Tuesday 2 October 2018

53.கழற்சிங்க நாயனார் புராண சூசனம்

காடவர்தம் குலமுவந்த கழலார் சிங்கர்
    காதன்மிகு தேவியுடன் காவ லாரூர்
நாடவல பெருமானைப் பணிவா ரங்கோ
    ரகன்றமலர் தனைமோந்த வரிவை மூக்கைச்
சேடுடைய செருத்துணையா ரரியக் கேட்டுத்
    திறலரசர் மலரெடுத்த செங்கை யென்றே
சூடகமுன் கைதடிந்து ஞாலங் காத்த
    தூய்மையா ரருள்சேர்ந்த வாய்மை யாரே
காடவர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி மற்றொன்றையும் அறியாத கழற்சிங்கநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது திருவருள் வலிமையினால் வடபுலத்தரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் நாடுகளைக் கவர்ந்து எங்குஞ் சைவசமயந் தழைத்தோங்கும்படி அரசாண்டார்.
இப்படி யொழுகுநாளிலே மாதேவியோடு சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமிதரிசனம் பண்ணித் திருத்தொண்டு செய்வாராகி, திருவாரூரை அடைந்து திருக்கோயிலிலே பிரவேசித்துச் சுவாமியை வணங்கினார். அப்பொழுது அவருடைய மாதேவி திருக்கோயிலை வலஞ்செய்து, அங்குள்ள சிறப்புக்களெல்லாவற்றையுந் தனித்தனியே பார்த்துக்கொண்டு வந்து, திருமாலைகட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப்பூவை எடுத்து மோந்தாள். உடனே செருத்துணைநாயனார் இதனைப் புஷ்பமண்டபத்துள் எடுத்து மோந்தாள் என்று நினைத்து, விரைந்து ஓடி வந்து, அவளைக் கூந்தலிலே பிடித்து இழுத்து வீழ்த்தி, அவளுடைய மூக்கைப் பிடித்துக் கத்தியினாலே அரிந்தார். அவள் சோர்ந்து புலம்பினாள். அப்பொழுது கழற்சிங்கநாயனாரும் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, அவளுக்குச் சமீபத்தில் வந்து, அவளைப் பார்த்து, மிகக்கோபித்து, 'சிறிதும் அஞ்சாமல் இந்தக் கொடுஞ்செய்கையைச் செய்தவர்யாவர்" என்று வினாவ, செருத்துணை நாயனார் "இவள் சுவாமிக்குச் சாத்தற்பாலதாகிய புஷ்பத்தை எடுத்து மோந்தமையால் நானே இப்படிச் செய்தேன்" என்றார். அப்பொழுது கழற்சிங்கநாயனார் அவரை நோக்கி, "புஷ்பத்தை எடுத்த கையையன்றோ முன் துணிக்கவேண்டும்" என்று சொல்லி, கட்டிய உடைவாளை உருவித் தம்முடைய மாதேவியினது புஷ்பமெடுத்த கையைத் துணிந்தார். அது கண்டு, தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள். இவ்வரிய திருத்தொண்டைச் செய்த கழற்சிங்கநாயனார் நெடுங்காலஞ் சைவநெறி தழைத்தோங்க அரசியற்றிக் கொண்டிருந்து பரமசிவனுடைய திருவடிநீழலை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.


கழற்சிங்க நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சிவாபராதம் கண்ணோட்டமின்றியே தண்டிக்கப்படுதல்

திருக்கோயில் நியமங்களில் விதிக்கப்பட்டவை அநுசரணையில் வழுவாதிருக்கச் செய்தலும் விலக்கப்பட்டவை நிகழ்ந்துவிடாதிருக்குமாறு கண்காணித்தலும் தற்செயலாக அவற்றிலேதும் நிகழ்ந்தவிடத்துத் தக்க பிரகாரம் பரிகாரஞ் செய்து தீர்த்தலும் விரும்பத்தகுஞ் சிவதொண்டுகளாம். சிவ மகிமை யொன்றையே யன்றி மற்றொரு மகிமையையும் மதிக்கும் பாங்கற்ற உள்ளப்பெருமை பெற்ற சிவனடியார்களில் இச்சிவதொண்டில் அதிமுனைப் புற்றிருந்தோரையுங் கொண்டுள்ளது திருத்தொண்டர் புராணம். திருவாரூர்த் தரிசனத்தின் போது அங்கு தேவாசிரய மண்டபத்திருந்த சிவனடியாரைச் சுந்தரமூர்த்தி நாயனார் வணங்காது செல்வதைக் கண்ட விறன்மிண்ட நாயனார் "இவர் சிவனடியார்க்குப் புறகு இவரை யாண்ட சிவனும் சிவனடியார்க்குப் புறகு" எனக் கடிந்துரைத்ததன் மூலம் சிவனடியாரை மதிக்காமையாகிய சிவாபராதத்துக்குப் பரிகாரங் கண்ட செய்தியும் சிவகாமியாண்டாரின் திருப்பூங்கூடையைப் பறித்துச் சிதறடித்த அரச யானையையும் அதன் பாகரையும் உடனடியாகவே கொன்றொழித்தல் மூலம் எறிபத்த நாயனார் அச்சிவாபராதத்துக்குப் பரிகாரங்கண்ட செய்தியும் ஏலவே அறியப்பட்டவையாகும். இவற்றைவிடக் கடூரமான முறையில் சிவாபராதத்துக்குத் தண்டனைத் தீர்வு நிகழ்ந்த செய்தியொன்று கழற்சிங்க நாயனார் புராணத்தில் வரும். அத்தண்டனை விஷயத்தில் விறன்மிண்ட நாயனார், எறிபத்த நாயனார் போன்ற மற்றொரு நாயனாரால் நிகழ்ந்த அளவு போதாதென்று கழற்சிங்க நாயனார் தாமுஞ் செய்த தண்டனைக் குரூரமும் அதற்காளாகியவர் மற்றாருமல்லர், அதே கழற்சிங்க நாயனாரின் பட்டத்துத் தேவியே என்பதும் சிவமகிமை பேணுஞ் சிவனடியார் தொண்டுறுதியின் கண்டிப்பான நிலையைத் தொட்டுணர்த்துவனவாம்.
சிவாலய தரிசனக் கிரமமும் ஆலய நியமவிதிமுறை பேணுதலில் தீவிர தாகமுங் கொண்ட அரசராகிய கழற்சிங்க நாயனார் ஒருபொழுது திருவாரூர்த் திருக்கோயில் தரிசனத்தில் ஈடுபட்டிருக்கையில் உடன் சென்றிருந்த அவர் பட்டத்துத் தேவி அங்கு திருமாலை மண்டபத்தின் முன் கிடந்த பூவொன்றை எடுத்து மோப்பக் கண்ட மாத்திரத்தே அங்கு நின்ற செருத்துணை நாயனார் என்பவர் சிவனுக்குரிய பூவை மூக்கால் முகர்ந்து அநாசாரம் விளைத்தாள் என்று அவள் மூக்கைத் தமது கைக்கருவியால் வார்ந்துவிட அதனால் நேர்ந்த கலவரங் கேட்டவ்விடம் வந்த கழற்சிங்க நாயனார் விபரமறிந்தவுடன் முகர்ந்த மூக்குக்கு முன் எடுத்த கையன்றோ தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியதெனக் கூறித் தம் உடைவாளால் தம் தேவியின் கையைத் தாமாகவே துண்டித்துள்ளார். அது அவர் புராணத்தில், "அந்நிலை அணையவந்து செருத்துணை யாரா மன்பர் முன்னூறு நிலைமை யங்குப் புகுந்தது மொழிந்த போது மன்னரு மவரை நோக்கி மற்றிதற் குற்ற தண்டந் தன்னையவ் வடைவேயன்றோ தடிந்திடத் தகுவதென்று" - "கட்டிய உடைவாள் தன்னை உருவிஅக் கமழ்வா சப்பூத்தொட்டுமுன் னெடுத்த கையாம் முற்படத் துணிப்பதென்று பட்டமு மணிந்து காதல் பயில்பெருந் தேவி யான மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தா ரன்றே" என வரும்.
அவள் தன் காதலுக்குரிய பட்டத்துத் தேவியென்பதும் ஏலவே மோசமாகத் தண்டிக்கப் பட்டு இரங்கத்தகும் இழிநிலையி லிருந்துள்ளா ளென்பதும் பற்றிய கண்ணோட்டத்தின் சாயல் கிஞ்சித்து மின்றிச் சிவாலய நியதி பேணும் நோக்கொன்றே நோக்காக இக்குரூரம் விளைக்குமளவுக்கு இந்த நாயனார்க்கிருந்த தீரமானது அவர் செய்வதெதுவுஞ் சிவப்பிரீதியாய் விடுமளவுக்கு அவர்பால் உரம்பெற்றிருந்த ஆண்டானடிமைத் தொண்டுரிமைக் கண்ணான உறைப்புநிலை விசேடத்தைத் தெரிவிப்பதாகும். அவர் செயல் சிவப் பிரீதியாகவே இருந்தமை அந்நிகழ்ச்சி தெய்விக அரங்கிற் பெற்றுள்ள குதூகல வரவேற்பினைச் சேக்கிழார் விளக்குமாற்றாற் புலப்படும். அது, "ஒரு தனித்தேவி செங்கை உடைவாளால் துணித்த போது பெருகிய தொண்ட ரார்ப்பின் பிறங்கொலி புவிமேற் பொங்க இருவிசும் படைய ஓங்கு மிமையவ ரார்ப்பும் விம்மி மருவிய தெய்வவாச மலர்மழை பொழிந்த தன்றே" என வரும்.
ஆயின், செய்வார் செய்திக் கேற்ப அநுக்கிரக நிக்கிரகங்கள் பண்ணுபவன் சிவனே எனச் சாஸ்திரம் பேசுவதிருக்கையில் இத்தகு நிக்கிரகங்களின் பொருந்துமா றென்னையெனின், சர்வபாவங்களாலுந் தாம் சிவனே ஆய்விடுமளவுக்குத் தம்மைப் "பையக்கொடுத்துப் பரங்கெட்டு நிற்குஞ் சிவனடியார்கள் எது செய்யினுஞ் சிவன் பணியாக அன்றிச் செய்வதில ராதலினாலும் சிவனுமிவன் செய்தியெலா மென்செய்தியென்று பவமகல உடனாகி ஏன்று கொள்வான்" எனச் சிவஞான சித்தியாரும் "துணிந்தாரகம்படி துன்னி உறையும் பணிந்தா ரகம்படி பாற் பட்டொழுகும்" எனச் சிவனடியாருளத்தோடு சிவன் திருவுள மொத்தியலுமாற்றைத் தெரிவிக்குந் திருமந்திரமும் "யாதே செய்து மியாமலோ நீயென்னில் ஆதேஎன்னு மளவில் பெருமையான்" எனத் தேவாரமுங் கூறுதலினாலும் அவர்செயல் சிவன்செயலோ டொக்குமாதலின் அது பொருந்துமென்க. அன்றியும், முன்னைய சூசனங்கள் சிலவற்றிற் கண்டவாறு அரசனும் ஈசன் தன்பால் வைத்த ஆணையையே அவன் பிரதிநிதியாயிருந்து நடத்துவோனாதலின் அவனால் எச்செயற்கும் நடுநிலை வழுவாத தண்டனையாற்றப்படுகையில் அச்செயற் பாவம் அற்றொழியு மென்பதனாலும் அது பொருந்துவதாம். அங்ஙனமாதல், திருமந்திரத்தில், "தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்வழி எத்தண்டமுஞ் செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே" எனவருவதனாற் பெறப்படும். இடங்கழி நாயனார் குறித்த சிவனடியாராந் தன்மையும் அரசராந்தன்மையும் ஒருங்குடையராதலின் இவ்வகைத் தண்டத்திற்கு இருமடி உத்தரவாத முளராஞ் சிறப்பும் இங்குக் கருதத்தகும்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment