Tuesday, 2 October 2018

51.வாயிலார் நாயனார் புராண சூசனம்

ஞாயிலார் மதிற்றொண்டை நாட்டு மேன்மை
    நண்ணுமயிலாபுரியின் வேளாண் டொன்மை
வாயிலார் மலைவில்லா னடியே போற்றி
    மறவாமை தலைநின்ற மனமே செம்பொற்
கோயிலா வுயர்ஞானம் விளக்கா நீராக்
    குலவியவா னந்தமன்பே யமுதாக் கொண்டு
தாயிலா னிருசரண நிகழ வேத்துந்
    தன்மையா ரருள்சேர்ந்த நன்மை யாரே.
தொண்டை நாட்டிலே, திருமயிலாப்பூரிலே, வேளாளர் குலத்திலே, வாயிலார்நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனை ஒருபொழுதும் மறவாத மனமாகிய ஆலயத்துள் இருத்தி, ஞானமாகிய திருவிளக்கை ஏற்றி, ஆனந்தமாகிய திருமஞ்சனமாட்டி, அன்பாகிய திருவமுதை நிவேதித்தலாகிய ஞானபூசையை நெடுங்காலஞ்செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.


வாயிலார் நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

அகப்பூசை முத்தி சாதனமாதல்

சரியைத் திருத்தொண்டுகளான திருவலகிடல், திருமெழுக் கிடல், திருவிளக்கேற்றல், தலை வணங்கல், சிவன் புகழ் பாடல் ஆதியன புறவுறுப்புக்களாகிய கை, தலை, நா முதலியன சிவஞ்சாரும் நெறியில் நிற்கப் பயிற்று மாறுபோல தூபம், தீபம், மலர்நீர், நைவேத்தியம் முதலியன கொண்டாற்றுங் கிரியைத் திருத்தொண்டாகிய சிவபூசை இந்திரியம் அந்தக்கரணம் ஆகிய அகவுறுப்புகளைச் சிவஞ்சாரும் நெறியில் நிற்கப் பயிற்று மியல்பினதாம். அகத்துக்கும் அகமாகிய சிவத்தொடு அகவுறுப்புக்களை நேரடியாகத் தொடர்புறுத்தும் பண்பினதாதலின் இது புறவுறுப்புக்களாலாஞ் சரியைத் தொண்டைவிட வீறும் விறலும் மிக்கதாதல் கொண்டு இதன் இன்றியமையாமை துணியப்படும். அது அவ்வாறாதல், "பூக்கைக் கொண்டரசன் பொன்னடி போற்றிலர் நாக்கைக் கொண்டரசன் நாமம் நவிற்றிலார் ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே" எனத் தேவாரத்தும் "மறப்புற்று விவ்வழி மன்னி நின்றாலுஞ் சிறப்பொடு பூநீர் திருத்தமுன் னேந்தி மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் எந்தை பிரானே" எனத் திருமந்திரத்தும் "தமக்கருக மோருருவிற் பூசைசமையார் தமக்குத் துணையாதோ தான்" எனச் சைவ சமய நெறியினும் வருவன கொண்டறியப்படும். குறித்த இந்திரியம் அந்தக் கரணாதிகள் தமது இயக்கத்துக்கு உயிரை இன்றியமையாதனவாயிருந்தும் அதே உயிரைப் பராதீனப்படுத்தித் தேகாதிபோகங்களுக்கு அடிமையாக்கும் வகையில் அவற்றுக்கிருக்கும் ஆற்றல் அவற்றைப் படைத்தவனது ஆணையால் நேர்ந்ததென்பது ஆத்மஞான அந்தரங்க உண்மையாதலின் ஆணையாளனாகிய அவன் பணியி லழுந்தி அவன் கருணையால் தம்நிலை மாறித் திருந்து மளவுக்கு அவற்றை அவன் முகப்பட்டு நிற்கப் பயிற்றுதல் ஒன்றே அவற்றாற் பராதீனப்படுத்தப்படும் நிலை நீங்கி உயிர் தன்னுடனான சிவனைச் சாருந் சுயாதீனநிலை பெறுதற்கு உகந்த வழியாம் என்னும் விவேகம் பற்றியும் அப்பண்பினதாய் சிவபூசையின் இன்றியமையாமை துணியப்படுவதாம். அது, "இந்திரியம் எனைப் பற்றிநின்றே என் வசத்தில் இசையாதே தன்வசத்தே எனையீர்ப்ப திவற்றைத் தந்தவன் தன் ஆணைவழி நின்றிடலால் என்றுந் தானறிந்திட்ட வற்றினொடுந் தனையுடையான் தாள்கள் வந்தனைசெய் தவற்றின் வலியருளினால் வாட்டி வாட்டமின்றி இருந்திடவும் வருஞ் செயல்களுண்டேல் முத்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள் மூளாவங்காளாகி மீளா னன்றே" எனச் சிவஞானசித்தியாரில் வருவது கொண்டும் வலுவுறுவதாம்.
இங்ஙனம் இந்திரியங்கள் அந்தக்கரணங்களைச் சிவனன்பால் நேர்படுத்தும் அகமுயற்சி அழுத்தம் பெறற் பொருட்டே புறத்திற் சிவனுருவொன்றைத் தாபித்துத் தூபதீபாதிகள் கொண்டு சிவபூசையாற்றும் நிலை நேர்ந்துள்ள தென்பது, இப்புறப் பூசையிலும் அந்தர் யாகம் என்ற அகப்பூசை முன் நியமமாக இருந்து வருதலினாற் பெறப்படும். அத்துடன் அந்தர் யாகம் பண்ணாது செய்த சிவபூசை பலனிழக்கம் என்பதுங் கருதத்தகும். அது, "அர்ச்சித்தா னந்தரியாகம் புரியாதே பலத்தை வர்ச்சித்தானென்றே மதி" என்னுஞ் சைவசமய நெறித் திருக்குறளானும் "சிறந்தகத்து ளான்மாவினுறை சிவனைச் சிவபூசை செய்யா னாகி மறந்து புறத்தினிற் பூசை வருந்தியே யியற்றுமவன் வயங்குமாவின் கறந்த பாலடி சிலகங்கையுளே யிருப்பவுந்தான் கண்டுணாது புறங்கையினை நக்குமவன் போலுமால் யாமறியப் புகலுங்காலே" என்ற அதன் உரை மேற்கோட் செய்யுளானும் வலுவுறும்.
ஆகவே, இங்ஙனம் பல்லாற்றானும் சிவபூசையின் அந்தரங்க அடிநிலைப் பண்பெனக் கொள்ளவுள்ள அகப் பூசை யானது மெய்யுணர்வுற்றோரால் அவரவர் அகப் பண்பாட்டுநிலைக் கநுகுணமான வகையில் அனுஷ்டிக்கப்படுவ தொன்றாம். புறப்பூசை அங்கங்களான கோயில், பஞ்சசுத்தி, தூபம், தீபம், அபிஷேகம், நைவேத்தியம் என்பவற்றை ஒவ்வொன்றற்கும் சமதையான ஒவ்வோர் அகச்சூழ்நிலையாற் பாவனா ரூபமாக அமைத்துக் கொண்டு சித்தத்தைச் சிவலிங்கமாகக் கண்டு பூசிக்கும் இவ்வகைப் பூசை விபரம், திருநாவுக் கரசுநாயனார் தேவாரத்தில், "காயமே கோயிலாகக் கடிமன மடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறையுநீ ரமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவி காட்டி னோமே" எனவும் திருமந்திரத்தில் "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே" - "வெள்ளக்கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார் அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே" எனப் பலவேறு பாங்கினும் அறியப்படுவதாகும்.
வாயிலார் நாயனார் இவ்வகையிலான அகப்பூசையே தமக்கேற்ற திருத்தொண்டாகக் கொண்டியற்றி அதுவே சாதனமாகச் சிவபெருமான் திருவடி நிழல் சேர்ந்தின்புற்றுள்ளார். அது சேக்கிழார் வாக்கில், "மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி உறவாதி தனையுணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி இறவாத ஆனந்தம் எனுந்திரு மஞ்சன மாட்டி அறவாணர்க் கன்பென்னும் அமுதமைத்தர்ச் சனைசெய்வார்" - "அகமலர்ந்த அர்ச்சனையி லண்ணலார் தமைநாளும் நிகழவரு மன்பினால் நிறைவழிபா டொழியாமே திகழநெடு நாட்செய்து சிவபெருமா னடிநிழற்கீழ்ப் புகலமைத்துத் தொழுதிருந்தார் புண்ணியமெய்த் தொண்டனார்" என வரும்.
இவர்தம் சிவபூசையின்கண், மறவாமை, சிவ உணர்வு, ஆனந்தம், அன்பு என்ற அகநிலைப் பண்புகள் முறையே கோயில், திருவிளக்கு, அபிஷேகம், நைவேத்தியம் ஆக அமைந்திருக்கின்றன. பூசை நெடுநாள் தொடர்ந்திருக்கின்றது. பூசைக்குப் பிரீதியுற்ற சிவபெருமானால் அவர் திருவடி நிழல்தந்து வாழ்விக்கப் பெற்றுள்ளார். இங்ஙனம் அகப்பூசைக்குச் சிவபெருமான் மகிழ்ந்து முத்திப் பேறளித்தல், மன்னனொருவன், தன் அரண்மனையில் புறத்திலிருந்து தன்னேவல் செய்வாரை விட அகத்திலிருந்து தன்னேவல் செய்வாரிடத்து விசேட அன்பாதரவு கொண்டு வெகுமதி வழங்கல் போன்றதோர் காருண்யப் பண்பாகக் கொள்ளப்படும். அது, "உள்ளேவல் செய்வாரைக் காந்தன் மிக உவப்பன் உள்ளேசெய் பூசை உவந்து" என வரும் சைவ சமய நெறி உரை மேற்கோளானும் அறியப்படும்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment