்லாமையால் அதை நிரூபணம் செய்யயிலவில்லை.  செய்தவர்களோ நம்முடன் இருப்பதில்லை.  எனவே கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் எனும் நிலைமையே இருக்கிறது.
ஆயினும் சித்தர்கள் தந்துள்ள சான்றுகள், தந்துள்ள முறைகள், சாகாக்கலை சாத்தியமே என நினைக்கத் தோன்றுகிறது.

***
“சாகாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க் கல்வி வகுத்தறி நீ கல்மனமே”
                                  – இடைக்காட்டுச் சித்தர்
இறப்பை வெல்வதற்காகச் சித்தர்கள் கூறியிருக்கும் அந்த மெய்க்கல்வியைப் பற்றி வரிசையாகக்காண்போம்:
உலகம் முழுவதுமே இன்று அறிவியலார் அறிவியல் எனும் விஞ்ஞானம் மூலமாகப் புலன்களால்  நாம் உணரும் உலகம்பற்றிய பல அதிசயங்களையும், அற்புதங்களையும் போட்டி போட்டுக்கொண்டு கண்டுபிடித்து மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்; ஆனால் இத்தனை கண்டுபிடிப்பையும் கண்டுபிடித்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் இயற்கையின் விதிகளையும், பருவகால மாறுபாட்டினையும், சூரிய சந்திர இயக்கங்களினால் மனிதவர்க்கமும், இதர உயிரினங்களும் ஓர் ஒழுங்கான சட்டதிட்டத்திற்குக் கட்டுப்பட்டு, ஒரு விதியுடன் இயங்கிவருவதை மாற்றியமைக்க முடிவதில்லை.  பஞ்சபூத சக்தியே தொடர்ந்து நீடித்து, இந்த உலகத்தையும் உயிர்களையும் இயக்கி வருகிறது. ஆகாயத்தையும்  நிலத்தையும் உயிராகக்கொண்டு, காற்று, தீ, நீர் இவைகளை உடலாகக்கொண்டு உருவானதே இந்தப் பிறப்பு என்கிறது, சித்தர்களின் அறிவு.
sattaimuni
சட்டைமுனி
வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு
                                         – சட்டைமுனி
‪பிரபஞ்சம் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தும், ஒன்றை ஒன்றும் கட்டுப்படுத்தியும் முறையாக இயங்கினால் மட்டுமே இந்தப் பிரபஞ்சம் நிலைக்கும். பஞ்சபூத சக்திகளுக்குச் சாவும் இல்லை, மூப்பும் இல்லை.  ஆனால், அதே பஞ்சபூத சக்திகளால் உருவான உயிர்க்குலங்கள் முழுவதும் மாறி உருக்குலைந்து, அச்சுமாறிப் பிறப்பு இறப்புகளைச் சந்திக்கின்றன. இந்த அடிப்படை ஆதாரவிதிகளை  பேரறிவுமிக்க விஞ்ஞானிகளாலும் மாற்றியமைக்க முடிவதில்லை.
“கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறத்திங்கு
உள்ளக்கருத்தை உணர்ந்திருப்புது எக்காலம்?”
பத்திரகிரியார்
என பத்திரகிரியார் ஏங்கியப்படி, அத்தனை அறிவியல் மேதைகளாலும், விஞ்ஞானிகளாலும் நமது மனிதகுலத்தின் நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு இவைகளைத் தடுக்கவோ, தவிர்க்கவோ இன்றுவரை இயலவில்லை;  ஆனால், இவை அத்தனைக்கும் இது ஏன் எனக் கேள்வி எழுப்பி, அந்தக் கேள்விகளுக்கு விடை சொன்னவர்களும், நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு இவைகளுக்கு எதிராக இயங்கும் வழியைக்கூறி, அவைகளை  வெற்றி கொண்டவர்கள் நம் தமிழ்ச் சித்தர்களே! இவ்வாறு கூறுவது  ஏதோ நம்மை  நாமே நமக்குள் பாராட்டிக்கொண்டு, தன்னை வியந்து தருக்கிய குற்றத்திற்கு ஆளாவதற்கு அல்ல.
இன்றுவரை உரிய பாராட்டுப் பெறாமல், நம்மாலேயே நமது பாரம்பரிய அறிவு பழிக்கப்பட்டு, உதாசீனம் செய்யப்பட்டு வரும் இத்தகைய நிலை எந்த இனத்திலும் இல்லாதது.
நம்மிடையே மட்டும்தான் சித்தர்கள் இருந்தார்கள் என்பதில்லை;  சித்தர்கள் எனப் பாராட்டப்பட்ட அறிஞர்கள் உலகின் பலபகுதிகளிலும் இருந்தார்கள்.
அவர்கள் தக்கவாறு உரிய பாராட்டுகளையும் பெற்றனர். பாரசெல்ஸ் போன்று பலரைப்பற்றி பிறகு விரிவாகக் காணலாம்.
 இந்த ஐம்பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தும், ஒன்றை ஒன்றும கட்டுப்படுத்தியும் முறையாக இயங்கினால்மட்டுமே இந்தப் பிரபஞ்சம் நிலைக்கும். மாறாக, ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகமானாலோ, குறைந்தாலோ பிரபஞ்சம் சமநிலையை இழக்கும். உதாரணமாக, பஞ்சபூதங்களில் நெருப்பு குறைவாக இருந்தால் நீர் அதனை அணைத்து விடும்; நீர் குறைவாக இருந்தால் நெருப்பு அதனை ஆவியாக்கி விடும்; நெருப்பு குறைவாக இருந்தால் காற்று அதை அணைத்து விடும், அதே நெருப்பு அதிகமாக இருந்துவிட்டால் காற்று அதனை ஊதி ஊதி அதிகமாக்கும்.
இத்தகைய ஐம்பூத சக்திகளைத் தங்களது இயற்கைச் சக்திகளாக மாற்றிக்கொண்டு, இயற்கையின் இயக்கங்களையும் படைப்பாற்றல்களையும், தானே கைக்கொள்வதுபோன்ற சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தமிழ்ச் சித்தர்களே உரிமைபெற்றோர் ஆவர். இத்தகைய அறிவியலால், மூப்பை வெல்லவும், இளமையைத் தாங்கள் விரும்பும் காலம்வரை நீடிக்கவும், சாவைத் தங்கள்  விருப்பம்போல் ஒத்திப் போடவும் சித்தர்கள் ஆற்றல் பெற்றனர்.
இத்தகைய அறிவே ”சாகாக்கலை” எனப்பட்டது;இ  தை அளிக்கவல்ல மருந்து மற்றும் முறைகள் ”காய கல்பம்” எனப்பட்டன. காய் என்றால் முதிராதது, பழுக்காதது என்று பொருள். கனி என்றால் பழுத்தது, இளகியது என்று கொள்ளலாம்;எனவே காயம் என்றால் என்றும் பழுக்காத நிலை, பழுக்காத காய் எப்படி கெட்டியாக, உறுதியாக இருக்குமோ, அவ்வாறு காயத்தை அழிவற்ற தன்மையில் கல்போல் ஆக்கவேண்டும் என்று கொள்ளலாம்.
காயகற்ப விதிகளை சித்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வாரு விதமாகப் பலவிதத்தில் கூறுகிறார்கள். மூலிகை முறை, தாது உப்புகள், உலோகங்கள், நவபாஷாணங்கள் எனப் பலமுறைகள் காயகல்பம் அல்லது காயகற்பங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கற்பத்தையுண்டால் காயமழியாது,
கற்பத்தினாலே காணலாம்  கயிலையை,
கற்பத்தினாலே காணலாம்  சோதியை
என்கிறது சட்டமுனி சூத்திரம்.
காயகற்ப முறைகளுக்கு முழுமையாகப் போகுமுன், சித்தர்களின் காயகற்பச் சிந்தனைகளை இன்னும் சற்று விரிவாகத் தெரிந்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
சித்தர்கள் அனைத்துப் பொருட்களையும் தூலம், சூக்குமம், காரணம் என மூன்றாகப் பிரித்து, அந்த பொருளின் தன்மைகளை முடிவு செய்தனர்.
பஞ்ச பூதங்களிலும் தூலம், சூக்குமம் என்று அசைவது, அசையாதது ஆகிய நுட்பத்தன்மையை கண்டறிந்தனர்.
மனித உடலைத் தூலம் என்றும், மனத்தைச் சூக்குமம் என்றும், ஆன்மாவைக் காரணம் என்று கண்டறிந்து, வகைப்படுத்தினர்.
அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போது
என்று தாம் கண்டறிந்த முடிவான உண்மையையும் நமக்கு அறிவித்தனர்.
‘காய கல்பம் ‘ ஏன் தேவை?
உடம்பிலே பஞ்சபூதங்கள் தூலமாகவும், சூக்குமமாகவும் கலந்துள்ளன. இந்த கூட்டுறவுக்குக் காரணமாக இருப்பது ஆன்மாவாகும்.
தேகி, தேகம் என்பது, இன்ப-துன்பத்தை விதிப் பதிவுப்படித் துய்ப்பதற்கான கருவி ஆகும்;  என்றுமே இறவா மெய்ப்பொருள் ஆன்மா — அதன் உண்மை நிலையை உணர்ந்து அதன் நிலையில் நிற்பதுதான் மெய்யறிவு. அத்தகைய மெய்யறிவை அடையும்வரை, இறையின் உண்மைத்தன்மையில் கலந்து, அழியாத உண்மை நிலையை அடையும்வரை தேகத்தைக் காத்து, மெய்யறிவு அடையும் வரை தேகத்தை அழியாமல் வைக்கவே ’காயகல்பம்’ தேவைப்படுகிறது.
panja bhutas பஞ்சபூதங்களில் பிருதிவி எனும் மண்ணின் கூறு ஒன்றரை பாகம்;  அப்புவின் – நீரின் கூறு ஒன்றேகால் பகுதி இருக்கிறது.  நெருப்பின் கூறு தேகத்தில் ஒருபாகம் இருக்கிறது. காற்றின் கூறு முக்கால் பகுதியாக இருக்கிறது; ஆகாயத்தின் பகுதி அரைப் பகுதியாக இருக்கிறது
இவ்வாறு 1 1/2: 1 1/4: 1: 3/4: 1/2: = 5  பாகங்களாக உடம்பைப் பஞ்சபூதங்கள் தங்கள் சக்திகளாக பங்குகொண்டன.
இத்தகைய பஞ்சபூதத்தின் கூட்டுறவு ’பஞ்சீகரணம்’ எனப்படும். பஞ்சீகரணம் பற்றியும், அதன் கூட்டுப் பற்றியும் முழுமையாக அறிந்தால் உடம்பை ஒளியுடம்பாகவும், பிரணவ வடிவாகவும் மாற்ற இயலும் என்பது சித்தர்களின் ஞானம்கூறும் வழி.
நன்றி 

1 comment: