குன்றாத புகழாளர் களந்தை வேந்தர் கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும் பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில் சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து திருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே.
களந்தையென்னும் பதியிலே, குறுநிலமன்னர் குலத்திலே, கூற்றுவநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை விதிப்படி உச்சரிப்பவர். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்பவர். அவர் திருவருள் வலியினாலே பெருஞ்செலவமுடையராகி, கச ரத துரக பதாதியென்னுஞ் சதுரங்கங்கள் நிறைந்த வீரச்செருக்கில் மேலாயினார். பலவரசர்களோடு யுத்தஞ்செய்து, அவர்களை வென்று அவர்களுடைய நாடுகளெல்லாற்றையுங் கவர்ந்து அரசர் திருவில் முடி ஒன்று தவிர மற்றவைகளெல்லாவற்றையும் உடையராயினார். உலகத்தை ஆளுதற்குத் தமக்கு முடிசூட்டும் பொருட்டுத் தில்லைவாழந்தணர்களை வேண்ட; அவர்கள் "நாங்கள் சோழகுலத்தாருக்கேயன்றி மற்றவர்களுக்கு முடிசூட்டோம்" என்று மறுத்து, தங்களுக்குள் ஒரு குடியை முடியைக் காத்துக்கொள்ளும்படி இருத்தி, சேரமண்டலத்துக்குப் போயினார்கள்.
கூற்றுவநாயனார் ஐயுறவினாலேவனந் தளர்ந்து, சபாநாயகரைப் பணிந்து அற்றைநாள் இரவிலே "எம்பெருமானே! அடியேனுக்குத் திருவடியையே முடியாகத் தந்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டு நித்திரை செய்ய; சபாநாயகர் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி தம்முடைய திருவடிகளை முடியாகச் சூட்டியருளினார்; கூற்றுவநாயனார் அவைகளையே முடியாகச் சூடி, பூமி முழுதையும், பொதுநீக்கி ஆண்டார். சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற முக்கிய ஸ்தலங்களெங்குஞ் சென்று வணங்கி, திருப்பணிகள் செய்து, சிவபதம் அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
கூற்றுவ நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
அரசர் முடிசூடுதல் சிவனடி சூடுதற்கு அறிகுறியாதல்
உலகைக் காக்கும் பெரும்புரவு பூண்டுள்ள இறைவனால் உருவுடையாரை மட்டுந் தொடர்பு கொள்ள வல்லராகிய மனிதர்பொருட்டுத் தன்பிரதிநிதியாக நிறுத்தப்படுபவனே அரசன் என்றும் இறைவன் பிரதிநிதியாதல் குறித்தே அவன் இறை எனப் பெயர்பெறலாயினான் என்றும் முன் சேரமான் பெருமான் நாயனார் புரான சூசனத்திற் கண்டுள்ளோம். அவ்வுண்மைக்கிணங்க அரசனாம் நிலையேற்போன் ஒருவன் தனக்கது சிவன்பணித்த அறம் என்னும் நன்றிக் கடப்பாட்டுணர்வுடன் சிவன் திருவடிகளைத்தலை மேற்கொண்டு ஆட்சிபுரிய வேண்டுபவனாவான். திருவடிகளைத் தலைமேற் கொள்ளல் என்ற சைவ சம்பிரதாயத்தின் பொருளாவது ஒருவர் தமக்குளதாகக் கொள்ளும் சிற்றறிவு சிறுதொழில் அளவிலான ஞானம் கிரியை என்ற இரண்டினையும் திருவடி என்ற குறியீட்டிலடங்கும் இறைவன் முற்றறிவும் முழுத்த தொழிற்பாடுமாகிய அவனது ஞானங்கிரியை இரண்டுக்கும் அடங்கக் கொடுத்துத் தன் மதந்தோன்றாவகையில் ஒழுகுதல் என்பதாகும். தெய்வ சந்நிதியில் தலை நிலமுறத் தாழ்ந்து வணங்கல் என்ற பொதுவான வழக்கம் சைவர் வழிபாட்டு நெறியில் இடம் பெற்றதும் இப்பொருள் குறித்தேயாதல் இத்தொடர்பிற் கருதத் தகும். ஆனால், பலரைப் பொறுத்தவரையிற் பாவனை அளவாகவே இயலக்கூடும். இவ் விஷயத்தில் அருவமாகிய திருவடியையும் காண்டற் கபூர்வமாகிய அது சூடலையும் அறிவுறுக்கும் அறிகுறி மாத்திரையாகவே பொற்கிரீடங்கொண்டு முடி சூட்டுதல் வழக்கமாயிற்றெனல் பொருந்தும். அது, ஆதிகாலத்தில் முடிசூட்டும் உரிமை இறையுணர்வு கைவந்த ரிஷிகளாலும் ரிஷிகள் அருகிய பிற்காலத்தில் அத்தன்மைச் சார்புள்ள சமயத்தலைவர்களாலும் கையாளப்பட்டு வந்ததாகவுள்ள வரலாற்று உண்மையானும் வலுவுறும்.
நம் கூற்றுவ நாயனார் திருவருட் சகாயத்தினாலே பெருவெற்றியாளராகத் திகழ்ந்து சோழநாடு முழுவதையும் தம்மடிப்படுத்திக் கொண்டு சம்பிரதாயப்படி முடிசூடி அரசாள முயல்கையில் முடிசூட்டு உரிமையாளர்களான தில்லைவாழந்தணர்கள், மரபுப்படி சோழரல்லாதார்க்கு யாமது செய்யோம் என்றதுமே, "அசல் கைவசமிருக்க நகலுக்கு மன்றாடுவானேன்" என்னுந் துணிவினராய் அறிகுறிப் பொருளாகிய மணிமுடியைவிட்டு, இலட்சியப் பொருளாகிய திருவடியையே வேண்டி, வேண்டியவாறே சிவனால் தமக்கது சூட்டப்பெற்றுக் கொண்டு அரசாள்வாராயினர்.
தில்லை வாழந்தணர் அரசர்க்கு முடிசூட்டுந் தமதுரிமையை இவரிற் பிரயோகிக்க மறுத்தமை கொண்டு தமிழரல்லாத மற்றொருவராகக் கருதப்பட நிற்கும் இந்நாயனார் சைவமுஞ் சிவமுஞ் சிவபுண்ணிய ஒழுகலாறும் தம்மை யுணரவல்லார் எல்லார்க்கும்பொது என்னு முண்மை விளங்க நின்றுள்ளார். அஃதோருண்மை உளதாதல், உபதேச காண்டத்தில், "சேணெறிக் கந்தருவர் தைத்தியர் மாணெறிக் குடை மன்ன ரிவர்களில் நீணெடுந்திரை நேமியடுங்கடு ஊணுகர்ந்தவர்க் காட்படலுண்டரோ" - "வரமுனித்தலை வீரவ் வருணமாச் சிரமமென்பதவர்க்கிலை சேவுடை யரனருச்சனை யாவர்க்குமாமவர் பரமனென்னப் பணியப்படுவரால்" என வருவது கொண்டறியப்படும். தம்பூர்வ புண்ணியப் பேறாக இவர் சிவனெனுமுணர்வும் சிவநாமசெபமும் சிவனடியார் வழிபாடுந் தவறாது சிவபுண்ணிய சீலராகவே, விளங்கியுள்ளார். அது சேக்கிழார் வாக்கில், "துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று சூலப்படையார்தம் நன்னா மந்தந் திருநாவில் நாளும் நாளும் நவிலும் நலம்மிக்கார் பன்னாளீச ரடியார்தம் பாதம்பரவிப் பணிந்தேத்தி முன்னா கியநல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்" என வந்துள்ளமையானறியப்படும். தமக்கு முடிசூட்ட மறுத்த தில்லை வாழந்தணரை வலிந்துடன்படுத்தவோ அல்லது மாற்றுவழி கண்டு முடி சூடுவித்துக் கொள்ளவோ போதிய ஆற்றல் வலுவுள்ளவராயிருந்தும் இந்த நாயனார் அவற்றை நாடாது சிவபெருமான் திருவருளையே நாடி வேண்டித்திருவடியே தமக்கு முடியாகப் பெற்று உலக சாம்ராஜ்யத்துக்கேயன்றி மோக்ஷ சாம்ராச்சியத்துக்கும் தகுதியுடையோ ராயினமை கொண்டு இவர் பாலமைந்திருந்த உண்மை நாயன்மார் மகிமை தெளியப்படுவதாகும்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment