Tuesday, 2 October 2018

56.புகழ்த்துணை நாயனார் புராண சூசனம்

புண்ணியர்கள் புகழழகார் திருப்புத் தூர்வாழ்
    புகழ்த்துணையா ரகத்தடிமைப் புனிதர் சின்னாண்
மண்ணிகழ மழைபொழியா வற்க டத்தால்
    வருந்துடல நடுங்கிடவு மணிநீ ரேந்தி
யண்ணன்முடி பொழிகலச முடிமேல் வீழ
    வயர்ந்தொருநாட் புலம்பவர னருளா லீந்த
நண்ணலரு மொருகாகப் படியால் வாழ்ந்து
    நலமலிசீ ரமருலக நண்ணி னாரே.
செருவிலிபுத்தூரிலே, ஆதிசைவர் குலத்திலே, புகழ்த்துணைநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவாகம விதிப்படி பரமசிவனை அருச்சனைசெய்து வருங்காலத்திலே பஞ்சம் உண்டாயினமையால் பசி மிகப் பெற்றும், "அருச்சனையை விடுவேனல்லேன்" என்று அல்லும் பகலும், அருச்சிப்பார். ஒருநாள் திருமஞ்சனமாட்டும் பொழுது, மிகுந்த பசி நோயினால் கைசோர்ந்து கலசந் திருமுடிமேல் விழ, தாந்திருவடியிலே விழுந்து அயர்ந்து, திருவருளினாலே நித்திரை அடைந்தார். அப்பொழுது பரமசிவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "பஞ்சம் நீங்கும் வரைக்கும் உனக்குத் தினந்தோறும் இங்கே ஒவ்வொரு காசு வைப்போம்" என்று அருளிச்செய்தார். புகழ்த்துணை நாயனார் விழித்து எழுந்து பீடத்தின்கீழே ஒருகாசு இருக்கக் கண்டு, அதனைக் கைகொண்டு வாழ்ந்தார். அந்நாளிலே போல எந்நாளிலும் அப்படியே ஒவ்வொரு காசு பெற்று, பஞ்சநீங்கிய பின்னும் நெடுங்காலம் மெய்யடிமைத் தொழில்செய்து, பரமசிவனது திருவடிநிழலை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.


புகழ்த்துணை நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சலிக்காதியலும் அகத்தடிமைக்கு நேரும் விக்கினத்தைத் திருவருள் வெளிப்பட்டு விலக்குமெனல்

திருக்கோயிலில், உடற்புறவுறுப்புக்களைச் சிவநெறி நிற்கப் பயிற்றுமாறு உள்ளன்பாற் செயுந் திருவலகிடல், திருமெழுக்கிடல் முதலான சரியைத் தொண்டுகள் புரியும் நிலை புறத்தடிமை நிலையென்றும் அகவுறுப்பாகிய மனம் புத்தி முதலியவற்றைச் சிவநெறி நிற்கப் பயிற்றுமாறு உள்ளன்பாற் செய்யும் அபிஷேகம் அர்ச்சனை ஆதிய கிரியைத் தொண்டுகள் புரியும் நிலை அகத்தடிமை நிலையென்றும் பெயர்பெறும். திருக்கோயிலின் அகத்துக்ககமாகிய கர்ப்பக் கிருகத்தில் நிகழ்தல் பற்றி மட்டுமன்று, புறவுறுப்புக்களின் நேர்பாட்டைவிட அகவுறுப்புக்களின் நேர்பாடே முக்கியத்துவம் பெறுதலானும் அகத்துக்ககமாயிருக்குஞ் சிவனை அகமுயற்சியாலணுகும் பாங்குள்ளதாயிருத்தலானும் பின்னையது அகத்தடிமை என்றாயிற்று. அது, "அகம்படிகின்றநம் ஐயனை யோரும் அகம்படி நின்றவர் அல்லலிற் சேரார்" என்னுந் திருமந்திரத்தானும் உணரப்படும். அன்றியும் இவ்வடிமைத் தொண்டு அணுக்கத்தொண்டு எனவும் சிதம்பரத்தில் நடராசமூர்த்தி சந்நிதிவாயில் திருவணுக்கன் திருவாயில் எனவும் வழங்குதல் கொண்டும் அது அவ்வாறாதல் துணியப்படும். இந்த அகத்தடிமை நெறி நிற்றலும் அடியார் தொண்டு நெறிகளில் ஒன்றாதல், குறித்த திருமந்திரம் அடியார் பெருமை என்ற பகுதியில் இடம் பெற்றிருத்தல் கொண்டே அறிதற்பாலதாம்.
எந்த ஓர் ஆன்மாவாயினும் தன் புறவிருத்திகள் அருகப்பெற்று அகவிருத்தியில் முன்னேறி அகம்படியாயிருக்குந் தன்னையுணரவருந் தருணத்தை எதிர்நோக்கியிருத்தலே தனது ஒரே பராக்காகக் கொண்டுள்ள சிவனும் அணுக்கத் தொண்டாகிய இவ்வகத்தடிமைக்கு மகிழ்ந்து வெளிநின்றருளுதல் இயல்பேயாம். அது, "புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணலது கண்டருள் புரியா நிற்கும்" எனவும் "பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்கரன் தானே பயிலும்" எனவும் வருந் திருமந்திரங்களால் விளங்கும்.
பூர்வ புண்ணிய வசத்தினால், சிவனை அணுகுதற்கு உற்ற அணுக்கநெறியாகிய இவ்வகத்தடிமை நெறியிலேயே நிற்பாராயினர் புகழ்த்துணை நாயனார். நாட்டிற் கொடும்பஞ்சந் தோன்றியதால் உணவொன்றுமின்றி உடல் முற்றாக வரண்டு சோர நேர்ந்த நிலையிலும் அவர்தம் அபிஷேக அர்ச்சனை உறுதியிற் சலித்திலர். அந்நிலையில், ஒருநாள் அபிஷேகக்குடந் தாங்குமளவுக்கு வலுவில்லாது கை சோர்ந்து விடவே குடம் வழுவிச் சுவாமி தலையில் விழும்படி ஆயிற்று. இயல்பான உடல் தளர்ச்சிச் சோர்வுக்கு மேலும் "ஆ அபசாரம் நிகழ்ந்து விட்டதே" என்ற உள்ளத்தளர்ச்சிச் சோர்வுங்கூட ஒருங்கே மயங்கி உறக்கநிலை எய்திவிடுகிறார் நாயனார். "தொண்டர்க்குத் தூநெறியா நின்றான் தன்னை" எனவும் "தூநெறிக்குத் தூநெறியாய் நின்றான்" எனவும் "தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியினார்" எனவும் "தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்" எனவும் வரும் அப்பர் சுவாமிகள் கூற்றுகளுக்கேற்ப, தன்னடியார்களின் தொண்டு நிகழ்ச்சி இடையூறு படுமாறு வரும் விக்கினங்களைப் போக்கி அவர்களை அந்நெறியில் தொடர்ந்தியலவைத்தல் சிவன் காருண்ய இயல்பாம். அதற்கிணங்க அப்போது சிவபிரான், உறக்கநிலையிலிருந்த நாயனாரின் கனவில் தோன்றி, நின் தொண்டுக் கிடையூறாக நிற்கும் பஞ்சவேதனைக் கிடையூறாம்படி நித்தம் ஒவ்வோர் பொற்காசு தருவோம்; நம் பீடத்தின் கீழ்க் கண்டெடுத்துக் கொள் என அறிவித்தருளினார். அது அவர் புராணத்தில், "தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுவார் பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசிபுரிந்தும் எங்கோமான் தனைவிடுவே னல்லேனென்றிராப்பகலுங் கொங்கார்பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டர்ச்சிப்பார்" - "மாலயனுக் கரியானை மஞ்சனமாட்டும் பொழுது சாலவுறு பசிப்பிணியால் வருந்தியே தளர்வெய்திக் கோலநிறை புனல்தாங்கு குடந்தாங்க மாட்டாமை ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்தயர்வார்" - "சங்கரன்ற னருளாலோர் துயில்வந்து தமையடைய அங்கணனுங் கனவின்க ணருள்புரிவா னருந்துணவு மங்கியநாள் கழியளவும் வைப்பது நித்தமு மொருகா சிங்குனக்கு நாமென்ன இடர் நீங்கி எழுந்திருந்தார்" என வரும்.
பஞ்சநிலைமையால் முற்றாகத் தஞ்சங்கெட்டுத் தளர்ந்த நிலையிலும், "எங்கோமான் தனை விடுவே னல்லேன்" என்ற துடிப்புடன் அபிஷேகார்ச்சனைகள் பண்ணி வந்த இந்த நாயனாரின் தொண்டுறுதி நேர்மையும் பிரத்தியேகமான முறையில் அவர்க்கு நித்தியப்படியாகப் பொற்காசு வழங்கி அவர் தொண்டுறுதி கடைபோக அருளிய சிவபிரான் கருணைத் திறமும் உற்றுணர்ந்து போற்றற்பாலனவாம். இந்நிகழ்ச்சியைத் தாம்பாடுந் தேவாரமொன்றி லேற்றி, "அகத்தடிமை செய்யும் அந்தணன் தான் அரிசிற் புனல் கொணர்ந் தாட்டுகின்றான் மிகத் தளர்வெய்திக் குடத்தையும் நும்முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும் வகுத்தவனுக்கு நித்தற்படியும் வருமென்றொரு காசினை நின்ற நன்றிப் புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர் பொழிலார் திருப்புன்கூர்ப் புனிதனீரே" எனச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் போற்றித் துதித்துள்ளமையானும் அது அவ்வாறாதல் பொருந்தும்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment