பொழின் மருவுங் கருவூர்வாழ் புகழார் சோழர் போதகம்போ லென்னுயிரும் போக்கு மென்றே யழலவிர்வாள் கொடுத்தபிரா னதிகை மான்மே லடர்ந்தபெரும் படையேவ வவர்கொண் டேய்ந்த தழல்விழிகொ டலைகாண்பார் கண்ட தோர்புன் சடைத்தலையை முடித்தலையாற் றாழ்ந்து வாங்கிக் கழல்பரவி யதுசிரத்தி னேந்தி வாய்ந்த கனன்மூழ்கி யிறைவனடி கைக்கொண்டாரே.
சோழநாட்டிலே, உறையூரிலே, புகழ்ச்சோழநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் மற்றையரசர்கள் பணி கேட்க; உலகத் தம்முடைய செங்கோலின்முறை நிற்க, சைவசமயம் தழைக்க அரசியற்றினார். சிவாலயங்களெலாவற்றிலும் நித்திய நைமித்திகங்களை வழுவின்றி நடத்துவிப்பார். சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து கொடுப்பார்.
இப்படியிருக்குநாளிலே, கொங்கதேசத்தரசரும் குடக தேசத்தரசரும் தருந்திறையை வாங்கும்பொருட்டு, தங்கள் குலத்தார்களுக்கு உரிய கருவூர் என்னும் இராஜதானியிலே அரசுரிமைச் சுற்றத்தோடு வந்தணைந்தார். அங்குள்ள ஆனிலை என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பரமசிவனை வணங்கி, மாளிகையிலே புகுந்து, அத்தாணி மண்டபத்திலே சிங்காதனத்தில் வீற்றிருந்து கொண்டு, கொங்க தேசத்தரசர்களும் குடக தேசத்தரசர்களுங் கொணர்ந்த திறைகளைக் கண்டு, அவர்களுக்கு அருள்புரிந்து, மந்திரிமாரைநோக்கி, "நம்முடைய ஆஞ்ஞாசக்கரத்துக்கு அமையாத அரசர்கள் இருக்கின்ற அரணங்கள் உளவாகில், தெரிந்து சொல்லுங்கள்" என்றார். இப்படி நிகழுநாளிலே, சிவகாமியாண்டார் கொணர்கின்ற புஷ்பங்களைச் சிதறிய தம்முடைய யானையையும் பாகர்களையும் கொன்ற எறிபத்தநாயனாரை அணைந்து, "என்னையுங் கொன்றருளும்" என்று தமது வாளைக் கொடுத்து; திருத்தொண்டிலே மிகச் சிறந்து விளங்கினார்.
மந்திரிமார்கள் புகழ்ச்சோழநாயனாரை வணங்கி, "திறை கொணராத அரசன் ஒருவன் உளன்" என்று சொல்ல, "அவன் யாவன்" என்று வினாவ, மந்திரிமார் "அவன் அதிகன் என்பவன். அவன் சமீபத்திலே மலையரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள். அதுகேட்ட புகழ்ச்சோழநாயனார் "நீங்கள் படைகொண்டு சென்று அவ்வரணத்தைத் துகளாகப் பற்றறுத்து வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க, மந்திரிமார் சேனையோடு சென்று, அம்மலையரணைப் பொடிபடுத்தி, அதிகனுடைய சேனைகளை வதைத்தார்கள்; அதிகன் அஞ்சி ஓடிப்போய்ச் சுரத்தில் ஒளித்துவிட்டான். புகழ்ச்சோழநாயனாருடைய படைவீரர்களிற் பலர் அதிகனுடைய படைவீரர்களின் தலைகளையும், மற்றவர்கள் நிதிக்குவைகளையும் யானை குதிரைகளையுங் கொண்டு, மந்திரிமாரோடு கருவூரிலே வந்து சேர்ந்தார்கள். புகழ்சோழநாயனார் தமக்கு முன்னே படைவீரர்கள் கொண்டுவந்த தலைக்குவைகளுள் ஒருதலையின் நடுவிலே ஒரு புன்சடையைக் கண்டார். கண்டபொழுதே நடுங்கி, மனங்கலங்கி, கைதொழுது, பெரும்பயத்தினுடனே எதிர்சென்று அத்தலையிற் சடையைத் தெரியப்பார்த்து, கண்ணீர் சொரிய அழுது, "நான் சைவநெறியைப் பரிபாலித்து அரசியற்றியபடி மிக அழகிது, சடைமுடியையுடையவர் பரமசிவன் அருளிச் செய்த மெய்ந்நெறியைக் கண்டவர். அவருடைய சடைத் தலையைத் தாங்கிவரக் கண்டும் அதிபாதகனாகிய நான் பூமியைத் தாங்குதற்கு இருந்தேனோ" என்று சொல்லி, ஒன்று செய்யத்துணிந்து, மந்திரிமாரை நோக்கி, "பூமியைக் காத்து அரசளித்துப் பரமசிவனுக்கு வழித்தொண்டு செய்யும்பொருட்டு என்னுடைய குமாரனுக்கு முடிசூட்டுங்கள்" என்று விதித்து, அதனைக் கேட்டு அயரும் மந்திரிகளைத் தேற்றி அக்கினி வளர்ப்பித்து, விபூதியை உத்தூளனஞ் செய்து, சடைச் சிரத்தை ஒருபொற்கலத்தில் ஏந்தி, தம்முடைய திருமுடியிலே தாங்கி, அவ்வக்கினியை வலஞ்செய்து உயிர்த்துணையாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை எடுத்து ஓதிக்கொண்டு, அதனுள்ளே புகுந்து, பரமசிவனது திருவடிநிழலிலே அமர்ந்திருந்தார்.
திருச்சிற்றம்பலம்.
புகழ்ச் சோழ நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
பரிசனங்களால் நேரும்பழி அரசன் செய்பழியாமெனல்
இறைமை என்பது அரசனானவன் தான், தன்பரிசனம், பகைவர், கள்வர், தீவிலங்குகள் என்பவற்றாற் பிரஜைகளுக்குத் தீங்கு நேராமற் காப்பதோர் அறமாகும். அது, "மாநிலங்கா வலனாவான் மன்னுயிர் காக்குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மா லானபய மைந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ" என வரும் மநுநீதி கண்டபுராணச் செய்யுளான் விளங்கும். இனி, முன் கூற்றுவநாயனார் புராண சூசனத்திற் கண்டபடி, இறைமை என்ற காரியம் இறைவனால் அரசன்மேல் வைக்கப்பட்ட பொறுப்பாகலின் இறைமை செலுத்தும் விஷயத்தில் இறைவன் சார்பினவாகிய குருலிங்கசங்கம பரிபாலனம் அரசனின் தலைக்கடனாம் என்பது தானே விளங்கும். எல்லாவற்றையும் ஆளுடைய சிவனும் அச்சிவனையறிவிக்குங் குருவும் அச்சிவன்பண்பே தம்பண்பாகக் கொண்டுலாவும் நடமாடுஞ் சிவங்களாகிய சிவனடியார்களுமே மக்கள் வாழ்விலட்சிய மேல்வரம் பாதலினாலும் அது அங்ஙனமாதல் துணியப்படும். அன்றியும் இவற்றுக்கு நேரும் நிந்தை முதலிய தீங்குகள் நேரடியாகவே அரசன் கேட்டிற்குக் காரணமெனப் படுதலினாலும் அது வலுவுறும். அவ்வாறாதல் திருமந்திரத்தில், "முன்னவனார்கோயிற் பூசைகள் முட்டிடின் மன்னற்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங்களவு மிகுத்திடுங் காசினி என்னரு நந்தி எடுத்துரைத்தானே" - "பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங்கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றின் மாய்ந்திடுஞ் சத்தியம் ஈது சதா நந்தியாணையே" - "நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல் நாடோறும் நாடுகெடும் மூடம் நண்ணுமால் நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே" - "ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் தேவர்கள் போற்றுந் திருவேடத்தாரையுங் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே" எனவும் திருத்தொண்டர் புராணத்தில் மூர்த்திநாயனார் திருத்தொண்டுக்கு இடர் விளைத்த கருநடமன்னன் கெட்டகேடு கூறப்படுகையில், "இவ்வாறு லகத்தின் இறப்ப நல்லோர்மெய்வா ழுலகத்து விரைந்தணை வார்க ளேபோல் அவ்வாறரனார் அடியாரை அலைத்த தீயோன் வெவ்வாய் நிரயத்திடை வீழவிரைந்து வீந்தான்" எனவும் திருவாதவூரடிகள் புராணத்தில், வையைப் பெருக் கவலத்தினால் தளர்வுற்ற பாண்டிய மன்னனின் பிரலாபந் தெரிவிக்கப்படுகையில், "ஆதியாங் கடவு ளெந்தை யாலவா யமலன் மங்கை பாதியான் சிறந்த பூசை பண்டையிற் குறைந்த துண்டோ நீதியாந் தவத்தின் மிக்கார் நெஞ்சம் புழுங்க மண்மேல் நீதியாஞ் செய்ததுண்டோ செப்புமினமைச்சரென்றான்" எனவும் வருவன வற்றால் அறியப்படும். திருத்தொண்டர் புராணத்தில் இடம்பெறும் நாயன்மார்களான அரசர்கள் குருலிங்கசங்கம பரிபாலனத்தில் அதிதீவிர கவனஞ் செலுத்துவோராயிருந்துள்ளமையும் ஓரோர் வேளையில் குரு லிங்கசங்கமத் தீங்கான பழுதுகள் நாட்டில் இடம்பெறுவது தம்மவரால் அறிய முடியாநிலையிலிருக்குஞ் சாமானிய அரசர்களுக்குச் சிவபரம்பொருள் தாமாக விரைந்து கனாக்காட்சியாக அறிவித்துப் பணிந்து அவர்களை அத்துறையில் ஊக்கிவைத்துள்ளமையும் அப்புராணத்திற் காணலாகும்.
அரசராகிய புகழ்ச்சோழநாயனார் ஒருமுறைபோல் இருமுறை, தம்பரிசனரால் சிவனடியார்க்கு நேர்ந்த தீங்கு தம்மால் நேரே நேர்ந்த தீங்கெனக் கொண்டு பரிகாரம் வேண்டி நின்ற செய்தி சைவ அரசியலற நோன்மைக்கு உரைகல்லாதல் தகும். இவர் ஒருமுறை, கருவூர்த் தெருவில் சிவகாமியாண்டார் என்ற சிவனடியார் திருவானிலைக் கோயிற் சிவனுக்கெனச் சுமந்து சென்ற திருப்பூங்கூடை தமது பட்டத்து யானையாற் சிதறடிக்கப்பட்டதற்குப் பதிலாக எறிபத்த நாயனாரால் யானையும் பாகரும் கொலையுண்ட செய்தி கேட்டு நாயனாரைச் சந்தித்து விசாரிக்கையில், தம் யானையாலும் பாகராலும் நேர்ந்த தீங்கு தம்மால் நேர்ந்த தீங்காமெனக் கூறி அதற்குத் தீர்வாகத் தம்மையுங் கொல்லவேண்டுமெனத் தாமே தமது உடைவாளை நாயனாரிடம் நீட்டி நின்றகாலை திருவருள் தலையீட்டால் அது வேறு விதமாய் முடிவுற்ற சம்பவமொன்று அந்த நாயனார் புரான வரலாற்றிற் காணப்பட்டதுண்டு. இவரே பின்னொருகால் கருவூரில் தம் அரசியற்கரும விசாரணை மேற்கொண்டிருக்கையில் குறும்பொறைநாடன் என்ற சிற்றரசன் ஒருவன் திறை செலுத்தாது வைரஞ்சாதித்தமை கண்டு, அவன்மேற் படையெடுக்க ஆணை பிறப்பித்திருந்தாராக, அங்ஙனம் படையெடுத்து வெற்றியீட்டிய மந்திரிமார் வெற்றிச் சின்னமாகக் கொணர்ந்து காட்டிய பகைவர் தலைக்குவையுள் திருச்சடையோடு கூடிய சிரமொன்றிருக்கப் பார்த்து அதனை நன்றாக இனங்கண்டு தெரிந்து கொண்டு அச்சிவனடியாரைத் தம் படைஞர் கொன்ற பழி தம்பழியெனப் பதறி நடுநடுங்கி மனங்கலங்கிப் பரிதபித்து உடன் தீர்வு நேர்வாராயினர். அது காலை அவர் திருவுள்ளமிருந்த வண்ணம் பின்வருமாறு.
குறும்பொறை நாட்டுக்குப் படையெடுத்துப் பெற்ற வெற்றி கிடக்க, அதன் மூலம் திருநீற்றன்பு பரிபாலிக்கும் எனது நியமத்துக்கு நானே தீங்கிழைத்துவிட்டேனே. இதுவா எனக்கழகாவது? வெட்டுண்ட சிவனடியார் சிரமொன்று என்முன்வரக் கண்டதுமே பழிதாங்கியாய் விட்ட எனதுயிர் இன்னும் பார்தாங்கியாளவா இருந்து கொண்டிருக்கிறது என்பது அது. இப்படியொரு உத்வேக நிலையுற்றமையினாலே அரசர் மேல் அரசாட்சிக்கு மகனை நியமித்து விட்டுத் தாமே தமக்கு முடிவு தேடுவாராயினர். சிவாபராதப் பழி நேர்ந்தபின் உயிர்தரித்திருக்க இயலாமையாகிய இந்த நாயனாரின் அதி உத்வேக நிலையானது, லௌகிகார்த்தப் பேறுகளில் ஏமாறுதல் சார்பான விரக்தியினாலோ மானாபிமானக் கதிப்பினாலோ நிகழும் சாமானிய உயிர்த்தியாகம் போலாது தம்மியல்பாகிய ஆத்மிகப் பேற்றிலட்சியத்தையே குறிக்கொண்டமைந்த ஒருவித ஆத்மிக அறவேள்வி நிலையதாதல், "ஏரி ஈசனதுருவருக்கம்" என அப்பர் சுவாமிகளும் "விருப்புறு மங்கியாவார் விடையுயர்த்தவரே" எனச் சம்பந்த சுவாமிகள் கருத்தாகத் திருத்தொண்டர் புராணமும் போற்றும் அக்கினியையே தமக்குச் சரணமாக அவர் தெரிந்து கொண்டமையானும் தமது இலட்சிய சாதனமான திருவெண்ணீற்றுக் கோலங்கொண்டு சிவனுருவாகிய எரிக்கு அர்ப்பணமாம்படி குறித்த அச்சிவனடியார் சிரத்தைப் பொற்றாம்பாளத்திட்டுச் சிரமேற் சுமந்து கொண்டு எரியை வலம் வந்தமையானும் முத்தி சாதனமாகிய திருவைந்தெழுத்தை ஓதிய வண்ணம் ஆத்ம திருப்திமயமான மகிழ்ச்சியுடன் அவ்வெரியிற் பிரவேசித்தமையானும் பிரவேசித்த காலை அவர் செயல்சிவப் பிரீதியானதற் கறிகுறியாக மலர்மாரியும் தேவதுந்துபி மங்கல நாதமும் இடம்பெற்று முடிவாக அவர் சிவபெருமான் சேவடிக்கீழ் அமரும் பேறு பெற்றுள்ளமையானும் இனிதிற் பெறப்படும். அது அவர் புராணத்தில், "அம்மாற்றங் கேட்டழியும் அமைச்சரையு மிடரகற்றிக் கைம்மாற்றுஞ் செயல்தாமே கடனாற்றுங் கருத்துடையார் செம்மார்க்கந் தலை நின்று செந்தீமுன் வளர்ப்பித்துப் பொய்மாற்றுந் திருநீற்றுப் புனைகோலத் தினிற் பொலிந்தார்." - "கண்டசடைச் சிரத்தினையோர் கனகமணிக் கலத்தேந்திக் கொண்டு முடித்தாங்கிக் குலவுமெரி வலங்கொள்வார் அண்டர்பிரான் திருநாமத் தஞ்செழுத்தும் எடுத்தோதி மண்டுதழற் பிழம்பினிடை மகிழ்ந்தருளி உட்புக்கார்" - "புக்கபொழு தலர்மாரி புவிநிறையப் பொழிந்திழிய மிக்கபெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கெடுப்பச் செக்கர் நெடுஞ்சடைமுடியார் சிலம்பலம்பு சேவடியின் அக்கருணைத்திருநிழற்கீழ் ஆராமை அமர்ந்திருந்தார்" என வருவது கொண்டறியப்படும்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment