இரைத்தணையார் புனற்பொன்னி மருத நன்னாட் டெழிலாருந் தஞ்சைநக ருழவ ரேத்துஞ் செருத்துணையார் திருவாரூர் சேர்ந்து வாழ்வார் செல்வமிகும் பல்லவர்கோன் றேவி வீழ்ந்த மருத்துணையார் மலரெடுத்து மோப்பக் கண்டு வனமலிபூங் கத்தியா லவண்மூக் கீர்ந்த கருத்துணையார் விறற்றிருந் தொண்டினையே செய்து கருதலரு மமருலகங் கைக்கொண் டாரே.
சோழமண்டலத்திலே, மருகனாட்டிலே, தஞ்சாவூரிலே வேளாளர் குலத்திலே, சைவசிரோமணியாகிய செருத்துணை நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருவாரூரை அடைந்து, காலந்தோறும் வன்மீகநாதரை வணங்கித் திருத்தொண்டுகள் செய்துகொண்டிருந்தார். இருக்கு நாளிலே. அங்கே சுவாமி தரிசனஞ் செய்யவந்த கழற் சிங்கநாயனாருடைய மாதேவி பூமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தாள் என்று நினைத்து, கத்தியினாலே அவளுடைய மூக்கை அரித்தார். பின்னும் நெடுங்காலத் திருத்தொண்டின் வழி நின்று சிவபதத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
செருத்துணை நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
தப்பித்தவறி விழுந்து கிடக்கும் பூசைத்திரவியத்தைத் தானும் இச்சையால் தீண்டுதல் பழுதெனல்
நின்மலராகிய சுவாமிக்குப் பூசையில் அர்ப்பணிக்கப்படுவன யாவும் சகலவிதத்திலும் நிர்மலமாயிருக்க வேண்டுமென்பது சொல்லாமேயமையும். அவையொவ்வொன்றும் அசுத்தமற்ற சூழ்நிலையிலிருந்து சமயாசார ரீதியான அகப்புறச் சுத்தி உடையோரால் எடுக்கப்பட்டுச் சிவ சிந்தனையோடு கையாளப்படவேண்டும் என்பது பூசைநியம விதிகளில் ஒன்றாயமையும். அவற்றின் மணங் குணங்களில் ஈடுபட்டு வாயூறுதலும் மூக்குளைந்து முகரவிழைதலும் கண்டிப்பாக விலக்கப்பட்டொழிந்தனவாம். அது, பூசைத் திரவியங்களை நாக்கு மூக்குத் தள்ளியெடுத்துக் கொள்ளவேண்டும் என நடைமுறை வழக்கிலிருந்து வரும் விதியால் சூசகமாக அறிவிக்கப்பட்டிருத்தல் காணத்தகும். இனி, அவ்வகையிற் பூசைக்கெனச் சங்கற்பித்தெடுக்கப்பட்டவை தற்செயலாக வழுவி விழுந்து கிடக்கும் நிலையிலும் பூசைப்பொருள்களே எனக் கொள்ளுதல் பூசைத் திரவிய மகிமையைப் பேணும் நெறியாம். அது, பூசை செய்து கழித்த பத்திர புஷ்பங்களாகிய நின்மாலியங்களை மிதித்தலாகாது என்ற வரையறை போல்வதோர் நெறியாகும். ஆதலின், தற்செயலாக நழுவிக்கிடக்கும் அவற்றைத் தானும் இரசனையுணர்வு முகர்வுணர்வுகளுக்கு விஷயமாக்குதலும் பழுதேயாம்.
செருத்துணை நாயனார் புராணம் மஹத்தான இக்கருத்து நிலையினைச் சூசிப்பதாயமைதல் காணத்தகும். இந்த நாயனார் திருவாரூர்த் திருக்கோயில் வளாகத்தில் திருத்தொண்டாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் அங்குச் சென்றிருந்த கழற்சிங்கர் என்ற அரசரின் பட்டத்துத் தேவி திருப்பூமண்டபத்தின் பக்கத்திற்கிடந்த பூவொன்றை எடுத்து மோந்ததற்குத் தண்டனைத் தீர்வாக அவள் மூக்கையே வார்ந்துவிட்டார் (இந்நிகழ்ச்சி விபரம் முன் கழற்சிங்கநாயனார் புராண சூசனத்திற் காணப்பட்டுள்ளது) அவருடைய அச்செயல் திட்பம் சேக்கிழார் திருவாக்கில், "உலகு நிகழ்ந்த பல்லவர்கோச்சிங்க ருரிமைப் பெருந்தேவி நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்ததொரு மலரை யெடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித்தொண்டர் இலகு கூர்வாய்க் கருவியெடுத் தெழுந்த வேகத்தாலெய்தி" - "கடிது முற்றி மற்றவள்தன் கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப் படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் பரமர் செய்யசடை முடியி லேறுந் திருப்பூமண் டபத்து மலர்மோந் திடுமூக்கைத் தடிவ னென்று கருவியினா லரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்" என வரும்.
திருப்பூ மண்டபத்துக்கு அயலிற் கிடந்ததேனும், சிவபெருமான் திருமுடிக்கேற வெனக் கொணரப்பட்ட மலரல்லவா அது என்று நாயனார் அதன் கௌரவம் பற்றிக் கொண்டிருந்த பேருணர்வே அவர்பால் குரூரச்சார்பான பெருந்தீரம் விளைந்ததற்கு உடனடிக் காரணமாம். அது நன்கு புலப்படுமாறு, "பரமர் செய்யசடை முடியி லேறும் மலர் மோந்த மூக்கைத் தடிவனென்று கருவியினா லரிந்தார்" எனச் சேக்கிழார் அருளியிருப்பதும் அவ்விஷயத்தில் அத்தனைத் துடிப்பாக அத்தனைக் குரூரச் செயலில் அவர் இறங்கியதற்கான பரம்பரைக் காரணம். சிவத்திரவிய மகிமை பேணுதலில் பூர்வப் பயிற்சி வழியாக வந்து அவரிடத்தில் தழும்பேறியிருந்த தொண்டுறுதி என்பது புலப்பட அவரை "வழித்தொண்டர்" எனக் குறிப்பிட்டிருப்பதும் அத்தகைய தீரமானது தொண்டர்களுள் அவரவர்க்குரிய தனித்துவப் பண்புகளுக்கெல்லாந் தலைமையானது எனல் புலப்படத் "தலைமைத் தனித்தொண்டர்" என மேலும் விதந்திருப்பதுங் கொண்டு இந்த நாயனாரின் பெருமகிமை அறியத்தகும்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment