Tuesday, 2 October 2018

54.இடங்கழி நாயனார் புராண சூசனம்

கோனாட்டுக் கொடும்பாளு ரிருக்கும் வேளிர்
    குலத்தலைவ ரிடங்கழியார் கொங்கிற் செம்பொ
னானேற்றார் மன்றின்முக டம்பொன் மேய்த்த
    வாதித்தன் மரபோர் நெற் கவர்ந்தோ ரன்பர்
போநாப்ப ணிருளின்கட் காவ லாளர்
    புரவலர்முன் கொணரவவர் புகலக் கேட்டு
மானேற்று ரடியாரே கொள்க வென்று
    வழங்கியர சாண்டருளின் மன்னி னாரே.
கோனாட்டிலே கொடும்பாளுரிலே, குறுநிலமன்னர் குலத்திலே, கனகசபையின் முகட்டைக் கொங்கிற் செம்பொன்னால் வேய்ந்த ஆதித்தன் குடியிலே, இடங்கழிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சைவநெறியும் வைதிக நெறியுந் தழைக்க, சிவாலயங்களெங்கும் நித்திய நைமித்திகங்கள் சிவாகம விதிப்படி நடக்க, அரசியற்றுங்காலத்திலே, சிவனடியார்களைத் திருவமுதுசெய்விக்கும் ஓரடியவர் ஒருநாள் திருவமுதுசெய்வித்தற்குப் பொருள் எங்கும் அகப்படாமையால் மனந்தளர்ந்து, மாகேசுரபூசைமேல் வைத்த அத்தியந்த ஆசையினால் விழுங்கப்பட்டமையால் செயற்பாலது இது என்பது தெரியாமல், அவ்விடங்கழி நாயனாருடைய பண்டாரத்திலே நெற்கூட்டு நிரைகள் நெருங்கிய கொட்டகாரத்தில் அந்த ராத்திரியிலே புகுந்து முகந்து எடுத்தார். காவலாளர்கள் அதைக் கண்டு, அவரைப் பிடித்து இடங்கழிநாயனாருக்கு முன்கொண்டு வந்தார்கள். இடங்கழி நாயனார் அவ்வடியவரைப் பார்த்து, "நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்" என்று வினாவ, அவ்வடியவர் "நான் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தற்குப் பொருள் இன்மையால் இங்ஙனஞ் செய்தேன்" என்றார். இடங்கழிநாயனார் அது கேட்டு மிக இரங்கி, "எனக்கு இவரன்றோ பண்டாரம்" என்று சொல்லி, "சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க" என்று எங்கும் பறை யறைவித்தார். பின்னும் நெடுங்காலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி தண்ணளியோடு அரசியற்றிக்கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.


இடங்கழி நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

செல்வத்தைச் சிவனடியார்க்கே உரித்தாக்குதல்

காணப்படும் இவ்வுலகமும் இவ்வுலகத்துப் பொருள்களும் வியத்தகு விரிவும் அளப்பரும் விசித்திர விநோதங்களும் உடையனவாயிருத்தலின் அவையாவும் முற்றறிவும் முழுத்த பேராற்றலும் உள்ள ஒருவன் படைப்பாதல் பெறப்படும். அது, தேவாரத்தில் "ஓருரு வாயினை மானாங்காரத் தீருருவாயொரு விண்முதல் பூதலம் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை" - "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில்" எனவும் திருக்கோவையாரில் "ஏழுடையான் பொழில் எட்டுடையான் புயம்" எனவும் திருமந்திரத்தில் "ஒருவனுமே யுலகேழும் படைத்தான் ஒருவனுமே யுலகேழும் அளித்தான் ஒருவனுமே யுலகேழுந் துடைத்தான் ஒருவனுமே யுலகோ டுயிர்தானே" எனவும் வருவனவற்றால் விளங்கும். இவற்றில், "அங்கங்கே நின்றான், பொழில் (புவனம்) ஏழுடையன் உலகோடுயிர்தானே" எனவருவன இறைவன் உலகையும் உலகப் பொருள்களையும் படைத்தது மாத்திரமன்றி அவன் அவற்றைத் தன்னுடைமை யாகவே கொண்டுள்ளான் எனவும் "தானலா துலகமில்லை" எனத் துணியப்படுமளவுக்கு உலகுயிர் அனைத்திலும் வசித்துக் கொண்டிருக்கின்றான் எனவும் தெரிவித்து நிற்றல் காணலாம். அது, இறைவன் உலகைப் படைத்து அதனுட் புகுந்துள்ளான் (சர்வமிதம் அஸ்ருஜத ஸ்ருஷ்ட்வா தத் அநுப்ரவிஷ்ட்:) எனத் தைத்திரீய உபநிஷத்தினும், உலகமெல்லாம் ஈசனால் வசிக்கப்பெற்றுள்ளது (ஈசாவாஸ்யம் இதம் சர்வம்) என ஈசாவாஸ்ய உபநிடதத்தினும் வருவனவற்றாலும் வலுவுறும். ஆகவே, பொதுவிற் கருதப்படுவது போன்று உலகம் மனித ஆதீனத்துக்குட்பட்டதாதலும் உலகப் பொருள் மனித உடைமையோ உரிமையோ ஆதலும் இல்லையாகும். எனவே, இதே உலகில் இதே பொருள்களின் அநுசரணையுடன் வாழ விதிக்கப்பட்டுள்ளாராகிய மக்கள் யதார்த்தரீதியில் அவை சிவனுடைமையும் உரிமையுமானவை என்பதுணர்ந்து அதற்கமைவாம் கௌரவ கண்ணியத்துடனும் பயபக்தியுடனும் அவற்றில் தமக்கு வேண்டுவனவற்றை இறைவனுக்கே முதலில் அர்ப்பணித்துப் பிறகே தாம் ஏற்கவேண்டும் என்ற ஒழுங்கு நியதி சைவத்தில் இடம் பெறலாயிற்று. சிவபூசையில், வாசனைத்திரவியம் பட்டுப்பணி உண்டிவகை ஆதிய போக போக்கியப் பொருள்கள் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுப் பெற்றுக் கொள்ளப்படுதல் மூலம் அது நடைமுறை யநுசரணையில் இருந்து வருமாறும் அறியத்தகும்.
அங்ஙனமன்றி எதுவுந் தன்னுடைமையும் உரிமையுமென்ற பாங்கில் வைத்தநுபவித்தல் திருட்டுக்குற்றத்தின் பாற்படும் என்ற எச்சரிக்யுமொன்றுளதாம். அது ஈசாவாஸ்ய உபநிஷத்தில், எவன் சொத்தையும் அவன் தரப் பெற்றுக்கொள்வ தன்றி யாருந் தாமாகக் கவர்ந்து கொள்ளற்க (தேனத்யக்தேன புஞ்ஜீதா மாஹ்ருத: கஸ்யஸ்வித் தனம்) எனவும் பகவத் கீதையில், இஷ்டபோகங்களை (இறைவனாணைப்படி) பூசிக்கப்பட்ட தெய்வங்களே தருகின்றன. அவை, தருவதை அவற்றின் மூலம் இறைவனுக்கு அர்ப்பணிக்காமல் அநுபவிப்பவன் கள்வனே யாவான் (இஷ்டான் போகான் வோதேவா, தாஸ்யந்தி யஜ்ஞ பாவிதா; தைர் தத்தான் அப்ரதாய தஸ்மை யோபுங்கதே ஸ்தேன ஏவ ஸ:) எனவும் வருவன கொண்டறியப்படும். இதன்மூலம் சொத்தெல்லாம் இறைவனாகிய சிவனுக்கு அர்ப்பணிக்கப்படவேண்டுதல் நியமமாகலின், நடமாடுஞ் சிவங்களாய் நம்முன் உலாவுஞ் சிவனடியார்களும் அதற் கேற்புடையராதல் தானே பெறப்படும். திருஞான சம்பந்த சுவாமிகளுக்கு வாய்த்த மெய்ஞ்ஞான முழுமைப் பண்பை விமர்சிக்குஞ் சேக்கிழார் சுவாமிகள், "எப்பொருளு மாக்குவான் ஈசனே யெனுமுணர்வும் அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனுமன்பும் இப்படியா விதுவன்றித் தம்மியல்பு கொண்டெழூஉம் துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்தெழுந்தார்" எனத் தெரிவிப்பதிலிருந்தும் சொத்துரிமை சிவனடியார்க்கே உளதாதல் வழுவுறுவதாம்.
ஆயின், சிவனடியார்க்குச் சொத்து வேண்டுமா றென்னையெனின் அவர் தமக்கென ஒன்றும் வேண்டாராயினுஞ் சிவப்பணியில் விருப்பறாப் பண்பினராதலாலும் பிரதானமாக அவர்கள் விரும்பும் மாகேசுர பூசை பொருளே இன்றியமையாத ஒன்றாகலானும் அவர்க்கும் அது வேண்டுவதேயாம் என்க. அம் மாகேசுர பூசை அவரால்தான் ஆகவேண்டுமா றென்னை யெனின் அடியார்களை, சாக்ஷாத் மகேஸ்வரர்களாகவே உண்மைக்காட்சியாற் கண்டு செய்யப்படவேண்டியதாகிய அதன் உயிர்ப்பண்பு அவர்களுக்கே இருத்தல் கூடும். ஆதலினால், அது அவர்களால்தான் ஆகவேண்டுவதாம் என்க. ஏற்பவரைச் சிவனாகவே கண்டுகொண்டியற்றுங் கொடை யெதுவும் யதார்த்தமான சிவார்ப்பணமாய்ச் சிவனால் உவந்தேற்கப்படும் என்பது "நடமாடக் கோயில் நம்பர்க் (சிவனடியார்) கொன்றீயிற் படமாடக்கோயிற் பகவர்க் (சிவனுக்கு) கஃதாமே" என்ற திருமந்திரத்தாற் பெறப்படும்.
இனி மற்றொரு விதத்திலும், சிவனடியார்க்குக் கொடுக்கும் வகையாற் பொருள் விசேடப் பலனளிப்பதாதல் காணத்தகும். கிடைத்த தெதையும் நினைவுமாத்திரத்தாற்கூடத் தமதாக்கிவிடாது அவர்கள் சிவார்ப்பணமாகவே அர்ப்பணித்தல் மூலம் பொருள் கொடுத்தவனுக்குஞ் சிவச் சார்பாம் பேறு விளைதல் பிரசித்தமாம். அது, திருவாதவூரடிகள் பாண்டிய மன்னன் பொருளைத் திருப்பெருந்துறையிற் சிவனடியார்களுக்குக் கொடுத்ததற்காக முதலில் அவரை முனிந்து அது காரணமாகப் பட்டுற்றுத் தெளிந்த பாண்டியன் வாக்காகத் திருவாதவூரடிகள் புராணத்தில், "பாம்பணி செய்ய வேணிப் பரம்பர னடியார்கையி லாம்பொருள் நமதே யானால் அறம்பிறர்க் காவதுண்டோ" என வருவதனாலும் பாண்டியன் சிவச்சார்பு பெற்றேவிட்டமை "மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறிதருமே" - "பாண்டியற் காரமுதாம் ஒருவரையன்றி உருவறியா தென்றன் உள்ளமதே" என வருந் திருவாசகப் பாடலடிகளால் வெளிப்படும். "அவன்பால் அணுகியே அன்புசெய்வார்களைச் சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லவன்" என, அடியார் பெருமை கூறும் பகுதியில், திருமூலர் கூறியுள்ளதும் அதற்காதாரமாம். செல்வத்தைச் சிவனடியார்க்கே உரித்தாக்குதலின் மகிமை இவ்வாற்றால் விசாரித்துத் துணியப்படும்.
இடங்கழி நாயனார் சிற்றரசராய் அரசாண்டிருக்கையில், சிவனடியார்க்கு அமுதூட்டும் நியமப் பணி மேற்கொண்டிருந்த அடியாரொருவர் அதற்குப் பொருள்முடை நேர்ந்து சுமுகவழிகளினால் அக்குறை தீர்தற் கியலாதாகவே நன்று தீதறியாதவாறு தம்மை விழுங்கி நின்ற பரவச உத்வேக நிலையினராகி அரசராகிய நாயனார் சேமித்து வைத்திருந்த நெற் கொட்டகாரத்துள் இரவோடிரவாகப் புகுந்து திருடுவாராயினர். திருடுகையில் காவலராற் பிடிபட்டுப் போன அந்த அடியார் அரசர் முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது அவர் உண்மைநிலையை விசாரித்துத் தெரிந்து கொண்ட அரசர், வழியுரிமைத் தொண்டின் வழிநிற்கும் தமது உள்ளுணர்வுக் கிளர்ச்சி மேலோங்கப் பெற்றவராய், "என்நெற் பண்டாரம் (பொக்கிஷம்) என்ன பண்டாரம் இவரன்றோ எனக்குப் பெரும் பண்டாரம்" எனக் கூறி அவர் மேண்டுமளவு நெல்லை முகந்தெடுத்துக் கொள்ள அநுமதித்தது மட்டுமன்றி அவர் போல்வார் எவரும் நெல்மட்டுமன்று தம் சேமிப்பிலுள்ள எப்பொருளையும் தாமாக வந்தெடுத்துச் செல்லலாமெனப் பறையறைவித்துப் பிரசித்தமுஞ் செய்து வைப்பாராயினர். அது அவர் புராணத்தில், "மெய்த்தவரைக் கண்டிருக்கும் வேன்மன்னர் வினவுதலும் அத்தனடி யாரைநான் அமுது செய்விப்பது முட்ட இத்தகைமை செய்தேனென் றியம்புதலும் மிகவிரங்கிப் பத்தரைவிட் டிவரன்றோ பண்டார மெனக்கென்பார்" - "நிறையழிந்த உள்ளத்தால் நெற்பண்டாரமுமன்றிக் குறைவினிதிப் பண்டாரமானவெலாங் கொள்ளைமுகந் திறைவனடியார் முகந்து கொள்கவென எம்மருங்கும் பறையறையப் பண்ணுவித்தார் படைத்தநிதிப் பயன்கொள்வார்" என வரும்.
நான் எனதற்ற தன்னிழப்பு நிலையில் தம்மைத் தம் தொண்டுக்கே முற்றாக ஒப்புக்கொடுத்து நிற்கும் மெய்யடியார்கள், தம் தொண்டுக்கின்றியமையாத பொருள் பெறுஞ்சாதனம் ஒரே வழி சுமுகமற்றதாயிருப்பினும் ஒக்கும் என்பது முன்னைய சூசனங்களிலுங் கண்டுள்ளவாறு கருதத் தகும். இங்கும் குறிப்பிட்ட அவ்வடியார். அன்பர்க்கமுதூட்டும் தமது நியமப்பணியின்பாற் பொங்கியெழும் பெருவிருப்பாற் புரியும் வினை தெரியாது கொட்டகாரத்திற்புக்கு முகந்தெடுத் தெடுத்ததாகச் சேக்கிழார் நாயனார் குறிப்பிட்டிருத்தல் காணத்தகும். இந்த இடங்கழி நாயனாருஞ் சேக்கிழார் கூற்றின்படி, "அடித்தொண்டின் நெறியன்றி முடங்குநெறி யறியாதார்" ஆதலின் தம்பா லிருந்த சொத்து முழுவதையுமே சிவ தொண்டியற்றுஞ் சிவனடியார்க்காக்குதல் அவர்க்கியல்பேயாம். சேக்கிழார் சுவாமிகள் படைத்த நிதிப் பயன்கொள்வார்" என அவரை மேலும் விதந்துரைத்திருப்பதுங் காண்க.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment