Tuesday, 2 October 2018

45.கலிய நாயனார் புராண சூசனம்

தடமதில்சூ ழொற்றியூர் நகருள் வாழுஞ்
    சக்கரப்பா டியர்குலமெய்த தவமா யுள்ளார்
படர்புகழார் கலியனார் நலியுங் கூற்றைப்
    பாய்ந்தவர்க்கு விளக்கெரிக்கும் பரிவான் மற்றோ
ருடலிலராய்ச் செக்குழல்வார்க் கதுவு நேரா
    துயர்மனைவி யைக்கொள்வா ருளரு மின்றி
மிடறுதிர மகனிறைய வரிய நாதன்
    வியன்கைகொடு பிடிப்பவருண் மேவி னாரே.
தொண்டைமண்டலத்திலே, திருவொற்றியூரிலேயுள்ள சக்கரப்பாடியிலே, செக்கார் குலத்திலே, கலியநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருஞ்செல்வராகி செல்வநிலையாமையையும் யாக்கை நிலைமையையும் உணர்ந்து, சிவபுண்ணியஞ் செய்தல்வேண்டும் எனத் தெளிந்து, அந்தத் திருப்பதியில் உள்ள சிவாலயத்தின் உள்ளும் புறம்பும் அல்லும் பகலும் எண்ணிறந்த திருவிளக்கு ஏற்றுவாராயினார்.
பரமசிவன் நெடுங்காலம் இத்திருத்தொண்டைச் செய்துவரும் அவ்வடியாருடைய பத்திவலிமையைப் பிறர்க்குப் புலப்படுத்தும் பொருட்டு, அவரிடத்து உள்ள செல்வமெல்லாங் குன்றும்படி அருள்செய்தார். அவர் தாம் வறுமையெய்தியும் தமது மரபில் உள்ளோர் தரும் எண்ணெயை வாங்கிக் கூறிவிற்றுக் கொணர்ந்து, கூலி பெற்று, தாஞ்செய்யுந் திருத்தொண்டை வழுவாது செய்தார். சில நாளாயினபின் அவர்கள் கொடாதொழிய; அவர் மனந்தளர்ந்து, எண்ணெயாட்டும் இடத்திற்சென்று, தொழில் செய்து கூலி வாங்கி, திருவிளக்கிட்டார். பின்பு அத்தொழில் செய்வோர்கள் பலராய்ப் பெருகினமையால், அத்தொழிலால் வரும் பேறுங் கிடையாதுமுட்ட; ஒருநாள் கவலைகொண்டு, தம்முடைய மனைவியாரை விற்பதற்கு நகரெங்குங்கூறி, வாங்குவார் இன்மையால் மனந்தளர்ந்து, ஆலயத்தை அடைந்து, திருவிளக்கேற்றுஞ் சமயத்திலே, "திருவிளக்குப்பணி மாறில் நான் இறந்துவிடுவேன்" என்று துணிவுகொண்டு, திரியிட்ட அகல்களைப் பரப்பி, எண்ணெய்க்குப் பிரதியாகத் தமது இரத்தத்தை நிறைக்கும் பொருட்டு ஆயுதத்தினாலே கழுத்தை அரிந்தார். அப்பொழுது கிருபாசமுத்திரமாகிய பரமசிவன் நேர்வந்து அவருடைய கையைப் பிடித்து, அவருக்குமுன் இடபாரூடராய்த் தோன்றியருள; அவர் தாம் உற்ற ஊறுநீங்கி, சிரசின்மேல் அஞ்சலி செய்துகொண்டு நின்றார். சிவபெருமான் அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார்.
திருச்சிற்றம்பலம்.


கலிய நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

திருத்தொண்டுறுதி கடைபோதற்கு எவ்வித உழப்பும் இழப்பும் ஈடாதல் தகுமெனல்

சிவந்தாள் சேர்தலே வாழ்விலட்சிய முடிநிலை யாதலாலும் அதற்கு நேர்வாயில் சிவதொண்டே யாதலாலும் அதன்பொருட்டு ஒருவரின் இடம்பொருள் ஏவலுக்கமைந்த எல்லாம் ஈடாக்கப்படலாம்; சுயகௌரவமும் அதற்குப் பலியாக்கப்படலாம் என்பதற்குக் கலிய நாயனார் வரலாறு கண்கண்ட சாட்சியாகும். மதிப்புக்குரிய பெரும் வாணிபச் செல்வராயிருந்து திருவொற்றியூர்ப் படம்பக்க நாயகர் திருக்கோயிலில் திருவிளக்குத் தொண்டாற்றி வந்த இந்த நாயனார் திருவருட் செயலாகத் தமது செல்வ வளம் அற்றொழிதலும் இரவல் எண்ணெய் சேர்த்தெரித்தும் அது சாத்திய மாகாதபோது பிறர் எண்ணெய்யை விற்றுக்கொடுத்துப் பெறும் ஊதியத்தால் விளக்கெரித்தும் அவ்வாய்ப்புமற்றபோது செக்காட்டும் நிலையங்களிற் கூலித்தொழில் தேடிச்செய்து பெறுவது கொண்டது செய்தும் அதுவுமற்றபோது குடியிருக்கும் வீட்டையே விற்று வந்தபொருள் கொண்டது செய்தும் அதுவும் ஒழிந்தகாலை தம் இல்லக் கிழத்தியாரை விற்பதற்கு விலைபேசவும் முயல்வாராயினர். அவர் திருத்தொண்டுறுதியை, மேலும் அழுந்த ஊன்றிவிட்டுக் காணுந் திருவுளச் செயலாக மனைவியார் விலை போதலும் இயலாதாகவே தம் உதிரமே கொண்டு விளக்கெரிக்கத் துணிந்து தாமே தம்மிடற்றில் அரி கருவியை மாட்டிக்கொள்ள அதுகாணச் சகிக்கலாற்றாது வெளிப்பட்ட திருவருளினால் தடுத்து நிறுத்தப்பட்டுப் பேரின்ப வாழ்வுமருளப்பெற்றார். இவரது இத்தொண்டுறுதியின் இறுதிக்கட்ட நிகழ்ச்சியின் திட்ப நுட்பமும் தீரமும் திகில்விளைப்பனவும் அந்நிலையில் அவருக்குச் சிவனளிக்குங் கௌரவம் அற்புதப் பொற்பினதுமாம் அது சேக்கிழார் வாக்கில், "பணி கொள்ளும் படம்பக்க நாயகர்தங் கோயிலினுள் அணிகொள்ளுந் திருவிளக்குப் பணிமாறு மமயத்தின் மணிவண்ணச் சுடர்விளக்கு மாளில்யான் மாள்வனெனத் துணிவுள்ளங் கொளநினைந்தவ் வினைமுடிக்கத் தொடங்குவார்" - "திருவிளக்குத் திரியிட்டங் ககல்பரப்பிச் செயல் நிரம்ப ஒருவிய எண்ணெய்க்கீடா உடலுதிரங் கொடுநிறைக்கக் கருவியினால் மிடறரிய அக்கையைக் கண்ணுதலார் பெருகுதிருக் கருணையுடன் நேர்வந்து பிடித்தருளி" - "மற்றவர்தம் முன்னாக மழவிடைமேலெழுந்தருள உற்றவூ றதுநீங்கி யொளிவிளங்க உச்சியின்மேற் பற்றியவஞ் சலியினராய் நின்றவரைப் பரமர்தாம் பொற்புடைய சிவபுரியிற் பொலிந்திருக்க அருள்புரிந்தார்" என வரும். தம் திருத்தொண்டாகிய ஒன்றின் பொருட்டு, ஈயுஞ் செல்வநிலையில் இருந்தவர் இரக்கும் நிலைக்கிழிந்தும் அப்பால் கூலிநிலைக்கிழிந்தும் மேல், வீட்டையே விற்றதுடன் மனைவியையே விற்பதான மானமழி நிலைக்கிழிந்தும் இறுதியில் தம்மைத் தாமே மாய்த்துவிடும் வன்கண்மை நிலைக் கிறங்கியும் இந்தக் கலிய நாயனார் உழன்றாரென்றால் இவர் திருத்தொண்டுறுதியின் தரத்தை மதிப்பிடுதல் எளிதோ அன்றாம்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment