மன்னுதிருப் புகலூர்வாழ் முருகனாரா மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார் சென்னியினுக் கழகமரு மலர்கள் கொய்து திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக் கன்னிமதிற் கழுமலநா டுடைய நாத காதன்மிகு மணங்காணுங் களிப்பினாலே யின்னல்கெட வுடன்சேவித் தருளான் மீளா திலங்கு பெரு மணத்தரனை யெய்தி னாரே.
சோழமண்டலத்தில், திருப்புகலூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவராகிய முருகநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தினந்தோறும் சூரியோதயத்துக்குமுன் எழுந்து ஸ்நானம்பண்ணிச் சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு போய், கோட்டுப்பூ கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்கின்ற நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிலே இட்டுக்கொண்டு வந்து, தனியிடத்திலிருந்து, பலவகைப்பட்ட திருமாலைகள் செய்து, அந்த ஸ்தலத்திலுள்ள வர்த்தமானீச்சரம் என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தும், திவ்விய மந்திரமாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் செபித்தும் வருவார்.
இப்படிச் செய்துவருங்காலத்திலே, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குச் சிநேகராகிய பெருமையையும் பெற்றார். பெற்ற அம்முருகநாயனார் அந்தத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமணத்தில் தம்முடைய சிவபூசாபலத்தினாலே போய், பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
முருக நாயனார் புராண சூசனம்
பூக் கொய்து மாலைதொடுத்துச் சிவனுக்குச் சாத்தல்
சிவனுக்கு உரியனவெனச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட பூக்களை, மெய்யன்போடு விதிப்படி கொய்து, பலவகைப்பட்ட மாலைகள் செய்து, சிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தலும், ஸ்ரீபஞ்சாக்ஷரம் செபித்தலும், மிகச்சிறந்த புண்ணியமாம். "நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவாநித்தலுமெம் பிரானுடைய கோயில்புக்குப்-புலர்வதன்மு னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்-தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்று-மலைபுனல்சேர் செஞ்சடையெம்மாதீ யென்று மாரூரா வென்றென்றே யலறா நில்லே." "பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்-நாக்கைக் கொண்டர னாம நவில்கிலா-ராக்கைக் கேயிரை தேடி யலமந்து-காக்கைக் கேயிரையாகிக் கழிவரே." என்னுந் திருநாவுக்கரசுநாயனார் தேவாரங்களானும், "முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்-பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ்-சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ-ரத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே." என்னுந் திருவாசகத்தானும், "நிலத்திற் றிகழ்ந்த நறுமலரு நீருற் பவித்த போதெவையும்-புலத்தி னழுந்தா வன்பினொடும் போதானந்தன் கழற்க ணிந்தோர்-மலத்தி னநாதி முத்தன்மல வயிரி யுறையுஞ் சிவலோகத்-தலத்திற் புகுந்து நலத்தகைய தலைவராகி நிலவுவரால்." என்னும் சிவபுண்ணியத் தெளிவானும், உணர்க.
இத்திருப்பணி செய்ய விரும்புவோர், நாடோறும் சூரியன் உதிக்குமுன் எழுந்து, ஸ்நானம் செய்து, தோய்த்து உலர்ந்த வஸ்திரம் தரித்து, சந்தியா வந்தனம் முடித்துக்கொண்டு, சுத்தி செய்யப்பட்டு, நாபியின்கீழ்ச் செல்லாது மேலே உயர்த்த கைகளை உடையராய், திருப்பூங்கூடையை எடுத்துக் கொண்டு, சிவனது திருவடிக்கணன்றிப் பிறிதொன்றினும் சிறிதும் இறங்காத சிந்தையோடு மௌனம் பொருந்தி, சென்று, பத்திர புஷ்பங்கள் கொய்து, திருப்பூங்கூடையில் இட்டுக்கொண்டு வந்து சுத்தி செய்யப்பட்ட காலினையுடையராய், புஷ்பமண்டபத்திற் புகுந்து, விதிப்படி சுத்திசெய்யப்பட்ட பூக்குறட்டில் வைத்து, இண்டை முதலிய திருமாலைகளைச் செய்க. சிவலிங்கத்தைத் தீண்டற்கு உரியார் தாமே சாத்துக. அல்லாதார் அதற்கு உரியாரைக் கொண்டு சாத்துவிக்க. திருப்பூங்கூடையை நாபிக்குக் கீழே பிடியாது ஒரு தண்டின் நுனியிலே கட்டி உயரப்பிடித்துக் கொண்டு வருக. அன்றேல், நாபிக்கு மேலே உயர்ந்த கையினாற் பிடித்துக்கொண்டு வருக. பத்திரபுஷ்பம் கொய்யும்போது மௌனம் வேண்டும் என்பது, "வைகறை யெழுந்து போந்து புனன்மூழ்கி வாயுங்கட்டி-மொய்ம்மலர் நெருங்குவாச நந்தன வனத்து முன்னி" என எறிபத்தநாயனார் புராணத்தில் கூறியவாற்றால், உணர்க. மனம் வேறுபடலாகாது என்பது திருமலைச்சிறப்புச் சூசனத்திற் காண்க. தீக்ஷையில்லாதான், இழிகுலத்தான், மிகுநோயாளன், தூர்த்தன், ஆசாரமில்லாதான், ஆசௌசமுடையான் என்னும் இவர்கள் கொண்டு வரும் பூ, எடுத்து வைத்து அலர்ந்த பூ, பழம் பூ, உதிர்ந்த பூ, காற்றில் அடிபட்ட பூ, கையிலேனும் உடுத்த புடைவையிலேனும் எருக்கிலை ஆமணக்கிலைகளிலேனும் வைத்த பூ, அரையின் கீழே பிடித்த பூ, புழுக்கடி எச்சம் சிலந்திநூல் மயிர் என்னும் இவற்றோடு கூடிய பூ, ஸ்நானம் பண்ணாமல் எடுத்த பூ, பொல்லா நிலம் மயான சமீபம் சண்டாளர் வசிக்கும் இடம் முதலிய அசுத்த ஸ்தானங்களில் உண்டாகிய பூ, இரவில் எடுத்த பூ, இவை முதலாயின சிவனுக்கு சாத்தலாகாது. "எடுத்து வைத்தே யலர்ந்தமலர் பழம்பூக்கண் மற்ற வெருக்கிலையா மணக்கிலையி னிற்பொதிந்த பூக்க-ளுடுத்தபுடைவையிற்கரத்தி னமைந்தநறும் பூக்க ளுதிர்ந்திடுபூ வரையின்கீ ழுற்றவிரைப் பூக்க-ளடுத்தபுழுக் கடியெச்சஞ் சிலந்திமயி ருறுத லங்கை யில்வைத் தங்கைகுவித் திடுதல் கங்குறனிலே-யெடுத்தமலர் நீரமிழ்த்தல் புறங்காட்டி லெய்த லெச்சில்குளி யாதெடுத்த லிழிபெனுமா கமமே." என ஞானப்பிரகாசதேசிகர் புஷ்பவிதியினும், "மடியினிற் பறித்தி டும்பூ மலர்ந்துகீழ் விழும்பூ முன்னா-ளெடுபடு மலரி ளம்பூ விரவினி லெடுத்தி டும்பூ-தொடர்நோயன் றீக்கை யில்லான் றூர்த்தனா சார மற்றோன்-கொடுவரும் பூவனைத்துங் குழகனுக் காகா வன்றே." எனப்பிறிது புஷ்பவிதியினும் கூறுமாற்றால், உணர்க.
இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்முருக நாயனார். இவர் விதிவழுவாது சிவனிடத்து இடையறாத மெய்யன்போடும் இப்புண்ணியத்தைச் செய்தமையால் அன்றோ, பரசமயகோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குத் தோழராகிய பெரும்பேற்றைப் பெற்றும், அவராலே "தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்-கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய் கோலங்-கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்-வண்டு பண்செய்யும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே." எ-ம். "ஈசனேறமர் கடவு ளின்னமிர் தெந்தையெம் பெருமான்-பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரின்மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்-வாசமாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே." எ-ம். புகழப்பட்டும், அவருடைய திருமணத்திலே சிவனது திருவடி நீழலை அடைந்தார். "ஏந்து முலகுறு வீரெழி னீலநக் கற்கு மின்பப்-பூந்தண் புகலூர் முருகற்குந் தோழனைப் போகமார்ப்பைக்-காந்துங் கனலிற் குளிர்ப்படுத் துக்கடற் கூடலின் வாய்-வேந்தின் றுயர்தவிர்த் தானையெப் போதும் விரும்பு மினே." என்று திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருவந்தாதியிற் கூறினார் நம்பியாண்டார் நம்பி என்க.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment