சிவ வடிவங்கள்* ... (2 / 25) 🕉🙏
*நடராஜர் - சிதம்பரம்*
.
🌺சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறை பார்ப்போம்.!
.
🌺சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறை பார்ப்போம்.!
🌺சோழ மன்னன் சிங்கவர்மன் என்பவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான். அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பியான 'நமச்சிவாயமுத்து' என்ற சிற்பி குழுவினரிடம் நடராஜர் சிலையைச் செய்யும்படி வேண்டினான். அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர். ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது. அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. "என்ன செய்வீர்களோ தெரியாது... சிலை செய்தாக வேண்டும். அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்’. என, எச்சரித்து விட்டு போய் விட்டான்.
🌺அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர், சிலை செய்ய முடியவில்லை. தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர். அந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும் படியும் கேட்டனர். எரிச்சலில் இருந்த சிற்பிகள், "குடியுங்கள்... நிறைய குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும்போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்' என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர். முதியவர்கள் அதை குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர்.
🌺தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர். மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான். அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன. அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லைவாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர். கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப் பொந்தில் ஒளித்து வைத்தனர்.
🌺இதனால், அந்த ஊருக்கு, "ஆலப்புழை' என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர். அந்த இடத்துக்கு, "அம்பலப்புழை' என்று பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து, நடராஜர் சிலை உருவானது.
.
*உலகின் முதல் நடராஜர் சிலை*
.
*உலகின் முதல் நடராஜர் சிலை*
🌺தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய சிலையுடன் வருவான். அந்தச் சிலையை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகில் ஒரு புற்றினுள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு” எனக் கூறி மறைந்தார்.
🌺அதன்படியே, சிற்பி ஒருவர் நடராஜரின் சிலை ஒன்றைச் சுமந்து வந்தார். (இவர்தான் சிதம்பரத்தில் இருந்து சிலையை எடுத்துச் செல்ல சிவபெருமானால் பணிக்கபட்ட சிற்பி. அவர் கொண்டுவந்தது முதலில் சிதம்பரம் சிற்பியால் செய்யப்பட்ட முதல் நடராஜர் சிலை). பயணத்தின் போது வழியில் ஓரிடத்தில் சிலை கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையைச் சுமக்க முடியவில்லை. சிலையை அவர் செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண் விழித்துப் பார்த்தபோது சிலையைக் காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சியடைந்து சிலையைத் தேடிச் சென்றார். வனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சத்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனிச் சன்னதி அமைத்தார்.
🌺இந்த கோயிலில் உள்ள நடராஜர் சிலையைக் கண்ட ராமபாண்டியனின் கீழ் ஆண்ட வீரபாண்டியன் என்ற சிற்றரசன் அதேபோல தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஆசைப்பட்டான். சிலைகள் இரண்டையும் கட்டாரி மங்கலத்திலும், கரிசூழ் மங்கலத்திலும் பிரதிஷ்டை செய்ய விரும்பினான். முடிவு பெற்ற சிலைகளின் பேரழகைக் கண்டு அவன் இன்புற்றான். அதே சமயத்தில், இதே போல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியைக் கொன்றுவிடும்படி காவலாளிகளுக்குக் கட்டளையிட்டான். வீரர்கள் சிற்பியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டி விட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான். ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான். வீரபாண்டியடின் செய்வித்த இரண்டு சிலைகளும் அவன் எண்ணப்படியே கட்டாரி மங்கலத்திலும், கரிசூழ் மங்கலத்திலும் பிரதிஷ்டை செய்தான் ராமபாண்டியன்.
🌺கை துண்டிக்கப்பட்ட சிற்பிக்கு மரக் கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க அந்த சிற்பி, மரக் கைகளின் உதவியுடன், அதே போல மற்றொரு சிலை செய்தார். அந்தச் சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் அந்த சிலை உருவானது. அதனைக் கருவேலங்குளம் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர்.
🌺இவ்வாறு சிதம்பரத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் செப்பறை, கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம், கட்டாரி மங்கலம் என ஐந்து இடங்களில் ஒரே போல ஐந்து சிலைகள் இருக்கின்றன. ராமபாண்டியன் செப்பறையில் கட்டிய கோயில் தாமிரபரணியில் உண்டான பெருவெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன் பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும்.🙏 (தொடரும்)
*திருச்சிற்றம்பலம்*
No comments:
Post a Comment