Tuesday, 2 October 2018

48.கணம்புல்ல நாயனார் புராண சூசனம்

இலகுவட வெள்ளாற்றுத் தென்பால் வாழு
    மிருக்குவே ளூரதிப ரெழிலார் சென்னிக்
கலைநிலவா ரடிபரவுங் கணம்புல்லர் தில்லைக்
    கருதுபுலீச் சரத்தாற்குக் காதற் றீப
நிலைதரத்தா மிடமிடியா லொருநாட் புல்லா
    னீடுவிளக் கிடவதுவு நேரா தாகத்
தலைமயிரி னெரிகொளுவு மளவி னாதன்
    றாவாத வாழ்வருளுந் தன்மை யாரே.
வடவெள்ளாற்றுக்குத் தென்கரையில் உள்ள இருக்கு வேளூரிலே, சிவபத்தியிற் சிறந்தவரும் பெருஞ்செல்வருமாகிய ஒருவர் இருந்தார். அவர் செல்வம் பெற்றதினால் அடையும் பயன் இதுவே என்று, சிவாலயத்தினுள்ளே திருவிளக்கேற்றித் தோத்திரம் பண்ணுவாராயினார். நெடுங்காலஞ்சென்றபின், வறுமைஎய்தி, சிதம்பரத்தை அடைந்து சபாநாயகரைத் தரிசனஞ் செய்துகொண்டு, தம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை விற்று, அங்குள்ள திருப்புலிச் சரமென்னும் ஆலயத்திலே திருவிளக்கேற்றி வந்தார்.
இப்படி யொழுகுநாளிலே, வீட்டுப்பொருள்களும் ஒழிந்து விட, கணம்புல்லுக்களை அரிந்துகொண்டுவந்து விற்று, நெய் வாங்கித் திருவிளக்கெரித்தார். அதனால் அவருக்குக் கணம்புல்லநாயனார் என்னும் பெயர் உண்டாயிற்று. ஒருநாள் தாம் அரிந்து கொண்டு வந்த புல்லு விலைப் படாதொழியவும், தம்முடைய பணி தவறாமல் அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். முன்பு விளக்கெரிக்கும் யாமம் வரையும் எரித்தற்கு அப்புல்லுப் போதாமையால், அடுத்த விளக்கிலே தம்முடைய திருமுடியை மடுத்து எரித்தார். அப்பொழுது பரமசிவன் பெருங்கருணை செய்தருள, கணம்புல்லநாயனார் சிவலோகத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.


கணம்புல்ல நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

அன்பில் அதீதநிலை ஒரோவழி ஆசார விதிமீறற்கும் உள்ளாதல்

திருக்கோயிலிற் செய்யத் தக்கன யாவை செய்யத்தகாதன யாவை என்றவரையறையும் செய்யத்தக்கனவற்றை ஆசாரம் எனத் தழுவுதலும் செய்யத்தகாதனவற்றை அநாசரம் என விலக்குதலுமாகிய கடைப்பிடிகளுஞ் சைவத்திற் பிரதானமானவைகளாம். சரியை கிரியை நெறிகளில் நிற்பார்க்கு அவை மிகக் கண்டிப்பான விதிகளாதல் சைவசமய நெறி முதலிய உண்மை நூல்களாற் பெறப்படும். எனினும், இறைவன்பால் தமக்குள்ள அத்தியந்த உறவுணர்வாகிய மெய்யுணர்வு தலைப்பட்டு அதில் அதீதநிலை யெய்திய மேலோர்கள் விஷயத்தில் ஒரோவழி அவை விதிவிலக்கு நிலைக்குள்ளாதலும் அவர் வரலாறுகளிற் காணப்படும். உச்சிட்ட நீரால் அபிஷேகித்தல் உச்சிட்ட உணவால் நைவேத்தியஞ் செய்தல் முதலிய அநாசார விதிகளாற் பூசை செய்து முத்திப் பேரின்பமுற்ற கண்ணப்ப நாயனார், மென்மலரால் அர்ச்சிக்கற் பாலதாகிய சிவலிங்கத் திருமேனியை வன்மலராகிய கன்மலரால் அர்ச்சித்து முத்தி பெற்ற சாக்கிய நாயனார், திருவிளக்குத் தகழியை உடலுதிரத்தால் நிரப்பித் திருவிளக்கேற்ற முயன்று சிவன் கருணைக்காளாகிப் பேரின்ப நிலையுற்ற கலிய நாயனார் முதலானோர் வரலாறுகளினால் அது புலனாகும். திருக்கோயிலில் மயிர்கோதுதலே அநாசாரம் என்பது விதியாகவும் தமது தலைமுடியையே எரிபொருளாக திருவிளக்குத் தகழியிலிட்டுத் திருவிளக் கெரித்த கணம்புல்ல நாயனார் செய்தியும் இவ்வகையினதாகவே கொள்ளப்படும்.
சிதம்பரத்திலுள்ள திருப்புலீச்சரம் என்னும் ஆலயத்தில் திருவிளக்கேற்றுந் தொண்டிலீடுபட்டிருந்த இந்த நாயனார், அதற்குபகாரமாய் நின்று நிலவிய தமது சொத்து வளம் அற்றொழியவே, அரிதின் முயன்று கணம்புல் என்ற ஒருவகைப்புல்லைத் தேடி அரிந்து சுமந்து திரிந்து விற்று வந்த பொருள் கொண்டு அது செய்வாராயிருந்த காலை, ஒருநாள், அக்கணம்புல் எத்துணைப் பிரயாசம் பண்ணியும் விற்கப்படாதொழியவே, வேறு வழி காணாது அப்புல்லையே திருவிளக்குத் தகழிகளில் மாட்டி எரிப்பாராயினர். முன்னைநாள்களிற் செய்தது போல அன்று யாமந்தோறும் எரிக்கப் புல் போதாக் குறையாகிவிடவே, எப்படியாவது தொடர்ந்து வழக்கம்போல் விளக்கெரித்துத் தம் தொண்டுறுதி காக்குந் துணிபினால் தமது தலைமுடியையே அரிந்து விளக்குத் தகழிகளில் மாட்டி எரித்து அது வாயிலாகச் சிவலோகத்திற் சிவனைத் தொழுதிறைஞ்சியிருக்கும் பெரும் பேறு பெற்றுய்ந்தார். அது அவர் புராணத்தில், "இவ்வகையாற் றிருந்துவிளக் கெரித்துவர வங்கொருநாண் மெய்வருந்தி யரிந்தெடுத்துக் கொடுவந்து விற்கும்பு லெவ்விடத்தும் விலைபோகா தொழியவுமிப் பணியொழியா ரவ்வரிபுல் லினைமாட்டி யணிவிளக்கா யிடவெரிப்பார்" - "முன்புதிரு விளக்கெரிக்கும் முறையாமங் குறையாமன் மென்புல்லும் விளக்கெரிக்கப் போதாமை மெய்யான வன்புபுரிவாரடுத்த விலக்குத்தந் திருமுடியை யென்புருக மடுத்தெரித்தா ருருவினையின் றொடக்கெரித்தார்" - "தங்கள்பிரான் றிருவுள்ளஞ் செய்துதலைத் திருவிளக்குப் பொங்கியவன் புடனெரித்த பொருவிறிருத் தொண்டருக்கு மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளச் சிவலோகத் தெங்கள்பிரான் கணம்புல்லரினிதிறைஞ்சி யமர்ந்திருந்தார்" என வரும்.
தகழியி லிட்டது எண்ணெயோ தலைமயிரோ என்பதல்ல, அவா மெய்யான அன்பு புரிவாராய்ப் பொங்கிய அன்பினில் என்புருக மடுத்தெரித்த விசேடமே அவர் செயலின் அந்தரங்க விசேடமாதலும் அதற்கு இன்றியமையாது வேண்டப்படும். அவரது ஆத்மிக உயர்பண்பு. அவர் இருவினையின் தொடக்கெரித்தார் என்றதனால் உய்த்துணரக் கிடத்தலும் செயல் குற்றமோ நற்றமோ என்ற விசாரமின்றி, அவர் அன்புறுதியைச் சிவபிரான் திருவுளஞ் செய்து மங்கலமாம் பெருங்கருணை புரிந்திருத்தலும் இவர் வரலாற்றுண்மைச் சிறப்புக்களாக வைத்துணரப்படும். அதுபற்றி யன்றே மெய்யடியார்பால் விளங்கும் அன்புறுதி நோக்கில் அவர் குற்றமுங் குணமாக் கொள்ளும் சிவனாரின் பரத்துவ விலாசத்தைத் தமது தேவாரத் திருப்பாட லொன்றிற் போற்றிப் புனையுஞ் சுந்தர மூர்த்தி நாயனார் அதற்கெடுத்துக் காட்டாகப் பெயர்சுட் டியுரைக்கும் நாயன்மார் எண்மருள் இந்த நாயனாரும் இடம்பெறலாயினார் என்க. அத்திருப்பாடல், "நற்றமிழ்வல்ல ஞான சம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப் போவானுங் கற்ற சூதனற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ்செய்யினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன் பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன் கூருளானே" என வரும்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment