பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும் பசுபதியா ரெனுமறையோர் பணிந்து செந்தே னங்கமல மடுவினிடை யல்லு மெல்லு மகலாதே யாகளமா யமர்ந்து நின்று திங்கள்வளர் சடைமுடியா னடிகள் போற்றித் திருவெழுத்து முருத்திரமுந் திகழ வோதி மங்கையிட முடையபிரா னருளான் மேலை வானவர்க டொழுமுலகின் மன்னி னாரே.
சோழநாட்டிலே, திருத்தலையூரிலே, பிராமணகுலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளிலே பதிந்த அன்பே தமக்குச் செல்வமெனக் கொண்ட பசுபதி என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தாமரைத்தடாகத்திலே அகோராத்திரம் கழுத்தளவினதாகிய தண்ணீரிலே நின்றுகொண்டு, இரண்டு கைகளையும் சிரசின்மேலேறக் குவித்து, பரமசிவனுடைய திருவடிகளை மறவாத சிந்தனையோடு வேதபுருஷனுக்குக் கண்ணாகிய ஸ்ரீ ருத்திரத்தை ஓதி, சிலநாட்சென்றபின் சிவபதத்தை அடைந்தார். அதனால் அவர்பெயர் உருத்திரபசுபதி நாயனார் என்றாயிற்று.
திருச்சிற்றம்பலம்
உருத்திரபசுபதி நாயனார் புராண சூசனம்
ஸ்ரீ உருத்திரம் ஓதல்
வேதம் நான்கும் வேதாங்கம் ஆறும் நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம் நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதமே மேலானது; வேதத்துள்ளும் உருத்திரைகாதசினி மேலானது; அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அதினுள்ளும் சிவ என்னும் இரண்டெழுத்தே மேலானது; இவ்வாறு சிவதத்துவ விவேக விருத்தியிற் கூறப்பட்டது. வேதபுருஷனுக்கு இந்த உருத்திரம் கண்ணும், இதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியுமாம். இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்திற் காண்க. இவ்வுருத்திரத்தில் பகுப்பின்றி உயிர்ப் பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி எடுத்தோதி வழிபாடு கூறுதல் ஏற்றுக்கெனின்; எப்பொருள்களினும் சிவன் கலந்திருப்பர் என்பது தெரிந்து கொள்ளுதற் பொருட்டென்க. தமிழ் வேதமாகிய தேவாரத்துள் நின்ற திருத்தாண்டகம் முதலியவற்றினும் "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி - யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் - பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி - நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே" என்பது முதலாக இவ்வாறு பகுப்பின்றிக் கூறுதல் காண்க. சிவனிடத்து இடையறாத மெய்யன்போடு இந்த ஸ்ரீ ருத்திரத்தை நியமமாக ஓதுவோர் முத்தி பெறுவர். இவ்வுருத்திரத்தை, தடாகத்திலே இரவு பகல் கழுத்தளவினதாகிய ஜலத்திலே நின்றுகொண்டு, ஐம்புலன்களை அடக்கி, சிவனை மறவாத சிந்தையோடும் ஓதினமையால், முத்திபெற்றவர் இவ்வுருத்திரபசுபதி நாயனார். ஆதலால், இவ்வுருத்திரத்துக்கு உரியவர், தமது வாணாளை வீணாளாகப் போக்காது சிவனை மறவாத சிந்தையோடும், இதனை நியமமாக ஓதுக.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment