Tuesday 2 October 2018

31.தண்டியடிகள் நாயனார் புராண சூசனம்

திருவாரூர் வருந்தண்டி யடிகள் காட்சி
    சேராதார் குளந்தொட்டற்கு அமணர் சீறிக்
"குருடா! நீ முன்செவிடுங் கூடிற்று" என்று
    குறித்தறியைப் பறித்தெறியக் கொதித்துத் தங்கண்
அருளாலே விழித்தெவரும் அந்தராக
    அமணர் கலக் கம்பலகண் டவர்கள் பாழிப்
பருவான கற்பறித்தா விக்கரையுங் கட்டிப்
    பரனருளால் அமருலகம் பற்றி னாரே.
சோழமண்டலத்திலே, திருவாரூரிலே, தண்டியடிகணாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பிறவிக்குருடர். அவர் தம்முடைய அகக்கண்ணினாலே சிவபெருமானைத் தரிசித்துத் தோத்திரம் பண்ணுகின்றவர். எப்பொழுதும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்பினோடு ஜபிக்கின்றவர். அந்தத் திருப்பதியிலுள்ள பூங்கோயிலைக் காலந்தோறும் வலஞ்செய்து வணங்குகின்றவர்.
இப்படியிருக்கு நாளிலே, அவ்வாலயத்துக்கு மேற்றிசையில் இருக்கின்ற திருக்குளம் பக்கமெங்கும் சமணர்களுடைய பாழிகளாகி இடத்தினாலே குறைவடைந்தமையால், தண்டியடிகள் அதனை அறிந்து, அத்திருக்குளத்தைத் தாம் பெருகக் கல்லல் வேண்டும் என்று நினைந்து, அவ்விடத்திற்சென்று திருக்குளத்தினுள்ளே கல்லுமிடத்தில் ஒருதறி நட்டு, அதிலே கயிறு கட்டி, கரையிலும் தறி நட்டு, அக்கயிற்றினுனியை அதனில் இசையக் கட்டி, மண்வெட்டியையும் கூடையையும் எடுத்து, அக்கயிற்றைத் தடவிக் கொண்டு சென்று, மண்ணைக் கல்லிக் கூடையில் எடுத்துக் கொண்டு, மீண்டும் அக்கயிற்றைத் தடவிப் போய்க் கரையிலே போடுவார் இப்படித் தினந்தோறும் மிகுந்த விருப்பத்துடன் திருக்குளங் கல்லும் பொழுது, சமணர்கள் பொறாமை கொண்டு அவரை அணைந்து, "மண்ணைக் கல்லிற் பிராணிகள் இறந்துபோம்; வருத்தல்வேண்டாம்" என்று சொல்ல தண்டியடிகள் "அவிவேகிகளே! இதுமெய்க் கடவுளாகிய பரமசிவனுக்குச் செய்யுங்குற்றமற்ற புண்ணியம். இதனருமை உங்களுக்கு விளங்குமா? என்றார். அது கேட்ட சமணர்கள் "நாஞ்சொன்ன தருமமுறையைக் கேட்டாயில்லை. நீ கண்ணேயன்றிக் காதினையும் இழந்தனையோ" என்று சொல்ல; தண்டியடிகள் "மந்தபுத்தியும் காணாக்கண்ணும் கேளாச் செவியும் உங்களுக்கே உள்ளன" என்று சொல்லி, "திரிபுரதகனஞ் செய்த கடவுளுடைய திருவடிகளையேயன்றி வேறொன்றையும் நான் காணேன். அதனையறிதற்கு நீங்கள் யார்? அக்கடவுளுடைய திருவருளினால் உலகமெல்லாம் அறியும்படி என்கண் காணவும் உங்கள் கண் குருடாகவும் பெற்றால், நீங்கள் யாது செய்வீர்கள்? என்றார் சமணர்கள் "நீ உன் கடவுளது அருளினால் கண்பெற்றாயாகில், நாங்கள் இவ்வூரில் இரோம்" என்று சொல்லி, அவருடைய மண்வெட்டியைப் பறித்துக் குறித்தறிகளைப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகள் மிகக்கோபங்கொண்டு, திருக்கோயில் வாயிலிலே சென்று நமஸ்கரித்து, "எம்பெருமானே! தேவரீரை நிந்தனைசெய்யும் அதிபாதகர்களாகிய சமணர்கள் இன்றைக்குத் திருக்குளங்கல்லுதலாகிய சிவ புண்ணியத்தையும் அதனைச் செய்யப்பெற்ற அடியேனையும் அவமானஞ் செய்தமையால், அடியேன் அது பொறாது மிக வருந்துகின்றேன் சர்வ சாமர்த்தியமுடைய தேவரீர் இவ்வருத்தத்தை நீக்கியருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்து, நமஸ்காரஞ்செய்து, தம்முடைய திருமடத்திற்குசென்று, அழுதுகொண்டிருந்தார்.
அன்றிரவு அவர் நித்திரை செய்யும் பொழுது, பரமசிவன் அவருக்குச் சொப்பனத்தில் தோன்றி "தண்டியே உன் கவலையை ஒழி, நாளைக்கு உன் கண் காணவும் அந்தச் சமணர்களுடைய கண்கள் மறையவும் அருள் செய்வோம் பயப்படாதொழி" என்று அருளிச் செய்து, சோழராஜாவுக்கும் சொப்பனத்திலே தோன்றி "தண்டியென்பவர் நமக்குக் குளங்கல்ல, சமணர்கள் அதுகண்டு பொறாது, அப்பணிக்கு விக்கினஞ் செய்தனர் நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாய்" என்று ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். சோழராஜா விழித்து எழுந்து, பரமசிவனைத் தோத்திரஞ்செய்து சூரியன் உதித்தபின் தண்டியடிகளை அடைந்து தாங்கண்ட சொப்பனத்தைச் சொல்ல தண்டியடிகள் "மகாராஜாவே! நான் திருக்குளங்கல்லும்போது சமணர்கள் வந்து, அது தருமமன்றென்று பல சொல்லி நான் நட்ட குறித்தறிகளைப் பிடுங்கி, என்னை வலிசெய்து, மண்வெட்டியைப் பறித்துகொண்டார்கள். இன்னும் "நீ கண்ணேயன்றிக் காதினையும் இழந்தலையோ" என்றார்கள். அதற்கு நான் நம்முடைய சிவபெருமானது திருவருளினால் என் கண்காணவும் உங்கள் கண்கள் மறையவும் பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள் என்று கேட்க; "நாங்கள் இந்த ஊரில் இரோம் என்று ஓட்டினார்கள். இனி நிகழ்வதைக் கண்டு, நீர் இந்த வழக்கை முடித்தல்வேண்டும்" என்றார். அப்பொழுது அரசன் சமணர்களை அங்கே அழைத்துக் கேட்க, அவர்கள் அதற்கு உடன்பட்டார்கள். அதுகண்டு, தண்டியடிகள் முன்செல்ல; அரசன் பின்சென்று திருக்குளக் கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி "சிவபத்தரே! நீர் பரமசிவனது திருவருளினாலே கண்பெறுதலைக்காட்டும்" என்று சொல்ல தண்டியடிகள் "சிவபெருமானே மெய்க்கடவுளும் சிறியேன் அவருக்கு அடியானுமாயின் இவ்வரசனுக்கு முன்னே நான் கண்பெற்றுச் சமணர்கள் கண் இழப்பார்கள்" என்று சொல்லி, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு திருக்குளத்திலே முழுகிக் கண்பெற்றெழுந்தார். சமணர்களோ கண்ணிழந்து தடுமாறினார்கள். அதுகண்ட அரசன் தன்னேவலாளரை நோக்கி, "தண்டியடிகளுடனே ஒட்டிக் கெட்ட சமணர்களைத் திருவாரூரினின்றும் அகன்று போம்படி துரத்துங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க, அவர்கள் அவ்வாறே துரத்தலும் சமணர்கள் கண்காணாமையால் மனங் கலங்கிக் குழியிலே விழுவார்கள். "கோலும் இல்லையோ" என்பார்கள். "இது வழி என்று தூற்றை அடைவார்கள்" "பொய்ப் பொருளை மெய்ப்பொருளெனக் கொண்டு அழிந்தோம்" என்பார்கள்; பாய்களை இழப்பார்கள்; பீலிகளைத் தடவிக்காணாமல் திரும்புவார்கள்; மயங்கி நிற்பார்கள்; காலும் கையும் முறியக் கற்களின்மேல் இடறி விழுவார்கள்; மிக நெருங்கி ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்வார்கள்; ஓடுவதற்கு வழியறியாது மயங்குவார்கள்.
இந்தப் பிரகாரம் சமணர் கலக்கங்கண்டு அவர்களை ஓடத்துரத்தியபின்னர், சோழராஜா சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் பறித்து, திருக்குளத்துக்கு கரைகட்டி, மனமகிழ்ந்து, தண்டியடிகளை வணங்கிக் கொண்டு போயினான். அவர் பரமசிவனைத் தியானித்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து, திருத்தொண்டு செய்துகொண்டிருந்து சிவபதம் அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்


தண்டியடிகள் நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. நாட்டம் மிகுதண்டிக்கும் அடியேன்

வாக்கியங்களுள் அதிபலம் வாய்ந்தது ஆப்தவாக்கிய மெனலும் ஆப்தனாவான் உள்ளது கூறுவோனாதலின் ஆப்தவாக்கியம் உண்மையே தன் சொரூபமாக உள்ளதெனலும் பரமாப்தனான சிவனும் அவன் வாக்கே தம் வாக்காக வெளியிடுந் தகைமை பெற்ற சமயாசாரிய சுவாமிகளுமே ஆப்தர்கள் எனலும் பிரசித்தமாம். இதற்கொப்ப, சிவபெருமானே, தில்லை வாழந்தணர்தம்--- என அடியெடுத்துக் கொடுக்க அவர் வாக்கே சுந்தர மூர்த்தி நாயனார் வாக்காக வெளிவந்துள்ள திருத்தொண்டத் தொகைவாக்குகள் அதுவது குறித்த நாயன்மாரின் ஆத்மிக சுவரூப உண்மை ததும்பும் வாக்குகளாதல், "இல்லையே என்னாத இயற்பகைக்கு மடியேன்", "வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்", "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரசன்ற னடியார்க்கு மடியேன்" ஆகியவற்றில் வைத்தறியப்படுவது போல, "நாட்டமிகு தண்டிக்கும் (மூர்க்கர்க்கும்) அடியேன்", என்பதிலும் தண்டியடிகள் நாயனாரின் ஆத்மசுவரூபம் நன்கறியப்படும்.
இவ்வாக்கினாற் போற்றப்பட்டிருக்குந் தண்டியடிகள் நாயனார், முகத்திற் கண் கொண்டு காணும் பாசக் காட்சியன்று அகத்திற் கண்கொண்டு காணும் ஞானக் காட்சியே அத்தியாவசியமானது என்ற உண்மை பிரசித்தமாம் வகையில் திருவவதாரஞ் செய்துள்ளார். இதுவோர் முக்கிய உண்மையாதல், "முகத்திற் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்ற திருமந்திரத்தாற் பெறப்படும். புறக்கண் காட்சியாகிய ஊனக்கண் காட்சிக்குச் சிவம் தோன்றாது. அகக்கண் காட்சியாகிய ஞானக்கண் காட்சிக்குச் சிவம் அல்லது மற்றெதுவுந் தோன்றாது; அங்ஙனம் அகக் காட்சியிற் சிவதரிசனம் பெற்றோர் புறக்காட்சியாகிய பாச உணர்வு முற்றாக அற்றிருப்பர் என்பதற்கிணங்க இந்த நாயனார் பிறப்பிலேயே புறக்கண் அற்றவராய்ப் பிறந்துள்ளார் எனத் தெரிவிக்குஞ் சேக்கிழார் செய்யுள், "தண்டியடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமைத் தவமுடையார் அண்டவாணர் மறைபாட ஆடுஞ்செய்ய கழல்மனத்துக் கொண்ட கருத்தி னகநோக்குங் குறிப்பே யன்றிப் புறநோக்குங் கண்டவுணர்வு துறந்தார்போற் பிறந்த பொழுதே கண்காணார்" எனவரும். எனவே, இப்பிறப்பிற்கு வருமுன்பே இந்த நாயனார் புறக்கண்ணாற் காணலின் விளைவாகிய பாசப்பற்று முற்றக் கெட்டிருந்து, இப்பிறப்பில் முளையிலேயே ஞானக் கண் காட்சி விளைவாகிய சிவப்பற்றோடு முளைத்துள்ளார், என்ற அவர் ஆத்ம சுவரூபம் நன்கு புலப்படுமாறு நாட்டம்மிகு தண்டிக்கும் (மூர்க்கர்க்கும்) அடியேன்" என்னும் இத்திருத்தொண்டத்தொகை வாக்கு நிற்றல் அறியப்படும். மேல், "காணுங் கண்ணாற் காண்பது மெய்த் தொண்டேயான கருத்துடையார்" என அடுத்துவருஞ் சேக்கிழார் திருவாக்கானும் அது வலுவுறும். இனி, இவர் வரலாற்றுண்மைப் பிரகாரம் திருவாரூர்த் திருக்கோயிற் றிருக்குளத்தைத் தாமே தனியாய் நின்று வெட்டித் திருத்தும் அத்தகைய வலுவான பாரிய பணிக்குங் கூட அதாவது, எப்படியுங் கண்பார்வையை இன்றியமையாத அத்தகைய பெரும்பணிக்குங் கூட அவர்க்குப் புறக்கண் மிகுதி - அநாவசியம் - மிகை ஆயிற்று எனக் காணப்படுதலின் வெளிக்காரிய சாதனைக்குக் கூடப் புறக்கண் வேண்டாத ஒரு அதிசய நிலையில் விளங்கிய தண்டியடிகள் எனவும் இத்தொடர்க்குப் பொருள்கொள்ளல் சாலும். அது, மற்றுந் தொடர்ப்பாடெவன் கொல் பிறப்பறுக்க லுற்றார்க்குடம்பும் மிகை" எனத் திருக்குறளிலும் "கந்தை மிகையாங் கருத்து" எனத் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும் வருவனவற்றோடொத்த பொருண்மையதாகும் விசேடமும் கருதத்தகும். இவ்வளவுக்குத் தமது பாசப்பற்றறுதி புலப்பட விளங்கிய தண்டியடிகள் நாயனார் மகிமையன்றோ மகிமை!

2. எம்பிரானார்க்கான பணி ஆசிலாநல்லற மாதல்

நல்வினையும் தீவினையும் என அறியப்படும் உலகோர் செயல்வகை இரண்டில், தனக்கும் பிறர்க்கும், புண்ணியமாகிய நன்மையே விளைப்பது நல்வினை என்றும் தனக்கும் பிறர்க்கும் பாவமும் பழியும் ஆகிய தீமையே விளைப்பது தீவினை என்றும் வழங்குதலும் நல்வினையே செய்தற்பாலது தீவினை ஒழிதற்பாலது என்ற கண்டிப்பான வரையறை இருத்தலும் ஆபால கோபாலப் பிரசித்தமாம். ஆனால், வினை நிகழ்வுக்குப் பின்னணியாயுள்ள உலகியற் சூழ்நிலை இருக்குமாற்றில், சற்றேனுந் தீமை கலவாத நன்மை நிகழ்தல் துர்லபமாதலும் அது சற்றேனுந் துன்பங் கலவாத இன்பமொன்று இல்லாமை போல்வதாதலும் அறியத்தகும். பசுவோம்பலாகிய நல்வினையினும் யதார்த்தமான அதன் சுதந்தரத்தைத் தடைபடுத்தலாகிய தீமை சற்றேனும் இல்லாதிருத்தல் இயலாமை போல்வனவற்றில் இது அநுபவத்தில் வைத்தறியப்படும். அன்றியும் இரண சிகிச்சையாகிய நல்வினையிலும் வெட்டித் துன்புறுத்தல் சார்பான தீமைக்கலப்புச் சற்றேனும் இல்லாதிருத்தல் கூடாமையான தவிர்க்க முடியாத்தன்மையில் வைத்தும் இஃதறியப்படும். ஆகவே, இயலக்கூடாவகையிலும் தவிர்க்கக் கூடாவகையிலும் உள்ள அற்ப சொற்ப தீமைகள் தாக்கா வண்ணம் ஏதேனும் பொருத்தமான ஒரு வகையில் நல்வினை செய்யும் மார்க்கமொன்று அவசியமாதல் வெளிப்படை. நன்மை அறம் என்றும் பெயர் பெறுதல் பற்றி அங்ஙனம் தீமை தாக்காவண்ணம் செய்ய வாய்க்கும் நல்வினை ஆசிலா - குற்றமில்லாத - நல்லறம் எனப்படும். அங்ஙனம் தீமை தாக்கா வண்ணம் தமது நல்வினை நிகழ்ந்தாக வேண்டும் என்னும் நோக்கினாலேயே சாமானியர்களாகிய நம்மவர்களும் எந்த ஒரு நல்வினை ஆரம்பிக்கையிலும் முதலில் விக்கின விமோசனம் அளிப்பவராகிய விநாயகரையும் அடுத்து தத்தம் இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்தித்து வந்தித்து வணங்கிக் கொண்டே அதை நிகழ்த்துதல் கண்கூடு. இத்தகைய நம்மனோர் வினைகள் சாமானிய சீவநன்மை, சீவ இரக்கங் கருதி நிகழ்வனவாதலின் பசு புண்ணியம் எனப்படும். சைவ பாரம்பரியத்திற் காலங்கண்ட பழம் பண்பாடாகிய இதன்கண்ணும் செய்யும் நல்வினை முற்ற முடியத் தீமைத் தாக்கமற்றதாதல், நம்மவர் அகப்பண்பாட்டுத் தகுதிக் கேற்பத் தெய்வம் இரங்குதல் என்ற அதன் நிலையைப் பொறுத்தே அமையும். ஆதலின், பசுபுண்ணியம் அங்ஙனமாதல் நிச்சயித்துக் கூறமுடியாதவொன்றாம். அது அவ்வாறாக, நம்மனோர் தன்மை போன்ற மனித சாமானியத்தன்மை கடந்து முன்னேறிப் பாசப்பற்றற்றுப் பரனைப் பற்றி நிற்கும் மஹான் ஒருவர் தம்மகத்தில் தாம் நீங்காது கண்டுகொண்டிருக்குஞ் சிவனோடு ஒன்றுபட்டுத் தான் அவனாய் நின்று, சிவன் செயலே தன் செயலாய் அவ்வகையில் செயற் பலனுஞ் சிவனுக்கேயாய்க் கொண்டு நல்வினை நிகழ்த்துமாறும் சைவ பாரம்பரியத்தில் உளதாகும். அது செய்பவனாகிய தன் பேரிலும் தன் சார்பிலும் எவ்வகைப் பற்றுதலுமின்றி முழுமையாகச் சிவன் பேரிலுஞ் சிவன் சார்பிலும் பொருந்துவதாகலாற் சிவ புண்ணியம் எனப்பட்டு, அதன் தரமுந் தகுதியும் வேறாகும். அது அங்ஙனமாதல், "நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளமுண் டாதல் தானென ஒன்றின்றியே தானதுவாய் - நானென வொன்று இல்லென்று தானே எனுமவரைத் தன்னடி வைத்து இல்லென்று தானும் இறை" எனச் சிவஞான போதத்திலும் "யாதே செய்து மியாமலோ நீ என்னில் ஆதே என்னும் அளவில் பெருமையான்" எனத் தேவாரத்திலும் "சிவனுமிவன் செய்தியெல்லா மென்செய்தி என்றுஞ் செய்ததிவனுக் கெனக்குச் செய்ததென்றும் பவமகல உடனாகி ஏன்று கொள்வன்" எனச் சிவஞான சித்தியாரிலும் வருவன கொண்டறியப்படும். இங்ஙனம் செய்பவர் சிவனுக்காக்கச் சிவனாலும் தனதென்றே ஏற்கப்படுதலால் இத்தகு நல்வினைச் செயல்கள் மாத்திரமெ ஒரு சிறிது தீமையுஞ் சாராமையுள்ள ஆசறு நல்லறமாதல் சாலும் என்க.
சிவபூசை, சிவாலயத்தொண்டு, சிவாலயநித்திய நைமித்தியங்கள், திருக்குளப்பணி, திருநந்தவனப்பணி ஆதியன சிவபுண்ணியம் எனப்படுவது அவை சிவன் பேரில் அல்லது சிவாலயத்தின் பேரில் நடப்பனவாதலால் மட்டுமன்று. அவை ஒரு சிறிது தீமைத்தாக்கத்திற்கு மிடமில்லா வகையில் சிவன் செயலாய்ச் சிவனால் உவந்தேற்கப்படுமாற்றானுமாம் எனல் அறிந்து கடைப்பிடிக்கத்தகும். இம்மஹத்தான சைவஞானப் பேருண்மை நமது தண்டியடிகள் நாயனாரால் உலகப்பிரசித்தமாக விளக்கப்பட்டுள்ள மகிமையும் சிந்தித்துணர்ந்து போற்றற்பாலதாகும்.
முற்கண்டவாறு மெய்த்தொண்டாகிய சிவதொண்டே தமது ஜன்மப் பிரதிக்கினையாகக் கொண்டு தோன்றியருளிய இந்த நாயனார் திருவாரூர்த் திருக்கோயிற் றிருக்குளம் சமணர் ஆக்கிரமிப்பால் எல்லை சுருங்கித் தூர்ந்துவர அகக்கண்ணாற் கண்டு அதைத் தாமே தனியாக வெட்டித் திருத்துஞ் சிவதொண்டிலீடுபட்டார். தமது பாழிகள், பள்ளிகள், தம்மவர் மனைகள் அமைக்கும் பாங்கில் குளப்பரப்பை முற்றாகக் கபளீகரித்துவிடத் திட்டமிட்டுச் செயற்பட்ட சமணர், நாயனார் செயலைத் தடுக்க வல்வழக்குப் பேசுதலும், குண்டர் மிண்டர் என்ற தம் நிலைக்கிணங்க அவர் மீது பலாத்காரம் பிரயோகித்தலும் இயல்பே, அவ்வகையில் அவர்கள் வலியத் தொடுத்த வாதத்தில், "மண்ணைக் கவ்விற் பிராணிபடும் வருத்த வேண்டாம்" எனச் சீவ இரக்கக் குரலெழுப்பித் தடுத்தனர். யதார்த்தத்தில் தன்முனைப்புச் சற்றுமின்றி நின்று செய்வது சிவன் செயலாம்படி செய்பவர் என்ற நிலையில் நாயனார் செயலில் அப்பழி பாவத்திற் கிடமில்லை. அதிற் பாதிக்கப்படும் உயிர்கள் கேடடைதற்குப்பதில் சிவனருளால் மேற்கதிபெறும் என்பது சமணரறியார். வெறுங்குரோத மனப்பான்மையினாலும் திருக்குள நிலப்பரப்பை ஆக்கிரமிக்குஞ் சுயநல வேட்கையினாலும் அவர்கள் உரைத்த நயவஞ்சக மொழிக்கெதிர், "எம்பிரானார்க் கானபணி ஆசிலா நல்லறமாதல் அறியவருமோ உமக்கு" என்று பதிலிறுத்துள்ளார் நாயனார். நாயனார் உண்மையில் அது சிவன் செயலாம் வகையில் நின்றே பணியாற்றினார் என்பது இப்பதிலில் "ஆனபணி" என்ற விதப்பினாலும் பணிநிகழும் போதெல்லாம் சிவனோடு சீவனை ஒன்று படுத்துஞ் சாதனமாகிய ஐந்தெழுத் தோதிக் கொண்டே இயன்றார் என்பது, "நாவால் இன்பமுறுங் காதல் நமச்சிவாய நற்பதமே ஓவா அன்பினில் எடுத்தோதி" எனவும் "அஞ்செழுத்தை வாய்ந்த தொண்டர் எடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார்" எனவும் வருஞ் சேக்கிழார் வாக்குகளால் அறியப்படுதலினாலும், குறித்த வாதின்போது அவர், "எம்பிரானருளால் நுங்கண் குருடாய் என் முகக்கண் விழிக்கப்பெறில் நீர் என்செய்வீர்" எனச் சூளுரைத்து முடிவில் அவ்வாறே நிகழப்பெற்றுக் கொண்டமையானும் எல்லாவற்றுக்கும் மேலாக, சமணர் கண்ணிழக்கப் போவதும் தாம் கண் விழிக்கப் பெறப்போவதுமாகிய பின்னிகழ்வுகளை முன்னுணர்வாற் கண்டுரைத்த நாயனாரது ஞானக்காட்சி வெளிப்பாட்டானும் பெறப்படும். இவ்வகையில் நாயனாரால் நிகழ்ந்த திருவருட் பிரபாவம் மிக்க அற்புத நிகழ்வு சேக்கிழார் செய்யுளில், "நண்ணி நாளும் நற்றொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி அண்ணல் தீர்த்தக் குளங்கல்லக் கண்ட அமணர் பொறாராகி எண்ணித் தண்டி யடிகள் பால் எய்தி முன்னின் றியம்புவார் மண்ணைக் கல்லிற் பிராணிபடும் வருத்தவேண்டாம் என்றுரைத்தார்" - "மாசு சேர்ந்த முடையுடலார் மாற்றங் கேட்டு மறுமாற்றம் தேசு பெருகுந் திருத்தொண்டர் செப்புகின்றார் திருவிலிகாள் பூசு நீறு சாந்தமெனப் புனைந்த பிரானுக் உரைப்பக்கேட்ட அறிவில்லார் சிந்தித்திந்த அறங்கேளாய் செவியு மிழந்தாயோ வென்ன மந்தவுணர்வும் விழிக்குருடுங் கேளாச் செவியும் மற்றுமக்கே இந்த உலகத்துள்ளனஎன் றன்பர் பின்னு மியம்புவார்." - "வில்லால் எயில்மூன் றெரித்தபிரான் விரையார் கமலச் சேவடிகள் அல்லால் வேறு காணேன்யான் அதுநீர் அறிதற்காரென்பார் நில்லா நிலையீர் உணர்வின்றி நுங்கண் குருடாய் என்கண் உலகெல்லாங் காண்பான் யான்கண்டால் என்செய்வீர் என்றெடுத்துரைத்தார்" என்பவற்றாற் புலனாம்.

3. திருக்குளத்திருப்பணி மாண்பு

பிரபஞ்சப் பொருள் முழுவதினுஞ் சிவம் அதுவதுவாம் நிலையில் வியாபித்துள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அக்னி, நீர், விருக்ஷம், கறையான்புற்று, ஓஷதிவகைகள் என்பவற்றில் சிவப்பிரபாவம் மிக்குத் தோன்றக்கண்டு ஆராதித்தல் சைவக்காட்சி விசேடமாகும். அங்ஙனமாதலால் சிவதலங்களிற் காலா காலமெல்லாம் இடையறாப் பூசை வழிபாடுகளாற் பிரகாசிப்பிக்கப்பட்டுவருஞ் சிவப்பிரபாவத்தின் காரணமாக அவ்வத்தலத்தில் இருக்கக்கூடும் நீர்நிலைகளிற் சிவக்களை விசேடதரமாகப் படிந்திருக்கும் என்பது சொல்லாதே அமையும். தலங்களை நாடிவரும் மெய்ஞ்ஞானிகளின் திருமேனிப்பரிசம் பொருந்துவதாலும் தீர்த்தவிழா என்ற பேரில் வேளைக்குவேளை அவற்றுக்கு எழுந்தருளும் ஆலயமூர்த்தியின் கிருபா நோக்கம் சேரப்பெறுதலாலும் அந்நீர்நிலைகளின் சிவப்பிரபாவம் மேன்மேல் மிக்கு வருஞ்சாத்தியமும் உளதாம். அதனால் அறிவறியாமக்கள் கூட அன்பாதரவாக அவற்றில் மூழ்கித் தேகாரோக்கியமும் இஷ்டசித்திப்பேறும் ஆத்மிகநலமும் பெற்றுவருதல் அநுபவத்தில் வைத்தறியப்படும். சைவத்திற் பிரசித்தமாயுள்ள, "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினைவாயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா வொன்றும் வேயனதோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே" எனுந் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரமும் இதே தேவாரத் திருப்பாடலைக் குருமுகமாக அறிந்து பாராயணம் பண்ணிச் சீடராகிய அச்சுதகளப்பாளர் வெண்காட்டு முக்குளநீர் மூழ்கி மெய்கண்டாரைப் புதல்வராகப் பெற்றுள்ள அருமைப்பாடும் இதே முக்குளத்தில் சுந்தரமூர்த்திநாயனார் தமது உடற்பிணிகள் தீரப்பெற்ற அதிசயமும் அதற்குச் சான்றாகும். திருவையாற்றுத் திருத்தவத்துத் தீர்த்தத் துறையாயமையுங் காவிரிநீரின் அற்புதமாண்பு. "களித்துக் கலந்ததொர் காதற்கசிவொடு காவிரிவாய்க் குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன் தெளித்துச் சுவையமுதூட்டி அமரர்கள் சூழிருப்ப அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே" எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் ஆனந்தக் களிப்பூட்டும் அமுதப்படையலாக வெளிவந்திருக்குஞ் சீரும் அறிந்துவக்கப்படும்.
இவ்வகையிற் பெருநலம் பயப்பனவாயுள்ள கோயிற் கேணிகள் குளங்கள் ஆகிய நீர்நிலைகளை அசிங்கமுறாமற் பேணுதலும் அவை கரையொடிந்து தூர்ந்து போகவிடாமல் வெட்டிக் கரைகட்டிப் புதுக்கிவைத்தலும் உத்தமோத்தமமான சிவப்பணிகளாகும். இவ்வுயர் பெருந்திருப் பணியானது நம்மைத் தீவினை தாக்காதிருக்கப் பெறுதற்குகந்த சாதனமுமாம். அது, "காவினையிட்டுங்குளம் பலதொட்டுங் கனிமனத்தால் ஏவினையாலெயில் மூன்றெரித்தாயென்றிரு பொழுதும் பூவினைக்கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தமைத் தீண்டப் பெறாதிருநீல கண்டம்" எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரத்தில் வருதல் கண்டு தெளியப்படும்.
எங்கள் தண்டியடிகள் நாயனார் புறக்கண் இன்மையாகிய தமது குறைபாட்டின் மத்தியிலும், அகக்கண் கூர்மைமிகப் பெற்று, மகா பெருந்தலமாகிய திருவாரூர்த் திருக்கோயிலின் திருக்குளத்துக்கு அநீதியான முறையில் ஏற்பட்ட அவலத்தை உற்றுணர்ந்து தாமே தனிமரமாய் நின்று சலிக்காத வீரதீரத்துடன் திருக்குளத் திருப்பணியாற்றிய சீர்மை சிவத்திருப்பணி இலட்சியத்தின் உச்சவரம்பாகக் கொண்டு சைவத்திருப்பணி வரலாற்றிற் பொன் எழுத்துக்களாற் பொறித்துப் போற்றப்படுந் தகையதாம். அவருடைய யதார்த்தமான ஆத்ம சுவரூபமும் அவர் பெற்ற அற்புதகரமான திருவருட்பேறும் இத்திருக்குளத் திருப்பணியை நிலைக்களனாகக் கொண்டு பிரகாசித்த மகிமை என்றென்றும் உற்றுணர்ந் துருகிப் போற்றிப் பயனடைதற் குரித்தெனல் மிகையன்றாம்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment