Tuesday, 2 October 2018

46.சத்தி நாயனார் புராண சூசனம்

விரிதருகா விரிநாட்டு வரிஞ்சை யூர்வாழ்
    வேளாளர் சத்தியார் விமலர் பாதத்
துரியவர்க ளடிபரவு மொருமை யார்நா
    வோவாமே யைந்தெழுத்து முரைக்கு நீரா
ரிருளின்மிட றுடையபிரா னடியார் தம்மை
    யிகழ்வார்நாத் தண்டாயத் திடுக்கி வாங்கி
யரியுமது திருத்தொழிலா வுடையார் மன்று
    ளாடியசே வடிநீழ லடைந்து ளாரே.
சோழநாட்டிலே, வரிஞ்சியூரிலே, வேளாளர் குலத்திலே, சத்திநாயனாரென்பவரொருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடித்தாமரைகளைச் சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். அவர் சிவனடியார்களை இகழ்ந்து பேசும் அதிபாதகிகளுடைய நாக்கைத் தண்டாயத்தால் இடுக்கித் தமது கையிற் கத்தியினால் அரிதலாகிய அருமை பெருமைத் திருத்தொண்டை, நெடுங்காலம் அன்பினோடு செய்துகொண்டிருந்து, பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.


சத்தி நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சிவனடியார் நிந்தனைக்குத் தக்க தண்டனை வழங்கல்

மெய்யுணர்வுற்றோ ரல்லாதோருஞ் சிவனாகிய தன்னை உணரவைக்கும் பொருட்டாகச் சிவபெருமான், விபூதி உருத்திராக்கம் சடைமுடி யாகிய தனது திருவேடத்தைச் சிவனடியார்பால் நிறுத்தி அச்சிவனடியார்கள் மேலும் தன்னில் இலயித்திருக்கும் பொருட்டாக அவர்களைத் தான் தன்னுள்ளடக்கி நிற்கும் பாங்கில் அவர்களிடத்தில் இவர், தயிரின்கண் நெய்போல் விளங்கித் தோன்றுதலுண்டாகலின் அவர்கள் தாங்கும் வேடம் மெய்ம்மையான சிவவேடமேயாம். அது, சிவஞான போதத்தில், "தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான் கொடுத்துத் தன்னுணரத் தன்னுள் இருத்தலால் தன்னுணரும் நேசத்தார் தம்பால் விளங்குந் ததிநெய் போற் பாசத்தார்க் கின்றாம் பதி" எனவும் விநாயகரகவலில், "வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய் யன்பர் குழாத்துடன் கூட்டி" எனவும் வரும். அவர்கள் வேடத்தைச் சிவனெனவே கண்டு அவர்க்குத் தொண்டுபடு முகத்தால் அவர்களைக் கூடுங்கூட்டமே உண்மையிற் சிவலோகப் பேற்றை அளிப்பதுமாம் அது திருவாசகத்தில், "பற்றாங்கவை யற்றீர் பெறும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை யிறைசீர் கற்றாங் கவன்கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே" எனவும் திருமந்திரத்தில் "உடையா னடியா ரடியா ரொடும்போய்ப் படையா ரழன்மேனி பதி சென்று புக்கேன் கடையார நின்றவர் கண்டறிவிப்ப உடையான் வருகென ஓலமென் றாரே" எனவும் வருவனவற்றாற் பெறப்படும்.
இங்ஙனம் ஒருதலையாகப் பெருநன்மை விளைக்குஞ் சிவனடியார் மகிமையைப் பேணுதற்கெதிர் அவர்களை நாவால் நிந்தித்தல் நிகழுமெனின் அது சிவாபராதமாகிய அதிபாதக மாதலும் அது சிவதருமோத்தரம் முதலாந் தரும நூல்களால் அதிபாதக விளைவாகக் குறிக்கப்படுங் கொடுநரகத்துன்பத்துக் கேதுவாதலுந் தவிர்க்க முடியாதனவாம். திருமந்திரத்தில் அது, "ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே" என வருதலுங் காணலாகும். இங்ஙனம் பெரும் பழுது விளைப்பதாகிய இச் சிவனடியார் நிந்தனைக்குத் தக்க பரிகாரஞ் செய்தலும் அதுவும் சிவதொண்டு என்னும் கணியத்துக் குளதாதலும் சைவநெறியில் உள்ளனவாம்.
சத்திநாயனார் என்ற உத்தமர் எவரேனுஞ் சிவனடியாரை நிந்திக்கக் காணின் அவரை வலிந்து பற்றித் தண்டாயம் என்பதொரு கருவியால் அவர்நாவை வலித் திழுத்துச் சத்தி யெனப்படும் ஒருவகைக் கத்தியால் அதனை அரிந்துவிடும் நியமத்தைத் தமது பிரத்தியேகமான சிவதொண்டாகப் பூண்டு அன்படிப்படையிலான மன உறுதியுடன் அதனை வெகுநாளாற்றிச் சிவப் பேறெய்தியுள்ளார். அது அவர் புராணத்தில், "அத்தராகிய அங்கணர் அன்பரை இத்தலத்தில் இகழ்ந்தியம் பும்முரை வைத்த நாவை வலித்தரி சத்தியாற் சத்தி யாரெனு நாமந் தரித்துளார்" - "தீங்கு சொற்ற திருவிலர் நாவினை வாங்க வாங்குதண் டாயத்தினால் வலித்தாங்கயிற் கத்தியாலரிந் தன்புடன் ஓங்கு சீர்த்திருத் தொண்டினுயர்ந்தனர்" - "அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி மன்னு பேருலகத்தில் வலியுடன் பன்னெடும் பெருநாட் பரிவாற்செய்து சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்" - "ஐயமின்றி அரிய திருப்பணி மெய்யினாற் செய்த வீரத் திருத்தொண்டர் வையமுய்ய மணிமன்று ளாடுவார் செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்" என வரும். ஓங்குசீர்த் திருத்தொண்டு, ஆண்மைத் திருப்பணி, அரிய திருப்பணி என இவர் திருத்தொண்டைச் சேக்கிழார் போற்றுவதும் அன்புடன் செய்துயர்ந்தனர் எனவும், வீரத்திருத் தொண்டர் எனவும், இவரைப் பற்றிக் குறிப்பிடுவனவும் இவரது திருத்தொண்டின் அசாமானியத் தன்மை தெரிப்பன வாகும். ஆயின், சாந்த இயல்பினர் எனப்படுஞ் சிவனடியார்க்கு இப்படியான ஆண்மை வீறும் உளதாதல் எங்ஙனமெனில், அது அவர், தமது தொண்டுக்குத் தம்மை அர்ப்பணித்து நிற்கும் நேர்மைக் குபகாரமாம்படி, திருவருளால் வழங்கப்படும் அருட்கொடையாக அமையும் என்க. எனினும், குரூரத்தன்மை வாய்ந்த இத்தகு செயற்பாடு, அருளாளர் எனப்படும் சிவனடியார்க்குப் பொருந்துமா றென்னை யெனின், அதுவும் அருள் பற்றியெழுஞ் செயலேயாமாதலிற் பொருந்து மென்க. அது அருள்பற்றியதாதல், பிறரும் அவ்வாறு சிவனடியார் நிந்தனையிலீடுபட்டு நரகத் துன்பத்துக் காளாகாமற் காக்கவல்ல அதன்முன் னெச்சரிக்கையாதற் பண்பினாலும் அது செய்தவர் தாமும், அருளாளர் கையினால் உரிய தண்டனை பெறுதல் மூலம் நரகத்துன்பத்துக்காளாகாமற் பிழைக்க வைக்கும் அதன் பரிகாரமாம் பண்பினாலும் அமையும் என்க. அருளாளர் கையாற் பெறுந் தண்டனை பாவ பரிகாரமாதல், சண்டீச நாயனாராற் கால் தறிபட்ட பரிகாரத்தால், அபிஷேகப் பாற்குடங்களைத் தட்டிச் சிதறிய அவர் தந்தை குற்றம் நீங்கிச் சுற்றமுடன் கயிலையடைந்தின்புற்றதாக உள்ள வரலாற்றானும் கோட்புலி நாயனார் கைவாளால் தலை துணிக்கப்பட்ட பரிகாரத்தால், ஆணை மீறிச் சிவனுக்கென வைக்கப்பட்ட நெல்லையுண்டுவிட்ட அவர் சுற்றத்தார் குற்றம் நீங்கிச் சிவலோக வாழ்வு பெற்றதாக உள்ள வரலாற்றானும் உறுதி பெறுவதாகும்.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment