Monday, 3 September 2018

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ ரகசியங்கள்(பகுதி-5)

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ ரகசியங்கள்(பகுதி-5)
***************
********
(நன்றி அண்ணாமலை சுகுமாரன் ஐயா...)

‘பிரக்ஞானம் பிரமம்‘ என்கிறது ரிக் வேதம். 
“மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
அஞ்ஞானந்தனை அகல்விக்கும் நல்லறிவே”
என்கிறார் சிவபுராணத்தில் மாணிக்கவாசகர்.
இத்தகைய ஆதியும் அந்தமும் இல்லாத, எல்லையற்ற அறிவுக்கு அறிவான, பேரறிவின்  பேருவமே இறைவனின் இயல்பு.

எந்த வாக்கினாலும், எத்தகைய விரிவுரையாலும், பிற பொருள்களைப் போல் அத்துணை எளிதாக அறிய முடியாத அறிவின் மூலப்பொருளே இறையாகிய பரம்பொருள்.

அத்தகைய அறிவு, எவ்வாறு உணர்வாகப் பரிமளிக்கிறது  என ஓரளவு விரிவாகச் சென்ற பகுதிகளில் பார்த்தோம்.

பரிணாம வளர்ச்சியில் வேட்டையாடுவதற்கும், வேட்டையாடப் படுவதில் இருந்து காத்துக் கொள்வதற்காகவே அதற்கு உகந்ததாக உலகில் முதலில் தோன்றிய முதுகெலும்புள்ள மீனில் இருந்த, தற்போது உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை விலங்குகளும், பறவைகளும் சிறுகச் சிறுக  மாறி மாறி தற்போதைய நிலையை அடைந்து தங்களுக்குரிய வாழ்வை வாழ்ந்து வருகின்றன.

ஆனால் மனிதகுலம்  மட்டும் தனது வேட்டையாடும் அடிப்படைக் குணத்தில், இருந்து இரையை மட்டும் நாடுவதை விடுத்து, மனம் என்னும் வஸ்த்து அதனிடம்  இருந்ததால், இந்த உடலினைக் கொண்டு மேலும் மேலும் அறிவதையே வாழ்தலின் பயனாகக் கொண்டு வளர்ந்து வருகிறது பரிணாமத்தின் அடுத்த நிலைக்கு உயர்ந்து வருகிறது.

வாழ்தல் என்பது மேலும் மேலும் அறிவதிலேயேக்  கழிகிறது.   நமக்கு கிடைக்கும்  அனுபவங்கள் அத்தனையும் அறிவின் பெருக்கமே
சுவாமி சித்பவானந்தரின் பகுப்புப்படி  மனித  குலத்தின் வாழ்தல் முறை மூன்று வகைப் படுகிறது.
வென்று வாழ்தல்
வகுத்து வாழ்தல்
வழங்கி வாழ்தல்
அநேகமாக மனிதர்களிலும், விலங்குகளிலும் இதில் இருக்கும்  முதல் முறையான ‘வென்று வாழ்தல்’ என்பதே  மேலோங்கி இருக்கிறது.
அதுவே competion எனப்படுவது, அதையே வாழ்தலின் சாமர்த்தியம் என மேல்நாட்டு மனோபாவ முறை வலியுறுத்துகிறது.
இதில் தங்களுக்குத் தருகின்ற மதிப்பை இத்தகைய வகையினர்  பிற உயிர்களுக்குத் தருவதில்லை.

வெற்றிக்கு மட்டுமே இதில் மதிப்பு,
மனிதர்களுக்கு மதிப்பு அல்ல.
பிறரை வென்று வாழ, மற்றவரின் உடமைகளை கவர்ந்து வாழ்தலே மேல் என்று நினைப்பு அவர்களை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அதை கீழ்த் தரமானதாக நமது தத்துவ முறை வலியுறுத்துகிறது.
உலகின் இறையின் மற்றையப் படைப்புகளை ஏதேனும் ஒரு வகையில் மடக்கி, அடக்கி தங்கள் நலனுக்காகவும், ஜீவனத்துக்காகவும் பயன்படுத்துதல் இத்தகையோரின்  குறிக்கோள் ஆகும் .
அவரவர் வலிமைக்கும், வாய்ப்புக்கும் தக்கபடி பிறர் மீது தங்களது ஆளுகையை செலுத்துவது அவர்தம் இயல்பு. இதனால் உலகே  போராட்டம் நிறைந்ததாக ஆகிறது, துன்பம் மிகுகிறது.  உலகம் நரகம் ஆகிறது. ஒவ்வெருவரும் அப்படியே தங்கள் இயல்பையே பிரதிபலிக்க முயலும் போது,   ஒரு வனத்தின் வாழ்வு உலகின் வாழ்வின் முறையாக மாறிவிடுகிறது.

இத்தகைய வாழ்கை முறையை தான் வாழும் வாழ்வில் எதிர் கொண்டாலும், அதைத் தவிர்த்து ‘வகுத்து வாழ்தல்’ என்னும் வாழ்க்கை முறையில் வாழ்வது அதைவிடப் பன் மடங்கு உயர்வானதாகும்.
இதுவே co-operation  எனும் சமுதாய வாழ்க்கை முறையாகிறது. தனி நன்மை கூடவே இதில்  பொது நன்மைக்கும்  இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

முறையான கட்டுப்பாடு மூலம் தனது நலன் கூடவே  பொது நலனுக்கும  முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அன்பும் ஆதரவும் இத்தகைய வாழ்வில் இடம் பெறுகிறது.
தன்னலனும் பொதுநலனும் சமமாகப் பேணப்படுகிறது. இறைவகுத்துள்ள விதிவழி வாழ்க்கை இதுவே ஆகும்.

இதில் மூளையை  விட உணர்வுக்கு மதிப்பதிகம். நாம் வாழும் வாழ்விலேயே சுவர்க்கத்தின் வாழ்க்கை இந்த முறையிலேயே அமைகிறது.
வாழ்க்கை சுவர்க்கம் ஆகிறது.

மூன்றாம் முறையான இனிய முறை அதனினும் மேம்பட்டது. அது வாழ்க்கையை வேள்வி ஆக்குகிறது. தன்னையே ஆகுதி ஆக்குகிறது. அதுவே’ வழங்கி வாழ்தல்’ இது self dedicated life எனப்படுவது. இதில் பெறுவதை விடக் கொடுப்பது அதிகம்.
தான் ஈட்டும் பொருள் தனக்காகவென்று அதிகம் இல்லாமல் மிகுதியும் மற்றவர்களுக்காகவே, பொது நலனுக்காகவே இத்தகைய முறையில் செலவிடப் பெறுகிறது.
அவர்கள் புரியும் மக்கள் சேவையே ஆண்டவன் சேவையாகிறது.
நரர்களைப் பேணுவதே நாராயண வழிபாடு ஆகிறது.

வாழையும் தென்னையும் போல் பெறுவதை விடத் தருவதே  அதிகம் ஆகிறது.  இத்தகையோர் சமுதாயத்திற்கு வழங்கி வாழ்கிறார்கள். அத்தகைய மகாத்மாக்கள் இவ்வுலகை மேம்படுத்தத், தங்கள் வாழ்க்கையே இறைக்கு வேள்வியாக அளிக்கிறார்கள். அத்தகையவர்களின் எண்ணிக்கை மேன்மேலும் இவ்வுலகில் உயரும்போது இந்த வாழ்க்கை மட்டுமல்ல வாழும் உலகமே சுவர்க்கமாகிறது.

இத்தகைய வாழ்வின் மாற்றங்கள் வாழ்தலின் புரிதலைப் பொறுத்தே  மெதுவாக நடை பெறுகிறது. இதுவே மனித வாழ்வின் மேல்நோக்கிய பரிணாம வளர்ச்சி ஆகிறது. இந்த வளர்ச்சியை அடைவதற்கு அறிவின் மேன்பாடு பிறவிகள் தோறும் வாய்க்க வேண்டும்.

முதலில் பிரபஞ்சத்தையும் பிறகு பரம்பொருளையும் அறிவதே அறிவைப் பெறுவதன் பயனாகும்.
அத்தகைய ஈட்டும் அறிவு அத்தனையும்  பிறவிகள் தோறும் சேமிக்கப்பட்டு, அறிவில் தேடுதலுக்கு ஏற்பப் பிறவிகள் அடுத்து அடுத்து ஏற்படுகின்றன.
அதிலேயே பல கொடுக்கல் வாங்கல் கணக்குகளும் தீர்க்கப்படுகின்றன.
அதன் சமன்பாடு எத்தகையக் கணித நிபுணராலும்  தீர்க்க இயலாதது. அதற்குத் தேவை வேறுவகையான  கணக்கறிவு.
இவ்வகை அறிவு தர்ஷண்ங்கள் மேலும்  அறுவகையில் வகுக்கப்படுகிறது.
நியாயம், வைசேஷிகம், மீம்மாம்சம், சாங்கியம், யோகம், வேதாந்தம் எனப் பெயர் பெறுகின்றன.
இத்தகைய தர்ஷனங்கள் தரும் அறிவு, அனுபவ வாயிலாகவும், மீண்டும் மீண்டும் அனுபவங்கள் அறிவாகவும், பெற்ற அறிவு மேலும் நல அனுபவங்களைப் பெறவும், மேலும் பாவிக்கப்படும் அனுபவங்கள் நல உணர்வுகளாகவும் மாற்றம் பெறுகிறது. 

அத்தகைய நல உணர்வினை அடைய இந்த உடம்பு இல்லாமல்  இயலாது என்கிறது உடம்பின் பயன் எனும் அதிகாரத்தில் உள்ள இந்தக்  குறள்.
குறள்  எண்   15
உடம்பினாலன்றி உணர்வு தானில்லை
உடம்பினாலுன்னியதே யாம் 

இளமையில் கல் என்றால் இளமையில் “கல்” போல இருக்கவேண்டும் என்றா பொருள் கொள்வோம் “கல்” என்றால் கல்வி பெறு என்றுதானே பொருள் கொள்வோம் .

ஆனால் இளமையில் கல் போல் இருந்த நம்மை நல்ல ஒரு மனிதனாக ,தேர்ந்த ஒரு கலைப் பண்புடைய அழகிய சிற்பம் போல் நம் வாழ்க்கையை அமைப்பதற்கு ,அந்தக் கல்லிலே இருந்த வேண்டாத கல்லின் பகுதியை காலம் என்னும் சிற்பி சிறிது சிறிதுசிறிதாக செதுக்கி ,சிறந்ததொரு வாழ்வியல் சிற்பமாக நமது வாழ்வை மாற்றுகிறது .

தேவை இல்லாததை சிறுகச் சிறுக நீக்குவதாலேயே வாழ்வு சிறப்புடையதாகிறது .  தேவையானதை சேர்ப்பதையும்,
தேவை இல்லாததை நீக்குவதையும் ஒரு நாளைக்கு 21600 முறை மூச்சு என்ற பெயரில் யாரும் சொல்லித்தராமலேயே செய்து வருகிறோம் . .
அங்ஙனமே நமது செயலில் உள்ள மாசுகளையும் , நம்மில் படிந்துள்ள மலங்களையும் நீக்கினால் வாழ்வில் இறையின் இருப்பை உணரலாம் என்கிறது இந்தக் குறள்.

 மாசற்ற கொள்கை மனத்திலடைந்தக்கால்
ஈசனைக் காட்டுமுடம்பு 

குற்றம், அழுக்கு மலம் கறை, முதலியன இல்லாத கலகமற்றத் தெளிவான,  திடமான, சஞ்சலமற்ற நல்லொழுக்கம் கடைப்பிடிக்கும் திண்மையான, ஒருமுகம் படைத்த மனத்தை அடைந்து விட்டால் அதாவது மலமற்ற மாசற்ற மனதைக் கொண்டு, அதன் மூலம் அதைக் கொண்ட இந்த உடல் மூலம் கடவுளைக் காணலாம்  என்கிறது இந்தக் குறள். 

ஐம்பொறிகளையும் ,அந்தக் காரணங்களான மனம் சித்தி புத்தி மற்றும் அகங்காரம் எனப்படும் ”நான்” கொண்டும் அறியப்படுவது ‘இகம்’, அதாவது இவ்வுலக வாழ்க்கை சேர்ந்த கூர்த்த ஞானம் கொண்டு ‘பரம்’ உணரப் படுகிறது.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற்ப்பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்
என்கிறது திருமந்திரம். 
மலம் என்னும் வஸ்து இல்லாமல் “இகம்” என்பது இல்லை.
நல்லதும் கேட்டதும் கலந்ததே வாழ்க்கை.
எந்தகைய இன்பத்திலும், சிறிது துன்பம் உண்டு.
வலி இல்லாமல் எந்தச் சாதனையும்  இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவையும் அமிர்தமாகவும், மலமாகவும் மாறி மாறி அமைந்து வருகிறது.
பிரபஞ்சம் ஓயாமல் மாறி மாறி அமைத்து வருகிறது.
நாம் உண்ணும் உணவு, உடல் வளர்ச்சிக்குப் பயன்பட்ட பகுதி அமிர்தமாகவும், பயன்படாத பகுதி மலம் என்றும் வெளியேறுகிறது.

மலம் வெளியேறா விட்டால் உடல் நலம் கேடாகும். உண்ட உணவே நஞ்சாகும்.
பருகும் நீர் அமிர்த ரூபம் ஆனது, அதில் பயன்படாத பகுதி சிறுநீர் என வெளியேறுகிறது.
காற்று கரிமிலவாயு எனும் மலமாக அது பயன்படுத்தப் பட்ட பிறகு வெளியேறுகிறது. 
உயிர் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது அமிர்தம், உபத்திரமாக அமைவது மலம்.
அமிர்தத்தை ஏற்றுக் கொண்டு மலத்தை வெளியேற்றுவதன் மூலம் உயிர் வாழ்க்கை உறுதி பெறுகிறது. இயற்கையின் அமைப்பிலே அமிர்தமும் மலமும் இணை பிரியாததுதான்.
இது போலவே நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து அனுபவங்களிலும், அமிர்தமும், மலமும் கலந்தே மனதில் பதிவாகிறது.
அமிர்தத்தை ஏற்று வாழ்வின் மேன்பாடு அமைகிறது. மலம் மனதில் இருந்து வெளியேற்றப் பட வேண்டும்.

வேதாந்தத்தின் கோட்பாடு, மலங்கள் மூன்று என்கிறது. அவை மாயை, கன்மம், ஆணவம். இம் மூன்று மலங்களைப் பற்றி விவரிக்கப் புகின், அது மிக விரிவாகிப் போகும். ஆயினும் மும் மலங்களும் நீக்கப் பட வேண்டியவை. இவை நீங்கினாலேயே இறையின் இருப்பு தெளிவாகும் என்கிறது இந்தக் குறள்.
‘மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ‘ என்று கூறிக் கொண்டு 

7)  ஓசை உணர்வு எல்லாம் தருவிக்கும்
    நேசத்தால் ஆய உடம்பு

இந்தக்குறளில் நேசத்தால் ஆய உடம்பு ,ஓசை உணர்வு எல்லாம் தருவிக்கும் என்கிறார்
நேசத்தால் ஆய உடம்பு என்றால் என்ன ?

நேசம் என்பதுஎன்ன என்பது  அனைவரும் அறிந்ததே ,
நான் உலகத்தையே நேசிக்கிறேன் ,இந்த உலகத்தில் தான் என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை என புலம்புகிறீர்களா ?
உங்களை யார் உலகத்தை நேசிக்கச்சொன்னது ?
முதலில் உங்களை முழுமையாக நேசியுங்கள்
உங்களை அறியுங்கள் .,
பிறகு உங்களுக்கு அருகில் உள்ளவர்களை , உங்கள் அடுத்த வீட்டுக்காரை நேசியுங்கள் . இப்படியே அன்பு விரியட்டும் 
இப்போது  அன்பு செய்வது எப்படி என்றுதெரிந்துவிடும் .
அன்பு என்பது எதையும் எதிர்ப்பார்த்து செய்வதில்லை .அன்பு ஒரு அற்புதமான உணர்வு !
நீங்கள் வெளியேஅன்பை   கொடுக்க கொடுக்க ,உங்களுக்கும் ஜீவ சக்தி பெருகிவரும் .
உண்மையில் வெளியே  கொடுப்பது என்பது உங்களுக்கு நீங்களே கொடுப்பதுதான் என்பது புரியும்
உடம்பே அன்பு மயமாகும் .
அன்பே சிவம் என்று திருமூலர் ஏன்  சொன்னார் என்பது புரிந்துவிடும்
அன்பே உருவாக உடம்பு அமைந்தால் அனைத்தும் கிடைக்குமா ?அத்தகைய உடம்பு அமைத்தால் ஓசை உணர்வு எல்லாம் தருவிக்கும்  என்கிறார் ஒவையார் .
ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருவையாறு திருத்தாண்டகம் தேவாரத் திருப்பதிகதில்
எனவே ஓசை என்பதும் பரம்பொருளின் ஒரு வடிவு என்பது புரிகிறது
அது என்ன ஓசை என்று ஞானம் தெரிவிக்கும்
 நாத பிந்து கலாநிதி என்கிறார் அருணகிறார் .
இந்த பிரபஞ்சமே நாததால் உருவானது .

அடுத்து உணர்வு என்பது என்ன ?
உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு.
மெய்யில் படுவது மெய்ப்பாடு.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஒன்று மெய்ப்பாட்டியல்.
பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல்
முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத்தெழுச்சி உணர்வுகள்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் - ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள்.
ஆயினும் ஒவையார் கூறும் உணர்வு ,மெய்யுணர்வு எனும் தன்னை அறிதல் ஆகும்   அது உடல் அன்பு மயமானால் தானே அமையும் என்கிறார் .என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன்
விரைவில் அடுத்த குறளை பார்க்கலாம் .

No comments:

Post a Comment