Tuesday, 2 October 2018

47.ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராண சூசனம்

வையநிகழ் பல்லவர் தங் குலத்து வந்த
    மாமணிவா நிலமுழுது மகிழ்ந்து காக்கு
மையடிகள் காடவர்கோ னருளா னூல்க
    ளறிந்தரசு புரிந்திடுத லமையு மென்றே
பொய்யனைய வுடல்வாழ்வு கழியு மாறு
    பொருந்தியிடும் புகழ்வெண்பா புலியூர் மேவுஞ்
செய்யதிரு வடிமுதலாப் பதிக டோறுஞ்
    செப்பினா ரென்வினைக டப்பி னாரே.
தொண்டைமண்டலத்திலே, காஞ்சிபுரத்திலே, பல்லவர் குலத்திலே, சைவத்திருநெறி வாழும்படி அரசியற்றும் ஐயடிகள் காடவர்கோனாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் எவ்வுயிர்களும் இம்மைமறுமையின்பங்களையும் முத்தியையும் அடைதல்வேண்டும் என விரும்பி, பிறதேசங்களையுந் தமக்கு அதீனப்படுத்தி, சைவந்தழைத்தோங்க அரசர்களும் பணிசெய்ய அரசியற்றினார். சிலகாலஞ்சென்ற பின், அரசாட்சி துன்பமயமெனக் கருதி, அதனை வெறுத்து, அப்பாரத்தை இறக்கித் தம்முடைய புத்திரன்மேல் ஏற்றி, பூமியிலுள்ள சிதம்பரமுதலாகிய சிவஸ்தலங்கடோறுஞ் சென்று, சுவாமிதரிசனம்பண்ணி, திருப்பணிசெய்து, ஒவ்வொரு திருவெண்பாப் பாடினார். இந்தப் பிரகாரம் நெடுங்காலந் திருத்தொண்டு செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.


ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. தேவாரவாய்மை திருத்தொண்டர் புராண உண்மையிற் பிரதிபலித்தல

திருத்தொண்டர் புராண உண்மைகள் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் அடக்கம். இத்திருவந்தாதியுண்மைகள் திருத்தொண்டத் தொகையிலடக்கம். திருத்தொண்டத் தொகை உண்மைப் பொறுதி சுந்தரமூர்த்தி நாயனாரில் அடக்கமாம். அது, சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய தொகைக்கு விரிவாக நம்பியாண்டார்நம்பி இயற்றியருளிய திருவந்தாதிக்கு விருத்தியாகச் சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர் புராணம் இயற்றியருளினார் என்றுள்ள வரலாற்றுண்மையாற் பெறப்படும். இச்சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தினை நகர்த்திருப்பதிகத்திற் பின்வரும் வாய்மை யொன்றைப் புலப்படுத்தியுள்ளார். பெறுதற்கரிதாகிய மானுட சரீரமானது முடிமன்னராய் உலகாண்டு அறபரிபாலனஞ் செய்யும் உயர்பெரு மகிமை தாங்குதற்கு முரியதாகும். ஆனால், இச்சரீரத்தோடு உயிர்க்குள்ள தொடர்பானது நாளொரு விதமாய்த் தேய்ந்து தேய்ந்து போய் ஒரு கட்டத்தில் உயிர் உடலை விட்டு அறுதியாக விலகியேவிட வேண்டிய அவலநிலையும் மேல் மேல் எடுக்க விருக்குஞ் சரீரந்தோறும் மீளமீள அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கும் அநர்த்தமும், தவிர்க்கமுடியாத வகையில் உளதாகும், அங்ஙனம் நிலையில்லாமையாகிய இப்பொய்ம்மையோடு கூடிய இந்த உடலுயிர் வாழ்க்கைப் பற்றை, மனமே, நீ அறவிட்டொழிவாயாக. விட்டதும் பாம்பை வைத்தாட்டுந் திருக்கரத்தினரும் பரமபதியும் திருமுருகன் தந்தையுமாயுள்ளவரும் திருத்தினை நகரில் எழுந்தருளி யுள்ளவருமாகிய சிவக்கொழுந்தீசனைச் சென்றடைவாயாக என்பது அவ்வாய்மை. அது நாயனார் வாக்கில், "வேந்த ராயுல காண்டறம் புரிந்து வீற்றிருக்குமிவ் வுடலது தன்னைத் தேய்ந்திறந்துவெந் தூயருழந்திடுமிப் பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே பாந்தளங்கையில் ஆட்டுகந்தானைப் பரமனைக் கடற் சூர்தடிந்திட்ட சேந்தன் தாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே" என வரும். திருத் தொண்டராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாற்றுண்மை இத்தேவார வாய்மைக்கு உருவந் தீட்டியவாறாக அமைந்திருக்கும் நயங்குறிப்பிடத்தகும்.
பிரசித்தமான பல்லவ அரசமரபில் தோன்றி நாடெங்குந் தருமநெறி தழைத்து எவ்வுயிரும் பெருமையுடன் வாழ்தற்காம் பாங்கில் சைவநெறி தழுவி யரசாண்டு பேர்புகழ் மிக்குத் திகழ்ந்தவர் இந்த நாயனார். இருந்தும் மேற்கண்டவாறான உடலுயிர் வாழ்வின் விளைவாம் அல்லலைத் தீர்த்தற்கு அது எவ்வகையினும் பரிகாரமாக மாட்டாமையினால் அதற்கு ஏற்ற பரிகாரமாகத் தக்கதென அறியப்பட்டுள்ள சிவதொண்டு புரிந்து கொண்டு வாழும் சிவனடியார் வாழ்க்கையே சிறந்ததெனத் துணிந்து அவ்வாழ்க்கை மேற்பற்று மீதூரப் பெற்றவ ராயினார். அதனால், அரச பாரத்தைத் தன் மகன்மேல், இறக்கிவிட்டுச் சிவனடியாராகித் தலயாத்திரை செய்து ஆங்காங்கு இயலுமளவு, திருத்தொண்டாற்றுவதும் தமது தெய்வஞானப் புலமையால் உடலுயிர் வாழ்விழிவும் உடையானாகிய சிவனைச் சார்ந்தொழுக வேண்டியதன் இன்றியமையாமையும் புலப்படச் செய்யுளிசைப்பதுமாக வாழ்ந்து சிவபதப்பே றெய்துவாராயினர். அது அவர் புராணத்தில், "மன்னவரும் பணிசெய்ய வடநூல் தென்றமிழ் முதலாம் பன்னுகலைப் பணிசெய்யப் பாரளிப்பார் அரசாட்சி இன்னவென இகழ்ந்ததனை எழிற்குமரன் மேலிழிச்சி நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்" - "தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை யுலகின் கண் அண்டர் பிரானமர்ந் தருளு மாலயங்க ளானவெலாங் கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே வண்டமிழின் மொழிவெண்பா ஓரொன்றா வழுத்துவார்" - "இந்நெறியா லரனடியார் இன்பமுற இசைந்தபணி பன்னெடுநா ளாற்றிய பின் பரமர்திருவடி நிழற்கீழ் மன்னுசிவ லோகத்து வழியன்பர் மருங்கணைந்தார் கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவரையடிகளார்" என வரும்.

2. சைவஞானநூல்களில் க்ஷேத்திரத் திருவெண்பாவின் நிலை

ஐயடிகள் நாயனார் தமது தலயாத்திரையின்போது தலத்திற் கொன்றாகப் பாடியருளிய திருவெண்பாக்களின் தொகுதி க்ஷேத்திரத் திருவெண்பா என்ற பெயரால் வழங்கும். மெய்யுணர்வு, தலைப்பட்டுச் சிவனைச் சாரும் ஆன்மாவானது அதற்கு முன்னோடி நியமமாம்படி, உண்மை நிலையில் தனக்கு வேறாயிருந்தும் தன்னோடொன்றியிருக்கும் ஒன்றெனத் தோன்றி மயக்கும் தேகாதிப்பிரபஞ்சத்தின் நிலையில்லாமையும் அதன் பொல்லாப்பும் உணர்ந்து அதிலிருந்து விடுபடுதல் கடனாகும். அது, தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சத்தி எனும் உணர்வநுபவ நிலைகளாகச் சைவசித்தாந்தத்தில் வைத்துணர்த்தப்படுவதும் துகளறு போதம் என்ற ஞான நூலிற் பூதப்பழிப்பு, அந்தக்கரண சுத்தி முதலாக அவை விரித்து வர்ணிக்கப்படுதலும் பிரசித்தமாம். அப்பர் சுவாமிகள் தேவாரத்தில், "செத்தையேன் சிதம்ப நாயேன் செடிதலை யழுக்குப் பாயும் பொத்தையே பேணி நாளும் புகலிடம் அறியமாட்டேன்" என்பதாதி யாகவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில், "ஊன்மிசை உதிரக்குப்பை ஒருபொருளிலாத மாயம் மான்மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கு மிந்த மானிடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்" என்பதாதியாகவும் திருவாசகத்தில், "பொத்தையூண்சுவர்ப் புழுப்பொழிந்துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை" என்பதாதியாகவும் வருவன அப்பூதப் பழிப்புச் சார்பான தேகப் பழிப்புண்மை உணர்த்தும் அருளிச் செயல்களாகும். சிவனையடைதலாகிய முத்திப் பேற்றுக்கு மிகவும் இன்றியமை யாததாகிய இந்நெறியையே தமது செய்யுளாக்க நெறியாகக் கொண்டருளிய ஐயடிகள் நாயனார் உடலுயிர் வாழ்வில் நேரும் அவலக் கவலைகளைப் பகிரங்கமாக உணர்த்தும் மூப்புநிலை யிழிவு மரணாவஸ்தைக் கெடுபிடி நிலைமைகளைத் தமது ஞானப் புலமை நலஞ் சொட்டச் சொட்டப் பொருத்தமான சொற்புணர்ப்பும் ஓசைநயமும் பொருளுறுதியும் நகைச்சுவை இழிவரற்சுவை பெருமிதச் சுவை நலங்களுங் கனியும் நேரிசை வெண்பாக்களாற் பாடியருளினார். அநேகமான வெண்பாக்களின் முன்பகுதி குறித்த இப்பொருளமைவினதாகப் பின்பகுதி, அத்தகைய அவலம் நிகழுந் தருணம் வருவதற்கு முன்னாகவே, நெஞ்சே, இன்ன தலத்துச் சிவபெருமானை நினை, அழை, தொழு, சென்றடை என்ற பொருளமைவினதாகப் பொருந்த வைக்குங் கவிதை யுக்தி தழுவப்பட்டிருத்தல் காணலாம். இப்பாடல்களில், திருநாவுக்கரசு நாயனார் அருளிய பலவகைத் திருத்தாண்டகத்தில் வரும், "பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே" - "நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவாப்புலால் தானம் நீக்கலாமே எனவரும் எதுகைச் சொற்சித்திரங்கள் போன்ற சுவைதரும் எதுகைச் சொற்சித்திரங்கள் விரவிவருதல் இரசனையூட்டும் விசேட அம்சமாகும். அது, நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நெஞ்சமே தில்லைச்சிற்றம்பலமே சேர்" - "ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை" - "பாளை, அவிழ்கமுகம் பூஞ்சோலை யாரூரர்க் காளாய்க் கவிழ்கமுகங் கூம்புகவென்கை" - "கஞ்சி யருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சமே திருத்துருத்தியான் பாதஞ்சேர்" - "தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் கட்டி எடுங்களத்தா என்னாமு னேழை மடநெஞ்சே நெடுங்களத்தான் பாதநினை" என்பனவாதியாக வருதல் காண்க. (நல்லச் சிற்றம்பலம் - மயானம் - ஐயாறு வாயாறு பாயாமுன் - சிலேற்பனச் சளிப்பெருக்கு வாய்வழியே பாயாமுன் - கஞ்சி அருத்தொருத்தி கொண்டுவா - கஞ்சி அருத்த (பருக்க) ஒருத்தி கொண்டுவா.) வகை துறையறியாது பிறப்புக்குப் பிறப்பு மாறிமாறி, மூப்பு மரண அல்லல்களுக் குள்ளாகும் உடலுயிர் வாழ்வே கதிமோட்ச மென்றிருந்து மாயும் நம்மனோர் பொருட்டிரங்கி இந்த நாயனார் மாபெரும் ஞானோபதேசமாக நின்று நிலவும் வண்ணம் இப்பாடற் றொதியை அருளிச்செய்தமையும் உயர்ந்த சிவதொண்டாகவே போற்றப்படும். இவர் திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றதற்கு அது விசேடகாரணமாகக் கொள்ளலுந் தகும். மேலும், இந்த நாயனார் அரசபோக வாழ்வைக் கை நெகிழ்ந்து சிவனடியார் ஆதலுக்குபகரித்த அவரது உள்ளநிலை ஒரு வெண்பாவிற் பதிவிருத்தலும் இத்தொகுதிக்கு மற்றோர் சிறப்பாகும். அது, "படிமுழுதும் வெண் குடைக்கீழ்ப் பாரெலா மாண்ட முடியரசர் செல்வத்து மும்மை தொடியிலங்கு தோடேந்து கொன்றை யந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி உண்பதுறும்" என வரும். முடியாட்சி ஐஸ்வரிய அநுபவத்திலும் பார்க்க ஓடேந்திய பிச்சை பெற்றுண்டு சிவதொண்டராய் வாழ்தல் மும்மடங்கு விசேடம் பெறும் என்ற இவர் விவேகமே விவேகமாம் என்க.
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment