வெண்ணாவ விறைக்கொளிநூற் பந்தர் செய்த வியன்சிலம்பி யதுவழித்த வெள்ளா னைக்கை யுண்ணாடிக் கடித்தவுட லொழியச் சோழ னுயர்குலத்துச் சுபதேவன் கமலத் தோங்கும் பெண்ணாகி யவள்வயிற்றில் வைகிச் செங்கட் பெருமானாய்த் தென்னவனாய்ப் பெருங்கோயில்பலவுங் கண்ணார்வித் துயர்தில்லை மறையவர்க்கு முறையுள் கனகமய மாக்கியருள் கைக்கொண் டாரே.
சோழமண்டலத்திலே, சந்திரதீர்த்தத்தின் பக்கத்திலே ஒரு வனம் இருந்தது. அதிலே நின்ற ஒரு வெண்ணாவன் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் வெளிப்படலும், ஒரு வெள்ளானை அதைக்கண்டு, நாடோறும் புழைக்கையினாலே தீர்த்தம் முகந்து ஆட்டி, புஷ்பங்களைச் சாத்தி, வழிபட்டு ஒழுகுவதாயிற்று. அதனால் அந்த ஸ்தலத்துக்குத் திருவானைக்கா என்று பெயராயிற்று. அறிவினையுடைய ஒரு சிலந்தி, அந்தச் சிவலிங்கத்தின் மேலே சருகு உதிராவண்ணம், தன் வாய்நூலினாலே மேற்கட்டி செய்தது. சிவலிங்கத்தை வணங்கவந்த வெள்ளானை அதைக்கண்டு, அது அநுசிதம் என்று நினைந்து, அதைச் சிதைக்க; சிலந்தி மீளவும் மேற் கட்டி செய்தது, வெள்ளானை மற்றநாளும் அதைச் சிதைத்தது. அது கண்டு சிலந்தி "எம்பெருமான் மேலே சருகு உதிராவண்ணம் நான் வருந்திச் செய்த மேற்கட்டியை இது அழிக்கலாமா" என்று கோபித்து, வெள்ளானையினது புழைக்கையினுள்ளே புகுந்து கடிக்க; வெள்ளானை கையை நிலத்திலே மோதிக்கொண்டு விழுந்து இறந்தது. கையை நிலத்திலே மோதியபோது, அதனுள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தது வெள்ளானை சிவகணநாதராகித் திருக்கைலாசமலையை அடைந்து, சிவபெருமானைச் சேவித்துக் கொண்டிருந்தது.
சுபதேவனென்னுஞ் சோழமகாராஜன் தன் மனைவியாகிய கமலவதியுடன் சிதம்பரத்தை அடைந்து, சபாநாயகரை உபாசனை செய்துகொண்டிருக்கு நாளிலே; கமலவதி புத்திரபாக்கியம் இன்மையால் வரம் வேண்ட; அந்தச் சிலந்தி சபாநாயகரது திருவருளினாலே அவளுடைய வயிற்றிலே மகவாய் வந்து அடைந்தது. கமலவதிக்குப் பிரசவகாலம் அடுத்தபொழுது, சோதிடர்கள் "இந்தப்பிள்ளை ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாகில், முப்புவனங்களையும் அரசாளும்" என்றார்கள். கமலவதி "என் பிள்ளை இப்போது பிறவாமல் ஒருநாழிகை கழித்துப் பிறக்கும்படி என்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள்" என்று சொல்ல; அங்குள்ளவர்கள் அங்ஙனங் கட்டித் தூக்கி, சோதிடர்கள் குறித்த காலம் அணையக் கட்டவிழ்த்து விட்டார்கள். கமலவதி பிள்ளையைப் பெற்று, அது பிறக்குங்காலந் தாழ்த்தமையாற் சிவந்த கண்களையுடையதாய் இருத்தல்கண்டு, "என்கோச்செங்கண்ணானோ" என்று சொல்லிக்கொண்டு, உடனே இறந்துவிட்டாள். சுபதேவன் அப்புதல்வரை வளர்த்து முடிசூட்டி, அரசை அவரிடத்தில் ஒப்பித்து, தான் தவஞ்செய்து சிவலோகத்தை அடைந்தான்.
கோச்செங்கட்சோழநாயனார் பரமசிவனது திருவருளினாலே பூர்வசன்ம வுணர்ச்சியோடு பிறந்து, சைவத்திருநெறி தழைக்க அரசியற்றுவாராகி, சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவிக்கத் தொடங்கினார். திருவானைக்காவிலே தாம் முன்னே அருள் பெற்றதை அறிந்து, அங்கே வெண்ணாவலுடன் பரமசிவனுக்குத் திருக்கோயில் கட்டுவித்தார். மந்திரிகளை ஏவி, சோழநாட்டில் வெவ்வேறிடங்களிலே சிவாலயங்கள் கட்டுவித்து, அவ்வாலயங்கடோறும் பூசை முதலியவற்றிற்கு நிபந்தங்கள் அமைத்தார். பின்பு சிதம்பர ஸ்தலத்தை அடைந்து, சபாநாயகரைத் தரிசித்து வணங்கி தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்து, பின்னும் பல திருத்தொண்டுகளைச் செய்து கொண்டிருந்து, சபாநாயகருடைய திருவடி நீழலை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
கோச்செங்கட் சோழ நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
1. சிவபுண்ணிய விளைவும் பூர்வசிவபுண்ணியப் பயிற்சியுடையார்க்கே ஆகுமெனல்
கன்ம வசத்தால் உயிர்களுக்குப் பிறவிகள் பல பல உளவென்பதும் எவ்வெப் பிறப்பினும் அவ்வவ்வுயிர்க் குள்ளுயிராகிய சிவன் அவ்வவற்றி னியல்பாய்ப் பொருந்தி அவ்வவற் றுடனாயுள்ளானென்பதும் அதனால் மனிதப் பிறப்பல்லாத மற்றைப் பிறப்புகளிற் கூட உயிர்கள் தத்தம் அகச்சூழ் நிலையாகிய மலபரிபாகத்திற்கும் புறச்சூழ்நிலையாகிய வாழ்க்கை வசதிக்கு மேற்ற அளவிற் சிவனை ஆராதித்தலாகிய சிவபுண்ணியம் புரிதற் கிடமுண் டென்பதும் சைவ சாஸ்திர தோத்திர நூல்கள் புராணேதிகாசங்கள் அனைத்தினுக்கும் ஒப்ப முடிந்த தொன்றாம். அது, "பிடியெலாம் பின்செலப் பெருங்கைம்மா மலர் தழீஇ விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங் கடியுலாம் பூம்பொழிற் காணப்பேரண்ணல் நின் அடியலால் அடைசரன் உடையரோ அடியரே" எனவும் "நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் கறைநிறத்தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகமெல்லாங் குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீரட்டனாரே" எனவும் வருந் தேவாரங்களாற் பெறப்படும்.
உயிர்கள் செய்யும் புண்ணியங்களிற் பசுபுண்ணியம் என்றுள்ளவை மேற் பிறப்புக்களில் தத்தமக்களவான லௌகிக இன்பப் பலங்களைத் தந்தொழிவதோடு மேலும் அவ்வகை இன்ப வேட்கை விளையுஞ் சார்பினைத் தோற்றுவனவாயிருக்க, இவ்வகைச் சிவபுண்ணியங்கள் மேற்பிறவிகளிலுஞ் சிவபுண்ணியங்களை மிகுதியாகச் செய்வதற்கான நல்வசதிளோடு கூடிய உயர்குலப் பிறப்புக்களைத் தந்து மென்மேல் உயர்தரமான சிவ புண்ணியங்களை இயற்றுவித்து அவற்றின் பேறாக வினைப்பந்த நீக்கத்திற்கு ஒருதலையாக இன்றியமையாத இருவினையொப்பு நிகழப் பண்ணி ஞானத்தைக் கொடுத்துச் சிவப்பேறடைவிக்கும் பாங்கில் அழியா விதைமுதலாய்த் தொடர்ந்து நின்றுதவுவன ஆதலின் இவை 'இறப்பில் தவ'மெனப் போற்றப் பெறுவனவாம். அது, சிவஞான போதத்தில், "பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும் இசைத்து வருவினையிலின்ப" - "மிசைத்த இருவினையொப்பில் இறப்பில் தவத்தான் மருவுவனாம் ஞானத்தை வந்து" என வருவதிலிருந்து தெரிந்து கொள்ளப்படும். இசைத்து வருவினை பசுபுண்ணியம்; இறப்பில் தவம் சிவபுண்ணியம்.
ஒரு காலத்தில் திருவானைக்காவிற் சந்திர தீர்த்தத்தின், அயலில் நின்ற வெண்ணாவல் மரமொன்றில் வாழ்ந்த சிலந்தியொன்று மரத்தடியிலிருந்த சிவலிங்க மூர்த்தியில் உதிர்சருகுகள் படாவண்ணம் மேலே வலைகட்டித் தடுக்குந் தொண்டு மேற்கொண்டிருப்பதாயிற்று. அதற்கிருந்தது போன்ற பூர்வ புண்ணிய வசத்தினாலே அதே மூர்த்தியைத் துதிக்கை நீர் கொண்டாட்டிப் பூச்சூட்டி வழிபடும் யானை யொன்று தனது அபிஷேகத் தொண்டுக்குச் சிலந்தி வலை இடைஞ்சலாமெனக் கொண்டு அதனை அறுக்கையிற் சினமுற்ற சிலந்தி யானையின் துதிக்கைப் புழையுட் புகுந்து தீண்டவே அவ்வேதனை தாங்காது கையை நிலத்தடித்துப் புரண்டிறந்த யானையோடு சிலந்தியும் இறப்பதாயிற்று.
இறந்த அப்பிறப்பில் ஈட்டிய சிவ புண்ணியப் பேறாக அச்சிலந்தியானது மறுபிறப்பில், சிவ புண்ணியங்களை மிகுதியுஞ் செய்யும் தவச்சார்புள்ள குலமாகிய சோழ மன்னர் குலத்திற் சுபதேவன் என்ற மன்னனுக்குக் கமலவதி என்ற அவன் பட்டத்தரசி வயிற்றிற் கோச்செங்கணான் என்ற புத்திரனாகப் பிறப்பெய்துவதாயிற்று. சிவனருளால் முற்பிறப்புணர்ச்சி யோடே பிறந்து வளருங் கோச்செங்கணான் தான் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தான் முற்பிறப்பிற் பணிபுரிந்த திருவானைக்கா வெண்ணாவலடி முதற் பலவேறிடங்களிற் சிவாலயங்கள் அமைக்குஞ் சிவபுண்ணியப் பணியிலீடுபடுவாராயினர். அது அவர் புராணத்தில், "கோதை வேலார் கோச்செங்கட் சோழர் தாமிக் குவலயத்தில் ஆதிமூர்த்தி அருளால்முன் அறிந்து பிறந்து மண்ணாள்வார் பூதநாதன் தான்மகிழ்ந்து பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள் காதலோடும் பலஎடுக்குந் தொண்டு புரியுங் கடன் பூண்டார்" - "ஆனைக்காவில் தாம்முன்ன மருள்பெற்றதனை யறிந்தங்கு மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழுங் கோயில் செய்கின்றார். ஞானச்சார்வாம் வெண்ணாவலுடனே கூட நலஞ் சிறக்கப் பானற்களத்துத் தம்பெருமா னமருங் கோயிற் பணிசமைத்தார்" என வரும். நாடு முழுவதிலும் வேண்டுமிடங்கள் தோறும் கோயில்கள் அமைத்து அவ்வவற்றுக்கு வேண்டும் நிபந்தங்களும் ஒழுங்கு செய்தபின் சிதம்பரத் தலத்திற் பேரன்பு தலைப்பட்டு வழிபாடுகளாற்றி அங்குள்ள தில்லை வாழந்தணர்களுக்கு மாளிகைகளும் அமைத்துக் கொடுத்து வாழ்நாள் முழுவதுஞ் சிவாலயத் திருப்பணியே கண்ணாகக் கொண்டிருந்து தில்லையம்பலவர் திருவடி நிழற்கீழ் அமர்ந்தார் என நிறைவுறுகின்றது இந்த நாயனாரின் புனித வரலாறு.
முன்னைப் பிறப்பில் திருவானைக் காவில் தாம் புரிந்த சிவப்பணிக்கு யானை இடையூறு விளைத்தது போல் இப்பிறப்பில் தாமமைக்குந் திருக்கோயில்களிலும் அகஸ்மாத்தாக யானை புகுந்து தீங்கு விளைக்குஞ் சார்பினைத் தடுக்கு முகமாக இந்த நாயனார் யானை உட்புகுதற் கியலாத கோயில்களாம்படியான மாடக் கோயில்களாகத் தமது திருக்கோயில்கள் எல்லாவற்றையும் அமைத்திருத்தலும் முன்னறிந்து பிறந்து மண்ணாள்வார் என இவர் பற்றிச் சேக்கிழார் நாயனார் கூறியுள்ள இலக்கணத்துக்கு நிதர்சனமாகும்.
2. நாயனார் திருமுறைகளிற் பெருக இடம் பெறல்
இவர் அமைத்த மாடக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாதலால் தலச்சிறப்போடு இவர் சிவப்பணி மாண்பும் பாடற் பொருளாயிற்று. தேவார ஆசிரியர் மூவர் பாடல்களிலும் அது காணப்படும். அது, திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தில், "மையகண் மலைமகள் பாகமாயிருள் கையதோர் கனலெரி கனல வாடுவார் ஐயநன் பொருபுனலம்பர்ச் செம்பியர் செய்யகணிறை செய்த கோயில் சேர்வரே" (செய்ய கணிறை-கோச்செங்கணான்) எனவும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில், "சிலந்தியு மானைக்காவில் திருநிழற் பந்தர் செய்து உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக் கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே" - "சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை" - "சிலந்திதனக் கருள் புரிந்த தேவ தேவை" - "சிலந்திக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய்" - "புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயினூலாற் புதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் வேய்ந்த சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்து சிவகணத்துப் புகப் பெய்தார் திறலான் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளாவன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே" எனவும் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில், "சிலந்தி குற்றஞ் செய்யினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்" - "கருவரை போலரக்கன் கயிலைம்மலைக் கீழ்க் கதறப் பொருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான் திரைபொரு பொன்னிநன் னீர்த்துறைவன் திகழ் செம்பியர்கோன் நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே" எனவும் வரும்.
இவற்றிற் பெரும்பாலனவற்றில் நாயனார் சிலந்தி என்றே சுட்டப்படுதல் முன்னைச் சிவ புண்ணிய வாசனையாற் பின்னைச் சிவபுண்ணியம் வீறெய்தும் என்னும் நயம்பற்றியாம்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment