நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க் குமியாத விடநாத னுறுநோய் காட்டக் காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக் காழியார்கோ னமுதுசெயக் களித்து வாழ்ந்து வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.
சோழமண்டலத்திலே, சாத்தமங்கையிலே, பிராமண குலத்திலே, திருநீலநக்கநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் வேதத்தின் உள்ளுறையாவது பரமசிவனையும் அவருடைய அடியார்களையும் அன்பினோடு அருச்சித்து வணங்குதலே என்று துணிந்து தினந்தோறுஞ் சைவாகம விதிப்படி சிவார்ச்சனைப் பண்ணி, சிவபத்தர்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையுஞ்செய்வார்.
அப்படிச்செய்யுநாளிலே, ஒரு திருவாதிரை நக்ஷத்திரத்திலே சிவபூசையை முடித்துக்கொண்டு, அந்த ஸ்தலத்திலுள்ள அயவந்தி என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற சுவாமியையும் அருச்சிக்க விரும்பி, தம்முடைய மனைவியார் பூசைக்கு வேண்டும் உபகரணங்களைக் குறைவறக் கொண்டுவர, அவ்வாலயத்திற்சென்று, பூசைபண்ணிப் பிரதக்ஷிணஞ்செய்து, சந்நிதானத்தில் நமஸ்கரித்து, இருந்து கொண்டு, வேதாகமாதி சமஸ்த சாஸ்திரங்களின் உண்மைப்பொருளாகிய ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்தார். ஜபிக்கும் பொழுது, ஒரு சிலம்பி மேலே நின்று வழுவி, சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. அதைச் சமீபத்திலே நின்ற மனைவியார் கண்டு அச்சமடைந்து, விரைந்து, குழந்தைமேல் விழுச் சிலம்பி நீங்கும்படி ஊகித்துமிபவர்போல அன்பு மிகுதியினாலே அந்தச் சிலம்பி நீங்கும்படி ஊதித்துமிந்தார். திருநீலநக்கநாயனார் அதைக்கண்டு தம்முடைய கண்ணைப் புதைத்து, அறிவில்லாதவளே! "நீ இப்படிச் செய்ததென்னை" என்று சொல்ல மனைவியார் "சிலம்பி விழுந்தபடியால் ஊத்திதுமிந்தேன்" என்றார். நாயனார் மனைவியாருடைய அன்பின் செய்கையை நன்கு மதியாமல், அது அநுசிதம் என்று நினைந்து, அவரை நோக்கி "நீ சிவலிங்கத்தின்மேலே விழுந்த சிலம்பியை வேறொரு பரிசினாலே நீக்காமல் முற்பட்டுவந்து, ஊதித்துமிந்தாய் இந்த அநுசிதத்தைச் செய்த உன்னை நான் இனித் துறந்தேன்; நீங்கிவிடு" என்றார். அப்பொழுது சூரியாஸ்தமயனமாயிற்று மனைவியார் நாயனாருடைய ஏவலினாலே ஒருவழி நீங்க; நாயகர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி விட்டார். மனைவியார் அஞ்சுகின்ற உள்ளத்தோடும், அவரிடத்திற் செல்லாமாட்டாதவராகி, ஆலயத்தில் இருந்தார். நாயனார் நித்திரைசெய்யும்பொழுது, பரமசிவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, தம்முடைய திருமேனியைக் காட்டி "உன்மனைவி மனம் வைத்து ஊதித் துமிந்த இடமொழிய இப்புறம் சிலம்பியின் கொப்புளம்" என்று சொல்லியருளினார். நாயனார் அச்சத்துடனே அஞ்சலிசெய்து கொண்டு விழித்து எழுந்து, கூத்தாடினார்; பாடினார், சிவபிரானுடைய திருவருளை வியந்து நின்று அழுதார். விடிந்தபின், ஆலயத்துக்குப் போய், சுவாமியை நமஸ்கரித்து, ஸ்தோத்திரஞ்செய்து, மனைவி யாரையும் அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார். அதற்குப்பின், முன்னிலும்பார்க்க மிகுந்த மகிழ்ச்சியோடு சிவார்ச்சனையையும் மாகேசுரபூசையையுஞ் செய்து கொண்டு இருந்தார்.
அப்படியிருக்குநாளிலே, பரமாசாரியராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைத் தரிசிக்கவேண்டும் என்னும் அத்தியந்த ஆசையையுடையராயினார். அப்படியிருக்கும் பொழுது திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்திநாதரை வணங்கும் பொருட்டுத் திருக்கூட்டத்தோடும் சாத்தமங்கைக்கு எழுந்தருளி வர; திருநீலநக்கநாயனார் கேள்வியுற்று மிகுந்த மகிழ்ச்சியோடும் நடைப்பந்தரிட்டு, வாழைகளையும் கழுகுகளையும் நாட்டி, தோரணங்கள் கட்டி, நிறைகுடங்களும் தூபதீபங்களும் வைத்து, தம்முடைய சுற்றத்தார்கள் சமஸ்தரோடும் அவரை எதிர் கொண்டு நமஸ்கரித்து, தம்முடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய், திருவமுது செய்வித்தார். திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் அன்றிரவிலும் அங்கேதானே திருவமுது செய்து, திருநீலநக்கநாயனாரை அழைத்து, "திருநீலகண்டப்பெரும்பாணருக்கும் விறலியாருக்கும் இன்று தங்குதற்கு ஓரிடங்கொடும்" என்று சொல்லியருள; திருநீலநக்கநாயனார் வீட்டுக்கு நடுவிலிருக்கின்ற வேதிகையின் பக்கத்திலே அவர்களுக்கு இடங்கொடுத்தார். பெரும்பானார், அவ்விடத்திலே வேதிகையிலுள்ள நித்தியாக்கினி வலஞ்சுழித்து ஓங்கி முன்னையிலுஞ் சிறந்து பிரகாசித்து, வருணமன்று பத்தியே மகிமை தருவது என்பதை விளக்கவும், அதுகண்ட திருநீலநக்கநாயனார் மகிழ்ச்சியடையவும், விறவியாரோடு நித்திரை செய்தார்.
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார், விடிந்தபின் அயவந்தியிற் சென்று சுவாமி மேலே திருநீலநக்கநாயனாரைச் சிறப்பித்துத் திருப்பதிகம்பாடி, சிலநாள் அங்கிருந்து, பின் திருநீலநக்கநாயனாருக்கு விடைகொடுத்து, அந்தத்திருப்பதியினின்றும் நீங்கியருளினார். திருநீலநக்கநாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மேலே பதிந்த அன்பும் அவருடைய கேண்மையும் அவருக்குப் பின் செல்லும்படி தம்மை வலிந்தனவாயினும், தாம் அவருடைய ஆஞ்ஞையை வலியமாட்டாமையால், அந்தத் திருப்பதியிலே அவருடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் செல்லுந்தலங்களிலே இடைநாட்களிற் சென்று அவரோடிருந்து, பின் திரும்பிவிடுவார். இப்படி நெடுநாட் சென்றபின், திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருடைய திருமணத்தைச் சேவித்துச் சிவபதமடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
திருநீலநக்கர் நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
1. சிவபூசையும் சிவனடியார் வழிபாடும்
மனித வாழ்விலட்சியத்தின் முடிந்த முடிபாவது உயிர் பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைதல் ஆதலினாலும் அம்முடிபை அடைதற்கு முன்னோடியாக வேண்டும் உள்ளார்ந்த ஆன்மிகத் தகுதியை உண்டு பண்ணுதற்கும் பெறுஞ்சிவப்பேற்றை நிலைநிறுத்திச் சிவானந்தப் பேரின்ப முறுதற்கும் சிறந்த சாதனம் என்று விதிக்கப்பட்டுள்ளமையாலும் சைவத்திற் சிவபூசையானது பெத்த நிலையிலுள்ள ஆன்மாக்கள் சுத்தநிலையிலுள்ள ஆன்மாக்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக வற்புறுத்தப் பட்டுள்ளதாகும். அது, தேவாரத்தில், "அருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே '-' ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதின்முன் மலர்பறித்திட்டுண்ணாராகில் அருநோய்கள் கெட வெண்ணீறணியா ராகில் அழியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற் பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே" எனவும், திருவாசகத்தில், "சொற்பதங்கடந்த அப்பன் தாளதா மரைக ளேத்தித் தடமலர் சூட்டமாட்டா ஆளலா தவரைக்கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே" எனவும் திருமந்திரத்தில், "யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை" எனவும் சிவஞானசித்தியாரில், "தாபர சங்கமங்க ளென்றிரண்டுருவில் நின்று மாபரன் பூசைகொண்டு மன்னுயிக்கருளைவைப்பன் நீபரன்தன்னை நெஞ்சில் நினைவையேல் நிறைந்த பூசை ஆய்பரம் பொருளை நாளும் அர்ச்சி நீ அன்பு செய்தே" - "மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையில் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச் சினமுதலகற்றி வாழுஞ் செயலற மானால் யார்க்கும் முனமொருதெய்வ மெங்குஞ் செயற்கு முன்னிலையா மன்றே" எனவும் வருவனவற்றாலும் இவ்வகையிற் பல பிரகாரமாக மற்றுமுள்ள சைவ சாஸ்திர தோத்திர நூல்களில் வருவனவற்றாலும் அறியப்படும்.
ஆயின், பெத்த நிலையிலிருக்குங் கிரியை யாளர்க்கே யன்றிச் சுத்த நிலையிலிருக்கும் ஞானிகளுக்குச் சிவபூசை வேண்டியதில்லை எனலும் உண்டன்றோ எனின் அது சைவக்கோட்பாடன்றென மறுக்க. சிவபூசை ஆரம்பித்ததற்கான அடிப்படைத் தகுதி கிரியையாளர்க்கே உண்டெனச் சைவஞ்சொல்வதன்றி அவர்க்கு மட்டுமே அது உரியதென வரையறுத்த தின்றாம். "ஞான யோகக் கிரியா சரியையிவை நான்கும் ஈசன் தன்பணி ஞானி நான்கினுக்கு உரியன்" என்ற சிவஞானசித்தியார் வசனத்தால் அது உறுதிபெறும். மேலும் விசாரிக்கில் திருச்செங்காட்டங்குடியில் விநாயகக் கடவுளும், காஞ்சிபுரத்தில் உமா தேவிப் பிராட்டியாரும், திருத்தணிகையிற் சிவ சுப்பிரமணியப் பெருமானும் சிவ பூசையாற்றிய வாற்றை முறையே கந்த புராணம் கயமுகனுற்பத்திப் படலத்திலும் திருத்தொண்டர்புராணத்துத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திலும் கந்த புராணம் வள்ளியம்மை திருமணப் படலத்திலும் ஏற்றிப் போற்றுஞ் சைவத்தில் ஞானிகட்குச் சிவபூசை விலக்காதற் கிடமெங்கேயாம். அன்றியும், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள், "பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லை" என்ற அருளிப்பாட்டின் மூலம் சிவ பூசை அனைவர்க்குமாம் என விதித்துள்ளது முண்டாம்; மேலும் சுத்தான்ம நிலை பெற்றுள்ளோரின் இயல்பு கூறுஞ் சிவஞானசித்தியார் ஒன்பதாம் சூத்திரம் அவர்க்கு அகப்பூசையோடு புறப்பூசையும் உண்டெனத் தெரிவித்தலும் அறியத்தகும். அது, "புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டின் பூமரத்தின்கீழுதிர்ந்த போதுகளுங்கொண்டு சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தாலங்குச் சிந்தித்தபடியிங்குஞ் சிந்தித்துப் போற்றி அறம் பாவங்கட்கு நாம் என்கடவோம் என்றும் ஆண்டவனைக் கண்டக்கால் அகம்புறமென்னாதே திறம்பாதே பணி செய்து நிற்கையன்றோ சீரடியார் தம்முடைய செய்திதானே" என வரும்.
இனி சிவலிங்கத்தில் வெளிப்பட்டுத் தோன்றுதல் போன்று சிவனடியாரிடத்திலுஞ் சிவன் வெளிப்பட்டுத் தோன்றுதலால் "சீவன் முத்தர் சிவமே யாவர்" எனவும் "சிவனடியார் பராவுசிவர்" எனவும் ஞானக்காட்சியநுபவம் பேசும். அவர்பால் சிவன் வெளிப்பட்டுத் தோன்றுவர் என்பதன் உள்ளுறை விளக்கமாவது; சிவபெருமானே அருவாயிருக்குந் தன்னை உலகத்தவர் உருவிற் கண்டு கொள்ளட்டுமென்ற நோக்கில், திருவெண்ணீறு உருத்திராக்கம் முதலியவற்றோடு கூடிய தமது திருவேடத்தைச் சிவனடியார்களுக்கு வழங்கியுள்ளார். அதே சிவபெருமானே அவர்களின் உயிருக்குயிராய் விளங்க நின்று அவர் அறிவை விளக்கி (மற்றோரிடத்திற் போல மறைந்து நில்லாமல்) அவர்கள் அறிய அவர்களிடத்தில் நிறைந்து நிற்கின்றார். அன்றியும் சிவனடியார்கள் எந்நேரமும் தாம் ஆன்மாக்கள் என்ற நினைவையிழந்து ஒவ்வொருவரும் தனித்தனி "நான் சிவம்" எனச் சிவோகம் பாவனை செய்தபடியிருக்கிறார்கள். தத்தமக்கு லபிக்கும் அருட்குறியின் வழி சிவனை இதயத்தில் இருத்தித் தியானித்த வண்ண மிருக்கிறார்கள். அதன் முதிர்வில் அக்குறியும் நழுவிப்போகத் தாமாந்தன்மை முற்றுமற்றுச் சிவமேயாய் நின்றுவிடுகிறார்கள். இவ்வித்தன்மைகளால் சிவலிங்கத்தில் தானும் தயிரில் நெய்போலுமளவுக்கு வெளிப்படும், எனப்படுஞ்சிவம் அவர்களிடத்தில் நெய்யில் நெய்போல வெளிப்படப் பெறுதலால் சிவனடியார் சிவமேயாவர் என்பதாம். அது சிவஞான சித்தியாரில், "அறிவறியான் தனையறிய ஆக்கையாக்கி அங்கங்கே யுயிர்க்குயிராய் அறிவுகொடுத்தருளாற் செறிதலினாற் றிருவேடஞ் சிவனுருவேயாகும் சிவோகம் பாவனை யத்தாற் சிவனுமாவர் குறியதனா லிருதயத்தே யரனைக்கூடுங் கொள்கையினா லரனாவர் குறியொடு தாமழியு நெறியதனாற் சிவமாயே நின்றிடுவரென்றால் நேசத்தால் தொழுதெழுநீ பாசத்தாள்விடவே" என்பதனால் அமையும்.
இங்ஙனம் பலவகையானுஞ் சிவமேயாய சிவனடியார் வழிபாடுஞ் சிவபூசைக்கு நேரொத்த மகிமையுடைத்தாம். சிவபூசைக்குப் பயன், பூசிப்போர் உளத்திற் சிவன் தோன்றி விளங்குதல் ஆதல் போலச் சிவனடியார் வழிபாட்டுக்கும் பலன், வழிபடுவோரிடத்திற் சிவம் தோன்றி விளங்குதலாம். அது தேவாரத்தில், "எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும் அஞ்சனமுங் கண்டாலுள்கி உவராதே அவரவரைக் கண்டபோதில் உகந்தடிமைத் திறம் நினைந்தங் குணர்வே மிக்கு இவர்தேவர் அவர் தேவரென்று பேசி இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக்காணலாமே" எனவும் திருமந்திரத்தில் "மஞ்சன மாலை நிலாவியவானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமுதாம் உபசாரமெட்டெட்டொடும் அஞ்சலியோடுங் கலந்தர்ச்சித்தார்களே" எனவும் வருவனவற்றா லறியப்படும்.
2. வேத உள்ளுறை
திருநீலநக்கநாயனார் தமது பூர்வ புண்ணிய பவப்பேறாக இத்தகு மகிமைவாய்ந்த சிவபூசையையும் சிவனடியார் வழிபாட்டையும் நித்த நியமமாக மேற்கொண்டு வந்துள்ளார். அவர் அந்நியதியை மேற்கொள்வதற்கு அடிப்படையாயிருந்த அவரது கருத்துப் பின்னணியைச் சேக்கிழார் சுவாமிகள், "வேத உள்ளுறை யாவன விரிபுனல் வேணி நாதர், தம்மையும் அவரடியாரையும் நயந்து பாத பூசனை புரிவதும் பணிவதும் என்றே காதலாலவை இரண்டுமே செய்கருத்துடையார்" எனக் கூறித் துலக்கியுள்ளார். இதன்கண் சிவபூசையும் சிவனடியார் வழிபாடும் வேதத்தின் உள்ளுறை பொருள்கள் என்றிருப்பவும் வேதம் விக்கிரக வழிபாட்டை ஆதரிக்கவில்லை. அது ஆகமப் பிரஸ்தாபம் என்பாரும் உளரன்றோ எனின் அவர் அறியார். "வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாமுள" எனத் திருமூலர் தெரிவித்தமைக்கிணங்க விக்கிரக வழிபாடும் வேதத்தில் ஒரு பொது நிலையில் விளக்கப்பட்டிருத்தல் கண்கூடு. அது, யசுர் வேதம் 5ஆம் கண்டம் 7ஆம் பிரசினம் 2ஆம் அநுவாகத்தில், காலரூபியாகிய உமது பிரதிமையைச் செய்து இருட்டறையில் உபாசிப்பவன் வலிமையுள்ள புத்திரனையும் பூரண ஆயுளையும் அடைகிறான். பிரஜைகளுக்கு எசமானனாந் தன்மையையுமடைகிறான் (சம்வத்சரஸ்ய ப்ரதிமாம் யாம் த்வா ராத்ர்யுபாசதே ப்ரஜாம் சுவீராம் கருத்வாவிச்வ மாயுர் வ்யச்னவத் ப்ரஜாபத்யாம்) எனவும் யசுர்வேத ஆரண்யகம் 4ஆம் பிரசினத்தில், நன்கு சித்திரிக்கப்பட்ட சிலையை வணங்குகிறேன் (அச்மானம் ஆகணம் ப்ரபத்யே) எனவும் அதர்வ வேதம் 1ஆம் கண்டம் 2ஆம் கற்பகம் 3ஆம் துவனியில், சுவாமி வாரும் இந்த கற் பிரதிமையில் நில்லும் இந்தக் கற்பிரதிமையே உமக்குச் சரீர மாகுவதாக (ஏஹி அச்மானம் ஆதிஷ்ட அச்மாபவது தே தநூ:) எனவும் யசுர்வேத தைத்திரீய ஆரண்யம், 10ஆம் பிரசீனம் 16ஆம் அநுவாகத்தில், சிவலிங்கத்துக்கு வணக்கம் (சிவலிங்காயநம்:) எனவும் பஸ்மஜாபால உபநிடதத்தில், சிவலிங்கத்தைத் தினந்தோறும் காலை உச்சிமாலை என்ற முப்போதும் பூஜிக்குக (சிவலிங்கம் த்ரிசந்தியம் அஹரஹ: அப்யர்ச்சயேத்) எனவும் வருவன வற்றா லறியப்படும். சிவலிங்க வழிபாடு போலவே சிவனடியார் வழிபாடும் வேத உள்ளுறையாதல், யசுர்வேத தைத்திரீய சங்கிதையின் நான்காவது காண்டத்தின் மத்தியிலுள்ள ஸ்ரீ ருத்ரத்தின் நமகப்பிரிவில் 1-9 இல், உருத்திரருடைய அடியார்கள் எவர்களோ அவர்களுக்கும் நான் நமஸ்காரஞ் செய்கிறேன் (அதோஸ்ய சத்வானோ ஹம் தேப்யோகரம் நம:) என வருவதனால் அறியப்படும்.
3. சிவத்தின் நடுவுநிலைமை
மெய்த்தொண்டர்கள் நிகழ்த்தும் மெய்த்தொண்டு நிகழ்வின் கண் அவரவர் மெய்யன்பே காரணமாக ஏதேனும் பினக்கு நேருமாயின் சிவம் சும்மா சாட்சி மாத்திரமா யிருந்துவிடாமல் தானாகவே வெளிப்பட்டு அவரவர் தொண்டுநெறி முட்டின்றித் தொடர்தற் கேற்ற வகையில் பிணக்குத் தீர்த்தருளுதல் சிவத்தின் நடுவு நிலைமைப் பண்பாகும். கண்ணப்பர்-சிவகோசரியார், எறிபத்தர்-புகழ்ச்சோழர், ஏயர்கோன்-சுந்தரர் சம்பந்த முற்ற சம்பவங்களில் சிவத்தின் நடுவுநிலைப் பண்பு புலப்பட்டவாறே இங்கும் நாயனார்-மனைவியார் சம்பந்தப்பட்ட மட்டிற் சிவத்தின் நடுவுநிலைப் பண்பு புலப்பட்டிருத்தல் சுவாரஸ்யமானதாகும்.
இந்த நாயனார் வேத உள்ளுறை உணர்ந்தவர் என்றமையானே அவர் தூய வைதிக சைவாசார நெறியில் ஒழுகியவர் என்பது தானே போதரும். அத்தகைய இவருக்கு, தாம் பூசித்த சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை அயலில் நின்ற மனைவியார் வாய் நீர்பட ஊதித்துமிந்து விட்டமை அநாசார மாகவே பட்டுவிட்டது. அப்படி அநாசாரம் புரிந்தவரை அருகிலும் அடுக்கலாதென்று உடனடியாகவே, தான் அவரைத் துறந்து விட்டதாகச் சொல்லி அகற்றிவிட்டார். தமக்கேயுரித்தான ஒரு முறையில் வைதிக சைவ ஆசாரப் பிடிப்புடன் முதிர்ச்சிபெற்றிருந்த அவரது மெய்யன்பின் தொழிற் பாடு அதுவாக, தமது அநுசரணையோடு தம் நாயகர் பூசித்த மூர்த்தியை வெறும் இலிங்கம் என்றன்றி, உண்மையான ஜீவகளை துடிக்கும் உயிர்ப் பொருளாகிய சிவமாகவே தமது அன்புக் கண்ணாற் கண்ட வண்ணம் தம்மியல்பான தாய்மைப் பரிவோடு நின்றவராதலின் மனைவியார் செய்ததுவும் உத்தமமான தாய்மையன்பின் செயற்பாடாயிற்று. அது அங்ஙனமாதல், "விழுந்த போதிலங் கயனின்ற மனைவியார் விரைவுற்றெழுந்த அச்சமோ டிளங்குழவியில் விழுஞ் சிலம்பி ஒழிந்து நீங்கிட ஊதிமுன் துமிப்பவர் போல பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக" என்ற சேக்கிழார் வாக்கினால் துணியப்படும். இங்ஙனம் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தோன்றும் இருவர் செயலும் சிவமகிமை பேணும் மெய்யன்பியல்பில் நேரொத்த தரத்தினவாம். இந்நிலையில், தற்செயலாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மனைவியார் துயர் தவிர்த்தல் ஒரு புறமும், மனைவியின்மையால் நாயனார் திருத்தொண்டு முட்டுறாமல் தொடர வைப்பது ஒருபுறமுமாச் சிவத்தின் கருனைப் பொறுப்பு இரட்டைப் பொறுப்பாகவே இரண்டுக்கும் பொருத்தமான ஓருபாயத்தின் மூலம் தனது நடுவு நிலைப்பணியை மேற்கொள்வதாயிற்று. அவ்வகையில், தம்முருவில் மனைவியார் துமிப்புப்படாத பகுதி கொப்புளித்திருப்பதாக நாயனார். கனவிற் காட்டி இருவர்க்கு மிடையில் மீள் இணக்கம் நிகழவைத்த சிவத்தின் செயலானது "தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னை" என்ற தேவார உண்மைக்கு விளக்கமாயமைவதுங் காண்க. "ஈசனறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களை" என்ற திருமூலர் கூற்றுக்கிணங்க நாயனாரது ஆசார கௌரவ ரீதியான அன்பையும் மனைவியாரது தாய்மைப் பரிவு ரீதியான அன்பையுஞ் சீர்தூக்கி இருவரது ஆக்கத்துக்கும் ஏற்றவகையில் அருளிய சிவத்தின் நடுவு நிலைமையே நடுவுநிலைமை. அதன் கருணையே கருணை.
4. சாதி ஒழிந்திட
இந்த நாயனாரது சிவனடியார் வழிபாட்டின் இலட்சியப்பேறு அவர் கண்முன் எழுந்தருளியது போலச் சிவஞானப் பெருங்கடலாகிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் தம் சீரடியார் பெருங்குழுவுடன் ஒருநாள் எழுந்தருளி இவருடைய விருந்தாக ஒரு பகலும் ஓரிரவும் இவர் மனையில் தங்கி இருக்கப் பெற்றது இவர் பெருமைக்குச் சிறந்த அறிகுறியாகும். அத்தொடர்பில், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்க்கும் அவர் மனைவியார்க்கும் இன்றிரவு தங்க ஓரிடங் கொடும் எனச்சுவாமிகள் இந்நாயனாரைக் கேட்டுக் கொண்டதும் சுவாமிகள் கேட்டுக்கொண்டமையைக் கௌரவிக்கும் முகமாக நாயனார் அவர்களுக்குத் தமது சிவபூசை மேடையிலேயே இடங்கொடுத்ததும் அது அப்போது வலஞ் சுழித் தெழுந்த சிவாக்கினியால் அங்கீகரிக்கப்பெற்றமையும் அப்பெருமைக்கு மெருகூட்டியவாறாகும். சுவாமிகள் அங்ஙனங் கேட்டுக்கொண்டதும் நாயனார் அதனைக் கௌரவித்ததுமாகிய நிகழ்ச்சி சைவத்திற் சாதியொழிந்திடம் என ஒன்றுண்டு எவரெவர்க்கும் அது லபிக்கும் பக்குவநிலை ஒன்றுண்டு எனக் குறிப்பிட்டவாறாம். மக்களை அறிவாசார ஒழுக்க ரீதியாக ஆத்மிகநெறியில் வளர்த்தெடுக்கும் நோக்கில் அமைந்ததே சாதி என்பதும் அது அவரவர் கன்மாநுசாரரீதியாக அமைந்தது என்பதும் ஆன்றோர் கருத்தாம். இச்சாதி குலம் என்பவை மக்கள் உலகப்பற்றையே உண்மையெனக்கொண்டு பற்றி நிற்கும் பெத்த நிலையில் மட்டும் ஆட்சியுடையனவாம். அப்பால் சிவன்பற்றே பற்றாகப்பற்றி நிற்குஞ் சுத்த நிலையில் அவை அற்றொழியும். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் மனைவியாரும் உண்மைச் சிவனடியார்களாய் விட்ட நிலையில் பாணர் என்ற பெயர்க்குரிய அவர்களின் சாதிகுலநிலைகள் முற்றாக அற்றொழிந்தவாயின. அத்தன்மையை அறிவிக்குங் கருணையினால் திருஞானசம்பந்த சுவாமிகள் திருநீலநக்க நாயனாரை அங்ஙனம் பிரத்தியேகமாகக் கேட்டுக் கொண்டதும் நாயனார் அதைக் கௌரவித்து அவர்களுக்குப் பிரத்தியேகமான உயர்ந்த இடங்கொடுத்ததும் சிவனடியார் மகிமை பேணுந்திறம் இருந்தவாற்றை விளக்கும் அகல் விளக்குகளாம் என்க.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment