Tuesday, 2 October 2018

70.சடைய நாயனார் புராண சூசனம்

சங்கையிலா வரன்மறையோர் நாவ லூர்வாழ்
    தவரதிபர் தம்பிரான் றோழ ராய
வெங்கள்பிரான் றவநெறிக்கோ ரிலக்கு வாய்த்த
    விசைஞானி யார்தனய ரெண்ணார் சிங்க
மங்கையர்க டொழும்பாவை மணவாள நம்பி
    வந்துதிக்க மாதவங்கள் வருந்திச் செய்தார்
வெங்கணரா விளங்குமிளம் பிறைசேர் சென்னி
    விடையினா ரருள்சேர்ந்த சடைய னாரே.
திருநாவலூரிலே, ஆதிசைவகுலத்திலே, சடையநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் உலகமெல்லாம் மெய்ஞ்ஞானவொளியைப் பெற்று உய்யும்படி சமயகுரவராகிய சுந்தரமூர்த்திநாயனாரைப் புத்திரராகப் பெற்ற பெரும் பேற்றை உடையவர்.
திருச்சிற்றம்பலம்.


சடைய நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

ஞாலம் வாழ மகப்பெற்றார் போற்றற்பாலரெனல்

திருநாவலூருலே, "மாதொரு பாகனார்க்கு வழிவழியடிமை செய்யும்" வேதியர் குலமாகிய ஆதிசைவர் குலத்திலே தோன்றிச் சிவன் திருநாமமாகிய சடையன் என்பதே தமக்கும் நாமமாகக் கொண்டிருந்து சிவனடிமை நெறியில் வாழ்ந்து திருவருளுக்குப் பாத்திரமாய் விளங்கியவர் இந்த நாயனார். அது, "அரும்பா நின்ற அணிநிலவும் பணியு மணிவா ரருள் பெற்ற சுரும்பார் தொங்கற் சடையனார்" எனுஞ் சேக்கிழார் வாக்கினால் தெளியப்படும். அவர், திருத்தொண்டத் தொகையளித்த திருவாளனும் திருத்தொண்டர் புராண காவியத்தின் தன்னிகரில்லாத் தலைவனுமாகவல்ல நம்பியாரூரைத் தமக்கு மகனாகப் பெற்றதன் மூலம் தமது குலம் நலம் தலம் மூன்றும் ஒப்புயர்வற்ற விளக்கம் பெற வைத்ததுடன் தம்பிரானையே தோழனாகக் கொண்டு தூதனுப்பியதும் உற்ற உருவுடனே தான் கயிலாய மடைந்ததுடன் தன் தோழனாகிய சேரமானையும் அவ்வண்ணமே தன்னுடன் அங்கெய்த வைத்தது மாகிய அம்மகன் செயல்களால், மெய்த்தொண்டராவார்க்குத் திருவருள் வழங்கத்தகும் அளப்பரிய பெருமகிமை இத்தகையதென அறிந்துணர்ந்து ஞாலமெலாம் வாழவந்த பெருவாழ்வுக்கு முன்னிலைக் காரணமாயிருந்து தாமுஞ் சிவப்பே றெய்தியுள்ளார். அத்தகைய பெருந்தகையாகிய அவர்பெருமை போற்றத் தகுமெனல் சொல்லாமே யமையும். அந்நயம் புலப்படுமாறு அவர்புராணச் செய்யுளிலும் பெருமை போற்றுதல் சொல்லாமலே கொள்ள விடப்பட்டிருத்தல் காணலாம். அது "தம்பிரானைத் தோழமைகொண் டருளித் தமது தடம்புயஞ்சேர் கொம்பனார் பால் ஒருதூது செல்ல ஏவிக் கொண்டருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணையில் துணைவராம் நம்பியாரூ ரரைப் பயந்தார் ஞாலமெல்லாங் குடிவாழ" என வரும்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment