Monday, 1 October 2018

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம். அத்தியாயம்:2 கற்றல்.

அத்தியாயம்:2 கற்றல்.
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்.. நூலை முன்வைத்து ஒரு உரையாடல்….
ஆக்கவியம்…..
மூளையில் அறிவும் தகவலும் எப்படி சேமிக்கப்படுகிறது என்பதைக் கூறுவதே ஆக்கவியம் ஆகும்.
எதுவாக இருப்பினும் நாம் எப்படி அனுபவிக்கிறோமோ அதுபோல் மூளையில் பதிவாவதில்லை. ஐம்புலன்கள் வழியாக அனுபவங்கள் கிடைக்கின்றன.. ஒரே நிகழ்ச்சியை இருவர் பார்க்கிறார்கள் என்றால், அதை இருவரும் நினைவு கூறும்போது நிச்சயம் ஒரு மாதிரி இருக்காது...
ஒரு நிகழ்வை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்து அந்த வேறுபாடு ஏற்படுகிறது.. எல்லா அனுபவங்களையும் நமக்கேற்ற கோணத்தில் பார்க்கிறோம்... அந்த அடிப்படையில் அவ்வனுபவம் நினைவாகப் பதிகிறது.. நமக்கு எந்த அளவுக்கு அறிவிருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் நம்முடைய கோணம் இருக்கும்.
அப்படியாக ஒரு அனுபவத்தைப் பற்றிய நம்முடைய புரிதல் புதிய அறிவாக மாறுகிறது... இந்தப் புதிய அறிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. இதன் அடிப்படையில் புதிய அனுபவங்களைப் புரிந்து கொள்வது தொடர்கிறது...
கற்றுக்கொள்பவர் அறிவை *உருவாக்குகிறார்* என்று கூறுவதன் பொருள் இதுவே...
மூளையில் பதிவாகும் அறிவு பொருள் பொதிந்த முறையில் ஒழுங்குபடுத்தப்படுகிறது....
மூளையில் இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவை *ஸ்கீமா* என்கிறோம்.
நம் ஸ்கீமாக்களில் அனுபவங்கள் தொகுத்து வைக்கப்படுகிறது.... அவ்வாறு புது அனுபவங்களைச் சேர்ப்பதற்காக நம் ஸ்கீமாக்கள் மாற்றத்துக்கு உள்ளாவதும் உண்டு.
ஆக்கவியத்தின் அடிப்படையிலும் ஒழுங்குபடுத்தும் தன்மைக்கேற்பவும்தான் நம் மூளை வேலை செய்கிறது. நமது கல்வி குழந்தைகளைச் சென்று சேராமலிருக்க இரண்டு காரணங்கள் உண்டு.
1. தொடர்பற்ற துண்டுகளாக அறிவைக் குழந்தைகளிடம் கொடுக்கிறோம்.
2. நாம் அறிவை எவ்வாறு கொடுத்தோமோ அதே வழியில்தான் குழந்தைகள் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குழந்தைகள் தங்களுக்குக் கிடைக்கும் புதிய தகவல்களை ஏற்கனவே கிடைத்திருக்கும் அறிவோடு தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ளும் இயல்பு கொண்டவர்கள். அவர்களுக்குத் தொடர்பற்ற தகவல்கள் கிடைக்கும்போது மிகவும் சிரமப்படுவார்கள்.
மிக எளிதாகக் குழந்தையின் கருத்துருவாக்கத்தை நீக்கி நம்முடையதைப் புகுத்தலாம் என்று நினைக்கிறோம். ஆனால் மூளை அவ்வாறு செயல்படுவதில்லை. ஒரு கருத்துத் தொகுப்பபை(ஸ்கீமா) வேண்டாமென நீக்கி அந்த இடத்தில் புதிய ஒன்றை எடுத்துக்கொள்ளாது. அதற்குப்பதிலாகப் புதிய ஸ்கீமாவை முந்தைய கருத்துடன் பொருத்திப்பார்க்கும். புதிய கருத்துக்கு இடம் கொடுக்கச் சில மாற்றங்களைச் செய்யும். அறிவு உருவாக்கப்பட வேண்டும் என்பதை மறக்க முடியாது. ஆய்வுகள் கூறுவதன்படிப் பழைய கருத்துத் தொகுப்பை மாற்றிப் புதிய கருத்தை உருவாக்கும் செயல் மெதுவாக, படிப்படியாகத்தான் நடக்கும். உடனே ஒரு நொடியில் நடப்பதில்லை. இவ்வாறு ஒரு ஸ்கீமா மாறும்போது அதில் தவறான, உறுதியற்ற தகவல்கள் நுழையலாம். பிழைகள் இருக்கலாம். இவற்றை நீக்கி முழுமையான புரிதலை அடைய நீண்ட பயணம் தேவை.
இத்தகைய கற்றலைத்தான் கருத்துமாற்றம் என்கிறோம். உண்மையில் கருத்துமாற்றம் நடக்கும்போதுதான் குழந்தையிடம் கற்றல் நடக்கிறது.
கற்றலை பொதுவாக மூன்று துறைகளாகப் பிரிக்கலாம்..
1.கருத்தறிவு
(உயிரியல், வேதியியல், மொழி போன்ற பாடங்கள் பற்றிய அறிவு)
கருத்தறிவு என்பது ஒரு பாடப்பகுதியிலுள்ள அடிப்படைக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வது.. அந்தந்தப் பாடப்பகுதியில் என்னென்ன நடந்துள்ளன, இன்னும் என்னென்ன நடக்க வாய்ப்புள்ளன ஆகியவை பற்றிப் புரிந்துகொள்வதும் கருத்தறிவுக்குள் அடங்கும்.
2.செய்முறையறிவு
பல்வேறு திறமைகளைப் பெறுவது தொடர்பானது. செய்முறையறிவு என்பது ஒன்றை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்துவைத்திருப்பதைக் குறிக்கும்.
3.காரணகாரியத் தொடர்பு காணும் திறமை (உயர் நிலையிலானது)
“பன்னிரண்டு ஆண்டுகள் கல்வி கற்றுவரும் ஒரு மாணவருக்குச் சிறந்த முறையில் வாசிக்க, எழுத, கணக்கிட, சில தகவல்களை ஞாபகப்படுத்த மட்டும் தெரிந்தால் போதாது. மாறாகச் சிந்திக்கவும் தெரிய வேண்டும்” என்பார் உளவியலாளர் டேவிட் பெர்கின்ஸ்.
எதிர்திசை கற்பித்தல்(Reciprocal Teaching):
இந்த கற்பித்தல் முறையை 1980 களில் உளவியலாளர் ஆன் பிரௌன் குழுவினர் வடிவமைத்துள்ளனர். கற்றலுக்கான முழுப்பொறுப்பையும் மாணவர்களே எடுத்துக்கொண்டு எகுழுவாகக் கற்கும் சமூகமாக மாணவர்கள் மாறுவதே இம்முறை. இதில் சவாலான பாடப்பகுதியைப் புரிந்து கொள்ள ஆசிரியர் உதவியை நாடலாம். இக்கல்விமுறைதான் இப்போது நமது தமிழக அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் படைப்பாற்றல் கல்வி ஆகும் என நினைக்கிறேன்.
இவ்வாறு இரண்டாம் அத்தியாயமானது கற்றலைப் பற்றிய பல்வேறு தகவல்களைக் கூறி நம் புரிதலை நன்கு மேம்படுத்துகிறது.
இப்பகுதியில் கூறப்பட்டுள்ள ஸ்கீமா என்பது கற்றல் - கற்பித்தலில் மிக முக்கியமான பகுதி ஆகும்.
அடுத்த அத்தியாயத்தில் கற்றலோடு தொடர்புடைய நினைவாற்றலைப் பற்றிப் பார்ப்போம்.
நன்றி!
புத்தகம்: குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
ஆசிரியர்:. கமலா வி முகுந்தா தமிழில்: ராஜேந்திரன்
கிழக்குப்பதிப்பகம். விலை:295/-
இவண்:
இராமமூர்த்தி நாகராஜன்.

No comments:

Post a Comment