கடவுளருட் கண்ணார்கள் பயிலுந் தொல்லைக் கடந்தைநகர் வணிகர்கலிக் கம்ப ரன்பர்க் கடிமையுற வமுதளிபா ரடியா னீங்கி யருளுருவா யன்பருட னணைய வேத்தி யிடையிலவ ரடியிணையும் விளக்கா நிற்ப விகழ்மனைவி கரகமலி யிரண்டு கையும் படியில்விழ வெறிந்தவள்செய் பணியுந் தாமே பரிந்து புரித் தரனருளே பற்றி னாரே.
நடுநாட்டிலே, திருப்பெண்ணாகடத்திலே, வைசிய குலத்திலே, கலிக்கம்பநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத் திருப்பதியில் உள்ள திருத்தூங்கானை மாடமென்னுந் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்பவர்; சிவலிங்கத்தை வழிபடினும் சிவனடியார்களை வழிபடாதொழியின் அவ்வழிபாடு சிறிதும் பயன்படாது என்று சிவாகமஞ் செப்புதலால், தினந்தோறும் சிவனடியார்களைப் பேராசையோடு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந் திரவியங்களெல்லாவற்றையுங் கொடுப்பார்.
இப்படி யொழுகுநாளிலே, ஒருநாள் தமது வீட்டிலே திருவமுது செய்யவந்த சிவனடியார்களெல்லாரையும் பழைய முறைப்படி திருவமுதுசெய்யத் தொடங்குவித்தற்கு, அவர்களை முன்பு அழைத்து, தமது மனைவியார் கரகநீர் வார்க்க அவர்களுடைய திருவடிகளை விளக்கும்பொழுது, முன்பு தமக்குப் பணிவிடைக்காரராய் இருந்து பணிவிடையை வெறுத்துச் சென்ற ஒருவர் சிவவேடந் தாங்கிவர அவருடைய திருவடிகளையும் விளக்கப்புகுந்தார். மனைவியார் 'இவர் எங்களிடத்திலே பணிவிடைக்காரராய் இருந்து போனவர் போலும்" என்று சிந்தித்தலால் கரகநீர் வார்க்கத் தாழ்க்க; கலிக்கம்பநாயனார் அதுகண்டு, "இவள் இந்தச் சிவனடியாருடைய முந்திய நிலையைக் குறித்து வெள்கி நீர் வாரா தொழிந்தாள்" என்று துணிந்து, வாளை எடுத்து, அம்மனைவியார்கையிற் கரகத்தை வாங்கி வைத்து விட்டு, அக்கையைத் தறித்து, அக்கரக நீரை எடுத்து; தாமே அவருடைய திருவடிகளை விளக்கி, அத்தியந்த ஆசையோடு தாமே வேண்டுவனவெல்லாஞ் செய்து, அவ்வடியார்களைத் திருவமுது செய்வித்தார். அந்நாயனார் பின்னுஞ் சிலகாலந் திருத்தொண்டின் வழிநின்று சிவபதத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
கலிக்கம்ப நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
சிவனடியாரைப் பூர்வாசிரமநிலை கருதி நோக்கல் பழுதெனல்
நல்லூழ் தலைப்பட்டு யாதானுமோருபாயத்தான் மெய்யுணர்ந்து சிவனடியாராய் விட்டவர் தமது பூர்வாசிரமமான முன்னைய வாழ்வியற் சூழ்நிலைப் பண்புகளை இழந்தோராவர். ஆகவே, பிறர் அவர் விஷயத்திற் சாதிகுலாசார நோட்டங்கொள்வதுமில்லை: அவர் பிறரைச் சாதிகுலாசார நோட்டங்கொண்டு பார்ப்பதுமில்லையாகும். அது திருமந்திர நூலில் "மலமில்லை மாசில்லை மானாபி மானங்குலமில்லை கொள்ளுங் குணங்களு மில்லை நலமில்லை நந்தியை ஞானத்தினாலே பல மன்னியன்பிற் பதித்துவைப் போர்க்கே" என வரும். சிவனடியார் நேசமுஞ் சிவதொண்டு வீறும் வாய்ந்த மஹான்கள் இது காரியத்தில் மிகக் கண்டிப்பாகவே யிருப்பர். எவ்வகையிலேனும் அக்கணியம் அவமதிக்கப்படக்காணின் வன்முறையாலேனும் உண்மை சாதிக்கத் தவறமாட்டார். கலிக்கம்பநாயனார் இதற்குத் தக்க உதாரணமாவர். இந்த நாயனார் தம்மை யணையுஞ் சிவனடியார்களுக்கு உரியமுறைப்படி மகேசுர பூசை செய்து வணங்குந் தமது நியமப்படி ஒருநாள் சிவனடியார்களை ஒவ்வொருவராக அணுகிப் பாதபூசை புரியும் பணியிலீடுபட்டிருந்தார். அதற்குதவியாக அவர் மருங்கில் நின்று பாதம் விளக்கக் கரகநீர் தந்து கொண்டிருந்த அவர் மனைவியார், குறிக்கப்பட்ட சிவனடியார் ஒருவரை அணுகுகையில் அவர் தம்வீட்டுமுன்னைநாள் வேலையாள் என இனங்கண்டு கொண்டதனால் நீர்வார்க்கா தொழியவே. விசாரணைக் கவகாசம் வைக்காமலே அது தெரிந்து கொண்ட நாயனார் நீர்க் கரகத்தைத் தாம் வாங்கிக்கொண்டு அவர் கையை வாளால் தறித்து விட்டுத் தாம் வேண்டியவாறே பாதபூசை முடித்து அடுத்து நிகழவேண்டிய அன்னம் பாலிப்புப் பணியையும் தம்கைப்படவே நிறைவேற்றுவாராயினர். சேக்கிழார் நாயனார் தெரிவிக்கும் பாங்கில் அவர் புரியும் மகேசுரபூசைக்கு என்றும் எல்லா வகையிலும் உறுதுணையாயிருந்துவந்தவாறே அன்றும் தம் கையிழக்கும் வரை அதற்காவனவெல்லாம் ஏற்பாடு செய்தமைத்து உடனாய் நின்றவர் தம் மனைவியார் என்ற கண்ணோட்டத்துக்குச் சற்றும் இடமளிக்காமலே அவ்வாறு செய்துவிடவைத்த இந்த நாயனாரின் பக்திவைராக்கிய முதிர்ச்சி இருந்தவாறென்னே! ஒரு சிறுபொழுதுக்காயினும் அவர் உள்ள அமைதியைச் சிதைத்து விட்டிருக்கக்கூடிய அளவுக்குச் காட்டமான அச்செயலால் நாயனார் சற்றேனுஞ் சித்த சலனமடையாமல் அன்றையமேல் நிகழ்ச்சிகளை நிம்மதியாக அவர் நடத்தி முடிக்கவைத்த அவரது சித்தத்திடமானது அவர் திருத்தொண்டுறுதியின் உயர்தரமாகப் போற்றப்படும். அது சேக்கிழார் வாக்கில், "வெறித்த கொன்றை முடியார்தம் அடியார் இவர்முன் மேவுநிலை குறித்து வெள்கி நீர்வாரா தொழிந்தாள் என்று மனங்கொண்டு மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கைதறித்துக் கரக நீரெடுத்துத் தாமே அவர்தாள் விளக்கினார்" - "விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து துளக்கில் சிந்தையுடன் தொண்டர் தம்மை யமுது செய்வித்தார் அளப்பில் பெருமை யவர்பின்னும் அடுத்த தொண்டின் வழிநின்ற களத்தில் நஞ்ச மணிந்தவர்தாள் நிழற்கீ ழடியா ருடன்கலந்தார்" என வந்துள்ளவாறு காண்க.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment