நண்ணுபுகழ் மறையோர்வா ழேமப் பேறூர் நமிநந்தி யடிகடிரு விளக்கு நல்க வெண்ணெயம ணர்கள் விலக்க நீரா லாரு ரிலங்குமா னெறியாருக் கேற்று நாளிற் கண்ணமணர் கெடக்கண்பெற் றடிகள் வாழக் காவலனா னிபந்தங்கள் கட்டு வித்தே யண்ணலருள் காண்டாரு ரமர்ந்து தொண்டர்க் காணியெனு மரசினரு ளடைந்து ளாரே.
சோழமண்டலத்திலே, ஏமப்பேறூரிலே, பிராமண குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மிகுந்த அன்போடும் ஒழியாதே அகோராத்திரம் வழிபடுதலே இன்பமெனக் கொண்ட நமீநந்தியடிகள் என்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் பலநாளுந் திருவாரூருக்குப் போய் வன்மீகநாதரை வணங்கினார். ஒருநாள் வணங்கிக் கொண்டு, புறப்பட்டுத் திருமுன்றிலை அடைந்து பக்கத்தில் இருக்கின்ற அரநெறி என்னும் ஆலயத்துட்புகுந்து, சுவாமியை நமஸ்கரித்து, அங்கே செய்யவேண்டிய பலதொண்டுகளைச் செய்து, இரவிலே அங்கே எண்ணில்லாத தீபமேற்றுதற்கு விரும்பி எழுந்தார். எழுந்தபொழுது செல்லும் என்று நினைந்து, சமீபத்திலே ஓர் வீட்டில், அது சமணர்வீடென்று அறியாமையினாலே புகுந்து, "சிவாலயத்தில் விளக்கேற்றுதற்கு நெய் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள் "கையிலே சுவாலிக்கின்ற அக்கினியையுடைய பரமசிவனுக்கு விளக்கு மிகையன்றோ இங்கே நெய்யில்லை, விளக்கெரிப்பீராகில் நீரை முகந்து எரியும்" என்றார்கள். நமிநந்தியடிகணாயனார் அந்தச் சொல்லைப் பொறாதவராகி, அப்பொழுதே மிகுந்த மனவருத்தத்தோடும் திரும்பிப்போய், சுவாமி சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்தார். அப்பொழுது ஆகாயத்திலே "நமிநந்தியே! நீ உன்னுடைய கவலையை நீக்கு, இதற்குச் சமீபத்தில் இருக்கின்ற குளத்தில் நீரை முகந்து கொண்டு வந்து விளக்கேற்று" என்று ஒரு அசரீரிவாக்குத் தோன்றிற்று, நமிநந்தியடிகணாயனார் அதைக்கேட்டு, மனமகிழ்ந்து திருவருளை வியந்துகொண்டு எழுந்துபோய், குளத்தில் இறங்கி, சிவநாமத்தை உச்சரித்து, நீரை முகந்துகொண்டு, திருக்கோயிலிலே வந்து அகலிலே முறுக்கிய திரியின்மேலே அந்நீரைவார்த்து, விளக்கேற்றினார். அது சுடர்விட்டெழுந்தது. அது கண்டுஅவ்வாலயம் முழுதிலும் சமணர்களெதிரே மிகுந்த களிப்புடனே நாடறிய நீரினாலே திருவிளக்கெரித்தார். திருவிளக்கு விடியுமளவும் நின்று எரியும்படி குறைகின்ற தகழிகளுக்கெல்லாம் நீர் வார்த்து, இரவிலே தானே தம்முடைய ஊருக்குப்போய், சிவார்ச்சனைப்பண்ணி, திருவமுது செய்து நித்திரைகொள்வார். உதயகாலத்திலே பூசையை முடித்துக் கொண்டு, திருவாரூரை அடைந்து, அரநெறி என்னும் ஆலயத்திற்சென்று, சுவாமிதரிசனம்பண்ணி, பகன்முழுதினும் திருத்தொண்டுகள் செய்து, இரவிலே எங்கும் விளக்கேற்றுவார்.
இப்படி நிகழுங்காலத்திலே, தண்டியடிகளாலே சமணர்கள் கலக்கம் விளைந்து நாசமடைய; திருவாரூர் பெருமையடைந்து விளங்கியது. சோழமகாராஜா, நமிநந்தியடிகணாயனாரே அத்தியக்ஷராக, வன்மீகநாதருக்கு வேண்Dஉம் நிபந்தங்கள் பலவற்றையும் வேதாகமவிதி விளங்க அமைத்தார். நமிநந்தியடிகள் வீதிவிடங்கப் பெருமாளுக்குப் பங்குனி மாசத்திலே மகோற்சவம் நடத்துவித்தார். நடத்துவிக்கும் பொழுது, சுவாமி ஒருநாள் திருமணலிக்கு எழுந்தருள; சகல சாதியார்களும் ஒருங்கு சேவித்துப்போனார்கள். நமிநந்தியடிகணாயனாரும் சேவித்துப் போய், அங்கே சுவாமியுடைய திருவோலக்கத்தைக் கண்டு களிப்படைந்தார். பொழுதுபட, சுவாமி திரும்பித் திருக்கோயிலிலே புக, நமிநந்தியடிகள் வணங்கிக்கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, வீட்டினுள்ளே புகாமல், புறக்கடையிலே படுக்க, மனைவியார் வந்து, "உள்ளே எழுந்தருளிச் சிவார்ச்சனையையும் அக்கினிகாரியத்தையும் முடித்துக் கொண்டு பள்ளிகொள்ளும்" என்றார். நமிநந்தியடிகள் "இன்றைக்குச் சுவாமி திருமணலிக்கு எழுந்தருளியபோது நானும் சேவித்துப்போனேன். சகல சாதியும் கலந்து வந்தபடியால், தீட்டுண்டாயிற்று. ஆதலால் ஸ்நானம் பண்ணிப் பிராயச்சித்தஞ்செய்து கொண்டே உள்ளே புகுந்து சிவார்ச்சனையைத் தொடங்கல்வேண்டும். அதற்கு நீ ஜலமுதலாயின கொண்டு வா" என்று சொல்ல; மனைவியாரும் கொண்டு வரும் பொருட்டு விரைந்து சென்றார். அப்பொழுது நமிநந்தியடிகணாயனார் சிறிதுறக்கம் வர, நித்திரை செய்தார். செய்யும் பொழுது, வீதிவிடங்கப்பெருமாள் அவருக்கு சொப்பனத்திலே தோன்றி, "திருவாரூரிலே பிறந்தவர்களெல்லாரும் நம்முடைய கணங்கள்; அதை நீ காண்பாய்" என்று சொல்லி மறைந்தருளினார். நமிநந்தியடிகணாயனார் விழித்தெழுந்து, தாம் நினைத்தது குற்றமென்றுகருதி, எழுந்தபடியே சிவார்ச்சனையை முடித்து, மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொல்லி, விடிந்தபின் திருவாரூருக்குப் போனார். போனபொழுது, அந்தத் திருப்பதியிலே பிறந்தவர்களெல்லாரும் சிவசாரூப்பியமுள்ளவர்களாய்ப் பிரகாசிக்கக் கண்டு, பூமியிலேவிழுந்து நமஸ்கரித்து, அவர்கள் அவ்வுருவம் நீங்கி முன்போலாயினமையையும்கண்டு, "அடியேன் செய்த குற்றத்தைப்பொறுத்தருளும்" என்று சுவாமியைப் பிரார்த்தித்தார்.
பின்பு திருவாரூரிலே தானே குடிபுகுந்து, தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தார். நெடுங்காலம் சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், தொண்டர்களுக்கு ஆணிப்பொன் என்று, திருநாவுக்கரசுநாயனாராலே, தேவாரப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார். இவர் இந்தப்பிரகாரம் சமஸ்தலோகங்களும் தொழும்படி திருப்பணிகளைச் செய்துக்கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்
நமிநந்தி அடிகள் நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது
1. திருவிளக்குத் திருத்தொண்டு
சிவாலயத் திருத்தொண்டுகளில் திருவிளக்குத் திருத்தொண்டு நேரே ஞானசாதனமாவது. அது, "விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்; துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்; விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்; அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே" என்ற தேவாரத்தினால் விளங்கும். ஒளி வடிவாய்ப் பிரகாசித்தலே நம்வழிபடு பொருளாகிய சிவத்தின் சுவரூபமெனப்படுதலாலும், பக்குவமுற்று மெய்யுணர்வைத் தலைப்பட்ட ஆன்மா ஒளி வடிவாகவே இருக்கும் என அறியப்படுதலாலும், அவ்விரு ஒளிப்பிரபாவங்களையுந் தரிசிக்கப் பெறுதலே முத்திக்கு நேர்வாயில் எனப்படுதலாலும், அவ்வொளிகளின் அறிகுறிப் பொருளான திருவிளக்கைச் சிவசந்நிதியில் ஏற்றி வழிபடுவது ஞான சாதனமாதல் பொருத்தமேயாம். சிவசுவ சொரூபம் ஒளிமயமாதல், தேவாரத்தில் "திருவையாறகலாத செம்பொற் சோதி" "வெண்பளிங்கினுட் பதித்த சோதியானை" முதலனவாகவும் திருவாசகத்தில், "ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்சோதி" - "சோதியாய்த் தோன்றும் உருவமே" - "சோதியே சுடரே சூழொளி விளக்கே" முதலனவாகவும் திருவிசைப்பாவில் "ஒளிவளர்விளக்கே" - "சுடரொளி விளக்கினுள்ளொளி விளக்குந் தூயநற் சோதியுட் சோதி" எனவும் சிவஞான சித்தியாரில் "சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன்காணே" எனவும் கந்த ரலங்காரத்தில் "ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு தூங்கார்" எனவும் வருவனவற்றானும் இவையொத்த பிறவற்றானும் புலனாம். மெய்யுணர்வும் மெய்யுணர்வு பெற்ற நிலையில் ஆன்மாவும் ஒளிமயமாகவே யிருக்குமெனல், "விளக்கினை யேற்றி வெளியை யறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கை விளக்கும் விளக்கவர்தாமே" என்னுந் திருமந்திரத்தாற் பெறப்படும். இனி, அவ்விருவகை ஒளிகளையுந் தரிசிக்கப் பெறுதலே முத்திக்கு நேர்வாயிலாதல், அதே திருமந்திரத்தில், "விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல்லார்க்கு விளக்குடையான் கழல் மேவலு மாமே" எனவும் தேவாரத்தில், "உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகழியாக மடம்படு முணர்நெய்யட்டி அறிவெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே" எனவும் வருவனவற்றாற் பெறப்படும்.
இத்தேவாரத் திருப்பாடல் அகமுயற்சியாகிய ஞானத் தொழிற்பாட்டை விளக்கேற்றுதல் என்ற செயல் நிகழ்ச்சியாக, அதன் அங்கங்களாகும் தகழி, நெய், திரி, சுடர் என்பவற்றுடன் விரித்து விளக்குதல், இதே அங்கங்களுடன் இடம்பெறும் புறமுயற்சி யாகிய கோயில் விளக்கேற்றுதல் ஞான சாதனமே என்பதை உறுதி செய்யும் பொருட்டாகும்.
இனி, திருநீலநக்க நாயனார் புராண சூசனத்திற் குறிப்பிட்டவாறு சிவப்பேற்றுக்குச் சாதனமெனப்பட்ட சிவபூசை, பெற்ற சிவப்பேற்றைப் பயன் செய்யுஞ் சாதனமு மாதல் போல ஞானப்பேற்றுக்குச் சாதனமான திருவிளக்கேற்றுதல், பெற்ற ஞானப்பேற்றைப் பயன் செய்யுஞ் சாதனமுமாதல் ஒருதலை. நமிநந்தி அடிகளார் விஷயத்தில் இது அவர் பெற்றிருந்த ஞானப்பேற்றநுபவத்தை மிகுவிக்குஞ் சாதனமாகவே இடம்பெற்றுள்ளதாகத் துணியப்படும். அடிகள் ஏலவே ஞானப்பேறுற்ற பெரியோர் என்பது, "வாய்மை மறைநூற் சீலத்தால் வளக்குஞ் செந்தீ எனத்தகுவார் தூய்மைத் திருநீற்றடைவேமெய்ப் பொருளென்றறியுந் துணிவினார் சாமகண்டர் செய்யகழல் வழிபட் டொழுகுந் தலைமைநிலை யாம இருளும் பகலுமுணர் வொழியா இன்பம் மருவினார்" என அவர் தம் புராணத்திலும் "தாவியவனுடனிருந்துங் காணாத தற்பரனை ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே" எனத் தேவாரத்திலும் வருவனவற்றால் அமையும். அன்றியும், சேக்கிழார் சுவாமிகள் வர்ணித்துள்ளவாறு, திருவாரூர் அரனெறி ஆலயத்தில் நாயனார் விளக்கேற்றியமையிற் காணும் பரிவுருக்கப் பண்பை மதிப்பிடுகையிலும் அவ்விளக்கேற்றுதல், முற்கண்டவாறு, "உடம்பெனும் மனையகத்துள் எரிகொள இருந்து நோக்கும்" மெய்ஞ்ஞானி யொருவரின் செயலாயல்லது வேறாக இருந்திருக்க முடியாதெனத் தெளியப்படுதலானும் அது உறுதிபெறும். சிவபெருமான் தமக்கருளிய நீர் நெய்யில் திரியிட்டு நாயனார் ஒரு விளக்கேற்றலும் அது சுடர்விட்டுப் பிரகாசிக்க, தமது உள்ளத்தில் விளங்கிக்கொண்டிருக்கும் ஞானச் சுடர் விளக்கின் அழகாக அதனை நோக்கினார். நோக்க நோக்க மென்மேல் ஆர்வம் மிகுதலினால் அவ்விட மிவ்விட மென்றின்றிக் கோயிலுள் அகப்பட்ட இடமெல்லாம் விளக்கேற்றித் தகழிகளில் நீர்நெய் குறையக் குறைய மீளமீள விட்டு நிரப்பி விடிய விடிய விளக்கெரித்துள்ளார் நாயனார். அது அவர் புராணத்தில், "சோதி விளக்கொன் றேற்றுதலுஞ் சுடர் விட்டெழுந்தது நோக்கி ஆதி முதலார் அரனெறியார் கோயிலடைய விளக்கேற்றி" (நோக்கி-அது தமது அகத்தொளிரும் ஞானச்சுடர் அழகைப் பிரதிபலிக்குமாற்றை நோக்கி) எனவும் "நிறையும் பரிசு திருவிளக்கு விடியுமளவும் நின்றெரியக் குறையுந் தகழிகளுக்கெல்லாங் கொள்ள வேண்டும் நீர் வார்த்து" எனவும் வரும்.
ஆகவே, "விளக்கில் விளக்கும் விளக்கவர்தாமே" என்ற திருமூலர் கூற்றுக் கிலக்கியமாய் விளங்கித் தமது அகத் தொழிற்பாடாகிய ஞானவிளக் கேற்றுதலிற் பெறும் இன்ப அநுபவப் பயனைப் புறத்தில் விளக்கேற்றிக் காணுதல் மூலமும் மிகுவித்துப் பூரிக்கும் விருப்பினாலேயே அடிகள் விளக்கேற்ற முற்பட்டார் என்பதிற் சந்தேகத்திற்கிடம் இல்லையாகும்.
இங்ஙனம் மெய்யுணர்வினால் தம்மையுணர்ந்த சிவனடியார்கள் மேற்கொள்ளுந் திருப்பணிகளைச் சிவபரம்பொருள் தனது பணிகளாகவே கொண்டு விரைந்து வந்து அவர் பணிகளுக்கு நேரும் இடையூற்றுக்கு இடையூறாகத் தான் முன்னின்று உதவும் பண்பு சிவத்தின் அற்புதப் பண்புகளில் ஒன்றாகும். அது சிவஞானசித்தியாரில், "சிவனுமிவன் செய்தியெல்லாம் என் செய்தி என்றும் செய்ததிவனுக்கெனக்குச் செய்ததென்றும் பவமகல உடனாகி ஒன்று கொள்வன்" என வரும். இங்கு சமணர் அவமதிப்பினால் அடிகளுக்கு நேர்ந்த அவமானத்தையும் அவர் கருதிய அருமைத்தொண்டுக்கு நேர்ந்த இழப்பையும் சிவன் தமக்கு நேர்ந்த அவமானமும் இழப்புமாகவே கொண்டு விட்டவாறாகக் காணப்படும் அவர் செயற்பாட்டின் துரிதமும் திட்ப நுட்பமும் பெரிதும் வியந்து போற்றற் பாலனவாம். ஆயின், நீர் விளக்கெரித்தற் குரியதாதல் அசம்பாவித மன்றோ எனின் சர்வஞ்ஞராகிய சிவனுக்கு அது தெரியாதிருக்க வகையில்லையே என்க. பின்னையென் னெனின் சர்வ வல்லமை உடையராகிய அவருக்கு அந்நீரை எரிபொருளாகிய நெய்த்தன்மையதாக மாற்றுதல் ஒரு பொருளோ என்க. முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ என்பது ஈண்டைக்கும் பொருந்த நிற்கும் நயம் உணரப்படும்.
2. சிவனடியார் வேண்டுதற்குக் கைம்மேற்பலன்
தம்பால் நிகழும் வேண்டுதல்களுக்குச் சிவபெருமான் பலனளிக்கும் விதம் இரு வகைகளில் அமையும் என்பர். ஒன்று, வேண்டுவோர் கருதியதைப் பரிசீலனை செய்து அவர்நிலைக்கு அது பொருந்துமோ எனப் பார்த்துப் பொருந்தாதெனின் அவர்நிலைக்கு மற்றெது பொருந்துமோ அதையே கொடுத்துவிடுதல் எனவும் மற்றையது, அவர்நிலைக்குப் பொருந்துமாயின் அவர் கருதியதை அப்படியே கொடுத்துவிடுதல் எனவுங் கொள்ளப்படும். திருநாவுக்கரசு சுவாமிகளின் அருளிச் செயலாகிய "வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய்" என்பது இவ்விருவகைப் பொருளும் படநிற்பதாகக் கருதப்படும். உலக வாழ்வியலே தஞ்சமென்றிருக்கும் பெத்த நிலையினராகிய ஆன்மாக்களுக்கு அவரவர் கன்ம பலபோக நியதியின்படியே எதுவும் ஆகவேண்டிய விதியிருத்தலால் அவர்களின் வேண்டுதல்கள் குறித்த வகையிற் பரிசீலிக்கப்பட்டே வழங்கப்படுதலும் கருதியபடியே கொடுக்கப்படுகையிலும் பெரும்பாலும் கால தாமசத்தின் பேரிற் கொடுக்கப்பட்டு வருதலும் அநுபவ வாயிலாக அறியப்படும். அதற்கெதிர், உலக வாழ்வியற் பற்று முற்றாக அற்றுச் சிவப்பற்றே பற்றாகக் கொண்டுநிற்கும் சுத்த நிலையினராகிய ஆன்மாக்கள் கன்மபலபோக நியதி விதியைத் தாண்டிவிட்டவர்களாதலால் அவர்கள் தமது ஆன்மிகப் பேறு பற்றியோ சிவ, தர்ம விருத்தி பற்றியோ விடுக்கும் வேண்டுதல்கள் வேண்டியது வேண்டியவாறே சற்றுந் தாமசமின்றி உடனுக்குடன் கொடுக்கப்பட்டு வருதல் சிவனடியார்களின் திவ்விய வரலாறுகளால் அறியப்படும். "பொன்னார் திருவடிக்கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செயும் என்னாவி காப்பதற் கிச்சையுண்டேல் இருங்கூற்றகல மின்னாரு மூவிலைச்சூலமென் மேற்பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானைமாடச் சுடர்க்கொழுந்தே" என்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் ஆத்மிகப் பேறு சார்பான வேண்டுதல் உடனடியாகவே பலனளித்ததும் "ஓதி ஓத்தறியா அமணாதரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே" எனவும் "ஞால நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயிலுறையுமெம் ஆதியே" எனவும் எழுந்த திருஞானசம்பந்த சுவாமிகளின் வேண்டுதல்கள் கைம்மேற் பலன்கண்டு மதுரையிற் சமண மயலொழிந்து சைவந்தளிர்த்துச் சிவ தருமமும் ஆலவாயான் கீர்த்தியும் மேலோங்கியதும் இதற்குச் சிறந்த உதாரணங்களாம். எனவே சிவனடியார் விஷயத்தில், அப்பர் சுவாமிகளின் "வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய்", இரு பொருட்கிடங்கொடாது ஒரு பொருளிலேயே அமைவதாம் என்க.
நமிநந்தியடிகள் நாயனார் தமது அத்தியந்த ஈடுபாட்டுக் கிடமான திருவாரூர்த் திருக்கோயிற் சிறப்புக்களையும் தியாகராஜப்பெருமானின் திருவிழாச் சிறப்புக்களையும் மேன்மேல் மிகுவிக்கும் சிவதர்ம விருத்தி வேட்கையினாலே, திருக்கோயிலிற் பங்குனி உத்தரநாள் விசேட விழாச்சிறப்பு நிகழவும் திருக்கோயிற் பூசை நியமங்கள் அதிகரிக்கவும் வேண்டிக்கொண்ட வேண்டுதல்கள் அவர்கண்காணவே உடனுக்குடன் பலனளிக்கக் காணும் பெரும்பேறு பெற்றவராகத் திகழ்கின்றார். தம்மால் அனுமதிக்கப்படும் வேண்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுதற்கான உத்திகளையும் வெகுதிட்ப நுட்பமாகத் தெரிந்து கூட்டிக் காரியப் பேறாக்குதலும் சிவபெருமானின் சுயபொறுப்பில் நிகழ்வதாம். அது, திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் "மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே" என்ற அருளிச் செயலால் அறியப்படும். (அறிந்து முடித்தல்-ஏற்ற உபாயங்களைத் தெரிந்து அவற்றைத் தொடர்புபடுத்தற் குகந்த வகையில் தொடர்புபடுத்திக் காரியப்பேறாக்கல்) இந்த நாயனார் விஷயத்தில் இவர் வேண்டுதல்கள் அவ்வாற்றால் நிறைவேற்றப்பட்டிருக்கும் அருமை அறியத்தகும். அந்நாளில் திருவாரூரில் இடம் பெற்றுள்ள தண்டியடிகள் நாயனார்-சமணர் தகராறு தீர்க்கும் நடுவனாகச் சிவபெருமான் அன்றைய சோழ மன்ன னொருவனைப் பணி கொண்டதன் மூலம் அவனைத் திருவாரூர்த் திருக்கோயில் திருப்பணிப் பிரியனாகுமாறு செய்து அவன் மூலம் அடிகளின் வேண்டுதல்கள் ஒன்றொழியாமல் நிறைவேறச் செய்துள்ளார். அரசனும் அத்திருப் பணிகளைச் செய்து உய்வடையும் வாய்ப்புத் தனக்கு வாய்த்தது நமிநந்தியடிகளின் வேண்டுதல்களாலேயே என உணர்ந்து நன்றிக்கடன் செலுத்துவான் போன்று திருக்கோயிலுக்குத் தான் ஏற்படுத்திய நிபந்தங்கள் பலவும் அடிகள் பெயராலேயே வழங்க வகை செய்துள்ளான். இங்ஙனம் திருவாரூர்த் தெய்வ மன்னவராகிய சிவபெருமான் பூவுலக மன்னவனை ஏவிச் செயற்படுத்தும் வகையால் தம் பக்த சிரோமணியாகிய நமிநந்தியார் கருத்தின் வழி நின்றருளிய பெருங்கருணைத்திறம் எண்ணுந்தொறும் இறும்பூது விளைப்பதாகும். இவ்விபரமெல்லாம், "வென்றிவிடையார் மதிச்சடையார் வீதிவிடங்கப் பெருமாள் தாம் என்றுந் திருவாரூராளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்டொன்றுஞ் செயலும் பங்குனியுத்தரமாந் திருநாள் உயர்சிறப்பும் நின்று விண்ணப்பஞ் செய்தபடி செய்தருளும் நிலைபெற்றார்" எனவும் "நாத மறைதேர் நமிநந்தியடிகளார் நற்றொண்டாகப் பூதநாதர் புற்றிடங்கொள் புனிதர்க்கமுது படிமுதலாம் நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின்மீது திகழ இருந்தமைத்தான் வேதாகமநூல் விதி விளங்க" எனவும் "இன்ன பரிசு திருப்பணிகள் பலவுஞ்செய்தே ஏழுலகும் மன்னு பெருமைத்திருவாரூர் மன்னரடியார் வழிநிற்பார் அன்ன வண்ணந் திருவிளையாட் டாடியருள எந்நாளும் நன்மை பெருக நமிநந்தியடிகள் தொழுதார் நாமுய்ய" எனவும் உள்ள திருத்தொண்டர் புராணச் செய்யுள்களா லறியப்படும்.
3. தொண்டர்க்காணி
அகமும் புறமும் அன்புருகுந் திருவுருவாய்ப் பரிணமித்துத் திருவுழவாரப்படையுங் கையுமாய்த் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் நமக்கு முண்டுகொலோ என ஏங்கி யேங்கித் தொண்டு நெறி மேன்மை விளக்கும் அருளிச் செயல்களே பல்கலை பெருகப் பரப்பித் தொண்டுபாடித் திகழ்ந்த திருத்தொண்டி லட்சியமாவர் திருநாவுக்கரசு சுவாமிகள். அது, "மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாருந் திருவடிவும் மதுரவாக்கிற் சேர்வாகுந் திருவாயில் தீந்தமிழின் மாலைகளுஞ் செம்பொற்றாளே சார்வாகுந் திருமனமும் உழவாரத் தனிப்படையுந் தாமுமாகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார்" எனச் சேக்கிழார் பெருமான் திருவாக்கிலும் "அருந்தும் பொழுதுரையாடா அமணர் திறமகன்று வருந்தி நினைந்தரனே யென்று வாழ்த்துவேற் குண்டுகொலோ திருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப் பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே" - "நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடி" என அவர் அருளிச் செயலிலும் வருவனவற்றால் அறியப்படும். இம்மகிமைக்குரிய சுவாமிகள், திருவாரூர்த் தொண்டர் திலகமாய்க் கண்டு நமிநந்தியடிகளின் மங்கலப் புகழைப் போற்றியுள்ள பாடற்பகுதிகள் சுவாரஸ்யமானவையாம். அவை, "ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனியுத்தரம்பாற்படுத்தான் ஆரூர் நறுமலர்நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீள்நாடறியுமன்றே" எனவும் "துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத் துளங்கா மதியணிந்து முடித்தொண்டராகி முனிவர் பணிசெய்வ தேயுமன்றிப் பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் அடித்தொண்டன் நம்பியென்பானுளன் ஆரூர் அருமணிக்கே" எனவும் வரும். இப்பாடல்களில், "அடித்தொண்டர், ஆணிப்பொன்" எனவும் "தொண்டர்பாதம் பொறுத்த பொற்பால் அடித்தொண்டன் நம்பி" எனவும் அடிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருதுகள் குறிப்பிடத் தக்கனவாம். இவ் விருதுகளையும் பொன்னே போற் போற்றி மேற்கொண்டு சேக்கிழா ரருளிய செய்யுள், "நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதியாகவே வேறுவேறு வேண்டுவன எல்லாஞ் செய்து மேவுதலால் ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க்காணியெனும் பேறு திருநாவுக்கரசர் விளம்பப்பெற்ற பெருமையினார்" என வரும். இதன் கண் இடம்பெறும் தொண்டர்க்காணி என்பது, தொண்டர்க்கு உரையாணி எனவும், தொண்டர்க்கு அச்சாணியெனவுங் கொள்ள நிற்கும் நயத்தால், அடிகளார், பொன்மாற்றறிய உரைத்துப் பார்த்தற்கான உரையாணிபோலத் திருத்தொண்டுத் தரங்காணத் தம் தொண்டிற் சார்த்திக் கண்டுகொள்ளற் குரியவராய் இருந்தார் என்றும் தேர்ப்பாரத்தைத் தாங்கும் அச்சாணிபோல மற்றுந் தொண்டர் பொறுப்புகளையுந் தாங்கும் ஆற்றல் வாய்ந்திருந்தார் என்றுங் கொள்ளலாகும். இவ்விரண்டாவது பொருள், குறித்த செய்யுளில், "அடியார்க்கு நெடுநாள் நியதியாகவே, வேறுவேறு வேண்டுவன எல்லாஞ் செய்து" என்றதனால் வலுவுறும்.
முற்கண்டவாறு அடிகள் ஞான விளக்கொளியில் நின்றே திருவிளக்குத் தொண்டாற்றியுள்ளமையாலும் சமணர்களால் நெய் மறுத்து அவமதிக்கப்பட்டபோது அவருற்ற வேதனையினியல்லை, விவரிக்கும், "அருகர் மதியாதுரைத்த உரை ஆற்றாராகி அப்பொழுதே பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறையினுடன் முருகு விரியும் மலர்க்கொன்றை முடியார் கோயில் முன்னெய்தி உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கெழுந்த துயர் விசும்பில்" என்ற சேக்கிழார் செய்யுள் மூலம் அவரது திருத்தொண்டுணர்வின் அத்தியந்த நேர்மையும் அழுத்தமும் இருந்தவாறு புலப்படுதலினாலும் மேற்கண்டவாறு, எவரெவரையுந் தன் கருத்தின் வழி நிற்க வைத்தாளுஞ் சிவபரம்பொருள் அடிகள் கருத்தின் வழி நிற்றலைத் தமது திருவிளையாடலாக விரும்பி மேற்கொண்டுள்ளமையாலும், அந்நாளில் திருவாரூரில் தண்டியடிகள் மேற்கொண்டதாகவுள்ள துணிகரமான திருக்குளத் திருத்தொண்டும் இவர் தம் திருத்தொண்டுப் பிரபாவத்தின் சூழ்நிலையதிர்ச்சி யென்றவகையில் இடம் பெற்றிருப்பதாக உய்த்துணரக் கிடத்தலினாலும் தொண்டர்க் காணி என்ற அவர் மகிமை தெள்ளத்தேறித் தெளியப்படுவதாகும்.
4. தலவிசேடம்
திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சிதம்பரஞ் சென்ற போது தில்லை வாழந்தணர்கள் எல்லாருஞ் சிவகணங்களாகத் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்க்குக் காட்டிய சம்பவ மொன்றுண்டு. அது திருத்தொண்டர்புராணத்தில், "அண்டத்திறைவர் அருளால் அணிதில்லை முண்டத்திருநீற்று வேதியர் மூவாயிரரும் தொண்டத் தகைமைக் கணநாதராய்த் தோன்றக் கண்டப் பரிசு பெரும் பாணர்க்குங் காட்டினார்" என வரும். அது போலவே திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாருஞ் சிவகணங்கள் எனத் தியாகராஜப் பெருமான் அடிகளுக்குணர்த்தி அவ்வாறே காட்டிக் காண்பித்துமுள்ளார். முன்னைய நிகழ்ச்சி எங்ஙனம் தலவிசேடமாகுமோ இந்நிகழ்ச்சியும் அங்ஙனம் தலவிசேடஞ் சார்ந்ததாகவே கருதப்படும். திருவாரூர்ப் பிறத்தல் அத்தகு விசேட முடைத்தென்பது, காசியிற் பிறக்க முத்தி கங்கையி லிறக்க முத்தி என்பதற்கிணையாக திருவாரூர்ப் பிறக்க முத்தி என்பதோர் பிரசித்தமான வழக்குண்மையானும், திருத்தொண்டத்தொகையில், சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று விசேடித் துரைத்துள்ளமையானும், தண்டியடிகள் புராணத்தில் எடுத்தவாக்கிலேயே தண்டியடிகள் திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார் எனச் சேக்கிழார் அவர் சிறப்புரைத்துள்ளமையானும், தன்மகன் செய்துவிட்ட பசுக்கன்று வதையாகிய பாதகத்துக்குத் தீர்வு அவனைக் கொல்லுதலே என மநுவேந்தன் துணிந்தமைக்குக் காரணம் தெரிவிக்கையில், "திருவாரூர்த் தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால்" என அவன் வாக்காகவே சேக்கிழார் தெரிவித்துள்ளமையானும் உறுதி பெறுமாறுங் காண்க. அங்ஙனமன்றிச் சமுகவியலார் கருதுவது, போன்று இது சாதியின்மை நிரூபணத்துக்கோ ரேதுவாகாமை, "படிவம் மாற்றிப் பழம் படியே பயில்வுங் கண்டு" என வரும் அடுத்த செய்யுட் பகுதியால் நிறுவப்படலாகும்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment