Monday, 8 October 2018

சிவ வடிவங்கள்* (1 / 25) சோமஸ்கந்தர் - திருவாரூர்

சிவ வடிவங்கள்* ... (1 / 25) 🕉🙏
*சோமஸ்கந்தர் - திருவாரூர்*
.
🌺சோமாஸ்கந்தர் என்பது சிவனும் பார்வதியும் குழந்தை முருகனைக் கொஞ்சி மகிழும் கோலமாகும். இவ்வடிவில் இறைவன் அன்பான கணவனாகவும், பாசமிகு தந்தையாகவும் இருக்கிறார். குடும்ப உறவின் உன்னத நிலையை இவ்வடிவம் உணர்த்துகிறது. சிவபெருமான் வலது பக்கத்திலும், உமையம்மை இடது பக்கத்திலும், இவ்விருவருக்கு இடையில் முருகப்பெருமானும் காட்சியளிகின்றனர்.
🌺சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து இவ்வுலகைக் காக்கும் பொருட்டு இறைவனார் தம் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு நெருப்பு பொறிகளை உருவாக்கினார். அந்நெருப்பு பொறிகளை அக்னி தேவனும், வாயு தேவனும் சரவணப் பொய்கையில் சேர்த்தனர். நெருப்புப் பொறிகள் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறினர். அவர்களை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். குழந்தைகளைக் காண வந்த உமையம்மை ஆறு குழந்தைகளை அணைத்தபோது அறுவரும் ஒரே குழந்தையாக மாறினர். இவரே கந்தன் என்று அழைக்கப்பட்டார்.
🌺பாலமுருகன் உலகத்தை சுற்றி வந்த பிறகும் அவருக்கு கனி கிடைக்கவில்லை. ஞானத்தைத் தரும் கனி என்பதால் அந்த ஞானபண்டிதன் அதே போன்று மற்றொரு பழத்தை பெற வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார். ஒருமுறை தன் தந்தையின் கழுத்தில் கரிய நிறத்தில் நாவல்பழம் போல் உருண்டையாக தங்கியிருக்கும் ஆலகால விஷத்தை கேட்டு அடம் பிடித்தார். சிவன் தன் கழுத்தில் இருப்பது விஷம் என்று எடுத்துச் சொல்லியும் முருகன் கேட்கவில்லை. தந்தையின் கழுத்தைப் பிடித்திழுக்க முயற்சித்தார். சிவனோ முருகனின் குறும்புத் தனத்தால் மூச்சுத் திணற ஆரம்பித்தார். இந்த இக்கட்டான நிலையில் இருந்து சிவனைக் காப்பாற்ற பார்வதி, குழந்தை முருகனை தன் மடியில் அமர்த்தி ஞானப்பால் ஊட்டி அமைதிப்படுத்தினாள். முருகன் சமாதானம் அடைந்து தாயின் மடியில் மகிழ்ச்சியுடன் அமர்ந்தார்.
🌺இப்படி பெற்றோருடன் சிறு குழந்தையாக முருகன் அமர்ந்திருக்கும் திருக்கோலமே சோமாஸ்கந்தர் வடிவமாயிற்று. சோமன் என்றால் சந்திரனை அணிந்த சிவன். அவருடன் முருகன் இருப்பதால் சோமாஸ்கந்தர் என்றானது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சோமாஸ்கந்தரின் அரிய வடிவத்தை தரிசிக்கலாம். சோமாஸ்கந்தர் என்பது சிவபெருமானின் 25 வடிவங்களில் ஒன்று. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், குமரகோட்டம் காமாட்சியம்மன் கோயில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட பல தலங்கள் சோமாஸ்கந்த வடிவ கோயில்களாகும். உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்த வடிவம் இலங்கையில், திருக்கேதீஸ்வரம் என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ளது. 
🙏(தொடரும்)
Image may contain: one or more people

No comments:

Post a Comment