Tuesday, 2 October 2018

40.பொய்யடிமை இல்லாத புலவர் புராண சூசனம்

பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப்
    புலவோர்பொற் பார்கலைகள் பொருந்த வோதிச்
செய்யுளிடை வளராக மதுர நல்ல
    சித்திரம்வித் தாரமெனத் தெரிக்குஞ் செம்மை
மெய்யுடைய தொடைகளெல்லா மன்று ளாடன்
    மேவியகோ னிருதாளில் விரவச் சாத்திக்
கையுடையஞ் சலியினரா யருளான் மேலைக்
    கருதரிய வமருலகங் கைக்கொண் டாரே.
பாண்டிநாட்டிலே சிறந்து விளங்குகின்ற துவாதசாந்தபுரமாகிய மதுராபுரியிலே, சோமசுந்தரக்கடவுளிடத்திலே, சதுரமாய் இரண்டு சாணளவினதாகி மெய்ப்புலவர்களுக்கெல்லாம் முழம் வளர்ந்து இருத்தற்கு இடங்கொடுக்கின்ற சங்கப்பலகையைப் பெற்று, அதனில் இருந்துகொண்டு தமிழ் மொழியை வளர்த்த கடைச்சங்கப்புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர் முதலாக நாற்பத்தொன்பதின்மர். அவர்கள் விபூதி ருத்திராக்ஷதரர்களாய், ஸ்ரீ பஞ்சாக்ஷர ஜபபரர்களாகி, அகத்தியம் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்களின்படி, ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னு நாற்கவிகளினாலும் மெய்யன்போடு பரமசிவனையே பாடி, பொய்யடிமையில்லாத புலவர்கள் எனப் பெயர்பெற்றுச் சிவபதம் அடைந்தார்கள்.
திருச்சிற்றம்பலம்


பொய்யடிமை இல்லாத புலவர் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

தமிழ்ப்புலமை சிவப்பேற்றுக்காதல்

எந்தவொரு கலையின்கண்ணும் ஒருவருக்கு வாய்க்கும் விசேட விற்பத்தித்திறம் புலமை எனப்படுதல் பொதுவழக்காயினும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கின் நுணுக்கங்களைத் திட்பநுட்பஞ் செறிந்த திவ்விய செய்யுளாக வடிக்கவல்ல ஒருவரின் விற்பத்தித் திறமையே புலமை என்ற சிறப்பு வழக்கிற்குரியதாகும். அவ்வுறுதிப் பொருள் நான்கினுள்ளும் வீடு சார்பான சிவன், சிவனருள், அருள் விளைவாம் ஆனந்தம் ஆதியனபற்றி அன்புருகும் இன்பப்பாணியில் செய்யுள் செய்வோர் புலமை விசேட புலமையாய்த் தெய்வப்புலமையெனச் சிறப்பிக்கப்படும். இவ்வகைத் தெய்வப்புலமையாளர்களாயுமிருந்த திருத்தொண்டர்களுள், ஞானப்பாலூட்டியும், சூலை நோய் தீர்த்தும் திருமணத்தைச்சென்று தடுத்தும் குருவாய் வந்து தீக்ஷை செய்தும் சிவனால் முறையே ஆட்கொள்ளப் பெற்றுள்ளவர்களாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசக சுவாமிகள் விஷயத்தில் அவர்கள் பொறி புலன் கரணங்களெல்லாம் மேல் தம்மையே நோக்கி இயலச் செய்துகொள்ளும் சிவனது அருளுபகாரம் ஒன்றுளதாதல், "சிந்தனை நின்றனக் காக்கி நாயினேன் தன் கண்ணினை நின் திருப்பாதப் போதுக்காக்கி வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணி வார்த்தைக்காக்கி ஐம்புலன்களார வந்தெனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே யிரண்டு மிலித் தனியனேற்கே" எனும் திருவாசகம் போன்ற அருளிச் செயல்களாலறியப்படும். அவ்வகையில் அவர்கள் வாக்குஞ் சிவன் மணிவார்த்தைக்கே ஆக்கப்பட்டொழிதலின் அவர்கள் ஒவ்வொருவரும் ஆட்கொள்ளப்பெற்ற அதே கணந்தொட்டுத் தமது இறுதி மூச்சு வரை சிவனைப் பாடுதலே தம் நிரந்தர ஒழுகலாறாகக் கொண்டிருந்தமை அவர் வரலாறுகளாற் புலனாம். வரலாற்றுண்மைப்படி, சிவபெருமான் "பாடுவாய் நம்மை" என ஊக்குதலும் சில வேளை "பாட மறந்தனையோ" என நினைவூட்டுதலும் அவர்களும், "பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாட் பாமாலை பாடப் பயில் வித்தானை" என்பதிற்போன்று நன்றியுணர்வு தளிர்க்கப் பாடுதலும், பாடுதொறுந் தமக்கின்பம் மிகுதலின், "மாட்டூரறவா மறவாதுன்னைப் பாடப் பணியாயே" என மேலும் வேண்டிப் பாடுதலும் சுவாரஸ்யமானவையாம். இவர்கள் போல் நேருக்கு நேராக ஆட்கொள்ளப் பெறாது அவரவர் புண்ணிய விளைவாலான ஆத்ம சாதனை விசேடத்தினாலே சிவனால் மெய்ஞ்ஞானப் பேறுற்ற காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயனார் ஆதியோர் தாம் பெற்றநுபவிக்கும் மெய்ஞ்ஞான இன்பம் விஞ்சப் பெறுதலினாலே, "நெஞ்சு மிக்கதுவாய் சோரும்" என்ற முறையில் சிவனையே போற்றும் பிரபந்தங்கள் சிலவற்றைத் தந்துள்ளனர். இவ்விரு பகுதியார்க்கும் வேறாகவுள்ள மற்றொரு பகுதி யார்பற்றி இனிக் கருதத்தகும். அவர்கள் தம்மியல்பானே மனமாசு நீங்கிக் கூர்த்த மதியும் இலக்கண இலக்கிய விளக்க விலாசமும் உலகப் பொருளியல்புகளையும் உலகியல் நுணுக்கங்களையும் நுணுகி நுணுகிக் கண்டு காட்டும் நுண்மாண் நுழைபுலமும் வாய்ந்தவர்களாய்ச் செந்தமிழ்ப் புலவர்கள் எனும் புகழ்க்குரியோராயிருந்தவர்களுள் அதீதநிலை எய்தியுள்ள ஒரு சாரார் ஆவர். அவர்கள் தமது நுண்மாண் நுழைபுலமானது காரிய உலக மட்டுக்கு அப்பாலும் ஆழ்ந்து நுழையும் விசேடத்தினாலே நிதர்சனமான தமது ஆற்றலுக்கு உள்ளீடாயிருக்கும் அதர்சனமான பேராற்றலொன்றுண்மையை எவ்வாறோ உணர்ந்து எப்படியோ அது சிவன் என்னுந் தெளிவும் பெறும்நிலையில் அதன் அருளொளியிற் பிரகாசிக்கும் மெய்யுணர்வு நலம் விளங்கப் பெற்றுள்ளவர் தமக்குப் புது விருந்தாக வாய்த்திருக்கும் அம்மெய்யுணர்வை அருளுஞ் சிவமே தாம் அது வரை போற்றி வந்த புலமைக்கும் தாம் அதுவரை அறிந்திருந்த நூல்நோக்கிற்கும் ஏகப்பட்ட பயன் என்னுந்துணிவு பெற்றுள்ளவர்கள். அந்நிலையில் தமது மெய்யுணர்வின் நோன்மை தமக்குப் புலனாதலால், பொன்னான இவ்வுணர்வுகொண்டு உலகியலைப் பாடுதல், "பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவது" போல்வதோர் தகுதியற்ற வீண் செயலெனத் தெளிந்து மெய்யுணர்வளிக்குஞ் சிவனைப் பாடுதலில் ஆத்மானந்தம் விளையக்காண்போராய் அது ஒன்றே சிவனுக்குத் தாம் புரியும் மெய்யடிமைத் தொண்டாக மேற்கொண்டிருப்பவர்கள் அவர்களாவர். அது சேக்கிழார் நாயனார் திருவாக்கில், "செய்யுள் நிகழ்சொற்றெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் மெய்யுணர்வின் பயனிதுவே எனத்துணிந்து விளங்கியொளிர் மையணையுங் கண்டத்தார் மலரடிக்கேயாளானார் பொய்யடிமை இல்லாத புலவரெனப் புகழ்மிக்கார்." என வருஞ் செய்யுளால் இரத்தினச் சுருக்கமாகச் செறித்து விளக்கப்பெற்றிருத்தல் காணலாம். இங்ஙனம் சிவனைப் பாடுந் தொண்டே தம் அடிமைத் தொண்டாகக் கொண்டிருந்த வகையால் அவர்கள் மெய்யென்ற மெய்யாகிய சிவனுக்கே அடிமையாயின விசேடத்தால் இனி என்றும் பொய்யாகிய உலகியலுக்கு அடிமையாதலிலர் என்றுணர்த்தும் முகமாகவே பொய்யடிமையில்லாத புலவர் எனப்பட்டார் என்க. அது அவர் புராணத்தில், "பொற்பமைந்த அரவாரும் புரிசடையார் தமையல்லாற் சொற்பதங்கள் வாய்திறவாத் தொண்டு நெறி தலை நின்ற பெற்றியினின் மெய்யடிமையுடையராம் பெரும்புலவர் மற்றவர்தம் பெருமை யாரறிந்துரைக்க வல்லார்கள்." என வரும்.
பதினொராந் திருமுறையில் வரும் நக்கீர தேவ நாயனாரின் கைலைபாதி காளத்திபாதியந்தாதி முதலான ஒன்பது பிரபந்தங்களும் கபில தேவ நாயனாரின் சிவபெருமான் திருவந்தாதி, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை என்னும் இரண்டும் பரண தேவநாயனாரின் சிவபெருமான் திருவந்தாதி யொன்றும் இளம்பெருமானடிகளின் சிவபெருமான் திருவந்தாதியொன்றும் பட்டினத்துப் பிள்ளையாரின் திருவிடை மருதூர்மும்மணிக் கோவை முதலாயினவும் இவ்வகைப் பொய்யடிமையில்லாத புலவர் செய்யுள்களாகக் கொள்ளுமளவுக்குத் தெய்விகப் புலமையுஞ் சிவனருள் விளக்கமும் மிக்கனவாதல் காண்க. திருத்தொண்டர் புராணத்துக்கு மூலமாயிருந்த திருத்தொண்டர் திருவந்தாதி, "தரணியிற் பொய்மையிலாத் தமிழ்ச்சங்கமத்திற் கபிலர் பரணர் நக்கீரர் முத னாற்பத்தொன்பது பல் புலவோர் அருணமக்கீயுந் திருவாலவாயரன் சேவடிக்கே பொருளமைத்தின்பக் கவிபலபாடும் புலவர்களே; எனத் தெரிவிக்கும் பாடலில், பரணர், கபிலர், நக்கீரர் என்ற இதே பெயர்களைக் குறிப்பிட்டிருத்தலுங் கருதத்தகும்.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment