Monday, 8 October 2018

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் அத்தியாயம்:03 நினைவாற்றல்.

அத்தியாயம்:03 நினைவாற்றல்.

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் நூலை முன் வைத்து……

நமது அன்றாடச் செயல்களைச் செய்வதிலிருந்து, மிகப்பெரும் சாதனைகள் புரிவது வரைக்கும் நினைவாற்றல் மிக முக்கியமானது.
இந்த நினைவாற்றலைப் பற்றியே இந்தப் பகுதி விளக்குகிறது. இப்பகுதியில் நீண்டகால நினைவாற்றல் மற்றும் நிகழ்கால நினைவாற்றல் என இரண்டு பிரிவுகள் விளக்கப்பட்டுள்ளன.

1.நீண்டகால நினைவாற்றல்:

நீண்ட கால நினைவாற்றலுக்கு எல்லையேயில்லை. பெயர் குறிப்பிடுவதுபோல ஒரு தகவல் அல்லது நிகழ்வு நீண்ட காலத்துக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் நினைவில் நிலைத்து நிற்கிறது. பொருத்தமற்ற முறையில் நினைவாற்றலைப் பயன்படுத்துவதால் அதன் அளப்பரிய திறமைகளை நாம் வீணாக்குகிறோம். நினைவாற்றல் எப்படி வேலை செய்கிறது என்பதை உளவியாலாளர்கள் பல்வேறு முறையில் உழைத்துக் கண்டுபிடித்துள்ளனர். அவர்களால் முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பல சுவையான தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

நீண்ட கால நினைவாற்றலில் மூன்று விஷயங்கள் தொடர்பு கொண்டுள்ளன.
அவை,
1.தகவல்கள்,
2.பதிவு/ கற்றல்,
3.ஒழுங்குபடுத்தப்படுவது ஆகும்.

நீண்டகால நினைவாற்றல் வெளிப்படையாக விவரிக்கக்கூடியவை மற்றும் செய்முறையால் மறைமுகமாக வெளிப்படுத்தக்கூடியவை என்று இரண்டு வகைப்படுத்தலாம்.

A.வெளிப்படை நீண்டகால நினைவாற்றல்:

எவற்றைப் பற்றியெல்லாம் நம்மால் பேசமுடியுமோ அவை வெளிப்படையானவை அல்லது விவரிக்கக் கூடியவை ஆகும்.
இதனை இரண்டு வகைகளில் வகைப்படுத்தலாம். அவை

அ. கருத்துகள், தகவல்கள், கோட்பாடுகள், நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட செமான்டிக் நினைவாற்றல்
எ.கா. முகலாய மன்னர்களின் பட்டியல், மாநிலத் தலைநகரங்கள்,அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் போன்றவை

ஆ.நம் வாழ்க்கையில் நடக்கும் தனித்தனி நிகழ்வுகளின் அடிப்படையில் துண்டுதுண்டான, சொந்த, சுயசரிதம் சார்ந்த எபிசோடிக் நினைவாற்றல் என்பவையாகும்.

பாடத்திட்டத்தின் பகுதியாகப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் பெரும்பான்மையான தகவல்கள், கருத்துகள், எண்ணங்கள் ஆகியவை மாணவர்களின் செமான்டிக் நினைவாற்றலில் பதிவாகின்றன. நம் கற்பித்தல் மாணவர்களின் செமாண்டிக் நினைவாற்றலைக் கூட்டுகிறது. புதிய தகவல்களையும், கருத்துகளையும் அறிமுகப்படுத்தும்போது அவருடைய அறிவின் அளவு, மொத்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. தற்போது அம்மாணவருக்கு இருக்கும் அறிவுகளுக்கு இடையேயுள்ள தொடர்புகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. இந்தத் தொடர்புகள் கூடக்கூட குழப்பமும் அதிகரிக்கிறது. பல்வேறு அறிவுகளின் நிலைத்தன்மை, புரிதலில் அளவு ஆகியவை அதிகரிக்கிறது. ஆனால், கற்பிக்கும்போது இந்தக் கருத்துக்களையெல்லாம் நாம் கருத்தில் கொள்கிறோமா? என்ற கேள்வி இங்கே முக்கியமாக எழுப்பப்படுகிறது.
சிறு சிறு அறிவுத் துணுக்குகளை செமாண்டிக் நினைவாற்றலோடு சேர்ப்பதில் நமக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. ஆனால், ஆசிரியர்களாகிய நாம் செமாண்டிக் நினைவாற்றலில் மாற்றங்கள் நடைபெற சுவையான வழிகளைக் கண்டறிய வேண்டும். அறிவுகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்த மாணவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களிடமுள்ள தகவல்களை வெளிப்படுத்தி அவற்றை உறுதிப்படுத்தவும் அதன்மூலம் அவர்களுக்கு நுண்கருத்துகளின் அடிப்படையை ஆழமாக அமைக்கவும் உதவிட வேண்டும். பாடப்புத்தகங்கள் தனியாக இந்த வேலையை செய்ய முடியாது. ஆசிரியர்களின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.

நினைவுகளை ஒழுங்குபடுத்துதல்:

நினைவுகளை மூளையில் ஒழுங்குபடுத்துதல் என்பது நீண்டகால நினைவாற்றலில் முக்கியமானது. இதில் இரண்டு முக்கியமான கோட்பாடுகளை இந்நூல் விளக்குகிறது.

ஒன்று….. செமான்டிக் நெட்வொர்க் கோட்பாடு:

இதன்படி கருத்துகள் ஒவ்வொன்றும் உறவுகளின் அடிப்படையில் தொடர்பு கொண்டுள்ளன. சில கருத்துகள் தகுதிப்படி உட்பிரிவுகளாகவும், சில காரண காரியத்தின் அடிப்படையிலும், சில முன்பின் எனவும் அடுக்கப்பட்டுள்ளன. இங்கு நெருங்கிய தொடர்பு கொண்ட கருத்துகள் இணைந்து ஒரு துறையாக, மண்டலமாக மாறுகின்றன.
உதாரணம்: மரச்சாமான்கள் என்னும் தலைப்பினுள் நாற்காலி, மேசை, படுக்கை.

இரண்டு…. விவரிக்க முடிந்த அறிவுகள் கோட்பாடு…

இதை அனுபவங்களில் திரும்பத் திரும்ப வரும் கோட்பாடு எனலாம். குறிப்பு, திட்டம், வரைபடம் போன்றவை ஸ்கீமா என்னும் கருத்துத் தொகுப்புக்களாக பதிவாகி இருக்கும். இந்த ஸ்கீமாக்கள் நுட்பமானவை, ஏனெனில் அவை பல்வேறு அனுபவங்களில் மறைந்திருக்கும் பொதுப்பண்புகளை, அடுக்குகளைக் குறிக்கின்றன. ஒரு சூழலிலுள்ள ஏதேனும் ஒரு ஸ்கீமாவைத் தூண்டிவிட்டால் அத்துறை சார்ந்த முழுக் கருத்துத் தொகுப்பும் அப்படியே நினைவுக்கு வந்துவிடும்.
இந்த இரண்டும் தான் நினைவாற்றலை ஒழுங்குபடுத்துவதில் முக்கியக் கோட்பாடாகும். நினைவாற்றல் முறையாக ஒழுங்குபடுத்தப்படுமானால் அது மாணவர்களின் எதிர்கால நலனில் பெரும்பங்கு வகிக்கிறது.
மாணவர்களிடையே நினைவாற்றலை ஒழுங்குபடுத்த ஆசிரியர்கள் கீழ்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.
• படிநிலையை வகைப்பிரித்தல் போல் வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்.
• பல்வேறு நிகழ்வுகளுக்கிடையேயுள்ள தொடர்பை முக்கியப்படுத்திக் காட்ட வேண்டும்.
• காரண காரியத் தொடர்பை கண்டுபிடித்துக் கூற வேண்டும்.
• எடுத்துக்காட்டுகளிலுள்ள மையக்கோட்பாட்டை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் ( கோட்பாடு, சட்டம் ஆகியவை எடுத்துக்காட்டு)
• உவமைகளை ஒப்பீடு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்.(மண்டலங்களுக்கு இடையிலும்)

நினைவாற்றலில் இருவகைகளான நீண்டகால நினைவாற்றல் பற்றிய கருத்துகளை மேலும் பல எடுத்துக்காட்டுக்களுடன் இந்நூல் விளக்குகிறது.
இனி அடுத்து நிகழ்கால நினைவாற்றலைப் பற்றிப் பார்ப்போம்.

2.நிகழ்கால நினைவாற்றல்:

நிகழ்கால நினைவாற்றல் என்பது கடந்தகால நினைவுகளும் நிகழ்கால புதிய செய்திகளும் இணைந்து செயல்படுவது ஆகும். இதற்கு உதாரணமாக கணினியில் நாம் தட்டச்சு செய்யும்போது அதில் ஏற்கனவே தட்டச்சு செய்த பகுதியும் இருக்கும். புதிதாக நாம் தட்டச்சு செய்யும் பகுதிகளும் அதனோடு சேர்ந்திருக்கும். அவ்வாறே நமது மூளையின் நிகழ்கால நினைவாற்றல் பகுதி செயல்படுகிறது. தற்கால நினைவாற்றலின் திறமை என்பது தகவல்களை அலசித் தொடர்பு காண்பதிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும் அடங்கி இருக்கிறது.
நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்த ஹிப்போ காம்பஸ் என்பதை இப்போது நினைவுக்குக் கொண்டு வருவோம். நிகழ்கால நினைவாற்றல் பெரும்பான்மையும் ஹிப்போகாம்பஸுடன் தொடர்புடையது. நமது வாழ்க்கை முழுவதும் நம் அனுபவங்களையும், கற்றலையும் தொடர்ந்து பதிவு செய்யும் ஹிப்போகாம்பஸ் பிறகு அந்த தற்கால நினைவுகளை நீண்டகால நினைவாற்றலுக்கான நியோகார்டெக்ஸ் பகுதிக்கு அனுப்பி விடுகிறது. பிறகு ஹிப்போகாம்பஸ் தன்னிடமுள்ள குறுகிய கால நினைவுகளை தானே அழித்துவிடுகிறது.
நிகழ்கால நினைவாற்றல் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் கற்கும் அனைத்தும் நிகழ்கால நினைவாற்றலைக் கடந்துதான் நீண்டகால நினைவாற்றலுக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு கற்றல் சூழலில் தெரிந்து கொள்ளும் தகவல்கள் யாவும் முன்பு கற்றவற்றுடன் தொடர்புடையவை. ஒரு குழந்தையின் நிகழ்கால நினைவாற்றல் குறைவாக இருக்கும்போது அது மொத்த கற்றல் செயல்பாட்டையும் பாதிக்கிறது. எந்த வயதுக் குழந்தையாக இருந்தாலும் அவர்களுடைய நிகழ்கால நினைவாற்றல்திறன் வேறுபடுகிறது, எனவே அவர்களுடைய கற்கும் திறனும் வேறுபடுகிறது. நடத்தைப் பிரச்சினைகளோ, உளவியல் பிரச்சினைகளோ இல்லாத ஒரு குழந்தை அதே வயதுடைய மற்ற குழந்தையைவிட கற்றலில் பின் தங்கி இருந்தால் இக்குழந்தையின் நிகழ்கால நினைவாற்றல் திறன் குறைவாக உள்ளது எனப் புரிந்து கொள்ளலாம்.

நிகழ்கால நினைவாற்றலில் தானியங்குதன்மை:

தானியங்கு தன்மை என்பது தொடர்பயிற்சியினால் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்கால நினைவாற்றலைப் பயன்படுத்திப் பெரிய கருத்துத் தொகுப்பை அப்படியே மொத்தமாகப் புரிந்துகொள்ளும் திறமை ஆகும்.

கணிதப்பாடத்தில் இந்த தானியங்கு பண்பின் பயன்பாட்டை அதிகம் காணலாம்.
உதாரணமாக 5+12+10+2+3 என்ற கணக்கை மனக்கணக்காகச் செய்யச் சொன்னால் ஒரு குழந்தை, தனது முன் நினைவாற்றலில் இருந்து 5+12 என்பது 17 எனக் கொண்டு பின் இந்த 17 என்ற எண்ணை தனது நிகழ்கால நினைவில் இருத்தி அடுத்தடுத்த வழிமுறைக்குச் செல்லும். எனவே இங்கு நீண்டகால நினைவாற்றல் கணித வாய்ப்பாடுகளாக நினைவுக்கு கொண்டுவரப்பட்டு அது நிகழ்கால நினைவாற்றலில் இணைந்து அந்தக் கணக்கிற்கு அக்குழந்தை விடைகாண்கிறது.

அதே போல் மொழியைக் கற்றுக்கொள்ளும்போது எழுத்துக்களை முதலில் மனப்பாடம் செய்து விடுகிறார்கள். வார்த்தையாகப் படிக்கும்போது இந்த எழுத்துக்களை மாலையாகத் தொடுப்பது போல் அடுத்தடுத்து நினைவில் இருந்து கொண்டுவந்து சேர்த்து அந்த வார்த்தையைப் படிக்கிறார்கள். இதில் எழுத்துகள் நீண்டகால நினைவாற்றலில் இருந்து மனப்பாடத்திறன் மூலம் வெளிக்கொண்டுவரப்படுகிறது. அதனைக் கோர்த்து வார்த்தையாக படிப்பது நிகழ்கால நினைவாற்றல் அடிப்படையில் நடைபெறுகிறது.
இங்கு நிகழ்கால நினைவாற்றல் குறைவாக இருக்கும் குழந்தையால் அந்த வார்த்தையைச் சரளமாக படிக்க முடியாது.

இதையே நிகழ்கால நினைவாற்றலின் தானியங்குதன்மை என்கிறோம்.

இவ்வாறாக நினைவாற்றல் என்னும் மூன்றாம் அத்தியாயம் நம்மிடம் உள்ள வியத்தகு ஆற்றலான நினைவாற்றல் பற்றி விளக்குகிறது.

நான் இங்கு நுனிப்புல் தான் மேய்கிறேன்….. கல்வி உளவியலின் முழு அனுபவம் பெற இந்நூலை வாசித்துப் பாருங்கள்.

நன்றி!

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
கமலா.வி.முகுந்தா தமிழில்: இராஜேந்திரன்
கிழக்கு பதிப்பகம் விலை:295/- பக்கங்கள் 328.

No comments:

Post a Comment