Tuesday 2 October 2018

61.திருவாரூர்ப் பிறந்தார்கள் புராண சூசனம்

பொங்கியமா தவமுடையார் வருண நான்கிற்
    பொருந்தினர்க ளல்லாத புகழி னுள்ளார்
சங்கையிலா வருந்தவமுன் புரிந்தா ரிங்குச்
    சார்விலா ரிறைவனருள் சார்த லாலே
கங்கைவாழ் சடைமுடியா னருளை நீங்காக்
    கணநாத ரெனவாழுங் கருத்தார் கன்னிச்
செங்கண்வரால் வளர்வாவி திகழு மாரூர்ச்
    சிறந்துளா ரெமையாளப் பிறந்து ளாரே.
பூர்வஜன்மத்திலே செய்த புண்ணியத்தினாலே திருவாரூரென்னுஞ் சிவஸ்தலத்திலே சைவமரபினராய்ப் பிறந்தவர்கள் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நான்குவருணத்தாராயினும் சங்கரசாதியாராயினும், பரமசிவனுடைய திருவருளை அடைதலால், சிவகணநாதர்களாய் இருப்பார்கள். திருவாரூர்ப் பிறந்தாரெல்லாருஞ் சிவகணநாதர்கள் என்று சிவபெருமானே நமிநந்தியடிகணாயனாருக்கு அருளிச்செய்தனர். அந்நாயனாரும் அவர்களெல்லாருஞ் சிவகணநாத வடிவினராய்த் தோன்றக் கண்டனர்.
திருச்சிற்றம்பலம்.


திருவாரூர்ப் பிறந்தார்கள் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

திருவாரூர்ப் பிறந்தாரும் வணங்கப்படுந் தகுதியினரெனல்

பழமையும் பெருமையும் மேன்மையும் வாய்ந்த பெருஞ் சிவதலங்கள் சிலவற்றில் திருவாரூர் ஒன்றாகும். அதன் பழமை, "ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவ மானநாளோ கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந் திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே" என்பது முதலாக இத்தகைய பத்துத் திருத்தாண்டகங்களால் அமையும் அப்பர் சுவாமிகள் தேவாரப் பதிகத்தானும் பெருமை, தேவார ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இதன்பேரிற் பதிகங்கள் பல அருளியுள்ளமையும் சிவபெருமான் அங்கு மணிப்புற்றே இலிங்கத் திருமேனியாகக் கொண்டெழுந்தருளியுள்ளமையும், பொன்னாடாண்ட தியாகராஜப் பெருமானின் விடங்கத் தலங்கள் ஆறில் முதன்மை பெற்றுள்ளமையும் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்று முக்கிய நிகழ்வுகட்கெல்லாம் இடமாயிருந்துள்ளமையும், சிவனடியார் திருக்கூட்டம் விளங்கும் தேவாசிரய மண்டபத்துடனாயிருந்து சைவப் பக்திஞானச் செல்வர்களாகிய அடியார் வரலாற்று மூலக்கருவான திருத்தொண்டத் தொகை தோன்ற உதவியுள்ளமையும் ஆதிய இத்திறங்களானும் மேன்மை, நமிநந்தியடிகள் நீரால் திருவிளக்கிடவும் கண்மணியின்றியே தண்டியடிகள் நாயனார் திருக்குளந் தோண்டிச் சமணரைக் கலக்கங் காணவும் வைத்ததுடன் "திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாருஞ் சிவகணங்கள்" எனத் தியாகராஜப் பெருமான் நமிநந்தி யடிகள் நாயனார்க்கு வெளிநின்றுணர்த்தியும் அவர் கண்களிக்கக் காட்டியும் வைத்துள்ளமையானும் பெறப்படும்.
இம் மேன்மையையே இங்கு இப்புராணம் விதந்தெடுத்தோதி, திருக் கயிலையிலிருந்துவந்த சிவகணங்கள் அவர்கள் ஆதலின் அவர்களை வணங்குவோர் உயர் கதிப் பேறெய்துவர் என்கின்றது. அது, "திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார் பெருக்கியசீர்த் திருவாரூர் பிறந்தார்கள். ஆதலினால் தருக்கிய வைம் பொறியடக்கி மற்றவர் தந்தாள் வணங்கி யொருக்கிய நெஞ்சுடையவர்க்கே யுரித்தாகு முயர்நெறியே" என வரும்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment